கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 12, 2021
பார்வையிட்டோர்: 2,642 
 

காலை வெயில் சுள் என்று அடித்தது,மீனாட்சி மெதுவாக எழுந்து கட்டிலில் உட்கார்ந்தாள்.தலை முடியை சுருட்டி கொண்டை போட்டுக்கொண்டு மெதுவாக கீழே இறங்கி தன் கைத்தடியை எடுத்து ஊன்றியப்படி,வாசல்பக்கம் போய் வெளியில் கிடந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்தாள் மீனாட்சி.அமுதா பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவிட்டு வந்தவள்,ஏன் அத்தை இவ்வளவு வெய்யிலில் உட்கார்ந்து இருக்கீங்கள்!தலை ஏதும் சுத்தப்போகுது என்றாள்.இல்லை ஆத்தா தலைக்கு கொஞ்சம் தண்ணி ஊத்திக்கலாமுனு பார்க்கிறேன்,வெயில் அடிக்குது என்றாள் மீனாட்சி,அதற்கு என்னா அத்தை காய்ந்த விறகு கிடக்குது,வெளியே அடுப்பை போட்டு காயவைக்கிறேன் என்றாள் அமுதா

உனக்கு ஏதும் சிரமம்மா ஆத்தா? என்றாள் மீனாட்சி,இல்லை அத்தை இதில் என்ன சிரமம் இன்னைக்கு வேலையும் குறைவு,சோத்தை கட்டி உங்கள் பிள்ளைக்கும் கையோடு அனுப்பிட்டேன் என்றாள் அமுதா,ஆறி அவன் சாப்பிட மாட்டானே என்றாள் மீனாட்சி,ஆமா அத்தை இன்னைக்கு கடையிலிருந்து வரமுடியாதாம்,கடையில் வேலை செய்யும் பையனுக்கு உடம்பு முடியலையாம்,இரண்டு நாட்களுக்கு வேலைக்கு வரமாட்டானாம் என்றாள்.அப்ப நீ போகனுமே என்றாள் மீனாட்சி.இல்லை அத்தை பெரியசாமி அண்ணன் இருப்பதால் என்னை வரவேண்டாம் என்று சொன்னார்.நான் தண்ணியை காயவைத்து உங்களை குளிப்பாட்டிவிடுறேன் என்றாள் அமுதா.

மீனாட்சிக்கு ஒரே மகன் செல்வம்.கிராமத்தில் படித்தவன்,அவனுடைய அப்பா சந்தானம் பலசரக்குகடை வைத்திருந்தார்.அவனும் அவருக்கு உதவியாக கடையில் வேலை செய்ய ஆரம்பித்தான்.பக்கத்து ஊர்காரி அமுதா,பார்த்து பேசி செல்வத்திற்கு கட்டிவைத்தார்கள். சந்தானம்,மீனாட்சி பத்து ஆண்டுகள் தவம் இருந்து பெற்றெடுத்த மகன் செல்வம்,ஆனால் அமுதா அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.மூத்தவன் குகன் பத்தாம் வகுப்பு படிக்கிறான்,மகள் கயல்விழி எட்டாம் வகுப்பு படிக்கிறாள்,இருவரும் பக்கத்து ஊரில் இருக்கும் பாடசாலையில் படிக்கின்றார்கள்.

சந்தானம் பக்கவாதத்தில் படுத்தவர் தான்,அதன் பிறகு எழுந்து நடமாடவே இல்லை,அமுதா முகம் சுளிக்காமல் கவனித்தாள்.அவள் அருகில் இருக்கும் போதுதான் அவரின் உயிரும் பிரிந்தது.சந்தானம்,மீனாட்சி இருவரும் எப்போதும் அமுதாவை மருமகள் என்று பார்த்தது இல்லை,சொந்த மகளைப் பார்ப்பதுப் போல் பார்த்துக்கொண்டார்கள்,அமுதாவும் அவர்களை பெற்றோர்களைப் கவனிப்பது போல் கவனித்துக் கொண்டாள்.

அமுதா சேலையை இடுப்பில் சொருகி கொண்டு தண்ணியை சூடுப்பன்னினாள்.புகை கண் எரிச்சலாக இருந்தது தன் முந்தானையில் கண்ணை துடைத்துக் கொண்டாள்.மீனாட்சி குரல் கொடுத்தாள் அமுதா..என்று,வாரேன் அத்தை என்று உள்ளே போனாள் அமுதா,ஏன் ஆத்தா விறகு காயலையா? கண் சிவந்து இருக்கு என்று அக்கறையுடன் கேட்டாள் மீனாட்சி,இல்ல அத்தை,ஒரு விறகு காயலை அது தான் புகை,தண்ணி சூடாகிவிட்டது வாங்க குளிக்க என்று அழைத்தாள் அமுதா.துடைக்கும் துண்டு,பெட்டியில இருக்கு அப்படியே மாற்று துணியையும் எடுத்து கட்டில்ல வைத்திடு ஆத்தா,நான் வந்து மாத்திக்குவேன் என்றாள் மீனாட்சி.சரி அத்தை தலைக்கு எண்ணை தேய்த்தா குளுப்பாட்ட என்றாள் அமுதா,வேணாம் ஆத்தா,இன்னைக்கு தான் மழை விட்டிருக்கு சளி பிடிக்கும்,அடுத்த கிழமை பார்ப்போம்,என்று சொன்னப்படியே அமுதாவுடன் நடந்தாள் மீனாட்சி.

அமுதா ஒரு கட்டைய இழுத்துப்போட்டு,மீனாட்சியை உட்காரவைத்து,குளுப்பாட்ட ஆரம்பித்தாள்,தலைக்கு சீயக்காய் தேய்த்து தண்ணி ஊத்த இதமாக இருந்தது மீனாட்சிக்கு,துண்டால் தலையை துவட்டி விட்டாள் அமுதா.மீனாட்சிக்கு கண் கலங்கியது ஏன் ஆத்தா என்னாள் உனக்கு சிரமம் தானே என்றாள் மீனாட்சி.ஒரு நாளைக்கு இதை எத்தனை தடவை கேட்பிங்க அத்தை,வாய்க்கு நூறு தடவை என்னை ஆத்தா என்று கூப்பிடுறீங்கள்,நீங்கள் எனக்கு பிள்ளை மாதிரி,எந்த சிரம்மும் இல்லை அத்தை எனக்கு என்றதும்,நெகிழ்ந்துப் போனாள் மீனாட்சி.மருமகள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் என்று மனதில் நினைத்துக்கொண்டாள் மீனாட்சி.

மெதுவாகச் அறைக்குச் சென்று மாற்றுத் துணியை மாற்றிக் கொண்டாள் மீனாட்சி,அமுதா அடுப்பில் கிடந்த நெருப்பை அள்ளி சாம்பிராணி கரண்டியில் போட்டு மீனாட்சி அறைக்கு எடுத்துச் சென்ற அமுதா,கொஞ்சம் சாம்பிராணியை போட்டு மீனாட்சியின் தலைக்கு புகை பிடித்து விட்டாள்,போதும் ஆத்தா என்றாள் மீனாட்சி,சாமி கும்பிட்டு வாங்கள் அத்தை,உப்புமா செய்து இருக்கேன் சாப்பிடலாம் என்றாள் அமுதா,நீ சாப்பிட்டியா என்றாள் மீனாட்சி,இல்லை அத்தை என்றாள் அமுதா,வா நீயும் வந்து சாப்பிடு என்றாள் மீனாட்சி,துணிய கொஞ்சம் கசக்கி போடனும் என்றாள் அமுதா,அதை பிறகு செய்யலாம் இப்ப சாப்பிடு என்றதும் அதன் பிறகு அமுதா எதுவும் சொல்லவில்லை இருவரும் சேர்ந்து சாப்பிட்டார்கள்

பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு,துணிகளை துவைத்து பிழிந்து காயப் போட்டாள் அமுதா,மீனாட்சி முடி காய்ந்தவுடன் சீவி தூக்கி முடிந்துக் கொண்டாள்,இருவரும் வாசல் பக்கம் உட்கார்ந்து சிறிது நேரம் கதை பேசிக் கொண்டு இருந்தார்கள்,கத்தரி செடி பூத்திருந்தது ஆத்தா என்றாள் மீனாட்சி,ஆமாம் அத்தை அடித்த மழைக்கு பூ எல்லாம் கொட்டி போய்விட்டது,தக்காளி செடியும் வீணாகிப் போய் விட்டது என்றாள் அமுதா,கொஞ்சம் சாம்பல் அள்ளி போடனும் ஆத்தா கத்தரி செடிக்கு என்றாள் மீனாட்சி,அள்ளி போட்டேன் அத்தை என்றாள் அமுதா,இனி மழை விடனும் பார்ப்போம்,அந்த காலத்தில் இப்படி மழை பெய்யாது ஆத்தா என்றாள் மீனாட்சி,இப்ப தான் காலம் எல்லாம் மாறிபோச்சே எப்ப மழை வரும்,வெயில் வரும் என்று தெரிய மாட்டேங்குது அத்தை என்றாள் அமுதா,அதுவும் உண்மை தான் என்றாள் மீனாட்சி

இடையில் இருவருக்கும் காப்பி போட்டு வந்தாள் அமுதா,அதை குடித்து முடித்த மீனாட்சி நான் கட்டிலில் கொஞ்சம் சாய்வதாக எழுந்து மெதுவாகச் சென்றாள் அவள்,சரி அத்தை எதுவும் தேவை என்றால் குரல் கொடுங்கள் நான் ஜன்னல் ஓரத்தில் தான் வேலை செய்வேன் என்றாள் அமுதா சரி ஆத்தா தலைக்கு ஒரு துணிய கட்டிக்க வெயில் படாமல் என்றாள் மீனாட்சி

வீட்டை சுற்றி தேவையான கத்தரி செடி,மிளகாய் செடி என்று எதையாவது நட்டு வைப்பாள் அமுதா,பெரிய அளவில் நிலம் இல்லை என்றாலும் இருக்கும் இடத்தில் செடிகள் வளர்ப்பது அவளுக்கு பிடித்த விடயம்,நேரம் சென்றது அத்தை சாப்பிடுவோம் என்றாள் அமுதா,எனக்கு பசிக்கவில்லை பிள்ளைகள் வந்தவுடன் சாப்பிடுறேன் என்றாள் மீனாட்சி,அவர்கள் வருவதற்கு நாலு மணியாகி விடும் அத்தை,நீங்கள் வாங்க சாப்பிடுவோம் என்றாள் அமுதா,சரி ஆத்தா கொஞ்சமா போடு,வாரேன் என்று மெதுவாக எழுந்து வந்தாள் மீனாட்சி,இருவரும் சாப்பிட்டார்கள்,உப்பு காரம் அளவாக இருந்தது மீனாட்சிக்கு எப்போதும் அமுதா சமையல் பிடிக்கும் நல்லா இருக்கு ஆத்தா உன் கை சாப்பாடு என்றாள் மீனாட்சி,உங்களுக்கு பிடிக்கும் என்று கருவாட்டு குழம்பு பன்னினேன் என்றாள்

இருவரும் சாப்பிட்டு வந்து உட்கார்ந்தார்கள்,ஏன் ஆத்தா உன் அப்பா அம்மாவை வந்து இங்கு இரண்டு நாள் தங்கிட்டு போகச் சொல்லு,நீயும் வீட்டு பக்கமே போவது இல்லை,பிள்ளைகளுக்கு எந்த நாளும் பாடசாலை இருக்கு,என்னையும் பார்க்கனும் என்பதற்காக வீட்டு பக்கமே போகாம இருப்பியா என்றாள் மீனாட்சி,வர சொல்லனும் அத்தை,மழை அதனால் நானும் கூப்பிடவில்லை,எனக்கு போக நேரம் கிடைக்க மாட்டேங்குது அத்தை என்றாள் அமுதா,இனி மழை விட்டிடும் நீ வரச் சொல்லு என்றாள் மீனாட்சி சரி அத்தை என்றாள் அமுதா

பிள்ளைகள் இருவரும் பாடசாலை முடிந்து வந்தார்கள்,வந்தவுடன் ஆச்சியை கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்,ஆச்சி குளிச்சி வாசமாக இருக்கு என்றார்கள்,ஆமா உங்கம்மா குளுப்பாட்டி விட்டாள் அது தான் என்றாள் மீனாட்சி,சரி போய் முகம் கை கால் கழுவி சாப்பிடுங்கள் என்றாள் மீனாட்சி,அமுதா பிள்ளைகளுக்கு சாப்பாடு போட்டாள்,கருவாட்டு குழம்பு வைத்திருக்கீங்கள்,ஆச்சிக்கு பிடித்த மாதிரி என்றார்கள்,ஏன் உங்களுக்கும் பிடிக்கும் தானே என்றாள் அமுதா,ஆனால் உங்களுக்கு அவ்வளவு பிடிக்காதே என்றார்கள்,ஏய் சத்தம் போடாதீங்கள் ஆச்சி காதில் விழப் போவுது,எனக்கு நேற்று வைத்த குழம்பு இருந்தது,அதில் சாப்பிட்டேன் என்றாள் அமுதா

செல்வம் கடையை மூடிவிட்டு வந்தான்,அமுதா காப்பி போடவா என்றாள் வேண்டாம் சாப்பிடுவோம் என்றான் அவன்,குளித்து விட்டு வாங்கள் நான் எடுத்து வைக்கிறேன் என்றாள்,அமுதா சப்பாத்தி செய்து,குழம்பு வைத்திருந்தாள் அனைவரும் சாப்பிட்டார்கள்,பகல் சாப்பாடு ஆறிப் போய்விட்டதா என்றாள் மீனாட்சி செல்வத்திடம்,ஆமாம் அம்மா ஒரு நாள் இரண்டு நாள் தானே பரவாயில்லை என்றான் செல்வம்,எல்லோரும் சாப்பிட்டு முடித்தார்கள்,பிள்ளைகள் படித்தார்கள்,அமுதா பாத்திரங்களை கழுவி வைத்தாள்,செல்வம் கடை கணக்கை எழுதி முடித்தான்,மீனாட்சி நாற்காலியில் உட்கார்ந்து இருந்தாள்,ஆச்சி நீங்கள் போய் படுங்கள் நான் படித்து முடித்து விட்டு வந்து உங்களுடன் படுத்துக்கிறேன் என்றாள் கயல்விழி

சரி நீ படி நான் தூக்கம் வரும் போது போய் படுக்கிறேன் என்றாள் அவள்,செல்வம்,மீனாட்சி,அமுதா மூவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள்,போய் படு ஆத்தா காலையில் இருந்து வேலை செய்ற என்றாள் மீனாட்சி அமுதாவிடம்,நானும் போய் படுக்கப் போறேன் அம்மா என்றான் செல்வம்,அத்தை கை காலுக்கு தைலம் எதுவும் தேச்சி விடவா என்றாள் அமுதா,வேண்டாம் ஆத்தா இன்னைக்கு அவ்வளவு வலி இல்லை என்றாள் மீனாட்சி,மகன் குகனிடம் லைட்டை போட்டு ஆச்சியின் தூக்கத்தை கெடுத்து விடாதே படித்து முடித்து விட்டு படுக்கும் போது என்றாள் அமுதா சரியம்மா என்றான் அவன்.அந்த வீட்டில் பாசத்திற்கும்,மற்றவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுப்பதால் உறவுகள் நீடித்து நிலைத்து நிற்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *