எதிர்பாராதது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 14, 2023
பார்வையிட்டோர்: 602 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

யாருமே எதிர்பார்க்கவில்லை! எப்போதும் சிரிப்பும் கலகலப்பும் விளையாட்டுமாய் இருக்கும் அந்த ஐந்தாம் நெம்பர் வீடு இப்படி மயான அமைதியில் அழுந்திக் கிடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. திறந்து கிடந்த வீட்டு வாசலின் முன்னால் சாய்வு நாற்காலியில் சாய்ந்து வீதியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்தக் குடும்பத்தின் தலைவன் குமரேசன்…!

உள்ளே அறையில் கிடந்த கட்டிலில் வெட்டிப் போட்ட வாழைமரம் போல் நிலை குலைந்து கிடக்கும் அவ்வீட்டுத் தலைவி பவானி…!

இங்கும் அங்குமாய் ஓடிக் களைத்துப் போய் வராந்தாவில் சுருண்டு படுத்து, வருவோர் போவோரைப் பார்த்து ஏதோ ஒரு வருத்தத்தில் கிடக்கும் அந்த வீட்டுச் செல்லப் பிராணி டைகர்!

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு என்றும் மறையாத சிரிப்போடும் விலை மதிக்க முடியாத ஏகாந்தப் பார்வையோடும் நான்கு சட்டங்களுக்குள்ளும் ஒரு கண்ணாடிக்குள்ளும் அடைக்கலமாகி மாலையோடு ஒரு சின்ன மேசையில் சாத்திவைக்கப்பட்டு ஒரு சின்னஞ்சிறு காமாட்சி விளக்கின் ஒளியில் காட்சியளித்துக் கொண்டிருக்கும் அந்த வீட்டின் ஒரே வாரிசு… தலைப் புதல்வன்! பேர் சொல்ல வந்த பிரியமான பிள்ளை சதீஷ்…!

மூன்று நாட்களுக்கு முன்னால் இதே வராந்தாவில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு அம்மா செய்த சிற்றுண்டியை ஆசை ஆசையாய்ச் சுவைத்துச் சாப்பிட்டு, அம்மாவிடம் வம்புக் கதை பேசி வாயாடிக் கொண்டிருந்த பதினாறு வயதுப் பையன் சதீஷ்தான் இன்றைக்கு இப்படிப் படத்துக்குள் புகுந்து கொண்டு அந்த வீட்டில் மீளாத் துயரத்தைக் கொடுத்தவன்.

குமரேசன் பவானியின் அன்பு வாழ்க்கையின் அடையாளச் சின்னமாய் அந்த வீட்டில் வந்து பிறந்தவன். மிகவும் அன்னியோன்னியமான தம்பதிகள், அன்பான தம்பதிகள்; அறிவார்ந்த தம்பதிகள் என்று அந்த வட்டாரத்திலும் நண்பர்கள் உறவினர்கள் மத்தியிலும் பேரெடுத்த தம்பதிகளின் கனவுக் கோட்டையாய், எதிர் கால லட்சியமாய் இருந்த ஒரே பிள்ளை சதீஷ்…!

அளவோடு பெற்று, வளமோடு வாழவேண்டும் என்ற கொள்கையை ஆணித்தரமாய்க் கடைப்பிடித்து, அவனுக்குப் பிறகு அடுத்த பிள்ளையைப் பெற்றுக் கொள்ளாது அவர்களின் அனைத்து அன்பையும் அவனுக்காகவே அள்ளி அள்ளி வழங்கி… ஆசை ஆசையாய் வளர்க்கப்பட்ட ஆண்பிள்ளை தான் இந்த சதீஷ்…!

பாட்டில் வல்லவன், விளையாட்டில் வல்லவன், பேச்சில் நல்லவன்… பெரியவரிடத்தில் பழகுவதில் நல்லவன் என்றெல்லாம் அக்கம் பக்கம் பாராட்ட வலம் வந்த அந்தப் பால் மணம் மாறாத பையன் சதீஷ்… !

இதோ கொந்தளிக்கும் கடலாய் தாயும்… குமுறும் எரிமலையாய் தந்தையும் நிலை குலைந்து கிடக்க அவன் மட்டும் நிம்மதியாய்…

வீட்டு வாசலில் கார்கள் வந்து நிற்கும் ஓசை கேட்டுக் குமரேசன் எழுந்தார். கால்கள் மரத்துப் போய் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் தடுமாறி… மெல்ல நடந்துபோய் வாசல் கதவைத் திறந்து காரில் வந்தவர்கள் உள்ளே வர வழி விட்டு, அவர்கள் பேசுவதற்கு வாய் திறக்கும் முன்பே துயரம் தாளாது அழுகை வெடித்துச் சிதற… கையில் இருந்த துண்டினால் அந்த அழுகையை மறைக்க முயன்ற போது உறவுக்கார அம்மா ஒருத்தி அவரை ஆறுதலாய் அணைத்து அழைத்துப் போய் உள்ளே உட்கார வைத்து…

“இப்ப மாய்ஞ்சு மாய்ஞ்சு அழுது என்னடா பண்ணப் போறே… உன் வாயால அவனுக்கு விதி முடியனும்னு இருக்கிறப்ப… நாம என்னடா பண்ண முடியும்? நஷ்டத்தில விட்டுப்புட்டு இப்ப போயி லாப நஷ்டம் பார்க்கவா போறோம்… நடந்தது நடந்து போச்சு. ஆண்டாண்டு அழுது புரண்டாலும் போனவன் திரும்பவாப் போறான்…?

புத்திசாலிப் பிள்ளைன்னு வாய் நெறையப் பேசினோமேடா… இதிலதான் அவன் புத்திசாலிதனத்தைக் காட்டணுமா?”

ஆறுதல் சொல்வதாய் நினைத்துக் கொண்டு அவன் அடிவயிற்றில் நீறு பூத்துக் கிடந்த நெருப்பைக் கிண்டிக் கிளறி விட்டு விட்டாள் அவள்.

குமரேசன் தரையில் உட்கார்ந்து சுவரில் சாய்ந்து கொண்டான். நெஞ்சுக் குழியில் துயரம் பந்தாய் உருண்டு வந்து அடைப்பது போலிருந்தது. யாரோ கையினால் நீவிவிடுவது போன்ற உணர்வு ! முகத்தில் அந்தச் சுகந்த மணம் பரவும் நெடி… அவன் மெய் சிலிர்த்துப் போனான். தன்னை மறந்து வாய் திறந்து,

“சதீஷ்… சதீஷ்” என்று அரற்றினான். அப்படியே சாய்ந்தான். பக்கத்தில் இருந்தவர் தாங்கிக் கொண்டார். உள்ளேயிருந்து பவானி ஓடிவந்தாள். தண்ணீர் கொடுத்தார்கள். புடவைத் தலைப்பால் அவன் முகத்தைத் துடைத்து விட்டாள். அவன் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு அழுதான்.

“என் பிள்ளையை நான்தான் கொன்னுட்டேன்னு சொன்னியே பவானி… என் பிள்ளை சாகலேடி; சாகலே…! இப்ப என்கிட்டே வந்தான்… என் நெஞ்சிலே கைவெச்சி…. என்னைத் தடவிக் கொடுத்தான் பவானி… என் பிள்ளை சாகலே பவானி…!” அழுகிறான்… குழந்தைபோல் அழுகிறான். உறவினர்கள் கூட்டமும் அவனோடு சேர்ந்து அழுதது.

“அவன்தான் அழுது அழுது செத்துடுவான் போல இருக்கே! நீங்களும் சேர்ந்து அவனை ஏன் தொந்தரவு பண்றீங்க…? வயசுப் பிள்ளைய வாரிக் கொடுத்துட்டு தாயும் தகப்பனும் தவிச்சுக் கெடக்குதுங்க. அதுங்களுக்கு ஆறுதல் சொல்லாம அவஸ்தைப் படுத்துறீங்களே…! கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா?”

பெரியவர் ஒருவர் சத்தம் போட்டார். பவானியை அழைத்தார். ‘உன் புருஷனுக்குச் சாப்பிட ஏதாச்சும் குடும்மா! துயரத்தைத் தொண்டைக் குழியிலேயே வெச்சிக்கிட்டு இருக்கான். ஏடாகூடமா எதுவும் ஆயிடப் போவுது? போ.. போயி புருஷனைப் பாரு…

பவானி கணவனை உள்ளே அழைத்துப் போனாள். அதற்குள் உறவுப் பெண்கள் அடுப்பு மூட்டி எதையோ சமைத்து எடுத்து வந்தார்கள். பவானி கணவனுக்குக் குடிக்கக் கஞ்சி கொடுத்தாள். மறுத்து மறுத்து மனைவியின் கண்ணீரைப் பார்த்து அப்புறந்தான் அதையும் குடித்தான் அவன்.

குமரேசனுக்கு மனைவியின் முகத்தைப் பார்க்கவே பயமாக இருந்தது. இந்த இழப்பினால் தன்னை விட அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது அவள் தான் என்பது அவனறிந்த உண்மை! அவர்களின் அந்தச் செல்வ மகன் அவனுக்கு மகனாக மட்டுமே இருந்தான். ஆனால் அவளுக்கோ அவன் ஆசானாக, சகோதரனாக, நண்பனாக, மகனாக என்று பல அவதாரங்கள் அல்லவா எடுத்திருந்தான்.

பாலர் பள்ளியில் படிக்கும்போதே அவனது அறிவாற்றல் கண்டு வியந்து அவன் தொடக்கப்பள்ளியில் புகுந்ததுமே அவள் கணவனிடம் சொல்லி கணினி வாங்கித் தந்தாள். அவன் பள்ளியில் கற்று வந்த கணினி பாடத்தை வீட்டுக்கு வந்ததும் அம்மாவுக்கும் அதை அப்படியே செய்து காட்டுவான்.

அவளோடு வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வான். சமையலில் உதவி செய்வான். ஷாப்பிங் செய்யத் துணையிருப்பான். கவலையாய் உட்கார்ந்திருந்தால் தன் கையால் அவள் கன்னங்களை வருடி விளையாட்டுக் காட்டிக் கவலையைப் போக்குவான். அவர்கள் இருவரும் சேர்ந்து விட்டால் குமரேசன் தனியாகி விடுவான்.

அந்தப் பிள்ளையை, அந்த நண்பனை அவள் இழக்கத் தான் காரணமாகி விட்டோமே என்ற குற்ற உணர்வு அவனைக் கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது. கஞ்சியைக் கொடுத்து விட்டு ஒரு மூலையில் போய் சுவற்றோடு சுவராக அவள் ஒட்டிக் கொண்டு உட்கார்ந்து விட்டாள். கோரப்புயலில் சிக்கிய ரோஜாச் செடிபோல் இருந்தது அவளின் தோற்றம்

சதீஷ் மிகவும் புத்திசாலியாய் இருந்தான் என்பதால் அவனுக்கு அவள் அதிக உரிமையும் செல்வமும் கொடுத்து வந்தாள். தாயிடம் மிகுந்திருந்த சதீஷ் தந்தையிடம் சற்று விலகியே இருந்தான்.குமரேசனின் நண்பர்கள் சொல்கிறார்கள் என்பதால் பிள்ளையிடம் அதிகக் கண்டிப்பைக் காட்டி வந்தான் குமரேசன். அப்பா என்றால் அவனுக்கு அச்ச உணர்வுதான் வரும். பல சமயங்களில் இடுப்பு இடுப்பு பெல்டைக் கூட அவன் மீது பிரயோகித்திருக்கிறார் குமரேசன். “ஒரே பிள்ளை என்ற காரணத்தினால் அதிக செல்லம் கொடுத்துக் கெடுத்து விடாதே பவானி, உன்னுடைய செல்லமே அவனைக் கெடுத்து விடும் என்று உறவினர்கள் சொல்லும் போது குமரேசன் மனைவியிடம் எச்சரிக்கை செய்வான்.

சதீஷிடம் எவ்வளவு நல்ல பண்புகள் இருந்தனவோ அந்த அளவுக்குக் குறும்புத்தனமும் அதிகமாய் இருந்தது. எதையாவது ஏடாகூடமாய்ச் செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்து விடுவான். கடைசியில் அவஸ்தைப் படுவது அம்மா, அப்பாவாகத்தான் இருக்கும்.

கணினியில் திறமை பெற்றிருந்ததால் இணையம் வழி விளையாடும் பழக்கமும் அவனிடம் அதிகமாய் இருந்தது. அதிகமாய் இணையப் பக்கங்களில் விளையாடி அவர்களுக்கு “கரண்டு பில்லை” ஏற்றி விடுவான். அம்மா அவனை அழைத்து இதமாகக் கேட்பாள். ‘நீ செய்வது தவறாச்சே, இனிமேல் செய்யக்கூடாது” என்பாள். தலையாட்டிக் கொள்வான். ஆனால் குமரேசனோ இடுப்பு பெல்டைக் கழற்றிப் பதம் பார்த்து விடுவார். அதன்பின் அப்பாவும் அம்மாவும் இரண்டு நாட்கள் பேசிக் கொள்ளமாட்டார்கள். பிள்ளைதான் சமாதானத் தூது போய் அவர்களைப் பேச வைப்பான்.

சதீஷின் பள்ளி இறுதித் தேர்வு வந்தது. நன்றாகப் படி…படி என்று பெற்றோர்களும் ஊக்கம் கொடுக்க நல்லபடியாகப் படித்து வந்தான் சதீஷ். இந்த முறை நல்ல தேர்ச்சி பெற வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருந்தது. வீட்டில் வேறு அப்பா அவனிடம் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்திருந்தார். முதல் நிலையில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டளை அவனைப் பூதம் போல் மிரட்டிக் கொண்டிருந்தது. உண்மையிலேயே அவன் முயற்சி எடுத்துப் படித்தான்.

தேர்வு முடிவை நேரடியாகப் போய் பள்ளியில் பார்க்கும் முன்பாக வீட்டில் இருந்தவாறே இணையம் வழி மூலமாக அதனைத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டுக் கணினியின் முன் போய் அமர்ந்தான் சதீஷ். தன் முழுவிபரங்களைப் போட்டுத் தேடிப் பிடித்துத் தேர்வு முடிவை எடுத்தபோது அங்கே அவனுக்கு ஒரு சில பாடங்களில் பெற்றிருந்த மதிப்பெண்கள் பெரிய அதிர்ச்சியைத் தந்தன. அதிர்ந்து போனான். அம்மாவின் கவலை தோய்ந்த முகமும் அப்பாவின் கோபாவேசமான தோற்றமும் கண்களில் வந்து நின்றன.

ஒரு சில மணித்துளிகள் அப்படியே உட்கார்ந்திருந்தான். சட்டென்று கணினியை இயக்கினான். மூளை வெகுவாக வேலை செய்தது. சில மணித்துளிகளில் அவன் கையில் அவனது முதல் நிலைத் தேர்வைக் காட்டும் மதிப்பீட்டுச் சான்றிதழ் அவன் பள்ளிச் சான்றிதழ் அவன் கையில் தவழ்ந்தது. அதனைத் தன்பாட நோட்டுக்குள் வைத்தான். மற்ற வேலைகளில் ஈடுபட்டான். மாலையில் அப்பா வந்ததும் அதை அப்பாவிடம் கொடுத்தான்.

அப்பா அதை வாங்கிப் பார்த்தார். அகம் குளிர, முகம் மலர மகனைப் பாராட்டினார். மனைவியை அழைத்து “ரெண்டு பேரும் ரெடியா இருங்க… குளிச்சிட்டு வர்றேன். இன்னிக்கு உங்களுக்கு ஸ்பெஷல் டின்னர் இருக்கு” என்று உற்சாகமாய்க் குளிக்கப் போனார். அம்மா சதீஷின் தேர்வு மதிப்பீட்டுத் தாளை பல முறை பார்த்துப் பூரித்துப் போனாள். பையனைத் தன்னுடன் அணைத்து அன்பு முத்தங்களைச் சொரிந்தாள். அப்பா வந்ததும் மூவரும் பிரபல ரெஸ்டாரெண்ட் போனார்கள். மகிழ்ச்சியாய்ச் சாப்பிட்டார்கள்.

“நான் உன்னைப் பத்தி எப்பவும் தப்பாவே நெனைச்சிடறேன் சதீஷ்… இவ்வளவு சிறப்பான மார்க் எடுப்பேன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல… என்னுடைய நண்பர்களெல்லாம் உன்னைப் பத்தி என்கிட்டே கவனமா இருக்கச் சொல்லுவாங்க… இப்ப அவுங்களைப் பார்த்தால்… நான் நல்லாவே அவர்களைக் கேட்பேன்; இப்ப என்ன சொல்றீங்க என் பிள்ளையைப் பத்தின்னு நல்லாவே கேட்பேன்…!”

என்று மகனைப் பார்த்துப் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார்.மூவரும் வீடு திரும்பினார்கள். சதீஷ் எப்போதும் போல் தன் அறைக்குப் போய் புகுந்து கொண்டு சில நிமிடங்கள் கணினியில் பல்வேறு தளங்களுக்கும் சென்று கொண்டிருந்தான். பின்பு விளக்கை அணைத்து விட்டு உறங்கிவிட்டான்.

மறுநாள் பொழுது விடிந்தது. அம்மா காலைப் பணிகளில் ஈடுபட்டிருந்தாள். அப்பா அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. வழக்கத்திற்கு மாறாக சதீஷ் தூங்கிக் கொண்டிருப்பது வியப்பாய் இருந்ததால் அப்பாவே அவனை எழுப்புவதற்காக அவனது அறைக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனார்.

நுழைந்தவரின் கண்கள் படுக்கையில் பையனைத் தேடின . சற்று தள்ளி நடந்தவரின் நெற்றியில் கால்கள் இரண்டு இடிக்க தலைநிமிர்ந்து பார்த்தவர் வாய்திறந்து அலறினார். சமையலறையில் இருந்த பவானி பதறிக் கொண்டு ஓடி வந்தாள். மின்விசிறியில் தூக்குப் போட்டுக் கொண்டு தொங்கும் மகனின் கால்களைக் கட்டிக் கொண்டு குமரேசன் கதறிக் கொண்டிருந்தார். இருவருமாய் அவனைக் கீழே இறக்கிப் படுக்கையில் போட்டு மூச்சு இருக்கிறதா என்று பார்த்தார்கள். வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டினார்கள். அவர்கள் கதறிய கதறலில் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் வந்து குவிந்து விட்டார்கள். அவர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. மனம் உருகப் பேசிக் கொண்டார்கள்.

‘என்ன கொடுமை இது! இந்தப் பையன் ஏன் இப்படி நடந்து கொண்டான்’. ஒவ்வொருவரும் ஒருவர் முகம் பார்த்து ஒருவர் இப்படிக் கேட்டுக் கொண்டிருக்கையில் மகனை மடியில் போட்டு அழுது கொண்டிருந்த பவானியின் கையில் அவன் சட்டைப் பாக்கெட்டில் இருந்து ஒரு கடிதம் கிடைத்தது. கண்ணீருடன் கணவனிடம் கொடுக்கிறாள். எல்லோரது கவனமும் அக்கடிதத்தில் இருக்க அவன் அதைப் படிக்கிறான்.

‘அப்பா! என்னை மன்னித்து விடுங்கள். நான் இந்த முடிவுக்கு வர நீங்கள் தான் காரணம். எனக்கு உங்களைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. எனது தேர்வு மதிப்பீட்டுத்தாள் தங்களிடம் இருக்கிறது. நிச்சயமாக இன்றைக்குப் பள்ளி ஆசிரியரிடமிருந்து உங்களுக்கு அழைப்பு வரும், நீங்கள் பள்ளிக்குப் போவீர்கள். அங்கே உங்களுக்கு மகிழ்ச்சிக்குப் பதிலாக ஏமாற்றம்தான் காத்திருக்கும். காரணம்! உங்கள் கையில் இருப்பது உண்மையானது அல்ல… உங்களது மிரட்டல் அடி உதைக்குப் பயந்து நானாகக் கணினியில் இணையத்தளத்தின் வழியாகத் தயாரித்தது.

நான் என்னுடைய தேர்ச்சியை இணையம் வழி பார்த்து விட்டேன். நான் நல்லபடியாக அதைச் செய்யவில்லை… அப்பா! நீங்களே நினைத்துப் பாருங்கள். நான் ஆரம்பப் பள்ளியில் நன்றாகத்தான் படித்து வந்தேன்… அப்போது கூட நீங்கள் என்னைப் பாராட்டியது கிடையாது. இடைநிலைப் பள்ளியில் நுழைந்த பின் என்னிடம் கண்டிப்புக் காட்டுவதாக நினைத்துக் கொண்டு மிரட்டி மிரட்டியே என்னைக் கோழையாக்கி விட்டீர்கள்.

என்னைப் பொறுத்த வரை என் படிப்பு எனக்கு வெறுப்பைத் தர ஆரம்பித்து விட்டது. ‘என்ன படித்து என்ன செய்யப் போகிறாய்!” என்று என் மனமே என்னைக் கேலி செய்கிறது. உங்களைப் பொறுத்தவரை நான் எல்லாவகையிலும் முதன்மையாக இருந்து உங்களுக்குப் பேர் வாங்கித் தர வேண்டும். ஆனால் என்னை முதல் நிலைக்குக் கொண்டு வர என்னதான் செய்தீர்கள் எனக்கு? என் வெற்றியைக் கண்டு பரிசும், பாராட்டும் கொடுப்பீர்களே அப்பா…! அதையே என் தோல்வியிலும் செய்திருக்கலாமே… நான் தோல்வி கண்டு சோர்ந்து போய் நிற்கும் போது எனக்குத் தோழனாய் குருவாய் நின்று தட்டிக் கொடுத்து ஆறுதல் சொல்லி அடுத்த வெற்றிக்கு நீங்கள் கொடுத்திருந்தால் எனக்கு உற்சாகம் பிறந்து நானும் வெற்றி பெற்றிருப்பேன்! எனக்கு என் அப்பா இருக்கிறார் என்ற தைரியம் இருந்திருக்குமே!

சின்ன சின்னத் தவறுகளுக்கெல்லாம் என்னைத் தண்டித்தே என்னைக் கோழையாக்கி விட்ட உங்கள் முன்னால் இந்தத் தோல்வியுடன் நிற்க முடியவில்லையப்பா! என் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத உங்களால் என் தவறையும் தாங்கிக் கொள்ள முடியாது என்பதும் எனக்குத் தெரியும்… கோழையாய்த் தினம் தினம் செத்துக் கொண்டு நிம்மதி இல்லாமல் இருப்பதை விட எனக்கான நிம்மதியை நானே தேடிக் கொள்கிறேன். அம்மாவைப் பார்த்துக் கொள்ளுங்கள். என்னை மன்னித்து விடுங்கள்’-

குமரேசன் குமுறிக் குமுறி அழுதான். சுற்றி நின்றவர்கள் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். பெரியவர்களில் ஒருவர் சொன்னார்.

“கண் கெட்ட பின்னால சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன பிரயோசனம்! பிள்ளைகளைப் பிள்ளைகளா நெனைச்சி வளர்க்கணும்… சதாகாலமும் சர்க்கஸ்காரனாட்டம் கையில சாட்டையோட நின்னா இதைத்தான் அனுபவிக்கணும்… நாம என்ன சர்க்கஸ் வித்தையா காட்டறோம். நம்ம பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டியா இருந்து அவுங்க வளர்ந்து வர்ரதுக்கு எல்லாவகையிலும் உதவியா இருக்கத்தான் கடவுள் நமக்கு இந்த வாய்ப்பை வரமாக் கொடுத்திருக்கான்.

அந்த வரத்தை ஒழுங்கா வெச்சுக் காப்பாத்திக் கரை சேர்க்கத் தெரியாம ஆண்டிப் பண்டாரம் தோண்டியை உடைச்ச மாதிரி எல்லாத்தையும் தொலைச்சிட்டு நிக்கறீங்களேப்பா… பிள்ளைங்க நமக்கு கடவுளால கொடுக்கப்படற வரம்! அது நானோ நீங்களோ நெனச்சா வந்துடாது… அவனாப் பார்த்து போடற பிச்சை… அதைப் புரிஞ்சிக்காம நம்ம வெச்சதே சட்டமுன்னு நடந்துக் கிட்டா இந்த மாதிரி தண்டனைகளையும் அனுபவிச்சுத்தான் ஆகணும்…!”

எல்லோருடைய அனுதாபத்தையும் சுமந்து கொண்டு அவன் போய் விட்டான். சுற்றி நின்றவர்கள் சுற்றத்தார்களின் சொல்லடிகளைச் சுமந்து கொண்டு குமரேசன் இங்கே துவண்டு கிடக்கிறான். அவன் கண்ணுக்குள் மட்டும் ஒரு சோகம்! மனசுக்குள் மட்டும் ஒரு ஏக்கம்!

‘மகனே! நீ மீண்டும் வருவாயா… இந்த அப்பாவை மன்னித்து என்னோடு மறுபடியும் சேர்ந்திருக்க வருவாயா?’

உள்ளம் ஊமையாய் அழுகின்றது. உறவுகளின் ஆறுதல் அதை எங்கே மாற்றப் போகின்றது?.

– ஆர்க்கிட் மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு) , முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2002. சிங்கை தமிழ்ச்செல்வம் வெளியீடு, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *