ஊரில் பாதிப்பேர் சுப்ரமணி. அப்ப மீதிப்பேர்? அவர்கள் வேற்று¡ரில் இருந்து பிழைக்க வந்தவாளா இருக்கும்.
ஊர் நடுவாந்திரத்தில் உப்பளமேடு போல சிறு குன்று. அறுவடைநெல் குவிச்சாப்போல. அதன் உசரத்தில் கோவில். அதைப்பாக்க கொள்ளை ஜனம்.
வந்துசேரும் ஜனங்களிலும் பாதிப்பேர் சுப்ரமணி. அடிவாரத்தில் நாவிதர்கள் – சுப்ரமணிகள் – கத்தி விரித்துக் காத்திருப்பார்கள். சிறு பிள்ளைகள் தென்னைமட்டையை நார் உரிச்சாப்போல… முடியுடன் உட்கார்ந்து மொட்டையாய் எழும். எதிரே ஊரணி. குளித்து மண்டைக்கு சந்தனாலங்காரம். புதுத்துணி உடுத்தி, பிற்பாடு பார்த்துச் சிரிக்க கந்தசாமி ஸ்டூடியோவில் ஒரு ·போட்டோவும் எடுத்துக்கொண்டு, மேடேறி சாமி கும்பிடும். இந்த மொட்டைகளைப் பார்த்து அடிவாரக் குரங்குகளுக்கே பயமாய்க் கெடக்கும்.
ஊரில் எல்லாவனும் சுப்ரமணியாத் திரிஞ்சால் என்ன செய்யிறது. சுப்ரமணி சுப்ரமணியப் பார்த்து ”சுப்ரமணி?” என்று கூப்பிட வேண்டியிருக்கிறது. ஆக மனுஷாளுக்குப் பட்டப்பேர் வைக்கிறது அங்கே நிர்ப்பந்தம் ஆச்சு. குள்ளமணி, தென்னைமணி, நெளிசல்மணி (மண்டைக்கோணல் அத்தகையது) லேடிமணி (நடை ஸ்டைல் அப்பிடியப்போவ்!) – லு¡சுமணி. வியர்வைமணி. பீடிக்காதன். டப்பாக்கட்டு. மைனர். கோகுல்சாண்டல்…
நம்மாள் பள்ளிக்கூட மணி. அவன் ஜோலியே அதுதான். பள்ளிக்கூடத்தில் மணியடிக்கிற உத்தியோகம். காலையில் சீக்கிரமே வந்து பள்ளிக்கூட கேட்டு-கதவைத் திறக்கிறவன் அவனே. தண்ணி பிடிச்சி வராண்டா அண்டாவில் ஊத்தணும். ஊமைச்சி வந்து வெளி வளாகங்களைப் பெருக்குவாள். அது காலையில்… வகுப்பறைகளை மாலையில் பூட்டுமுன் பெருக்க ஊமைச்சி கூட ரெண்டாளுகள் உண்டு.
பாவம் பள்ளிக்கூட மணி. முதல் ஆளா காலையில் வந்து, சாயந்திரம் கடைசி ஆளாப் போகணும். வகுப்பறைகளைப் பூட்டி சாவியை எட்மாஸ்டர் ரூம்பில் மாட்டிவிட்டு கேட்டு-கதவை – மூத்திரக்குறியைக் கூசச்செய்கிற அளவில் அது ஒரு கிரீச்செடுக்கும்… சார்த்திப் பூட்டிக் கொண்டு கிளம்ப மணி ஐந்து ஐந்தரை தாண்டி விடும்.
நல்லவன். அப்ராணி. வெகுளி. எப்பவும் மூக்கு ஒழுகிக் கிடக்கிறது. பேச்சில் ஒரு கொணகொணப்பு. எனினும் உற்சாகத்துக்குக் குறைவில்லை. கதவைப் பூட்டிய ஜோரில் எதிர் கடலைக் கடையில் நிலக்கடலை ஒரு பொட்டலம் வாங்கிக் கொண்டு, தெரிஞ்ச அழகில் ‘சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ… செந்தாமரை இரு கண்ணானதோ’ பாடியபடி வீடு திரும்புவான். வாயில் ரெகார்டு மாத்தினாப்போல பாட்டு மாறிக் கொண்டே வரும். நாலாம் பாட்டு ரெண்டுவரி மூணுவரி பாட வீடு வந்திரும்.
வயசான தாயார். நல்ல சினிமாப் பிரியை அவள். ஆனா எம்ஜியார் பிடிக்காது. அவள் சிவாஜி கட்சி. நல்ல குடும்பம்சமா அழுகைப் படமா எடுப்பான். அம்மா செத்திட்டா எப்பிடி உருகிர்றான்.
– எலேய் நாஞ்செத்தா அழுவியாடா ஜிவாஜி மாதிரி?… என்று ஏக்கமாய்க் கேட்டாள் அவனை.
– செத்த அம்மாவை வெச்சி அழுறதா பெருமை. எங்க தலைவர் அம்மாவை உயிரோட இருக்கறப்பவே உக்கார வெச்சி மடிமீது படுத்துக்கிட்டு – இந்த வாலிப வயசில்! – அம்மா நீ வாழ்கன்னு பாடறாரு… அதை ரசிக்க மாட்டங்கையே?… என்பான். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்… என்று பாடியபடி மணி வெளியே போனான்.
என்னத்த வெற்றி. ஊர்க்கோமாளியாட்டம் திர்றான் இவன்… என்று பெருமூச்சு விட்டாள் அம்மா.
அம்மாவுக்கு வயசாயிட்டது. வீட்டுப்பாட்டை முன்னைப்போல கவனிக்கக் கொள்ளவில்லை. நடக்கையில் லேசா லாந்தித் தள்ளுது. சிவாஜியின் சோகநடை… மறதி அதிகமாச்சி. எலேய் நீ கல்யாணங் கில்யாணம் கட்டப்டாதா?… என்று ஸ்கூல்மணியிடம் அவள் கேட்டாள்.
நான் ரெடி. எனக்கு எவன் பொண்ணு தருவான்? – என்றான் ஸ்கூல், நிலக்கடலை மென்றுகொண்டே. இந்தா அம்மா, என்று கூட ஒரு பொட்டலம் அவன் வாங்கி வந்திருக்கலாம். ஒருநாளும் மாட்டான். கேட்டால் துட்டு இல்லம்மா, தொந்தரவு செய்யாதே… என்பான். அவன் திங்க மாத்திரம் துட்டு இருந்தது அவனிடம்.
சம்பளத் துட்டு என்று ஏதோ வந்தாலும் நாலு ஆம்பளைகள் அவன் இரக்க சுபாவத்தைப் பயன்படுத்தி பைக்காசைப் பிடுங்கிக் கொள்கிறார்கள். அய்யாவை ஆஸ்பத்திரில சேக்கணும். க்ஷயரோகம் முத்தி ராவுல இரும முடியாம இருமறாரு. (இரும முடியாட்டி இருமாமல் விட்ற வேண்டிதானே?) பக்கத்து¡ர்வரை போணுண்டா… ஒரு பத்து-நு¡று தேறுமா ஒன்ட்ட? – என்கிறார்கள்.
சுப்ரமணிக்கு ஐயா இல்லை. செத்திட்டாரு. ஆமாமாம். செத்தன்னிக்கு சுவர்ப்பக்கம் திரும்பி கைவெச்சிக்கிட்டு அழுகிறான். அத்தனையாய் ஊறுகாய்க்குலுக்கலாய் அவன் அழவில்லை என்று அவங்கம்மாவுக்கு வருத்தம்.
‘ஐயய்ய இந்தா’ என்று மனம் உருகினான் சுப்ரமணி. ஐயா பத்தி யார் பேச்செடுத்தாலும் காசு காரண்டி. பக்கத்து நாகலு¡ரணியில் பெரியாஸ்பத்திரி. அங்கதான் சேர்ப்பதாகச் சொல்லி துட்டு வாங்கிப் போனான் பல்லு-மணி. நாகலு¡ரணி வெத்திலை ரொம்ப கிராக்கி ஐட்டம். எட்மாஸ்டர் அதன் ரசிகர். ஆட்டுஜென்மம். வாயில் எப்பவும் குழை வேண்டும் அவருக்கு. மூணுநாளுக்கொரு முறை சைக்கிளில் சுப்ரமணி நாகலு¡ரணி போய் வெத்திலை வாங்கி வந்து தருவான். மேல்த்தண்ணி ஊத்தி ஊத்தி வெச்சுக்குவார்.
தர்மாஸ்பத்திரியில் விசாரித்தான் சுப்ரமணி. ‘க்ஷயரோகக் கேஸ்னு யாராவது சுப்ரமணியங்கோவில்லேந்து அட்மிட் ஆனாங்களா?’ – சீட்டெழுதறவன் ‘அவர் போனவாரமே செத்திட்டாரே’ என்கிறான். பயந்தே போனான் ஸ்கூல்மணி. ‘சரியாப் பாருய்யா… நேத்தைய அட்மிஷன். பேரு வேல்ச்சாமி…’ என்றான் சுப்ரமணி.
அப்டியாளே வரவில்லை. அப்றம் பல்லுமணி வீட்டுக்குப் போனா எலேய் என்ன இந்தப் பக்கம்? – என்று வீட்டில் அவனை விசாரித்தவரே அவர்தான். ‘தர்மாஸ்பத்திரில நீரு செத்திட்டதாச் சொன்னாங்க. அதாம் பாத்திட்டுப் போலாம்னு வந்தேன்’ என்றான் ஸ்கூல்.
‘செத்தாச் சொல்லி விடுங்க’ என்று சைக்கிள் ஏறினான்.
அவனுக்கு ரொம்ப வருத்தமாய் இருந்தது. எப்படியெல்லாம் ஏமாத்துகிறார்கள். பொய் சொல்லுகிறார்கள் நாட்டில்?… அவன் மூஞ்சியில் – ஏமாறுகிற மூஞ்சி, என்று எழுதி ஒட்டீர்க்கோ தெரியல. அதிலும் ஒவ்வொருத்தனும் விநோத காரணங்களாய்ப் பொய் சொல்கிறான். உடனே பணம் பேர்த்தி விடுகிறான் இவனிடம் இருந்து. அவம் பையில் துட்டு தங்குவதேயில்லை. இவன் பையில் துட்டு சேர்ந்த ஜோரில் பறவைக்குப் பழவாசம் போல அவனவனுக்கு மூக்கரிப்பு.
இவன் மூக்குதான் வாசனை யெடுக்காது. ஜலதோஷம்லா.
”எலேய் லோகத்ல எல்லார் மேலும் உனக்கு இரக்கம்டா… உங்கம்மாவைத் தவிர” என்று அம்மா கத்துகிறாள். கத்திப் பேசுதல் அவளது சுபாவம்.
சிவாஜி ரசிகையாச்சே.
ஸ்கூலுக்கும் கல்யாணம் முடிக்க ஆசைதான். வயசாவலியா? தை தாண்டினா நுப்பது. பெத்தவ சரியில்லை. படம் பாக்கணும். வீட்டு வாசலில் பக்கத்துக்காரிகளிடம் சினிமாக்கதை பேசணும். வீட்டைத் திறந்து போட்டுக்கிட்டு நிலைப்படியே தலையணையாய் குறட்டையெடுக்கத் து¡ங்கணும். பேச்சுதான் சத்தம்னா குறட்டை அதைவிடப் பெரிய எடுப்பு.
சிவாஜி குறட்டை விடுவானா தெர்ல.
அட ஸ்கூலுக்கு அடிச்சதய்யா லக்கி பிரைஸ்.
காலையில் பள்ளிக்கூட கேட்டு-கதவைத் திறக்கிறான் மணி. அவன் வரும்வரை காத்திருந்தாள் ஊமைச்சி. அவபேர் ராணி. அவனைப் பார்த்து அன்றைக்கு அவள் சிரிச்ச சிரிப்பில் என்னவோ ஒரு குறுகுறுப்பு தெரிந்தது அவனுக்கு. அவனுக்கே ஆச்சரியமாய் இருந்தது அந்த உணர்ச்சி. காலைல சுத்தமாக் குளிச்சி தெளிச்சி சிறு பொட்டும் வெச்சி டைட்டு-ஜம்பருடன் (ஜம்பர் – பிளவுஸ்) வந்திருந்தாள். ஒருமாதிரி மஞ்சளில் புடவை. தலையில் மஞ்சக் கனகாம்பரம்.
பேசுவது கிளியா?… என்று சம்பந்தம் இல்லாத பாட்டு பாடியபடி கதவைத் திறந்தான் மணி. அவன் உள்க்குறி சிலிர்க்க கேட்டு-கதவு திறக்கிறது.
அடுத்த வாரம் ராணியின் ஐயா செத்துப் போனபோது விக்கி விக்கி அழுகை வந்தது ஸ்கூலுக்கு. சிவாஜி அழுகை. அவங்கம்மாவுக்கே ஆச்சரியம். இது காதல் அல்லாமல் வேறென்ன?… பூங்காவில் பின்தண்ணி பொங்கப் பொங்க அவனும் ராணியும் பாடுகிறார்கள்.
”பாட்டா? அவ ஊமைச்சிம்மா…” என்கிறான் மணி.
”ஊமைச்சியா?”
மனோகரா அளவில் உன்னோடு சண்டை போட ஆள் இல்லை… என்று சிரித்தான் மணி.
கோவிலில் எளிய கல்யாணம். அவள் ராணி என்றால் நான் ராஜா. ராஜாமணி என்று சிரித்துக் கொண்டான். தலை கிறுகிறுத்துக் கிடந்தது. பெண் நன்றாய்ப் பாடணும் என்று அவனுக்குத் தன் மனைவியை இட்டு முன்பு கனவுகள் இருந்தன. பாட்டு ரசனையாவது வேணும். ரெண்டும் இல்லை அவளிடம்.
நீ எம்ஜியார் ரசிகையா சிவாஜி ரசிகையா?… என்று அவளிடம் எப்படிக் கேட்பது தெரியவில்லை. பெரிசாய்ச் செவ்வகம் வரைஞ்சாப்ல காட்டி படம் கிடம் பாப்பியா?… என்று விசாரித்தான் மணி. ‘நான் படம் பார்த்ததேயில்லை’ என்கிறாள் ஜாடையில். நாட்டில் சினிமாப் போகாத ஜென்மம், அதும் பெண்ஜென்மம்… அவனுக்கு ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருந்தது.
முதலிரவு அன்று அந்த பேசாதவாய்க்கு சூப்பரான முத்தம் தந்தான் மணி. வெத்திலை போட்டிருந்த அவள் வாய் கிளிமூக்காய் ஜொலித்தது. மூக்குக்குக் கீழே இன்னொரு மூக்கா இது?!…
சைக்கிளில் அவளை ஏற்றிக் கொண்டு நாகலு¡ரணி போய்ப் படம் பார்த்தார்கள். வாத்தியார் படம்னு ஆசைப்பட்டு சிவாஜி படம்கூட இல்லாமல் ஜெய்சங்கர். அவன்படத்தில் விநோத ஜும்பர ஜும்பா தாளத்துடன் ஒரு பாட்டு இருக்கும். அப்பாவைக் கொன்னவனைப் பழிவாங்குவான். தலைவர் ஆளும் சூப்பர் கலர். படமும் கலர். ஜெய்சங்கர் படம் கறுப்பு வெள்ளை.
அதைப்பத்தி என்ன? யார் படம் பார்த்தார்கள்.
வரும் வழியில் மைனர்மணியிடம் மாட்டிக் கொண்டார்கள். கிண்டல் நப்பி எடுத்திட்டாப்ல. எலேய் பொண்ணு ஜோரா இருக்குடா? நீ எத்தினி தரம் என் சைக்கிளை அண்ணே ஒர்ரவுண்டுன்னு கேட்டு பூக்கடை காய்க்கடைன்னு போயிருக்கே… என்று சிரித்தவன், எனக்கு ஒர் ரவுண்டு தாடா இப்ப?… என்று அசிங்கமாய்க் கண்ணடிக்கிறான்.
கோபங் கோபமாய் வந்தது. என்ன பேச அவனிடம்? அழுகைவீங்கிய முகத்துடன் அழ முடியாமல் தாண்டிப் போக வேண்டியதாப் போச்சு. வழியிருட்டில் சைக்கிள் தடுமாறியது கல்லில். அப்பதானய்யா அந்த அதிசயம் நடந்தது- அவனை நிறுத்தச் சொல்லி ராணி வண்டியில் ஏறியமர்ந்து கொண்டது. அவளே ஜோராய் அவனைப் பின்னால் உட்கார வெச்சி விட்டாள் சவாரி வீடுவரை. சைக்கிள் திக்காமல் திகைக்காமல் ஓடிவந்ததே பாக்கணும். வாசல் எட்டியதும் அப்டியே அவளை அலாக் து¡க்கு து¡க்கி மாப்ளை ஒரு கிஸ் அடிச்சான். அம்மா கதவைத் திறக்கிற சத்தம். பிரிந்து கொண்டார்கள்.
ஜாடையாய் மைனர் மணியோடு சேராதே. அவன் கெட்டவன்… என்றாள் ராணி. சரி என்றான் ராஜாமணி. அவளோடு ஜாடையாய்ப் பேச சகஜப்பட்டிருந்தான் இந்நாட்களில்.
துட்டு… எந்துட்டு… என்று சுண்டிக் காட்டுகிறான் ராஜா. தரணும் அவன். ஏமாத்திட்டான்… சொல்லும்போதே வருத்தமாகி விட்டது. அவளுக்குத் தாளவில்லை. அவனைத் தன் வெத்துமார்பில் அப்படியே சாய்த்துக் கொண்டாள். நான் இருக்கேன், சிரிக்கணும்… என்றாள் குறிப்பாய். எப்பெரும் ஆறுதல் அவனுக்கு. அவள் மடியில் படுத்துக் கொள்கிறான்.
காலையில், எவ்ளவு துட்டு… என்று விசாரித்துக் கொண்டாள். பிறகு… ஆமாம் நேரே மைனர் வீட்டுக்குப் போனாள். அறச்சீற்றம் அது. ஏமாத்தறீங்களாடா நாய்ங்களா?
அவன் வீட்டு வாசல்ப்பக்கம் காவல்நாய் குரைத்தது. குனிந்து ஆவேசமாய்க் கல்லை எடுத்தாள் ராணி. பயந்தோடிப் பாய்ந்தோடிப் போனது நாய்.
என்… புருஷன்… என்று தாலியைக் காட்டினாள். துட்டு… என்று சுண்டிக் காட்டினாள். ஐந்நு¡று… என்று காற்றில் எழுதிக் காட்டினாள். எங்க?… என்று கேள்வி கேட்டாள். மெளனாக்னி அது. எல்லாம் ஜாடை. வார்த்தையைவிட உக்கிரம் பெருகியது அதில்.
திருப்பித் தா… வாங்காமல் போகமாட்டேன்… அடம் பிடித்து அங்கேயே உட்கார்ந்தாள்.
ஊமைச்சி பணத்துடன் வீடு திரும்பினாள்.