கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2017
பார்வையிட்டோர்: 10,518 
 
 

வழக்கம் போல் அன்று காலை ஆறரை மணிக்கு அன்றைய தினசரி நாளிதழ் பாலன் வீட்டின் காரைத் திண்ணையில் கிடந்தது. கிழக்குப் பார்த்த பழைய ஓட்டு வீடு அது. திண்ணைக்கு கீழ் மண் வாசல்.

லேசான காலை நேர இளங்குளிர் காரணமாக சிலுசிலுவென குளிர்ச்சிதட்டி திண்ணைக்கு கீழ் வாசலில் மேற்கு நோக்கி இருந்த நாற்காலியில் அமர்ந்து அன்றைய நாளிதழை விரித்து படிக்கத் துவங்கினான் பாலன்.

வீட்டின் எதிரில் இருந்த பச்சை செடிகளின் இலைகளில் பனித்துளிகள் காலை இளவெயிலில் மினுமினுத்தது.

சில்லென்று இருந்த காலை பனிக்குளிரை ஓடுங்கள், ஓடுங்கள் என்று விரட்டியபடி கிழக்கில் இருந்து நேராக வந்த செஞ்சூரியக் கதிர்கள் பாலன் கையில் இருந்த தினசரி நாளிதழின் எழுத்துக்களை பிரகாசமாக்கி தாம் வந்துவிட்டதை அறிவித்தது.

“மணி ஏழாவப்போவுது எந்திரிங்கடா, இன்னைக்கு பள்ளிக்கூடம் போகலையா? எந்திரிச்சு பல்ல வெலக்கிட்டு காப்பிய குடிச்சுட்டு, குளிச்சு ரெடியாகுங்க நேரமாச்சு” என தானு சீனு இருவரையும் மகா அதட்டி எழுப்பிவிட்டாள்.

பாலன்-மகா தம்பதியருக்கு தானு சீனு இருமகன்கள். தானு மூத்தவன். சீனு இளையவன்.

ஒரே பழைய போர்வையை போர்த்திக்கொண்டு கயிற்று கட்டிலில் படுத்திருந்த தானு சீனு இருவரும் தூக்கம் தெளியாதவர்களாக அரைத்தூக்கத்துடன் “இரும்மா எந்திரிக்கிறோம்னு” முனகியபடி பலவந்தமாக தூக்கத்தை விரட்டிவிட்டு எழுந்து வெளியே வந்தனர்.

கிழேக்கே பார்த்து கைகளை மேலே உயர்த்தி கொட்டாவி விட்டான் தானு, சீனு வாசலின் ஓரத்தில் இருக்கும் பாத்ரூம் சென்றுவிட்டு வந்தான்.

“காப்பி குடும்மா” ன்னான் தானு, “எனக்கு டீ தான் வேணும்” ன்னு குறுக்கிட்டான் சீனு.

“டீ காப்பி குடிக்கறது இருக்கட்டும், ரெண்டுபேரும் மொதல்ல பல்ல வெலக்குங்க” என இருவரையும் அம்மாவுக்கே உரிய பாசம் கலந்த கண்டிப்புடன் கூறிய மகா “காலைல எந்திரிச்ச உடனே மொதல்ல பல்ல வெலக்கனுமுனு உங்க வாத்தியார் சொல்லித்தரலயா?” அன்பு கலந்த கோபத்துடன் தன்பொறுப்பை மறந்து வாத்தியார் பக்கம் அதை திருப்பி விட்டார்.

“பல்ல வெலக்குறதெல்லாமா, வாத்தியார் டீச்சர் சொல்லுவாங்க, இவங்க என்ன? சின்னக்குழந்தைகளா?” நம்ம வேலைகளை நாம செஞ்சுக்காம வாத்தியாரைச் சொல்லி தப்பிக்கிது சரியில்ல” பெற்றோர் பொறுப்பை மற்றவர் மேல் தள்ளிவிடவேண்டாமென சமையல் கட்டில் இருந்த மகாவை பார்த்து பாலன் சொன்னான்.

அம்மாவின் அன்புக்கட்டளையை ஏற்றுக்கொண்ட தானு சீனு இருவரும் பல்துலக்கி இளையவன் விருப்பமான அம்மா கொடுத்த டீயை குடித்துக்கொண்டே “இன்னைக்கு என்னப்பா செய்தி பேப்பரில்” தானுவின் கூற்றை “ஆமாப்பா சொல்லு” ன்னு வழிமொழிந்து சீனு ஆமோதித்தான்.

“அதான் சாமி பாக்குறேன்” பேப்பரின் பக்கங்களை பார்த்தபடியே பதில் சொன்ன பாலன் , திடீரென புருவம் உயர்ந்தபடி அந்த பக்கத்தின் நடுவில் இருந்த செய்தியை பார்த்து “டேய் சாமி இங்க பாருங்க, சிறந்த ஓவியக்கலைஞருக்கு அரசு விருது தர்ராங்களாம், பேப்பரில் செய்தி வந்திருக்குது” ன்னு தானு சீனு வின் கவனங்களை நாளிதழ் பக்கம் ஈர்த்தான்.

“எங்கப்பா கொண்டா பார்க்கலாம்” டம்ளரை கீழே வைத்த தானு ஆர்வமாக நாளிதழை பாலனிடமிருந்து வாங்க முற்பட்டான்.
“அதெல்லாம் முடியாது நாந்தான் மொதல்ல படிப்பேன், குடு பேப்பரை” ன்னு அவசரமாக தன் டீ டம்ளரை கீழே வைத்து விட்டு சீனு நாளிதழை வாங்கிக்கொண்டான்.

“அவங்கிட்டையே குடுப்பா, அவனே மொதல்ல படிக்கட்டும்” பீறிட்டு வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு விட்டுக்கொடுத்தான் தானு.

மூத்தவனுக்குரிய விட்டுக்கொடுக்கும் பக்குவ குணம் தானுவிடம் தென்பட்டதை கண்டு மன ஆறுதலடைந்தான் பாலன்.

“உடுசாமி அவனே படிச்சிட்டு போரான், நீ வா சாப்பிடு, பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு” சமையலறையில் நின்ற மகா தானுவை சமாதானம் செய்தாள்.

சகோதர போராட்டத்தில் வெற்றிபெற்ற சீனு நாளிதழை பாலனிடம் இருந்து வாங்கி படித்தான்.

“அப்பா, அப்பா என்னோட ஓவியங்களை விருதுக்கு அனுப்பலாம்ப்பா.!” ஆர்வமாக நாளிதழ் செய்தியை படித்த சீனு செல்லமாக தன் விருப்பத்தை பாலனிடம் கூறினான்.

“ஆமாம்பா சீனு ஓவியத்தை விருதுக்கு அனுப்பலாம்” தானுவும் சகோதர பாசத்தை பொழிந்தான்.

“அனுப்பிதா பார்க்கலாம் மாமா, கெடச்சா கெடைக்குது இல்லாட்டி போகுது” மகா மகன்களின் விருப்பத்திற்கு மேலும் வலுச்சேர்த்தாள்.

“சரி சரி அனுப்பிரலாம் விடுங்க, அந்த ஓவியங்கள் எல்லாம் எங்கே.! இருக்கு பாருங்க” பாலனின் வார்த்தைகள் கோரிக்கை ஏற்பை உறுதி செய்தது.

“பீரோவில் இருக்குதுப்பா எடுத்துட்டு வர்ரேன்” சீனு எழுந்து பீரோ உள்ள அறையை நோக்கி ஓடினான்.

பனிரண்டே வயதுடைய சிறுவன் சீனு வரைந்த பல ஓவியங்கள் அவன் படத்துடன் தினசரி நாளிதழ்களில் பிரசுரமானதை பத்திரமாக எடுத்து பாலன் குடும்பம் ஆவணப்படுத்தி வைத்திருக்கிறது.

மணி எட்டேகால் ஆனது, சூரியனின் செங்கதிர்கள் மஞ்சளாக பிரகாசிக்க துவங்கி, செடிகளின் இலைகளில் இருந்த பனித்துளிகளை விழுங்கி விட்டு, பாலன் வீட்டு மண்வாசலின் ஈரத்தை உலர்த்தி, நாற்காலியின் குளிர்ச்சியை போக்கி வெது வெதுப்பாக்கியது.

“சாப்பாடு ரெடி வாங்க சாப்பிடலாம்” சமையல் தயாரான செய்தியை மகா மூவருக்கும் தெரிவித்தாள். தானு சீனு பாலன் மூவரும் குளித்து, சாப்பிட்டனர். மகன்கள் பள்ளிக்கு புறப்பட, பாலன் தன் பணிக்கு திரும்பினான்.

அன்று பிற்பகல் பனிரண்டு மணி இருக்கும். தன் வகுப்பறையில் அமர்ந்திருந்த சீனுவை சகமாணவன் “சீனு உன்னை சார் கூப்பிடுகிறார் வா.!” ன்னு அழைக்க, வகுப்பாசிரியரின் அழைப்பை ஏற்று தலைமையாசிரியர் அறைக்கு சென்றான் சீனு.

தலைமையாசிரியர் அறையில் வகுப்பாசிரியர் மற்றும் அவன் பள்ளியின் இரண்டு பெண் ஆசிரிர்களுடன் பாலனும் நின்றிருந்தான்.

“உன் ஓவியங்களை விருதுக்கு அனுப்ப, அப்பா விண்ணப்பம் எழுதி வந்துள்ளார், சைன் பண்ணு” வகுப்பாசிரியர் சீனுவிடம் கூறினார்.

“நிச்சயம் விருது கிடைக்கும் நம்பிக்கையுடன் கையெழுத்து போடு சீனு” இரு பெண் ஆசிரியைகளும் சீனுவை ஊக்கப்படுத்தினர்.

முன்னதாக சீனுவின் அனைத்து ஓவியங்களின் வண்ண நகல்கள் மற்றும் சுய ஆவணங்கள், வெற்றிச்சான்றுகளின் நகல்கள் இணைக்கப்பட்ட விருதுக்கான வேண்டுகோள் விண்ணப்பத்தில் தலைமையாசிரியரின் சான்றொப்பம் பெற்று தயாராக வைத்திருந்தான் பாலன்.

விண்ணப்பத்தில் கையெழுத்து போட்டு விட்டு, தனது விருப்பத்தை அன்றே நிறைவேற்றிய அப்பாவை கட்டிப்பிடித்து அவர் மார்பில் முகம் பதிக்க மனம் துடித்தாலும், அது பள்ளியறை என்பதாலும், ஆசிரியர்கள் நிற்பதாலும் பாசத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அப்பா முகத்தை பார்த்தவாரே வகுப்பறையை நோக்கி நடந்தான் சீனு.

“சரிங்க சார் நன்றி.! வர்ங்கம்மா” ஆசிரியர் பெருமக்களிடம் அன்புடன் விடைபெற்று தபால் ஆபீசை நோக்கி புறப்பட்டான் பாலன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *