அம்மாக்கண்ணுவின் மனதில் இளஞ்சூடு பரவியது. “”””என்னாங்குற! வெள்ளன வந்து சேரு…”” சொல்லிவிட்டு விடியலுக்கு முன் பெரியான் எழுந்து போய் நீண்ட நேரமாயிற்று. அவரசமாக வேலைகளை முடித்தவள் ‘பாழாப்போன மழ பேஞ்சு மூணு மாசமாச்சு’ என்ற முணுமுணுப்புடன் வெட்டுக்கூட்டையுடன் வெளியே வந்தாள். தென்றல் சிலுசிலுவென்று அவள் முகத்தில் பரவியது. ‘இந்த தென்னலு ஒரு மாசத்துக்கு முன்ன வீசியிருந்தா பயறு நல்லாக் காச்சிருக்கும். மாடுகளவுட்டு மேச்சிருக்க வேண்டாம்…’
நினைத்துக் கொண்டவள் இன்னும் இரண்டு நாளுகளுக்குள் ஊற்று வெட்டித் தண்ணி இறைக்காவிட்டால் மிளகாய்க் கொல்லையின் வருவாளையும் இழந்துவிட வேண்டியது தான் என்ற ஆதங்கம் புடித்துத் தள்ள, நடையை விரைவாகப் போட்டாள்.
குடிசைகள் இன்னும் விழிக்காவிட்டாலும் அரசமரத்து டீக்கடை மட்டும் விழித்துக் கொண்டிருந்தது. அங்கே கூடியிருந்த ஆட்கள் பேச்சிலும் செயலிலும் பணம் பங்கிட்டுக் கொள்வதற்கான குறிப்புகள் தெரிந்தன. அதைக் கண்டும் காணாதவள் போல அம்மாக்கண்ணு அவர்களைக் கடந்தாள். “”””ஏலி… அம்மாக்கண்ணு. புருஷன முந்தானையை விட்டு அவுத்து வுடாமத்தான் வச்சிருக்கு…”” உரக்க நையாண்டியாகச் சொன்னவன் அவள் நின்று திரும்பிப் பார்த்ததும் அடுத்தவன் முதுகில் ஒளிந்து கொண்டான். ‘இவன் எல்லாம் ஆம்பள… பொறுக்கிப் பயலுங்க’ என்று முணுமுணுத்துக் கொண்டாள். காட்டாத்துக் கரையில் உள்ள கொல்லை மிளகாய்ச் செடிகள் வாடிக் கிடப்பதைக் கண்ட அவள் மனதில் தனக்கு முன்னே விடியலில் வந்த கணவன் ஏற்ற மரத்தடியில் உறங்குவதைப் பார்த்ததும் அதிர்ச்சியும் வேதனையும் கூடின.
“”””என்னாங்குற இங்க வந்து சாஞ்சிட்ட?”” “”””ம்… சும்மாத்தான்…”” எழுந்து உட்கார்ந்தான். “”””கூந்தாலி வாங்கிக்கினு வரலியா?…”” “”””இல்ல…”” “”””வந்து இம்மா நாழியா என்ன பண்ணுன?…”” “”””உடம்பு என்னவோ போல அசதியா இருந்துச்சு…”” “”””நான் சொன்னத கேட்டாத்தானே தெனவு எடுத்து போயி பக்கத்துல புள்ள இருக்கான்னு கூடப் பாக்காம உடம்ப போட்டு அலட்டுனா என்னாப் பண்ணும்?…”” “”””அது இல்லே புள்ள! ராத்திரி எனக்குத் தெரியான பூட்டு… ஒவ்வொருத்தனும் அம்பது நூறுன்னு சம்பாரிச்சிருக்கான். நேத்து கருப்பன் இங்க வந்தப்ப மச்சான் ராத்திரி ரெண்டாவது ஆட்டம் முடிஞ்சதும் அரச மரத்து டீக்கடைப் பக்கமா வா சேதி இருக்குன்னு சொல்லிட்டுத் தான் போனான்…ம்… அவன் தண்ணிக் கிராக்கி… எதாச்சும் பொலம்பிக்கிட்டு போறான்னு நெனச்சு சும்மா இருந்துட்டேன்…””
“”””என்னாங்குற நீ…”” அவள், அவனை வியப்புடன் விழித்துப் பார்த்தாள். “”””பஞ்சக் காலம்னுட்டு ராத்திரி நம்ப ஆளுங்க எல்லாம் சேர்ந்து ரோட்டோரத்து மரத்தையெல்லாம் வெட்டி வித்துருக்கானுங்க…”” “”””ச்சீய்… திருட்டுப் பொழப்பு ஒரு பொழப்பா?… நீ கம்முனு ஊத்தப் பறி…”” “”””நீ வெவரந் தெரியானப் பேசுற, இப்ப நம்ப ஊருக்குச் சுத்துப்பட்ட ஊரெல்லாம் இது நடக்குது. நம்ம தொகுதி எம்.எல்.ஏ.வே முன்னுக்கு நின்றுதான் மரமெல்லாம் வித்துக் கொடுத்திருக்காரு… அவருக்குத் தெரியாத வெவரமா?…”” “”””நல்லா இருக்கு. இன்னும் நாம பாழாப் போக வேண்டியதுதான்… இனிமே இது நீ நாக்குல வச்சுப் பேசாதே…”” அவன் அதற்கு மேல் பேச முடியாமல் அவளைத் தொடர்ந்தான்.
அன்று முழுவதும் பெரியான் வேலையில் கவனம் இல்லாமல் இருந்தான். அம்மாக்கண்ணும் அடிக்கடி அதனை இடித்துக் காட்டிக் கொண்டிருந்தாள். மாலையில் குடிசைக்கு வந்த பெரியான உட்காரக் கூடப் பிடிக்காமல் அரசமரத்து டீக்கடைக்குப் போய் பேசிக் கொண்டிருந்தான்.
இரவு நீண்ட நேரமாகியும் அவன் குடிசைக்குத் திரும்பவில்லை. வந்தவுடன் கயிற்றுக் கட்டிலை வெளியே கொண்வர முயன்றான். தட்டி மறைவில் படுத்திருந்த அம்மாக்கண்ணு எழுந்து வந்து “”””என்னாங்குற உம்மனசுல கருப்பு உட்கார்ந்துகிட்டு ஆடுதா? மருவாதியா இங்கன வந்து படு…”” மிரட்டலை அவன் காதில் வாங்காமல் வெளியில் வர அவள் அவனைப் பிடித்து இழுக்க, “”””நீ சும்மாக்கிடடீ… நாத்த முண்ட…”” அவள் கன்னத்தில் பலத்த அறையொன்று விட்டான். “”””தொணதொணன்னு நாயம் பேசுறா நாயம்… ஊருக்கெல்லாம் ஒரு நாயம் இவளுக்கு மட்டும் தனியா ஒரு நாயம்… குந்தாணியில கண்டாலாம்…”” உரக்கக் கத்தி அவளைப் பிடித்துத் தள்ளிவிட்டு கட்டிலுடன் வெளியே வந்தான்.
நீண்ட நேரமாகியும் அதிர்ச்சியிலிருந்து மீளாத அம்மாக்கண்ணு ‘படக்… படக்… ச்சீக்… ச்சீக்’ என்று காட்டாற்குக் கர்டரில் நாகூர் பாசஞ்சர் போடும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள். கன்னத்தில் எரிச்சலாக இருந்தது. ‘ம்… எக்கேடாவது கெட்டுப் போகட்டும்’ குடிசைக், கதவைப் படீரென்று சாத்தும்போது மூலையில் கிடந்த கோடாலியை எடுத்து குடிசையின் பின் பக்கம் கிடந்த வைக்கோற் போரில் வீசி விட்டு முடங்கிக் கொண்டாள். சற்றைக்கெல்லாம் எழுந்த பெரியான் “”””ஏய்! எங்கடி கோடாலி?…”” கேட்டபடி தேட ஆரம்பித்தான். “”””ம்… தாழக்குடிக்கு வெறவு பொளக்கப் போனது யாராம்?…”” அவள் முனகலாய்க் கேட்டதும், சட்டென்று அமாவாசையன்று எடுத்து போய் தன் மச்சான் வீட்டில் போட்டுவிட்டு வந்தது அவன் நினைவுக்கு வந்தது. “”””க்கும்…”” என்று உறுமியபடி வெளியேறினான்.
அவன் கோடாலியைப் போட்டுவிட்டு வந்த மறுநாளே இவள் எடுத்து வந்ததையும் இப்போது அது வைக்கோற் போரில் வீசி மறைத்ததால் அவனைத் தடுத்து விடலாம் என்பதையும் நினைத்தாள். வழக்கமாக விடியற்காலையிலேயே எழுந்துவிடும் பழக்கமுள்ள அவளால் இன்று எழுந்திருக்க முடியவில்லை. சற்றைக்கெல்லாம் “”””ஏய் அம்மாக்கண்ணு! ராத்திரி மரம் வெட்டப்போன நம்ம ஆளுங்களையெல்லாம் கலக்டரு ஸ்பெஷல் போலீஸோடு வந்து புடிச்சிட்டு போயிட்டாராம்…”” குப்பம்மாள் ஓடி வரவும் அவள் திடுக்கிட்டு வாரிச்சுருட்டி எழுந்து வெளியே வந்தாள். குடிசை வீட்டுப் பெண்களும், குழந்தைகளும் சாலையை நோக்கி, ஓடிக் கொண்டிருந்தார்கள். அவளும் ஓடினாள்.
ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் சாலை ஓரத்தில் பெரிய பெரிய மரங்கள் வெட்டுண்டு கிடக்க போலீசாஸருக்கு நடுவே ஆட்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களின் கண்கள் குனிந்திருந்தன. அவர்களில் அவள் பெரியானைத் தேடினாள். அவனை அங்கே காணவில்லை. “”””குப்பம்மா!… என் ஊட்டுக்காரரும் மரம் வெட்ட தோஷந்தான் எல்லாம் மாட்டிக்கிட்டாங்க…””அவளது குழப்பம் அதிகரித்தது. யாரும் தப்பி ஓட முடியாதபடி மாட்டிக் கொண்டிருக்க அவன் மட்டும் எப்படி தப்பியிருக்க முடியும்? குடிசைக்கு வந்தவளுக்கு நிலை கொள்ளவில்லை. கால் போன திக்கிலெல்லாம் தேடினாள். காட்டாற்றுக் கொல்லைப்பக்கம் அவள் வந்தபோது பெரியான் ஏற்ற மரத்டியில் படுத்துக் கிடந்தான். நெஞ்சு ‘திக்’ ‘திக்’ என்று அடித்துக் கொள்ள அவன் அருகில், சென்றதும் அவள் திடுக்கிட்டு எழுந்தான்.
“”””என்னாங்குற…”” அவளை அவன் எதிர்கொண்டான். “”””துடிச்சுப் போயிட்டேன் நீ இங்கன…”” ஓடிச் சென்று அவன் நெஞ்சுக்குள் புதைந்து அழுதாள். “”””கெட்ட காலத்திலும் நல்ல காலமாய்ப் பூட்டு கோடாலிய எடுக்க நான் தாழக்குடி போனப்ப மச்சான் வீடு பூட்டிக் கெடந்துச்சி. நான் திரும்பி வாரப்ப நம்ம ஆளுங்கள போலீஸு புடிச்சிட்டு. தப்பிச்சோம் பொழச்சோம்னு ஓடியாந்துட்டேன். ஒன் முகத்தப் பார்க்கவே வெக்கமா இருந்திச்சு. ஊத்தப் பறிச்சிட்ட ஒம் மனசு குளுந்து போய்டும்னு நெனெச்சேன்… களைப்பா இருந்துச்சி செத்தப் படுத்துட்டேன்… ஒன்ன அடிச்ச கைக்கு இந்நேரம் விலங்கு ஏறியிருக்கும்…”” அழுதே விட்டான்.
“”””அப்படி ஒரு தடவ இனி சொல்லாதே…””‘ச்சு’ ‘ச்சு’ வேகமா அடிச்சட்டேன்ல?”” அடிபட்டுக் கன்னிக் கிடந்த அவள் கன்னத்தில் தன் கருத்த உதடுகளைப் பதித்தான்.
“”””என்ன மன்னிச்சிடு தாயீ…””””””நம்ம அப்ப பாட்டான் தலைமுறையா, நாம ஒழச்சுப் பொழப்பு நடத்தறோம் மறந்துபூடாதே…””
வெட்கத்துடன் அவன் பிடியிலிருந்து அவள் விலகிக் கொண்டாள்.