திருமணம் முடிந்து நான்கைந்து மாதங்களில் கடந்த ஒரு மாத காலமாக மனைவி நடப்பில் மாற்றம். ! – கவனித்த சுரேசுக்குச் சின்னதாய் ஒரு நெருடல்.
திருமணமான புதிதில் அழகு மனைவியோடு உல்லாசமாக ஊர் சுற்ற வேண்டும் என்கிற நினைப்பில் அலுவலகம் விட்டு வந்த கையோடு…. கடற்கரை, பூங்கா, சினிமா, உணவு விடுதி என்றெல்லாம் அழைப்பான். லேசில் சம்மதிக்க மாட்டாள். அப்படியே வற்புறுத்தி அழைத்துச் சென்றாலும் தலைவலி, கால்வலி, குளிர் என்று ஏதாவது ஒரு சாக்கு சொல்லி அரை மணி நேரத்திற்குள்ளாக உடன் வைத்து வீட்டில் அடைவது அவள் வழக்கம்.
கடந்த ஒரு மாத காலத்தில் அப்படியே தலைகீழ் மாற்றம்.
அவளாகவே முன் வந்து…
“வீட்டில் அடைஞ்சு கிடக்கிறது போர்ங்க..”சொல்லி…
வெள்ளி, செவ்வாய்.. கோயில் ! திங்கள் கடற்கரை. புதன் பூங்கா. வியாழன் சினிமா. சனி ஓட்டல். அப்புறம் மளிகை, மார்க்கெட், காய்கறி கடைக்குக் கிளம்பினாலும் ” நானும் வர்றேங்க..!” உடன் கிளம்பி விடுகிறாள்.
எங்கு சென்றாலும்… வெகுநேரத்திற்குப் பின்தான் ” கிளம்பலாம்ங்க..”என்ற வீட்டு நினைப்பு.
அதற்கு முன் இவன் கிளம்பினாலும்” இருங்க போகலாம். !” என்கிற தாமதப்படுத்தல்.
ஏன் இப்படி….? எதற்காக இப்படி..?
வீட்டிலுள்ள மாமியாருடன் மனக்கசப்பு. அப்பா மீது வருத்தமா..?
மகள் இல்லாத குறை. அம்மா இவள் மீது அன்பு, பாசம் கொட்டி சரியாகத்தான் நடத்துகிறாள்.
அப்பா மீதும் தவறில்லை.
வயல் வெளி சென்று வீடு திரும்பினால் ” மருமகளே..!” என்கிற குரலில் மாற்றமில்லை.
பின் எதற்காக இந்த மாற்றம்..?
வெகுநேரமாக கடற்கரையில் அவளோடு அமர்ந்திருந்த சுரேசுக்கு இப்போதும் அதே சிந்தனை.
“அமுதா… !” இருட்டில் அலை அடித்து சிலுசிலுவென்று காற்று வீசும் கடலை நோக்கி அமர்ந்திருந்தவளை அழைத்தான்.
மின்னொளியில் அவள் கேசம் காற்றிக்கேற்ப ஆடியது அழகாக இருந்தது.
“சொல்லுங்க..?” தலையைத் திருப்பாமல் குரல் மட்டும் கொடுத்தாள்.
“மணி எட்டு. வீட்டுக்குப் போகலாமா..? நாம வந்து ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆச்சு.”
“கூட்டம் குறையாட்டும். இன்னும் அரை மணி நேரம் கழிச்சுப் போகலாம்.”
” அமுதா..? ”
“என்ன..? ”
“சின்ன சந்தேகம் ”
“சொல்லுங்க..? ”
“இப்போ நீ வெளியே வந்தால் வீடு திரும்பவே மனசில்லே சரியா..? ”
“ஆமாம் !”
“ஏன்…?”
“நான் சொல்றதைக் கவனமாக் கேளுங்க..”
“சரி ”
“நம்ம திருமணத்துக்குப் பிறகு நான் வீட்டு மருமகளாய் வீட்டுக்குள்ளேயே இருக்கிறது உங்க அம்மா அப்பா அன்னியோன்யத்துக்குப் பெரிய இடைஞ்சலா இருக்கு..”
“அப்படியா..? எப்படி..?”
“ஒரு மாசத்துக்கு முன் உங்க அப்பா அறைக்கு எதுக்கோ போனேன். கதவு சாத்தி இருக்க..உங்க அம்மாகிட்ட அவர் வம்பு.
“ச்ச்சூ!..! சும்மா இருங்க. கையை விடுங்க..மருமகள் வீட்டிலிருக்கும்போது” ன்னு உங்க அம்மா கெஞ்சல் !!
அப்பதான் நாம ராவும், பகலும் இவங்களுக்கு இடைஞ்சலாய் இருக்கோம், வயசானாலும் அவுங்களும் கணவன் மனைவிதானே ! என்கிற விசயம் எனக்குப் புரிஞ்சுது. என் புத்தியில் உறைச்சுது.
அதன் விளைவுதான் நாம இப்படி வெளியேற்றம்.! இந்த இடைவெளியில் அவுங்க சந்தோசமா இருப்பாங்க..” சொன்னாள்.
கேட்ட அடுத்த வினாடி…
“அடிப்பாவி ! காரியத்தைக் கெடுத்தே..!” சுரேஷ் பதறி எழுந்தான்.
“என்ன..?” இவளும் எழுந்து அவனைக் கலவரமாகப் பார்த்தாள்
“அம்பது வயசானாலும் என் அப்பாவுக்கு கிராமத்துல ரெண்டு மூணு தொடுப்பு. அதையும் மீறி அம்மாகிட்ட தினம் வம்பு. இதுக்கு ஒரு முடிவு கட்டத்தான் அம்மா காலாகாலத்துல எனக்குக் கலியாணம் முடிச்சு வீட்டு மருமகளாய்த் தேடி உன்னை முடிச்சாங்க. இப்போ அவுங்க பாவம்ன்னு நினைச்சி அதுக்கும் வைச்சே ஆப்பு. கிளம்பு சீக்கிரம் !” ஆளை இழுத்துக் கொண்டு பறந்தான்.
அமலாவிற்கு வாய் பேச முடியாத அதிர்ச்சி. !