ஒரு சபதத்தின் மறுபக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 15, 2021
பார்வையிட்டோர்: 1,896 
 

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அந்த மூன்று கட்டு, பழம்பெரும் வீட்டில் நவீனமான மேக்கப் போடப்பட்ட முதற்கட்டின் தெருப்படிகளில் கால் மிதிக்க, தயங்கி நின்றான் மாரிமுத்து. அக்கம்பக்கம் திரும்பிப் பார்த்தான். அவன் பின்னால் வந்த சொந்த நாய் கூட அவனை ஒரு மாதிரி பார்ப்பதுபோல் இருந்தது. உடனே அவன் கீழே குனிந்து கல்லை எடுப்ப்துபோல் பாசாங்கு செய்தபோது, அவன்மீது நம்பிக்க்ை வைத்ததுபோல், அது வாலாட்டி நின்றது. உடனே இவன் கல்லுக்குப் பதிலாக ஒரு மண்கட்டியைத் தூக்கி எறிந்தபோது அது செல்லக் கோபத்தோடு பின்வாங்கியது.

மாரிமுத்து, அந்தப்படிகளை மிதிக்கலாமா, வேண்டாமா என்று ஒரு நிமிடம் சிந்தித்தான். இருபதாண்டு காலமாக அந்த வீட்டுப் படியை மிதிப்பதில்லை என்று போட்டிருந்த சபதம். அவன் தன்னைத்தானே திடப்படுத்திக் கொண்டான். சபதம் முக்கியமல்ல. அதன் நோக்கம்தான் முக்கியம். அந்த ஊரிலேயே கால் பகுதியை மடக்கிப் போட்டிருக்கும் இந்த அரண்மனை வீட்டிற்கு உறவாடுவதற்கோ யாசகம் கேட்டோ படி மிதிப்பதில்லை என்றுதான் சபதம். இந்த சபதத்தால் தன்னைத் தோளில் தாக்கி கொஞ்சிய தாய்மாமன் செத்த போதுகூட இந்த வீட்டுப் படியேறியதில்லை. சுடுகாட்டுக்குப் பக்கத்திலுள்ள கருவேலமரக்காட்டில் தாய் மாமா எரிந்து முடிவதுவரைக்கும் ஒரு கெளரவ வெட்டியானாக காத்து நின்றவன். ஆனால் அப்பேற்பட்டவன் படிமிதிக்கப் போகிறான். ஆனாலும் சமாதானம் செய்து கொண்டான். அந்தச் சபதத்தின் மறுபக்கத்தைக் காட்டவே படிதாண்டப் போகிறேன்.

மாரிமுத்து, முதற்படிக்கட்டில் கால் வைத்தபடியே நின்றான். பின்னர் மூன்று படிகளையும் ஒரே தாவாய்த் தாவி, இருபக்கமாக உள்ள வெளித் திண்ணைகளின் இடைவெளிச் சமதளத்தில் நடந்து வாசற்படியில் நின்றான். உள்ளே எட்டிப் பார்த்தான். கோவில் கருவறைபோல் மறுமுனையில் சமையற்கட்டு தெரிந்தது. இரண்டாவது கட்டில் உற்சவ மூர்த்திகளாய் ஆண்களும், பெண்களுமாய் இந்தாறுபேர். அத்தனை பேரிடமும் அட்டகாசமான சிரிப்புகள். மாரிமுத்துவால் எந்தச் சிரிப்பையும் தனிப்படுத்த முடியவில்லை. அத்தனையும் கலப்படச் சிரிப்பு. அந்தச் சிரிப்பு அவனுள் ஒரு ஆவேசத்தை ஏற்படுத்தியது. கணுக்கால் வரைக்கும் வியாபித்த எட்டு முழ மல் வேட்டியை தார்ப்பாய்க்கப் போனான். பிறகு அது மரியாதைக்குரிய செயல் அல்ல என்று நினைத்தவன் போல் வேட்டியை இறுக்கிக் கட்டினான். வெளிவாசலை பாதிமறைத்த தேக்கு கதவை ஒரு உதை, உதைத்து வழி ஏற்படுத்தினான். அங்கிருந்து முதற்கட்டுக்கு வந்து, உள் திண்ணை இடைவெளியில் நடந்து மாட்டுத் தொழுவத்தையும், உறைக்கிணற்றையும் தாண்டி மலை மலையாய் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகளை ஏறெடுத்தும் பார்க்காமல், இரண்டாவதுகட்டு வாசற்படியையும் தாண்டி, நாற்புறமும் செவ்வக வடிவிலான மேல் தளங்களுக்கு நடுவிலுள்ள கீழ்த்தளத்தில் ஆவேசமாக நடந்தான். எதிர்திசையை கண்ணாடாமலேயே பார்த்தான்.

தென் பத்தியில் கிழக்குப் பக்கம் ஊஞ்சல் பலகை இவன் அப்பா கொண்டு வந்து போட்ட மாம்பலகையாம். அதன் நடுவில் தம்பி முத்துவேல். அவனுக்கு இருபக்கமும் மாமன் மகன்கள். ச்சி. இந்தப்பயல்களா மாமன் பையன்கள். இடது பத்தியில் கவரோடு ஒட்டிப்போட்ட ஒரு சாய்வு நாற்காலியில் மதயானை படுத்திருப்பதுபோல் அத்தைக்காரி. இவள் அத்தை இல்லை. தாய் மாமனோட பொண்டாட்டி. எந்த இரத்தக் கலப்பும் இல்லாத ஊடுறுவல்காரி. அவளருகே கோவில் துரண்போல், கடைந்தெடுத்த தேக்குத் துணை, முத்துவேலின் முகமாக நினைத்து, முகம்போட்டு நிற்கும் பாப்பா. இயற்கைப் பெயர் என்ன இழவோ. இட்ட பெயர் போய், இட்டுக் கட்டிய பெயர் நிலைத்து விட்டது. உருண்டு திரண்ட அந்தத் துரனைப்போல உடற்காரி. வழியில் போகிறவர்களை அவர்கள் தன்னைத் திரும்பிப் பார்ப்பதுவரைக்கும் நோண்டிப் பார்ப்பவள். இந்த ஊரில் குழாய்ச் சட்டை போட்ட முதலாவது பெண். நைட்டுக்கவுனாமே. அதைப் பகலிலும் போட்டுத் திரிகிறவள். அசல் மான்குட்டி. இல்லை இல்லை. பைபிள் சொல்வதுமாதிரி அசல் விரியன் பாம்புக் குட்டி இவளுக்கும் மாமியாருக்குமிடையே வாயுத் தொல்லையாலோ, அல்லது வீட்டுக்காரர் தொல்லையாலோ வயிறு துருத்திய முத்துக்கனி. ஆனாலும் பார்வையில் லட்சணம். பார்ப்பதற்கும் லட்சணம். மாமனுக்குப் பிறந்த பெரியதடியனின் மனைவி. பாம்போ. பழுதோ அறியான்.

மாரிமுத்து, எதிர்திசைக்காரர்களை இளக்காரமாய்ப் பார்த்தபோது, ஊஞ்சல் பலகையின் கால்களை ஊன்றி ஊன்றி அதை ஆடவிட்டு ஆடிக் கொண்டிருந்த மூவரும் அப்படியே எழுந்தார்கள். சாய்வு நாற்காலியம்மா, அடப்போடா என்கிறமாதிரி வெத்திலையை குதப்பிக் கொண்டிருந்தான். பாப்பா பயந்து டோனவளாய் அம்மாவின் அருகே வந்து சாய்வு நாற்காலியைப் பிடித்துக் கொண்டாள். அந்த கிழட்டுக் குழந்தையை, இவள் – இந்தப் பாப்பா, தள்ளுவண்டியில் தள்ளப் போவதுபோல் தோன்றியது. முத்துக்கனி மட்டும் எழுந்து, உட்காருங்க அண்ணாச்சி என்றாள். ஆனால் மாமியார்க்காரியோ, மருமகளை எரிச்சலாய்ப் பார்த்துவிட்டு ஊஞ்சல் ஆசாமிகளுக்கு ஆணையிட்டாள்.

‘உட்காருங்கடா… மருமவனே… ஒங்கள யுந்தான். உட்காருங்க. எல்லாம் நான் எதிர்பாத்ததுதான்.’

மாமன் மகன்கள் உட்கார்ந்தார்கள். நடுவில் தயங்கி நின்ற முத்துவேலையும் ஆளுக்கொரு கையாக இழுத்து ஊஞ்சல் பலகையில் உட்கார வைத்தார்கள். ஆனாலும் ஊஞ்சலை அவர்களின் எடைக்கு தாக்குப் பிடிக்காமல் ஆடப்போனதையும் முன்கால்களை நீட்டி தரையில் அழுத்தி தடுத்துக் கொண்டார்கள்.

மாரிமுத்து, ஊஞ்சல்காரர்களை கோபம் தனியாமல் ஒருசேரவும், தனித்தனியாகவும் பார்த்தான். வலது பக்கத்துத் தடியன் இவன் வயதுக்காரன். பட்டுச் சட்டையின் மூன்று பட்டன்களைத் திறந்து போட்டு தங்கச் செயினின் டாலரை தூக்கி, தூக்கிப் போட்டு பந்தாடினான். இடது பக்கத்துக்காரன் தம்பி முத்துவேலைவிட ஒரு வயது பெரியவன். அதே சமயம் ஒரு வகுப்புக்குக் கீழே படித்தவன். அண்ணன் சூரன். தம்பி சூதன். நடுப்பக்கம் ஊஞ்சலில் பட்டும் படாமலும் விட்டத்தைத் துரக்கியபடி, இருந்த கோலத்தை நின்ற கோலம்போல் தோற்றுவித்த முத்துவேல் ஜீன்ஸில் கிடந்தான். அவன் உடைக்குள் இன்னொரு ஆளைத் துரக்கிப் போடலாம். அச்சடித்த அதுவும் டி.டி.பி. போட்டது மாதிரியான தெளிவான முகம். அளவான அவயங்கள். மாரிமுத்துவால் தம்பியைக் கோபமாகப் பார்க்க முடியவில்லை. நாலு முழ வேட்டியையும், நொந்து போன சிலாக்கையும் கட்டிக் கொண்டு படித்துவிட்டும், வேலையில்லாமல் ஊரில் பரட்டைத் தலையனாய் திரிந்த தம்பியை இப்படி நாகரீகமாகப் பார்த்ததில் அந்தச் சமயத்திலும் அவனுக்கு பெருமையாகத்தானிருந்தது.

‘பாத்தியளா.. என் தம்பியை என்பது மாதிரி அங்கே இருந்த எல்லோரையும் தோரணையாகப் பார்த்தான். அவர்களைப் பார்க்கப் பார்க்க, இவன் பார்வை அனலைக் கொட்டியது. வாய் அசிங்கமாகப் பேசப் போனது. மூன்றாவது கட்டில் உள்ள சமையலறையிலிருந்து, பலகாரங்களைக் கொண்ட பெரிய வட்டத் தட்டை, இரண்டு கைகளிலும் ஏந்தி வந்த, அத்தைக்காரியின் தங்கச்சி மகள், மாரிமுத்துவைப் பார்த்ததும், அச்சப்பட்டு பின்வாங்கினாள். வரலாற்று உண்மை தெரிந்தவள்.

மாரிமுத்து ஒவ்வொரு சொல்லுக்கும், ஒவ்வொருவராய்ப் பார்த்து இளக்காரமாய்க் கேட்டான்.

என் தம்பிய வளச்சிப்போட திட்டம் போட்டுட்டீக. ஆனா அதுதான் நடக்காது. டேய் முத்துவேலு எழுந்திரிடா.

அத்தைக்காரி, உடம்பில் ஒரு துரும்பைக்கட அசைக்காமல் யாருக்கோ சொல்வதுபோல் சொன்னாள்.

‘நாங்க ஒண்னும் வளைச்சிப் போடல. அப்பிடிப் போட்டாலும் ஊரான் பிள்ளையப் போடல. என் நாத்துனார் மகனத்தான்.

ஒங்ககிட்ட எனக்கு பேச்சில்லை. வாடா தம்பி, வீட்டுக்குப் போகலாம்.

முத்துவேல் எழுந்திரிக்கப் போனான். அதற்காகவோ என்னவோ போய் வருகிறேன் என்பதுமாதிரி பாப்பாவை பவ்வியமாகப் பார்த்தான். அவளோ பழையபடியும் ஒரு துரண் மறைப்பிற்குப் போய் மாரிமுத்துவின் கண்படாத கோணத்தில் நின்றுகொண்டு போக வேண்டாமென்று முத்துவேலுக்கு கண்ணாட்டி, முகமாட்டினாள். அந்த கடைக்கண் பார்வையில் முத்துவேலுக்கு அண்ணன் ஒரு கடுகாகத் தெரியவில்லைஎன்றாலும் கடுக்காய் கொடுக்கும் அளவிற்கு முக்கியத்துவம் அற்றவனாய் தெரிந்தான். சாவகாசமாகப் பதிலளித்தான்.

‘நீ போண்ணே. நான் வந்துக்கிட்டே இருக்கேன்’.

‘காலையில டெல்லியில் இருந்து வந்தவன். இரண்டு வருசமாய் பாக்கல. எங்கிட்ட முகத்தக் காட்டாமல் யாருகிட்ட காட்டக் கூடாதோ அவங்ககிட்ட முகம் காட்ட வந்துருக்கே. என்னடா புது உறவு. எழுந்திரிடா’

‘போண்ணே. பின்னால வாறேன்’.

‘இப்போ நீ வந்துதான் ஆகணும். ரெண்டு பேரும் சேர்ந்து ஊர்ல நடந்தா அதுதான் பெருமை’.

‘ஒன் பெருமைக்கு நான்தானா கிடைச்சேன்?. நான்தான் வாரேன்னு சொல்றேனே.- கொஞ்சம்கூட ஒரு இது இல்லாம’

‘சரி. ஒன்னை இப்போ தம்பியா கூப்பிடலை. பங்காளியாக் கூப்புடுறேன். நம்ம ரெண்டு பேருக்கும் கணக்கு வழக்கு, பாக்கணும். பாகம் பிரிக்கணும். வயசான அம்மா. ஒன்கிட்ட இருக்கணுமா… இல்ல எங்கிட்ட இருக்கனுமான்னு தீர்மானிக்கனும்’.

‘எனக்கு… சொத்து… சொகம் எதுவும் வேண்டாம். அம்மாவையும், சொத்தையும் நீயே வச்சி கட்டிக் காப்பாத்து. என்னை கால், கையோட விட்டாப் போதும்’.

‘அது எப்படிடா முடியும். அம்மாகிட்ட பால் குடிச்ச கணக்கு இருக்குது. நான் உன்னை ரெயில் ஏத்தி படிக்க வச்ச கணக்கிருக்கு. ஒன் அக்காமாறுங்க ஒனக்கு துணி துவைச்ச கணக்கிருக்குது. இதெல்லாம் கணக்கு பாக்க முடியாத கணக்குடா. எந்திரிடா’.

‘என்னண்ணே நீ என்னை அடிமைமாதிரி நினைச்கப் பேசுறே’.

மாரிமுத்து, தம்பியை அதிசயத்துப் பார்த்தான். நேருக்கு நேராய் பேசாதவன். சின்னத் தேவைகளை அம்மா மூலமும், பெரிய தேவைகளை அண்ணி மூலமும் தெரியப் படுத்தியவன். டெல்லிக்கு வேலையில் சேர புறப்படும் போதுமட்டும் தன் கைகளைப் பிடித்துக்கொண்டு விம்மியவன். டெல்லிக்குப் போனதும் பேசாக்குறையை பக்கம் பக்கமாய் கடிதமாய் எழுதியவன். நீ அண்ணன் அல்ல. அப்பா! என்றவன். ஒவ்வொருவருக்கும் ஒரு தாய்தான். ஆனால் எனக்கு ரெண்டு தாய்கள் என்று எழுதியவன். அப்பேர்ப்பட்ட தம்பி. ரெண்டு வருஷத்துக்கு முன்னால டெல்லியில வேலையில சேர்ந்த ஆறாவது மாதத்திலேயே வீட்டிற்கு ஒடி வந்தவன். தன்னோடு காடுகழனிக்கு வந்தவன். இந்த அத்தக்காரி வயலும் பக்கத்துலதான். அங்கதான் இந்த மூதேவியோட இஸ்க்கு தொஸ்கு ஏற்பட்டிருக்குமோ?.

மாரிமுத்து, சிறிது சிறுமைப்பட்டு நின்றான். கடைசியாக அவன் மனப்போக்கை தெரிந்து கொள்வதற்காக ஒரு அஸ்திரத்தை வீசிப் போட்டான்.

‘ஒனக்கு, ஒரு பெண் வீட்டிலேருந்து துப்பு வந்திருக்குடா. நல்ல இடம்டா எழுந்திரிடா’.

‘எனக்கு கல்யாணம் எதுவும் வேண்டாம். எந்த நேரத்துல நடத்தணுமுன்னு’.

முத்துவேல், அண்ணனிடம் வெட்டு ஒன்று துண்டு இரண்டாய் பேசத்தான் நினைத்தான். அப்படிப் பேசும் போது அவன் முகத்தைப் பார்த்தவுடனேயே பேச வந்த வார்த்தைகள் நாவோடு ஒட்டிக் கொண்டன. அப்போது பார்த்து அத்தைக்காரி குத்தலாய்க் கேட்டாள்.

‘கல்யாணம். பொல்லாத கல்யாணம். தகப்பன் இல்லாத பிள்ளையை இந்தாறு லட்ச ரூபாய்க்கு விற்கிற கல்யாணம். அந்தக் கணக்கு. இந்தக் கணக்குன்னு காட்டி அந்த ரூபாயையும் அமுக்குற கல்யாணம்’.

‘ஒன்ன மாதிரி நான் ஒண்னும் கூட்டிக் கொடுக்கிற வம்சம் இல்லை’.

‘இந்தாப்பா மரியாதையாப் பேசு. என் பையன்களுக்கு கோபம் வருமுன்னே போயிடு’.

‘கோபத்தையும் பாத்துடலாம்’.

‘டேய் கடைசியாக் கேக்கேன். வாரியா இல்லியா’.

‘இப்போ வரமாட்டேன். அப்படின்னா. ஒன்னை உதைச்சு துரக்கிக்கிட்டு போவேண்டா’.

பெரிய மாமா பையன் சூளுரைத்தான்.

‘வரமாட்டேன்னு சொல்றவர, தூக்கீட்டுப் போறதுக்கு அவர் என்ன ஆட்டுக் குட்டியா?. அதைப் பார்த்துட்டு கம்மா நிக்கிறதுக்கு. எங்க கையி வளையல் போடல’.

‘அதையும் பாத்துடலாம். டேய் முத்துவேலு எந்திரிடா’.

‘தேவையில்லாம இதைக் கெளரவப் பிரச்சனையாக்கிட்டே. எனக்கும் கயமரியாதை இருக்கு. என்னால வரமுடியாது. ஒன்னால’.

முத்துவேல் சொல்லி முடிக்கும் முன்பே, மாரிமுத்து ஆவேசமாய்ப் பாய்ந்து முத்துவேல் கையைப் பிடித்து, ஊஞ்சலில் இருந்து இழுத்துக் கீழே போட்டான்.

கீழே விழுந்தவனைத் தூக்கி நிறுத்தி அவனைக் குண்டுக் கட்டாக கமக்கப் போனான். முத்துவேல், அண்ணனைத் திருப்பித் தாக்கலாமா என்று யோசித்தபோது, அத்தைக்காரி உசுப்பி விட்டாள். ‘ஏண்டா, பாத்துக்கிட்டு நிக்கீக. சவத்துப் பயல, இழுத்துக் கிடத்துங்கடா’.

இதற்குள், அம்மா சொல்லப் பொறுக்காதவர்களாய் மாமா பையன்கள் மாரிமுத்துவை நெருங்கினார்கள். மாரிமுத்து தம்பியை விட்டுவிட்டு ஓடினான். அவர்கள் மமதையாய் சிரித்தபோது, வடபத்தியில் ஒரு குலை தேங்காய்ப்பக்கம் கிடந்த ஒரு அரிவாளை அவர்களைப் பார்த்துக் கொண்டே எடுத்தான். திருப்பாய்ச்சி அரிவாள். கழுத்தில் பட்டால் தலையோடு வரும். முனை வளைந்த அரிவாள். வயிற்றில் பட்டால் குடலோடு வரும்.

மாரிமுத்து, அசல் அய்யனாராய் ஆனான். வேட்டைக்குப் போகும் கடலைமாடன்போல் அரிவாளை ஒருச் சாய்த்தபடியே அவர்களை நோக்கி அடிமேல் அடி வைத்தான். கண்கள் பஞ்சாக்கினியாகின. நாக்கு மகிசாகரவர்த்தினிபோல் வெளிப்பட்டது. ஆயுதமற்ற இன்னொரு கையும் அரிவாளாய் விறைத்து நின்றது. அவன் யாருக்கு குறி வைக்கிறான் என்பது புரியவில்லை. அத்தைக்காரி. அய்யய்யோ. அய்யய்யோ.. என்று அரற்றியபடியே மகளையும் இழுத்துக் கொண்டு மூன்றாவது கட்டின் முதலறைக்குள் போய் கதவைத் தாழிட்டாள்.

பின்னர் சன்னல் வழியாக மகன்களை கூக்குரலிட்டாள்.

‘ஒடி வாங்கடா. அண்ணன் பாடு. தம்பி பாடு’ என்று உஷார்படுத்தினாள். அவர்களும் தாய் சொல்லைத் தட்ட விரும்பாமல், திரும்பாமல் பின்பக்கமாய் ஒரு அனுமானத்துடன் ஓடி, அம்மா இருந்த அறைக்குள் கதவில் சாய்ந்தபோது, அவள் அந்தக் கதவை வேக வேகமாய்த் திறந்து, அதே வேகத்தில் மூடினாள். முத்துக்கனி மட்டும் தரையில் மெழுகுவர்த்தியாய் உறைந்து நின்ற முத்துவேல் பக்கம் போய் நின்றாள். மாமியார்க்காரி பேசுவதை திரும்பிப் பாராமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.

‘ஏய் முத்துக்கனி. உள்ளே வா. இல்லன்னா அந்தப் பக்கமா ஓடிப் போ. பாவி மொட்டை எந்த நேரத்துல முழுகாம ஆனாளோ எல்லாமே முழுகுது. இந்தாப்பா மாரிமுத்து ஒன் தம்பிய வெட்டனுமுன்னா, வெளியில கொண்டு வெட்டு. ஒனக்கு கோடிப் புண்ணியம். இந்தாப்பா முத்துவேலு நாங்க ஒண்ணும் உன்ன வெத்தில பாக்கு வச்சு கூப்பிடல. ஒனக்கு இங்க வேலையுமில்ல. வெளியில போ. வெளியில போயி ஒங்கண்ணன நீ வெட்டு. இல்ல அவன் உன்னை வெட்டட்டும். அந்தச் சமயம் பார்த்து, பாப்பாவும் குரல் கொடுத்தாள். அண்ணி, இங்க வாங்க. ஒடிவாங்க. அவங்க எப்படியும் போகட்டும்’.

மாரிமுத்து, அரிவாளை இப்போது ரெண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு, நிலை குலைந்து நின்ற முத்துவேலை நோக்கி குறிபார்த்து நடந்தான். முத்துக்கனி மன்றாடினாள். ‘எண்ணாச்சி. எண்ணாச்சி. இது ஒன்தம்பி வளத்தகடா மாதிரி வெட்டிடாத அப்புறம் நீதான் வருத்தப்படுவே’.

மாரிமுத்துக்கு, எதிரே நிற்பவன், எதிரி அல்ல என்பதும் அவன் தன் கூடப்பிறந்த தம்பி என்பதும் மெல்லப் புரிந்தது. ஆனாலும் குருவி பறந்த கிளை ஆடுவதுபோல் ஆவேசம் முற்றும் கலையாமல் தம்பியின் தலை முடியை செங்குத்தாய் பிடித்துக் கொண்டு அவனை அங்குமிங்குமாய் ஆட்டிக் கொண்டே, அரிவாள் வீச்சாய் பேசினான்.

‘நாம வாழ்ந்து கெட்ட குடும்பம் என்கிறத மறந்திட்டியடா.. அப்பா, குடி. கூத்துன்னு இருந்த சொத்த அழிச்கட்டு குடியிலே செத்ததால நம்ம குடி இப்படி ஆய்ச்சுதுன்னு ஒனக்கு எத்தனை தடவ சொல்லியிருப்பேன். இதே அரண்மனை வீட்டுல பிறந்த நம்ம அம்மா, நொடிச்சு போயிட்டாள்னு, தான் சாப்பிட்ட எச்சில் சாப்பாட்ட, அம்மாகிட்ட நீட்டினவள் அந்த நீலி. நானும் பக்கத்துலதான் நின்னேன். அன்னைக்கு போட்டோம் சபதம். செத்தாலும் சாவோமே தவிர, இந்த வீட்டுப் படிக்கட்ட மிதிக்க மாட்டோமுன்னு அம்மாவும் நானும் ஒருத்தருக்கு ஒருத்தர் சத்தியம் செய்தோம். அந்தச் சத்தியத்தை பொய்யா ஆக்கிட்டியேடா பாவி’.

அண்ணனின் முடிப்பிடியில் தம்பியின் கண்கள், துருத்தின. மாரிமுத்துவின் அரிவாள் திடப்பட்டு நின்றது. முத்துக்கனி இப்போது ‘எய்யோ.. எம்மோ’என்று அவர்கள் இருவரையும் சுற்றிச் சுற்றி வந்தாள்.

‘எண்ணாச்சி. எண்ணாச்சி. இது நீ வளத்த பிள்ள. மறந்துடாத’ என்று அவனுக்கு நினைவு படுத்தினாள். அவன் மோவாயைப் பிடித்து தாங்கினாள்.

மாரிமுத்து தம்பியின் முடியைப் பிடித்தக் கையை எடுத்து, இன்னொரு கையையும் சேர்த்து, தம்பியின் கழுத்தில் கவுண் போல் போட்டுக் கொண்டான். முத்துக்கனியை பார்த்தபடி ஒப்பித்தான்.

‘இவன் பழச மறந்துட்டாம்மா… என் தங்கச்சிங்க புல்லுக்கட்டு சுமந்தும், நான் வாடகை வண்டி அடிச்கம் இவன படிக்க வச்சோம். அப்போ உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி கழுகாகுமான்னு ஊர் முழுக்கச் சொன்னவள் ஒன் மாமியார். ஒன் கொளுந்தன், அதோ ஒளிஞ்சு கிடக்கானே வீராதி வீரன். அவன் காலேஜூக்கு பைக்குல போவான். அதே காலேஜூக்கு என் தம்பி. ச்சி. இவனா தம்பி. இந்தப்பய கால்தேய நடப்பான். ஒரு தடவையாவது பைக்குல ஏறுடான்னு சொல்லியிருப்பானா. அவன்கிடக்கான். இவன்மேல கண்ணு போடுற அந்தப் பாப்பா மட்டும் என்னவாம். நாலு வருசத்துக்கு முன்னால் கோவில் திருவிழாவுல, இவன பார்த்துட்டு தெக்குத் தெரு மாடத்தி அக்கா பாப்பாவப் பார்த்து ஒன் முறை மாப்புள எப்படி ஜம்முனு இருக்கான் பாருன்னு கம்மா ஒரு பேச்சுக்கு கேட்டிருக்காள். ஒடனே இவள், “எவன் எனக்கு முறை மாப்புளே. இந்த மாதிரி பேச்ச எந்தக் காலத்திலயும் பேசாதன்னு இவன் காதுபடவே சொல்லி இருக்காள். இவன் என் சம்சாரத்துக்கிட்ட சொல்லி குமுறியிருக்கான். அப்ப மட்டும் இல்லாத உறவு இப்போ எப்படி வந்துட்டாம். இவன் எடுத்த எடுப்பிலேயே ஆபிசர் ஆகாட்டா இந்த உறவு வந்திருக்குமா. இவன் டெல்லிக்கு ராசாவான்னாலும். எச்சில் தட்டக் காட்டி, எச்சிப் படுத்துனதுக்காக, சபதம் போட்ட தாய்க்கு பிள்ளைதானே. நீயே சொல்லும்மா. அப்படியும் ஒன் நாத்தினார இவன் கட்டிக்கனும்முன்னா சொல்லு. நான் இவனை இங்கேயே விட்டுட்டு போயிடுறேன்’.

முத்துக்கனி பதில் சொல்ல முடியாமல் திணறினாள். உடன்பட்டால் நியாயக் குற்றம். உடன்படாவிட்டால் வீட்டுக் குற்றம். தான் மாட்டிக் கொண்டது போதாதா.

மாரிமுத்து, அவளுக்கு பிரச்சனையைக் கொடுத்து இருப்பதைப் புரிந்து கொண்டவன்போல், தம்பி பக்கம் திரும்பிப் பேசினான்.

‘நீ எவளுக்கு ஏங்கிறியோ.. அவள், தான் மட்டும் பதுங்கினதைப் பாத்தியா. ஒப்புக்காவது ஒரு சொல் சொன்னாளா. இதுக்குபேரிதான் தெய்வீகக் காதலுன்னா. நான் விடமாட்டேண்டா. அந்தச் சீமைப்பன்றி சொல்றமாதிரி ஒன் கல்யாணத்தை நான் வியாபாரமாக்கல. ஒனக்கு எங்க இஷ்டமோ அங்கே கட்டிக்கோ. எந்தச் சாதியாவும் இருந்துட்டு போகட்டும். சட்டைக்காரியா இருந்தாக்கட தப்பில்லே. இந்த வீட்டுல நீ கட்றதுனால எனக்கு நஷ்டமில்லே. ஆனா இது ஒனக்கு புதைமண் வீடு. நம்ம அம்மாவ கேவலப்படுத்திய வீடு. பழசை மறக்கலாம். மன்னிக்கலாம். ஆனா அதே பழக புதுசா வேடம் போட்டால் நாமதான் ஒதுங்கிப் போகணும். இதையும் மீறி நீ இந்த வீட்டுலதான் சம்பந்தம் எடுப்பேன்னா இந்தா அரிவாள். ஒங்கையாலயே என்ன வெட்டிப்போடு’.

மாரிமுத்து, தோளோடு இடுக்கி வைத்திருந்த தம்பியின் வலது கைக்குள் அரிவாள் பிடியை திணித்துவிட்டு, அவனுக்கு வெட்ட தலைகொடுப்பவன்போல் தலை குனிந்தான். முத்துவேல், குத்துக்கல்லாய் நின்றபோது, மாரிமுத்து முதுகை திமிர்த்தாமல், தலையை மட்டும் நிமிர்த்திப் பேசினான்.

‘ஏலே பேடிப்பயல்களா. வெளியில வாங்கடா. ஒங்கல ஒண்ணும் செய்ய மாட்டேண்டா- என் தம்பியால என்னை வெட்ட முடியலையாம். நீங்களாவது வந்து வெட்டுங்கடா. அவனையாவது வெட்டச் சொல்லுங்கடா. ஏன்னால். அவன் ஒங்க சொல்லத்தான் கேட்பானாம்’.

மாரிமுத்து, பொங்கிவந்த விம்மலை வெளிப்படுத்தப் போன வாயை ஒரு குத்துக் குத்தி நிறுத்தினான். ஆனாலும் அந்த அதிர்வில் கண்களில் திரண்டு நின்ற நீர்த் தாரை தாரையாய் அருவிப் பெருக்காய் உருண்டது. அவன் திரும்பி நடந்தான். அவன் தோளில் ஒரு கை பட்டது. முத்துவேலின் கை. இப்போது மாரிமுத்து மனம்விட்டு, வெட்கம்விட்டு தம்பியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அழுதான்.

முத்துவேல் அண்ணனை மார்போடு தாங்கி, தோளோடு சேர்த்து, அவனை நகர்த்து நகர்த்தி திரும்பிப் பாராமல் அந்த வீட்டைவிட்டு திரும்பிப்பாராமல் வெளியேறினான்.

– தினபூமி – தீபாவளி மலர் – 1997

– ஈச்சம்பாய் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 1998, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *