கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 8,176 
 

சென்னை-வருசநாடு 163இ விரைவு பேருந்தில் பயணிகள் அனைவரும் தூங்கத்தொடங்கினர்.

என் மனசு இன்னமும் தவியாய் தவித்தது!

என் அம்மாவுக்கு என்னமும் ஆகியிருக்கக்கூடாது.

அம்மா…என்னுடன் சென்னையிலேயே நிம்மதியாக இருந் திருக்கலாம்.

என்னெ படிக்க வச்சு ….கல்யாணம் செய்து வச்சு… ஒரு தனியார் கம்பெனியில் டர்னர் வேலை கிடைத்ததால், அம்மா ஆசைப்பட்டது போல் எனக்கு நல்ல வாழ்க்கையும் அமைந்திருந்தது.

என் மனைவிக்கும், அம்மாவுக்கும் அடிக்கடி ஏற்பட்ட மாமியார் மருமகள் சண்டையில்,ஒரு முறை நான் குறுக்கிட வேண்டிய தாகிவிட்டது.

“ என்னங்கம்மா உங்களோட ஒரே எழவாப் போச்சு” கோபத்தில் திட்டிவிட்டேன். உடனே துணிமணிகளை மூட்டை கட்டிக்கொண்டு, எங்கள் சொந்த ஊரான மயிலாடும்பாறைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.

ஊரிலிருந்து என்னுடைய வகுப்புத் தோழன் ஜெயராஜ் தான் நான் வேலை செய்யும் கம்பெனிக்கு போன் செய்து, உன் அம்மா உடம்புக்கு முடியாம கிடக்குறாங்க, உடனே புறப்பட்டுவான்னு தகவல் சொன்னான்.

அம்மா, ஊருல குடியிருந்தாலும் எப்பவுமே என் நினைப்புதான்!.

என்னெ படிக்கவைக்க அவ பட்ட பாடு…கண் கொண்டு பாக்க முடியாது.

எனக்கு சத்தம் போட்டு அழுது தீர்க்கணும் போலிருக்குது.

எனக்கு வட்டியில சோறு வைக்கும்போதெல்லாம் அவ கையப் பாத்திருக்கேன். கையெல்லாம் கோடு கோடாக, பாளம் பாளமாக கீரல் விழுந்திருக்கும். காயிந்துபோன பருத்தி செடிக கீருண காயங்கள் இருக்கும். சோத்துல குழம்பு ஊத்தி அவ சாப்பிடும்போது, அடிக்கடி கையை அவள் வாயருகே வைத்துக்கொண்டு ஊதிக்கொள்வாள். கை எரிச்சலில் அவதிப்படுவாள்.

தீபாவளி தைப்பொங்கல்ன்னு ஊரே நல்ல நாள் கொண்டடுனாக் கூட, என் அம்மா அன்னிக்கும் வேலை கிடைக்குமா? என்று தான் தெருஞ்சவங்க கிட்ட விசாரிப்பாள்.

எங்கிட்டே அடிக்கடி சொல்லுவா… “டேய்! கண்ணா, எனக்கு விவரம் தெருஞ்ச நாளுள இருந்தே எங்கம்மாவ, அப்பாவ நான் பாத்ததில்ல. எங்க அம்மா கருப்பா சிவப்பான்னு கூட எனக்கு தெரியாது. சின்ன வயசிலிருந்தே நான் அனாதையா சீரழிஞ்சவடா, இப்போ உங்கப்பாவையும் பறிகொடுத்துட்டு நிக்கிறேன்.

நீயாவது நல்லா இருக்கணும்.படிச்சுமுடிச்சு ஒரு வேலையில சேர்ந்து,கைநிறையா சம்பாதிக்கணும்.சந்தோசமா நிறைஞ்ச குடும்பமா தளைக்குனும்டா. என் கஷ்டம் என்னோடவே முடிஞ்சுடனும்டா கண்ணா. என்னோட பாடெல்லாம் என்னோடவே போயிடனும்.” புலம்பி தவிப்பா.கிறுக்கியா அலையுவா.

அன்னக்கி, நான் அப்படி அம்மாகிட்ட கொவிச்சிருக்க கூடாது. தேனிஐ.டி.ஐ.யில் டர்னர் பிரிவில் படிச்சிட்டிருந்தேன். சனிக் கிழமை,ஞாயிற்றுக்கிழமை எனக்கு வார விடுமுறை.வாரம் வாரம் எங்க ஊர் மயிலாடும்பாறைக்கு போய் வருவேன்.

எஜூகேசனல் டூர் போறதுக்காக அம்மாகிட்ட ரெண்டாயிரம் ரூவா பணம் கேட்டிருந்தேன் (யாருக்கிட்டயாவது கடன் வாங்கி தான் ).பணம் தரல.பிடிவாதம் செஞ்சும் பார்த்தேன்.

அம்மா, இந்த டூர் எனக்கு முக்கியம்மா.பாதி செலவு அரசாங்கம் ஏத்துக்கும்.பாதி செலவு தான் நம்மளோடது.ஒரு வாரம் வெளி ஊர் டவுனெல்லாம் சுத்திப் பாக்கலாமாம்.மெட்ராஸ் ,ஓசூர்,பெங்களூர், இன்னும் பெரிய பெரிய தொழில் நகரங்கள்,லிமிடெட் கம்பெனிகள், எங்கஐ.டி .ஐயில இல்லாத ஆட்டோமேட்டிக் லேத் வகைகள் எல்லாம் பக்க்கலாமாம்.

கட்டிங்மெஷின், பெரியபெரிய ஷேப்பிங் மெஷின், டிரிலிங் மெஷின்,மில்லிங் மெஷின், இன்னும் நிறையா மெஷின் னெல்லாம் பக்கலாமாம் என்றெல்லாம் சொல்லி பணம் கேட்டு அழுது முரண்டு பிடித்து பாத்துட்டேன்.அம்மா கொஞ்சம் கூட ஒத்துப்பட்டு வரல. நான் வீட்டை விட்டு கோவிச்சுக்கிட்டு தேனி ஐ.டி.ஐக்கு வந்துட்டேன்.

யாருகிட்டவோ ரெண்டாயிரம் கந்து வட்டிக்கு வாங்கிக்கிட்டு உடனே புறப்பட்டு தேனி பஸ் ஸ்டாண்டுல இறங்கி இடம் தெரியாம அலஞ்சு ஒலைஞ்சு கிறங்கி கிறுகிறுத்துப்போய் ஐ.டி.ஐக்கு வந்துசேர்ந்தாங்க.

“சார் பஸ் கால்மணி நேரம் நிக்கும். டீ,காப்பி,டிபன்,சாப்பாடு சாப்பிடுறவங்க சாப்பிடலாம்” என்று மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது போல திரும்ப திரும்ப கத்திக் கொண்டிருந் தான் ஒரு சிறுவன். பஸ்ஸில் இருந்த எல்லோரும் இறங்கிக் கொண்டார்கள்.எனக்கு இறங்க மனம் ஒப்பவில்லை.

என்மடியில் பயணக்களைப்பில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் என் மனைவி.

அம்மாவ நினைக்க நினைக்க பதறிப்போகிறது என் உசுறு!

இருவது வருசமிருக்கும், பயங்கர மழை. ஆத்துல பயங்கர வெள்ளம் கரைபுரண்டு வந்தது. ஆத்துக்கும் கோபம் வந்து அதனுடைய முழு பலத்தையும் காட்டுனா எப்படி இருக்கும்? அந்த ஆத்த கடக்க பாலம் கிடையாது. எங்க ஊரு ஜனங்க ஆத்தக்கடந்து தான் காட்டு வேலைக்கு போயாகனும்.

ஆத்துல வெள்ளம் வரும் போதெல்லாம்…ஜனங்கள ஆத்துவெள்ளம் இழுத்துக்கிட்டு போகும். ஆடு,மாடுகள் ளெல்லாம் வெள்ளத்துல மிதந்து போகும்போது ஆடு மாடுக “ம்மா…ம்மா…ம்மான்னு கத்தும்போது கரையில் நிக்கிறவங் களுக்கு கண்ணீர் வரும்.

ஜனங்கள வெள்ளம் இழுத்துப் போகும் போது “காப்பாத்துங்க… காப்பாத்துங்க…”ன்னு ஜனங்க கத்துறத காதால் கேட்க முடியாது. கண்கொண்டு பாக்கமுடியாத கொடூரம் சோகம் அந்த காட்சிய பார்த்தவங்க பல பேருக்கு புத்தி பேதலிச்சு போயிருக்கு. அந்த வெள்ளத்துல என்னோட அம்மாவும் போயிட்டாங்க. ஊரே கூடி எங்கேயாவது கரை ஒதிங்கி கிடக்காங்களான்னு தேடிப்பார்த்தோம்.காணல. மறுநாள் எப்படியோ கரையொதுங்கி உயிரோட வீடு வந்து சேர்ந்தாங்க.

என்ன உசுறோ…இனி கட்டையில போனாக்கூட இது வேகாதுன்னு ஊரே ஆச்சிரியப்பட்டுபோச்சு.

அம்மாவ, நினைக்கையில எனக்கு நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது!.அழுகையை அடக்க இயலவில்லை.

நானும் என் மனைவியும் தெருமுனையில் நுழையும்போதே ஆண்களும் பெண்களும் முதியவர்களும் எல்லோரும் ஓடிவந்து, எங்களை கைதாங்கலாக அழைத்து சென்றார்கள்.

“பாவம் தம்பி உங்க அம்மா, உங்களுக்கு கல்யாணமாகி ரெம்ப வருசமா குழந்தை இல்லையின்னு, நம்ம ஊரு முருகன் கோயிலுக்கு ஆடி கிருத்திகைக்கு தலையில தேங்காய் உடைக்கிறதா நேந்துகிடுச்சாம். நேத்து தலையில தேங்காய் உடைக்கையில உங்க அம்மாவுக்கு மண்டை ரெண்டா ஓடைஞ்சிருச்சு.பாவம் நெஞ்சு குழிக்கும் தொண்டை குழிக்குமா உசுறு போகாம கிடந்து கஷ்டப்படுது.நீங்க புருஷன் பொண்டாட்டி ரெண்டுபேரும் சேர்ந்து சீக்கிரமா தொண்டைக்குழியில பால் ஊத்துங்க.அப்ப தான் உசுறு போகும்” என்றார்கள்.

என் உயிர் மருத அம்மாவைப் பார்த்தபடி பால் கிண்ணத்தைக் கையில் எடுத்தேன்!

– தாமரை நவம்பர் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *