எதிர்பா(ராத)ர்த்த உறவு

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 12,302 
 
 

மனதில் எந்த ஒரு வன்மமும் புகாமல் சுற்றிக்கொண்டிருந்த சமயம் அது. பொய், சூது, வாது, கள்ளம், கபடம் என்று எதுவும் என்னை அண்டா வயது அது. மனித ஜென்மமும் சில காலங்கள் கடவுளுக்கு அருகில் இருக்கும் பருவம் என்று ஊரார் முழக்கமிடும் வயது அது. அரை கை சட்டையும் அரை கால் டவுசரும், அதுவும் முட்டிக்கு மேலேயே முடிந்துவிடும் டவுசரை போட்டுக்கொண்டு, ஆபாசம் பற்றி அறியாமல் சுற்றித் திரிந்த வயது அது. தத்தித்தத்தி பேசும் மொழியும் சற்று சகலமாய் வந்து விழத்துவங்கிய பருவம் அது.

அம்மாவின் வயிறு வீங்கி இருந்தது.. காரணம் தெரியவில்லை… அம்மாவிற்கு அதை தூக்கிக்கொண்டு நடப்பதற்கு சிரமமாய் இருந்தது போல, அது அவர்களின் முனகல்களிருந்து இருந்து தெரியவந்தது. இவ்வளவு சிரமங்கள் இருந்தும் அவள் அதை அனுபவித்து ரசிக்கவே செய்தாள். அப்பாவோ மெல்லிய தொப்பையை குறைக்க மாங்குமாங்கென்று ஏதேதோ காரியங்கள் செய்யும் பொழுது அம்மாவோ அந்த ‘அசுர வளர்ச்சியை’ எண்ணி எண்ணி ரசித்த செயலின் முரண்பாடு அப்பொழுது எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அம்மாவின் இந்த ‘குறைக்கு’ யார் காரணம் என்று என் மனம் என்னை மட்டுமின்றி என் உறவினர்கள் அனைவரிடமும் கேள்விகளை துளைத்தது. அதற்கு வெறும் மௌனப் புன்னகையே அவர்களிடமிருந்து பதிலாய் கிட்டும். அக்கம் பக்கம் இருக்கும் விடலை பருவ ஆண்கள், “உங்க அப்பா தான் டா இதுக்கு காரணம்” என்று சொல்லி சிலுமிஷமாய் சிரிப்பார்கள். “எங்க அப்பாலாம் இதுக்கு காரணமா இருக்காது…” என்று அவர்களை முறைத்துவிட்டு வீடு திரும்புவேன். அதற்கு அவர்கள் இன்னும் சத்தமாக சிரிப்பார்கள். வீட்டில் வந்து அம்மாவிடம் இதை சொன்னால் அவள் அந்த ‘விடலைகளை’ வசைபாடுவாள்.

அப்பாவிடம் சொன்னாலோ அமோகமாய் சிரிப்பார். “அவங்க சொன்னது சரிதான் பா… அம்மாவோட இந்த வயிறுக்கு நான் தான் காரணம்” என்று சொல்லி என்னை அணைக்க முற்படுவார். அத்தகைய பதிலை எதிர்பாராத நானோ அவரிடம் முறைத்துக்கொண்டு அம்மாவின் முந்தானையில் மறைவிடம் தேடி புகுந்துக்கொள்வேன்.

அம்மா கீழே அமர்ந்துவிட்டு எழும் பொழுது எனக்கு அழுகையே வரும். ஏன்னென்றால் அவளின் செய்கை அவ்வாறு இருக்கும்… அவளின் கால்கள் இரண்டும் இரண்டு பக்கமாய் குத்திட்டு எழ முயற்சிக்கும், அதற்கு அவளின் இரு கரங்களும் தங்களின் பங்கை செம்மையாய் செய்ய தரையை நாடும், இதழ்களோ வாயின் உள்ளே உள்ள மறைவிடத்தில் சென்று அணைத்துக்கொள்ளும். எழுந்த உடன் தாயை நாடிச் சென்று உணவருந்தும் கன்றைப்போல் அவளின் இடது கரங்கள் வீங்கிய வயிறின் மேல் சம்மணமிட்டு அமரும், இதழ்கள் தங்களின் அணைப்பை துறந்து “ஸ்ப்ப்ப்ப்ப்பா” என்று ஸ்வரத்தை உதிர்க்கும்.

“அப்பா கிட்ட கோச்சிக்காத டா செல்லம்.. நீதானே உனக்கு தங்கச்சி பாப்பா வேணும்னு சொன்ன, அதுக்கு தான் அப்பாவும் அம்மாவும் சேர்ந்து இப்படி பண்ணோம்… எல்லாம் உனக்காக தானே… அப்பா கிட்ட இதுக்கு போய் கோசிக்கலாமா?” என்று அப்பா கெஞ்சும் பொழுது என் கோவம் பஞ்சுப்பஞ்சாய் பறக்கும்.

அன்று நான் பள்ளியிலிருந்து திரும்பும் பொழுது அங்கே என் அம்மா இல்லை… தாத்தா மட்டும் என் வரவை எதிர்பார்த்து அமர்ந்திருந்தார். “தாத்தா அம்மா எங்க….?” என்ற என் கேள்விக்கு அவர் எதுவும் பதிலளிக்காமல் என்னை அவருடன் எங்கோ அழைத்துக்கொண்டு சென்றார்.. நானும் வழியெல்லாம் அந்த கேள்வியை மீண்டும் மீண்டும் வினவலானேன். “சொல்லுறேன்… வா ராஜா…” என்பதே அவரின் பதிலாய் இருந்தது.

அம்மாவை அத்தகைய நிலையில் நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. பச்சை உடை தரித்திருந்தாள். அருகில் அப்பா அவளின் கரங்களை அழுத்தமாய் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார். என்னை கண்டவுடன் அவளின் விழிகளும் இதழ்களும் சேர்ந்து சிரித்தன. எனக்கு சிரிப்பு எழவில்லை மாறாக பயம் தான் எழுந்தது. ஏனெனின் அப்பாவின் முகத்தில் அப்படி ஒரு கவலை. இதுவரை அப்பாவையும் அப்படி நான் கண்டதில்லை. எல்லாம் அங்கே எனக்கு புதிதாய் இருந்தது.

“சார்… இன்னும் ஒன் ஹௌவர்ல ஆபிரேஷன் தேட்டருக்கு கொண்டு போயிடுவோம்…. கொஞ்சம் பீஸ் கட்ட சொன்னங்க டாக்டர்” என்று ஏதோ ஒரு வெள்ளை உடை அணிந்த ‘அக்கா’ சொல்லிவிட்டு சென்றாள்.

“ஏன் மா நாம எல்லாம் இங்க வந்தோம்” என்று நான் கேட்ட கேள்வியை யாரும் பொருட்டாகக் கூட மதிக்கவில்லை. அம்மா மட்டுமே அந்த முடியா நிலையிலும் “உனக்கு தங்கச்சி பாப்பா வரப்போகுது டா ராஜா” என்று பாசமாய் சொன்னாள், நெற்றிப்பொட்டில் முத்தமிட்டவாறு.

சில நொடிகளில் அம்மாவை யாரோ இருவர் ஏதோ சக்கர படுக்கையில் தள்ளிக்கொண்டு சென்றார்கள். அப்பாவும் பின் தொடர்ந்தார். அம்மாவின் விழிகள் என்னை அசையாமல் பார்த்தவாறு சென்று மறைந்தது. அதிலிருந்து ஒழுவிய கண்ணீர் என் பிஞ்சுப்பாதங்களில் சிந்தியது.

தாத்தாவோ “போய் சாமிகிட்ட வேண்டிக்க பா…” என்று ஏதோ ஒரு பெண்ணின் சிலைக்கு முன்னே என்னை கொண்டு சென்றார். அந்த வழியில் வந்த இன்னொரு வெள்ளை உடை அணிந்த ‘அக்கா’ முட்டி போட்டுக்கொண்டு வேண்டும் படி கற்பித்தாள். நானும் அப்படியே செய்தேன். தாத்தா மெல்ல அப்பாவிடம் சென்று அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டிருந்தார்.

இமைகளை இருக்க மூடிக்கொண்டு “சாமி எனக்கு தங்காச்சிப்பாப்பா பொறக்கணும்… தங்காச்சிப்பாப்பா பொறக்கணும்…..தங்காச்சிப்பாப்பா பொறக்கணும்….” என்று ஓயாமல் சொல்லிக்கொண்டு, வேண்டிக்கொண்டு இருந்தேன்.. என் மனத்திரையில் என் தங்காச்சிப்பாப்பா வெள்ளை நிற கவுனில் காட்சித்தந்தாள். எவ்வளவு நேரம் இப்படி கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தேன் என்பதை நான் அறியேன். அப்பாவின் கரங்கள் என் தோள்களின் மேல் படும் பொழுது தான் நான் சுயநினைவிற்கு வந்தேன். அவர் என்னை அம்மா இருந்த அறைக்கு அழைத்துச்சென்றார்.

அம்மா ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். அவளின் சிகை கலைக்கப்பட்டு இருந்தது, முத்துமுத்தான வியர்வைகள் அவளின் கன்னங்களை அலங்கரித்துக்கொண்டுயிருந்தன. அவளுக்கு மிக அருகில் ஒரு சிறு இரும்பு தொட்டில் இருந்தது. அதை நான் எம்பி எட்டிப்பார்க்கும் பொழுது, அதில் உள்ளே கிடந்த இரு கருவிழிகள் என்னை கண்டு சிரித்தன, அதற்கு ஆரவாரம் செய்யும் பொருட்டு அதனின் பிஞ்சுக்கரங்கள் காற்றில் ஆர்பரித்தன. ஹய்யா எனக்கு தங்கச்சி பாப்பா பொறந்துடுச்சு என்று மனம் ரெக்கை கட்டி பறந்துக்கொண்டிருந்த பொழுது, “ராஜா, உனக்கு பாரு தம்பிப்பாப்பா பொறந்திருக்கு… இனி நீ இவன் கூட நல்லா விளையாடலாம்….” என்ற தாத்தாவின் வார்த்தைகள் என் நெஞ்சில் நெருப்பை உமிழ்ந்தன.

என் அன்னையின் மேல் ஒரு வகையான வெறுப்பு.. ஏமாற்றிவிட்டாள், என்னை நன்றாக ஏமாற்றிவிட்டாள். தங்கை என்று எதிர்பார்த்த உறவை தராமல் தம்பி என்ற எதிர்பாராத உறவை தந்துவிட்டாள். அவளுக்கு என் மேல் பாசமில்லை, இருந்திருந்தால் இப்படி செய்திருப்பாளா…? தாங்கமாட்டாமல் அங்கே மறு நொடிக்குக்கூட நில்லாமல் வீட்டை நோக்கி சென்றுவிட்டேன். அப்பொழுது தெரியாது எனக்கு தம்பியையும் தங்கையையும் உறுதிப்படுத்துவது அம்மாவும் அப்பாவும் இல்லை எக்ஸ் வையி குரோமோசோம்களே என்று.

வெறுப்பை நெருப்பாய் உமிழ்ந்தேன். அது என்னுடைய இம்-மெச்சூரிட்டி என்று அவர்கள் சிரிக்கவே செய்தனர். என்னால் முதலில் ‘அவனை’ ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘அவனும் அவன் மண்டையும்’ என்பது போல் ஒரு தீரா வெறுப்பு அவன் மேல். அவனின் கற்றையான கருமயிர்களும், பொக்கை வாய் சிரிப்பும், கொலுக்மொலுக்கென்று இங்கும் அங்கும் அசைந்து ஆடும் கன்னங்களும், மெல்லிய தொந்தியும், குச்சியைப்போல் நட்டுவைத்த கைகால்களும், அவனை எனக்கு சுத்தமாக பிடிக்கத்தான் இல்லை.

அவனுக்கு பெண்ணின் உடைகளை அணிவித்தனர். அன்று தான் அவன் எனக்குப்பிடித்தார் போல் காட்சித்தந்தான். “ஐய்யா… தங்கச்சிப்பாப்பா.. தங்கச்சிப்பாப்பா… ” என்று துள்ளிக்குதித்த என்னை என் அன்னை இடைமறித்தாள்.

“ராஜா… இது தம்பி பாப்பா தான்… நாம தான் பட்டுத்தாவணி போட்டு வைச்சிருக்கோம்…”

“இல்ல… தங்கச்சிப்பாப்பா தான்… பின்னளு, டிரஸ் எல்லாம் இருக்கே….”

“ஐயோ… இங்க பாரு… என்னது இது….?”

“பெல்லா…..” (ஆண்குறியை குறிக்கும் சொல்)

“உனக்கு என்ன இருக்கும் இங்க…?”

“பெல்லா..”

“சோ, இப்ப சொல்லு தம்பிப்பாப்பா தானே….?”

“ஏன் தங்கச்சி பாப்பாவுக்கு பெல்லா இருக்காதா….?”

என்று நான் கேட்ட அறிவுப்பூர்வமான அந்த கேள்வி அன்று அவர்களின் சிரிப்பில் கரைந்தது.

‘அவன்’ இப்பொழுது என்னுடன் பேச ஆரம்பித்துவிட்டான்.. தத்தித்தத்தி அவன் பேசும் பேச்சு என்னுள் எரிச்சலைத்தவிர வேறு ஒன்றையும் ஏற்படுத்தவில்லை. ஓடும் பொழுது, ‘பொத்பொத்’என்று கால் தடுக்கி விழும் பொழுது என்னைக்கண்டுத்தான் சிணுங்குவான், ஏதோ நானே தள்ளிவிட்டதைபோல். மனதுக்குள் அவனை கெட்ட கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டுவேன்… “நாயே… பேயே.. பண்ணி…. பொறுக்கி….” என்று ஏகத்துக்கு இருக்கும் என்னின் வசை மொழிகள்…!

நாட்கள் செல்லச்செல்ல, என் மெச்சூரிட்டி வளரவளர அவனை நான் தம்பியாய் ஏற்றுக்கொண்டேன்.. ஆனால், அதை நான் அவனிடம் காட்டவில்லை. அவன் என் மேல் தீராத அன்பை கொட்டினான்.. அவனுக்கு யார் எதை கொடுத்தாலும் என்னிடம் ஓடிவந்து அதை தந்துவிட்டு “அண்ணாக்கு..அண்ணாக்கு…” என்று என்னிடம் எதிர்பார்த்துத்தான் ஏமாறுவான்… ஏமாற்றப்படுவான்…! இருந்தும் அவன் என்னை அளவுக்கதிகமாய் நேசிக்கின்றான் என்பது அவனின் ஒவ்வொரு செயல்களிலும் வெளிப்படும்.

அவனிடம் உள்ள இன்னொரு பழக்கம் என்னவென்றால், சிறுவயதில் எது கிடைத்தாலும் அதை வாயில் அதக்கி சுவைப்பான். இப்படித்தான் ஒரு நாள், கீழே மண் தரையில் ஊரும் கருப்பு நிற சிறு ‘மரவட்டைபூச்சிகளை’ எடுத்து போட்டுக்கொண்டான். அது உள்நாக்கில் ஊர ஊர அவன் துடித்துக்கொண்டிருந்தான், என்னினும் அதை துப்பவில்லை. அம்மா தான் வாயினுள் கைவிட்டு அதை எடுத்தாள். “பெரியவனே… இவன் தான் இப்படி பண்ணானா.. நீ தடுக்க மாட்ட…? ஓரமா உனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லதா மாதிரி நிக்குற….?” என்று என்னைத்தான் திட்டினாள்…! அடுத்த ஒரு வாரத்திற்கு அவனால் எதையும் உட்கொள்ளமுடியவில்லை… பாவம், எதை சாப்பிட ஊட்டினாலும், ஊருவதைப்போல் உணர்த்து துப்பலானான்.

இன்னொரு பழக்கம், வீடிற்கு பக்கத்தில் ஒரு குளம் உள்ளது. அந்த குலத்திற்கும் எங்கள் வீட்டிற்கும் ஒரே ஒரு சுவர் தான் தடுப்பு. அதில் அவன் வீட்டில் கிடைக்கும் பொருட்களை அனைத்தையும் எறிந்துவிடுவான். வீட்டில் முன்பொரு காலத்தில் இருந்த பாதி பொருட்களை நீங்கள் அந்த குளத்தில் பார்க்கலாம்.

இன்னொரு நிகழ்வை என்னால் மறக்கவே முடியாது. அது, நான் அவன் அம்மா அப்பா நால்வரும் ரயிலில் சென்றுக்கொண்டிருந்தோம். நாங்கள் இறங்கும் இடம் வந்தமையால், அனைவரும் இறங்க தலைப்பட்டோம். அவன் இறங்கும் பொழுது, அந்த கம்பிப்படிகளின் சந்தில் விழுந்துவிட்டான். மூவருடன் சேர்ந்து அங்கே இருந்த அனைவரும் பதறிவிட்டனர். எங்கே திரும்பினாலும் “அய்யயோ .. ஏதோ ஒரு குழந்த தண்டவாளத்துல விழுந்துடுச்சு….. ட்ரைன் வேற எடுக்க போறாங்க….” என்று கூக்குரல்கள். அம்மாவின் முகத்தில் கண்ணீர் பெருக்கெடுக்க, உடன் வாயும் பற்பல புலம்பல்களை உதிர்க்க, அப்பாவின் முகத்திலோ கவலை ரேகைகளாய் படந்திருக்க, நான் இருவரின் கரங்களையும் பற்றிக்கொண்டு பதறிபோய் இருந்தேன். வண்டியும் அதனின் ‘மாமூல்’ அபாய முழக்கமிட, பின் மெல்ல மெல்ல உருண்டது. இங்கே ஆச்சர்யம் என்னவென்றால், முழு வண்டியும் உருண்டபின்பு தண்டவாளத்தில் துள்ளிகுதித்துக்கொண்டு வெண்பற்களை காட்டியவாறு அவன். அப்பொழுதான் அம்மாவிற்கு போன உயிர் திரும்பி வந்தது. அனைவரும் அவனை ஒரு சாதனையாளனைப்போல் கண்டனர். ஒவ்வொருவராய் அனைவரும் அவனின் கன்னங்களை கிள்ளி, ” உனக்கு ஆயுசு கெட்டி டா குட்டி” என்று மனதார ஆசீர்வதித்தனர். என் கண்களிலிருந்து மெல்ல கண்ணீரும், இதழ்களிருந்து சிரிப்பும் ஒரு சேர வெளிப்பட்டது.

இருவரும் மெல்ல மெல்ல வளர்ந்தோம்… கூடவே எங்களின் மோதல்களும் பாசங்களும் வளர்ந்தது. மோதல் வர முதல் காரணம் கண்டிப்பாக டி.வி. ரிமோட் தான். அது மனிதனை ஆட்டிப்படைக்கும் விந்தை தான் எத்தனைஎத்தனை? முக்கியமாக இருபிள்ளைகள் இருக்கும் வீட்டில் இதன் பங்களிப்பு சற்று தூக்கலாகவே இருக்கும். கண்டிப்பாக யாரும் எதையும் ஒழுங்காக பார்க்க மாட்டோம், தொலைகாட்சி ஆன் செய்யப்பட்டதும் எங்களின் ‘ரிமோட்’ தகராறும் ஆரம்பித்துவிடும். இறுதியில் இருவரும் நன்றாக அடித்துக்கொள்வோம். என்னைவிட அவன் பலசாலி. இப்படித்தான் ஒரு நாள், சண்டை வலுத்து அவன் முதுகில் பளார் பளார் என்று வீசிவிட்டேன், பதிலுக்கு அவனோ ‘பெல்டில்’ என்னை வீசிவிட்டான். இறுதிகட்டமாக இருவரும் கட்டிஉருண்ட நொடியில் அவன் முதுகு என் வாயிற்கு மிக அருகில் வந்தது. பற்கள் படிய, குருதி கசிய கடித்துவிட்டேன். அவன் துடிதுடித்துப்போனான். அதற்காக நான் அப்பாவிடம் நன்றாக வாங்கிக்கட்டியது தனிக்கதை.

மற்றும் ஒரு நாள், அவன் சாப்பிட்டுக்கொண்டிருந்த பிஸ்கட் கீழே விழுத்தது. அதை திறம்பட எடுப்பதாய் எண்ணிக்கொண்டு, அதை எடுத்து வாயில் போட்டபடி குதித்துகுதித்துச் சென்றேன். சடாரென்று ஏதோ ஒன்று என் நடுமண்டையில் பலமாய் தாக்கியது. சுயநினைவின்றி நான் கீழே விழும்முன் என் ரத்தம் வாசலெங்கும் ஒழுகிக்கொண்டிருந்தது. அப்பறம் தான் தெரிந்தது நான் குதிக்கும் பொழுது வாசப்படியில் இடித்துக்கொண்டு, தூக்கி எறியப்பட்டேன் என்று. இதற்கு ஆறு தையல்கள் வேறு. பிறகுத்தான் அந்த சோக நிகழ்வு தெரியவந்தது. அவன் நான் அவனிடமிருந்து களவாடிய பிஸ்கட்டை பற்றி கவனிக்கவே இல்லையென்று.

இருவரும் ஒரே பள்ளியில் தான் பயின்றோம். அவனை நான் தான் ‘அரை பெடல்’ அடித்தவாறு கொண்டு சென்று பள்ளியில் விடுவேன். மதிய வேளையில் அவன் எனக்கு முன்னால் என் மிதிவண்டியின் முன்னே நிற்பான், இருவரும் வீடிற்கு சென்று அம்மாவின் கரங்களால் உணவுகளை கொறித்துக்கொண்டு மீண்டும் விரைவோம். பின்பு மாலையில் நான் என் சகாக்களுடன் சேர்ந்து மட்டைபந்து விளையாடும் பொழுது, அவன் என் மிதிவண்டியின் அருகிலேயே அமைதியாய் அமர்ந்திருப்பான். நான் எதாவது சின்னதாய் அசைந்தாலும், ” அண்ணா.. அண்ணா…” என்று கூவி என்னை உற்சாகப்படுத்துவான்.

இருவரும் மிகவும் நெருக்கமானது அந்த காலத்தில் தான். அவன் என்னை இறுக்கியவாறு அமர்ந்துக்கொண்டு வரும் நிலையை நான் மிகவும் ரசிப்பேன். இப்படித்தான் ஒரு நாள், இருவரும் பள்ளிக்கு விரையும் பொழுது ஒரு காகம், என் மண்டையை பறக்கும் பொழுது பதம் பார்த்துவிட்டது. அவ்வளவு தான் ஒரே தாவாய்த் தாவி, காகத்தை பிடிப்பதாய் நினைத்து தவறி சாலையில் விழுந்தான். “என்ன டா… ஒழுங்கா உட்காரமாட்டியா..?” என்றேன் எரிச்சலாய். “அது எப்படி ண்ணா, அது உன்ன கொத்தும்… பாவம் உனக்கு வலிக்கும்ல..?” என்றான் மழலையிளிருந்து விடுப்பட்ட தமிழில். நெகிழ்ந்துப்போனேன். இருவரையும் பார்த்து ஊரார் புகழ்ந்தனர். நல்ல அண்ணன் தம்பி எனப் பேர் எடுத்தோம்.

நாட்கள் நகர்ந்தன.. அவனும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் அடியெடுத்துவைத்தான். அவனுக்கும் பெண்களுக்கும் என்றைக்குமே ஆகாது. ஏனோ அவனுக்கு பெண்களை பிடிப்பதில்லை. எனக்கு எதிர்மறை அவன்..! அவன் படிப்பில் கொஞ்சம் மந்தம் தான். இருப்பினும் அவன் ஒழுங்காக படித்தால் முதன்மையாய் வருவான், ஆனால் படித்தால் தானே..? அவனுக்கு அன்று கல்லூரி ரிசல்ட் வந்தது. சில பாடங்களில் தவறிவிட்டான். அப்பாவின் கோபத்திற்கும் ஆளாகிவிடான். அவரோ அவனை கடுமையாய் கண்டிப்புடன் அடியும் கொடுக்க, ஏனோ நான் மடத்தனம் செய்துவிட்டேன். அப்பாவுடன் சேர்ந்து அவனை நானும் தண்டித்துவிட்டேன். பாவம் துடிதுடித்துவிட்டான்..! அவனின் முகமாறுதல்களே அதற்கு சாட்சி.போராட்டமெல்லாம் அடங்கி நிசப்பதமாய் ஆனபின், அனைவரும் தூங்கச்சென்றோம். எனக்குத்தான் தூக்கமே வரவில்லை. அவனும் கைபேசியை நோண்டியவாறு அழுதுக்கொண்டிருந்தான்.

எனக்கு பொறுக்கமுடியவில்லை. என்றுமே அவனை நான் ஒரு கடுஞ்சொல் கூட சொன்னதில்லை. இன்றோ இவ்வாறு நடந்துக்கொண்டேன், என்ன ஜென்மம் நான் என்று என்னை நானே வசைப்பாடினேன் மனதில். மெல்ல எழுந்தேன் விளக்கை போட்டேன், அவனை மெல்ல அணுகி பெயர்ச்சொல்லி அவன் புஜங்களை உரசினேன். என்னை கண்டான், அந்த பார்வையில் அடிப்பட்ட வலி தெரிந்தது.

என் கண்கள் கலங்கிற்று…! மெல்ல

“சாரி டா… என்னைக்குமே நான் உன்ன கண்டிசதில்ல… இன்னிக்கு என்னமோ அடிச்சிட்டேன்” என்ற வார்த்தைகள் முடிவடையும்முன்னே என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

அவன் பதறிபபோய்விட்டான்.

“என்ன டா.. இப்படிலாம் பேசுற….? முதல்ல கண்ண தொட…” என்றான் அன்புக்கலந்த குரலில்

நானோ கண்களை துடைக்க மறந்தவனாய் அவன் முன்னால்…

அவனே மெல்ல வந்து என் கன்னங்களை துடைத்துவிட்டான்.

“என்ன டா.. இப்படி பண்ணுற….?”

“சாரி டா…. நான் உன்ன கை நீட்டி வேற அடிச்சிட்டேன்….”

“ஹே என்ன இது…. என்ன நீயும் அப்பாவும் கண்டிக்கமா யாரு டா கண்டிப்பா….? இப்படி நீங்க கண்டிக்கலைனா தான் நான் உருப்புடாம போவேன்… இதுக்கு போய் ஏன் டா அழுவுற..? உனக்கு இல்லாத உரிமையா…?”

அவனின் பாசத்தையும் காதலையும் இந்த சில வார்த்தைகளுக்குள் அடக்கிவிட்டான். எனக்குத்தான் தெரியவில்லை. வெளிப்படுத்தவும் வரவில்லை. நான் வெளிப்படுத்தித்தான் புரியவேண்டும் என்பதும் அவனுக்கு இல்லை. அந்த நொடியில் என் கண்முன்னே மின்னலைப்போல் அவன் பிறந்த நொடியும் நான் அதற்காக கோபித்துக்கொண்டு வீட்டிற்கு சென்ற நொடிகளும் பளிச்சிட்டு மறைந்தன..!

மறுநாள் காலை அவனின் குரலும் அதனை தொடர்ந்து என் அன்னையின் குரலும் ஏதோ அரைகுறையாக என் செவிகளை எட்டியது. அரைகுறை உறக்கத்தில் நான் கேட்ட உரையாடல் அது..!

அவன் நேற்று நடந்ததை அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

“சொல்ட்டு அவன் தூங்கிட்டான் மா.. ஆனா எனக்கு தான் தூக்கமே வரல…. ரொம்ப கஷ்டமா போச்சு”

அவனின் அந்த ‘கஷ்டமா’ என்ற வார்த்தையில் உண்மையிலையே வருத்தம் தொனித்தது. அது என்னை உடனே தொற்றிக்கொண்டது.

அம்மா ஏதோ சொல்ல வாயெடுக்க, அப்பாவோ “அது அவர்களின் பாசம் நீ தலையிடாதே” என்று கறாராய் சொல்லிவிட்டார்.

இவ்வாறு ஒவ்வொரு பருவத்திலும் அவனின் அன்பை எனக்கு முழுவதுமாய் அளித்தவன் அவன். இவனையா நான் வெறுத்தேன் என்று எண்ணி எண்ணி என்னை நானே வெறுத்துக்கொண்ட நாட்களும் உண்டு.

இப்படி முழுவதுமாய் என்னிடமிருந்து சிறு அன்பையும் எதிர்பார்க்காமல் அவனின் ஒட்டுமொத்த அன்பையும் செலுத்திய ஜீவனுக்கு இன்று அவனின் வாழ்வில் மிக முக்கியமான தருணம். ஆம்..! என் அருமை தம்பிக்கு இன்று தான் திருமணம். அவனை நான் மாப்பிள்ளை கோலத்தில் காணும் தினம்!

அவனின் மகிழ்சியான முகத்தை நான் தூரத்திலிருந்து பார்க்கும் பொழுது, என்னுள் ஒரு தந்தை உருவம் எடுக்கிறார்.

அவனிடம் நான் மறக்காத – மறக்க இயலாத நிகழ்வுகள் என் கண்முன்னே விரிகின்றது. அதிலிருந்து சிலவற்றைத்தான் சொல்வடிவமாய் நீங்கள் இதுவரை படித்தது.

மணப்பிள்ளையாக அவனை பார்க்கும் பொழுது, அந்த பட்டு வேட்டியும் சட்டையும், அகம் மகிழும் குறுநகையும், பெண்ணை ஈஷிக்கொண்டும் பேசிக்கொண்டும் அவன் செய்யும் சில சில சேட்டைகள் என்று அவனை – என் அருமை தம்பியை – தோழனை – சகோதரனை இன்று நான் அப்பாவின் கண்ணோட்டத்தில் காண்கின்றேன். அவனே என் பிள்ளையாய்…!

மேல தாளங்கள் முழங்க, ஏதேதோ சப்தங்கள் எழ, கூக்குரல்கள் என்று அழுத்தமாய் அவன் அவளிடம் தன் உரிமையை நிலைநாட்டினான். அப்பாவின் முகத்தில் தோன்றும் பெருமையும், அன்னையின் முகத்தில் தோன்றும் தாய்மையையும் வரையறுக்க வார்த்தைகள் போதாது. இன்று எங்கள் குடும்பத்திற்குள் இன்னொரு உறவு தன்னை இணைத்துக்கொண்டது.

பெரியவர்களின் ஆசிகள் அவர்களுக்கு கிட்டயபின் அவனும் அவளும் என்னையும் என் மனைவியையும் நோக்கி நடக்கலாயினர்.

மிக மிக அருகில் வந்து அவள் சொன்ன அந்த ஒரு வார்த்தை என் வாழ்கையின் அர்த்தத்தையும் மகத்துவத்தையும் எனக்கு சொல்லாமல் உணர்த்தியது…!

“அண்ணா….. அண்ணி…. எங்கள ஆசிர்வதியுங்க……!”

அன்னையால் எனக்கு கிட்டும் என்று எதிர்பார்த்த ஒரு உறவு, இன்று எதிர்பாரமால் என் தமையனால் எனக்கு கிட்டியது…!

இனியும் விவரிக்க வேண்டுமா என் மனநிலையை…?

அகம் மகிழ என் வாழ்த்துக்களை அவர்களுக்கு நான் வழங்கினேன்… என்னுடன் சேர்ந்து நீங்களும் அந்த இளம்ஜோடிகளை வாழ்த்தி அருள்வீர்…!

Print Friendly, PDF & Email

2 thoughts on “எதிர்பா(ராத)ர்த்த உறவு

    1. மிக்க நன்றி விஷ்ணுப்ரியா 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *