எது பணிவு!?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 17, 2023
பார்வையிட்டோர்: 1,893 
 

‘பணிவு சிலருக்கு வேசம்.. பலருக்கு பயம் கலந்த மரியாதை’

இப்படி மணிமேகலை பலமுறை யோசித்திருக்கிறாள்.

அலுவலகத்திற்க்குபோனால்….பணிவாக பேசுபவர்களே நல்லவர்கள் என்று மேலதிகாரி நினைக்கிறார்.

வீட்டில் மாமியாரும் அப்படியே!

நம் மனதில் பட்டதை வெளிப்படையா பேசினால், விரோதி போலவே நினைக்கிறார்கள்.

‘புத்தி என்ன சொல்லுதோ அதை மனசு கேட்கணும்.! மனசு எதை நினைக்குதோ…அதையே வாய் பேச வேண்டும்’ என்று இருப்பதுதான் அவளுக்கு விருப்பம்.

‘உண்மையாக இருப்பது…பேசுவது…யாருக்கும் பிடிப்பதில்லையே..ஏன்? பணிவு மனதில் இருந்தால் போதுமே? அதை நடித்துக்காட்டித்தான் நிரூபிக்க வேண்டுமா?’

அன்று அவளுடைய மனசு மிக குழப்பத்தில் இருந்தது. தன் கணவனிடம்தான் இதற்கு சரியான விளக்கம் பெற முடியும் என்று தோன்றியது.

பெரியோர்களாக பார்த்து நடத்திய திருமணம். கணவன் பவித்ரன், வரனாக வந்தது அவளுக்கு வரமே!

ஆரம்பித்திலேயே அவளை புரிந்து கொண்டு…அவள் விருப்பம் வெறுப்பு தெரிந்து அனுசரிச்சுப் போவதால்…அவளால் கணவனிடம் இயல்பாக பேச முடிந்தது

மாலையில் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்த கணவன்….

சிற்றுண்டி முடித்து, தொலைக்காட்சி பார்க்க ஆரம்பிக்கும் போது மணிமேகலை பேசினாள்.

“ஏங்க எனக்கு ஒரு சின்ன மனகுழப்பம்! அதை உங்ககிட்ட பகிர்ந்துகிட்டா நல்லாயிருக்குமின்னு தோணுது”

அவளின் தயக்கமான பேச்சை ரசித்துக்கொண்டே…அவள் கரங்களை மெல்லபிடித்து…

“என்ன மேடம்.? இன்னைக்கு ரொம்ப பணிவோடு பேசற மாதிரி இருக்கு!”

சிரித்துக்கொண்டே பேசினான் பவித்ரன்.

அவன் “பணிவு” என்ற சொல்லை சேர்த்து பேசியது அவளுக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.

‘அவள் என்ன கேட்கப்போகிறாள் என்று ஏற்கனவே தெரிந்துவிட்டதுபோல இருந்தது’.

“ஆங்..அதேதான் பணிவு! பணிவுன்னா என்னங்க? எனக்குச்சொல்லுங்க. நான் மனசுல பட்டத சொன்னால், பணிவா பேசலைன்னு சொல்றாங்க. பேசாம அமைதியா இருந்தா ஓப்பனா பேசணுங்கறாங்க. ஏன் இப்படி? பணிவு மனசுல இருந்தா போதுமே..வெளியே காட்டி நடிச்சாதான் நம்புவாங்களா?”

மணிமேகலை மனதில் தோன்றியதை எல்லாம் படபடவென கொட்டினாள்.

அப்படி கொட்டி தீர்த்ததால்…மனசுக்கு அமைதி கிடைத்தது போல உணர்ந்தாள்.

பவித்ரன்…அவளை புன்சிரிப்பு முகத்தில்தவழ உற்று நோக்கினான்.

அவன் எப்போதும் அவளை ஒரு குழந்தை போலவே பாவித்துபேசுவான்.

‘இவளை போன்ற வெகுளியான உள்ளங்களுக்கு…இந்த சுயநலம் பிடித்த மனிதர் கூட்டத்தில் பிழைக்க தெரியாவிட்டால் பெரிய சிக்கல்தான்’ என்று நினைத்தான்.

“நீ சொல்வது நூறு சதவிகிதம் சரி! அதேசமயம் இதையும் யோசித்து பார். பணிவு என்பதற்கு…நீ எப்படி ஒரு விளக்கத்தை நம்புகிறாயோ…அதை போல, மற்றவர்களும் பணிவை…அவர்கள் பார்த்து பழகியபடியே நம்புகிறார்கள் அல்லது எதிர்பார்க்கிறார்கள்” என்று சொல்லி விட்டு அவளுக்குப்புரிகிறதா…என்பது போல் பார்த்தான்.

அவள் இன்னமும் தெளிவாகவில்லையென்று முகம் காட்டியது.

அதனால் மேலும் விளக்கிச்சொல்ல நினைத்தான்.

“பொதுவாக மனிதருக்கு தான் மட்டுமே (ஈகோ) எப்போதும் உயர்வாக மதிக்கப்படவேண்டும்” என்கிற எண்ணம் உண்டு. அது மரியாதையை எதிர்பார்பதாகவோ…. அல்லது அவர்கள் பேச்சை யாரும் மறுத்து பேசாமல், ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகவோ இருக்கும். இந்த எண்ணம் சிலர்க்கு பணத்தால் வரும் அல்லது பதவியால் வரும். அதனால் அவங்க,அவங்க விருப்பப்படி பணிவை நடிப்பும் வேசமுமாக காண்பித்து…காரியத்தை சாதிக்க நினைக்கிறார்கள். அந்த மாதிரியே நாமும் செய்யவேண்டும் என்பது அவசியமில்லை.

‘பால் கறக்கணுமின்னா…ஆடற மாட்டை ஆடித்தான் கறக்கணும். பாடற மாட்டை பாடித்தான் கறக்கணுமின்னு பெரியவங்க சொல்லுவாங்க. அது மாதிரி  நேரம், காலம், சூழ்நிலை பொருத்து, நாம் சொல்ல வேண்டிதை…அவர்கள் “ஈகோ”வை பாதிக்காமல் சொல்வதே…பணிவு” என்று பவித்ரன் சொன்னதும்,

ஏதோ புரிந்தது போல மணிமேகலைக்கு இருந்தது.

அவன் கையை இறுக பற்றிக்கொண்டு, அவனுடைய தோளில் மெல்ல சாய்ந்துகொண்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *