கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 2, 2020
பார்வையிட்டோர்: 6,138 
 

“கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே “பாடல் ஒலித்ததும் டெய்சியின் முகத்தில் கடுமை வழிந்தோடியது. ஆக்னஸின் மூன்று மாதக் குழந்தையின் தலையில் கைவைத்து பாதிரியார் வேதத்திலிருந்து ஒரு பகுதியை வாசித்தார்.அருகிலிருந்த தீர்த்தத்தை குழ்ந்தை மேல் தெளித்து “தெரெஸா “ ,என்று மும்முறை அழைத்தார்.

குழந்தை அணிந்திருந்த வெள்ளை கவுன் தொளதொளவென்று இருந்தது. ஞானஸ்நானத்துக்கு தான் வாங்கி வைத்திருந்த வெள்ளை கவுன் கச்சிதமாக இருந்திருக்கும் என்று டெய்சி நினைத்துக் கொண்டாள். ஓர் அற்ப விஷயத்தில் ஆரம்பித்து வார்த்தை தடித்து சண்டையின் காரணம் மறந்து போயிருக்கும் போது தான், அவள் கருவுற்றிருப்பதை ஆண்ட்ரூஸிடம்

சொன்னாள். சர்வ நிச்சயமாக பெண் குழந்தையென்று முடிவு செய்து விட்டார்கள்.”மாமா, பொண்ணு பொறந்தா, நம்ம குடும்பத்துலயே மொத பெண் பேரப்பிள்ளையா இருக்கும்”, என்றாள். அதை ஆமோதிப்பதை போல் அவளின் நான்கு மாத மேடு தட்டிய வயிற்றை தடவியபடி ஆண்ட்ரூஸ் முத்தமிட்டான். டெய்சி குழந்தைக்கு விதவிதமான ஃப்ராக்,வளையல்கள் என வாங்கி குவித்துக் கொண்டிருந்தாள்.

ஞானஸ்நானத்துக்கு பிரத்யேகமாக வாங்கிய வெண்ணிற கவுனின் சிலுசிலுப்பை அடிக்கடி தொட்டுப் பார்த்துக் கொள்வாள்.ஆறாம் மாத இறுதியில் அனாமலி ஸ்கேன் முடிவுகளை எடுத்துக் கொண்டு டாக்டரை பார்க்கச் சென்றார்கள்.

ஸ்கேன் முடிவுகளை பார்த்த டாக்டர் ,”குழந்தைக்கு ரத்த குழாய்ல கோளாறு இருக்குன்னு ரிஸல்ட் சொல்லுதும்மா, கருவ கலைக்கறது தவிர வேற வழியில்லை. நீங்க மறுத்தாலும் கொழந்த பிறந்ததும் இறந்திட தான் வாய்ப்பதிகம்.ரெண்டு நாள் டைம் எடுத்துக்கோங்க.செகண்ட் ஒப்பீனியன் கூட கேட்டுட்டு வாங்க. ஆனா சீக்கிரமா பண்ணிடுறது நல்லது”,என்றார்.

வயிற்றில் பனிக்கத்தி பாய்ந்தது போல் இருந்தது அவளுக்கு. பெருங்குரலெடுத்து அலறிய டெய்சியை ஆற்றுப்படுத்த இயலாமல் ஆண்ட்ரூஸும் கதறியழுதான்.

அமெரிக்காவிலுள்ள தன் டாக்டர் நண்பனிடம் செகண்ட் ஒப்பீனியன் கேட்பதாக அவளிடம்சொன்னான்.“ரிஸல்ட்ஸ் பாத்தேன் . உங்க டாக்டர் என்ன சஜ்ஜஸ்ட் பண்ணாங்களோ அதையே செஞ்சிடுங்க,”என்றான் ஆண்ட்ரூஸின் நண்பன்.

மருத்துவமனையில் அட்மிட் ஆன அன்று, சுகப்பிரசவத்துக்காக வலி தூண்டல் ஊசி போட்டார்கள். இரண்டு மணிநேரம் கழித்தே டெய்சிக்கு வலிக்கத் தொடங்கியது. அவளின் மேல்வயிற்றில் கைகளால் அழுத்தம் கொடுத்து செவிலி கீழ்நோக்கி தள்ளினாள். நீண்ட முக்குதலுக்குப்பின் பிறப்புறுப்பைக் கிழித்துக்கொண்டு விழுந்தது சிசு. அவளின் நஞ்சுக்கொடிக்கு அருகில் உயிரற்ற சிசுவை கிடத்தியிருந்தார்கள். பெண் சிசு.

இச்சம்பவம் அவளுடைய உடலை மட்டுமல்ல, மனதையும் மாற்றி விட்டிருந்தது. எப்போதும் படுத்திருந்த படியே எதையோ யோசித்துக் கொண்டிருப்பாள். வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாள்.

சில மாதங்கள் கழித்து, தன் தம்பி செபஸ்தியானின் மனைவி ஆக்னெஸ் கருவுற்றிருப்பதாக அம்மா சொன்னாள்.டெய்சியின் அடிவயிறு சுருங்கித் துடித்தது. ஆக்னெஸின் சீமந்த நாளும் வந்தது.

சொந்த தம்பி மனைவியின் சீமந்தத்துக்கு போகாமல் இருந்தால் ஊர் சும்மாவா இருக்கும்.அன்று சீமந்தச் சடங்கு முழுக்க விசிறிப் பறக்கும் மூர்கத்ததுடன் இருந்தாள் டெய்சி. செபஸ்தியான் அவளின் மனப்போக்கை அறிய இயலாதவனாய் அவளை பிரத்யேகமாக கவனிக்க வேண்டுமா வேண்டாமா என்கிற குழப்பத்திலேயே இருந்தான்.ஊமை உக்கிரத்துடன் சீமந்தச் சடங்கினை பார்த்துக் கொண்டிருந்தாள் டெய்சி.

நிறைசூலியாய் தேர் போல நடந்து வரும் ஆக்னஸை செபஸ்தியான் தாங்குவது ,டெய்சியின் கோபத்தை மேலும் கிளர்த்தியது.அவள் அப்படியே கீழே விழுந்தால் தான் என்ன?.

இதோ இன்றைய ஞானஸ்நான சடங்கில் ஞானப் பெற்றோராக தானும் ஆண்ட்ரூஸும் இருந்திருக்க வேண்டும். ஆக்னஸின் அண்ணனும்,அண்ணியும் ஞானப் பெற்றோராக நிற்கிறார்கள். ஆக்னஸ் தான் அடம்பிடித்து அவர்களை நியமித்திருப்பாள். எல்லோரையும் கர்த்தர் கற்பித்த ஜெபத்தை பாடுமாறு பாதிரியார் சொன்னார்.

இறுதி ஆசீர்வாதம் முடிந்து ஒருவர் பின் ஒருவராய் குழந்தையை தூக்கியபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். யார் கை தவறியாவது குழந்தை கீழே விழுந்து விடக்கூடாதா என விரும்பினாள் டெய்சி. ஆண்ட்ரூஸிடம் ,” வா மாமா கிளம்பலாம் ,” என்றாள்.

வீட்டுக்குப் போனவள் குளியலறை குழாயைத் திறந்துவிட்டு நாற்காலியில் வந்தமர்ந்தாள். ஆல்டரில் குழந்தை ஏசுவை ஏந்தி நிற்கும் மரியாளைப் பார்த்து ஒரு கணம் உறைந்து போனாள். மெல்லிய கேவலுடன் ,“அம்மா!!” எனக் கதறியழத் தொடங்கினாள்.

Print Friendly, PDF & Email

1 thought on “ஊற்று

  1. அருமையான எளிமையான ஒரு குடும்ப கதை. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *