என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்..?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 11, 2022
பார்வையிட்டோர்: 3,143 
 
 

சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன்..

இரவு மணி இரண்டு….

அங்கொன்றும் இங்கொன்றுமாய் துணி மூட்டையாய் சுருண்டு கிடந்தவர்களைத்தவிர அந்த பிளாட்பாரத்தில் நடமாட்டம் அதிகம் இல்லை…

அதில் அநேகமாக வர வேண்டிய இரயில்கள் வந்து போய்விட்டன….

ஒரு இருட்டு மூலையில் உள்ள பெஞ்சில் ஒரு உருவம்…

அப்படியே உட்கார்ந்த நிலையில் தூங்கிக் கொண்டு…..

முதியவர்..நரை விழுந்த வழுக்கை தலை…. ஒடிசலான தேகம்…!

பளீரென்ற வெள்ளை வேட்டியும் , வெள்ளைச் சட்டையும்…

கையில் … ம்ஹூம்.. ஒன்றையும் காணம்…!

சட்டைப்பை மட்டும் கொஞ்சம் வீங்கியிருந்தது.

பர்சில் ஏதாவது வைத்திருக்கலாமாயிருக்கும்.

ஒரு மணி நேரத்தில் ஸ்டேஷன் களைகட்டத் தொடங்கியது..

தூறலாக ஆரம்பித்து பெருந்துளியாகி , வலுக்கத் தொடங்கி ,கொட்ட ஆரம்பிக்குமே…மழை…

அது மாதிரி சலசலத்த குரல்கள் , வலுத்து பின் இரைச்சலானது பிளாட்பாரம்..

இரயில்கள் சத்தமும் அதில் சேர்ந்து கொண்டது…!

மணி ஐந்து கூட ஆகவில்லை..

டீக்கடைகள் திறந்துவிட்டன..

ஓட்டமும் நடையுமாக வேலைக்கு வந்துகொண்டிருந்த கருணா பிரேக் போட்டமாதிரி சட்டென்று நின்றான்..

இது யார்..?? இருட்டில்..தனியாக.. வயதானவர்…?

கருணாவுக்கு அந்த பிளாட்பாரம் அத்துப்படி..பிறந்த வீடு மாதிரி..

மாதிரி என்ன? பிறந்து தவழ்ந்து , நின்று , நடந்து ஓடிவிளையாடிய வீடு இதே பிளாட்பாரம் தானே…!

இன்றைக்கு சோறும் போடுகிறதே!

அவனுக்கு தெரியாமல் இந்த பிளாட்பாரத்தில் இந்த வேளையில்.?

பார்த்தால் ரயிலில் வந்தவராகவும் தெரியவில்லை..ஏறப்போகிறவராகவும் தெரியவில்லை..

நேரமாகி விட்டால் கடை ஓனர் திட்டுவதைக் காது கொடுத்து கேட்க முடியாது.!!

‘சரி.. பார்த்துக் கொள்ளலாம்…!’

அரைமணி கழித்து டீ கிளாசுகளோடு வந்தவன் அவர் அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டு தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஏதோ யோசித்தவனாய் பக்கத்தில் உட்கார்ந்து,

“தாத்தா..தாத்தா..! என்று தோளை உலுக்கினான்.

கிழவர் லேசாகக் கண்ணைத் திறந்து பார்த்தார்…

“தாத்தா…! தூக்கம் வருதா? ரொம்ப நேரமா பெஞ்சி மேல உக்காந்திட்டு இருக்கியே..! எங்க போவணும் ?? யாருக்காச்சும் காத்துகிட்டு இருக்கியா?? பசிக்கல ??”

தாத்தா வாயைத் திறந்தால் தானே.?

“இந்தா..முதல்ல இந்த டீயாச்சும் குடி..!”

கையில் டீ கிளாஸைக் குடுத்து விட்டு , தானும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்…

கை நடுங்கியது..

“மெள்ள..! குடியுங்க…!”

நல்ல பசியாய் இருந்திருக்க வேண்டும்..

மளமளவென்று குடித்தவர் ஏதோ முணுமணுத்துக்கொண்டே கிளாஸைத் திருப்பிக் கொடுத்தார்..

“தாத்தா..! அவசரமா போவணும்..!
அர அவுர்ல வந்திர்ரேன்..வந்து மொகம் கழுவிட்டு நாஷ்ட்டா பண்ணலாம்…

தாத்தா எல்லாவற்றுக்கும் மௌனத்தையே பதிலாக்கி , மறுபடியும் கண்ணை மூடிக் கொண்டார்…!

அரைமணியில் அவசர அவசரமாய் ஒரு பொட்டலம் இட்லி , வடையுடன் வந்தவனுக்கு காலிபெஞ்சு அதிர்ச்சி அளித்தது..

“தாத்தா…தாத்தா…!

பிளாட்பாரம் முழுவதும் இரண்டு முறை தேடிவிட்டான்..

அந்த முதியவர் மாயமாய் மறைந்து விட்டார்..

‘ச்சை..நாம ஏமாந்துட்டமே..எங்க போயிருக்கும். ?? பாத்தா ஊருக்கு புச்சா தெரியுது…?? எங்க போயி திண்டாட போவுதோ…?…

***

முதியவர் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன்னால் நின்று கொண்டிருந்தார்…

உள்ளே போவதா, வேண்டாமா என்ற யோசனையாயிருக்கும்.

வெளியிலிருந்தே கன்னத்தில் போட்டுக் கொண்டு விறுவிறு என்று நடக்க ஆரம்பித்தார்..

பசி வயிற்றை கிள்ளியதோ என்னவோ…??

மயிலாப்பூரில் ஓட்டலுக்கா பஞ்சம்..??

சட்டென்று ஒரு உணவகத்துக்குள் நுழைந்தார்….

தனியாக ஒரு டேபிளைப் பார்த்து உட்கார்ந்தார்….

மணி பத்திருக்கும் …டிபன் கடை கூட முடிந்திருக்கும்…
கூட்டமேயில்லை.!

ஒரு சர்வர் முணுமுணுத்துக்கொண்டே அவர் அருகில் வந்தான்…

காலையில் சிற்றுண்டி முடிந்து உள்ளே போகலாமென்றால் , புதிய கஸ்ட்டமரைப் பார்த்தால் எரிச்சல் வருமா வராதா..??

ஆனால் முதலாளி ஒருவரையும் வெறும் வயிற்றுடன் அனுப்பக் கூடாது என்று கண்டிப்பாக உத்தரவு போட்டிருந்தார்..

அதுவும் வயசானவர் வேற..!

“சார்.. இட்லி மட்டும்தான் இருக்கு…! ரொம்ப லேட்டு சார்…!”

காதில் விழாத மாதிரி உட்கார்ந்திருந்தார்..

இரண்டு மூன்று முறை கேட்டும் பதில் வராமல் போகவே ஏதோ முணுமுணுத்தபடியே ஒரு பிளேட் இட்லியையும் , சாம்பார் , சட்னியுடன் கொண்டு ‘டங்’ என்று வைத்தான்…

“காப்பி….?”

“ம்…’ என்ற மாதிரி தலையாட்டினார்..!

மளமளவென்று மூன்று இட்லியை சாம்பாரிலும் சட்னியிலும் தோய்த்து தோய்த்து அனுபவித்து சாப்பிட்டார்..

சுடச்சுட வந்த காப்பியையும் ஒரே மடக்கில் குடித்துவிட்டு வைத்திருந்த பில்லை எடுத்துக் கொண்டு கவுன்ட்டரை நோக்கி நடந்தார்..

வெயிட்டருக்கு இதுபோன்ற கஸ்ட்டமரைப் பார்த்து பழக்கம்தான்.

வாயைத் திறக்காமல் (!) சாப்பிட்டு விட்டு சத்தமில்லாமல் பணத்தை கல்லாவில் கட்டி விட்டு போய் விடுவார்கள்…

இதுபோன்ற முதியவர்களால் பிரச்சனை ஏற்பட்டதே இல்லை…

காது கேட்காதோ ?? இல்லை வேறு ஏதாவது பிரச்சனையோ ?? அதெல்லாம் யோசிக்க நேரமேது…??

பசி அடங்கிய திருப்த்தியுடன் வெளியே வந்தார் முதியவர்…!
தெருவை இரண்டு பக்கமும் திரும்ப திரும்ப பார்த்தார்…!

மயிலாப்பூர்…! கேட்கவா வேண்டும்..?? ஜே! ஜே ! என்று களைகட்டி விட்டது…

ஒவ்வொரு கடையாகப் பார்த்துக் கொண்டே கொஞ்சம் பொழுது போனது.. ஊருக்கு ‘புச்சு’தானோ…?

கால் வலித்ததோ என்னவோ ??

ஒரு பழரசம் விற்கும் கடையில் வெளியே போடப் பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்து விட்டார்!…

***

அந்த ஏரியாவில் அது பிரபலமான பழரச கடையாயிருக்க வேண்டும்..
நல்ல விசாலமாக , உட்கார்ந்து குடிக்க வசதியான பெஞ்சுகள்…

அங்கு இல்லாத பழங்களே இல்லை…

முதியவர் அவர் பாட்டுக்கு ஒரு ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்..

எதிலும் நிதானமாய் இருப்பவராயும் தெரியவில்லை..

கண்களில் சதா ஒரு மிரட்சி.
சவரம் செய்து மூன்று, நாலு நாட்கள் ஆகியிருக்கும் போல தோன்றியது..

அந்த கூட்டத்தில் அவரை யாரும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை…!

சென்னையின் மகிமையே அதுதானே..

எல்லோரும் எப்பவுமே பிஸி .பிஸி..பிஸிதான்.!

வந்தவர்களில் நிறையபேர் சாத்துக்குடி ஜுஸ் தான் குடித்தார்கள்..

ஒரு சிலர் மாதுளம்பழம்..அது கொஞ்சம் விலை அதிகம்..

கடையின் ஒரு பையனும் , காசு வாங்க ஓனரும்தான்..!

கண்மூடித் திறப்பதற்குள் பையன் பம்பரமாய் வேலை செய்தான்.

கழுவின பழங்களை கத்தியால் வெட்டிய , மிக்சியில் போட்டு , கிர்ரென்று ஒரு ஓட்டம் ஓடவிட்டு ,ஐஸ் வேண்டியவர்களுக்கு ஐஸ், சர்க்கரை வேண்டியவர்களுக்கு சர்க்கரை, மற்றவர்களுக்கு அப்படியே…!

பார்த்துக் கொண்டே இருந்தார் கிழவர்..

அவர் பக்கத்தில் மற்றொரு முதியவர் வந்து உட்கார்ந்தார்..

“என்ன ? ஐயரே..! ஒரு மாசமா இந்தப் பக்கமே காணம்..??”

“ஷுகர் ஏறிடுத்துப்பா…! மயக்கம் போட்டு விழுந்துட்டேன்..

ஒருவாரம் ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிட்டான் பையன்.
மாட்டுப்பொண்ணு கன்னா பின்னான்னு திட்டி விட்டுட்டா…

இனிமே வெளில போயி ஏதாவது சாப்பிட்டா உள்ளயே சேக்க மாட்டேன்னுட்டா…

இன்னிக்கு யாருக்கும் தெரியாம நைசா நழுவிட்டேன்…!”

சக்கர போடாம ஒரு மாதுளம் ஜுஸ் குடு….! டையாபடிசுக்கு நல்லதாமே…!

நமது பெரியவர் இப்போது காதைத் தீட்டி வைத்துக் கொண்டார்..

“ஆமா..பெரியவரே .! ரொம்ப நேரமாச்சே வந்து…! உங்களுக்கு ஒண்ணும் வேண்டாமா.??”

மலங்க மலங்க முழித்தார் முதியவர்…

“காது கேக்கலையோ என்னமோ..??”

“நீங்க எங்கேந்து வரேள்..?? உங்க பேரென்ன..??”

ஒரு பதிலுமில்லை.

“இந்த கடையில இதுக்கு முன்னாடி பார்த்ததேயில்லையே.!”
ஓனருக்கு சந்தேகம்..

ஜீன்சும் டீஷர்ட்டும் போட்டிருந்த டிப்டாப்பான ஒரு இளைஞன்,
“அல்சைமாரா இருக்கும்னு தோணுது…”

“என்னது ?? அல்சைமரா…?? அப்படின்னா..??”

கடைக்காரப் பையன் கேட்டான்..

***

“ஒரு ஆப்பிள் ஜுஸ்..நோ சுகர்..”

ஆர்டர் பண்ணிவிட்டு எதிர் பெஞ்சில் உட்கார்ந்தான் இளைஞன்..

“அல்சைமர் அப்பிடின்னா மறதி.சாதாரண மறதி இல்ல.
சொந்த மனுஷங்களையே மறந்துடுவாங்க..எங்க போறோம் , வரோம்னே தெரியாது.

சாப்பிட்ட உடனேயே சாப்பிடலன்னு சொல்லுவாங்க..!
யாருக்கு வேணா , எப்ப வேணா வரலாம்…!

சமாளிக்கறது ரொம்ப சிரமம்…”

“என்ன தம்பி இப்படி சொல்றேள்.பயம்மா இருக்கே..! எனக்கு கூட மறதி நிறைய இருக்கு..வயசாச்சு..! அப்பிடித்தான் இருக்கும்ங்கறாளே..!”

ஐயருக்கு கவலை வந்துவிட்டது…

நமது முதியவர் இப்போதும் வாயைத் திறக்கவில்லை..
ஆனால் முகம் பேயறைந்தது மாதிரி ஆனது…

“இதுக்கு ட்ரீட்மென்ட் இல்லியா..??”

“இல்ல தாத்தா..! ஆனா கொஞ்சம் கட்டுப்படுத்தி வைக்கலாம்..!

வயசானவுங்க வீட்ட விட்டு போகும்போது எங்க போறோம்னு சொல்லிட்டு வரணும்…

குழப்பத்தில் எங்கியாவது போய்ட்டா பாவம் ! வீட்ல இருக்கறவுங்க கவலப்படுவாங்கன்னு நெனப்பு கொஞ்சமாவது இருக்கணும்…!”

முதியவர் முதன்முறையாக ஏதோ சொல்ல வாயெடுத்தார்.

கண்கள் கலங்கியிருந்தது….

ஆப்பிள் ஜுஸ் இளைஞன் கசை வைத்து விட்டு , பெரியவர பாத்து பத்திரமா வீட்டுக்கு அனுப்பி வையுங்க “ என்று சொல்லியபடி நகர்ந்தான்…

அதற்குள் அங்கேயிருந்த இன்னொருவன்..

“எங்க வீட்டு பக்கத்தால ஒரு பெருசு…இதே போலத்தான்..! ரொம்பத்தான் ரவுசு பண்ணும்.
ராத்திரி ஒரு மணிக்கு எந்திரிச்சு ‘சோத்தப்போடு….சாப்பிட்டு இரண்டு நாளாச்சுதுன்னு…!

பாவம்…அந்த ஆயா..!

தட்டில சோத்தப் போட்டாத்தான் தூங்கும்…!

ஒருநாளு வீட்ட விட்டு சொல்லாம கொள்ளாம எங்கியோ போனதுதான்…!”

“ஐய்யய்யோ..”
ஏக காலத்தில் எல்லோர் குரலும்…!

அப்போதும் பெரியவர் மட்டும் வாயே திறக்கவில்லை..
கண்ணிலிருந்து இப்போது கண்ணீர்..

ஐயருக்கு மனசு பொறுக்கவில்லை..

“சார்..என்னாச்சு..?? ஏன் வாயே தொறக்கமாட்டேங்கிறேள்!
உங்க வீடு எங்கேயிருக்கு சார் ?? மறந்து போயிடுத்தா…?

***

“எந்தா..?? சுகந்தன்னே..!”

புதிய குரல் கேட்டு எல்லோரும் குரலுக்கு சொந்தக்காரனை நிமிர்ந்து பார்த்தனர்..

“வாங்க நம்பியாரே..! என்ன இவ்வளவு நாளா காணம்..??”

“ஓ! நாட்டிலேக்கு போயி..இன்னலே திரிச்சு வந்நு! ஒரு ஓரஞ்சு ஜுஸு..பன்சார வேண்டா.!”

முதியவர் எழுந்து நின்றுவிட்டார்..!

அவனருகில் சென்று அவனுடைய கைகள் இரண்டையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்..

“என்டே குருவாயூரப்பா..! “‘

அதற்குமேல் பேசமுடியாமல் குலுங்கி குலுங்கி அழுதார்…

“சார்! என்னாச்சு?? ஏன் அழறேள்??”
ஐயருக்கு பொறுக்கவில்லை..

“எந்தா முத்தச்சா..?? எந்து பற்றி??”

“மோனே..! எனிக்கு!.. ஓ! என்டே குருவாயூரப்பா..! வா..இவிட இரிக்கு..”

அவனுடைய கைகளைப்பற்றி அருகில் உட்கார வைத்தார்..

எல்லோரும் வாயடைத்து உட்கார்ந்து விட்டார்கள்.

“நம்பியாரே! நாங்கெல்லாம் பயந்துட்டோம்..கிழவருக்கு ஏதோ சித்தப்பிரமையாயிருக்கும்னு கூட நெனசிட்டோம்..

இதோ.இப்பதான் முதல் முதலா வாயத்தொறந்து பேசறாரு…”

முதியவர் மலையாளத்தில் நம்பியாரோடு பேச ஆரம்பித்தார்..

“எனிக்கு கொல்லத்து பரவூரா நாடு….”

***

“எம்பேரு உன்னிகிருஷ்ணன்.. நாடு கொல்லத்தில பரவூர். நான் கொல்லத்த விட்டு வெளியே போனதேயில்ல.

வயசு எம்பத்தஞ்சு ஆச்சே தவிர எனக்கு விவேகம் போறாது. ரொம்ப கோபக்காரன்..

பாவம்.! என்னோட வைஃப் என்ன எப்படித்தான் பொறுத்திட்டிருந்தாளோ!

அவள பாடா படுத்தியிருக்கேன்.

அவ போய்ச் சேந்து இரண்டு வருஷமாச்சு..

பிள்ளையோட இருக்கேன்.. மருமகள் ‘அச்சா..! அச்சான்னு ‘ஆசையா இருப்பா…ஆனா ரொம்ப கண்டிப்பு..

சுகர் , பி.பி.ன்னு எல்லாம் இருக்கு..அவ சொல்றதான் சாப்பிடணும்..

கொழந்தைகளும் “முத்தச்சா “ன்னு உயிர விடும்..

ஆனா எனக்குத்தான் கோபத்தையும் அடக்கத்தெரியல… நாக்கையும் அடக்க முடியல…!

நிறைய நாள் காச எடுத்துட்டு போயி வெளில சாப்பிட்டுட்டு வருவேன்..

ஒருநாள் தலசுத்தி ரோடுல விழுந்துட்டேன்..

எம்பையன் ரொம்ப திட்டிட்டான்..ரோசம்….!

கையில் கிடச்ச காச எடுத்திட்டு வீட்ல சொல்லாம கிளம்பிட்டேன்..”

“எந்தா! முத்தச்சா! இது பாடில்லாயிருன்னு…! “

“எனக்கு தமிழ் கொஞ்சம் புரியுமேதவிர பேச வராது..!

“இவங்க பேசினதெல்லாம் கேட்டு பயந்தே போய்ட்டேன்.. எனக்கு மறதியெல்லாம் கிடையாது..கொழுப்பு …!

எவ்வளவு பெரிய தப்பு செஞ்சிட்டேன்..

கிழவர் பையிலிருந்த பர்சை எடுத்தார்.

“மோனே..! இதில என் பையன் நம்பர் இருக்கு ! ஒரு ஃபோன் போட்டுத்தரியா…??

மறுமுனையிலிருந்து குடும்பமே கதறியது..

மருமகள் இரண்டு நாள் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிட்டாள்..!

கேரளா முழுவதும் “காணவில்லை ‘போஸ்ட்டர்..

போலீஸ் கம்ளெயின்ட்.!

“தாத்தா! இப்படிப்பட்ட குடும்பத்த வச்சிகிட்டு ஏன் இந்த ரோசம்..??”

“சார்! எல்லோருக்கும் இந்த கொடுப்பினை கெடைக்காது..! நமக்கு இனிமே வேண்டியதெல்லாம் பாதுகாப்பான குடும்பம் மட்டும்தான்..

பொதி சுமக்காத கழுதையும் , வண்டில பூட்டாத காளையும் ஒரு பாரம்னு நினைக்காம பாத்து பாத்து கவனிக்கிற குடும்பம் கிடச்சதுக்கு நாம புண்ணியம் பண்ணியிருக்கணும்..

நம்மள ஒருத்தர் கண்டிக்கிறாங்கன்ன , நம்ம மேல அக்கறை இருக்குன்னு தானே அர்த்தம்..!

கையில கிடச்ச புதையல நழுவ விட்டு இல்லாத சொர்க்கத்த தேடி அலைவாளா..??

நம்பியார்…! நீங்க எனக்காக ஒண்ணு பண்ணுங்கோ! இவர பத்திரமா வீட்ல கொண்டு விடுவேளா..?”

“அதெல்லாம் வேண்டாம்..ரெயில்ல ஏத்தி விடுங்கோ..! பையனுக்கு ஒரு ஃபோன் போட்டு சொன்னா ஸ்டேஷனுக்கு ஓடி வருவான்..!”

“சார்.. நீங்க இப்போ என்னோட எங்க வீட்டுக்கு வரணும்..ஒரு நாள் தங்கிட்டு நாளைக்கு நம்பியார் வந்து உங்கள் ரயில்ல ஏத்தி விடுவா…! மாட்டேன்னு சொல்லாதீங்கோ..”

“எந்தா..சாரே… இப்போ ஒரு ஜுஸ் குடிக்கலாமே..!

“என்ன ஜூஸ் வேணும்..! என்னோட ட்ரீட் ” என்றார் கடைக்காரர்…

கிழவர் ஒரு நிமிடம் தடுமாறினார்…

“பாவக்கா ஜுஸ்! நோ சுகர்…!” என்றார் சிரித்தபடி…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *