எண்ணப்பகிர்வு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 11, 2024
பார்வையிட்டோர்: 2,988 
 
 

“இடத்துக்கேற்ப, பழகுபவருக்கேற்ப தனது செயலை, பேச்சை மாற்றிக்கொள்பவர்களை பச்சோந்திகள் என்பர். பச்சோந்தியின் உடல் எதன் மீது படுகிறதோ அதன் நிறத்துக்கு தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மையுள்ளது. கிராமத்தில் வாழ்பவர்களுக்கு தங்களது தோட்டங்காட்டில் பச்சோந்தியைப்பார்த்து பழக்கமிருக்கும். சிறு வயதிலேயே படிப்பிற்க்காக நகரத்துக்கு வந்து வாழும் என்னைப்போன்றவர்களுக்கு அதிலும் அடுக்கு மாடிக்குடியிருப்புக்களில் வாழும், வேலை பார்க்கும் பிரஜைகளுக்கு கூகுளில் தான் உலகையே பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

இன்று நட்பிலிருந்து உறவு வரை சூழ்நிலை, சந்தர்ப்பங்களுக்கேற்ப குணத்தை மாற்றி, அக்கணத்தை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ளும் சாணக்யர்களாகவே பலரும் உள்ளனர். நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம் சாணக்யமென்றால் அனைவருக்கும் சம பலன் கூறும் அறிவுள்ள கருத்தென்று. நன்றாக ஆராய்ந்தால் மற்றவர்கள் எளிதாக ஒருவரை வசப்படுத்தி தன் காரியங்களை சாதித்துக்கொள்ளும் அறிவு மிக்க தந்திரமென்று புரியும். சாணக்யமில்லாத சமார்த்தியசாலி எப்போதாவது, ஒரு முறையாவது அன்பின் தேடுதலால் பிறரிடம் வசப்பட்டுவிடக்கூடும். ஆனால் சாணக்யர் பிறரை வசப்படுத்துவதிலேயே குறியாக இருப்பார். அன்பாலில்லாமல் தன்பால் ஈர்க்கும் நிலை தரும் அறிவால் செயல் படுபவர் எப்பொழுதும் மற்றவருக்கு வசப்பட மாட்டார்‌. இதில் வெளியாட்கள், வீட்டில் உள்ளவர்கள், நண்பர்கள், காதலர்கள் மற்றும் பெற்றோரும் இருப்பர்.

கம்பெனி முதலாளிகளின் சாணக்யம், பெற்றோரின் சாணக்யம், உறவுகளின் சாணக்யம், நட்புகளின் சாணக்யம் என பல வகை இருந்தாலும் ஒட்டு மொத்தமாக ஒருவரது வாழ்வையே முடக்கி, வாழ்நாள் முழுவதும் தங்களுக்கு சாதகமாக்கும் சாணக்கியர்கள் கார்பரேட் கம்பெனிகளின் முதலாளிகள் தான். 

இன்றைய நவீன உலகில் செல்போன், கம்ப்யூட்டர் இரண்டும், நம்முடன் இணைபிரியாமல் பயணிக்கும் ஜடப்பொருகள் எனக்கூறப்படுவதும், உலகையே கண்முன் காட்டுவதும், அதற்க்கு நம்மை அடிமையாக்கி வைத்திருப்பதும், கடவுள் போல தெரிவதும் என மனிதர்களை ஓரிடத்தில் வாழும் முறையை உருவாக்கி விட்டது.

‘வருங்காலத்தில் பிறக்கப்போகும் குழந்தைகள் ஓர் அறைக்குள் வாழ்வதும், அனைத்துமே நினைத்தபடி அங்கேயே கிடைத்து விடுவதுமெனும் நிலையை விஞ்ஞான வளர்ச்சி உண்டாக்கி விடக்கூடும்’ என சில ஞானிகள், தீர்க்கதரிசிகள் பல வருடங்களுக்கு முன் கூறியது இன்று நடைமுறைக்கு வந்து விட்டது.

இப்பொழுது விரும்புவது நினைத்தவுடன் கிடைக்கிறது. பெற்றோரைத்தவிர எல்லாமே ஒழுக்கக்கட்டுப்பாடுகளேதுமின்றி கிடைத்து விடுகிறது. காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி காலைக்கடன்களை முடித்து, குளித்து உடை மாற்றி போனில் என்ன வேண்டுமென மெஸேஜ் போட்ட அடுத்த நிமிடம் இட்லி, தோசை, காஃபி என கண் முன் ஆவி பறக்க கீழே கேன்டீனிலிருந்து வந்து விடுகிறது. உண்டு முடித்து கம்ப்யூட்டர் டேபிள் முன் அமர்ந்து வெளிநாட்டுக்காரரின் வேலைக்காரியாக, அடிமையாக வேலை பார்க்க ஆரம்பித்தால் மதியம் வந்ததும் பசி வயிற்றைக்கிள்ள மறுபடியும் ஒரு மெஸேஜ். மதிய உணவு வித, விதமாக அசைவம், சைவம் எது கேட்டாலும் வந்து விடுகிறது. இரவை பூமி வரவேற்கும் நேரம் கழுத்து வலி, தலை வலி, இடுப்பு வலி கேட்காமலேயே வந்து நம்மை வேலை செய்வதைத்தடுக்க, உடனே அருகிலுள்ள குரோசின் மாத்திரையை எடுத்து விழுங்க வேலை தொடர்கிறது. பசிக்கும் போது மட்டும் தான் நேரம் பார்க்க நேரம் கிடைக்கிறது. இரவு பசிக்கும் போது எப்பொழுதுமே பத்துமணி ஆகி விடும். இரண்டு சப்பாத்தி ஆர்டர் போட்டு அவசரமாக விழுங்கி விட்டு அப்படியே பெட்டில் விழுவேண்டியிருக்கும். காலையில் ஏழு மணிக்கு அலாரம் அடித்து எழ முயலும் போது தான் நேற்றைய உடல் வலியை தெரிந்து கொள்ளும் வாய்ப்பை குரேசின் எனும் வலி நிவாரணி விட்டுக் கொடுத்திருக்கும்.

இஷ்டப்பட்டு எழாமல், கஷ்டப்பட்டு எழுந்த பின்பு மறுபடியும் நேற்றைய நிலையின் தொடர்ச்சி. இப்படியே மாத இறுதியில் பேங்க் அக்கவுண்ட்டில் ஒரு லட்சம் பணம் பார்த்ததும் நிம்மதியடைய விடாமல் கோவையிலிருந்து பெங்களூருவில் வேலை பார்க்கும் எனக்கு அம்மாவிடமிருந்து போன் வரும்.

எடுத்தவுடன் ‘ஒடம்புக்கு எப்படியிருக்கு? நீ சந்தோசமா இருக்கியா? ஊருக்கு எப்ப வரப்போறே?’எனும் கேள்விகளை விட, ‘சம்பளம் வந்திருச்சா? ஊட்டு வாடகை பத்தாயிரம், மாச சீட்டு பத்தாயரம், உன்ற தம்பிக்கு காலேஜ்ல இருந்து டூர் போற செலவு பதனைஞ்சாயரம், முப்பதாயரம், ஆஸ்பத்திரி செலவு அஞ்சாயரம், ஸ்கூட்டர் கடன் தவணைக்கு ஏழாயரம் போக ஊட்டு செலவுக்கு மளிகைக்கடைக்கும் முப்பதாயரம் அனுப்பி வெச்சுப்போடு. என்ன நாஞ்சொல்லறது, வெச்சர்றேன். மறக்காம அனுப்பி வெச்சுப்போடு கண்ணு’ இது பெற்ற தாயின் தேவையின் வெளிப்பாடு.

எனது செலவு என கேட்டால் உணவு தவிர வேறெதுவும் இல்லை. ஒவ்வொரு மாதமும் கேன்டீன் பில் பத்தாயிரம், குடியிருக்கும் வீட்டு வாடகை பத்தாயிரம். விடுமுறை நாட்களில் வெளியில் சுற்றினால் செலவாகிவிடுமென முடிந்தவரை இரவும், பகலுமாக தூக்கத்தின் ஏக்கத்தை தீர்த்து வைத்து விட பெட்டிலேயே படுத்துக்கிடப்பது. இது தான் வெளிநாட்டுக்கம்பெனியில் வேலை பார்க்கும் என்னோட நிலை.

என் கூட பள்ளியில் படித்த சரண்யா பிளஸ்டூ முடித்ததும் அவளது மாமன் பையன் ரவியை மனசுக்கு பிடித்து திருமணம் செய்து தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விட்டாள். சென்ற மாதம் அவளது குடும்ப திருமணத்தில் பார்த்த போது கழுத்து நிறைஞ்சு நகைகளைப்போட்டுக்கொண்டு அழவில்லாத மகிழ்ச்சியோடு வாழ்கிறாள். ஆனால் நானோ படிப்பு, வேலை என குடும்பத்தின் மொத்த பாரத்தையும் சுமக்கிறேன். அப்பா ஆஸ்துமாவில் படுத்தவர் சென்றவருடம் எங்களை விட்டுச்சென்று விட்டார். அப்பாவியான படிக்காத தாயால் சம்பாதிக்க வழி ஏதுமில்லை. எனது படிப்புக்காகவும், தம்பியின் படிப்புக்காகவும், அப்பாவின் மருத்துவ செலவுக்காகவும் கிராமத்தில் இருந்த பூர்வீக நிலம் இரண்டு ஏக்கர் ஐந்து வருடங்களுக்கு முன் ஏக்கர் ஐந்து லட்சம் என விற்றோம். தற்போது எங்களிடம் வாங்கியவர் ஏக்கர் ஒரு கோடிக்கு விற்று விட்டதாக அம்மா சொன்ன போது மயக்கமே வந்து விட்டது. படித்தால் தான் வாழ முடியும் என பலரும் சொத்துக்களை விற்று படித்து வேலைக்கு சென்று, நகரத்தில் வாழ்ந்து, மூன்று அல்லது ஐந்து செண்ட் நிலத்தில் கோடிகளில் விற்கும் வீட்டை கடனில் வாங்கி, வாழ்நாள் முழுவதும் கடனாளியாகி, கடன் கட்ட வேண்டுமென இரவு, பகலாக உழைத்து நாற்பது வயதிலேயே நலிந்து போன உடலுக்கு சொந்தக்காரராகி விடுகின்றனர். 

அளவாக படித்து, இருக்கும் வீட்டில் கிராமத்தில் நிம்மதியாக வாழ்ந்த பல பேர் இன்று கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கு சொந்தக்காரராகி விட்டனர். முன்பெல்லாம் கிராமத்தில் படித்தவர்களை மதித்தனர். இன்று சொத்துக்களை வைத்தே மதிப்பிடுகின்றனர்.

தோழி சரண்யா ஆடம்பர காரில் வரும் போது அம்மாவும், நானும் ஸ்கூட்டியில் போய் இறங்கினோம். அவளது தம்பியின் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நகரத்திலுள்ள பெரிய மண்டபத்தில் நடந்தது. அவனும் பத்தாவது பெயிலானதும் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக திருமணப்பத்திரிக்கையில் போட்டிருந்தார்கள். பெரிய இடத்து சம்மந்தமாம். அவர்களுக்கும் பல கோடி மதிப்பில் கிராமத்தில் சொத்துக்கள் இருக்கிறதாம். ஐம்பது வகையில் விருந்தில் உணவு போட்டார்கள். மண்டபத்துக்கு வெளியே வந்து அம்மாவுக்கு கண்களில் கண்ணீர் நிற்காமல் ஓடியது.

‘நாம் படிக்கலீன்னு தானே உங்களையாவது படிக்க வெச்சுப்போடோனுமுன்னு டவுனுக்கு வந்து, வாடகை ஊடு புடிச்சு காட்ட வித்து படிக்க வெச்சோம். வித்த காடு இப்படி வெல போகும்னு கெனாவுலயும் நெனைக்கிலியே‌… கூட இருந்த மனுசனும் நோயில போயிட்டாரு. பத்து வருசத்துக்கப்பறம் கொழந்தை எதுக்கு? இருக்கற ஒரு கொழந்தைய காப்பாத்துனாப்போதுமுன்னு நாஞ்சொன்னதை உங்கொப்பங்கேட்டிருந்தா இப்ப நானும் உனக்கு இந்த மாதர ஆடம்பரமாவே கண்ணாலத்த பண்ணிப்பார்த்திருப்பேன். உனக்கு பத்து வருசங்கழிச்சு பொறந்த உன்ற தம்பிக்காரன வேற படிக்க வெக்கோணுங்காட்டி உன்ற சம்பளத்தையே கேக்கற மாதர ஆயிப்போச்சு. ஒன்னம் மூணு வருசம் அவம்படிச்சாத்தான் வேலை கெடைக்கும். விசேசத்துல பாத்த சொந்தக்காரங்க பொண்ணுக்கு இருபத்தெட்டாயிமு ஒன்னங்கண்ணாலம் பண்ணுலயா? ன்னு கேக்கற போது நெஞ்சே வெடிக்கிற மாதர இருந்துச்சு’ என ஒரு குழந்தையைப்போல் விசனப்பட்டு கண்ணீர் விட்ட அம்மாவை ஒரு தாயைப்போல தேற்றி பின் வீட்டிற்கு கூட்டிச்சென்றேன்.

அன்றிலிருந்து மனதை தற்போதைய நிலைக்கேற்ப மாற்றப்பழகிக்கொண்டேன். நடந்து முடிந்த கடந்த காலத்தவறுகளை எண்ணிக்கவலைப்படுவதை விட, மற்றவர்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு வேதனைப்படுவதை விட, தற்கால நிலையில் இருப்பதை வைத்து சிறப்பாக, மகிழ்ச்சியாக வாழும் வழியைத்தேர்ந்தெடுத்துக்கொண்டேன்.

இன்றைக்கு படித்து வேலைக்கு செல்லும் தொன்னூறு சதவீதம் பெண்கள் இருக்கும் நிலையில் பத்து சதவீத மக்களைப்பற்றி எண்ணி வாழ்வில் நிம்மதியை இழப்பது சரியல்ல. ஒரு பாதையைத்தேர்ந்தெடுத்து பயணிக்கத்தொடங்கி விட்டோம். அதுவும் பாதி தூரம் கடந்த பின்பு அடுத்த பாதையில் சென்றிருக்க வேண்டுமென நமக்கும் தோன்றும், பலரும் கூறுவர். ஆனால் ஒருவருக்கான பாதை நிர்ணயம் செய்த பின்னர் வேறு பாதையில் செல்ல இயலாது. சென்றாலும் பயணம் முழுமை பெறாது என அறிவால் மனதுக்கு கூறி வருந்துவதைக்கட்டுப்படுத்திக்கொண்டேன்.

இன்று படித்திருந்தால் ஏதாவதொரு வேலை உள்ளூரிலோ, வெளியூரிலோ, உள் நாட்டிலோ, வெளி நாட்டிலோ கிடைத்து விடுகிறது என்பதே பெரிய விசயம். அதில் வரும் வருமானத்தை உடனே செலவழிக்கும் வாய்ப்புகள் அதிகமிருப்பதால் சிக்கனத்தைக்கடைப்பிடித்து சேமிப்புப் பெருக்கிக்கொண்டால் ஓவர் டைம் உழைப்பதை நிறுத்தி உடலை நல்ல ஆரோக்யத்துடன் வைத்துக்கொள்ள முடியும்.

என்னோட திருமணத்துக்கான பண சேமிப்போ, நகை சேமிப்போ எதுவுமில்லை என்பதில் எனக்கேதும் கவலையில்லை. அம்மா மட்டும் தூக்கமில்லாமல், சரியாக சாப்பிடாமல் இருப்பதால் சீக்கிரமாக ஒரு வரனைப்பார்த்து திருமணத்தை முடிக்க வேண்டிய கட்டாய நிலை எனக்கு. அப்பாவின் மறைவே இன்னும் தாங்க முடியாமல், தூங்க முடியாமல் செய்யும் போது அம்மாவையும் இழந்து விடும் வாழ்வதென்பது நினைத்தே பார்க்க முடியவில்லை. சம படிப்பு, சம வேலையுள்ள வரனை தகவல் மையத்தில் தேடினால் வரனை விட வரனைப்பெத்தவங்க ‘அது இருக்கா? இது இருக்கா? என்ன போடுவீங்க? ‘ என கேட்கும் கேள்விகளால் திருமணமே வேண்டாமென தோன்றுகிறது.”

சரிகாவின் இவ்வளவு வேதனைகளையும், வாழ்வின் உண்மை நிலைகளையும் ஒரு விசேச நிகழ்வில் மண்டபத்தின் ஓரமான பகுதியில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த உறவுக்காரனும், பத்தாவது வகுப்பு வரை தன்னுடன் படித்தவனுமான சரண், 

“உன் கிட்ட சொத்து இல்லை, சொந்த வீடு இல்லை, பணம் தேவைக்கு இலையே தவிர நிறைய திறமை இருக்கு. நீ இப்பவே கைநிறையா சம்பாதிக்கும் போது இன்னும் மேல படிச்சீன்னா பெரிய ஆளா வந்திடலாம். அது மூலமா வாழ்க்கைல வசதிகளை உருவாக்கிக்கலாம். உனக்கு சப்போர்ட் பண்ணற மாதிரி ஒரு நல்லவன் கெடைக்கோணும். உன்னப்போலவே படிச்சிட்டு வேலைக்கு போற மாப்பிள்ளை நீயா? நானா? ன்னு ஒத்து வர மாட்டாரு. அதிகம் படிக்காத, நீ சொல்லற வேலையெல்லாம் செய்யற, குடும்ப பிரச்சினையே உன்கிட்ட கொண்டு வராத மாப்பிள்ளை தான் வேணும். வேணுன்னா என்னைக்கல்யாணம் பண்ணிக்கிறியா? எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன். நல்லா சமைப்பேன். சூப்பரா கார், பைக் ஓட்டுவேன். குழந்தைகளை தாலாட்டுப்பாட்டுச்சொல்லி தூங்க வெச்சிடுவேன். உறவுல நடக்கிற நல்லது, கெட்டதுக்கு போயிட்டு வந்திடுவேன், ஒழுக்கமா, நல்லா, அன்போட, அனுசரணையா, மனசுக்குள்ள உன்னையும், உனக்கு பிறக்கப்போற குழந்தைகளையும் மட்டும் வெச்சு வாழ்ந்திடுவேன், உன்னையும் வாழ வெச்சிடுவேன்” என கூற, அவனை நன்றாக ஏறிட்டுப்பார்த்தவள் “என்னைக்கல்யாணம் பண்ணிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு? சமமா படிச்ச, சம்பாதிக்கிற மாப்பிள்ளை அமையலேங்கிறதுக்காக எனக்கு சமமான படிப்பு இல்லாத, ஒரு நிரந்தர வேலையில்லாத, குடியிருக்க சொந்த வீடு இல்லாத, பெற்றோரோ இல்லாத அனாதையான உன்ன சொந்தங்கிறதுக்காக, நல்லவனுங்கிற ஒரே தகுதிக்காக பரிதாபப்பட்டு நான் கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பேன்னு என்ன தைரியத்துல நீ கேட்டிருப்பே….? அப்படின்னு நான் கேட்டிருவேன்னு நினைச்சிட்டியா? நீ என்னோட மனசுக்கு பிடிச்சவனா இல்லாமிருந்திருந்தா என்னோட மனசுல உள்ளதையெல்லாத்தையும் ஒன்னில்லாம, மறைக்காம உங்கிட்ட கொட்டியிருப்பேனா….?” என கூறியதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த சரண், ஆனந்தத்தில் சுற்றுப்புறத்தை மறந்து, சரிகாவை அப்படியே கட்டிப்பிடித்து உயரமாகத்தூக்கி ஒரு சுற்று சுற்றி இறக்கி விட, சரிகா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *