உலகம் பொல்லாதது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 22, 2020
பார்வையிட்டோர்: 5,294 
 
 

அறந்தாங்கி ஸ்டேஷனில் ரயில் நின்றது தான் தாமதம்; ரயிலினின்றும் ஜனங்கள் கும்பல் கும்பலாக இறங்க ஆரம்பித்தனர்; அவர்களில் குமாரசாமியும் ஒருவன். தலையில் சுமந்திருந்த பெரிய மூட்டையுடன் ரயில் நிலையத்தை விட்டு ஊருக்குள் நடந்தான். வெய்யிலின் வெக்கை சற்று தணித்திருந்தது; அந்தி மயங்கும் வேளை.

ஊரின் முன்னடியிலிருந்த கடையில் ‘சாயா’ குடித்துவிட்டுப் பணத்தை முதலாளியிடம் நீட்டிய வண்ணம் ஏனுங்க, ஆவணத்தாங்கோட்டை வரை துணைக்கு ஒரு ஆள் வேணும். சில்லரை எதாச்சும் கொடுத்துடலாம்; கிடைக்குங்களா?’ என்று கேட்டான் குமாரசாமி.

“அவசியமானா ஒரு ஆளை வரச் சொன்னாப் போச்சு” என்று சொல்லிவிட்டு, ‘ஏய், காளி’ என்று அழைப்பைச் சுண்டிவிட்டான் கடைக்காரன். சோம்பல் முறித்து விசித்தெழுந்த காளியை ஏற இறங்கப் பார்த்தான் குமாரசாமி.

“காளி, சீக்கிரம் எழுந்திருப்பா, ஒரு கிராக்கி வந்திருக்கு. பாக்கி தூக்கத்தைத் திரும்பவந்து மறந்துடாமல் தூங்கிக்கலாம், ஐயாவோடே சாலைவரை போகணும்” என்று மேலும் துரிதப்படுத்தினான் டீக் கடைக்காரன்.

கந்தலும் கிழிசலுமாகப் பார்க்கப் பரிதாபமாகத் தோற்றம் கொடுத்த காளிக்கும் ஒரு தேத்தண்ணீர் வாங்கிக் கொடுத்துப் புறப்பட்டான் குமாரசாமி.

அந்தி மங்கல் எங்கும் படர்ந்தது. சூரியனின் கதிர்கள் பொன் ரேக்குப் பெற்றுப் பிரகாசித்தன. இயற்கை கண்ணாமூச்சு விளையாடியது.

மூட்டையை இதம் பதமாகத் தோளில் சாய்த்துத் தலை முண்டாசுக்கு அணைவாக வைத்துக்கொண்டு காளி முன் சென்றான். குமாரசாமிக்கு அவனையும் அறியாமல் காளியிடம் அனுதாபம் சுரந்தது. வழிப்பயணத்துக்குப் பேச்சு இருந்தால் தொலை தூரம் தோன்றதல்லவா? காளியின் வாயைக் கிளறிவிட்டால் ஒருகால் அவனைப்பற்றி ஏதாகிலும் விருத்தாந்தம் புறப்படுமென்ற ஆவல் குமாரசாமிக்கு . மறு வினாடி அவன் இதய சபலத்தைத் துழாவியிறந்தவனாட்டம் காளியே முதலில் பேச வாய்தூக்கினான்.

“அண்ணாச்சி , என்ன இப்படி ஒண்டியாய்ப் புறப்பட்டீங்க? ஆனா முடிச்சைப் பார்த்தாப் பெலமாக் கனக்குது. வேறு யாரும் உங்க சம்சாரம், பிள்ளை குட்டி யாராச்சும் வருவாங்களா? அல்லது முன்னாடியே போயாச்சா?”

இது காளியின் கேள்வி.

சற்றே மறந்திருந்த ஏதோ ஒன்றை அவன் நினைவு படுத்திவிட்டவன் போலக் கணநேரம் குமாரசாமி பேசாதிருந்தான்.

“காளி, எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. ஆனா என் தங்கச்சிக்கு முதலிலே கல்யாணம் கட்டினப்புறம்தான் என்னைப்பற்றி யோசிக்கணும். தங்கச்சியையும் அம்மாவையும் காலம்பற வண்டிக்கு ரயிலேற்றிவிட்டேன். அவசரமா ஒரு காரியம் எனக்குத் தலைமேலே இருந்துச்சு. அதாலே நான் அவங்களோடு போக வாய்க்கல்லே எனக்காகக் காத்துக்கிட்டிருப்பாங்க. சொந்தக்காரங்க வீட்டிலே ஒரு சடங்கு. அதுக்குத்தான் போறேன்” என்று குமாரசாமி கூறினான். ஊம்’ கொட்டிக் கேட்டான் காளி.

குறுக்கிட்ட ஆற்று மணலைத் தாண்டிச் சென்ற சமயம் கூப்பிடு தூரத்தில் ‘குபு குபு’ வென்று தீப்புகை மண்டலம் மேகத்தை எட்டிப்பிடிப்பது போன்று பரவி வந்ததைக் கண்ட குமாரசாமி, வேடிக்கை மாதிரி அக்காட்சியைக் காளிக்கும் காண்பித்தான்.

“இதுக்கு இம்மாம் தெகப்புக் கொள்றீங்களே, அஞ்சாறு வருசத்துக்கு முந்தி ஜப்பான்காரன் பர்மாவைக் குண்டு போட்டுத் தீக்கிரையாக்கினதை நீங்க கண்ணாலே காணக்கூடத் துணிச்சல் படமாட்டீங்க போலே. ஹும்; பாவிப்பய சண்டை வந்து….” என்று பேசிக்கொண்டு வந்த காளியின் குரலில் அளவிறந்த துயரம் தடம் பதிந்திருந்தது. இதையுணர்ந்த குமாரசாமி கனிவுடன் பச்சாதாபத்தோடு காளியைப் பார்த்தான். அவன் கண்களினின்றும் அருவி சோர நீர்ச்சொட்டுகள் படிப்படியாக வழிந்து கொண்டிருந்தன.

“காளி”

“ஐயா, இருந்திருந்தாப் போல இப்படி ஏன் கண் கலங்குதுன்னுதானே ரோசனை பண்ணுறீங்க. வயிற்றுப்பிழைப்புக்காக நானும் என் தங்கச்சியும் கடல் கடந்து பர்மா தேசத்துக்குப் போனோம். பெற்றவுங்க எங்களை அனாதரவாவிட்டுட்டுச் செத்துட்டாங்க. வேலை செஞ்சு பிழைச்சு அதிலே கிடைக்கும் வரும்படியைக் கொண்டு நானும் தங்கச்சியும் காலத்தைக் கடத்தினோம். இப்படி வருசம் ஒண்ணு தாண்டிப் போச்சு. அப்புறம்தான் சண்டை மூண்டு குண்டு வீச்சுத் தொடங்கியது. கடை அலுவலா அடுத்த வங்குசாலை வரை போயிட்டுத் திரும்பி வந்து பார்த்தேன். ஊரே நிர்த்தூளிப்பட்டுச்சு. பிணக்காடு கணக்காப்பட்டணம் தோணுச்சு . உயிரு தத்தளிக்க, பதைச்ச நெஞ்சோடு என் கண்ணை எங்கெல்லாமோ தேடினேன்; அலசினேன்; காண முடியலை. அப்பவே என் ஜீவன் வடிஞ்சிருச்சு. உயிர் தப்பிச்ச இரண்டொரு பொங்கிச் சாமியார்களையும் விசாரிச்சுப் பார்த்தேன். தெரியாதுன்னுட்டாங்க. நடைப் பிணமாக நடந்து நம்ப மண்ணை மிதிச்சேன். சுற்று வட்டாரத் திருநாள் ஒண்ணு பாக்கி வைக்காம இன்னமும் தேடிக்கிட்டுத்தான் இருக்கேன். ஐயாவே, நீங்களும் ஒரு தங்கச்சியோடே பிறந்தவங்கதானுங்களே. என் ஆசைத் தங்கையை என் உயிர் இருக்கிறதுக்குள்ளே காணலாமா? காணக்கூடுமா?” என்றான் காளி அவன் பேச்சில் சொல்லுக்குப் புறம்பான சோகமிருந்தது; சஞ்சலமிருந்தது; ஆர்வமிருந்தது; ஆதுரமிருந்தது!

குமாரசாமி காளியை நோக்கினான். அவன் செயலிழந்த பாவையாக நின்றிருந்தான். விழிக்குழியில் புதைந்து கிடந்த கண்ணின் கருவிழிகள் அங்குமிங்கும் யாரையோ தேடியலைந்தன. அவன் தங்கையையா? சகோதரியை மீண்டும் பார்க்கலாமா? என்ற ஆசைக் கனவில் மிதந்த அவன் இமைப்பொழுது அதிர்ச்சியடைந்தான். அதே நொடியில் இனி, எப்படி, எங்கே அவளைக் காண இயலும்!’ என்ற நிலை ஏற்படவே மலர்ச்சி பெற்ற அவன் வாட்டமுற்றான்; வாடிப்போனான்.

சாலை எல்லையை மிதிக்கும் வரை இருவரும் மோன நிலையில் வழிநடந்தனர். ஊரை அடைந்தவுடன் குமாரசாமி சில்லரையை எண்ணி எட்டு அணா காளிக்குக் கொடுத்தான். காளி சிரித்தான்; பலமாகச் சிரித்துக் கொட்டினான், ஊழிக் கூத்தில் பிரமன் உதிர்த்த பேய்ச் சிரிப்புக் கணக்கில்! அவன் சிரிப்பில் இதய அந்தரங்க எண்ணங்கள் பூராவும் அலைபாய்ந்து மேல் பூச்சாகி எதிரொலிப்பது போன்று குமாரசாமி நினைத்துக்கொண்டான்.

“பாவம் பைத்தியம் போல்”

குமாரசாமி இரக்கங் காட்டினான். காளி அப்படியென்றால் பைத்தியமா? யார் சொன்னார்கள்?

“ஐயா, காசு பணத்துக்கு என்னாங்க. உங்க மாதிரி நல்ல மனுசங்கதான் எனக்குப் பெரிசு. எனக்கு என் தங்கச்சிப் பொண்ணு கிடைக்குங்களா?” என்று கூறி, அவன் தங்கியுள்ள வீட்டைக் கேட்டுக்கொண்டு காளி விடை பெற்றுக்கொண்டான்.

அடுத்த நாள்.

மத்தியானம் கடைத் தெருப்பக்கம் குமாரசாமி சென்றிருந்தான்; சடங்கு விசேஷம் முடிந்ததால் ஊருக்குப் புறப்படச் சாமான்கள் வாங்கி வரப் போயிருந்தான் அவன்.

வீட்டின் தாழ்வாரத்தில் கைகளால் முகத்தை ஏற்றபடி உட்கார்ந்திருந்தாள் அவன் தங்கை. சீவி முடித்திருத்தாள்; புது ஆடை உடுத்தியருந்தாள். அழகான முகம் பொலிவுடன் விளங்கியது.

“குமாரசாமி ஐயா இருக்காங்களா?’ என்று கேட்டுக் கொண்டு காளி முன்னே வரலானான். திரும்பவும் ரயிலடிக்குப் போக ஏதாவது ‘சான்ஸ் தட்டலாமல்லவா?

உட்கார்ந்திருந்த அப்பெண்ணை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தான். யாருடைய முகம் அது? காளி பின்னும் ஓர் அடி முன் எடுத்து வைத்து, அந்த யுவதியை நோக்கினான்.

“நெசமாவே நம்ப தங்கச்சியேதானா இது?”

கனவின் தொடு கோட்டில் சஞ்சரித்துக்கொண்டிருந்த அவனுக்குச் சுய நினைவு முடுக்கப்பட்டதும், அடுத்தும் ஒரு தரம் அவளைப் பார்த்தான்.

தன் தங்கச்சியைப் போன்ற அதே சாயல் அதே முகம்! அதே பார்வை. அப்படியென்றால் அவள்தான் அவன் தங்கையா?

அவன் தங்கச்சியை அப்படியே உரித்து வைத்திருந்தது போலிருந்தது அப்பெண்ணின் உருவம். ஆனால் தன் தங்கச்சி மண்ணாகிவிட்டிருப்பாள் என்பதையும் காளி அவ்வப்போது உணராதில்லை. என்றாலும் சபலம் பாசம் அவனை ஆட்டிப் படைத்தது. ஆட்டுவித்தால் ஆடாதார் யாரே ஊர்?

இனம் விளங்காத பாந்தவ்யம், சிதைந்த எண்ணக் கலவையின் பிரதிபலிப்பென் அந்தப் பெண் மீது கனிந்தது காளிக்கு. அவள் அவனுள் இடம் பெற்றாள்.

“தங்கச்சி” –

அழைத்த மனம் மணம் பெற்றது ; உள்ளம் மலர்ந்தது; உடல் சிலிர்த்தது. காளி பரவசமடைந்தான். நரம்புக்கு நரம்பு புத்துயிர் ஊர்ந்து கிளர்ந்தது.

தங்கச்சி என்ற பாசத்தின் பிணைப்புடன், துல்லிய அன்போடு அந்தப் பெண்ணை இமை கொட்டாது பார்த்து நின்ற காளிக்கு இவ்வுலக எண்ணமே கிடையாது போலும். அவன் தன்னையும் மறந்து சிரித்தான். ஆமாம், அவள் உருவிலே அவன் தன் சொந்தத் தங்கச்சி நடமாடுவதை, அழகு காட்டி விளையாடுவதைக் கண் மூடாமல் பார்த்து நின்றான்!

குமாரசாமி கையில் பழங்களுடன் பிரவேசித்தான். வழியில் நின்ற காளியைக் கண்டுவிட்டு, காளி, வாப்பா என்று முகமன் கூறினான். காளி அப்போதுதான் உணர்வு பெற்றான்.

தமையன் வந்ததும் ஒதுங்கி நின்ற அப்பெண் சாமான்களை உள்ளெடுத்துப் போனாள்.

“ஐயா, கொஞ்சம் தாகத்துக்கு வேணும்” என்றான் காளி.

உண்மையில் அவனுக்குத் தாகமில்லை. ஆனால் அவள் கையால் ஒரு மிடறு தண்ணீரேனும் அருந்த வேண்டுமென்றிருந்தது அவனுக்கு தண்ணீர், செம்பில் கொணர்ந்தாள் மங்கை.

அவள் நீட்டிய செம்பைக் கை நீட்டி வாங்கின காளியின் விரல்கள் அவளது பூங்கரங்களைத் தீண்டின. அவன் புளகித்தான்; பூர்த்தான்; பாச வெள்ளம் கரைபுரண்டது. தன் தங்கச்சியுடன் கழித்த ‘அந்த நாட்கள்’ மனதில் நிழலாடின. அவன் அவளை உவகையுடன் சிருஷ்டி செலுத்தினான். ஆனால் பதிலுக்கு அவள் விழித்த நோக்கிலே
ஏன் இத்தகைய புயல்? சூறாவளி.

துவண்டு மறையும் மின்னலென அவள் மறைந்தாள.

“அண்ணாச்சி.”

ஏககாலத்தில் குமாரசாமியும் காளியும் திரும்பினார்கள். குமாரசாமி மட்டுமே உள்ளே நுழைந்தான். காளி ஏக்க முற்றுச் சிலையானான்.

“தங்கச்சி.”

காளி மனதிற்குள் அழைத்துக் கொண்டான். அவன் நிலைப்படியைத் தாண்டி நின்றாள்; சேலை தரையில் மிதந்து கிடந்தது. பார்வையைத் திசை விலக்கிவிட்டாள்.

“அண்ணாச்சி , யாரு அந்த மனுசன். அப்பவே தொட்டு என்னையே விழுங்கிப்பிடுகிறவர் கணக்காப் பார்த்துக்கிட்டே இருக்காரு. அந்த ஆளு பைத்தியமாங்காட்டியும்?”

அந்த வார்த்தைகள் காளிக்குத் தெளிவாகக் கேட்டன. அந்தப் பெண்தான் பேசினாள்.

‘சுரீர், சுரீர்’ என்று அவ்வார்த்தைகள் ஒவ்வொன்றும் கூரிய அம்பாகப் பாய்ந்தன அவன் உடல், உள்ளம் இரண்டிலுமாக. எய்தவனிருக்க அம்பை நோவதா? அம்பை சொல் அம்பை எய்தது அந்தத் ‘தங்கச்சி’ யாயிற்றே? உடன் பிறக்காவிட்டாலும் உடன் பிறந்ததாகப் பாசம் சொரிந்தானே அவன்?

காளி அன்பு காட்டினான். அவேளா பழி காட்டி விட்டாள். பேதை ! அன்பும் பழியும் துருவங்களின் இரு மாறுபட்ட புள்ளி மையங்களல்லவா? இந்த இரண்டு உள்ளங்களும் எங்ஙனம் ஒன்று சேர முடியும்? அவன் பிணைத்து இணைக்கப் பார்த்தான். அவள் அபவாதம் சொல்லிவிட்டாளே! எண்ணெயும் தண்ணீரும் ஒன்று கலக்க முடியுமா, என்ன ?

அந்த யுவதி எய்த அம்பு காளியைத் துளைத்துக்கொண்டிருந்தது. புண் ரணமாயிற்று. கணத்தில் மீண்டும் அம்பு வீச்சு . ஐயையோ! அவன் துடித்தான். கரையில் வீசியெறிந்த மீனைப்போல.

“தங்கச்சி”

கண்ணீர் வெள்ளம், வெந்து புரையோடிய நெஞ்சு, உயிர் ஊசலாடிய உடல்; இந்நிலையிலும் காளி அவளை மறக்கவில்லை.

துள்ளியோடும் ஆற்று நீரின் மேல்பரப்பு அழகாக சலனமற்றுத்தானே தோன்றுகின்றது. ஆனால் நீரின் அடிப்பரப்பிலே சுழித்தோடும் சுழல் யாருக்குப் புலப்படும்?

மனம் ஒரு குழந்தை, எடுப்பார் கைப்பிள்ளை . எடுப்பவர்கள் குழந்தை வசம் மனமிழக்கலாம். அதே சமயம் குழந்தை எடுப்பவரைப்பற்றி எந்நிலையில் தீர்ப்பு நிர்ணயம் செய்கிறதோ? யார் அறிவார்கள்? காளியின் மனமும் அப்படித்தான்; அவன் அந்தப் பெண்ணைத் தங்கையாக மதித்தான். தன் சொந்தச் சகோதரியைப் போலவே, ஒரே தினுசாக அசல் அவளே மாதிரி காணப்பட்ட அந்தச் சிறுமியின் சூழ்நிலையிலேயே இருந்து, ஏதேனும் குற்றவேல் புரிந்து வாழ்வின் எஞ்சும் நாட்களைக் கழித்துவிடலாமென்று கனவு கண்டான் காளி. இது குறித்துக் குமாரசாமியிடம் பேச்செடுக்கவுமிருந்தான் அவன். ஆனால் அந்தப் பழி! காளி பாவமறியாதவன். பழி சுமத்தப்பட்டான், பாவம்!

காளி கனவிற்குங் கனவின் விழிப்பிற்கும் ஊடே அல்லாடினான். விழிப்பு அவனது கண்களை வழி திறந்தது.

அதே கணம் அவ்வீட்டை விட்டு வெளியேறினான். நீர் முட்டிய கண்களால் உலகத்தைத் துழாவினான். காளிக்கு உலகம் இதயமற்றதாகப்பட்டது; பாசமற்றதாகப்பட்டது; அவிழ்க்கக்கூடாத விடுகதையாகப்பட்டது. உள்ளத்தில் என்றும் பசுமையுடன் சிலையோடிருந்த தன் ஆவித் தங்கையை அடுத்து அதே ஸ்தானத்தில் தங்கச்சியென மதித்த அந்தப் பெண்ணை அப்புறம் அவள் உண்டாக்கிவிட்ட ஆறாத புண்ணை ஆகிய இவற்றைச் சுமந்தவாறு
அவன், கால்கள் இழுத்த திக்கில் நடக்க ஆரம்பித்தான். நடந்தான், நடந்து கொண்டேயிருந்தான். வர வர அவனுடைய நேத்திரங்களின் கூட்டுறவில் உலகம் சூன்யமாகிக் கொண்டே வந்தது! உலகம் பொல்லாதது!

– பூவையின் சிறுகதைகள் – முதல் பதிப்பு – டிசம்பர் 2003 – பூவை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *