எனக்கொரு துணை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 3, 2014
பார்வையிட்டோர்: 8,495 
 
 

காலை எழுந்ததும், முதல் வேலையாக வீட்டு வாசலுக்கு வந்தேன். ராத்திரி பூராவும் மழை. இந்த பேப்பர்காரன் அங்கு தேங்கிக் கிடக்கும் தண்ணீரிலேயே தினசரியைப் போட்டுவிட்டுப் போயிருந்தான். ‘எவ்வளவு தடவை சொன்னாலும் தெரியாது, பேப்பரை போட்டுவிட்டு, வாசல் மணியை அழுத்துங்க என்று!’ முணுமுணுத்தபடியே குனிந்தவள், ஏதோ ஆரவாரம் கேட்டு, தெருவுக்கு வந்தேன்.

எப்போதும் அமைதியாக இருக்கும் அகன்ற தெரு. சொந்தத் தொழில் புரிபவர்கள், அல்லது வெளிநாட்டில் தங்கி பணம் சம்பாதித்துக் கொண்டுவந்தவர்கள் — இப்படிப்பட்டவர்கள்தாம் இங்கு வீடு வாங்கிக்கொண்டு வந்தார்கள். நன்றாகவே இருந்த வீட்டை தம் விருப்பப்படி இடித்துக் கட்டினார்கள். கைநிறைய பணம் இருக்கும் பெருமையை வேறு எப்படித்தான் காட்டுவது!

கோலாலம்பூரின் வட எல்லையில் இருந்த அப்பகுதியில் கடைகண்ணி, மருத்துவமனை போன்ற எந்த வசதிகளும் வருமுன் நாங்கள் வீடு வாங்கிவிட்டதால், கையைக் கடிக்கவில்லை.

பக்கத்து வீட்டில் இரண்டு ஆண்டுகளுக்குமுன்தான் ஒரு சீன முதியவரும், அவருடைய குடும்பமும் குடியேறினார்கள். மனைவி இருக்கவில்லை. அதனால்தானோ என்னவோ, அவர் முகம் எப்போதும் சிடுசிடு என்று இருந்தது. பெண்டாட்டி  என்று ஒருத்தி இருந்தால், வயதுக்காலத்தில், அவளிடம் ஓயாது எரிந்து விழலாம். மலச்சிக்கல், மூட்டுவலி போன்ற உடல் உபாதைகளோ, சாவு பயமோ அந்த வேளைகளில் அலைக்கழைக்காது.

ஆண் பிள்ளை பயந்தவனாகத் தென்பட்டான். பெண்ணைப் பார்த்தால் சண்டைக்காரி என்று தோன்றியது. ‘பாவம் அவன்!’ என்று கரிசனப்பட்டேன்.

அவர்கள் வீட்டை அழகுபடுத்த வந்தவன்தான் சொன்னான், ‘அவர்கள் இருவரும் பெரியவரின் பிள்ளைகள்தான். இருவருக்குமே கல்யாணம் ஆகவில்லை. ஒரு தொழிற்சாலையை நடத்துகிறார்கள்,’ என்று.

பேரன், பேத்திகளுடன் எங்கள் வீடு எப்போதும் கலகலப்பாக இருந்தது. நேர்மாறாக, அவர்கள் வீட்டில் கேட்கும் ஒரே சப்தம் டாமியின் குரைப்புதான். கொல்லைப் புறத்தில் துணி உலர்த்த நான் போகும்போதோ, தோட்டத்தில் மலர் கொய்யப் போகும்போதோ, இரு வீடுகளுக்கும்  இடையே இருந்த குட்டைச் சுவற்றின் மறுபக்கத்தில் முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கி நின்று, டாமி குரைக்கும்.

‘எனக்குப் பயமாயிருக்கு, டாமி. அப்படிக் குரைக்காதே!’ என்பேன் முதலில். அந்த வீட்டு மனிதர்களின் பெயர்கள் தெரியாவிட்டாலும், அவர்கள் கொஞ்சியதைக் கேட்டு, அந்த நாய்க்குட்டியின் பெயரைத் தெரிந்து வைத்திருந்தேன்.

வாலை ஆட்டியபடி குரைத்தால், நாய் நட்பு பாராட்டுகிறது என்று யாரோ சொன்னார்கள்.

என்னிடம் தோழமையுடன் பழகிய டாமி, என் பக்கத்தில் என் பேரன் வந்து நின்றால், பயங்கரமாகக் குலைக்கும். எனக்கு அதன் மனநிலை புரிந்தது. நான் அதற்கு மட்டுமே உகந்தவளாக இருக்க வேண்டும். பிற ஆண்களுடன் நான் பேசும்போது முறைக்கும் கணவர் போலத்தான்! மனிதனோ, மிருகமோ, எல்லா ஆண்களுக்குமே இது பொதுவான குணமோ!

‘என்ன டாமி! உனக்கு இவனைத் தெரியாதா? பேசாம போ!’ என்று நான் செல்லமாக அதட்டுவேன். சொன்னபடி கேட்கும்.

‘ஹை! டாமிக்கு தமிழ் புரிகிறது!’ என்று குழந்தைகள் ஆர்ப்பரிப்பார்கள்.

ஈராண்டுகள் கழிந்தன.

செல்ல நாயை அவ்வீட்டு ஆண்மகன் முன்போல் முகத்தோடு முகம் வைத்துக் கொஞ்சவில்லை. காலையிலேயே பெரியவரைத் தவிர மற்ற இருவரும் தனித் தனி காரில் வெளியே போய்விடுவார்கள்.

கொஞ்சநாளாக டாமி என்னைத் தொடர்ந்து தோட்டத்தில் நடக்கவில்லை. அவர்கள் வீட்டு வாசலில் ‘நாய் ஜாக்கிரதை’ என்ற புதிய பலகை.  நிறைய குரைத்தது. இல்லை, சோர்ந்துபோய் படுத்திருந்தது. நான் கூப்பிட்டாலும், திரும்பவோ, வாலை ஆட்டவோ இல்லை.

நேற்று பெரியவர் நாற்பது வயதுக்கு மேல் ஆகியிருந்த தன் குழந்தைகளை பெரிய குரலெடுத்துத் திட்டிக் கொண்டிருந்தார். ஜன்னல்வழியே எட்டிப் பார்த்தேன். டாமியை அவர்கள் வீட்டு வாசலிலோ, தோட்டத்திலோ காணவில்லை. வீட்டுக்குள் நுழைந்து, ஏதோ அட்டகாசம் பண்ணியிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

இன்று காலை வீட்டுக்கு வெளியே வந்தவள், நான்கு வீடு தள்ளி ஏதோ கும்பல் சேர்ந்திருப்பதைப் பார்த்து, அதை நோக்கி நடந்தேன். உள்ளாடை எதுவும் இல்லாமல், வெறும் நைட்டி மட்டும் அணிந்திருந்தேன். அப்போது அதெல்லாம் நினைவில் எழவில்லை.

தெரு ஓரத்தில் ஒரு மூதாட்டி. நான் உலாவச் செல்லும்போது, ‘குட்மார்னிங்’ என்று பொய்ப்பற்கள் தெரிய சிரிப்பவள். அவள் அலங்கோலமாக, உடலெல்லாம் ரத்தம் வழிய தெருவில் கிடந்தாள். பக்கத்தில் உறுமியபடி டாமி! அதன் வாயிலிருந்து நுரை தள்ளிக்கொண்டிருந்தது. உடலுறவுக்குத் தயாராக இருந்ததென்று அதைப் பார்த்ததுமே விளங்கியது. சோனியாக இருந்த ஒரு பெட்டை நாய் வாலைச் சுருட்டிக்கொண்டு, என்னைத் தாண்டி ஓடியது அப்போது மனதில் பதியவில்லை.

பக்கத்து வீட்டுப் பெண்மணி ஓடி வந்தாள். “ஸாரி. ஸாரி. நேத்து நான் வீட்டுக்குள்ளே நுழைஞ்சு, காரை நிறுத்தறதுக்குள்ளே டாமி திறந்திருந்த கதவு வழியே தெருவுக்கு ஓடிடிச்சு. எங்கே தேடியும் கண்டுபிடிக்க முடியல!” என்றாள் ஆங்கிலத்தில்.

(ஓ! அதற்குத்தானா இரைந்துகொண்டிருந்தார் அவர்கள் தந்தை?)

‘உலாவப் போன முதிய மாதைக் கடித்துக் குதறிய நாய்!’ என்று டாமியின் புகைப்படம் தினசரிகளில் முதல் பக்கத்திலேயே வந்தது. ஆம்புலன்ஸ் வருவதற்குள்ளேயே அவள் உயிர் போயிருந்ததாம். போட்டிருந்தார்கள்.

‘கடிப்பது நாயின் குணம். அதற்காக எங்களுக்கு அந்த நாயின்மேல் எந்த வருத்தமும் இல்லை,’ என்று இறந்தவளின் மகன் தெரிவித்து, நல்ல பெயர் வாங்கிக் கொண்டிருந்தான்.

‘அந்தக் கொலைகார நாயைக் கொன்றுவிட வேண்டும்!’ என்று வாசகர்கள் ஏகோபித்த கருத்து தெரிவித்திருந்ததை ஒட்டி, டாமி பிடித்துச் செல்லப்பட்டது, கதறக் கதற. எனக்கு வயிற்றைப் பிசைந்தது.

ஒரு வாரம் கழித்து, பக்கத்து வீட்டுக்காரனிடம், துக்கம் விசாரிக்கும் வகையில், முதன்முதலாகப் பேசினேன். “டாமி எனக்கும் ஃப்ரெண்ட்தான். வருத்தப்படாதீர்கள். வேற நாய் வாங்கிக்கலாம்!” என்று ஏதோ உளறினேன்.

“வேண்டவே வேண்டாம்!” என்றான் அவன்.

அக்காளும், தம்பியும் துணை இல்லாமல் இருப்பதுபோல, அவர்கள் வளர்க்கும் நாயும் பிரம்மச்சரியம் பூண வேண்டும் என்று எதிர்பார்த்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று காலங்கடந்து புரிந்துகொண்டிருக்கிறான், பாவம்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *