கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 19, 2024
பார்வையிட்டோர்: 2,021 
 
 

டாக்டர் கனகா, படுக்கையறையில் கட்டிலில் படுத்திருந்தாள். அவள் எதிரில் நாற்காலிகளில் அவளுடைய மகன் கேசவனும் மருமகள் ரம்யாவும் அமர்ந்து இருந்தார்கள். பேச முடியாத நிலையில் இருந்த கனகா, மகனையும் மருமகளையும் பாரத்து புன்னகை பூத்தாள் . குழந்தை எங்கே என்று சைகையில் கேட்டாள். ‘பையன் ரம்யாவோட அம்மா வீட்ல இருக்கான்’ என்றான் கேசவன். ஒடிசலான இளம்பெண் ரம்யா, அறையைச் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்தில் அந்த அறைக்குள் டாக்டர் கனகாவின் கணவர் பொன்னுரங்கமும் டாக்டர் ரங்கநாயகியும் நுழைந்தனர். டாக்டர் ரங்கநாயகி , கனகா படுத்திருந்த படுக்கையிலேயே அமர்ந்து கொண்டார். கனகாவைத் தொட்டுப் பார்த்தார். ‘ஒண்ணும் இல்லடி, கீழ விழுந்த இல்ல அதனால லேசா அடிபட்டதுல அதிர்ச்சியில உனக்கு பேச்சு வரலை. ரெண்டு நாள்ல சரியா போயிடும், கலகல ன்னு பேசுவ பாரு’ என்றார். அவர் கேசவனின் பக்கம் திரும்பி ‘எப்படிப்பா இருக்கே’ என்று கேட்டார். அவன் ‘நல்லா இருக்கேன் ஆன்ட்டி, அம்மாவுக்கு பயப்படும்படி ஒண்ணும் இல்லையே’ என்றான். ‘ஒண்ணும் இல்லப்பா அவளே பெரிய பிரமாதமான கைராசி டாக்டர்ன்னு பேர் எடுத்தவ அவளுக்கு தெரியாதா..‘ என்று பதில் அளித்த ரங்கநாயகி , கனகாவைப் பார்த்து ‘நான் வரேன்டி சாயங்காலம் வந்து பார்க்கறேன்’ என்று கூறியபடியே எழுந்தார். கனகாவின் கணவரைப் பார்த்து ‘கோல்டு அதே மாத்திரையை கொடுத்துகிட்டு வாங்க . ஏதாவதுன்னா எனக்கு போன் பண்ணுங்க இல்ல மெசேஜ் பண்ணுங்க’ கூறியபடியே நகர்ந்தார். கனகா கையை அசைத்தாள்.

பொன்னுரங்கம் அவரை வழி அனுப்பி விட்டு வந்து மனைவிக்குக் கஞ்சியை ஊட்டி விட்டார். மகனும் கணவனும் பேசாமல் இருப்பது கனகாவுக்குக் கவலையாக இருந்தது. பொன்னுரங்கம் அறையை விட்டு வெளியேறி கூடத்தில் உள்ள சோபாவில் அமரந்தார் . கேசவன் அங்கே வந்தான். அவனுடைய மனைவி அவனுக்குப் பின்னால் வந்து நின்றாள்.

‘டாடி ஒங்க கிட்ட பேசணும்..‘

‘பேசுப்பா ‘

‘வேலைன்னு ஒண்ணும் இல்லாம தானே இருக்கீங்க.. ஹவுஸ் ஹஸ்பெண்டு வேலை தானே, அதை கூட ஒழுங்கா பார்க்காம வீட்லயும் அம்மாவை வேலை செய்ய விட்டு வழுக்கி விழ வெச்சிருக்கீங்க… இதுதான் நீங்க ஒங்க மனைவியைப் பார்த்துக்கற அழகா?‘

‘அது வந்து’

‘நான் பேச வேண்டியதை பேசி முடிச்சுடறேன்’

‘சரிப்பா நீ உன் மனசுல இருக்கறதை கொட்டி முடி, அதுதான் நல்லது’

‘டாக்டருக்கு படிச்ச எங்க அம்மா ஒங்களுக்கு வாழ்க்கைப்பட்டு என்ன கண்டாங்க… ஒங்க அப்பா, மெடிக்கல் சீட் வாங்கி கொடுத்தார்ன்னு படிக்காத ஒங்கள எங்க அம்மா தலையில கட்டி விட்டாரு அழுத்தம் கொடுத்து.. அம்மாவோட புருசன்ங்கறது தான் ஒங்களோட அடையாளம். ஒங்களுக்கு ன்னு என்ன அடையாளம். பிசினஸ்ல சாமர்த்தியம் இல்லாம கூட்டாளிங்க கிட்ட ஏமாந்து பணத்தை தொலைச்சீங்க. அரசியல்ன்னு போனீங்க.. வெறும் கையோட வந்தீங்க. ரெண்டு தடவை ராஜ்ய சபா எம்பி ஆக போறீங்க ன்னு நியுஸ்ல அடிபட்டிங்க, ஆனா ஆகவே இல்ல..‘

அறையிலிருந்த கனகா கஷ்டப்பட்டு நடந்து வந்து கணவர் அருகில் அமர்ந்து கொண்டாள். மகனைப் பார்த்து பேசாதே என்று சைகை காட்டினாள்.

‘பிள்ளையும் அப்பாவும் பேசிக்கறதே இல்லன்னு வருத்தப்பட்ட இல்ல.. பேசட்டும்மா நீ பேசுப்பா’

‘நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்.. ஒங்க முகத்திரையை கிழிச்சுகிட்டு இருக்கேன்..‘

‘கிழிச்சிட்டதா நீ நெனச்சிகிட்டு இருக்கே. எனக்கு முகத்திரைன்னு எதுவும் இல்ல. பி.எச்.டி முடித்தவன் இல்ல, அதான் ஆராய்ச்சி பண்ணதா நெனச்சுகிட்டு பேசற.. இதெல்லாம் உண்மை ன்னு வீட்டுக்கு வந்த என் மருமகள் நெனச்சுகிட கூடாது இல்ல. அதுக்காக எங்க ரெண்டு பேர பத்திய உண்மையை சொல்றேன் பொறுமையா கேளு. எங்க அப்பான்னு சொன்னியே, அவர் உனக்கு தாத்தா.. வற்றாத செல்வம் அவர் கையில். அதனால எத்தனையோ பேர படிக்க வெச்சாரு, தூக்கி விட்டாரு.. தாத்தாவோட நிர்ப்பந்தம் காரணமா, இவங்க என்னை கல்யாணம் பண்ணிக்கல.. வெட்கத்தை விட்டு சொல்லணும்னா, ஒங்க அம்மா பெரிய மனுஷியா ஆகறதுக்கு முன்னாடியே என்னை மனசுல வரிச்சிட்டாங்க. ருக்குமணி கிருஷ்ணரையே மனசுல வெச்சிருந்தா மாதிரி.. படிப்பாளியாகி டாக்டர் ஆயிட்டதால சமூக அந்தஸ்து ஒசந்துட்டதால காலம் மாறினதால அவங்களோட காதல் மாறலை..ரெண்டு பேருக்கு மனசு ஒத்துப் போச்சேன்னு எங்க அப்பா அதான் ஒங்க தாத்தா, அவங்க வீட்ல சம்பந்தம் பேச போனாரு, அங்க ஒங்க மாமா, அந்த தாத்தா எல்லாரும் மோசமா பேசி நோக அடிச்சு அனுப்பிட்டாங்க. பொன்னுரங்கத்தை மறந்திடு ன்னு ஒங்க பெரியம்மா, மாமா, சித்தி எல்லாரும் ஒங்க அம்மாவுக்கு வேப்பிலை அடிச்சாங்க. ஆனா ஒங்க அம்மா அவங்க பேச்சை எல்லாம் கேட்காம காதில ஏத்திக்காம ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்துட்டாங்க. வீட்டுக்கு வந்த மகாலட்சுமிய ஏத்துக்கனும்னு சொல்லி என்னோட அப்பா அம்மா ஒங்க தாத்தா பாட்டி எங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சாங்க. இன்னிக்கு வரைக்கும் நான் நல்ல கணவன். எங்க அப்பா அப்படி இப்படி ன்னு நீ மத்தவங்க கிட்ட சொல்லிக்க முடியாத மோசமான தகப்பனா நான் இருந்திருக்கலாம். ஆனால் நான் நல்ல கணவன். நான் வெட்டி ஆள், சம்பாதிக்காத ஆள்ன்னு நீ டிகளேர் பண்ணி இருக்கே. அது பத்தி ஒங்க மதருக்கு தெரியும். நான் என்ன வருமானம் கொண்டு வந்தேன்னு அவளுக்கு தெரியும். பிசினஸ்ல ஒங்க அம்மா பணத்தை நான் தொலைச்சுட்டேன்னு நீ நெனச்சுகிட்டு இருக்கே. நான் தொலைச்சது நான் சம்பாதிச்ச பணம் தான். இன்னொரு விஷயம். வேலைக்கார அம்மா வரலை. வெள்ளிக் கிழமை வீட்டை கழுவணும்னு கிளம்பினா, நான் பார்த்துக்கறேன்னு சொன்னேன் கேட்கல. நீங்க கிச்சன் வேலைய பாருங்க, நான் தரையை சுத்தம் செய்யறன்னு செய்யப் போய் கண் இமைக்கற நேரத்துல வழுக்கி விழுந்துட்டா.. தலைல லேசா அடி. ரங்கநாயகி ரெண்டு நாள்ல சரியாகிடும்னு சொல்லி இருக்காங்க. ஒங்க அம்மாவுக்கு தெம்பு வந்திடும். கவலைப்படாதே’

பொன்னுரங்கம் பேசி முடித்தார். கனகா அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

கேசவன், தந்தை கூறியது எதையும் காதில் வாங்காதவன் மாதிரி பேசினான்

‘அரசியல்ல குப்பை கொட்டினவருக்கு பேசறதுக்கு என்ன? அம்மா நீ இனிமே ப்ராக்டிஸ் பண்ண வேண்டாம். நான் இந்த வீட்டை புரோமோட்டர் கிட்ட கொடுக்க முடிவு பண்ணி இருக்கேன். அப்பா, நான் அம்மாவ அழைச்சுகிட்டு போய் பார்த்துக்கறேன். நீங்க கிராமத்துல சித்தப்பா வீட்ல போய் இருங்க’

‘இது என்ன ப்ரோபசல் ப்பா, இது அம்மா பேர்ல இருக்கற வீடு. ஒங்க அம்மா தானே முடிவு பண்ணனும்… ‘

‘அம்மா சம்பாதிச்சு வாங்கினது ங்றதுக்காக அப்படியே வெச்சு இருக்க பாரம்பர்ய சின்னமா? சிட்டில நான் இருக்கற வாடகை வீட்ல குழந்தையும் சேர்த்து நாலு டிக்கட் தான் இருக்கணும் னு வீட்டுகாரங்க சொல்றாங்க.. அதனால தான் அம்மா என் கூட வரட்டும். நீங்க கிராமத்துல போய் இருங்க. அம்மா, நான் உன்னோட ஒரே பிள்ளை நான் சொல்றது உன்னோட நன்மைக்காகத் தான். நீ உழைச்சு தேய்ஞ்சது போதும்.. உன்னை நல்லா பார்த்துக்கறேன் வா. ரம்யா அம்மாவோட திங்க்ஸ் பேக் பண்ணு’

‘எங்க ரெண்டு பேரையும் பிரிக்கறது என்ன திட்டம்பா உன்னோட திட்டம்’ என்றார் பொன்னுரங்கம் .

‘பிரிக்கறது என்ன… இளஞ்சோடியா நீங்க.. அம்மா வா போகலாம்’

கனகா வர முடியாது என்று பலமாகத் தலையாட்டினாள். மேசையில் இருந்த பேனாவையும் காகிதத்தையும் கையில் எடுத்துக் கொண்டாள். ‘வரவே முடியாது நீ போகலாம்’ என்று எழுதி மகனிடம் காண்பித்தாள்.

‘இவரையே கட்டிகிட்டு அழு ரம்யா வா போகலாம்’ என்று வேகமாக வாசலை நோக்கி நடந்தான். அவனுடைய மனைவி அவனைப் பின்தொடர்ந்தாள்.

கனகா, கணவனிடம் ஊஞ்சலைக் காண்பித்தாள். ‘அதுல உட்காரணுமா வா’ என்று அவளைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்ற பொன்னுரங்கம், மனைவியை ஊஞ்சலில் உட்கார வைத்தார். அவரை அருகில் அமரும்படி கனகா சைகை செய்ய, அவள் அருகில் அமர்ந்தார். கனகா, கணவரை ஆரத் தழுவிக் கொண்டாள். அவள் கண்களில் கண்ணீர். ஈன ஸ்வரத்தில் பேசினாள் ‘நம்ம பிள்ளை கட்டிகிட்டு அழுன்னு சொன்னான் இல்ல’ என்றாள். அங்கங்கே வெண்ணிறம் எட்டிப் பார்த்த அவளுடைய கூந்தலை அவர் வருடினார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *