இவ்வளவு தூரம் சிரமப்பட்டு. . வெளியே போய். . ரகசியமாய் வாங்கி . . இத்தனை படியேறி. . பம்பரம் போல் சுழல வேண்டியிருந்தது. இறக்கை கட்டிக் கொள்ளாத குறை. அதுவும் வாக்களித்தபடி இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வந்து விட்டனர், மச்சினி கல்யாணத்திற்கு.
பிருந்தாதான் கேலி செய்தாள்.
“என்னங்க. . எங்க வீட்டுக் கல்யாணமா.. இல்லே, உங்க வீட்டு கல்யாணமான்னே புரியலையே”
மனோகர் பேசாமல் சிரித்தான். சம்பந்தம்தான் உதவிக்கு வந்தார்.
“பாவம் மாப்பிள்ளை. . கொஞ்சம் கூட ரெஸ்டே இல்லாமே அலையறார். நெஜம்மாவே இந்த வீட்டுப் பிள்ளை மாதிரியே ஆயிட்டாரு. ” என்றார் நெகிழ்ச்சியாக.
பிருந்தா கனத்திருந்த தன் வயிற்றைப் பார்த்து பெருமூச்சு விட்டாள்.
“என்னாலதான் எதுவும் செய்ய முடியலே. ஒதுங்கி உட்கார வேண்டியதாப் போச்சு”.
“நீ பேசாம இரு. உன்னை யார் வேலை செய்யலேன்ன குறை சொன்னாங்க. பாவம் இவரையே வேலை வாங்கறமேன்னுநான் ரொம்ப வருத்தப்பட்டுக்கிட்டிருக்கேன்.”
“எனக்கு ஒரு சிரமமும் இல்லே” என்றான் மனோகர்.
ஆனால் உள்ளூர மனசு பொருமியது. ஒரே ஓரு சிகரெட்… மனசு அந்தப் புகைக்கு ஏங்கியது.
பிருந்தா முதன்முதலில் இவன் கையில் சிகரெட்டைப் பார்த்ததும் அதிர்ந்து விட்டாள்.
“என்னாங்க. . நீங்க சிகரெட் பிடிப்பீங்களா?”
“வேணாங்க. . ப்ளீஸ். எங்க வீட்டுல யாருக்குமே இந்தப் பழக்கம் கிடையாது. உங்களுக்கு இந்தப் பழக்கம் இருக்குன்னு தெரிஞ்சா எங்கப்பா அரண்டு போயிருவார்” என்றாள் படபடப்புடன்.
புது மனைவி. எடுத்தவுடன் முகத்தில் அறைகிற மாதிரி பதில் வரவில்லை.
“இங்கே பாரு.. இதுல என்ன தப்பு? நான் என்ன செயின் ஸ்மோக்கரா. . எப்பவோ ஒரு தடவை ஒரு ரெப்ரெஷ்மெண்ட் மாதிரி. என்னவோ பழகிப் போச்சு. . விட முடியலே. இப்ப ரொம்ப குறைச்சுட்டேன் தெரியுமா. . காலையில ஒரு தரம். . நைட்ல ஒரு தரம். . அவ்வளவுதான்”
“ஐயோ ஒரு நாளைக்கு ரெண்டா”
“ஸ் ஸ் பேசாம இரு . சத்தம் போடாதே”
அன்று ஏதோ சமாதானம் சொல்லி அவளை வாயடைத்து விட்டான். ஆனாலும் அடிக்கடி கெஞ்சிக்கொண்டிருப்பாள். ‘நிறுத்திடுங்க. . பிளீஸ். .’
இன்று இத்தனை அலைச்சல்களுக்கு நடுவில் ஒரே ஒரு சிகரெட்டிற்காக மூன்று நாட்களாகத் தவித்தது. இத்தனைக்கும் மார்க்கெட். . பழக்கடை. . மளிகை என்று மாறி மாறி அலைகிறான். கூடவே யாராவது ஒருத்தர். . பிருந்தாவின் தம்பி. . அவள் மாமா என்று மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள பேசாமல் இருக்க வேண்டியதாயிற்று. தனியாய்ப் போக சந்தர்ப்பமும் வரவில்லை.
“என்ன மாப்பிள்ளை டல்லா இருக்கீங்க. . முடியலையா?”
“ஹி ஹி. . அதெல்லாம் இல்லை”
“இன்னொரு டோஸ் ஸ்ட்ராங்கா காபி வேணுமா. . ஃப்ரெஷ்ஷா ஆயிரும் அப்படியே. .” என்று சிரித்தார் வந்தவர். காபி பிரியர்!
“கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க. மறுபடி ஈவினிங் மாப்பிள்ளை அழைப்புக்கு ஏற்பாடு பண்ணணுமே”
விலகி வேறெங்காவது போனால் போதும் என்றிருந்தது. மாடிக்குப் போனான். கதவைத் திறந்தால் ஜில்லென்ற காற்று. தானிருப்பது தெரிய வேண்டாம் என்ற நினைப்புடன் கதவை மூடினான். வெளிச்சுவற்றில் கை வைத்து நின்றான்.
முகத்தில் காற்று அறைந்தது. இரண்டு நாட்கள் தாக்குப் பிடித்ததே அதிகம். இந்த நிமிஷம் அந்தப் புகை வேண்டும். யார் என்ன நினைத்தால் என்ன. முடிவு செய்து விட்டான். கிளம்பி வெளியே போய் ஆசை தீர இழுத்து விட்டு வரவேண்டும்.
வேகமாய்த் திரும்பியதில் ஏறக்குறைய அவள் மீது மோதியிருப்பான். நல்லவேளை.
“என்ன” என்றான் அதட்டலாக.
படியேறி வந்ததில் பிருந்தாவுக்கு மூச்சிறைத்தது. நெற்றியில் பொடிப்பொடியாய் வியர்வை பூத்திருந்தது.
“உங்களைப் பார்க்கத்தான்”
எரிச்சலாக ஏதோ சொல்லத் தோன்றியது. வேண்டாம். ரொம்ப சென்சிடிவ். கல்யாணத்திற்கு வந்த இடத்தில். . அழுது கொண்டிருந்தால். . அவ்வளவு நன்றாக இராது.. அதிலும் பிள்ளைத்தாய்ச்சி.
“சொல்லு”
“இந்தாங்க. . உங்களால எப்படியும் சும்மா இருக்க முடியாது. தவிச்சுப் போயிருவீங்கன்னு தெரியும். அதனால நானே போய் வாங்கி வந்திட்டேன். . மறைச்சி கொண்டு வரதுக்குள்ள.. அப்பப்பா. . என்ன கஷ்டம்.”
சிரித்தாள். எதிரே பிரித்திருந்த உள்ளங்கையில் பாதி நைந்து ஒரு சிகரெட் !
“ரெண்டு வாங்கினேன். ஒண்ணு ஒளிச்சு வச்சிட்டேன். அப்புறம் தரேன்” என்றாள் குழந்தை போல.
எதுவும் பேசாமல் அவள் முகத்தைப் பார்த்தான்.
இவ்வளவு தூரம் சிரமப்பட்டு. . வெளியே போய். . ரகசியமாய் வாங்கி . . இத்தனை படியேறி. . நெஞ்சுப் புகைச்சல் தணிந்து இதமாய் ஏதோ ஒரு உணர்வு பரவியது.
வாங்கி கசக்கி மூலையில் வீசினான்.
எல்லாவற்றுக்கும் ஒரு நேரம். . அனுபவிக்க. . உதறித்தள்ள. .
“விட்டுட்டேன்” என்றான் சிரிப்புடன்.
(ராஜம் மாதர் மலர் – பிரசுரம்)
– ஆகஸ்ட் 2010