எரிந்த கூந்தல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 26, 2011
பார்வையிட்டோர்: 13,286 
 

கெந்தியம்மாள் கத்திக் கொண்டிருந்தாள். வாசலில் மேய்ந்து கொண்டிருந்த கோழிக்குஞ்சுகளில் ஒன்றிரண்டு அவள் கால்களை சுற்றியலைந்து கொண்டிருந்தன.

“ஆரு சொல்றதையும் கேட்காம நடந்தா எப்படி.. அதான் காது எழவு கேட்கமாட்டேங்குது. கண்ணு வேற அவிஞ்சி போச்சி. வீட்ல கிடக்க வேண்டியது தானே. இன்னும் அப்படி என்னதான் அந்த பொட்டக்காட்டிலே இருக்கோ… எங்கயாவது வழியில விழுந்து செத்துப் போனா.. தூக்கிட்டு வந்து போடுறதுக்கு கூட வீட்ல நாலு ஆளு கிடையாது பாத்துகோங்க. யாராவது வந்து மண்டையை போட்டுடாருனு சொன்னாகூட எனக்கு என்னனு தான் உட்கார்ந்து இருப்பேன். ஏலே முருகேசு. நீயாச்சி இந்த கிழவன் கூட போயிட்டு வாய்யா.. இந்த வீட்ல என் பேச்சை ஒரு நாதி கேட்கிறதில்லை. ஆக்கி போட்டதை திங்க மட்டும் வந்து நில்லுங்க. அப்போ வைக்குறேன் சட்டு அகப்பையாலே.“

தன் ஆத்திரம் தீருமட்டும் கத்தியபடியே கோழிக்குஞ்சுகளுக்கு வடிகஞ்சி யோடு தவிட்டை கலந்து போட்டுக் கொண்டிருந்தாள். வீட்டு நாய் கோழிக்குஞ்சுகளை முந்திக் கொண்டு திங்க வந்தது. அதைக்கண்டதும் அவளது ஆத்திரம் நாயின் மீது திரும்பியது. கையில் இருந்த அகப்பையால் நாயின் தலையில் ஒங்கி ஒரு போடு போட்டபடியே கத்தினாள்

“அதான் உனக்கு தனியா வைக்கணே. மூதி அதுக்குள்ளே ஏன் வாயை வைக்குறே..“

நாய் அவள் அடியை உதறிவிட்டபடியே உடைந்த மண்கலயத்தில் ஊற்றிய கஞ்சியை நாக்கால் நக்க துவங்கியது. அவள் தெருவையே பார்த்துக் கொண்டிருந்தாள். வேலய்யா கம்பை ஊன்றியபடியே தனியே போய்க் கொண்டிருந்தார்.

வள்ளி வீட்டின் உரலில் கட்டப்பட்டிருந்த ஆட்டுகுட்டியொன்று கத்திக் கொண்டிருந்தது. உடைந்து போனமாட்டுவண்டியொன்று நெடுங்காலமாகவே தெருவின் இடப்பக்கம் கிடந்தது. அதை யாரும் கவனித்து பார்ப்பது கூட கிடையாது. ஆனால் உடைந்து விறகாக்க யாருக்கும் தைரியம் வரவில்லை போலும்.

கிட்ணப்ப நாயக்கரின் வீட்டுவாசலில் மட்டும் பெரிதாக கோலம் போட்டிருந்தார்கள். மற்றவீடுகளில் கோலமிடுவதற்கு யார் இருக்கிறார்கள். வெள்ளி செவ்வாய்க்கு நாலு புள்ளியில் கோலம் போடுவதோடு சரி. அப்படியே கோலமிட்டாலும் பகல் முழுவதும் புழுதியை வாறி இறைக்கும் காற்று சில நிமிசங்களில் கோலத்தை அடையாயம் தெரியாமல் ஆக்கிவிடும்.

முன்பு போல கோலப்பொடி விற்கின்றவனும் அவர்கள் ஊருக்கு வருவதில்லை. அந்தக் குரல் அழிந்து வருசமாகிவிட்டது. கெந்தியம்மாள் தன் வீட்டை தெளிப்பதோடு சரி. கோலம் போடுவதை எல்லாம் விட்டுவிட்டாள். வீட்டில் அவளும் இந்த வயசான கிழவனும் அவளது ரெண்டு பிள்ளைகளும் மட்டுமே தானே இருக்கிறார்கள்.

வடக்கே எங்கோ கட்டிட வேலைக்காக போன அவளது புருஷன் மாதம் ரெண்டு நாளோ மூணு நாளோ ஊருக்கு வருகிறான். அவன் வருகின்ற நாளில் கூட கோலம் போடுவதற்கு அவள் விரும்புவதில்லை. அவனும் அதை எல்லாம் கண்டு கொள்வதில்லை. வீட்டுக்கு வந்த நேரத்திலிருந்து அவன் உறங்கி கொண்டேதான் இருப்பான். சாப்பாடு வேளையில் எழுப்பினால் தட்டை கவனித்து பார்க்க கூட விருப்பமில்லாமல் தின்றுவிட்டு படுத்துக் கொள்வான். எத்தனை நாள் தூக்கம் இல்லாமல் கிடந்தானோ என்று தோன்றும்.

ஊரில் பாதிக்கும் மேலான ஆம்பளை பொம்பளைகள் நகரங்களில் நடக்கும் கட்டிட வேலைக்காக போய்விட்டார்கள் . பத்து நாட்களுக்கு முன்னதாக கூட மருளுத்திலிருந்து பரமசிவம் வந்து ஆட்களை கூப்பிட்டுக் கொண்டிருந்தான். கெந்தியம்மாள் தன் பிள்ளைகளுடன் வேலைக்கு வந்தால் நாள் ஒன்றுக்கு நூற்றிஇருபது ரூபாய் கூலி தருவதாகச் சொன்னான். நல்ல வேலை தான். அதுவும் சாப்பாடு போட்டு சம்பளமும் கொடுக்கிறார்கள். ஆனால் இந்த கிழவன் இருக்கிற வரைக்கும் தனியே விட்டு எப்படி போவது. அவுக வரட்டும் கலந்துகிட்டு சொல்றேன் என்று சொல்லி முன்பணமாக நீட்டிய நூறு ருபா தாளை கூட கெந்தி தள்ளிவிட்டாள்.

மருளுத்துகாரன் விடாப்பிடியாக பாட்டையாவையும் கூட கூட்டிட்டு வந்துருங்க. அவங்க தங்குறதுக்கு இடம் ஏற்பாடு பண்ணி தர்றேன். மூக்கன் கூட அவங்க அய்யாவை கூட்டிகிட்டு தான் வர்றாப்லே . தவங்காம ஒத்துக்கோங்க என்று விடாப்பிடியாக பணத்தை கையில் திணித்தான். அவளுக்கு தள்ளுவதற்கு மனசே கேட்கவில்லை. எதற்கு ஒரு வார்த்தை கேட்டுவிடலாமோ என்ற நப்பாசையில் அன்றிரவு பாத்திரம் கழுவியபடியே அவரிடம் நீங்களும் எங்க கூட டவுனுக்கு வந்து சௌரியமா இருக்கலாம்லே என்று கேட்டாள். அவர் பதில் சொல்லாமல் தொண்டையில் இருந்த கோழையை காறி தரையில் துப்பிவிட்டு ஈ ஒட்ட துவங்கினார். அது அவளுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது.

“டவுன்லயும் மனுசன் மக்கள் எல்லாம் இருக்காங்க. உசிரு போற வரைக்கு இந்த ஊர்லயே இருக்கிறதுக்கு இங்கே என்ன அரண்மனையா கட்டி வச்சிருக்கீங்க“ என்று கோபத்தோடு சொன்னாள்.

அவர் அந்த பேச்சை கவனம் கொள்ளாமல் ஈயை பார்த்தபடியே இருந்தார். இந்த கிழவனை என்ன சொல்லியும் ஊரைவிட்டு கொண்டு போக முடியாது என்ற ஆதங்கம் என்ற அவளை சுணங்க வைத்தது. மருளுத்துகாரன் திரும்பவும் அடுத்த மாசம் வருதவாக சொல்லிப் போனான்.

எப்படியும் அதற்குள் அவள் புருஷன் வந்துவிடுவான். அப்போது பேசி எப்படியாவது இந்த கிழவனை டவுனுக்கு கொண்டு போய்விட்டால் நிம்மதியாக போய்விடும். இல்லாவிட்டால் கிழவன் பாடு முடியுற வரைக்கும் நாதியத்து போன இந்த ஊரில் கெடந்து அவதிப்பட வேண்டியது தான் என்று சலித்தபடியே அவள் தவிட்டை கொத்தி மணலில் போடும் கோழிக்குஞ்சுகளை தள்ளிவிட்டபடியே வீட்டிற்குள் சென்றாள்

**

வேலய்யாவிற்கு நடக்க நடக்க தெரு நீண்டு போய்க் கொண்டேயிருந்தது. ஒரு காலத்தில் இந்த தெருவிற்குள் கால் எடுத்து வைப்பதற்குள் வீடு வந்துவிடும் . ஆனால் இப்போது வெகு தொலைவிற்கு தெரு நீண்டுபோய்விட்டது போலிருந்தது. வீட்டு வாசலில் மருமகளின் தலை தென்படுகிறதா பார்ப்பதற்காக பாதி தெருவில் நின்றபடியே திரும்பி பார்த்தார். ஆளைக் காணவில்லை.

அவள் சொல்வது எல்லாம் வாஸ்தவம் தான். அவருக்கு காது பட்டுப்போய்விட்டது. கண்களும் பஞ்சடைந்துவிட்டன. வீட்டின் முன்னால் நிற்கும் அடிபருத்த வேம்பு கூட தெளிவில்லாமல் தான் புலப்படுகிறது.

நேற்று ராத்திரி சாப்பிட உட்கார்ந்த போது குண்டு பல்பு எரிவது கண்ணில் தெரிந்த போதும் சாப்பிடுகின்ற தட்டு கண்ணில் தென்படவில்லை. பாதி தட்டு தெரிகிறது. சாப்பாடு தெரியவில்லை. கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தால் தட்டின் விளம்பு தெரிகிறது. அவர் தன்விரலால் சோற்றைத் துழாவினார். கையில் அள்ளிய சாதத்தை உற்று பார்த்த போது கூட தெளிவாக தென்படவில்லை. வாய்க்கு கொண்டு போனவர் தன்னை அறியாமல் அதை வாயில் போடுவதாக நினைத்து கிழே போட்டார்.

நல்லவேளை மருமகள் பக்கத்தில் இல்லை. கைக்கும் வாயக்கும் இடைவெளியாகி போச்சின்னா இனிமே ரொம்ப நாள் உசிரு தங்காது என்று அவருக்கு தோணியது. சாப்பாட்டை . ஒதுக்கி வைத்துவிட்டு எழுந்து கொள்ள முயன்றபோது மருமகள் அருகில் வந்து நின்று கத்தினாள்.

“வேளை வேளைக்கு சுடுசோறு வேணும்னா நான் எங்க போறது. காலையில வடிச்ச சோறு இறங்கலையாக்கும்.சாப்பிடுற லட்சணம் பச்சை புள்ளை தாவலை. இதை எல்லாம் யாரு கூட்டி பெறக்கி சுத்தம் பண்றது. நாளையில இருந்து மண்சட்டியில கஞ்சிதான் தருவேன். குடிச்சிட்டு அப்படியே கட்டிலுக்கு கிழே வச்சிகிடுங்க. “

அவர் காதில் எதுவும் விழவில்லை. அவள் ஏதோ பேசுகிறாள் என்பது மட்டும் கேட்டது. சப்தங்கள் அநேகமாக அவரை விட்டு மறைந்து போய்விட்டது. பகலும் இரவும் உலகம் அமைதியாக இருந்தது. உடம்பில் ஏதாவது ஊர்ந்து போவது போல தெரிவதை தவிர வேறு உணர்ச்சிகளும் அதிகமில்லை.

ஆனாலும் அவரால் வீட்டில் படுத்துகிடக்க முடியவேயில்லை. சில நாட்களாகவே அவருக்கு ஒரு கனவு வந்து கொண்டிருந்தது.

ஊரின் மேற்கில் உள்ள கட்டபனையொன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது போல அக்கனவு வந்தது. அது கனவு என்பதாக கூட இல்லாமல் நாசியில் அந்த பனையின் மணமேறுவதுபோல நிஜமாக இருந்தது.

பனைக்கு யார் நெருப்பு வைத்தார்கள். ஏன் பனை எரிவதை யாரும் தடுக்கவேயில்லை என்று புரியாமல் அவர் நெருப்பின் முன்னால் நின்று கொண்டிருந்தார். திகுதிகுவென நெருப்பு கொளுந்துவிட்டு எரிய பனையின் வலப்பக்க கூந்தல் கரிந்து விழுந்தது.

அந்த நெருப்பு அவர் முன்பு பார்த்திருந்த நெருப்பை போல இல்லாமல் உக்கிரமாக இருந்தது. அதன் ஒசை அவர் காதுகளுக்கு பாம்பின் சீற்றமெனக் கேட்டது. பற்றி எரிகையில் அது பனையை முறித்து வீழ்த்திவிட்டு தான் ஒய்வேன் என்று சபதமிட்டிருப்பது போன்ற ஆவேசமிருந்தது. பனை எரியுது. பனை எரியுது என்று அவர் வாய் ஒயாமல் சொல்லிக் கொண்டிருந்தார்.

அந்தக்குரல் யாருக்கும் கேட்கவேயில்லை. ஒருவேளை அவர் கத்தவேயில்லையா? அம்மன் கோவிலுக்கு அக்னிச்சட்டி எடுத்து வரும் போது காற்றில் விசிறி செல்லும் தணல் போல எரிந்து கொண்டிருந்த பனையிலிருந்து பொறிட்டு நெருப்பு பறந்து கொண்டிருந்தது. பனை எரிவதை பார்க்க துயரமாக இருந்தது.

எதிர்ப்போ. மறுப்போ இல்லாமல் தன் சுயவிருப்பத்தின்படியே எரிய அனுமதித்தது போல பனை நெருப்பிடம் தன்னை ஒப்படைத்திருந்தது. புகையும் உக்கிரமும் ஆவேசமுமாக எரிந்து கொண்டிருந்த பனையின் முன்னால் நிற்க முடியவில்லை. வெக்கை வாறியடித்தது. அவர் தன்னை அறியாமல் துக்கமும் வலியுமாக காற்றில் கைகளை வீசி போ போ என்று விரட்டிக் கொண்டிருந்தார்.

நெருப்புமெதுவாகபனையை விட்டு தரையிறங்கி அவரை நோக்கி வரத்துவங்கி அவர் பார்த்துக் கொண்டிருந்த போதே நாகம் ஒன்று வருவது போல நெருப்பு அவர் காலை நோக்கி கொத்த வந்து கொண்டிருந்தது. தன்னை மீறிய பயத்தால் அவர் ஒடத்துவங்கினார். நெருப்பு பின்னாடியே ஒடிவந்தது. மண்ணில் அவர் தடுமாறி விழுந்த போது நெருப்பு அவர் மீது பற்றாமல் அருகில் இருந்து பார்த்துக் கொண்டேயிருந்தது.

அவர் கையெடுத்து கும்பிட்டபடியே என்னை விட்ரு சாமி என்று கதறினார்.

நெருப்பு அவரை பார்த்தபடியே இருந்தது. அவர் நெருப்பை பார்த்துக் கொண்டிருந்தார்.. நீண்ட நேரத்தின் பிறகு சர்ப்பம் திரும்பி போவது போல நெருப்பு விடுவிடுவென பனையை நோக்கி சென்று அதன் கூந்தலில் ஏறிக் கொண்டது.

அவர் மண்ணில் விழுந்து கிடந்தார். உடம்பு நடுங்கிக்கொண்டேயிருந்தது. தன்னை அறியாமல் மூத்திரம் போகத் துவங்கியது. அப்போது தான் அவருக்கு விழிப்பு வந்தது. கட்டிலிலே மூத்திரம்போயிருந்தார். கட்டியிருந்த வேஷ்டி, விரிப்பு எல்லாமும் மூத்திரமேறியிருந்தது. கைகளால் தடவி பார்த்தார். ஈரம்பட்டது. அதை நாசியின் அருகில் வைத்து முகர்ந்து பார்த்தார். நிஜம் தான் மூத்திரம்போயிருக்கிறேன்

என்றபடியே எழுந்து கோலை ஊன்றியபடியே தடுமாறி வெளியே வந்து மீதமிருக்கும் மூத்திரத்தை பெய்து முடித்தார்.

படுக்கைக்கு போக மனது வரவில்லை. இருட்டுக்குள்ளாக வே உட்கார்ந்து கொண்டபடியே பனை எரிவதை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தார். இது எல்லாம் மனப்பிரம்மை தானா ? இல்லை நிஜமாகவே பனை இப்போது எரிந்து கொண்டிருக்கிறதா? தன் வாழ்வில் பனை எரிந்து ஒருமுறை கூட அவர் பார்த்தது இல்லை. பின்பு எதற்காக இப்படி கனவு வருகிறது.

பனை உண்மையில் எரிகின்றதா என்று போய் பார்த்துவிட்டு வரலாமா என்று தோன்றியது. ஆனால் வீட்டிலிருந்து எப்படி போவது என்று யோசனையாக இருந்தது. கண்ணை கசக்கி தேய்த்து பார்த்த போதும் தெரு தென்படவில்லை.

பகலிலாவது லேசாக புகைமூட்டம் போல பார்வையிருக்கிறது. இரவில் எதுவுமில்லை. வெளிச்சத்தின் ஒரு துளி கூட அவர் கண்ணில் சேகரமாகியிருக்கவில்லை என்பது வேதனை தருவதாகயிருந்தது.

ஆத்திரத்துடன் அவர் தன் பலவீனத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து தெருவில் கோலை ஊன்றி நடந்து இரண்டு மூன்று அடி சென்றபோது எதன்மீதோ மோதி விழுந்தார். என்ன பொருள் அது என்று தெரியவில்லை. உலகம் மிகவும் சுருங்கி கொண்டுவிட்டது என்று ஆத்திரமாக வந்தது. விழுந்த இடத்திலிருந்துஎழுந்து கொள்ளமுடியவில்லை.அப்படியே சுருண்டு கொண்டு படுத்துக் கொண்டார்.

பனை எரிந்து கொண்டிருக்கிறது. பனை எரிந்து கொண்டிருக்கிறது என்று அவராக அரற்றிக் கொள்ள துவங்கினார். அதை கேட்க பின்னிரவில் யாருமேயில்லை.

விடிகாலையின் போது எருமைமாடுகளை கறவைக்கு ஒட்டிப்போன முத்தையாலு அவர் தெருவில் விழுந்து கிடப்பதை பார்த்து கைதாங்கலாக கூட்டி வந்து கட்டிலில் படுக்க வைத்து போனான். நல்லவேளை கெந்தியம்மாள் முழிக்கவில்லை. ஆனால் பகலானதும் பனையை கட்டாயம் ஒரு எட்டு போய் பார்த்து வர வேண்டும் போலிருந்தது.

யாரையாவது துணைக்கு கூட்டிக் கொண்டு போகாலமா என் நினைத்தார். சொன்னால் சிரிப்பார்கள் முடிஞ்ச வரைக்கும் நாமளே போய் வந்திர வேண்டியது தான் என்றபடியே அவராக நடக்க துவங்கினார். கெந்தியம்மாள் அப்போது தான் கத்த துவங்கினாள்.
**
தெருவைக் கடந்து போவது மிகச் சிரமமாக இருந்தது. தண்ணீருக்குள் கண்ணை விழித்து பார்ப்பது போல தான் வீடுகளும் தெருக்களும் இருந்தன. எந்த வீடு யாருடையது என்ற தெரியவில்லை. ஆள் முகங்களும் கூட ஒன்று போலாகிவிட்டது. மரங்கள் செடிகள், வானம் பூமி எல்லாமும் தெளிவற்று போய்விட்டது. கோலை ஊன்றியபடியே அவர் ஊரின் புறவெளிக்கு வந்த போது வெயிலேறியிருந்தது.

வெட்டவெளி தரும் இதம் வீடுகளுக்குள் இல்லை என்று தோன்றியது. உடலில் பற்றி ஏறும் வெயிலை ஏற்றுக் கொண்டபடியே அவர் ஊன்று கோலை வலுவாக ஊன்றி நடக்க ஆரம்பித்தார். காற்றேயில்லை. தும்பை செடிகளும் காலில் தென்படவில்லை.

நினைவு தெரிந்த நாளிலிருந்து அவர் ஆடுமேய்ப்பதையே வேலையாக கொண்டிருந்தார். சில வருசம் குல்லூரில் ஒரு தோட்டம் குத்தகைக்கு எடுத்து பார்த்து வந்தார். அந்த நாட்களில் தான் அவரது மகன் மகள் எல்லாம் பிறந்தார்கள். அப்போது சொந்தமாக இருபது ஆடுகளுக்கும் மேலாக அவரிடமிருந்தது.

குல்லூரிலே இருந்திருக்கலாம். ஆனால் எங்கோ தொலைவிற்கு போன பிறகும் ஊர் அவரை வா வாவென கூப்பிட்டுக் கொண்டேயிருந்தது. அவராகவே குல்லூர் ரெட்டியாரிடம் சொல்லிக் கொண்டு வந்து ஊர் வந்து சேர்ந்து தன் வீட்டை கூரைமேய்ந்து திரும்பவும் ஆடு மேய்க்க துவங்கினார்.

ஊரை சுற்றிலும் மேய்ச்சல் தரை எங்கும் கிடையாது. ஊர் பசுமையே கண்டதில்லை.எப்போதாது மழைக்கு பின்பு லேசாக ஈரப்பதம் தட்டுபடும் . மற்ற நாட்களில் வேலிசெடிகளை மேய்வது தான் ஆடுகளின் வாடிக்கை. சில நாட்களில் கண்மாய்க்குள் உள்ள கருவேல மரத்திலிருந்திருந்து காய்களை அறுத்து போடுவது உண்டு. மற்ற நேரங்களில் ஆடுகள் தரையை முகர்ந்தபடியே தன்னிஷ்டம் போல மேய்ந்து கொண்டிருக்கும்.

கிழட்டு யானை போல சூரியன் மிக மெதுவாக நடந்து நடந்து வானை கடந்து போகும்.
அவர் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு கட்டபனை அருகே போய் உட்கார்ந்து கொண்டுவிடுவார். அந்த பனை அதிகம் வளரவில்லை. கூந்தலும் அதிகமில்லை. சிறுவர்கள் ஏறி விளையாடுவார்கள். அந்த பனையடி அவருக்கு பிடித்திருந்தது.

தொலைவில் ஆடுகள் கானலை மேய்ந்தபடியே இருக்கும். எப்போதாவது சிறு சப்தம் கொடுத்தால் போதும். ஆடுகள் தலை துôக்கி பார்த்துவிட்டு சப்தமிடும்.

அவர் ஆடுமேய்க்கும் நாட்களில் பறவைகள் வலசை போவதையும் ,விதவிதமான மேகக் கூட்டங்களை கண்டிருக்கிறார். அதுவும் சில மாலை வேளைகளில் ஆற்றில் ஊற்று எடுப்பது போன்று ஆகாசத்தில் பெருகியோடும் மேகங்களை காண்பது ஆச்சரியமாக இருக்கும். அதில் போய் நனைந்து குளிக்கலாம் என்று தோன்றும்.

மழைவட்டம்போடும் நாட்களில் மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சப்தமிடுவதை கேட்டிருக்கிறார். மேலக்கண்மாயை தாண்டி ஆடுகளை ஒட்டிக் கொண்டு திரும்பி வந்த ஒரு நாளில் எதிர்பாராமல் மழை பிடித்து முதுகில் அடிக்க ஆரம்பித்தது. ஆடுகள் திசைக்கொன்றாய் ஒடத்துவங்கியது. அது போன்ற முரட்டு விரல்களை உடைய மழையை அதன் முன்னே அவர் கண்டதேயில்லை.

சட்டுசட்டு என்று முதுகில் அறைந்தபடியே அந்த மழை அவரைத் தள்ளாடச் செய்தது. எதிரில் இருந்த பூமி தெரியாதபடி மழை வலுவானது. அவர் ஆடுகளை விரட்டியபடியே ஒடினார். ஒதுங்குவதற்கு இடமில்லாத வெட்டவெளியில் அவரும் ஆடுகளும் ஒடிக் கொண்டிருந்தார்கள். மின்னல் வெட்டு பளீர் என்று அடித்து எங்கோ இடி விழுந்தது. நிச்சயம் ஏதாவது ஒரு மரம் பிளந்திருக்க கூடும். அவர் மழையை தள்ளியபடியே ஒடினார். ஆடுகள் விடாது சப்தமிட்டன.

அவர்கள் ஊரை நெருங்கும் போது ஊரில் ஒரு சொட்டு மழையில்லை. ஆனால் அவரும் ஆடுகளும் நனைந்து ஈரம் சொட்ட வருவதை கண்ட கிராமவாசிகள் எந்த பக்கம் மழை பெய்யுது என்று ஆர்வத்துடன் விசாரித்தார்கள். மேற்கிலிருந்து மழை வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னதும் ஊரே மழையை எதிர் கொள்ள தயாராக இருந்தது.

அவர் தன்னுடைய வீடு வந்து சேர்ந்த போது மழைக்காற்று ஊரில் சுற்றியலைய துவங்கியது. மேகம் இருண்டது. வேலய்யாவின் மகள் இருவரும் பானைகளை மழைத்தண்ணீர் பிடிக்க வெளியே கொண்டு வந்து வைத்தார்கள். இடிச்சப்தம் கேட்டதேயன்றி மழை ஊருக்குள் வரவேயில்லை. ஆளுக்கு ஆள் தெருவில் நின்றபடியே ஆகாசத்தை வெறித்து பார்த்தபடியிருந்தனர். அன்று அவர்கள் ஊருக்கு வர வேண்டிய மழை ஒடைப்பட்டியில் பெய்தது.

ஊர்காரர்கள் இரவெல்லாம் அதற்காக கவலைப்பட்டார்கள். மழையை எதிர் கொண்டு சந்தித்த வேலய்யா மட்டும் மழையின் உன்மத்தம் பற்றி இரவெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். ஏன் மழை அவர்கள் ஊரை விலக்கி போனது என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் யாவருக்கும் ஆத்திர ஆத்திரமாக வந்தது. வானத்தோட குரல்வளையை கடித்து துப்பிரலாம் போலிருக்கு என்று முத்திருளன் சொன்ன போது யாவரும் சேர்ந்து தலையசைத்தார்கள்.

அது நடந்து பல வருசமிருக்கும் ஆனால் அவருக்கு இப்போது தான் வீட்டை நோக்கி ஒடிவந்தது போலிருந்தது. .ஒருவேளை அதுதான் உண்மையோ என்னவோ, தனக்கு பார்வை தடுமாறியது கெந்தியம்மாள் கத்தியது எல்லாமும் கனவாக இருக்ககூடுமோ என்றும் தோன்றியது.

அவர் தன் உடலை தடவி பார்த்துக் கொண்டார். அதில் ஈரமில்லை. குனிந்து மண்ணை கையில் அள்ளி முகர்ந்து பார்த்தார். அதில் குளிர்ச்சியே இல்லை. மண்புரண்டு நெடுநாட்களாகிவிட்டது போலும். ஆடுமாடுகளின் ஒசை ஊரில் குறைந்துபோய்விட்டது. மொத்தமே ரெண்டு ஜோடி காளைகள் இருக்கின்றன. ஆடுகளும் கூட அதிகமில்லை. நாலைந்து எருமைகளும் ரெண்டு பசுவும் இருந்தன. மற்றபடி வாத்து கௌதாரி போன்றவை இருந்த அடையாளமேயில்லை.

அவர் ஆடு மேய்த்த நாட்களில் கட்டபனை தான் அவரது தங்குமிடம். ஆடுகளைஒட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு கட்டபனை அருகே உட்கார்ந்து கொள்வார். ஆள் உட்காருவதற்கு வாகாக அருகில் ஒரு பாறாங்கல் கிடந்தது.அதில் உட்கார்ந்தபடியே கையில் கோலை வைத்துக் கொண்டு ஏதாவது யோசனை செய்து கொண்டிருப்பார்.

சில நேரம் அவர் யோசனையை கலைப்பது போல மைனா சப்தமிடும். சில நேரம் கரிச்சான் குருவிகள் கடந்துபோகும். மற்றபடி ஆள் நடமாட்டமிருக்காது. சிறார்கள் எப்போதாவது கிளி பிடிப்பதற்காக பனையை தேடி வருவார்கள். மற்ற வகையில் அவர் ஒற்றை ஆளாக மேயும் ஆடுகளும் வீழ்ந்து கிடக்கும் ஆகாசமுமாக உட்கார்ந்திருப்பார். வெட்டவெளியை பார்த்துக் கொண்டிருப்பது விசித்திரமாக இருக்கும். சில நேரம் மனதில் நினைத்துக் கொண்ட உருவங்கள் வெட்டவெளியில் நடப்பது போலவே இருக்கும்.

அந்த பனைக்கு அருகாமையில் பாம்பு கடித்து செத்து போன சௌடியின் ஞாபகம் வரும். மூணு பிள்ளைகளின் தாய். தும்பை செடியின் ஊடாக வாயில் நுரை தள்ள விழுந்து கிடந்தாள். வேலய்யா தான் கண்டு துôக்கி கொண்டு வந்து சேர்த்தார். வீடு வருவதற்குள் செத்து போயிருந்தாள். அவளது பிள்ளைகள் அழுத அழுகை அப்படியே மனசில் நிற்கிறது. இவ்வளவிற்கும் சௌடியோடு அவள் உயிரோடு இருந்த நாட்களில் ஒரு வார்த்தை பேசியது கிடையாது.

பல நாட்கள் பனையடியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது சௌடி தும்பை செடிகளின் நடுவில் உட்கார்ந்திருப்பது போலவே இருக்கும். அவள் யாரோடும் பேசுவதில்லை. அவராக சில நேரம் தொலைவில் இருந்தபடியே சௌடி உன் பிள்ளைகள் எல்லாம் நல்லா இருக்குது. நிம்மதியா போயி பூமிக்குள்ளே ஒடுங்கு தாயி என்று கையெடுத்து கும்பிட்டு சொல்லுவார். ஆனால் சலனமேயிருக்காது.

ஆடுகள் தனித்தனியாக மேய்ச்சலில் இருந்தாலும் அதுகளுக்குள் பிரிக்க முடியாத சுபாவமிருந்தது. ஒரு ஆடு சப்தமிட்டாலும் உடனே இன்னொரு ஆடு தலை நிமிர்த்தி பார்க்கும். அதுவும் அவரது குரலை கேட்டுவிட்டால் ஆடுகள் தலையை சிலுப்பியபடியே பார்க்கும். அவர் தான் சொல்ல விரும்பிய அத்தனையும் ஆடுகளிடம் தான் சொல்லியிருக்கிறார்.தன் பெண்டாட்டியை பற்றிய குறைகளை பிள்ளைகளை பற்றிய கவலைகளை எல்லாவற்றையும் ஆடுகளிடம் தான் சொல்லுவார். ஆடுகள் தலையசைத்தபடியே நடந்து கொண்டிருக்கும்.

இப்போது அவர் சப்தத்திற்கு திரும்பும் ஆடுகள் அவரோடில்லை. ஆடுகளுக்கும் வயதாகி போனால் தன்னை போலவே கண்பார்வைபோய்விடுமா என்ன? தான் வளர்ந்த ஆடுகளில் ஒன்று கூட இன்று உயிரோடு இல்லை. யாவும் எவரெவர் பசிக்கோ உணவாகிவிட்டது.

தொலைவிலிருந்து பார்த்த போது பனை தென்படவில்லை. பனை மட்டுமில்லை. வெட்டவெளியின் பிரம்மாண்டமும் அடிவானம் வரை விழுந்து கிடக்கும் ஆகாசமும் கூட அவருக்கு புலப்படவில்லை. அவர் தன் கைகளால் காற்றில் தடவியபடியே முகர்ந்து பார்த்தார். காற்றிலும் ஈரமில்லை.

கலங்கலாக காட்சிகள் தெரிந்தன. தடுமாறி நடந்தபடியே அவர் பனையின் அருகாமைக்கு போன போது அது சலனமற்று நின்றிருந்தது. கட்டப்பனை அருகே ஆட்கள் வருவதேயில்லை. ஆடுமேய்ப்பது முற்றிலுமாக நின்று போன பிறகு அங்கே வருவற்கு யார் இருக்கிறார்கள். அவர் தன் கைகளால் பனையை தடவி பார்த்தார்.

பனை எரியவில்லை. தனக்கு வந்தது வெறும்கனவு என்று தோன்றியது. அவர் தான் வழக்கமாக உட்காரும் பாறை எங்கேயிருக்கிறது என்று கைக்கோலால் தடவிப் பார்த்தார்.அந்தப்பாறைகாணவில்லை.

யாரோ பெயர்த்து கொண்டுபோய்விட்டார்கள். தும்பை செடிகளின் நடுவே இப்போதும் சௌடி உட்கார்ந்திருக்க கூடுமோ என்ற ஆசையில் சௌடி சௌடி என்று அழைத்து பார்த்தார். காற்று அவர் குரலை அடித்து சிதறியது.

பனை எரியவில்லை என்ற போதும் அவர் மனதின் ஆதங்கம் அடங்கவேயில்லை. அவர் மனது அதை நம்ப மறுத்து பனை எரியுது பனை எரியுது என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. அவர் பனையை கட்டிக் கொண்டு காதை உன்னிப்பாக வைத்து கேட்டார். வயசாளியின் மூச்சிரைப்பை போல ஒரு சப்தம் கேட்பதாகயிருந்தது.

அவர் பனையை அண்ணாந்து பார்த்தார். பனையோலை அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. பனையும் காய்ப்பதை நிறுத்தி பலவருசமாகிவிட்டது. இனி அதை யார் சீண்ட போகிறார்கள். அவர் பனையடியில் உட்கார்ந்து கொண்டபடியே கெந்தியம்மாளையும் தன் மகனையும் பற்றி நினைத்து கொள்ள துவங்கினார்.

தன் சாவோடு அவர்களுக்கு இந்த ஊரின் பந்தம் முடிந்து போய்விடும். அதன் பிறகு ஏதாவது ஒரு நகரத்தில் கூலி வேலை செய்து பிழைக்க போய்விடுவார்கள். இந்த ஊரும் பனையும் ஆடுகளும் மேகங்களும் எதுவும் நினைப்பில் இருக்காது. தன்னையும் அப்படியே மறந்து போய்விடுவார்கள். அதுவும் நல்லது தான். நினைத்துக் கொள்ளும்படியாக தான் என்ன செய்துவிட்டேன்.

நகரத்தில் பனைகள் இருக்குமா என்று தெரியாது. தன்னை போல ஆடு மேய்கின்றவர்கள் நகரில் இருப்பார்களா? நகரில் ஆடுகள் இருக்குமா? அவை மேய்க்கபட வேண்டுமா? ஒருவேளை நகரிலும் மழைகள் இல்லாமல் ஆடுகள் தாகமிகுதியால் அலைய வேண்டுமா? நகரில் உள்ள பனைகளும் பற்றி எரிய துவங்குமா ?ஏதேதோ யோசனையாக வந்து கொண்டிருந்தது.

திடீரென ஊரில் எத்தனை சேவல்கள் இருக்கின்றது, ஒன்றிரண்டைக் கூட கண்ணில் காணவேயில்லையே என்று பட்டது. தான் பார்த்த மனிதர்கள். தன்னோடு ஆடுமேய்த்தவர்கள், தனக்கு கஞ்சிதண்ணி வார்த்த பொம்பளைகள் அத்தனையும் அழிந்து மண்ணுக்குள் போய்விட்டார்கள். அது எத்தனை பேர் ஞாபகத்தில் இருக்கும்.

தானும் அழிந்து மண்ணாகி போனால் நிச்சயம் ஒரு தும்பை செடியாகி விடக்கூடும். ஆனால் அதை மேய்வதற்கு ஆடுகள் இருக்குமா? தும்பை பூவை இப்போது யாராவது நின்று முகர்ந்து அதில் உள்ள தேனை நாவில் ருசித்து பார்க்கிறார்களா என்ன?

தும்பை செடியானாலும் தனித்து இருந்து ஆகாசத்தை பார்த்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்

மருமகள் சொல்வது போல நகரத்திலும் மனிதர்கள் வசிக்க தானே செய்கிறார்கள். அவர்கள் சந்தோஷத்திற்காகவாவது இந்த ஊரை விட்டு போய்விட வேண்டியது தானே. ஏன் ஊர் தன்னை விட மறுக்கிறது. அவருக்கு குழப்பமாக இருந்தது.

நெடுநேரம் அவர் அந்த இடத்தில் தலைகவிழ்ந்தபடியே உட்கார்ந்திருந்தார். சௌடியை கடித்த பாம்பும் இந்நேரம் செத்து போயிருக்கும் இல்லையா என்று ஏனோ தோணியது. எழுந்து வீட்டை நோக்கி போக மனதேயில்லாமல் உட்கார்ந்தேயிருந்தார். அவரை மீறிய துக்கம் பீறிட அழ வேண்டும் போலிருந்தது. ஆனால் அழுவதற்கு அவர் விரும்பாமலிருந்தார். மனதை அடக்கி கொண்டு உட்கார்ந்திருந்தார். திடீரென எழுந்து ஆவேசமானவர் போல பனை எரியுதுடா பனை எரியுது என்று கத்தினார்.

பிறகு ஏதோ சந்நதம் கொண்டவரை போல தன் கைக்கோலால் இல்லாத ஆடுகளை விரட்டியபடியே அவர் வீட்டை நோக்கி நடக்க துவங்கினார். வழி முழுவதும் பனை எரிந்து கொண்டிருக்கிறது என்று அவர் கத்திக் கொண்டே வந்தார். அதை நின்று கேட்பதற்கு வீழ்ந்து கொண்டிருக்கும் சூரியனை தவிர அந்த வெட்டவெளியில் யாருமேயில்லை.

– கனடாவிலிருந்து வெளிவரும் காலம் இதழில் வெளியான சிறுகதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *