என்று விடியும்…?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2021
பார்வையிட்டோர்: 2,498 
 
 

அலுவலகம் விட்டு வீட்டிற்குள் நுழையும்போதே என் மனைவி அருணா உர்ரென்றிருந்தாள்.

‘இன்றைக்கு நாம் ஒரு தவறும் செய்யவில்லையே!’ – திக்கென்றது.

“என்ன விசயம்..?” கேட்டேன்.

மௌனம்!!

இந்த மௌனம் அரைமணிநேரம் கழித்து காபி கொடுக்கும்போதும் இருந்தது! அப்புறம் அதையும் தாண்டி நீடித்து இரவு ஒன்பது மணிக்கு சாப்பாடு போடும் போதும் இருந்தது!!

‘ஏன் இப்படி நீண்ட மௌனம்..? அந்த அளவிற்கு இங்கே என்ன தவறு நடந்தது?’ – நான் புரியாமல் குழம்பினேன்.

என் அதிக நேர அவஸ்தைகளுக்கு படுக்கையில்தான் அது கலைந்தது.

அருணா வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு கட்டிலில் வந்து படுத்தும் படுக்காததுமாய்…

“இதுக்கு ஒரு முடிவு கட்டப் போறீங்களா இல்லையா…?” வெடித்தாள்.

“எதுக்கு…?!” புரியாமல் பார்த்தேன்.

“ஒரு கடை கண்ணிக்குப் போக முடியல. தெருவுல தண்ணிப் பிடிக்க முடியல.. என் தலையைக் கண்டால் அந்த சிறுக்கி ஜாடைமாடையாய்த் திட்டுறா. உங்ககிட்டேயும் நான் எத்தனையோ தடவை சொல்லியாச்சு,. பழைய தொடுப்பு மறக்கல. கெட்டுடுமோன்னு கண்டும் காணாததுமாய்ப் போயிடுறீங்க.” முடித்தாள்.

மரணஅடி!

எனக்கு உலகமே சுழலுவது போலிருந்தது.

என் வீட்டுக்காரிக்கும் அடுத்தத்தெரு அம்புஜத்திற்கும் வெகு நாட்களாய் தொடுப்பு. காரணகர்த்தாவாய் உருள்வது நான்!!

திருமணத்திற்கு முன்பு நான் அம்புஜத்திடம் அசடு வழிந்தேன். நான் அசடு வழிந்த நேரமோ என்னமோ திருமணம் ஆகி ஐந்தாறு வருடங்களாக குழந்தை குட்டி இல்லாத அம்புஜம் கர்ப்பவதியானாள். பத்து மாதங்களில் குழந்தையும் பெற்றாள். இதற்கும் எனக்கும் துளி சம்பந்தமில்லை.

அதற்கு இரண்டு மூன்று வருடங்களுக்குப் பின் எனக்குத் திருமணமாகி என் மனைவி வந்த பிறகு…

தெருவில் –

எனக்கு மறைமுக எதிரியான எவளோ ஒருத்தி , மகராசி….’ அது எனக்காகப் பிறந்தது!!’ என்று திரித்து வத்தி வைத்துவிட்டாள்.

எந்த மனைவிக்குக் கணவன் கழிசடை என்றால் பிடிக்கும், பொறுக்கும் ?! அருணா அது பற்றி என்னிடம் கேட்டாள்.

நான் அதிர்ந்து, பதறி துடித்து….

“இல்லை!” உண்மை சொன்னேன்.

இந்த வத்தி, வதந்திக்கெல்லாம் அழிவே கிடையாது. ஆயுசு அதிகம். அதனால்…. என் மனைவி அவள் தலையைக் கண்டால்…

“என் வீட்டுக்காரருக்கு அடையாளப் புள்ளை பெத்துக்கிட்டாளாக்கும்! ஒன்னோட போதுமா ?… அடுத்தது வேணும்மின்னு இன்னும் தொடுப்பு இருக்கா..?”

“அப்படி இருந்து…. என் கண்ணுல கையும் மெய்யுமாய் மாட்டினா… அன்னைக்கு இருக்கு கச்சேரி. என் புருசனோட நீயா நானா வாழ்வு!” இப்படி ஜாடைமாடையாய் அம்புஜத்தைத்தாக்க….

அவளும் எத்தனை நாட்களுக்குத்தான். தாக்குப்பிடிப்பாள்.?!

‘அறியாச் சிறுக்கி புரியாமல் புலம்புகிறாள்!’ என்று பொறுத்துப் போவாள்…?!

ஒரு நாள்…

“என் தலையைக்கண்டால் உனக்கென்னடி இந்தப் பேச்சு ?” என்று அம்புஜம் எதிர்க்க….அடுத்த வினாடி ஆரம்பித்துவிட்டது சிண்டுபிடி சண்டை. தெருக்காரர்கள் பிரித்துவிட….

அன்று ஆரம்பித்துவிட்டது அவளுக்கும் இவளுக்குமான பனிப்போர்.

எனக்கு அனுதினமும் படுக்கையில் ஊசி முள் உரசல். உமைக்காயங்கள்,வசவு, வலி, படுக்கைப் பட்டினி!!

என்ன காரணமோ….. இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டுமாம்!

நான் என்னத்தைக் கேட்பது..?

நான் அம்புஜத்திடம் சென்று….

“எதுக்கு இப்படி ஒரு வெட்டி வம்பு..?” என்றால்

அவள்….

“உன் பொண்டாட்டிதான் தொடங்கினாள்!” என்பாள்.

அவள் கணவன் காதில் விழுந்தால்….

“என் மனைவி அவுசாரியா..? என் மகன் உனக்குப் பெத்தப் புள்ளையா..?.!! இது தெரியாமல் இத்தனை நாள் நான் அவளோட இருந்து குடித்தனம் நடத்திட்டேன். இனி முடியாது. அழைச்சுப் போய் குடித்தனம் நடத்து!” என்றால் என்னாவது..?

இல்லை… இதன் விளைவு…?

கணவன் மனைவிக்குள் கடும்சண்டை. பிரிவு என்றால் எதைத் தங்குவது..?

வீண் சந்தேகத்தால் விபரீதம். பாவங்களை எப்படி கழுவுவது..?

இதனால் என் மனைவி இது பற்றி எது சொன்னாலும் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு வந்தேன்.

இப்போது மரணப்பிடி பிடிக்கிறாள். கேட்காவிட்டால்…..

குண்டும் இல்லாமல் மருந்துமில்லாமல்’ அவளையே கட்டிக்கொண்டு அழு!’ சொல்லிவிட்டுப் போய்விடுவாள்.

என்ன செய்வது..? – யோசித்தேன்.

நமக்கு மன அமைதி முக்கியம். அதற்கு கொண்டவளை சரி படுத்துதல் என்பதுதான் சரி. இதற்காக எது வந்தாலும் எதிர்கொள்ளத்தான் வேண்டும். அதற்கு ஒரு தடவையாவது அருணா சொல்வதைக் காதில் வாங்கி… அவள் வழி நடந்தால். மனசு திருப்தி படும். நம் மீது உள்ள களங்கமும் அவளுக்குள் அழியும்! தெளிய….

“சரி. நாளைக் காலையில் கண்டிப்பா இது பற்றி அவளிடம் கேட்கிறேன். இப்போ நீ பேசாம தூங்கு”சொல்லி படுத்தேன்.

இவள் இரவு தூங்கினாளோ இல்லையோ..!

அதிகாலையிலேயே என்னை எழுப்பி…

“அவ புருசன் வெளிக்கிளம்பி போறதுக்கு முன்னாடி அவனை வைச்சுக்கிட்டே அவளைக் கண்டிங்க.”நெட்டித்தள்ளினாள்.

பலிக்கடாவாக சென்று முறையாக அம்புஜம் கணவனை அழைத்து…

“அம்புஜத்துக்கும் என் மனைவிக்கும் ஜாடை மாடை போர். என்ன விசயம் விசாரி..?” சொன்னேன்.

என் பேச்சைக் காதில் வாங்கிய அம்புஜம்…

“உங்க மனைவிதான் இதை ஆரம்பிச்சாங்க. அவுங்களையே என்ன விசயம் கேளுங்க. கண்டிங்க.” சொன்னாள்.

என் நிழலாய் தொடர்ந்து வந்த அருணா….

“நானா…?” பதில் கொடுக்க…

எங்களுக்கு எதிரிலேயே இருவருக்கும் வார்த்தை போர்.

நாங்கள் காதுகளைப் பொத்திக்கொண்டோம்.

பொறுக்க மாட்டாத அம்புஜம் கணவன்…

“சண்டை போதும். சந்தி சிரிக்குது. போடி உள்ளாற…” கத்தினான்.

அடங்காமல் போக… நாலு சாத்து சாத்தி… வீட்டிற்குள் இழுத்துப் போய் கதவைச் சாத்தினான்.

அம்புஜம் அடி வாங்கியதைப் பார்த்த என் மனைவிக்குள் ஏக சந்தோசம். முகத்தில் பொலிவு.

“வாங்க நீங்க…” இந்த சண்டைக்கு காரணமில்லாத உத்தமி மாதிரி என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு நல்லவளாய் வீடு நோக்கி நடந்தாள்.

அப்பாடி…! வெகுநாள் பிரச்சனை, பனிப்போர். இத்துடன் முடிவு. இனி நமக்கு கவலை இல்லை. வீண் பேச்சு, வலி, வருத்தம்,படுக்கை பட்டினிகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி! திருப்தி வர….

வந்த நான் சும்மா வந்திருக்கலாம்.

‘அம்புஜத்திற்கு அடி. இன்றைக்கு அவள் கணவன் பட்டினி!’ நினைவு வர.. சிரிப்பு வந்தது.

புன்னகைத்தேன்.

இதை கவனித்த என்னவள் முகத்தில் திடீர் எள், கொள் வெடிப்பு.

“என்னடி..?” என்று நான் கேட்க ஆரம்பிப்பதற்குள்

“அவன் அடிச்சது உங்களுக்கு ஆனந்தமா இருக்கா..? கோபத்துல அவள் அவன் கூட படுக்காம அது ஆறும்வரை தினம் உங்களோட படுப்பா என்கிற பூரிப்பா…??.!”

வெடித்தாள்!!

‘போச்சு! இன்னும் தொடருமா…? என்று விடியும்…?’ எனக்குள் பேயடிக்க மயக்கம் வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *