உயிரும்…மெய்யும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 24, 2021
பார்வையிட்டோர்: 3,082 
 
 

அனபுளள ஜீவா அண்ணே..

தம்பி நேசமணி எழுதுற கடுதாசி.. இப்பவும் அபபத்தாளுக்கு மேலுக்கு ரொம்பவே சொகமிலலாம கெடக்குது..’

ஜீவா..ஜீவா ‘ ன்னே பெனாத்திகிடடு கிடக்குது..வெரசா பொறபபட்டு வரச்சொலலி பொலம்புது..

எனக்கு சரியா எழுத வராம சங்கடப்பட்டுகிடடு எழுதாம இருதநதிட்டேன்..நீ வந்தாத்தேன் நல்லாகும் போல தோணுது..உடனே பெறப்பட்டு வாங்க.

அன்பு தமபி
நேசமணி.

ஜீவா கடிதத்தை இதுவரை பத்து முறை படித்திருப்பான்.. விலாசம் எழுதியிருப்பதைப் பார்த்ததுமே அது நேசமணி என்று புரிந்து விட்டது.. உயிரையும் மெய்யையும் ஒன்றாக பாவிக்கும் குணம் அவனைத் தவிர யாருக்கு வரும்???

பள்ளியில் படிக்கும்போதே அவனுக்கு சுட்டுப் போட்டாலும் தமிழ் வராது.மற்ற பாடங்கள்.கேட்கவே வேண்டாம்…

நேசமணி அவனுடைய சித்தப்பா பையன்..

***

ஜீவா பிறந்தது பரக்கை கிராமம்.நாகர்கோவில் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன்.

பிறக்கும்போதே பிரசவத்தில் தாய் இறந்ததால் அம்மாவை விழுங்கியவனானான்.

அப்பா மீன் பிடிக்கும் வலை பின்னத்தெரிந்தவர்.

அது ஒன்றுமட்டுமே தெரிந்தவர்..

ஒரு நாள் வேலைக்குப் போனால் ஒன்பது நாள் குடித்துவிட்டு நடுரோட்டில் படுத்துக் கிடப்பார்.

ஜீவா வளர்ந்தது எல்லாமே அப்பத்தா நிழலில் தான்.

குடல் வெந்து ஒரு நாள் ஜீவாவின் அப்பாவும் போய்ச் சேர்ந்தார்.

அம்மாவோடு சேர்த்து அப்பாவையும் விழுங்கி விட்டான் என்று சொல்ல ஊருக்கும் சுலபமானது.

அப்பத்தா செங்கம்மா ஒரு தனிப்பிறவி.ஊர்வாயை மூடமுடியாது என்று தெரிந்ததுதான்.. ஆனால் தன் வாயை மூடிக்கொள்ளத் தெரிந்தவள்.

“மவனே..நீ ஒண்ணும் வெசனப்படாத ஐயா.ஊரு என்ன வேணா சொல்லிட்டுப் போவட்டும்..நீ எனக்கு எப்பவும் நாம்பெத்த மவராசந்தான்..நீ படிச்சு பெரிய ஆளாணும் என் ராசா.”

ஆயாவைக்கூட்டிக்கொண்டு போகாத கோவில் இல்லை.. கடைத்தெரு இல்லை..

செங்கம்மாவும் பேரன் ருசியறிந்து வாய்க்கு வக்கணையாய் சமைத்துப் போடுவாள்..

தாய். தகப்பன்..இல்லாத பையன். பார்த்து பார்த்து செய்வாள் செங்கம்மா..

“அப்பத்தா..உம்மடியில படுத்துக்கட்டா?”

“மோனே..இது என்ன ராசா கேள்வி..உங்கொப்பனுக்கும்..உங்கொம்மைக்குந்தான் கொடுப்பின இல்லாம போயிடிச்சே…வா ராசா..!! வந்து படு.”

முத்தத்தில் கயிற்றுக் கட்டில்.. வானத்தில் முழு நிலா.ஆயா மடி.. வேறென்ன வேண்டும்.???

“அப்பத்தா.எங்கொப்பனும் ஆத்தாவும் இப்ப எங்கனக்குள்ள இருப்பாக..?? ஆத்தா எப்படி இருக்கும்.சொல்லு ஆயா..!!!”

“என்னப் பெத்த ராசா.அதோ..அங்கனக்குள்ள தெரியுதில்ல. நட்சத்திரம்.அதுல ஒண்ணுதான் உங்கொப்பன்..

ஒண்ணு உங்கொம்மை.

அய்யோ..நானெத்த சொல்ல.மவராசி.மணியம்மா. உன்னியப் போல .நீ உங்கொம்மைய இல்ல அச்சு அசலா உரிச்சு வச்சிருக்க.!!!

அழகுன்னா..அத்தனை அழகு..என்ன பதவிசு..அவள குத்தம் குற சொல்ல ஏதுமில்லை.பாவி மக..உம்முகத்தக் கூட பாக்க குடுத்து வக்கலியே.

அவ என்னிய பெத்த அம்மச்சியப்போல இல்ல பாத்தவ! ஊரு ஒலகத்தில இது மாதிரி மருமக வாய்க்காதின்னில்ல
பெரும்பேச்சா இருந்திச்சு.யாரு கண்ணோ..என்ன மாயமோ.?”

பொலபொலவென கண்ணீர் சிந்தினாள் செங்கம்மா…

ஜீவாக்கண்ணு..நீ நல்லா படிக்கோணோம்… பெரிய ஆபீசரா வரணும்.கண்ட கோட்டிப் பயலுகளோட சாவாசம் வச்சுக்கிறாத…. ஐயா.சொல்லு..செய்வியா..???”

ஜீவா எழுந்து உட்கார்ந்தான்.

“ஆமா..உம்மேல ஆணையா சொல்லுதேன்..உம்பேச்சுக்கு மறு பேச்சு கெடையாது..நானு படிச்சு போட்டு இந்த ஜில்லாவுக்கே கலெக்டராக வருவேன்.”

“பின்னஇல்லாமே..?? உங்கொப்பனப்போல சிக்குவண்டிக்காரனா மட்டும் ஆய்டாத.!!”

***

எப்போது கடைக்கு அனுப்பினாலும் ஆயாவுக்கு என்ன வேண்டுமென்று மறக்காமல் கேட்டுப் போவான்..

“ஐய்யா..ஜீவா..வாயி நமநமன்னு ஊறல் எடுக்குது..கடையில சவுக்கு மிட்டாயும்.. ஒரு கவுளி வெத்தல.பாக்கு..வாங்கியா ராசா..உனக்குப் பிடிச்ச இலையப்பம் செஞ்சு வைக்கிறேன். “

ஆயா , எள் என்பதற்குள் எண்ணையாய் நிற்பான்.

பள்ளிக்கூடத்தில் முதலாவது மாணவனாய் தேர்ச்சி பெற்றபோது ஆயாவை மேடையில் ஏற்றிவிட்டார்கள்.

பரக்கையில் மேலே படிக்க வசதி இல்லாததால் , நாகர் கோவில் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கிக் கொண்டு மாலை நேரத்தில் மெக்கானிக் கடையில் வேலைக்கு சேர்ந்தான்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான் வீட்டுக்குப் போக முடியும்!

அப்பத்தாளை பிரிந்திருப்பது ஆரம்பத்தில் மிகவும் கடினமாய் இருந்தது.. அவளுக்கும் தான்..

***

இந்த முறை ஆறு மாதமாகியும் அவனால் ஊருக்கு கிளம்ப முடியவில்லை..கடைசி வருஷம்..நிறைய படிக்க வேண்டி இருந்தது.

மெக்கானிக் கடையில் நிறைய சம்பள பாக்கி நின்றது. முதலாளி ஒரு கோபக்காரன்.. அதிகம் பேசினால்’ வேலய விட்டு நின்னுக்கோ தம்பி’ என்று வாய் கூசாமல் சொல்லிவிடுவான்..

கையில் தம்பிடி காசு கிடையாது..

ஆயா இவ்வளவு நாளும் தனியே சமாளித்தவள்தான்.. ஆனால் நாளுக்கு நாள் தள்ளாமை கூடிக் கொண்டே போனதால் அடிக்கடி ‘ ஜீவா..ஜீவா..’ என்று பிதற்ற ஆரம்பித்து விட்டாள்..

பக்கத்தில் கூப்பிட்ட குரலுக்கு சித்தப்பா வீடு இருந்தது.

தம்பி நேசமணி பாசக்கார பையன். அடிக்கடி அவளைப் போய் பார்த்துவிட்டு உடனே விவரம் தெரிவிப்பான்.

ஆயாவுக்கு வேண்டிய சகாயம் செய்து கொடுப்பான்.

***

நேசமணியின் கடிதம் வந்ததிலிருந்து ஜீவாவுக்கு இருப்பே கொள்ளவில்லை..ஆயாவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ?

தைரியத்தை வரவழைத்து கொண்டு முதலாளியிடம் போனான்.

“ஐயா..நானு ஊருக்குப் போயி வெகுநாளாச்சுது. அப்பத்தா ஒரே புலம்பிக் கிட்டு திரியுது.இந்த ஒரு முறை அனுமதி குடுத்தீங்கன்னா..!”

“ஆத்தா சுகமில்லாம படுத்த படுக்கயா கெடக்கிற மாதிரியில்ல பேசுதவியக..இங்க ஆளே இல்லியே ஐய்யா.கண்டிஷனா போவணுமா?”

“பின்ன இல்லாம ???.நாலு நாளயில திரும்பிட மாட்டேன்!”

முதலாளிக்கு என்ன தோன்றியதோ , அவனுடைய பூரா சம்பளத்தையும் பைசா பிடிக்காமல் குடுத்ததுமில்லாமல், கூடவே நூறு ரூபாயும் குடுத்து, ‘ ஒரு வாரம் இருந்திட்டுத்தான் வாலே.’ என்று அன்புடன் வழி அனுப்பி வைத்தார்.

ஜீவாவுக்கு தலைகால் புரியவில்லை!

ஆயாவுக்கு ரொம்ப நாளாகவே ஒரு நல்ல கொட்டடி சீலை வாங்கித் தரவேண்டுமென்ற ஆசை.

பைநிறைய மாம்பழம்.ஆப்பிள். சவுக்கு மிட்டாய். தேன் மிட்டாய். கச்சாயம். பால் முறுக்கு..ரவா லட்டு.. என்று பையைத் திணித்து விட்டான்.

பையும் மனதும் நிறைந்திருக்க, இதோ கிளம்பி விட்டான் ஜீவா.

இரவு ஒன்பது மணி.. பஸ் டிரைவர் ஒரு மிதி மிதித்தால் ஒரு மணி நேரத்தில் பரக்கையில் இருப்பான்…

கல்லூரி வளாகத்தின் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் ஆயிரம் கனவுகளுடன் காத்திருந்தான் ஜீவா.‌!!!!!!!!!

***

அபினவுக்கு இன்று பிறந்த நாள்.. அதுவும் பதினெட்டாவது பிறந்தநாள்.. அவன் ஆசைப்பட்டது அவனுக்கு கிடைத்துவிட்டது.

லேட்டஸ்ட் மாடல் BMW.. இரவு நண்பர்களுக்கு விருந்து..அப்பா அஸிஸ்டன்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ்..அம்மா கார்டியாலஜிஸ்ட்.. தாத்தா ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி.

இவர்கள் அத்தனைபேரின் அன்புக்கும் பாசத்துக்கும் உரிய ஒரே ஜீவன் அபினவ்..கேட்டது கிடைக்கும்…நினைத்தது நடக்கும்!

ஆனாலும் கண்டிப்புடன் வளர்க்கப்பட்ட பையன்!

“அபி.கையில கிடைச்சிட்டா எந்த பொருளுக்கும் மதிப்பு குறைஞ்சிடும்.நீ இந்த பரிச ரொம்ப சாதாரணமா எடை போட்டிடாத..நிறைய யோசிச்சுதான் நானும் அம்மாவும் இத உனக்கு பரிசா குடுக்க முடிவு பண்ணினோம்..

இது உனக்கு சொந்தமான காரணத்தால கண்டபடி உபயோகிக்க மாட்டேன்னு நம்பறோம்!

இத வச்சிருக்கறதால எந்த விதத்திலும் நீ உன் நண்பர்களோட மத்தியில பெரிய ஆளாயிட்டோம்னு கனவில கூட நெனச்சிடாத. எந்த விதத்திலேயும் உன் நடத்தையிலோ , பேச்சிலோ ஒரு மாத்தமும் வராம கவனமா இரு!”

அப்பா குணசேகரன் ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரி. அவரது தந்தை உலகநாதனின் வளர்ப்பு அப்படி!

***

பிறந்த நாளையொட்டி ஒரு வாரம் விடுமுறை வந்தது…

“அப்பா.. நான் என் ஃபிரண்ட்ஸ், பீட்டர், நரேன், ரமணனோட ஒரு வாரம் கன்னியாகுமரி போலாம்னு ப்ளான் பண்ணியிருக்கோம். காரையும் ஓட்டிப்பாத்த மாதிரி இருக்கும்!”

“பாத்து போயிட்டு வாங்க.. நான் சொன்னத மட்டும் மறந்திடாத!”

புது வண்டி.அருமை நண்பர்கள். அபினவுக்கு வாழ்க்கை சுவர்க்கமாய் மாறியிருந்தது!

திருவனந்தபுரத்திலிருந்து முதலில் கோவளம். கடற்கரை ரிசார்ட்டில் இரண்டு நாட்கள்.. அங்கிருந்து கன்னியாகுமரி!

“டேய் ..அபி..உண்மையிலேயே லக்கி ஃபெல்லோ. இந்த மாதிரி அப்பா..அம்மா..கிடைக்க குடுத்து வைக்கணும்.நான் ஒரு புல்லட் வாங்குறதுக்குக்குள்ள பட்ட பாடு..”

“நான் BMW கார்ல ஏறிப் பாக்கறது இதுதாண்டா முதல் தடவை.”

***

பீட்டரும் , நரேனும் மிடில் க்ளாஸ் குடும்பம்..ரமணன் கொஞ்சம் வசதி உள்ளவன்.. ஆனால் அவனுக்கு அப்பா இல்லாத காரணத்தால் அம்மாவின் கண்டிப்பு அதிகம்.. பைக் வாங்கக் கூட அனுமதி கிடைக்காமல் அப்புறம் அபினவ் சிபாரிசினால் கிடைத்தது!

காலை ஆறு மணிக்கெல்லாம் கிளம்பி விட்டார்கள்.

காரை அபினவ் தான் ஓட்டினான். எல்லோருக்கும் ஒரு சான்ஸ் குடுப்பதாக அபினவ் முதலிலேயே சொன்னதால் அவர்கள் பொறுமை காத்தனர்..!

விமானத்தில் பறப்பது போன்ற உணர்வு. இருபது நிமிடத்துக்குள் கோவளம்..

இரண்டு நாள் பொழுது இரண்டு நொடியில் முடிந்து விட்டதுபோன்ற உணர்வு..

“அபி.. எனக்கு ஒரு வேண்டுகோள்.நாகர்கோவில் போய்ட்டு போகலாமா? கொஞ்சம் வேலை இருக்கு..!”

பீட்டர் ஒரு கோரிக்கை வைத்தான்.

“நாகர்கோவில்ல என்னடா வேலை.?”

“உங்களுக்கெல்லாம் தெரியாதா..அவனோட வருங்கால மனைவி மரியா அங்கதாண்ட இருக்கா!”

“ஏய் ..சொல்லவேயில்லையே.?எப்படா கல்யாணம்..?”

“சும்மாயிருங்கடா.அவள முழுசா பாத்தே மூணு வருஷம் ஆச்சு.. நர்ஸிங் படிக்கிறா.படிப்பு முடிஞ்சதும்தான் கல்யாணம்!”

“கொஞ்சம் Detour தான். இருந்தாலும் அருமை நண்பனுக்கு இது கூட செய்யாட்டா நண்பன்னு சொல்லிக்கறதே அவமானம்..!

மணி ஏழாச்சு..இப்போ டின்னர் ஆர்டர் பண்ணினாத்தான் சரியா இருக்கும்..இருட்டறதுக்குள்ள கன்னியாகுமரில இருக்கணும்!”

“இன்னிக்கு செலிபரேஷன் டே..! முதல் டோஸ்ட் நமதருமை நண்பன் அபிக்கு..! அடுத்தது பீட்டரின் காதலுக்கு..! ஓக்கேயா..?

“நாலு ‘கிங்ஃபிஷர் ‘ஆர்டர் பண்ணுங்கடா முதல்ல..அப்புறம்..கொஞ்சம் நொறுக்குத்தீனி..சாலட்.!”

“என்னடா.. குழந்தை பீர் பாட்டில இன்னும் விடாது போலியே.. உனக்கு பதினெட்டு வயசு..!

நாங்க எல்லாம் உனக்காகத்தான் வாழ்க்கையே தியாகம் பண்ணிட்டு உக்காந்திருக்கோம்.

இன்னைக்கு ‘பிளாக் டாக்‘ தான் ஆர்டர் பண்ணப் போறோம்..”

“டேய். எனக்கு பீர் குடிக்க மட்டுந்தான் வீட்ல பர்மிஷன்!”

“அப்பிடியா.. ஒரு ஃபோனைப்போடு..அங்கிள் கிட்ட பர்மிஷன் கேட்டா போச்சு.!!”

“டேய்.வாராதிங்கடா.. ஓக்கே.! உங்க இஷ்டம்.அப்பிடியே டின்னரும் ஆர்டர் பண்ணிடலாம்..இல்லைனா லேட்டாயிடும்.”

வெய்ட்டரைக் கூப்பிட்டார்கள்.!

“சார்.. Black dog. White dog.’ எல்லாம் கிடையாது..’Chivas Regal..’ தான் கெடைக்கும்.. டின்னர் ஆர்டர் சொல்லுங்க..!!”

***

சாப்பிட்டு முடிக்கும் போதே எட்டாகியிருந்தது. பீட்டர் தான் வண்டி எடுத்தான்.

ஒன்பதுக்கெல்லாம் நாகர்கோவிலைத் தொட்டுவிட்டார்கள்..

“பாவண்டா பீட்டர். unlucky fellow..முன்னாடியே சொல்லிட்டு வந்திருக்கலாமில்ல..இது என்ன லவ்வு.???”

மரியாவின் ஹாஸ்டலைத் தேடிக் கண்ணுபிடித்ததுதான் மிச்சம்..

ஒரு வார விடுமுறையில் அவள் சொந்த ஊருக்குப் போயிருந்தாள். பீட்டர் ஒரே டவுன்..

“அபி..எனக்கு மூட் அவுட்..நீயே ஓட்டு..!!!”

“கவலையேபடாத..!!!!! இன்னும் பதினைந்து நிமிஷத்தில உங்கள அங்க கொண்டு போய்ச் சேத்துட மாட்டேன்..”

ஆக்சிலரேட்டரை ஒரே மிதி..!!! வண்டி பறந்தது.!

கொஞ்ச தூரம்கூட போயிருக்கமாட்டார்கள்.வண்டி கட்டுப்பாட்டை மீறி ஓடுவது போல இருந்ததும் எல்லோரும் பயந்து விட்டார்கள்..ஒரே நிமிடம் தான்..சமாளித்து வண்டியை ரோட்டுக்கு கொண்டுவந்து விட்டான்..

ஆனால் ‘ஆ ‘ என்ற பயங்கர அலறல்..!

“அபி..வேகமாகப் போ.நிக்காத..ஆட்டையோ மாட்டையோ அடிச்சிட்ட போல. கிராமத்துக்காரங்க கிட்ட பிடிபட்டோம். அவ்வளவுதான்..ஆட்டை உரிக்கிற மாதிரி உரிச்சு உப்புகண்டம் போட்றுவாங்க.!”

“ஏண்டா .ஆடு ‘ மே’ ன்னு தானே கத்தும்..? ‘ ஆ’ ன்னில்ல கேட்டுது..?”

“நர்ஸரி ரைம் எல்லாம் அப்புறம் வச்சுக்கலாம். முதல்ல இடத்த காலி பண்ணுவோம்…”

வண்டி மறுபடியும் வேகம் எடுத்து கன்னியாகுமரி ரிசார்ட்டில்தான் போய் நின்றது.

***

அபிக்கு வேர்த்து கொட்டியது..

“டேய் எனக்கென்னவோ ரொம்ப பயம்மா இருக்கு.”

இறங்கி கார் டயரைப் பார்த்தார்கள்.. ரத்தக் கறை..! நிச்சயம் ஏதோ நடந்திருக்கிறது..!

யாரும் பேசும் மன நிலையில் இல்லை.

அவரவர் மனதில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள்..

உறக்கம் எப்படி வரும்…?

***

‘ஆ’ என்ற உயிரை உலுக்கும் சத்தம் கேட்டுப் பக்கத்திலிருந்த பெட்டிக்கடையிலிருந்த வயசானவர் ஓடி வந்தார்.

“அய்யோ..தம்பி.தம்பி.. யாராவது ஓடி வாங்க.!”

ஜீவா என்ற பையனை நாகர்கோவில் பஸ் நிறுத்தத்தில் விட்டு விட்டுப் போனோமே.நினைவிருக்கிறதா.?

அவன்தான் இப்போது தன் நினைவிழந்த நிலையில் வேகமாக வந்த ஒரு கார் இடித்து, தூக்கி எறியப்பட்டு விழுந்து கிடக்கிறான்.

கையிலிருந்த பையிலிருந்து மிட்டாய் பொட்டலங்களும், ஆப்பிள் , மாம்பழங்களும்.. உருண்டு கிடக்க..

புதிய கொட்டடி சேலை அவன் மீது அரைகுறையாய் போர்த்திய நிலையில்.

தலையிலிருந்து இரத்தம் கசிந்த நிலையில்..!

இரண்டொருவர் ஓடி வந்தார்கள்.

“போற வண்டிய யாராச்சும் நிறுத்துங்க. ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போவணும்.”

“ஆம்புலன்ஸ கூப்பிடுங்க சார்..!”

“அதுக்கெல்லாம் அவசியம் இல்லிங்க.. பையனுக்கு மூச்சு போயிருச்சு..போய்ட்டான் போலியே..!!”

“யாருலே பாத்தவுக.? எப்படி ஓரமா நின்ன பையன் மேல மோதிப்புட்டு போயிருக்கான் குருட்டு மூதி..??”

“ஏங்கய்யா.நீரு இங்கனக்குள்ளயேதானே இருக்கிறவியக.. ஒண்ணும் காங்கலியா.???”

“ஏதோ ஒரு பெரிய வண்டி ..வெரசா திரும்பி இடிச்சிட்டு போனமாதிரி இருந்திச்சு.இருட்டில வெவரம் புரியல.??”

“யாரு பெத்த பிள்ளையோ..?

பையில ஏதாச்சும் பையனப்பத்தி விவரம் இருக்குதா பாருங்க.!”

“யாரும் பையனத் தொடாதீங்க.சொல்லிப்புட்டேன். போலீஸூ கேஸாகும்..உடன போலீஸ கூப்பிடுங்க..”

***

காலை ஆறு மணிக்கே அபிக்கு ரமணனிடமிருந்து ஃபோன்.

“அபி.ஷாக்கிங் நியூஸ்..! இடிச்சது ஒரு பையனத்தாண்டா.. இன்னைக்கு பேப்பர்ல விவரமா போட்டிருக்கு.ஆனா யாரு இடிச்சதுன்னு தெரியல்லைன்னும் போட்டிருக்கு..””

“டேய்.. என்ன சொல்ற.பயம்மா இருக்குடா.. முதல்ல இருக்கானா.போய்ட்டானா.அத சொல்லுடா.!வயத்த கலக்குது..!”

என்ன.செத்துட்டானா..ஃபோன வைடா.நேர்ல வரேன்..”

***

“எங்கப்பா? இந்த நேரத்தில போக வேண்டிய அவசர காரியம்…?”

அபி அதிர்ந்து போனான்..!

பின்னால் அப்பா..!

“நீ பேசினதெல்லாம் கேட்டுகிட்டுத்தான் இருந்தேன். வந்ததிலிருந்து உம்முகமே நல்லால்ல..உண்மையச் சொல்லு..என்ன நடந்தது.???”

அப்பாவின் கண்களை நேருக்கு நேர் பார்த்துவிட்டால் அவனால் பொய் சொல்ல முடியாது.

அவனால் மட்டுமல்ல..யாராலும்..!

அவரது அதட்டும் குரலும் சேர்ந்து விட்டால் கேட்கவே வேண்டாம்!

அப்படியே எல்லாவற்றையும் கக்கிவிட்டான்..

அப்பா ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போய் நின்றுவிட்டார்..

“சத்தம் கேட்டதும் நிக்கமா ஓட்ட எப்பிடிடா மனசு வந்தது…? அதுவும் நீயாப் போயி மோதியிருக்க…ஆடோ..மாடோ.நாயோ. ஒரு உசிருடா.உசிரு!!

அது என்னன்னு பாக்கமுடியலன்னா நீ நான் வளத்த பிள்ளைக்கு சொல்லவே நாக்கூசுது.

இப்ப என்னடான்னா அது ஒரு வயசுப்பையன் ..உங்கார்ல அடிபட்டு.நெனச்சு பாக்க வயிறெல்லாம் பத்திகிட்டு எரியுது..!”

“அப்பா. நான் பண்ணினது ரொம்ப பெரிய தப்புதான். இந்த ஒரு தடவ எனக்காக..”

“என்னையும் உன் கொலைல கூட்டு சேரச் சொல்றியா..”

“என்னங்க..கொலையா..???”

சுகுமாரி பதட்டத்துடன் ஓடி வந்தாள்.

“ஆமா.உம்பையன் ஒருத்தன் மேல கார ஏத்தி கொன்னுட்டான்.”

சுகுமாரிக்கு தலை சுற்றியது..!

“என்ன சொல்றீங்க…??

ஏங்க..இவனோட காருன்னு யாருக்கும் தெரியாதில்ல…ப்ளீஸ்.நீங்களே இவன காட்டிக் குடுத்திடாதீங்க.!!!”

ஏன் அபிக்குத் தெரியாதா..? காட்டிக் குடுத்தா என்னாகும்.?”

“என்ன கேக்கிறீங்க.. நம்ப பையன..தூக்குதண்டனதான்..அய்யோ..அபி.உனக்கு ஒண்ணுன்னா நான் உயிரோட இருக்கமாட்டேன்.?

“நேத்து உயிர விட்டானே … அவனுக்கும் ஒரு அம்மா இருப்பாங்க தானே.! அவங்களுக்கு அந்த பையனத் திருப்பித்தர முடியுமா உன்னால..அவனோட உயிருக்கு மதிப்பே இல்லையா..அவன விட உம் பிள்ள உயிரு உசத்தியா…? எந்த விதத்தில சொல்லு..!

அபி.. அவனுக்குள்ள எத்தனை கனவு இருந்திருக்கும்.??? அத உன்னால நிறவேத்த முடியுமா..??

அவனோட ஏழ்மைய பயன்படுத்திக்க நினைச்சா உன்னைவிட கொடுமைக்காரன் இந்த உலகத்தில யாருமே இருக்க முடியாது..‌!

நாளைக்கே அவன் படிச்சு பெரியாளாகி நீ அவன்கீழ வேல பாக்குற நிலைமை வருதுன்னு வச்சுக்கோ..அப்போ அவனோட ஊயிரின் மதிப்பு கூடிடுமா..எல்லா உயிருக்கும் ஒரே விலைதான் தெரிஞ்சுக்குங்க..!

அவனோட அப்பா. அம்மா.படற வேதனைய நாம அனுபவிச்சா மட்டும்தான் அது புரியும்.என்ன கொடுமைக்கார அப்பனா நெனச்சிடாதடா அபி..”

குணசேகரன் இப்படி உணர்ச்சிவசப்பட்டு அபி பார்த்ததேயில்லை.

உலகநாதன் பேரன் முதுகைத் தட்டிக் கொடுத்தார்..

“அபி.அப்பாவ புரிஞ்சிக்க முயற்சி பண்ணு…நம்ப வீட்டு கோர்ட்டில எம்பையன் உன்ன குற்றவாளியாத்தான் பாக்குறான்..

நானும் அதை ஏத்துக்கிட்டு நீ தண்டனை அனுபவிக்கிறதுதான் நீதின்னு தீர்ப்பு குடுக்கிறேன்…அத மதிக்கிறதும் மறுக்கிறதும் உன்னிஷ்டம்…!

அபிக்கண்ணா..இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலை யாருக்கும் வரக்கூடாது..!”

தாத்தாவும் குலுங்கி குலுங்கி அழுதார்…

“அபி.நீயா போய் சரண்டர் ஆறியா..இல்லை நான் ஃபோன் பண்ணி..?”

அபி தீர்மானம் செய்து விட்டான்.. அவன் உலகநாதனின் பேரன்…! குணசேகரனின் மகன்…!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *