கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2020
பார்வையிட்டோர்: 11,342 
 
 

மாலை நேர மஞ்சள் வெயிலின் அழகில் லயித்து கொண்டிருந்தேன். எங்கோ தூரத்தில் குயில் கூவும் இனிமையான தேனிசை காதில் ஒலித்தது. வாகன புகை , இரைச்சல் இல்லாத அமைதியான அந்த பூங்காவின் அழகு மனதில் பேருவகை பெருகச் செய்தது. என்னவனின் இருப்பு என்னை மேலும் சாந்தப்படுத்தியது.

என் அருகில் என்னவனனின் கைகளப்பற்றியபடி அவன் தோளில் சாய்ந்திருந்தேன். இளமையில் இருந்த பிடியின் இறுக்கமில்லாது தளர்நது இருந்த கையை மெதுவாக வருடியபடி அவன் முகத்தை கண்டேன். பிடியின் இறுக்கம் மட்டுமே தளர்ந்திருந்ததே தவிர எங்களுக்குள்ளே இழையோடிக்கொண்டிருந்த காதல், ஆலமரமாக பல கிளை விரித்து எப்புயற்காற்றையும் எதிர்த்து நிற்கும் வலிமையோடு இருந்தது. அவன் கண்களை ஆழமான பார்வையினால் பார்த்துக்கொண்டே, என்னவனை நான் கண்டெடுத்த தினத்திற்கு பயணமானேன்.

என் பெயர் தமிழினி. என்னவனைக் கண்ட நாள் முதல் அவனை பெயர் சொல்லி அழைத்ததில்லை. ஆதலால், அவனுக்கு என்னுள் நான் வைத்த பெயர் ‘என்னவன்’. பெயருக்கேற்றாற் போல் அவன் ஒவ்வொரு நொடியும் என்னவனாகவே இருந்தான்.

அவனை நான் முதன்முதலில் சந்தித்தது ஒரு விபத்து என்றே கூறலாம். ஆம். அந்த ஒரு நொடி எங்களிருவரின் வாழ்வையும் புரட்டிப் போட்ட அந்த ஒரு கணத்தை இந்த நொடி நினைத்தாலும் உடலும் உள்ளமும் ஒரு சேர சிலிர்க்கிறது. இருவருக்கும் துள்ளலான இளம் வயது. வயதிற்கேற்ற வனப்பும், இனக்கவர்ச்சியை தாண்டிய முதிர்ச்சியும் இருவரிடமும் ஒரு சேர இருந்ததில் வியப்பில்லை.

எங்களிருவருக்கும் பொதுவான பெண் தோழி ஒருவரே என்னை அவனிடத்தில் அறிமுகப்படுத்தினார். அந்த நொடி, எங்களிருவரையும் மாற்றப்போகும் முக்கிய நொடி என்று இருவரும் அப்பொழுது உணரவில்லை. அதன்பின், சின்னச்சின்ன தொலைபேசி உரையாடல்கள், வாழ்த்துக்கள், புத்தகப்பறிமாற்றங்கள், சின்னச்சின்ன அன்பளிப்புகள் என்று காலம் உருண்டோடியது. எப்பொழுது அவன் என்னவனாக மாறிப்போனான் என்பது இதுவரை புரியாத புதிரே. அந்த புதிருக்கு விடை தேட வேண்டிய அவசியம் இருவருக்கும் ஏற்பட்டதில்லை.

அதன் பின்பு நடந்த அனைத்தும் சுகமாகவே இருந்தது. வாழ்க்கையின் ஏற்றஇறக்கங்கள் அனைத்திலும் சிறிதும் சலிப்படையாது என்னோடு பயணித்தவன். எப்பேற்பட்ட ஊடலின்போதும் என் மீது கோபம் கொள்ளாது எனக்கு பக்கபலமாக நின்று பொறுமையாக விளக்கியவன். சில வருடங்கள் காதலுக்குபின் இருவீட்டுப் பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் இனிதே நடந்தேறியது. எங்கள் அன்பிற்கு சாட்சியாய் முத்தான மூன்று குழந்தைகள். மூவரும் வளர்ந்து தங்களின் இணையர்களோடு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்வோம். இணைபிரியாத தோழர்களாகவும் இருந்தோம். காலம் தான் எவ்வளவு வேகமாக உருண்டோடுகிறது. ஆனாலும், என்னவனோடு நான் கழித்த ஒவ்வொரு நொடியும் பசுமரத்தாணி போல் என் மனதில் ஆழப்பதிந்து இருக்கிறது.

இன்று, நாங்கள் முதலில் சந்தித்தது போன்ற இளமை எங்களிடமில்லை. என்னைத்தாங்கிப் பிடித்த அவனின் தோள்கள் வலுவிழந்துவிட்டது. என் நடையும் தளர்ந்துவிட்டது. ஆனால், எங்களின் காதல் மட்டும் அன்றைக்காட்டிலும் இளமையாக இருக்கிறது.

இதோ, என்னவன் இவ்வுலகத்தின் பூதவுடலை விட்டு பெருவாழ்வு வாழக்கிளம்பிவிட்டான். அவனருகில், நானும் படுத்துள்ளேன். ஆம். இந்த பயணத்திலும் அவனை பிரிந்திருக்க முடியாத என் உயிர் அவன் உயிரோடு கிளம்பிவிட்டது. வாழ்க்கையை முழுமையாக இரசித்து வாழ்ந்துவிட்ட ஒரு இணைபிரியா தம்பதியின் மரணம் என்று அந்த பூங்காவில் எங்களைச் சுற்றி இருந்த அனைவரும் புளங்காகிதமுற்றனர். இளையோர் எங்களைப்போன்ற சோடிப்பொருத்தம் அமைய வேண்டினர்.

அனைவரின் மனதும் கணத்தது. சுற்றி இருப்பவர்களின் அழுகுரல் கேட்டது. ஆனால், எனோ நாங்கள் மகிழ்ச்சியாக தொடங்கிய பயணம் இது என்பதை மக்களின் மனம் ஏற்க மறுத்தது. கணத்த இதயத்தோடு அருகருகே தோண்டப்பட்ட புதைகுழியில் எங்களை வைத்து எங்கள் மீது மண் கொண்டு மூடினர். ஆனால், மூடுவதற்கு முன் எங்கள் கைகள் இறுகப்பற்றி இருந்ததை ஒருவரும் கவனிக்கவில்லை. சூரியன் மறைந்து மேகத்தினூடே ஒளிர்ந்துக்கொண்டிருந்த நிலா எங்களை பார்த்து சிரித்து மகிழ்ந்தது!!

9 thoughts on “என்னவன்

  1. முழு வாழ்வில் காதல் இன்றியமையாதது…வயது தோற்றம் தாண்டி பெருவாழ்வை வாழும் போதே தரும் ஆற்றல் காதலுக்கு மட்டுமே உண்டு… இறந்த ஒருவர் எப்படி இப்படி என்ன முடியும் என்ற லாஜிக் கொஞ்சம் உதைக்கிறது…. என்னவளுக்கு இருந்த உணர்வு உயிரோடு இருப்பின் என்னவர் மட்டும் எப்படி பெருவாழ்வுக்கு தனியே செல்ல முடியும்… எழுத்து நடை அழகு பா… மேலும் நிறைய எழுத வாழ்த்துகள் டியர்..

  2. அருமையான துவக்கம் அழகான வர்ணனைகள் ஆயினும் சிறுகதையின் முக்கியமான முடிச்சு இன்னும் வளமாக பலமாக தேவைப்படுகிறது. அடுத்தடுத்த கதைகளில் மேம்பட வாழ்த்துக்கள்.

  3. ரசனைமிக்க கதை…. சிறப்பு….. தொடருங்கள்….

  4. இன்றைய காலைப் பொழுதின் விடியல் என்னவனோடு துவங்கி மகிழ்வைத் தந்தது.நல்ல ரசனையோடு கூடிய சொற்கள்.படிக்க படிக்க காட்சிகள் விரியத் தொடங்கியது.

    காதலில் இணைந்து திருமணம், குழந்தைகள் என வளர்ந்து மீண்டும் காதல் வழி இறப்பையும் சுகமாக்கி கொண்ட தமிழினியின் காதல் கதை அருமை.

    படிப்பவர்களை ரசிக்க வைக்கும் படியான வர்ணணைகளை கொண்ட கதைக்களம் அருமை.காதல் பிறப்பெடுக்கும் இடத்தை யாரும் அறியார் என்பது உண்மையே.காதலெனும் மழையில் நனைந்து ஆட்டம் போட வைத்த தமிழினிக்கு வாழ்த்தும் நன்றியும்.

    தொடர்ந்து எழுதுங்கள்.எழுத்துப் பணி சிறக்க வாழ்த்துகள் மா

    ரா.சண்முகலட்சுமி
    அம்பத்தூர், சென்னை.
    9840263431

  5. Such a beautiful heart touching love story❤️. Travelled to the imaginary world along with your words..

  6. இன்றைய விடியல் உமது சிறுகதைப் படித்ததில் தொடங்கியது.. மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என் சக தோழியின் முயற்சிக்கண்ட வளர்ச்சியை எண்ணி .. (என்னவன்) என்ற தலைப்பு அருமை .. ஒரு இணைபிரியா காதல் தம்பதியைக் கண்முன்னே கண்டது பாேல் இச்சிறுதை அமைந்துள்ளது…வாழ்த்துக்கள் தோழி சுமையை (தமிழினி) இன்னும் பல கதைகள் எழுத எனது முன்கூட்டிய வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *