எப்பொழுது வருவான்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 17, 2024
பார்வையிட்டோர்: 229 
 

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அம்மா, ராமு எங்கே அம்மா?”

“ஊருக்குப் போயிருக்கான், கண்ணே!”

“எப்போம்மா வருவான்?”

“ரெண்டு நாளிலே வந்துவிடுவானப்பா.”

“அவன் இம்மே வரமாட்டான்னு கமலம் சொல்றாளே?”

“அவ கெடக்கறா, பயித்தியக்காரி.”

“அவாளெல்லாம் ஏன் அழறா?”

“ராமு ஊருக்குப் போயிட்டான்னு.”

“போனாக்க என்ன? அவன் தான் திரும்பி வந்துடுவானே.”

“வருவான், அப்பா.”

தாய்க்குத் துக்கம் அடைத்துக்கொண்டது.

“ஏம்மா அழறே? வரமாட்டானா?”

அவனுக்கும் அழுகை வந்துவிட்டது. அந்தக் குழந்தைக்குச் சமாதானம் சொல்வது தர்ம சங்கடமாகிவிட்டது. எப்படி அவள் சமாதானம் சொல்வாள்?

சீனு மூன்றரை வயதுக் குழந்தை. அந்த வீட்டில் ராமசேஷையரும் சேஷையரும் பத்து வருஷங்களாகக் குடியிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் அறுபது நாழிகையும் ஆபீஸ் வேலைதான், வீட்டிலே அவர்களைப் பார்ப்பதென்பது இயலாத காரியம். ராமசேஷையர் குழந்தை சீனு. சேஷையர் குழந்தை ராமு. அந்த இரு குடும்பத்தினரும் இயல்பாகவே அன்யோன்யமாகப் பழகி வந்தாலும் அந்தக் குழந்தைகளிடையே ஏற்பட்ட அன்பினால் பழக்கம் பின்னும் உறுதிப்பட்டது.

குழந்தை சீனுவுக்கு எந்தப் பக்ஷணம் தின்றாலும் ராமுவுக்குக் கொடுக்காமல் தின்ன மனம் வராது. மூன்றரை வயதுக் குழந்தையானாலும் அவனுடைய புத்திசாலித்தனமும் அன்பும் எந்தக் குழந்தையினிடத்திலும் காணமுடியாது. அப்பா வாங்கிக் கொண்டுவந்த பொம்மையை ராமுவுக்குக் கொடுத்து விடுவான். எந்த வஸ்துவும் ராமுவுக்குக் காட்டாமல் கொடுக்காமல் வைத்துக்கொள்ள அவன் மனம் சம்மதிப்பதில்லை.

ராமுவுக்கு இரண்டே வயது. அவனுக்கு ஜுரம் வரட்டும்; சீனு சாப்பிடவே மாட்டான். அவனுக்குப் போடும் பற்றைத் தானும் போட்டுக்கொள்ள வேண்டும். அவனுக்குக் கஞ்சி கொடுத்தால் இவனுக்கும் கொடுக்க வேண்டும். என்ன சொன்னாலும் கேளாமல் தங்கள் வீட்டுப் பக்ஷணத்தை ஒருவருக்கும் தெரியாமல் அவன் வாயில் ஊட்டிவிட்டு வந்துவிடுவான். அதனால் நன்மையோ, தீமையோ, அவனுக்கு அக்கறையில்லை. ராமுவுக்கு நிமோனியா ஜுரம் வந்தது. சீனுவுக்கு வரவில்லை; அவ்வளவுதான்; ஆனால் அவனும் ஆகாரம் உண்ணவில்லை. ராமுவுக்கு உடம்பு சரியில்லையென்று தெரிந்தது முதல் சீனுவுக்கும் உடம்பு இளைத்துவந்தது. மற்றவர்களெல்லாம் கண் விழித் துக்கொண்டு ராமுவின் அருகில் இருப்பார்கள். பாவம்! சீனு குழந்தைதானே? தன்னால் ஆனவரைக்கும் அந்தப் படுக்கையண்டை உட்கார்ந்திருப்பான். “சீனு, நாளைக்கு நான் பட்டணம் போறேன்; வறயா?”, “நான் பள்ளிக்கூடம் போறேன்; வறயா?” என்றெல்லாம் அர்த்தமில்லாத கேள்விகள் பல அவன் வாயிலிருந்து வரும். அப்படிக் கேட்கும் போதே அந்த ஏழைக் குழந்தை உள்ளத்தில் ஏதோ திக்குத் திக்கென்று அடித்துக்கொண்டே இருக்கும். ஏதோ ஆபத்து வரப்போகிறதென்ற சூசனை அந்த உள்ளத்திலே, புரிந்து கொள்ளாதபடி உண்டாயிற்று. எவ்வளவு நாழிகை விழித்துக்கொண்டிருப்பான்? அப்படியே அயர்ந்து போய்த் தூங்கிவிடுவான். அப்பொழுது அவனை எடுத்து வேறு படுக்கையில் விடுவார்கள். அந்தச் சமயத்தில் அவன் விழித்துக் கொண்டால் கூடப் பிடிவாதம் பிடித்து ராமுவின் அருகிலேயே விடும்படி கத்துவான். காலையிலே எழும்பொழுது தன் படுக்கைக்கருகில் ராமுவைக் காணாவிட்டால் கத்திக்கொண்டே ஓடி அவனிடம் வந்துவிடுவான்.

ராமு ஜுரவேகத்தில் ஒன்றுமே வாய் திறப்பதில்லை. அவனுடைய சோர்ந்துபோன கண்கள் துக்கத்தில் ஆழ்ந்த சீனுவின் கண்களோடு பேசும். அவை தமக்குள் என்ன பேசிக்கொண்டனவோ! யார் அறிவார்கள்? அக்கண்கள் சீனுவின் விழிகளின் ஆழத்தில் அன்பென்னும் மணியைக் கண்டிருக்கலாம். அந்தக் கண்ணிணைகள் தம்முள் ஒத்துப் பேசின; அவ்வளவுதான் சொல்லலாம்.

ராமுவின் வாழ்நாள் குறைந்து வருவதை “யாவரும் அறிந்து கொண்டார்கள். யமனுடைய வலை அந்த இளந்தளிரின் மேல் வீசியாயிற்றென்பதை உணர்ந்து வீட்டிலுள்ளோர் யாவரும் துடிதுடித்து அழுதார்கள்.

குழந்தை சீனுவுக்கு நெஞ்சிலே ஒரு பயம்; புரிந்துகொள்ள முடியாத அந்தகாரத்திலே திக்குத் தெரியாமல் அலைவது போன்ற உணர்ச்சி; அவனுக்கு அழுகை வரவில்லை. ஆனால் அவனுடைய முகமலர்ச்சி, பேச்சு, சுறுசுறுப்பு எல்லாம் மறைந்தன; அவன் கல்லாய்ச் சமைந்து நின்றான்.

எதிர்பார்த்த சமயம் வந்துவிட்டது. ராமுவின் உயிர் கூட்டை விட்டு விடுதலை அடைந்தது. வெறும் பிணத்தை எடுத்துச் சென்றார்கள். அப்பொழுது தான் சீனுவுக்கு ஒருவகையான சோகம் உண்டா யிற்று ; “ராமுவை எங்கேயோ கொண்டு போகிறார்களே; நானும் வறேன்; ஐயையோ ! நானும் வறேன்” என்று அவன் கதறிக் கதறித் தவித்தான். ராமு போனவிடத்துக்கு அவனும் போக முடியுமா? அவ்வளவு சுலபமான இடத்திற்கா அவன் போனான்? பாவம் குழந்தைக்கு என்ன தெரியும்!

2

போன குழந்தையைப்பற்றி வருந்துவதைவிட இருக்கிற குழந்தைக்காக வருந்துவது அதிகமாயிற்று. சீனு, ராமுவின் பிரயாணத்தைப்பற்றி விசாரிக்கும் போதெல்லாம் ராமுவின் தாயும் பிறரும் துக்கம் பொங்க அழுதார்கள்; சீனுவின் தாயோ, அவனது கள்ளங் கபடற்ற மனத்திலே முளைத்த அன்பு இப்போது பற்றுக்கோடில்லாமல் தள்ளாடி நிற்பதை உணர்ந்து மறுகினாள். அறிவுடைய பிள்ளையாக இருப்பதிலும் ஓர் அபாயம் இருக்கிறதே என்று வருந்தினாள்.

“வருவான், வருவான்” என்று சொல்லி எவ்வளவு நாளைக்கு ஏமாற்ற முடியும்? சீனுவும் ராமுவை மறப்பவனாகக் காணவில்லை. அவனுடைய உத்ஸாகமெல்லாம் போயிற்று; முகத்திலே சோபை இல்லை; பேச்சிலே இன்பம் இல்லை; நடையிலே துள்ளல் இல்லை; எல்லாவற்றிலும் ஒரு வாட்டம். ஒரு துயரத்தின் சாயையே தோன்றி வளர்ந்து வந்தது. அவன் உடல் மெலிந்தது.

“ஏது, இந்தக் குழந்தையும் அந்தக் குழந்தை போன இடத்துக்கே போய்விடுமோ?” என்று வீட்டிலுள்ளார் நினைக்கத் தொடங்கினர்; வயிறு பகீரென்றது.

“ராமுவோடு பழகிய இடங்கள், ராமுவின் சாமான்கள் இவற்றால் அவனது ஞாபகம் சீனுவுக்கு வருகின்றது; இந்த இடத்தை மாற்றினால் ஒரு கால் இவனுக்கு அந்த ஞாபகம் மறந்தாலும் மறக்கலாம்” என்று யாரோ சொன்னார்கள். ராமசேஷையரும் சேஷையரும் இதைப்பற்றி ஆலோசித்தார்கள்.

“ஏதோ, எனக்குத்தான் கொடுத்துவைக்கவில்லை; அருமையான குழந்தையைப் பறிகொடுத்தேன், நீங்களாவது சீனுவை -ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுங்கள். அவன் போய்விட்டான்; இவனையாவது பார்த்துக் கொண்டு ஆறுதலடையலா மென்றிருந்தேன்; அதற்கும் இப்போது தடை வந்தது. ஆனாலும், ஈசுவர கிருபையால் எங்கே யாவது சௌக்கியமாக இருந்தால் ஆயிரந்தடவை பார்த்துக்கொள்ளலாம். நல்ல மனிதர்கள் உள்ள வீடாகப் பாருங்கள். நான் தான் பாவி; உங்களைப் போன்ற மனிதர்களை உடன் வைத்துக் கொள்ளும் அதிருஷ்டம் இல்லை. ராமு தன்னோடு எல்லாவற்றையும் கொண்டு போய்விட்டான் போல் இருக்கிறது” என்று சொல்லிவிட்டுச் சேஷையர் கோவென்று அழுதார். அவருக்குச் சீனு வேறு, ராமு வேறு என்று இல்லை. ஒரு குழந்தையைக் காலனுக்குப் பறி கொடுத்துவிட்டு மற்றொரு குழந்தையை உயிரோடு யாருக்கோ கொடுப்பது போன்ற உணர்ச்சிதான் ஏற்பட்டது.

“நானும் பார்த்தேன்: வரவரக் குழந்தையின் நிலை மோசமாக இருக்கிறது. வேறு இடத்துக்கு மாற்றி இவன் அங்கே உள்ள குழந்தைகளோடு பழகினால் இந்த ஞாபகம் மாறுமோ என்னவோ! ஆகையால் குழந்தைகள் உள்ள இடமாகப் பார்த்துப் போகலாமென்று எண்ணுகிறேன்” என்றார் ராம சேஷையர்.

ராமசேஷையர் எவ்வளவோ வீடுகளைப் பார்த்தார். பார்க்கும்போதெல்லாம் அந்த வீட்டில் குழந்தைகள் இருக்கின்றனவாவென்று விசாரித்துக் கொள்வார். ‘ராமுவைப்போலவே முகஜாடையுள்ள குழந்தை எந்த வீட்டிலாவது இருந்தால் சீனுவின் துக்கம் குறையுமே’ என்பது அவர் ஆசை. எவ்வளவோ வீடுகளில் சிறு குழந்தைகளே இல்லை. சில வீடுகளில் இடவசதி இல்லை. சில இடங்களில், “குழந்தை இருக்கிறதா?” என்று கேட்கும் பொழுதே வீட்டுக்காரர் , “அதெல்லாம் நீர் ஏன் விசாரிக்கிறீர்? வீடு பார்க்க வந்தீரா? குழந்தை பார்க்க வந்தீரா?” என்று வள்ளென்று விழுந்தார். அவர்களுக்கு ராமசேஷையர் குழந்தை பார்க்கத்தான் வந்திருக்கிறா ரென்பது எப்படித் தெரியும்?

கடைசியில் ஒரு வீட்டைப் பார்த்து அரை மனத்தோடு திட்டம் செய்தார். அந்த வீட்டில் இரண்டு குடும்பங்கள் குடித்தனம் இருக்கலாம். ஒரு பகுதியில் ஒருவர் இருந்தார். காலியுள்ள இடத்திற்கு ராமசேஷையர் வருவதாகச் சொன்னார். அங்கே குடியிருந்தவருக்கு இரண்டு குழந்தைகள். இரண்டாவது குழந்தைக்கு இரண்டு வயசு. அதை ‘அசப்பிலே’ பார்த்தால் ராமுவைப்போல இருந்தது. ‘இதுவும் ஈசுவரன் திருவருளே’ என்று எண்ணி ராமசேஷையர் அந்த வீட்டுக்கு முன்பணம் கொடுத்து விட்டார். “அந்த வீட்டில் ஓர் ஓரத்தில் ஒழுகும். பெருச்சாளி உபத்திரவம் உண்டு; வீட்டுக்காரர் கொஞ்சங்கூடக் கவனிக்கமாட்டார். மொட்டை மாடியிலே ஏறினால் அதற்குத் தனியாக வாடகை வாங்குவார்” என்ற குறைகளைப் பலர் அவரிடம் சொன்னார்கள். அங்கே குடியிருந்தவர்கூட , “ஏதோ, ஆபீஸுக்குப் பக்கமாக இருக்கிறதே என்று வந்தேன். இப்போது ஏண்டா வந்தோமென்றாகி விட்டது; வேறு வீடு பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றார். ராமசேஷையர், “அப்பொழுது நானும் வந்துவிடுகிறேன். இரண்டு பேருக்கும் சேர்த்து வீடு பாருங்கள், ஸார்; அதுவரைக்கும் இங்கேயே இருக்கிறேன்” என்று சொல்லிவிட்டார்.

வந்த புதிதில் சீனு அந்த வீட்டுக் குழந்தையோடு விளையாடிப் பார்த்தான். அவனுடைய தாய் தந்தையரும் அந்தக் குழந்தைதான் ராமு என்று அவனிடம் சொன்னார்கள். ஆனால் அந்தக் குழந்தையின் கண்களிலே சீனுவை வரவேற்கும் ஆதரவு இல்லை; அதன் குரலிலே சீனுவின் இருதயத்தோடு ஒட்டும் ஒலி இல்லை.

“ராமு இருக்கிற இடத்துக்கு வந்துவிட்டோமே” என்று அப்பா சொல்வார்.

“இல்லேப்பா; ராமு என்னோடே பேசுவானே; என்னோடே சிரிப்பானே; இவன் ஒண்ணும் பண்ணலையே” என்று குழந்தை சொல்வான்.

“அதுதான் சிரிக்கறானே; பேசறானே; ராமுதான் இவன்” என்று மறுபடியும் சொல்வார் தகப்பனார்.

“இல்லேப்பா; நிஜம்மா இவன் ராமு இல்லே. இவன் கிட்டு. அப்படித்தானே எல்லாரும் கூப்பிடறா?”

அதற்குமேல் அவருக்குப் பேச வழியில்லை. ஆனாலும் அப்போது அவருக்கு ஒரு யோசனை தோற்றியது. ‘ஏன் அப்படிச் செய்யக்கூடாது? அப்படிச் செய்துவிட்டால், இந்த ஆக்ஷேபணைக்கு இடமில்லையே என்றெல்லாம் பேசிக்கொண்டார். தம்முடன் குடியிருப்பவரிடம் போனார்; “ஸ்வாமி, ஒரு சின்ன விண்ணப்பம்: நீங்கள் அதன்படி செய்தால் எனக்குக் கோடி பவுன் கொடுத்ததற்குச் சமானம்; என் குழந்தையைக் காப்பாற்றுகிற புண்ணியம் உண்டு உங்களுக்கு” என்றார்.

“உம்முடைய குழந்தைக்கு என்ன வந்தது? நான் என்ன செய்ய வேண்டும்?”

“ஒன்றுமில்லை; உங்கள் குழந்தையை இனிமேல் எல்லோரும் ராமுவென்று அழைக்கலாமா?”

“இதென்ன ஐயா, விசித்திரமாக இருக்கிறது! பெயரை யாராவது மாற்றுவார்களோ? என்னுடைய தாத்தா பேர் கிருஷ்ணமூர்த்தி; அதை அவனுக்கு வைத்திருக்கிறோம். நீர் மாற்றச் சொல்கிறீரே.”

“உங்களை வீணாக மாற்றச் சொல்லவில்லை. பெயர் அப்படியே இருக்கட்டும்; கூப்பிடுவது மாத்திரம் ராமு என்று கூப்பிடலாமே.”

“அது எதற்கு? பயித்தியக்கார யோசனையாக இருக்கிறதே!”

ராமசேஷையர், தாம் தம் குழந்தைக்குக் கிட்டுவை ராமுவாகக் காட்ட இந்தத் தந்திரம் செய்ய எண்ணியதாகக் கூறியதோடு, ராமுவின் அல்பாயுச் சரித்திரத்தையும் சொன்னார். அப்போது அந்த மனிதருக்கு வந்த கோபத்தைப் பார்க்க வேண்டும்; “ஓய் என்ன மனுஷனையா நீர்? ஏதோ அல்பாயுஸுக் குழந்தையாம்; அதனுடைய பேரை இதற்கு வைக்கச் சொல்கிறீரே. ஆயிரம் சாமிக்கு வேண்டிக்கொண்டு ஒரு பிள்ளை பிறந்திருக்கிறது; இதை நான் கண்ணிலே வைத்து இமையிலே மூடிப்பாதுகாக்கிறேன். எங்கேயோ துக்குறிபோல வந்து என்ன என்னவோ உளறுகிறீரே! போதும் உம் முடைய ஸஹவாஸம். இன்றைக்கே இந்த வீட்டைக் காலி பண்ணும். உம்முடைய பிள்ளைக்கு அந்த அல்பாயுஸுப்பேரை வையுமே, பார்க்கலாம்” என்று அவர் இடிபோல இடித்து முழங்கினார். ராம சேஷையர் நடுங்கிப் போய்விட்டார். கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையைப் போல இருந்தது.

3

வேறு வழியில்லாமல் மற்றொரு வீட்டிற்கு வந்தார் ராமசேஷையர். ஒருவருடைய உணர்ச்சிகளை உள்ளபடியே மற்றொருவர் உணர்ந்துகொள்ள முடிவ தில்லை. கிட்டுவின் தகப்பனாருக்கு ஏன் அவ்வளவு கோபம் வந்ததென்பது ராமசேஷையருக்கு விளங்கவே இல்லை. – சீனு இளைத்துக்கொண்டுதான் வந்தான். போதாக்குறைக்கு அவனுக்கு மஞ்சட் காமாலை வேறு வந்துவிட்டது.

ராமுவின் தகப்பனாராகிய சேஷையர், ராம சேஷையர் தம் வீட்டை விட்டுப் போனபோது அள வற்ற துக்கத்தை அடைந்தார். அவர் சிந்தாதிரிப் பேட்டையில் இருந்தார். ராமசேஷையர் மயிலாப்பூரிலே குடியிருந்தார். ஆபீஸ் தொல்லைக்கு நடுவே அவ்வளவு தூரம் போய் அடிக்கடி பார்ப்பதென்பது முடிகிற காரியமா? ஏதோ சிலமுறை வந்தார். அப்பால் வருவதை நிறுத்திவிட்டார்.

இவ்வாறு ஒன்றரை வருஷங்கள் கழிந்தன. சீனுவுக்கு ராமுவைப்பற்றிய ஞாபகம் மறக்கவே இல்லை.

“அம்மா, ராமு எப்போம்மா வருவான்?”

“வருவான், அப்பா.”

“இன்னும் வல்லையே அம்மா.”

“வந்துவிடுவான், கொழந்தே.”

தாய்க்குத் துக்கம் தொண்டையை அடைத்துக் கொள்ளும். இது தினப்படி நிகழ்ச்சியாகப் போய் விட்டது.

ராமுவின் வினாவிலே ஏக்கம் முழுசாகத் தொனிக் கும்; தாயின் பதிலிலே பரிதாபம் ஒலிக்கும். அவன் வருவானா? வருவான், வருவானென்று எதிர்பார்க்கும் குழந்தையுள்ளத்திலே எத்தனை ஆஹ்லாதம்? அதைக் கடவுள் உண்மையிலே உணர்ந்திருந்தால், அந்த இளங் குழந்தையின் ஹிருதயத்திலே காதுவைத்துக் கேட்டிருந்தால், அதன் பரிதாபத்தைச் சகிக்க முடியாமல் ராமுவை மீட்டும் உயிர்ப்பித்திருப்பார். அவர் கருணாநிதி யென்பது வாஸ்தவமாக இருந்தால் அதுதான் நடக்கும். அது நடக்கவில்லையே; அவர் கருணாநிதியல்லவா? இந்த விஷயங்களெல்லாம் அநாதிகாலமாக அவிழ்க்க முடியாமல் இருந்து வரும் முடிச்சுகள்.

பதினெட்டு மாதகாலம் அந்தப் பிரிவுத்தீயிலே சீனு வாடி வதங்கிப் போனான். அவன் தகப்பனார் அந்தக் குழந்தையின் மனநோயைத் தீர்க்க எவ் வளவோ பாடுபட்டார். அவரால் முடியவில்லை.

ஏதோ, அன்று அவரும் அவர் மனைவியும் நினைத்துக்கொண்டார்கள். “இந்தக் குழந்தைக்கு ராமு இருந்த இடத்தையாவது மறுபடி ஒருமுறை காட்டுவோம். இனிமேல் நம்முடைய சக்தியில் ஒன்றுமில்லை” என்று பேசிக்கொண்டார்கள். போகிறதா, வேண்டாமா என்று யோசித்தார்கள். பிறகு, “அவரும் வந்து ரொம்ப நாளாகிறது. போய்ப் பார்த்து வரலாம். நான் அந்த வீட்டை விட்டு வந்து ஒரு தடவைகூட அங்கே போகவில்லை. புறப்படு, போகலாம். அங்கேயே பக்கத்து வீட்டுப் பாட்டிக்குக் காமாலை மந்திரம் தெரியும்; மந்திரித்துக்கொண்டு வரலாம்” என்று ராமசேஷையர் சொல்லவே அவர் மனைவி குழந்தையையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. சேஷையர் வீட்டில் இருந்தார். ராமசேஷையரை வரவேற்று உபசரித்தார். குழந்தை சீனு அந்த வீட்டைக் கண்டவுடன் குடுகுடுவென்று உள்ளே ஓடினான். அங்கே கூடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த குழந்தைக்குப் பக்கத்தில் போய், “ராமு ! ராமு! இங்கேயா இருக்கே? ஊரிலேந்து எப்ப வந்தே? அப்பா சொல்லல்லையே” என்று கட்டிக்கொண்டான்.

வெளியிலே ராமசேஷையர் சேஷையரோடு பேசிக்கொண்டிருக்கும் போது சீனு அந்தக் குழந்தையை இழுத்துக்கொண்டு வெளியிலே வந்தான். “அப்பா, இங்கே பார்; ராமு!” என்று கூவினான்.

ராமசேஷையர் திக்பிரமை அடைந்துவிட்டார். சீனுவோடு நின்றிருந்த குழந்தை பெரும்பாலும் ராமுவைப்போலவே இருந்தது. கண்நேரத்தில் அவருக்கு விஷயம் விளங்கிவிட்டது. தாம் அந்த வீட்டைவிட்டுப் போனபோது ராமுவின் தாய் கர்ப்பமாக இருந்தது அவருக்கு அப்போது ஞாபகத்திற்கு வந்தது. வந்தது.

“உங்களுக்குக் குழந்தை பிறந்ததை நீங்கள் சொல்லவே இல்லையே; நான், புண்யாஹவாசனத்துக்கு வந்துவிடுவேனென்றா?” என்று கேட்டார் ராமசேஷையர்.

“ஏதோ, பிறந்தது; உங்களுக்குச் சொல்ல மறந்துவிட்டேன். உங்களை நான் அதிகமாகச் சந்திப்பதே இல்லையே. என்னவோ இந்தக் குழந்தையாவது ஈசுவரனுடைய கிருபையால் சௌக்கியமாயிருக்கட்டும், அப்புறம் தெரியாமலா போகிறது என்று இருந்துவிட்டேன்.”

“எல்லாம் ராமுவின் சாயலாக இருக்கிறதே.”

“ஆமாம், அப்படித்தான் எல்லோரும் சொல்லுகிறார்கள்.”

மற்றவர்கள் சொல்வதென்ன? அந்தக் குழந்தையுடன் சீனு கூத்தாடிக் களிக்கத் தொடங்கினான். அவன் கண்களிலே முன்பு மறைந்து போன ஒளி மீட்டும் ஒளிர்ந்தது. உடம்பிலே ஒரு குதூகலம். அந்தக் கொண்டாட்டத்தை அரை மணி நேரம் ஸாவதானமாகக் கவனித்தார் ராமசேஷையர். ‘சரி; மருந்து கிடைத்துவிட்டது’ என்று அவர் நிச்சயித்துக்கொண்டார்.

“குழந்தைக்கு என்ன பேர் வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார் ராமசேஷையர்.

“ஒன்றும் வைக்கவில்லை; போகப் போகப் பார்த்துக் கொள்ளலாமே என்று இருந்துவிட்டேன். பிச்சை, குப்பு என்று என்னவெல்லாமோ சொல்லி அழைக்கிறார்கள்.”

“அது கிடக்கட்டும். எங்கள் சீனுவும் அந்தக் குழந்தையும் விளையாடுவதைப் பாருங்கள். பழைய ராமுதான் வந்திருப்பதாக அவன் எண்ணியிருக்கிறான். அவன் இனிமேல் நோய் தீர்ந்து பிழைத்துக் கொள்வானென்ற நம்பிக்கை எனக்கு உண்டாயிருக்கிறது. நானும் இங்கேயே குடி வந்துவிடலாமென்று எண்ணுகிறேன்.”

“அப்படியா! ஆஹா, சந்தோஷம்” என்று கூத்தாடினார் சேஷையர்.

“ஆனால் – ஒன்று; சொல்லட்டுமா? சொல்லலாமா?”

“ஏன் அவ்வளவு தயக்கம்? கூசாமல் சொல்லுங்களேன். நாம் இன்று நேற்றுப் பழக்கமா?”

“சொல்லலாமா? கோபித்துக்கொள்ள மாட்டீர்களே?”

“சொல்லுங்கள்.”

“இந்தக் குழந்தையை ராமுவென்றே கூப்பிடுவீர்களா?”

இப்படிச் சொல்லும்போது ராமசேஷையருக்கு மளமளவென்று கண்ணில் நீர் வந்துவிட்டது. சேஷையரோ, “அடே ராமு” என்று அழைத்துக் கொண்டே அந்தக் குழந்தைகள் இருக்குமிடம் ஓடினார்; அவர்களைத் தூக்கிக்கொண்டு வந்தார்; “இந்தாருங்கள் உங்கள் ராமு; இவன் எங்கள் சீனு” என்று இருவர் கன்னங்களிலும் முத்தமிட்டார்.

சீனுவுக்கு இப்போது ராமு வந்துவிட்டான்; அன்றோடு, “எப்போம்மா வருவான்?” என்ற கேள்வியை அவன் மறந்துபோனான்.

– கலைஞன் தியாகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 1941, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *