என்ன மாயம் செய்தாய்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 9, 2018
பார்வையிட்டோர்: 8,343 
 
 

வித்யாவின் பர்த்டே பார்ட்டியில் மூன்றாவது மாடி ஃப்ளாட்டே கோலாகலமாகியிருந்தது. அவள் கர்ல் ஃப்ரெண்ட்ஸ் பாய் ஃப்ரெண்ட்ஸ், என ஒரு கூட்டமே திரண்டிருந்தது.

““பாத்துடீ, மத்த ‘ஃப்ளாட்’காரங்கல்லாம் சண்டைக்கு வந்துடப்போறாங்க, கொஞ்சம் அடக்கம் வேணும்” என்று அதட்டினாள் அம்மா சுமதி.

“எஞ்சினியரிங் முடிச்ச பசங்க அப்படித்தான் இருப்பாங்க, ரொம்ப அதட்டாதே, போ போய் டீ போட்டு எல்லாருக்கும் கொடு” என்று அவளை சமாதானப்படுத்தினான் ப்ரகாஷ்.

பின்பு ‘ஹேப்பி பர்த்டே டு யு’ பாடி வித்யா மெழுகு வர்த்திகளை அணைத்து, கேக் வெட்டி, ஒவ்வொருவராகப் பரிசுப்பொருட்கள் கொடுத்து, வழ்த்துக்கூறி ஒரு வழியாக களேபரம் அடங்க மணி ஒன்பதை நெருங்கியிருந்தது. நண்பர்கள் ஒட்டு மொத்தமாக விடைபெற வித்யா அவர்களை வழியனுப்பக் கீழே சென்றாள்.

பார்ட்டி முடிந்ததிலிருந்தே சுமதி கடுகடுவென இருந்தாள்.

ப்ரகாஷுக்கு காரணம் புரியவில்லை. உறங்கச் சென்ற பிரகாஷிடம் சுமதி ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவைக் காட்டி “நீங்க கொஞ்சம் இங்க உக்காருங்க ஒரு பஞ்சாயத்து முடிக்கணும்” என்றாள்

ப்ரகாஷுக்கு ஒன்றும் புரியவில்லை. “ரொம்ப முக்கியமா, தூக்கம் வருது சுமதி” என்றான். “சொன்னாக் கேளுங்க, உங்க பொண்ணு வாழ்க்கைய விட இப்ப தூங்கறதுதான் ரொம்ப முக்கியமா?” என்று அமர வைத்தாள்

“என்ன?” என்று அதிர்ந்தவன், வேறு வழியின்றி அமர்ந்தான்.

ஃப்ளாட்டுக்கு வெளியே நின்று ஒரு அரை மணி நேரம் அரட்டை அடித்துவிட்டு அவர்களை வழியனுப்பி நேராக தன் அறைக்குச் சென்ற வித்யாவை,

“வித்யா ஒரு நிமிஷம் இங்க வா!”

“மம்மி ரொம்ப டயர்டா இருக்கு, தூங்கணும்” என்றாள் சோம்பல் முறித்து .

“வான்னா ஒரு செகண்ட் வந்துட்டுப்போ” என்றாள் கொஞ்சம் கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு.

“விடமாட்டியே சொல்லு?, என்னா?”

“நேர விஷயத்துக்கு வறேன், ஒனக்கும் ரோஹித்துக்கும் எத்தனை நாளா பழக்கம்?” என்றாள் எடுத்த எடுப்பில் அதிரடியாக.

“வாட் டு யு மீன்?” என்றாள் ஒன்றுமே புரியாத பாவனையில்

அதற்குள் பிரகாஷ் குறுக்கிட்டு், “என்ன சுமதி நீ, குழந்தை அவளைப்போய்”

சுமதி, “ உங்களுக்கு ஒண்ணும் தெரியாது கொஞ்சம் பேசாம இருங்க, சொல்டீ உனக்கும் அவனுக்கும் எத்தனை நாளா பழக்கம்” என்றாள்

வித்யா, “மம்மி ப்ளீஸ் பிலீவ் மீ! நீ நினைக்கிற மாதிரி ஒண்ணும் கிடையாது” என்றபோது ,அவள் கண்கள் லேசாக கலங்கியிருந்தது.

“நிஜமா ?’

“நிஜமா..! இன்னும் .. .. சத்தியமா .. ! போறுமா.”

“சரி அப்போ என் ஒண்ணுவிட்ட அண்ணன், திருக்கழுக்குன்றத்துல இருக்காரே, கேசவன் அவர் பையன் சுதர்சனை அடுத்த வாரம் உனக்கு நிச்சயம் பண்றேன்! இன்னும் ஒரே மாசத்தில கல்யாணம் சரியா?” என்றாள் அவளை நேருக்கு நேராகப் பார்த்து.

ப்ரகாஷ், “ஏய் என்ன நானும் பார்த்துட்டே இருக்கேன், நீ பாட்டு போயிட்டு இருக்க?” என்று அவளை அதட்டினான்.

“கொஞ்சம் பேசாம இருங்கன்னா கேக்கமாட்டீங்க? நான் சொன்ன விஷயத்துக்கு ஒண்ணும் பதிலே காணோம் உங்க செல்ல ராணிக்கிட்டேயிருந்து” என்றாள் பார்வையின் உக்கிரத்தை கூட்டி.

அவள் இப்படி கோபப்பட்டு ப்ரகாஷ் கூட பார்த்ததில்லை. அதிர்ச்சியில் அப்படியே உறைந்தான்.

அதுவரை நேராக பார்த்துக்கொண்டிருந்தவள் பார்வையை தழைத்துகொண்டு, “அது வந்து மம்மி.. நான் எம் எஸ் பண்ணனும்” என்றாள் தறையில் இருந்து பார்வையை விலக்காமல்.

“அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை, சுதர்சனத்துக்கிட்ட நானே பேசி சம்மதம் வாங்கி தரேன், படிக்குறதுக்கு அண்ணன் வீட்ல எந்தத் தடையும் சொல்லமாட்டாங்க!” என்றாள் விடாப்பிடியாக.

“மம்மி. .” என்று நிறுத்தி அப்பாவின் அருகில் சென்றவள், அவன் பின்னால் மறைந்துகொண்டு “அது வந்து” என்று தயங்கியவள்

“ரோஹித் ரொம்ப நல்ல பையன் உங்க கிட்ட .. எப்படி சொல்றதுன்னு தெரியலை, அவங்க வீட்ல எல்லாருக்கும் தெரியும் !!” என்றாள் தயங்கியபடி.

“அப்படி வா வழிக்கு… அப்ப நாங்க தான் இளிச்சவாயன்களா, என்ன ஒரு நெஞ்சழுத்தம்” என்று அவளை இழுத்து ஓங்கி அறையப்போனாள் சுமதி.

தடுத்து நிறுத்திய ப்ரகாஷ், “என்ன வளர்ந்த புள்ளையப்போய், அதில்லைம்மா எங்களுக்கிருக்கிறது நீ ஒரே போண்ணு, அதனால நாங்க வீட்டோட மாப்பிள்ளையா பாக்கணும்னு இருந்தோம்” என்ற போது அவன் கண்களும் பனித்திருந்தது.

“ரோஹித்தும் அவங்க பேரண்ட்ஸ்க்கு ஒரே பையன், அதனால ஆறு மாசம் நம்ம வீட்ல, ஆறு மாசம் அவங்க வீட்ல இருக்குறதா ஏற்கனவே முடிவு பண்ணிட்டோம் டாடி,” என்றாள் உற்சாகமாக.

“இன்னும் என்னென்னவெல்;லம் முடிவு பண்ணீயிருகீங்க இப்பவே சொல்லிடு..!” என்று வெடித்தாள்.

ப்ரகாஷ், “சரி விடு சுமதி” என்றவன் வித்யாவைப் பார்த்து, “ உன்னிஷ்டம், பையனோட ஃபுல் டீடைல்ஸ் எனக்கு வேணும், நான் எடுகிறது தான் முடிவு” என்றான் திட்டவட்டமாக.

“தாங்க்ஸ் டாடி! லவ் யூ” என்று அவனுக்கு முத்தமிட்டு தன் அறைக்குச் சென்றாள்.

“என்னங்க நீங்களும் அவ கூட சேர்ந்துகிட்டு?’ ப்ரகாஷைப் புரியாமல் பார்த்தாள் சுமதி.

அவள் உள்ளே சென்றதை உறுதி செய்துகொண்டு, “நீ தான சொல்லுவ, ஒருத்தர் திட்டினா அதே சமயத்தில இன்னொருத்தர் திட்டக்கூடாதுன்னு, அதான்”

“என்னமோ உங்க இஷ்டம், அடுப்படியில கொஞ்சம் வேலை இருக்கு, நீங்க போய் படுங்க” என்றாள் வருத்தம் தோய்ந்த முகத்துடன்.

சிறிது நேரத்தில் அடுப்படி வேலைகளை முடித்து உறங்கவந்தவளிடம், சஸ்பென்ஸ் தாங்க முடியாமல் “எப்படி கண்டுபிடிச்ச?” என்றான் பிரகாஷ்.

“இன்னைக்கி பார்ட்டில டீ கொடுக்கும் போது யார் யார் என்னன்ன கலர் ட்ரெஸ் போட்டிருந்தாங்களோ அந்த கலர் கப்ல அவங்களுக்கு டீ கொடுக்கணும்னு முடிவு பண்ணேன், அதனால நம்ம பொண்ணுக்கு ரோஸ் கலர் சுடிதார் போட்டுட்டிருந்தா அவளுக்கு ரோஸ் கலர் கப்ல டீ கொடுத்தேன், அதே மாதிரி அந்த பையன் ரோஹித் ப்ளூ கலர் டி ஷர்ட் போட்டு இருந்தான், அவனுக்கு ப்ளு கலர் கப்ல டீ கொடுத்தேன், லாஸ்ட்ல சாப்பிட்டு முடிச்சதும் பார்த்தா ப்ளூ கலர் கப்பை வித்யா கீழ வெக்கிறா, அவன் ரோஸ்கலர் கப்பை கீழே வெச்சான் அதான் ஒன் பிளஸ் ஒன் இக்வல் டூன்னு கண்டுபிடிச்சிட்டேன்” “

“ப்ரில்லியண்ட்” என்ற ப்ரகாஷ் சிறிது யோசித்து, ‘ அட அந்த காலத்தில நாமளும் இப்படித்தான் மாடிக்கிட்டோம் இல்ல’ என்று முனகியவாறே ஆச்சரியத்துடன், தூங்க ஆரம்பித்தான்!

சிறிது நேரத்தில், சுமதி தன் மொபைலில் வித்யாவிடம் இருந்து வந்திருந்த ‘வாட்ஸ் ஆப்’ மெசேஜை பார்த்தாள் ‘நடிகையர் திலகம் !.. . தேங்க் யு!!’ என்றிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *