உறக்கம் வராதவர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 5, 2019
பார்வையிட்டோர்: 6,752 
 
 

(இதற்கு முந்தைய ‘தர்ம சபதம்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது).

சுப்பையா சட்டென பேச்சை நிறுத்திக் கொண்டான். அதிர்ச்சியில் மெனமாகி விட்டான். பல நிமிடங்களுக்கு சுகுணாவும் மெளனமாகவே இருந்தாள். அவள் முகத்தில் கோபம் கொப்புளித்தது.

“ஏதாவது சொல்லு சுகுணா” சுப்பையா அவளின் மெளனத்தை கலைக்க முற்பட்டான்.

“இனிமே உங்களிடம் பேசறதுக்கு எனக்கு ஒன்றுமில்லை… நாலு நாள் இருந்திட்டுப் போகலாம்னு வந்தேன். ஆனா நாளைக்கே கிளம்புகிறேன். ஐம் நாட் அட் ஆல் ஹேப்பி. ராஜலக்ஷ்மி இப்பவும் என்னோட அப்பாவின் பெண்டாட்டிதான். டைவர்ஸ் ஆகாத ஒருத்தியை கூட்டிட்டு ஓடிப் போயிடறது என்கிறது அடுத்தவனோட பெண்டாட்டியை இழுத்துகிட்டு ஓடறதுதான்…

நீங்க ஆயிரம் சொல்லலாம். இன்டெலிஜென்ஸ்; ப்ளுடானிக் லவ்; சுத்தமான ரிலேஷன்ஷிப்னு… அதெல்லாம் நம்முடைய சமூக அமைப்பில் எடுபடவே படாது. எதுக்கும் சில மரபுகள் இருக்கு. சட்ட ரீதியான நியதிகள் இருக்கு. சட்டங்களுக்கு உட்பட்ட வாழ்க்கை வாழறதுக்குத்தான் நமக்கு உரிமை தரப்பட்டிருக்கு. அதனால சொல்றேன் – முதல்ல சட்டப்படி என்ன செய்யணுமோ அதை செய்துக்கணும்.”

“ஒரு கிராமத்துப் பெண்ணான ராஜலக்ஷ்மிக்கு கோர்ட்டுக்கு போறதுக்கும், வழக்கு நடத்தறதுக்கும் வழி கிடையாது சுகுணா. கேஸ் போட்டாத்தான் உன்னோட அப்பா சும்மாயிருப்பாரா? வெறும் காம்ப்ளெக்ஸ்ஸாலேயே என்னோட பைக்குக்கு தீ வைத்தவர் அவர்…”

“வெறும் காம்ப்ளெக்ஸ்ஸாலேயே தீ வைத்தவன், கூட்டிட்டு ஓடினா மட்டும் சும்மா பாத்துகிட்டு இருப்பானா?”

சுப்பையா கொஞ்சம் திகைத்துப்போய் அவளைப் பார்த்தான்.

“என் அப்பா அவர் மனைவியை நடத்தின விதம் பூராவுமே தப்பாக இருக்கலாம். அதை நான் மறுக்கலை. ஆனா…”

“ஒன் மினிட் சுகுணா. ராஜலக்ஷ்மியின் தன்மைகள்; ஆர்வங்கள், ஆசைகள் எல்லாத்தையும் நிராகரித்து மறுத்து ராஜலக்ஷ்மியை வேதனைகளுக்கு ஆளாக்கினாரே சபரிநாதன் – அதுல ஏதாவது சட்ட விரோதம்னு சொல்ற மாதிரி இருக்கா? அந்த சம்பவங்கள் எதிலும் சட்ட விரோதம்னு எதுவும் கிடையாது. அதனால ஒவ்வொண்ணையும் சட்டத்துக்கு உட்பட்டது, சட்டத்துக்கு விரோதமானதுன்னு முத்திரை எதையும் குத்திண்டு இருக்க முடியாது. சட்டந்தான் நீதின்னு நினைக்கக்கூடாது சுகுணா… நாம் சொல்றது கோர்ட் ஆப் லா தான். கோர்ட் ஆப் ஜஸ்டிஸ் கிடையாது. உன்னோட அப்பா ராஜலக்ஷ்மிக்கு இழைத்ததெல்லாம் அநீதி. அதனால நீதி கேட்டு அவங்க கோர்ட்டுக்கு போறது சாத்தியமே கிடையாது. பரிவே இல்லாம ஒருத்தியின் இயல்புகளையும் ஆர்வங்களையும் நசுக்கும்போது, நசுங்கறது ஒருத்தியின் மனசு மட்டுமில்லை, உறவும்தான் சிதைஞ்சு போறது. உறவு அற்றுப் போயிடறப்பவே ஒரு அடையாளமா சொல்லப்பட்ட மனைவி என்ற நிலையும் அற்றுப் போயிடறது சுகுணா.

அந்த தார்மீக ரீதியில் பார்த்தா ராஜலக்ஷ்மி உன்னோட அப்பாவுக்கு மனைவியே இல்லை. அதனால் நான் காதல் வயப்பட்டதும் உன் அப்பாவின் மனைவி மேல் இல்லை! அதேபோல என் மேல் காதல் வயப்பட்டதும் உன் அப்பாவின் மனைவி இல்லை! இது லீகல் உண்மையா இல்லாமல் இருக்கலாம். ஆனா இது மாரல் உண்மை சுகுணா…! சமூக மரபு பற்றியோ சட்டம் பற்றியோ பேசற யாருக்கும் நான் சொல்ற பதில் இதுதான்…

இதைச் சொல்லி முடித்ததும் சுப்பையா விடுவிடுவென்று எழுந்து நடந்து விடலாமா என்று நினைத்தான். ஆனால் மரியாதை கருதி பேசாமல் உட்கார்ந்திருந்தான். சுப்பையாவும் சுகுணாவும் நீண்ட நேரம் பேசாமலேயே உட்கார்ந்திருந்தார்கள்.

“உங்களை நான்தான் அப்பாவிடம் அனுப்பி வைச்சேன். என் பேச்சைக் கேட்டுத்தான் அவர் உங்களை பக்கத்து வீட்ல தங்கவும் வைத்தார். நாளைக்கு நீங்க அவர் பெண்டாட்டியை கூட்டிட்டுப் போனது தெரிஞ்சதும் அப்பா முதல்ல என் மூஞ்சியிலதான் காறித் துப்புவார். அவருக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு…”

“அப்படி ஒரு பொறுப்பு உனக்கு இருக்கிறதா நீ நெனச்சீன்னா, என் பைக்குக்கு அவர் தீ வைத்தாரே, அதைக் கேட்க வேண்டிய பொறுப்பும் உனக்கு இருக்கு சுகுணா.”

இதைக் கேட்டதும் சுகுணாவின் உணர்வுகள் பதட்டமடைந்து விட்டன. “உங்களுக்கும் ராஜலக்ஷ்மிக்கும் இருக்கிற தொடர்பை தெரிஞ்ச பிறகு எந்த மூஞ்சியை வச்சிக்கிட்டு அப்பாவிடம் நான் இதைப்பத்தி கேக்க முடியும்னு நெனைக்கிறீங்க?”

அப்போது பின்னால் ஏதோ அரவம் கேட்டாற்போல இருந்தது. காற்றில் ஏற்பட்ட சலசலப்பா என்று சுற்றுப்புறத்தை அவர்கள் ஊன்றிக் கவனித்தபோது, அவர்களின் பார்வையில் படாமல் மரங்களின் நடுவே கவிந்திருந்த இருளில் ஒரு உருவம் வேகமாக நடந்து சாலையை நோக்கி விரைந்து விட்டது.

சுகுணா தொடர்ந்தாள். “நீங்களும் ராஜலக்ஷ்மியும் எடுத்திருக்கிற முடிவு மாத்த முடியாத இறுதித் தீர்மானம்னா, நான் உங்களை சந்திக்கிற கடைசிச் சந்திப்பு இதுதான்…”

“இதான் உன்னோட தீர்ப்புன்னா வேதனையோட அதை நான் ஏத்துக்கறேன் சுகுணா.” சுப்பையா துக்கத்துடன் சொன்னான்.

சுகுணா முகத்தைத் திருப்பிக்கொண்டு எழுந்து வேகமாக நடந்து விட்டாள். கவிந்து கிடந்த இருளில் ஒளித்தெறிகளாக புரண்டோடிக் கொண்டிருந்த தாமிரபரணி ஆற்று நீரைப் பார்த்தபடி சுப்பையா நின்று கொண்டிருந்தான். அவனுடைய மனதில் பல்வேறு எண்ணங்கள் புரண்டோடிக் கொண்டிருந்தன.

ராஜலக்ஷ்மியும் அவனும் ஒருவருக்கு ஒருவர் இணைகிற பகிங்கிர சம்பவத்திற்கு முன் எல்லாமே கடுமையான அனுபவமாக இருக்குமோ என்ற பதட்டம் அவனுள் ஏற்பட்டது. இந்தப் பதட்டத்தில் அவனுக்கு இரவெல்லாம் தூக்கம் வரவில்லை.

சுகுணாவும் வீட்டில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு கிடந்தாள். குழப்பமும் விசனமும் அவளைப்போட்டு அலைக்கழித்தன. சபரிநாதனைப் பற்றி சொல்லவே வேண்டாம். சுப்பையாவுடன் ரொம்ப நேரம் பேசிவிட்டு வந்த சுகுணாவின் முகத்தைப்பார்த்து அவர் பயந்தே போனார்.

சுகுணா சரியாகப் பேசவில்லை. நன்றாகச் சாப்பிடவில்லை. காலையில் எழுந்ததும் கிளம்பிச் செல்வதாகவேறு அவள் சொல்லிவிட்டு படுத்துக்கொண்டது சபரிநாதனுக்கு பெரிய சந்தேகத்தை கிளப்பிவிட்டது. அவருக்கு எதிராக ஏதோ நடப்பது போன்ற பீதியை ஊட்டியது. உறக்கம் வராமல் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து போய் தண்ணீர் குடித்தார். தண்ணீர் குடித்தபோது அவருடைய கை விரல்கள் நடுங்கின.

ராஜலக்ஷ்மியும் குழப்பத்தில்தான் படுத்திருந்தாள். ஏதோவொரு அசம்பாவிதம் நடந்திருப்பதை அவளால் உணர முடிந்தது. எது நடந்தாலும் நன்மையாக நடக்கட்டும் என்ற பிரார்த்தனையோடு அவள் உறங்க முயன்று கொண்டிருந்தபோது, காந்திமதி அவளுடைய வீட்டில் உறங்குவதற்கு விருப்பப் படாமல் விழித்தவாறு புரண்டு கொண்டிருந்தாள். சுப்பையாவை நோக்கி புள்ளி புள்ளியாக அவளுடைய உடலை நகர்த்திக் கொண்டிருந்த அவளின் வேட்கை தகர்க்கப் பட்டிருந்தது.

ஆம்… அன்று சூரியன் மறைகிற நேரம் பெருமாள் கோயிலுக்குப் போய்விட்டுப் படித்துறையை ஒட்டிய அடர்ந்த மரங்களின் வழியாக வீடு திரும்ப நினைத்தாள். சில நேரங்களில் அந்த வழியாக காந்திமதி வருவதற்கு காரணம் ஒன்று உண்டு. அவ்வழியில் ஒரு இடத்தில் வழுவழுவென்று செண்பகமரம் ஒன்று வளர்ந்து நெடிதாய் நிற்கும். காந்திமதிக்கு அந்த மரத்தின்மேல் ஒரு காதல் உண்டு. அந்த மரத்தை இரண்டு கைகளாலும் சிறுதுநேரம் தழுவிக் கொண்டிருந்தபின் நகர்ந்து செல்வது அவளுக்கு வழக்கம்.

அன்றும் அப்படி தழுவிக் கொண்டிருந்து விட்டு சிறிது தூரம் நடந்ததுமே துல்லியமாகக் கேட்ட சுப்பையாவின் குரலை அறிந்து அப்படியே சப்தம் எழாதபடி நகர்ந்து பேச்சு நன்றாகக் காதில் விழும்படி பெரிய மரத்தின் பின்னால் நின்றுகொண்டு அவள் கூர்ந்து கவனித்தபோதுதான் சுகுணாவும் சுப்பையாவும் பேசிய பேச்சு முழுவதையும் கேட்டுவிட்டாள்.

மோட்டார் பைக்கிற்கு சபரிநாதன்தான் தீ வைத்தார் என்கிற விஷயமும்; சுப்பையாவுக்கும் ராஜலக்ஷ்மிக்கும் இடையில் காதல் ஏற்பட்டிருக்கிறது என்கிற விஷயமும்; அது சுகுணாவுக்கும் இப்போது தெரிந்துவிட்டது என்கிற விஷயமும் காந்திமதியை அதிர வைத்துவிட்டன. இவைகள் அனைத்தும் அவள் எதிர் பார்க்காதவை….

அதுவும் சுப்பையாவும் ராஜலக்ஷ்மியும் ஒருநாள் ஓடிப்போகும் திட்டத்தில் இருப்பது காந்திமதியை பலமாகத் தாக்கிவிட்டது. ஒரு நாளாவது சுப்பையாவுடன் படுக்கையைப் பகிர வேண்டும் என்கிற அவளின் மோகத்திற்குக் கிடைத்த ஏமாற்றம்தான் காந்திமதியை கிழித்தெடுத்தது. ஊர் அறிய அவளுடைய வாழ்வின் பொருள்களில் எந்த மாற்றமும் வராமல் போனால் போகட்டும். ஆனால் ரகசியமான ஒரு வடிகாலுக்குத் துடித்துக் கிடக்கும் உணர்வுகளுக்கு தண்ணீர் பாயக்கூட வழியில்லை என்ற ஏமாற்றம் காந்திமதியை கண் கலங்க வைத்தது. பின்பு அவளைக் கோபப் படுத்தியது.

சிறிது நேரம் கழித்து அவளின் மனதில் வெறியே மூண்டது. காய்ச்சல் வந்தால்போல உடம்பெல்லாம் சுட்டது. ஆடவனே இருக்க முடியாத வாழ்க்கை வடிவம் காந்திமதியை சினமூட்டியது. படுத்திருக்க முடியாமல் எழுந்து உட்கார்ந்தாள். எங்கும் நிசப்தம். அவளுடைய வாழ்வில் அவள் மட்டும்தான் இருந்தாள். வீட்டில் எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

இவர்கள் யாருக்குமே தெரியாத பயங்கர ரகசியங்கள் இப்போது காந்திமதிக்கு மட்டும் தெரியும். அவள் நினைத்தால் யாரை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

பைக்கிற்கு தீ வைத்த சபரிநாதனை மாட்ட வைத்து அவரைப் பழி தீர்த்துக் கொள்ளலாம்; அல்லது ஏற்கனவே அவளுக்கு அளவற்ற பொறாமை இருக்கிற அந்த ராஜலக்ஷ்மிக்கு சுப்பையாவிடம் இருக்கிற தொடர்பையும் திட்டத்தையும் வெளிப்படுத்தி அவர்கள் இருவரையுமே பூண்டோடு ஒழித்துக் கட்டலாம்; தேவைப்பட்டால் இரண்டு ரகசியங்களையுமே தேங்காய் உடைப்பது போல உடைத்தெறிந்து நாசம் பண்ணிவிடலாம்!

இதில் எதை எப்படிச் செய்யலாம் என்கிற யோசனையில் காந்திமதி விடிய விடிய உறங்காமல் கிடந்தாள்.

Print Friendly, PDF & Email
என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *