உருப்படாத பயல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 2, 2023
பார்வையிட்டோர்: 2,317 
 

(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சொக்குப் பயல் தானே! அவன் எங்கே உருப்படப் போறான்?

சொக்கையா என்கிற சொக்கலிங்கம் பற்றி அவனது ஊர்க்காரர்கள் கொண்டிருந்த மேலான அபிப்பிராயம் இது.

‘சவத்தைப் போச்சொல்லு சவத்தை! தனக்காகவும் தெரியாது, மத்தவங்க சொனனாலும் புத்தியிலே ஏறாது: வெறும் புத்திகெட்ட கழுதை!’

சொக்கையாவின் அக்காக்காரிகளும், பெரியம்மா, சின்னம்மா, அத்தை என்று ஏதேதே உறவுமுறை கொண்ட அம்மாளுகளும் அடிக்கடி உதிர்த்த பொன்மொழிகள் இவை.

அவனுக்கு அந்த ஊரில் உறவுக்காரர்களுக்குப் பஞ்சம் இல்லை. வயிற்றுப் பாட்டுக்குத்தான் சிரமம்.

அவன் தந்தை சிவசிதம்பரம் பிள்ளை இறந்த நாளிலிருந்தே சிரமம் கவியத் தொடங்கி விட்டது என்று சொல்ல வேண்டும். அவர் செத்தும் ஏழெட்டு வருடங்கள் ஒடிவிட்டன.

பிள்ளைவாள் உயிரோடு இருந்த காலத்தில் அந்த வீட்டில் பாலும், மோரும், சோறும் பாயசமும் தாராளமாகப் புழங்கிவந்தன என்று எண்ணவேண்டியதில்லை. அவர் என்ன என்னவோ செய்து-அவரே சொல்லிக்கொண்டபடி, ‘யானையைத் தூக்கிப் பானையிலே போட்டு, பானையை எடுத்துச் சட்டியிலே போட்டு’ – ஒரு மாதிரியாக் காலத்தை ஒட்டிக் கொண்டிருந்தார். அங்கும் இங்கும் பாடுபட்டார். கடனைக் கிடனை வாங்கி ஒவ்வொரு நாளையும் ஒப்பேத்தினார். பொதுவாக மத்தியதரத்துக் குடும்பத்தினர் செய்கிற எல்லாச் சித்து வேலைகளையும் செய்து, ‘மேனித்தா வாழ்கிற மாதிரி’

வெளிச்சம் போட்டுவிட்டு, அவர் கதையை முடித்துக் கொண்டு போய்விட்டார். அப்போது சொக்கையாவுக்குப் பத்து அல்லது பதினோறு வ்யது இருக்கும், அவன் தாய் விசாலாட்சி அம்மாள், சொந்தக்காரர்கள் குற்றம் குறை சொல்லக்கூடாது என்பதற்காகவும், ஊர் மெச்சவேண்டும் என்றும், ‘போய்ச் சேர்ந்தவுக நல்லகதி பெறவேண்டுமே’ என்ற எண்ணத்தோடும் ஏக அமர்க்களமாக எழவு கொண்டாடினாள். கடன் வாங்கித்தான். பின்னே பணம் ஏது?.

‘செய்யும் கட்டைச் செய்தே தீரணும்‘ என்று பிடிவாதமாக, பதினாறாம் நாள் விசேஷத்தின்போது ஐயர்கள் பலருக்கு அள்ளி வழங்கினாள். மாதம்தோறும் ‘திதிகொடுக்கிறேன்’ என்றும், ஒரு வருஷம் நிறைவுற்றதும் ‘முதல் திவசம்’ என்றும் தாராளமாகவே செலவு செய்தாள்.

அப்புறம் ஏறிவிட்ட கடன்களைத் தீர்ப்பதற்காக இருந்த ஒரு வயலை விற்றாள் அந்த அம்மாள். ‘மண்ணை ஆளக் கண்டது யாரு என்கிறாப்போலே, சொத்து இன்னைக்கு ஒருத்தன் கையிலே! சீதேவி ஒரே இடத்திலே நிலைச்சு நிற்கமாட்டா. இப்ப வயலு போயிட்டா என்ன? சொக்கையா படிச்சு, சம்பாத்தியம்பண்ண ஆரம்பிச்சிட்டான்னு சொன்னா, இந்த வீட்டுச் சோத்தை நாயும் தின்னு, பேயும் விளையாடும்’ என்று பெருமையாகப் பேசுவாள். அந்த ஊர்க் காரர்களுக்கே இப்படி எல்லாம் பேசும் வாக்கு சாதுர்யம் இயல்பாக அமைந்திருந்தது.

இதெல்லாம் சொக்கலிங்கத்துக்கு வெறுப்பு அளித்த விஷயங்கள். வாழ்க்கை கட்டாயத் தேவை ஆக்கிவிட்ட சிக்கனத்தில் ஊறி வளர்ந்தவன் அவன். ‘கொடிது கொடிது வறுமை கொடிது; அதனினும் கொடிது இளமையில் வறுமை’ எனும் ஞான உரையை ஒவ்வொரு நாளும் அனுபவபூர்வமாக உணர்ந்து பெரியவன் ஆனவன், அதனால் மத்தியதர வர்க்கத்துக் குடும்பங்களில் காணப்படுகிற போலித்தனங் களையும் பொய்ப் பெருமைகளையும் ஒதுக்கிவிடக் கற்றுக் கொண்டவன்.

அக்கறையாகப் படித்தான். எஸ். எஸ். எல். சி. பாஸ் செய்தான். வேலைக்காக அலைந்து திரிந்தான். காத்திருந்தான்.

அந்த வீட்டுச் சோற்றை நாயும் தின்னு, பேயும் விளையாடக்கூடிய வளமான நாட்களைக் கண்டு அனுபவிக்கக் காத்திராமலே விசாலாட்சி அம்மாள் ஒருநாள் மண்டையைப் போட்டாள்.

சொக்கையா அரைவயிறும் கால்வயிறுமாக நாளோட்ட நேர்ந்த காலங்களில் பல விஷயங்களைப்பற்றியும் சிந்தித்துச் சில முடிவுகளுக்கு வந்திருந்தான்.

அதில் ஒன்று இந்த மத்தியதர வர்க்கத்துப் பேர்வழிகள் ஜம்பத்துக்கென்றும், சம்பிரதாயம் என்றும், உருப்படாத பயல்முன்னோர்கள் செய்த வழக்கம், அதனால் நாமும் செய்தாக வேண்டும்: என்றும் இன்னும் பல காரணங்களைச் சொல்லியும் வாழ்க்கையில் வீண் தெண்டச் செலவுகளைப் பெருக்கி வருகிறார்கள்.

கையில் பணம் இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது உருப்படாத பயல்செய்யும் கட்டுகளைச் செய்தே ஆகணும்’ என்று பிடிவாதமாகச் செய்து, தங்களையும் தங்கள் குடும்பங்களையும் சிறுகச் சிறுகச் சீரழித்துக்கொண்டு, திணறித் திண்டாடுகிறார்கள். பெண் ‘பெரிய மனுவி’ ஆகிவிட்டாள் என்று பெருமையாகப் பெரிய அளவில் விசேஷம் நடத்துவது முதல், கல்யாணம் காடேற்று கருமாதி என்று ஊரைக்கூட்டி வாய்க்கு ருசியாகச் சோறு ஆக்கிப் போடுவதிலும் பிற வழிகளிலும் அநாவசியமாகப் பணத்தைக் காலியாக்குவதில் உற்சாகம் காட்டுகிறார்கள்.

அப்புறம் கையிலே பணம் இல்லையே, கடன் வளர்ந்து விட்டதே என்று கவலை வளர்க்கிறார்கள். வாழமுடியாத நிலையில் திணறிக்கொண்டிருப்பவர்கள், தாங்களும் வாழத் தெரியாமல் தங்களை நம்பியிருப்பவர்களையும் வாழ விடாமல்-வாழ வகை செய்யாமல்-நாசமாய்ப் போகிறார்கள்.

இவ்வாறான தனது எண்ணங்களை சொக்கலிங்கம் நண்பர் கனிடமும் மற்றவர்களிடமும் சொல்லத் தொடங்கினான். ஆகவே எல்லோரும் அவனை ‘உருப்படாத பயல்!’ ‘திமிர் பிடித்தவன்’, ‘அகம்பாவி’ என்றெல்லாம் பழிக்கலானார்கள்.

அவன் தாய் செத்ததும், சொக்கையா கண்டிப்பாக நடந்து கொண்டான். ‘பல விசேஷங்களில் சம்பிரதாயமாகச் செய்யப்படுகிற சடங்குகளில் பெரும்பாலானவை அர்த்தமற்றவை; அநாவசியமானவை. முக்கியமாகச் சாவு வீட்டிலே, செத்த அன்றும், பிறகு மறுநாளும் செய்யப்படுகிற காரியங்களில் அநேகம் துட்டுப் பிடுங்கவும், பொருள்களை வீணடிக்கவும் ஏற்பட்ட கிரியைகள் என்றே தோணுது. அதனாலே அவை தேவையில்லை. அவசியமானவற்றை செய்தால் போதும்’ என்று கூறி, பிடிவாதம் காட்டினான்.

பிணத்தை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு ஊராரில் சிலபேர் வந்தார்கள். மறுநாள் அவர்களும் வரவில்லை. முக்கியமானவர்கள் ஆறேழு பேர் மட்டுமே தலையைக் காட்டினர். அவர்களை வைத்தே காரியத்தை முடித்தான்.

‘செத்த பிணம் சுடுகாடு போய்ச் சேரவேண்டும். அதுக்கு முதல் நாள் நிகழ்ச்சிகள் தேவை. அப்புறம், எரிக்கும் இடம் பிறருக்கு உதவும் வகையில் அந்த இடத்தை சீராக்க வேண்டும். அதற்காக சாம்பல் கரைத்தல் விசேஷம் தேவைதான். அதை ஒட்டி பாலை ஊற்று, எண்ணையைக் கொட்டு: தயிரை ஊற்று, இளநீரால் குளிப்பாட்டு, தேனைக் கொட்டு,என்ரெல்லாம் வீணான வேலைகள் செய்கிறார்கள். அது அநாவசியம், காகக்குப் பிடித்த கேடு’ என்று சொக்கையா லெக்சர் படித்தான்.

தவிர்க்க முடியாமல் வந்திருந்த சிலரும் ‘எல்லாரும் சொல்வது சரிதான். இவன் எங்கே உருப்படப் போறான்!’ என்று கூறிவிட்டுப் போனார்கள்.

‘பதினாறாம் நாள்’ விசேஷம் என்று சொல்லி, நிலைமைக்கும் காலத்துக்கும் ஏற்றபடி பன்னிரெண்டாம் நாளிலும், பத்தாவது அல்லது ஏழாவது அல்லது ஆறாவது நாளில்-

அவரவர் செளகரியப்படி-செய்துமுடிப்பதில் ஆர்வம் காட்டப்படுகிற ′கருமாதி விசேஷ’த்தை, அது வேண்டியதில்லை, தேவை இல்லாத தெண்ட வேலை. பணத்தாசை பிடித்தவர்களின் ஏற்பாடு அது. பணம் மிகுந்தவர்கள் தங்கள் மன அரிப்பை சாந்தி செய்வதற்காக நடத்துவது. அதை நடத்தாமல் விட்டுவிடுவதனால் ஒன்றும் கெட்டுவிடாது’ என்று சொல்லி நிறுத்திவிட்டான். அவனைப்பற்றி உறவினரும் ஊர்க்காரர்களும் தங்கள் மனம் போனபடி கதைப்பதில் இன்பம் கண்டார்கள்.

யார் என்ன பேசினால் எனக்கென்ன! பிறரது சிரிப்பான வார்த்தைகளோ, சீற்றமான பேச்சுகளோ, பழிப்புகளோ, பாராட்டுகளோ எனக்குச் சோறு கொண்டுவந்து விடப் போவதில்லை, என் தேவைகளை நிறைவேற்றும் சக்தி அவைகளுக்கு கிடையா. நானே உழைத்துப் பாடுபட்டால்தான் எனக்குக் காசுகள் கிடைக்கும், சாப்பாடு கிடைக்க வழியும் பிறக்கும்’ என்று அவன் சொல்வது வழக்கம்.

மாதச் சம்பளம் கிடைக்கும் வேலை என்ன எளிதில் கிடைத்துவிடுகிறதா?போதிய சிபாரிசுகள் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துக் கொடுக்க வேண்டியவற்றை கொடுத்தல்கள் முதலிய எத்தனையோ வேலைப்பாடுகள் நடந்தாக வேண்டுமே! அப்பாவி சொக்கலிங்கம் அதுக்கெல்லாம் எங்கே போவான்? ‘ஆனாலும் அவன் சோர்வடையவில்லை. எந்த வேலை யானால் என்ன? மனசுக்குப் பிடிக்கிற நல்ல வேலை வருகிற போது வரட்டும். அல்லது வராமலே போகட்டும். அதுக்காக காய்ஞ்சுக்கிட்டுக் கிடக்க முடியுமா’ என்று எண்ணினன். டவுனில் ஒரு ஒட்டலில் செர்வராகச் சேர்ந்து உழைக்க முற்படடான்.

உண்மை அறிந்த ஊர்க்காரர்கள் அவனை ஏசினர்கள். ஊரின் அம்மாக்கமாருகளும் அக்காக்காரிகளும் ‘நம்ம குலப் பெருமை என்ன! குடும்ப கவுரவம் என்ன! அவன் தாத்தா வுக்கு இருந்த மதிப்பு என்ன! இந்தச் சின்னச் சவம் எல்லார் மானத்தையும் வாங்கும்படியாக் காரியம் பண்ணித் திரியுதே என்று முன்னுரை கூறித் தனிப் புராணம் படித்தார்கள்.

அதைக் கேள்விப்பட்ட சொக்கையா சிரித்தான். ‘நாங்க ராசாக்கள் பரம்பரை. எங்க முப்பாட்டனார். அவருக்கு முற்பட்ட பாட்டனார் எல்லாம் குதிரையிலேதான் சவாரி போவது வழக்கம்னு சொல்லிக்கிட்டு, இன்னய அன்னக்காவடிப் பய தன் பின்புறத்தை சுகமாத் தடவிக்கிட்டு நின்னான்னு சொன்னா, அது பெருமைக்குரிய செயலாக ஆகுமா ஐயா! பின்னே போட்டு பேசுதீரே, வாஸ்தவம், அவுகள்ளாம் திசை கட்டி ஆண்டாக இருக்கட்டுமே. இன்னிக்கு ஐயாவாள் பாடு பட்டு உழைக்கலேன்னா, பட்டினிதானேவே கிடக்கணும்?’ என்றான் குறைகூறிய ஊர்க்காரர் ஒருவரிடம் ‘புத்தியாய்ப் பிழைக்கத் தெரியாத கழுதை, உருப்படாத பயல்!’ என்று முணுமுணுத்தபடி போனார் அவர்.

காலம் ஒடிக்கொண்டிருந்தது.

சொக்கலிங்கம் தனக்குரிய தேவைகளை தானே பூர்த்தி செய்துகொள்வது என்ற தீர்மானத்துடன் வாழ்க்கைப் பாதையிலே அடி எடுத்து வைத்தவன். அவனே குறை கூறவும், அவன் செயல்களை விமர்சிக்கவும் ஆட்கள் இருந்தார்களே தவிர, அன்போடு அவன் பிரச்சினைகளை ஆராய்ந்து, அவனுக்கு உதவிபுரிவதற்கு எவருமிலர்.

‘இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. எங்க தாத்தா அல்லது அப்பா சொத்து தேடி வைத்துவிட்டுப் போயிருந்தால்-நான் பெரிய வீட்டுப் பிள்ளை ஆக இருந்தால்-என்ன கவனிக்க ஆட்கள் வருவாங்க. அதிர்ஷ்ட சீட்டிலோ அல்லது ஏமாற்று வியாபாரத்திலோ, எனக்கு ஆயிரம் ஆயிரமாப் பணம் கிடைக்க வழி ஏற்பட்டிருந்தாலும், ஐயா-ராசான்னு சொல்லிக்கிட்டு பல பேரு வருவாங்க. அத்தைகளும், அக்காள்களும் கல்யாணம் பண்ண வேண்டாமா? அங்கே பொண்ணு இருக்கு; இங்கே பொண்ணுயிருக்குன்னு நச்சரிப்பாங்க. வெறும் நபரான என்னை ஏன் அவங்க அணுகப் போருங்க?” என்று அவன் எண்ணினான்.

இதுக்காகவும் சொக்கையா வருத்தப்படவில்லை.

அவர் பணிபுரிந்துகொண்டிருந்த ஓட்டலில் தண்ணீர் எடுத்து வருவது, பாத்திரங்களைத் துலக்குவது, பெருக்குவது போன்ற அலுவல்களைக் கவனிக்க ஒரு அம்மாள் இருந்தாள். பார்க்க இலட்சணமாகத்த்தானிருந்தாள். அவள் அவனை கவனித்து வந்தாள். அவன் தோற்றமும் பேச்சும் இயல்புகளும் அவளுக்கு பிடித்திருந்தன. பரிவுடன் பேசி பேசி அவன் வரலாற்றை அவள் தெரிந்து கொண்டாள். ’கல்யாணம் செய்து கொள்ள வேண்டாமா தம்பி? எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பே?’ என்ற பேச்சு கொடுத்து அவன் மனசை அறிந்து கொண்டாள்.

ஒருநாள் அவனை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். ஏழைக் குடில்தான். அங்கே ஆட்டுரலில் தோசைக்கு மாவு ஆட்டிக்கொண்டிருந்த சிறு பெண் அவன் பார்வையில் பட்டாள். ’என் மகள் தான். தங்கம்னு பேரு’ என்றாள் தாய்.

இருவரும் பார்த்துக்கொண்டார்கள். சொக்கையா, தங்கம், தாய் மூவருக்கும் பரஸ்பரம் பிடித்துப் போயிற்று.

அதிக தடபுடல் இல்லாமல், சொக்கலிங்கம் தங்கத்தை கல்யாணம் செய்துகொண்டான். இவ்விஷயத்தை அவன் மூடி மறைக்கவும் இல்லை.

அவனுடைய ஊர்க்காரர்கள் மீண்டும் சலசலத்தார்கள். அம்மையார்கள் பொரிந்து கொட்டினார்கள், ‘அவ என்ன சாதியோ என்ன எழவோ! இவனுக்கு மூளைபோன போக்கைப் பாரேன், வகையரா’.

‘சாதியாவது, சமயமாவது!’ என்று சிரித்தான் சொக்கலிங்கம். ‘தங்கம் நல்ல பெண். அதுதான் முக்கியம்.’

யெருவாக்கெட்டப்பய! இவன் மூஞ்சியிலே முழிச்சாலும் ஆகாது. நம்ம குலப்பெருமை என்ன! நம்ம குடும்பம் இருந்த இருப்பு என்ன? இந்தக் கரிமுடிவான் சாதிகெட்டவ எவளோ பெத்ததைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நிக்கானே!” என்று கொதித்தாள் ஒரு அக்காள்.

‘ஆகா, ரொம்பக் கரிசனம்தான்! நான் நல்லாயிருக்கணும்னு நீங்க யாராவது நினைச்சது உண்டா? எனக்குப் பெண் பார்த்துக் கல்யாணம் நடத்தணும்னு எந்த அக்கா அல்லது அத்தை அல்லது பெரியம்மா சின்னம்மா முன் வந்தா? மீனாச்சி அத்தைதான்-அவதான் தங்கத்தோடே அம்மா-பரிவோடு விசாரித்து, செய்யவேண்டியதை தன்னால் ஆனதைச் செய்தா. எப்பவும் எனக்கு நல்லது விரும்புகிறவ அவதான். அவளிடம் இருக்கிற மனிதாபிமானம் உங்ககிட்டே இல்லையே!’ என்று கூறிச் சிரித்தான் அவன்.

‘தூ’என்று காறித் துப்பினாள் அக்காக்காரி.

அது அவனை எதுவும் செய்துவிடவில்லை. அந்த ஊரில் இவனுக்கென்று இருந்த ஒரே உடைமையான சிறு வீட்டை அவன் விற்பனை செய்தான், அங்கிருந்தே போய்விட்டான்.

‘அவன் உருப்படுவான்கிறியா? இந்தப் பணத்தை நாசமாக்கிப் போட்டு நடுத்தெருவிலே நிற்கப் போறான் பாரு!’ என்று பேசிக்கொண்டார்கள் அவ்வூர் பெண்மணிகள்.

அவர்களது ‘பத்தினி வாக்கு’ பலிக்கவில்லை.

சொக்கலிங்கம் வீடு விற்ற பணத்தை முதலாக வைத்து ‘சைவாள் சாப்பாட்டு கடை’ ஒன்று ஆரம்பித்தான். ‘காப்பி, டீ, பலகாரமும்’ உண்டு. அவனது மீனாட்சி அத்தை சொன்ன யோசனைதான் அது. ஒட்டல் தொழிலில் நல்ல அனுபவமும் தேர்ச்சியும் பெற்றவள் அவள்.

அவர்களுடைய உழைப்பு வீண் போகவில்லை. சொக்கையாவின் வாழ்க்கையில் குறை எதுவும் தலைகாட்டிவிடவில்லை.

– சாந்தி, செப்டெம்பர் 1973

– அருமையான துணை, முதற் பதிப்பு: நவம்பர் 1991, கிறுஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *