எண்ணங்களின் சுமைகள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,163 
 
 

வேலை முடிந்து திரும்பிய கணவன், முகம் சோர்ந்து வருவதை பார்த்தாள் மாலதி. “ஆபீசில் ஏதும் பிரச்னையா? எதுவாக இருந்தாலும், வந்ததும் கேட்க வேண்டாம்…’ என முடிவு செய்தவளாக, உள்ளே சென்று, சூடான காபியுடன், அவன் அருகில் வந்தாள்…
“”இந்தாங்க… காபி குடிங்க.”
எண்ணங்களின் சுமைகள்சிறிது நேரம் மவுனமாக இருந்தவள், “”என்னங்க… உடம்பு சரியில்லையா; தலை வலிக்குதா; முகம் ஏன் வாட்டமா இருக்கு?”
“”இல்லை மாலதி… வரும் போது, என் பிரண்ட் ரகு வீட்டுக்கு போயிட்டு வந்தேன்.”
“”ஏன், அவருக்கென்ன… அவர் மனைவி, மகன் எல்லாரும் நல்லாயிருக்காங்க தானே.”
“”அவனுக்கென்ன… ராஜாவாட்டம் வாழ்க்கை நடத்தறான். போன வாரம், எல்.சி.டி., “டிவி’ வாங்கினானாம்; காட்டினான். ஹாலை நிறைச்சு உட்கார்ந்திருக்கு. ம்… கொடுத்து வச்சவன்.”
அவனிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டது.
அவன் சோர்வுக்கு காரணம் புரிந்து விட்டது மாலதிக்கு.
ரகுவும், அவள் கணவன் ராஜாவும், நெருங்கிய நண்பர்கள்; ஒன்றாகப் படித்தவர்கள். ரகு, ரியல் எஸ்டேட் பிசினஸ், எக்ஸ்போர்ட் பிசினஸ் என வியாபாரத்தில் இறங்கி, சம்பாதித்து, தன் தகுதியை கூடிய சீக்கிரமே உயர்த்திக் கொண்டான்.
ராஜாவால் அவன் அளவுக்கு முன்னேற முடியாவிட்டாலும், சொந்த வீடு, கடனில்லாத வாழ்க்கை என நிறைவாக வாழ்ந்து கொண்டிருந்தான். இருந்தாலும், நண்பனின் முன்னேற்றத்தை, அவனால் சாதாரணமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“மாலதி, நாமும் தான் வீடு கட்டியிருக்கோம்; குருவிக்கூடு மாதிரி… இரண்டு ரூம், ஒரு ஹால் அவ்வளவு தான். ரகு வீடு கட்டி, கிரகப் பிரவேசம் பண்ணியிருக்கான் பார்த்தீயா. எவ்வளவு பெரிய வீடு; பங்களா மாதிரி. நாலு, “ஏசி’ ரூம், பெரிய ஹால்ன்னு பணத்தைக் கொட்டி, ஆடம்பரமாக வீடு கட்டி இருக்கான்; பார்க்கவே பிரமிப்பா இருக்கு!’
ரகு வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு சென்றுவிட்டு வந்து, இரண்டு நாட்கள் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தான்.
“மாலதி… ரகு அவன் பையனுக்கு, சென்னையிலேயே பெரிய காலேஜில், பணம் கொடுத்து சீட் வாங்கிட்டான். நம்மால அவனோட போட்டி போட முடியுமா? உன் மகன் வாங்கின மார்க்குக்கு, எந்த காலேஜ் கிடைக்கப் போகுதோ தெரியலை…’
“இருக்கட்டுங்க… அவனுக்கும் ஒரு நல்ல காலேஜில் சீட் கிடைத்து, சேர்ந்து படிப்பான். நீங்க ஏன் எப்பவும் உங்க நண்பரோட ஒப்பிட்டுப் பார்த்து வேதனைப்படறீங்க…’
“உனக்கு புரியலை மாலதி… அடுத்தவங்களை பார்த்து, அவங்களை மாதிரி நம்மாலே இருக்க முடியலைன்னு நினைக்கிறதில் என்ன தப்பு இருக்கு. இத்தனைக்கும், படிக்கிற காலத்துல, என்ன விட குறைவான மார்க் தான் வாங்குவான். இருந்தாலும், என்னால அவன் அளவுக்கு வர முடியலை பார்த்தீயா…’
ரகு மட்டுமில்லை, அவன் கேள்விப்படுகிறவர்கள், பார்ப்பவர்கள், அவனை விட வசதியாக இருக்கும் போது, தனக்கு மட்டும் அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லையே என மனதில் பொருமுவான் ராஜா. இது அவன் சுபாவம், மாற்ற முடியாது என, பேசாமல் இருந்து விடுவாள் மாலதி.
அன்று ரகு, ராஜாவின் வீடு தேடி வந்தான்.
“”ராஜா… நீ அடுத்த வாரம், உங்க சொந்தக்காரங்க கல்யாணத்துக்காக கோயமுத்தூருக்கு போகப் போறதாக சொன்னே இல்லையா?’
“”ஆமாம்… அடுத்த ஞாயிறு போறேன். வர்றதுக்கு ரெண்டு நாளாகும்; என்ன விஷயம்?”
“”ஒரு சின்ன வேலை. கோயமுத்தூரில் என் தம்பி இருக்கான். அவன் பையனும், இந்த வருஷம் காலேஜுக்கு போறான். அவனுக்கு பர்த்டே வருது. அதான் இரண்டு டிரஸ் எடுத்தேன். அட்ரஸ் தர்றேன்… நேரில் போய் பார்த்து, கொடுத்துட்டு வர்றீயா…”
“”சரி, கொடு… காரில் தான் போறேன். போய் கொடுத்துடறேன். கோயமுத்தூரில் இருப்பது எந்த தம்பி. உனக்குக் கூட பிறந்தவங்க நாலு பேராச்சே.”
“”ஆமாம்… ஆளுக்கொரு இடத்தில் இருக்கோம். இவன் கடைசித் தம்பி. பேரு ராகவன்…” – சொன்னவன், விலாசத்தையும், பார்சலையும் அவனிடம் கொடுத்தான்.
கல்யாணத்தில் கலந்து கொண்டு, ஊருக்கு திரும்ப கிளம்பியவன், காரில் பயணிக்க, “”மாலதி… ரகுவின் தம்பி வீட்டுக்குப் போய், அவன் கொடுத்த பார்சலை கொடுத்துட்டுப் போவோம். காந்திபுரத்தில் தான் வீடுன்னு சொன்னான்.”
சொன்னவன், காரை காந்திபுரம் நோக்கி திருப்பினான். ராகவனின் வீடு, குறுகலான சந்தில் இருந்தது. இடைவெளியில்லாமல் கட்டப்பட்ட சிறுசிறு வீடுகளுக்கு நடுவில், அவன் வீடும் இருந்தது.
“”வாங்க, வாங்க…”
இன்முகத்துடன், வாசலிலேயே வந்து வரவேற்றான் ராகவன். வீடு மிகவும் சிறியதாக இருந்தாலும், சுத்தமாகக் காட்சியளித்தது. அவன் மனைவி புன்னகையுடன் வரவேற்று, உள்ளே சென்றாள்.
காரிலிருந்து கையோடு கொண்டு வந்த பார்சலை, கணவனிடம் கொடுத்தாள்.
“”இந்தாங்க… இதை ரகு உங்ககிட்ட கொடுக்கச் சொன்னான்…” ராஜா கொடுக்க, வாங்கிக் கொண்டவன், “”வருஷா வருஷம், என் பையனோட பிறந்த நாளுக்கு, அண்ணன் புது டிரஸ் வாங்கி கொடுத்துடுவாரு. அவன் மீது அலாதி பிரியம். நாங்க அஞ்சு பேரு அண்ணன், தம்பிங்க. ஆளுக்கொரு திசையில் இருந்தாலும், எங்களுக்குள் இருக்கிற அன்பும், பாசமும் குறையலை. எங்கம்மாவோட வளர்ப்பு அப்படி.”
பெருமையுடன் சொன்ன ராகவனை பார்த்தான் ராஜா.
“”இது சொந்த வீடா?”
“”ஆமாம்… போன மாசம் தான் வீடு கட்டி, குடி வந்தேன். அண்ணனும் வந்துட்டு போனாரு. அவர் வீடு கடல் மாதிரி இருக்கும்; என் வருமானத்தில், என்னால் இந்த மாளிகையைத் தான் கட்ட முடிஞ்சுது.” சொல்லி சிரிக்க, “”நீங்க என்ன வேலை பார்க்கிறீங்க?”
“”மெக்கானிக் ஒர்க் ஷாப் வச்சிருக்கேன். தேவைக்கு வருமானம் வருது. ஒரே மகன்; நிம்மதியா இருக்கேன்.”
அதற்குள் அவன் மனைவி காபியுடன் வர, வாங்கி குடித்தவர்கள், “”அப்ப கிளம்பலாமா, நேரமாச்சு…” கணவனை பார்த்தாள் மாலதி.
“”ரொம்ப சந்தோஷம்… நாங்க எல்லாரும் நல்லா இருக்கிறதாக அண்ணன்கிட்ட சொல்லுங்க.”
வாசல் வரை தன்னோடு வந்தவனை ஏறிட்டான்…
“”உங்க கூட பிறந்தவன், நல்ல நிலையில், செல்வச் செழிப்பில் இருக்கும் போது, நீங்க, உங்க நிலைமையை நினைச்சு வருத்தப்பட்டதில்லையா?”
அவனை பார்த்ததிலிருந்து அவன் மனதில் உறுத்திய விஷயம், கேள்வியாக வெளிப்பட்டது.
“”இதுல நான் வருத்தப்படவோ, வேதனைப்படவோ என்னங்க இருக்கு. அவருக்குள்ள படிப்பு, திறமை, வசதி வாய்ப்பு களை வச்சு, அவர் நிலையை உயர்த்தி, நல்லபடியாக வாழ்ந்துட்டு இருக்காரு. எனக்குள்ள வசதி வாய்ப்புகளை வச்சு நான், மன திருப்தியோடு வாழ்ந்துட்டிருக்கேன். அண்ணனோடு என்னை ஒப்பிட்டு பார்த்து, அவரது வளர்ச்சியைக் கண்டு நான் புழுங்குவது, ஆரோக்கியமான விஷயம் கிடையாது.
“”அது எங்களுக்குள் உள்ள உறவையே பாதிச்சிடும். அவரவருக்குரிய வசதிகளோடு, தனக்குக் கிடைச்சதில் திருப்திப்பட்டு வாழறதுதாங்க வாழ்க்கை. அதை விட்டுட்டு, அடுத்தவங்க வளர்ச்சியை பார்த்து, நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலையேன்னு பொறாமை எண்ணங்கள் மனதில் வேரூன்ற ஆரம்பிச்சா, அது, நம்ப நிம்மதியையே அழிச்சிடும்.
“”அந்த மாதிரி எண்ணங்களை மனதில் சுமைகளாக ஏத்திக்கிட்டு, மனநிம்மதியை தொலைக்கணுமா சொல்லுங்க. என் அண்ணன் அன்போடும், பாசத்தோடும் என்கிட்ட இருக்காரு; அதுவே எனக்கு சந்தோஷம். இந்த அன்பும், உறவும் கடைசி வரை நீடிச்சால், அதுவே எனக்குப் போதும்.”
காரில் ஏறி உட்கார்ந்து, ஸ்டார்ட் செய்தவனை, அருகில் உட்கார்ந்திருந்த மாலதி கூர்ந்து பார்த்தாள்.
“”உன் பார்வையோட அர்த்தம் எனக்குப் புரியுது மாலதி. ராகவன், வாழ்க்கையில் ஆரோக்கியமான எண்ணங்கள் தான் வேணுங்கிறதை புரிய வச்சுட்டாரு. இவ்வளவு நாள் என் மனசுல அழுத்திட்டிருந்த பாரம், குறைஞ்ச மாதிரி இருக்கு. நாம் மருதமலை முருகனை போய் தரிசனம் செய்துட்டு, மன நிம்மதியோடு ஊருக்குப் போகலாம்.”
முகமலர்ச்சியோடு பேசும் கணவனை, புன்னகையுடன் பார்த்தாள் மாலதி.

– நவம்பர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *