“இப்பக்கூட ஒரு பிரச்னையும் இல்லை… அவளை மறந்துட்டு வரச்சொல்லுங்க. நான் பழசையெல்லாம் மறந்துட்டு சந்தோஷமா அவரோட குடித்தனம் நடத்துறேன். ஆனால் நானும் அவளும் சேர்ந்து வாழறதோ; இல்லை அவங்க உறவை நான் ஒத்துக்கொண்டு போறதோ கண்டிப்பாக நடக்காத விஷயம் மிஸ்டர் விஜய்.”
“நீங்க ஒத்துப் போகாட்டா, உங்களை அவர் விவாகரத்து பண்ணவும் தயாராக இருக்கார். அத நீங்க நெனச்சுப் பார்த்தீங்களா மேடம்?”
மாலினி இகழ்ச்சியாய் சிரித்தாள். “என்னை பயமுறுத்திப் பார்க்கிறீங்களா விஜய்? நான் அவரைப் பிரியறேன்னு நினைத்து எத்தனை துக்கமும் சோகமும் அடையறேனோ; அதே அளவு தன்மானமும் தன்னம்பிக்கையும் எனக்கு இருக்கு விஜய்.”
“…………………………”
“இத்தனை வசதிகள், இந்தக் கார், பங்களா, பாங்க் டெபாசிட் இதெல்லாம் கண்டு எத்தனை பிரமிப்பு எனக்குள்ளே இருக்குதோ; அதே அளவு இது இல்லாம வாழறதைப் பத்தின அடக்கமும் என் மனசிலே இருக்கு. உங்களுக்கு சாரை இப்ப இந்த மூணு வருஷமாத்தான் தெரியும் விஜய். எனக்கு அவரை பன்னிரண்டு வருஷமா தெரியும். இந்தப் பெரிய சென்னை நகரத்திலே நாம யாரு, என்ன ஆகப் போறோமோன்னு மனசு முழுக்கக் கேள்வியாகவும்; கையில் வெறும் நாலாயிரம் பணத்துடனும் திருவல்லிக்கேணியில் நாங்க ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் எங்க வாழ்க்கையை ஆரம்பிச்சோமே – அதுலேர்ந்து இதுவரைக்கும் ஒரு நாளைக்கூட நான் மறக்கலை; அவரும் மறக்க முடியாது. இது தப்புன்னு ரியலைஸ் பண்ணி திரும்ப என்னிடம் வருவார்ன்னு எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கு…”
விஜய் பதில் சொல்லத் தெரியாமல் சற்று நேரம் விழித்தார்.
“உங்க குழந்தைகளோட வாழ்க்கையை இது பாதிக்கும்னு நீங்க நினைக்கலையா?”
“இந்தக் காலத்துக் குழந்தைகள் ரொம்ப ஸ்மார்ட். அதுவும் என் குழந்தைகள் பற்றி எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடிய பக்குவம் அவங்களுக்கு வரும். அப்படி வரும் விதமா நான் நடந்துப்பேன்.”
விஜய் வாயடைத்துப் போனார்.
தன்னைப் பற்றியும், தன் குழந்தைகள் பற்றியும், தன் வாழ்க்கை குறித்தும் இந்தனை தெளிவாகவும் துணிவாகவும் சிந்தித்துப் பேசும் பெண்ணிடம் வேறு என்ன சொல்ல முடியும்? இத்தனை துணிச்சலாக மாலினி முடிவெடுக்கக் காரணம் என்ன?
மாலினியும் சிவராமனும் தனித்தனியே வேலை பார்த்தனர். திருமண வயதில் ஜாதகம் பார்த்து பெரியோர்களின் ஆசியுடன் சிறப்பாக திருமணம் புரிந்துகொண்டனர். அப்போது அவன் மெடிகல் ரெப். பாதி நாட்கள் டூரிலும், மீதி நாட்களை சென்னையிலும் கழித்தான் சிவராமன். போராட்ட வாழ்க்கை அது. குறைவாகவே வாங்கிய சம்பளம் அவர்களை கணக்குப் போட்டு வாழ வைத்தது.
ஆரம்ப தினங்களில், பொழுதுபோக்கக் கூட பணம் செலவு செய்ய முடியாத வருமான நிலையை உணர்ந்து, திருவல்லிக்கேணியில் ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்ந்தார்கள். மாலை வேளைகளில் காசு செலவழிக்காமல் காந்தி பீச் வரை நடந்துவிட்டு வந்தார்கள். வெளியூரும் உள்ளூருமாய் சிவராமன் உழைத்த உழைப்பு அவனுக்கு ‘ஸ்டார் ரெப்’ என்ற அந்தஸ்த்தைக் கொடுத்தது.
படிப்பும், திறமையும் மட்டுமின்றி அவனுடைய தோற்றமும், பணிவும், அழகான ஆங்கிலமும், மரியாதை மிகுந்த தமிழும், அவனை சந்திக்க வந்தவர்களையும், அவன் சந்திக்கச் சென்றவர்களையும் கட்டிப்போட்டது. மாலினி, அவளும் உயர்ந்து அவன் உயர்விலும் அக்கறை காட்டக்கூடிய பெண்ணாய் இருந்தாள். வெளியூருக்கு அடிக்கடி போகும் கணவனை நச்சரிக்காமல், “நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் தைரியமாப் போங்க” என்று சொல்லி நம்பிக்கையூட்டினாள். மனைவி நம்பிக்கையுடன் இருப்பதே கணவனை இன்னும் உழைக்கவும், உயரவும் செய்யும்.
அவன் உழைத்தான். உயர்ந்தான். முப்பத்தியெட்டு வயதில் அவன் கம்பெனியின் ஈ.டி. ஆனான். இரண்டு குழந்தைகள். மாலினி நிறைய யோசித்து, குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக தன்னுடைய வேலையை உதறினாள்.
அவர்கள் ஒற்றுமையுடன், புரிதலுடன் ஓடிய ஓட்டமும், நடையும், உடல் வருத்தமும், கடின உழைப்பும் அவர்களை திருவல்லிக்கேணியின் ஒண்டுக் குடித்தன வாழ்க்கையில் இருந்து பெயர்த்து அடையாறில் கம்பெனி மூலமாக ஒரு தனிவீடு, அதில் கம்பெனி கார் ஒன்றும், சொந்தக் கார் ஒன்றும் என்ற நிலைக்கு உயர்த்தியது. அருகிலேயே இருந்த ஆங்கிலப் பள்ளியில் குழந்தைகள் இரண்டையும் சேர்த்தார்கள்.
உழைப்பின் பலனை அனுபவிக்கலாம் என்ற சந்தோஷத்தில் மாலினி சற்று நிமிரத் தொடங்கிய காலகட்டத்தில்தான் சிவராமன் சித்ராவைச் சந்தித்தான்.
சித்ரா அவன் வேலை செய்த கம்பெனியின் கீழ்த்தளத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் மென்பொருள் இன்ஜினியர். சிவராமன் கார் எடுக்க வரும்போது பரிச்சயம் காரணமாய் பழக்கம் ஏற்பட்டது. இது எப்படி வளர்ந்தது என்று கற்பனையோ, விவாதமோ செய்து பார்க்கமுடியாத அளவில் வேகமாய், மிக வேகமாய் அவர்கள் நட்பு பலப்பட்டு அதன் எல்லைகளைக் கடந்தது.
மாலினி, குழந்தைகள் சகலமும் இரண்டாம் பட்சமாகி, சித்ராவே தனது எதிர்காலம் என்று சிவராமன் நம்பத் தொடங்கினான். தன்னைவிட படிப்பிலும், அறிவிலும், ஆற்றலிலும், வயதிலும் மிகக்குறைவாக இருந்த சித்ராவின் முன் மண்டியிட்டான். லஞ்ச், டின்னர் என்று எல்லா இடங்களிலும் தன்னை சித்ராவோடு அடையாளம் காட்டிக்கொண்டான். இந்த விஷயம் முற்றி, முழு அளவில் அவனது அலுவலகமே இதுகுறித்து பேசத் தொடங்கியபோது அதை அலட்சியப் படுத்தினான். ‘நான் என் உழைப்பில் முன்னேறினேன். உங்களில் எவன் என் துன்பத்திலும், உழைப்பிலும் பங்கு கொண்டீர்கள்? என் சொந்த விஷயம் பற்றி எவனுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை’ என்கிற விதமாய் நடந்துகொண்டான்.
“உங்கள் திறமையும், உழைப்பும் இந்தப் பெண்ணால் நலிந்து போகும்” என்று நண்பர்கள் நல்லவிதமாய்ச் சொன்ன எச்சரிக்கையை அலட்சியப் படுத்தினான். அவர்கள் வார்த்தைகளின் உண்மை உரைத்தாலும், சித்ராவோடு ஒரு பாஸந்தி சாப்பிடும் சில மணித்துளிகளில் அதை மறந்து போனான். ‘நாம் இருவரும் கல்யாணம் செய்துகொண்டால் இந்தப் பேச்சுக்கே இடமிருக்காது’ என்று துணிந்தான்.
தன்னோடு இரவும் பகலும் ஒன்றாகவும் தனியாகவும் உழைத்து அவனை உயர்த்திய மாலினியிடமே சித்ராவைப் பற்றிச் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் கேட்டபோதுதான் பூகம்பம் வெடித்தது. தன்மேல் ஏற்படுத்தப்பட்ட இந்தத் திடீர்த் தாக்குதலால் மாலினி திணறிப்போனாள். தற்போது அவன் கம்பெனி மேனேஜர் விஜய் அவர்கள் குடும்ப நண்பராய் வந்து பேசியபோது, திட்டவட்டமாய் தன் முடிவைச் சொன்னாள்.
மாலினியின் வாழ்க்கையில் இந்தத் துக்கம் நடக்கக் காரணம் என்ன? இருபத்தியாறு வயதுப் பெண் சித்ராவுக்கு நாற்பது வயது சிவராமன் மீது நாட்டம் வருவது ஏன்? ஸ்கூல் பையன் விடலைத்தனமாய் காதல் என்று நினைத்து அலைவதுபோல், சிவராமன் அலையக் காரணம் என்ன?
சித்ரா பளிச்சென்று இருந்ததால் பலரையும் ஈர்க்கும் விதமாய் இருந்தாள். பேச்சில் நயம் காட்டினாள். ஜெயிக்கும் வெறியில் ஓடி ஓடி நினைத்ததை சாதித்தபின், ‘ஐயோ காதலும் கவிதையும் எங்கே’ என்று பலபேர் தேடி ஓடுகிறார்கள். அதுதான் அந்த வெற்றிக்கு அவர்கள் கொடுத்த விலை. அந்தச் சாதனைக்கு முன், இந்த வாழ்க்கை நயமும், வெறுமனே சுற்றி அலையும் லஞ்சும், டின்னரும், சினிமாவும் மிகச் சாதாரணமான, மிக அற்பமான விஷயங்கள் என்று உணர மறந்து விடுகின்றனர்.
மற்றவர்கள் செய்ய முடியாத இந்தச் சின்னச்சின்ன விட்டுக் கொடுத்தல்களை தாங்கள் செய்ததால்தான், தற்போதைய நாற்பது வயதில் தாங்கள் மட்டும் மற்றவர்களைவிட அரையடி உயர நிற்கிறோம் என்பதை நினைத்து சந்தோஷப் பட்டுக் கொள்ளத் தெரியாமல் இன்னும் சொல்லப்போனால் கர்வப் பட்டுக் கொள்ளத்தெரியாமல் இருக்கிறார்கள்.
ஏன் கர்வப்பட்டுக் கொள்ள முடியவில்லை? உழைத்து என்ன கண்டோம்? பணம் பதவி எல்லாம் வயசும் வாலிபமும் போய்விடும் தருணத்தில் வருகிறதே? இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய? நாற்பது வயதில் முதிர்ச்சி வந்தது குறித்து சந்தோஷப்படாமல்; முதுமை பற்றிய பயமும், தான் ஒதுக்கப்பட்டு விடுவோமே என்ற தேவையில்லாத கவலையும் ஆட்டிப்படைக்க, “நீ பெரியவன், யு ஆர் ஸ்மார்ட்” என்று யார் சொன்னாலும் அதுவும் ஒரு அழகான பெண் சொல்லிவிட்டால், அது தரும் சந்தோஷத்தால், அவர்களிடமே தங்களை இழந்து விடுகிறார்கள். தங்களுக்கு வயசாகிவிட்டது என்ற மிகச்சாதாரணமான உண்மையை மறைக்கவும் மறுக்கவும் துணிந்து விட்டவர்களுக்கே இந்தப் பிரச்னை வருகிறது. சிவராமனின் பிரச்னைக்கும் வீழ்ச்சிக்கும் காரணம் இதுவென்றால் சித்ராவின் பிரச்னை வேறு.
வாழ்க்கை வசதியும் வாய்ப்புமாக வாழவேண்டிய ஒன்று என்று ஆசைப்படும் அளவிற்கு; அந்த வசதிக்குப் பின், உயர்வுக்குப் பின் எத்தனை உழைப்பும் முயற்சியும் தேவையாக உள்ளது என்பதை பார்க்க மறுக்கிறார்கள். இருபத்தைந்து வயதில் திருமணப்பேச்சு அடிபடும் பொழுது பெரிய பதவியும், காரும், பங்களாவும் உள்ள மாப்பிள்ளைகள் பற்றிய கனவில் மிதக்கிறார்கள். இருபத்தைந்து வயது பெண்ணுக்கு, இருபத்தியெட்டு முதல் முப்பது வயதுக்குள் இருக்கும் மாப்பிள்ளை பார்க்கலாம். அந்த வயதுக்குள் இவர்கள் எதிர்பார்க்கும் பதவியும், காரும், பங்களாவும், உயர்ந்த நிலையும், அந்தஸ்தும் எத்தனை பேரிடம் இருக்கும்? நடைமுறையில் அது எப்படிச் சாத்தியம்? அந்த வசதிகளைப் பெறுவதற்கு குறைந்தபட்சம் ஐந்து முதல் பத்து வருடங்கள் உழைக்க வேண்டும் என்பதுதானே நாம் பார்க்கும் வாழ்க்கை?
இப்படி துன்பப்படாமல், உழைக்காமல் பதவி, மதிப்பு, மரியாதை, செளகரியம் எல்லாம் வரவேண்டும் என்று நினைக்கும் பெண்களே; உழைத்து, களைத்து நாற்பது வயதில் இருக்கும் ஆண்களை மிகச் சுலபமாய் வீழ்த்தி விடுகிறார்கள்.
போராட்டம் இன்றி முன்னேற வேண்டும், சுகப்பட வேண்டும் என்ற சித்ரா போன்ற இருபத்தியாறு வயதுப் பெண்ணின் பேராசை. இதுதான் இந்தச் சிக்கலுக்கு காரணம். சிவராமன் தன் தலை நரைக்கும், அவன் மனைவி மாலினி அவன் மீது வைத்திருக்கும் நேசத்திற்கும், எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று தன் மனதைத் தேற்றிக்கொண்டால், ஆரோக்கியமாக தனக்கு வயது கூடுவது இயற்கை என்பதை ரசிக்கக் கற்றுக்கொண்டால், அவருக்கு நல்ல வாழ்க்கையுண்டு.
உழைப்பின்றி வரும் எந்த சுகமும், செளகரியமும், பதவியும், கெளரவத்தைத் தராது, நிலைக்காது என்று சித்ரா போன்ற பெண்கள் உணர்வது அவர்களுக்கும் சமூகத்திற்கும் நல்லது.