எதிரும் புதிரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 22, 2013
பார்வையிட்டோர்: 10,463 
 
 

”என்னப்பா! விக்னேஷ், இத்தனை நாள் உன்னைக் காணவே காணோம். இப்போ எங்கே திடீர்னு எனக்கு எதிராவே வந்து உக்கார்ந்துட்டே?” என்று கேட்ட கணபதியை, ”இத்தனை நாள் நிம்மதியாய் உள்ளே தூங்கிட்டு இருந்த என்னை இங்கே இருக்கிறவங்க எல்லோருமா சேர்ந்து இனிமே நீ இங்கேதான் இருக்கணும்னு உட்கார்த்தி வச்சுட்டாங்க” என்று விக்னேஷ் சொன்னதும், ”அதெல்லாம் சரி! ஆனால் எனக்கு நேரா வந்து உட்கார்ந்து இருக்கியே அதுதான் சரியில்லே. ஏன்னா! நான்தான் இங்கே முதல்லே வந்து உட்கார்ந்தவன், இத்தனை நாளா எல்லோரும் என்னைத்தானே நின்று பார்த்துவிட்டுப் போவார்கள். இப்போ எனக்குப் போட்டியா நீ வந்துட்டே! …ம்…”

பெருமூச்சு விட்ட கணபதியிடம், ”அதெல்லாம் இல்லை, எனக்குத்தான் முதலில் இங்கு உட்கார இடம் காட்டினார்கள். ஏனோ அப்போது என்னை உட்கார வைக்க நேரம் வரவில்லை. நீ முந்திக்கொண்டுவிட்டாய். என்ன செய்வது? ”என்று விக்னேஷ் சொல்ல,

”ஆனாலும் எனக்குத்தான் முதலிடம் நீயெல்லாம் அப்புறம்தான்”,

”இல்லை, இல்லை, நாந்தான் முதல்வன்”

என்று காரசாரமான சண்டை சூடுபிடித்தது.

அப்போது, ”நிறுத்துங்க, நிறுத்துங்க, நீங்க இரண்டு பேருமே எனக்கு அப்புறம்தான் வந்தீர்கள். இந்த அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டியதிலிருந்து நான் இங்கு இருக்கிறேன். அவர்களுக்குதான் எப்போதும் போட்டி, பொறாமை என்றால் நமக்குமா? நமக்குப் பெயர் இடத்துக்கு தகுந்தபடி மாறியிருந்தாலும் நாம் ஒன்றேதான். நம்மை நம்பினவர்களுக்கு நாம் நல்லது செய்வோம். எதிர், எதிராக இருந்தால் எந்த தப்பும் இல்லை. நாம் ஒற்றுமையாய் இருப்போம். எங்கே என்னோடு சேர்ந்து சிரியுங்கள் பார்ப்போம்” என்று கூறிய கணேஷுடன் சேர்ந்து மூன்று பேர்களும் சிரித்தனர்.

”அம்மா, அம்மா, என்னம்மா, தூக்கத்துலே சிரிக்கிறே?” என்ற என் மகள் அனிதாவின் குரல் கேட்டு எழுந்த நான், ”ஓ.. ஒன்றுமில்லை அனிதா, நேற்று நம் அபார்ட்மென்டில் புதிதாக பிள்ளையார் ஸ்தாபனம் செய்தபோது நம் வீட்டுக்கு வரும் பால்காரன் எதிர் வீட்டு பிள்ளையாருக்கு நேர் எதிரே இன்னொரு பிள்ளையார் வைப்பது ஆகாது என்று சொன்னான் இல்லையா; அதை நினைத்துக்கொண்டே தூங்கிவிட்டேனா! அது கனவாக வந்தது. ஆனாலும் நல்ல தீர்ப்பை பிள்ளையாரே தந்து விட்டார். எதிரும், புதிருமாக இருந்தவர்கள் ராசியாகி விட்டார்கள்” என்று சிரித்தேன்.

– ஜூலை 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *