என் சூரியன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 2, 2013
பார்வையிட்டோர்: 10,566 
 
 

சென்னையின் மற்றொரு விடியற்காலை, ஒரு புதிய நாள். உலகம் முழுவதும் விடியல் அழகாகவே இருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் உலகில் எங்காவது பொழுது புலர்ந்து கொண்டே இருக்கிறது.

சூரியன், மலை முகடுகளில் தவழ்ந்து எழுகிறான். மூழ்கியிருந்த கடலில் இருந்து துளி ஈரமில்லாமல் மேலே வருகிறான். வானுயர்ந்த காடுகளின் மரங்களில் ஏறி உயறே தாவுகிறான்.

உலகம் முழுக்க உள்ள தலைநகரங்களைப் போலவே, சென்னையிலும் சூரியன் உதிக்கிறான். இன்று…
நகரத்தின் மத்தியில் ஒரு கட்டிடத்தின் ஐந்தாவது தளத்தின் ஓர் சிறிய அறையில் ஆறு அறைத் தோழர்களுடன் உறங்கிக் கொண்டிருந்த எனக்கும் இன்று சூரியன் உதித்தான், ஜன்னல் வழி தினமும் பார்க்கிறேன், எங்கள் கட்டிடத்தை விட உயரமான சற்று தள்ளி இருக்கும் மற்றொரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருக்கும் பெறிய தண்ணீர் தொட்டியின் பின்னிருந்து வந்தான், அன்றைய எனக்கான சூரியன். -என் சூரியன்.

என்னை தினமும் காலை உறக்கத்திலிருந்து எழுப்புவதே இவன்தான். இவன்தான் என் அலாரம். எல்லோருக்கும் ஒலி அலறும் அலாரம், எனக்கு இவன் ஒளிதான் அலாரம்.

“என் அம்மா ஞாபகம் வருகிறாள்”. கிராமமும் அல்லாத நகரமாகவும் மாறிவிடாத என் ஊரில், என் பள்ளி நாட்களின் காலை பொழுதில், தோட்டத்திலிருந்து குருவிகளின் கிறீச்சல்கள் கேட்கும், பால்காரருடன் ஒவ்வொரு வீட்டிற்க்கும் வந்து பால் கொடுக்கும் பசுக்களின் கலகல மணியோசை கேட்கும், பக்கத்து வீட்டு சாளரம் வழியே வரும் காலை நேர டிரான்ஸிஸ்டரின் மங்கள இசை கேட்கும், ஆனாலும் நான் உறக்கத்தில் தான் இருப்பேன்.

என் அம்மா அருகில் வருவாள், என் தலைமுடி கோதி, என் முகம் வருடி, “கண்ணு, மணியாச்சு கண்ணு… எழுந்திரிடி செல்லம்” என்பாள். ஒவ்வொரு மகனுக்கும் தன் தாய் அவன் உறக்கம் கலைப்பது கூட ஒரு “தாலாட்டு” தான்!

இவன் என் சூரியன், காலை பொழுதுகளில் என் கண்ணத்தில் சுளீரென்று அறைவது இல்லை, இளவெயில் என் முகத்தை வருடி கொடுக்கும், என் அம்மாவைப் போல. அதனால் என் அம்மா ஞாபகம் வருகிறாள்.

என் அறையில் என்னையும் சேர்த்து ஏழு பேர், இருபத்தி ஐந்து வயதிற்க்கு மேல் யாரும் இல்லை. எங்களின் அதிகபட்ச படிப்பு +2 தான், அதுவும் நான்தான். எல்லோரும் வேலைக்கு செல்கிறோம், விதவிதமான மனிதர்கள், அவரவர்க்கு ஏற்றார்போல விதவிதமான வேலைகள். இன்று ஒரு வேலையில் இருப்பவர் அடுத்த நாள் வேறு வேலை, அடுத்த வாரம் வேறொரு வேலை. ஒத்துவராவிட்டால் வேலை மாறிக்கொண்டே இருக்கும். சென்னையில் வேலை கிடைப்பதா கஷ்டம்…? என்ன வேலை செய்கிறோம் என்று வீட்டிலும், ஊரிலும் சொல்வதுதான் கஷ்டம். உணவகத்தில், உதிரிபாக விற்பனை கடையில், ஆடைகள் விற்கும் சிறிய, பெறிய, மிகப் பெறிய கடைகளில், மரக்கடையில், பெயிண்ட் கடையில் இப்படி சொல்லக்கூடியதுமாக, சொல்லக்கூடியதாக இல்லாததுமாக பல வேலைகள் சென்னையில். நீ இன்று சென்னைக்கு புதியவன் என்றால் நாளையே பழையவன்.

எனக்கும் ஒரு வேலை. நகரம் முழுவதும் இரு சக்கர வாகனத்தில் அலைந்து திரிந்து பணம் பறிக்கும், இல்லை, பணம் வசூலிக்கும் வேலை. நாகரிகமாக வெளியே சொல்லிக்கொள்ள கூடிய வேலைதான், ஆனால் உண்மையில் அப்படி இல்லை.
என் வேலையில், சில நாட்கள் கடிணமாகவும், கொடுமையாகவும் இருக்கும், இன்றைய தினம் போல. மதிய வேளை வரை ஒரு வேலையும் ஆகவில்லை, ஒரு பணமும் வசூலாகவில்லை. மண்டை காய்ந்துவிட்டது, காலையில் என் கண்ணம் வருடிய சூரியன் இப்பொழுது என் உச்சி மண்டையை பிளந்து கொண்டிருக்கிறான். சென்னையின் அகண்ட சாலைகளிலும், சிறிய தெருக்களிலும், குறுகிய சந்துகளிலும் லாவகமாக என் வாகனத்தை செலுத்துகிறேன். இதற்கு மேல் முடியாது என்ற நிலையில், ஒரு தெருமுனை தேனீர் கடையில் ஒதுங்கினேன், தேனீர் குடிக்க அல்ல, அருகில் இருந்த பெறிய தூங்குமூஞ்சி மரத்தின் நிழலில் இளைப்பாற. ஆறினேன்.
“இப்ப என்ன பண்ணுவ…?” என்று சூரியனிடம் எகத்தாளம் பேச வேண்டும் போல் இருந்தது. அவனை தேடினேன். மரக்கிளைகளுக்கு இடையில் ஒளிந்து கொண்டிருந்தான், என் எண்ணத்தை கண்டுபிடித்துவிட்டான் போல, சிரித்துக்கொண்டேன்.

சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின், இன்றைய தினம் இன்னும் எங்கெல்லாம் செல்ல வேண்டும், யார் யாரை பார்க்க வேண்டும் என்ற குறிப்புகளை பார்க்கத் தொடங்கினேன். பக்கத்து தேனீர் கடைக்காரர் ஒரு ஈரமான பழைய துணியை வெயில் படும் இடத்தில் சாலை ஓரத்தில் கிடத்திவிட்டுப் போனார். நான் என் குறிப்புகளை புரட்டிக்கொண்டே ஒரக்கண்ணால் அவரை பார்த்தேன், எங்கே “தம்பி டீ வேணுமா…?” என்று கேட்டுவிடுவாரோ? கேட்க்கவில்லை. எனக்கு இப்போது குடிக்க தண்ணீர் தான் தேவையானதாக இருந்தது. உலகத்திலேயே சுவையானது தண்ணீர் தான், தாகமாய் இருக்கும் பொழுது.

குறிப்புகளை புரட்டியதில் ஒரு விஷயம் கிடைத்தது. இன்று உறுதியாக பணம் கொடுத்துவிடுவதாக ஒருவர் சொல்லியிருந்தார், ஆனால் சற்று தொலைவில் இருந்தது அவரது அலுவலகம். காலையில் இருந்து உருப்படியாக ஒரு வேலையும் ஆகாததால் மனம் சோர்வாக இருந்தது. ஒருவர் முகத்தில் அடித்தாற்போல் பணம் இல்லை என்றார், ஒருவர் வீட்டு கதவை திறக்காமலே பேசி அனுப்பினார், ஒரு பெண் அவள் கணவர் ஊரில் இல்லை போய்விட்டு அப்புறம் வாங்க என்றார். மற்றொருவர் “தம்பி, ரொம்ப ‘டைட்டா’ இருக்கு தம்பி… அடுத்த வாரம் நானே கூப்பிட்றேன்” என்றார். இன்னும் இன்று போக போற இடத்தில் என்ன நடக்கப் போகிறதோ என்று பல நினைவுகளில், குழப்பங்களில் ரொம்ப நேரமாக மூழ்கியிருந்தேன். சரி, இன்று இதோடு முடித்துக்கொண்டு நாளை முதல் வேலையாக இந்த வேலையை பார்த்துக்கொள்ளலாம் என்று யோசித்த நேரத்தில் என் முகத்தில் சுளீரென்று வெயில் பட்டது.

என் சூரியன் மரக்கிளைகளை விட்டு தள்ளிப் போயிருந்தான்.

“மறுபடியும் நீ வந்துட்டியா…” என்று நினைத்துக் கொண்டேன். பக்கத்து தேநீர் கடைக்காரர், அவர் கிடத்திப்போன பழைய துணியை எடுத்துச் சென்றார், அந்த துணி இப்போது ஈரமாக இல்லை.

நான் செல்லுமிடமெல்லாம் என் கூடவே வந்த என் சூரியன், நான் எகத்தாளம் செய்ய நினைக்கையில் மரக்கிளைகள் இடையே ஒளிந்து கொண்டவன் அவன், ஆனாலும் அவன் வேலைகளை செய்து கொண்டேதான் இருந்திருக்கிறான், அந்த ஈரத்துணியை காய வைத்ததைப் போல!

“என் தந்தையை” நினைத்துக் கொண்டேன். காலில் அடிபட்டு நடக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்த என் தந்தையிடம், ஒருவர் வந்து, அவரின் கிழங்கு காட்டின் வேலி உடைந்திருப்பதாகவும், பன்றித் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், வேலியை அன்றே சரி செய்து கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். அன்று ஒரு காலை நொண்டிக் கொண்டே வேலி அடைக்க சென்ற “என் தந்தையை” நினைத்துக் கொண்டேன். இன்றே பணத்தை வசூல் செய்துவிடுவது என்று முடிவு செய்து என் இரு சக்கர வாகனத்தை இயக்க முற்பட்டேன், “தம்பி… டீ வேணுமா…?” என்று பின்னாலிருந்து குரல் கேட்டது.
பின், ஒரு வழியாக, கணிசமான தொகை ஒன்றை வசூலித்துவிட்டேன். வசூலான பணத்தை நாளை காலை என் அலுவலகத்தில் சென்று கொடுத்துக்கொள்ளலாம். சென்னையின் வாகன நெரிசலில் என் தங்குமிடத்திற்கு செல்வதற்கே பொழுது போய்விடும். உடல் களைப்பு அதிகமாக உணர்ந்ததால், என் அறைக்கு சென்றவுடன் “அக்கடா” என்று படுத்துவிடவேண்டும் என்று முடிவு செய்து என் வாகனத்தை கிளப்பினேன். பின் மண்டையில் என் சூரியனின் சூடு தெரிந்தது, திரும்பி அவனைப் பார்த்து சற்று கோபமாக சொன்னேன், “இங்க பார், நான் வீட்டுக்கு போயி படுக்கப்போறேன் என்னை தொந்தரவு பண்ணாத, நாளைக்கு பார்க்கலாம்.” சொல்லிவிட்டு கிளம்பினேன்.

தளர்ந்த நடையுடன் ஐந்து மாடிகள் படி ஏறி, என் அறையில் நுழைந்து, என் இடத்தில் பொத்தென்று விழுந்தேன், நான் எப்பொழுதும் அவனிடம் இவ்வளவு கோபமாக பேசியதில்லை. மனம் உறுத்தியது. அவனை தேடி எதிர் திசையில் இருந்த ஜன்னல் வழியாக வெளியே வானத்தை பார்த்தேன், சற்று இருளாக இருந்தது. என்னை தொந்தரவு செய்யக்கூடாது என்று அவன் எப்பொழுதோ போயிருந்தான், “என் நண்பன்”, என் சூரியன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *