உதாசீனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 10,701 
 
 

மலை மேல் உள்ள முருகன் கோயிலில் கிண்..கிண் என மணி ஒலித்தது. அந்த மலையும் கோயிலும் ஊருக்கே அழகை கூட்டியது. மலை அடிவாரத்திலிருந்து மேலே செல்ல படிகட்டுகள். படிகட்டுகள் துவங்கும் இடத்தில் ஒரு கல்மண்டபம். எந்த அரசனின் கைங்கர்யமோ.. இன்று பலர் தங்குவதற்கும், ஓய்வெடுக்கவும் பயண்படுகிறது. உழைக்க திராணியில்லாமல் கையேந்தும் ஒரு கூட்டம் அலுமினிய தட்டுகளையோ, குவளைகளையோ, வெறும் கைகளையோ ஏந்துகிறார்கள்.

காலை பதினொரு மணிக்கு மேற்பட்ட நேரம். சூரிய ஒளியில் உஷ்ணம் கூடிக்கொண்டிருந்தது. சாமுண்டிஸ்வரியும் பிரேமாவும் அந்த மண்டபத்துக்கு வந்து அந்த யாசகர்களை அழைத்தார்கள் “ஐயா.. அம்மா எல்லாரும் பந்தலுக்கு வாங்க… சாப்பாடு பாத்திரம் கொண்டு வாங்க” என்றாள். பிரேமா. “எல்லாரும் வாங்கம்மா” என அழைத்தாள் அருகில் நின்ற சாமுண்டியும். இருவரும் இன்று காலை சம்பந்தியானார்கள். ஆம்.. அவர்களின் பிள்ளைகளுக்கு இன்று காலை திருமணமாகியிருந்தது.

அந்த கையேந்தும் கூட்டத்திலே ஒரு வேளைக்கோ ஒரு நாளைக்கோ உணவு உறுதி செய்யப்பட்ட மகிழ்ச்சி . அவர்கள் எல்லோரும் அருகிலிருந்த மரத்தடியில் வைக்கப்பட்டிருந்த தங்களிடமுள்ள பாத்திரங்களில் பெரியதாக எடுத்துக்கொண்டு பந்தலை நோக்கி நடந்தார்கள். சின்னையா கிழவரை தவிர. அவருக்கும் நல்ல பசி, ஆனாலும் அங்கு செல்ல மனம் வரவில்லை.

மண்டபத்துக்கு அருகில் பூஜை பொருட்கள் விற்கும் இரண்டு கடைகள், அடுத்து செந்தில் உணவகம், சிறிது தூரத்தில் பெரிய காலி மணை. அங்கே அமைத்திருந்த துணி பந்தலில் உணவு மேசை போட்டிருந்தார்கள். காலையில் அங்கு தான் உணவு பரிமாறினார்கள். அடுத்து இரண்டு வீடுகளை சேர்த்த மாதிரி பெரிய பந்தல் போட்டு கிழக்கு மேற்காக பந்தலின் இரு வாசலிலும் குலை தள்ளிய வாழைமரங்கள். மின் விளக்குகள். நல்வரவு பதாகை. காலையில் தான் அங்கு திருமணம் நடந்தது.

கல்மண்டபத்தில் சின்னையா கிழவர் தனியாக இருந்தார். எதையோ நினைத்து வாய் திறக்காமல் சிரித்தார். மனிதர்கள் மாறுவார்கள் என கேள்விபட்டிருக்கிறார். பார்த்தும் இருக்கிறார். ஆனாலும் இப்போது காணும் இந்த மாற்றம் ஆச்சர்யமானதாகவும் இருந்தது. சொல்லப் போனால் அவருக்கு ஏற்புடையதாகவும் இல்லை. அதனால் யாருக்கும் நஷ்டமில்லை. அவருடைய மனம் கடந்த கால சிந்தனையில் மூழ்கியது…..

பதினந்து ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகள்…அப்போதெல்லாம் இந்த தெருவிலே இத்தனை ஜன நெருக்கம் இல்லை. வீடுகளும் குறைவு. அதிலும் ஓலை வேய்ந்த வீடுகள் தான் அதிகம். ஆனாலும் திண்ணை வைத்து கட்டப்பட்டிருந்ததன. ஒன்றிரண்டு ஓட்டு வீடுகளும் மாடி வீடுகளும். காலை வெயில் ஏறிய நேரம். சாமுண்டியின் வீட்டு வாசலில் நின்றிருந்த சின்னையா “அம்மா” என பணிவுடனும் கெஞ்சலாகவும் குரல் கொடுத்தார். அருகில் வயதான பார்வையற்ற காமாட்சி பாட்டி நின்றிருந்தாள். அவளுக்கு நடக்க தெம்பில்லை. ஆனாலும் வயிறு இருக்கிறதே…

நைந்து, நீல நிறம் வெளுத்து வெள்ளையும் அழுக்கு நிறமும் பரவிய கட்டம் போட்ட லுங்கி, தொளதொள சட்டை, வலது கையில் ஒரு அலுமினிய தட்டு. இடது தோளில் பழுப்பு நிற வேட்டியால் தொட்டில். அதில் ஒரு அலுமினிய பாத்திரம். இது தான் சின்னையாவின் கோலம்.

அதோ மலையடிவாரத்தில் தெரிகிறதே கல் மண்டபம், அங்கு தான் அவர்கள் ஜாகை. இவர்களை போல வேறு சிலரும் அங்கு இருந்தார்கள். முருகனை தரிசிக்க வரும் பக்தர்களின் கருணையில் இவர்களின் வயிறு கழுவப்படுகிறது… அல்லது நிறைகிறது. சில சமயங்களில் தெருக்களில் அலைந்தும் யாசகம் பெறுவதுண்டு.

மலையை சுற்றி வட்ட வடிவ சாலை, அதில் சேரும் விதமாக நான்கு திசையிலும் சாலை. கிழக்கு திசை சாலையில் தான் கல்மண்டபம் இருக்கிறது. தெற்கு பக்கம் சிறிது தூரத்தில் ஒரு ஆறு. மழைக்காலங்களில் வெள்ளம் வரும். மற்ற காலங்களில் ஆங்காங்கே ஊற்று தோண்டி தண்ணீர் பிடிப்பார்கள்.

சாமுண்டியின் கணவன் ராமனாதன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தான். அம்மா என்ற சின்னையாவின் குரல் கேட்டு “வீட்ல ஆள் இல்லையே, இப்ப வந்திடுவா. இப்படி திண்ணையில வந்து உக்காருங்க. என சொல்லி விட்டு “வெயில் என்னமா காயுது” என சலித்து கொண்டான் ராமனாதன். அவனுக்கு தலை நரைக்க துவங்கியிருந்தது. சின்னையா கிழவரும் காமாட்சியும் திண்ணையில் அமர்ந்தனர். வெயிலில் களைத்திருந்தவர்களுக்கு நிழலின் குளிர்ச்சி மன அமைதியை தந்தது.

அடுத்த வீடான பிரேமாவின் வீட்டு திண்ணையில் அவளது கணவன் வெள்ளை சாமி வெளி திண்ணையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தான், அவன் குடி மயக்கத்தில் இல்லாத நேரம் மிக குறைவு. இப்போதும் அந்த போதை இருந்தது. சிலர் குடித்தால் கோழையாகி அழுவார்கள்.. சிலர் வீரனாகி கர்ஜிப்பார்கள். வெள்ளைச்சாமி இரண்டாவது ரகம். பிச்சையெடுக்கும் கிழவன் ராமனாதன் வீட்டு திண்ணையில் அமர்ந்து இருந்ததை வெறுப்புடன் பார்த்து கொண்டிருந்தான் வெள்ளைச்சாமி. அவனுக்கு ராமனாதனை கண்டால் எதிரியை பார்ப்பது போல இருக்குமோ என்னவோ. பார்வையில் அப்படியோர் வெறுப்பு.

இத்தனைக்கும் ராமனாதனும் வெள்ளை சாமியும் பக்கத்து வீட்டுக்காரர்கள் தான். ஆனாலும் சில வருஷமாக பேச்சு வார்த்தை இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய காலி மனையில் ராமனாதன் வீடு கட்டினான். ஓட்டு வீடு. ஓலை கம்பு கட்டி வேலி அமைத்தான். சில மாதங்களுக்கு பிறகு வெள்ளைசாமி தன் இடத்தில் வீடு கட்டி ஓலை வேய்ந்தான். அப்போது தான் தன்னுடைய இடத்தில் மூலையில் அரை அடி அளவுக்கு குறைந்திருப்பதாக… அதாவது ராமனாதன் தன் இடத்தில் கொஞ்சம் ஆக்கிரமித்து கொண்டதாக உணர்ந்தான். அப்போது ஆரம்பித்த சண்டை பெரியவர்களால் சமரசம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் மனக்கசப்பு
இன்னும் தொடர்கிறது. இரண்டு குடும்பத்துக்கும் பேச்சு வார்த்தை நின்று போனது. சின்னையாவுக்கு அதெல்லாம் தெரிந்திருக்க நியாயமில்லை, அவசியமுமில்லை.

சில நிமிடங்களில் சாமுண்டி வந்தாள், சமயலறையிலிருந்து உணவை கொண்டு வந்து சின்னையா வைத்திருந்த பாத்திரத்தில் இட்டாள். சின்னையா கிழவன் நன்றி சொல்லும் விதமாக வணங்கி விட்டு அடுத்த வீட்டை நோக்கி நடந்தார். வெள்ளைசாமியின் வீட்டுவாசலில் வந்து நின்று “அம்மா” என அழைத்தார். ஏற்கனவே வெறுப்புடன் சாப்பிட்டு கொண்டிருந்த வெள்ளைசாமி “இல்ல..இல்ல போ..போ” என கர்ஜித்தான் வெள்ளைச்சாமி. சின்னையா மறுபடியும் “அம்மா” என அழைத்தார். வெள்ளைசாமி ஆவேசம் வந்தவனாய் “ஹே… போய் தொலைய்யா… சாப்பிடுற நேரத்தில வந்து நின்னுகிட்டு மனுசன நிம்மதியா திங்க விடாம”. என உணவு தட்டை
தூக்கி எறிந்தான், அதே கோபத்துடன் தண்ணீர் குவளையை எடுத்து கை கழுவினான். எல்லாம் சில வினாடியில் நிகழ்ந்து விட்டன.

எதிர்பாராத இந்த சம்பவத்தால் சின்னையா நிலை குலைந்து போனார். திடீரென கால்கள் அசைய மறுத்தன. அருகிலிருந்த காமட்சி கிழவி என்ன நடந்தது என காண இயலாவிட்டாலும் ஏதோ விபரீதம் என புரிந்து கொண்டாள். சின்னையாவின் தோளை பிடித்து அழைத்து சென்றாள்.

வீட்டின் உள்ளிருந்து வெளியில் வந்த பிரேமா “இப்ப என்னத்துக்குங்க அவர் மேல கோபப்படுறிங்க…. ஆனாலும் இந்த கோபம் ஆகாது சாமி” என கீழே கிடந்த உணவு தட்டை எடுத்து வைத்தாள். இடத்தை சுத்தம் செய்தாள். வெள்ளைசாமியின் கோபம் அவள் அறிந்தது தான். அவனிடம் உள்ள நல்ல குணத்தையும் அவள் அறிவாள்.

சில நாட்களுக்கு பிறகு பிரேமா தன் ஒன்பது வயது மகள் லட்சுமியுடன் மலை கோயிலுக்கு சென்று விட்டு மலை படிகட்டில் இறங்கி வந்தாள். வழியில் நின்று கொண்டு யாசகம் கேட்பவர்கள் பிரேமா அருகில் வரும் போது உள்ளங்கை மேல்பார்த்து நீட்டியிருந்த தங்கள் கையை மடக்கி கொண்டார்கள். மண்டபத்துக்கு அருகில் வரும்போது தன் மகள் கையில் எட்டணாவை கொடுத்து யாசகம் கேட்பவர்களிடம் போட சொன்னாள். அவளும் காமாட்சி கிழவியின் அருகில் இருந்த குவளையில் போட்டாள். ஆனால் கிழவி அந்த குழந்தையை அழைத்து அவள் கையில் கொடுத்து “மிட்டாய் வாங்கி சாப்பிடு கண்ணு” என அன்பாகவும் வினயமாகவும் சொல்லி காசை திருப்பி கொடுத்தாள். சிறுமியின் முகம் வாடியது.

இப்போதுதான் பிரேமா தன்னிடம் யாரும் கை ஏந்தி வராததை உணர்ந்தாள். தன்னை மறுதலிக்கும் விதமாக அவர்களின் பார்வை இருப்பதையும் உணர்ந்தாள். வீட்டிற்கு வந்து, வெள்ளை சாமியிடம் முறையிட்டாள். “யாருக்கும் கோவம் வர்றது தான் ஒங்களுக்கு வர்றதுதான் அலுவசமா (அதிசயமா) இருக்கு. யார்மேலயோ இருக்கிற கோவத்த யார் மேலயோவா காட்றது..? அன்னைக்கு அந்த பெரியவரு மேல தட்ட தூக்கி எறிஞ்சிங்க.. இன்னைக்கு கோயிலுக்கு போயிட்டு வரும் போது அங்க பிச்சையெடுக்கிறவங்கள்ளாம் எங்கள ஒரு மாதிரியா பாக்கிறாங்க…”

சின்னையாவுக்கு “இவ ஏன் இந்த சின்ன விசயத்த பெரிசு படுத்துறாள்” என நினைத்தான்.

அன்று மாலை கோயில் படிகட்டில் கையேந்தி நின்று கொண்டிருந்த சின்னையாவிடம் அவள் சொன்னாள் “தாத்தா அவருக்கு உங்க மேல கோபம் இல்ல, அவருக்கும் பக்கத்து வீட்டு அண்ணனுக்கும் ஆகாது. அவரு மேல இருந்த கோபத்தில தான் தட்ட தூக்கி எறிஞ்சாறு. அதுக்காக ரொம்ப வருத்தப்பட்டாரு, மனசில ஒன்னும் வச்சுக்காதிங்க. ” என சமாதானம் கூறினாள். சின்னையா சரி என்பது போல் தலையசைத்துக் கொண்டார். ஒன்றும் பேசவில்லை. மனக்குமுறலை இவளிடம் காட்டி என்ன ஆகப்போகிறது.

ஒருநாள் இரவு தெருவில் “அம்மா” என ஒரு சிறுவனின் குரல், அது பசித்த வயிறுக்கு உணவு கேட்கும் குரல். பிரேமா தன் மகள் லட்சுமியிடம் உணவை ஒரு பாத்திரத்தில் கொடுத்தனுப்பினாள். இறைவன் ஏழைகளின் வடிவில் வருவான் என அவள் கதைகளில் படித்திருக்கிறாள். பிச்சை கேட்கும் சிறுவனும் பார்வையில்லா கிழவியும் அடுத்த வீட்டு வாசலில் நின்றிருந்தனர். அங்கு வீட்டில் யாருமில்லை.
இரண்டு மூன்று முறை குரல் கொடுத்து பார்த்தனர். ராமனாதனின் மகன் “அம்மா வீட்ல இல்ல” என சொல்லிவிட்டு தன்னிடமிருந்த நாலணா காசை காமாட்சி கிழவியிடம் கொடுத்தான். உணவு கிடைக்காத வருத்தத்தில் சிறுவனும் கிழவியும் அங்கிருந்து நடந்தனர்.

சிறுமி லட்சுமி வாசல் வரை உணவை கொண்டு வந்தாள். “தம்பி இங்க வா” என்றும் அழைத்தாள். ஆனால் கிழவி அவனுடைய கையைப் பற்றி இழுத்துக்கொண்டு போனாள். கிழவியின் ஒரு கண்ணில் மங்கலாக பார்வை தெரிந்தது. அவள் நடையில் உறுதி இருந்தது. சிறுமி லட்சுமிக்கு அழுகையாய் வந்தது. கண்ணீர் வழிந்து சட்டையை நனைத்தது. தான் மனமுவந்து கொடுப்பதை வாங்காமல் போனதால் வழியும் கண்ணீர் அது. வாசல் படியில் நின்ற பிரேமாவுக்கும் அழுகை தொற்றிக்கொண்டது.
திண்ணையில் அமர்ந்திருந்த வெள்ளைச்சாமிக்கும் வருத்தம் இருந்தாலும் “பிச்சையெடுக்கிற கழுதைகளுக்கு என்ன திமிரு பாத்தியா..” என்றான்.
“பிச்சையெடுத்தாலும் அவங்களும் நம்மலாட்டம் மனுசங்க தானெ.. அவங்களுக்கு மட்டும் மான ரோசம் இருக்காதா” என்றாள் பிரேமா.
“நல்லா இருக்கட்டும்” என்றான் வெள்ளைசாமி வெறுப்புடன்.

மண்டபத்தில் பிழைக்க வேறு வழி இல்லாத அல்லது விரும்பாத அந்த யாசக கூட்டம் இரவு உணவை முடித்து விட்டு பேசிக்கொண்டார்கள். “இன்னிக்கு அந்த வூட்டு புள்ள சோறு எடுத்துகினு வந்திச்சி, நா அங்க நிக்கலயே.. அப்படியே நம்ம கதிரேசை இழுத்துகினு வந்துட்டேன். அந்த ஆளும் திண்ணையில தான் குந்திகினு இருந்துச்சு.” என்றாள் காமாட்சி கிழவி.

“இருக்கிறவனுக்கு ஒரு வூட்டு சோறு இல்லாதவனுக்கு பல வூட்டு சோறு.. அவரு நெனச்சுகினாரு அவரு ஒரு வூட்ல தான் சோறு கெடைக்கும்னு” என்றார் சின்னையா.

“நம்ம புள்ளைங்க நம்பள காப்பாத்தி கஞ்சி தண்ணி ஊத்தியிருந்தா நமக்கேன் இந்த பொழப்பு” என்றார் ஒருவர் கண்கலங்கி. தொழு நோயால் அவரது கை கால்களில் விரல்களின் நீளம் குறைந்திருந்தது.

“அட வுடு சாமி, வீட்ல இருக்கிறவங்க புள்ளைங்க கைலயும், மருமக கைலயும் வாங்கி சாப்புடுறாங்க.. நமக்கு இந்த ஒலகமே சொந்தக்காரங்கன்னு நெனச்சுக்கோயேன்” என்றார் ஒரு காவி உடை சன்யாசி.

அன்று சின்னையாவை வெள்ளைச்சாமி திட்டி விரட்டிய நாளன்று, மண்டபத்தில் சின்னையா வெகு நேரம் யாருடனும் பேசாமல் இருந்தார். சாப்பிடவும் இல்லை. காமாட்சி கிழவி சாப்பிட சொல்லி வற்புறுத்தினாள். ஆனாலும் சின்னையாவுக்கு பசிக்கவில்லை. சில வருடங்களுக்கு முன்பு அவருக்கும் மருமகளுக்கும் ஏற்பட்ட சண்டையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த தன் மகன் “சே..இந்த வீட்டில நிம்மதியா சாப்பிட கூட முடியாது” எனக் கூறி தட்டை தூக்கி எறிந்தது ஞாபகம் வந்தது.

அன்றைக்கு ஏதோ ரோசத்தில் வீட்டை விட்டு வெளியே வந்தார் சின்னையா. எத்தனை மைல் நடந்து வந்தாரோ..? மலைமேல் உள்ள முருகனுக்கு தான் வெளிச்சம். தன் மனைவி இருந்தால் தன் நிலை இப்படி ஆகி இருக்காது என மனது சொல்லிக்கொண்டிருந்தது. சில ஊடல் நேரங்களிலும் கோப நேரங்களிலும் மனைவியிடம் கடுமையாக நடந்து கொண்டதை எண்ணி அதற்கு தண்டணையை அனுபவிப்பதாகவும் நினைத்து கொண்டு கண் கலங்கினார்.

மூசு மூசு வென சின்னையாவின் பெருமூச்சு சத்தத்தை கேட்டு காமாட்சி கிழவி விசாரித்தாள். மேலோட்டமாக வெள்ளைச்சாமி நடந்து கொண்டதை சொன்னார் சின்னையா. ஆனாலும் குரல் தழுதழுத்தது. கிழவி தன் பேரன் கதிரேசு கையை பிடித்துக்கொண்டு வெள்ளைச்சாமி வீட்டுக்கு போனாள். “யாருப்பா இந்த வூட்டு ஆம்பள…” என வாசலில் நின்று குரல் கொடுத்ததும் வெள்ளைச்சாமி வெளியில் வந்தார்.
“உனுக்கு சோறு போட மன்சில்லன்னா.. வக்கில்லன்னா இல்லண்ட்டு போ. அத்த வுட்டு எச்ச தட்ட எறிஞ்சியாமே.. நீ..ல்லாம் ஒரு பெரிய மன்சனா.. த்தூ..” என துப்பி விட்டு வந்தாள். தனக்கு உதவும் ஒருவனுக்கு ஏற்ப்பட்ட உதாசீனத்தை தாங்க முடியவில்லை அவளால்.

அன்று முதல் யாரும் பிச்சை கேட்க அந்த வீட்டு வாசலுக்கு செல்வதில்லை. அவர்களாக கூப்பிட்டு கொடுத்தாலும் வாங்குவதில்லை.

ராமனாதனும் வெள்ளைச்சாமியும் எலியும் பூனையாய் இருந்தாலும் சாமுண்டியும் பிரேமாவும் நட்புடனே பேசிக்கொண்டார்கள். பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எத்தனை நாள் பேசாமல் இருக்க முடியும். சாமுண்டியும் பிரேமாவும் அந்த பகுதியில் வெகு நாட்களாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுடைய கணவன்மார்களுக்கு தெரியாமல் அவர்கள் நட்பு கொண்டனர். அவர்களுடய வீட்டு பிள்ளைகளும் கூட சேர்ந்து விளையாடி பேசி பழகி கொண்டார்கள்.

பிள்ளைகள் வளரும் போது வினயமில்லாமல் இரு வீடுகளுக்குள்ளும் சென்று விளையாடின. பெரியவர்களால் அவர்கள் மீது கோபம் கொள்ள இயலவில்லை. ஊர் பொது விஷயங்களில் கலந்து கொள்ளும் சமயங்களில் ராமனாதனும் வெள்ளைச்சாமியும் புன்முறுவல் செய்து கொண்டனர். கோவில் திருவிழாக்களில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் போது இருவரும் பழைய பகையை மறந்து போனார்கள். நல்லது கெட்டதுகளில் கலந்து கொண்டார்கள்.

வருடங்கள் கடந்தது. வளர்ந்து விட்ட அவர்களின் பிள்ளைகளுக்குள்ளும் நேசம் துளிர் விட்டது. ராமனாதனின் மகனும் வெள்ளைசாமியின் மகளும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். பெரியவர்களின் கோபதாபங்கள் மறைந்தது. நல்லதொரு சுப முகூர்த்த நாளில் அவர்களுக்கு திருமணமும் நிச்சயமாயிற்று. இதோ இன்று திருமணமும் இனிதே முடிந்தது.

ஆனால் இவையெல்லாம் நடந்து முடிப்பதற்குள் பதினைந்து ஆண்டுகள் முடிந்து விட்டது.

இப்போது அந்த தெருவில் ஓலை வேய்ந்த வீடுகளும் திண்ணை கட்டிய வீடுகளும் இல்லை. சொல்லப்போனால் தெருவில் பழைய ஆட்களும் அதிகம் இல்லை. புதுப்புது ஆட்கள் வந்து குடியேறியிருந்தனர். மலையடிவார மண்டபத்துக்கும் புதுப்புது ஆட்கள் வந்து தங்கினர். அவர்களுக்கு யார் வீட்டு வாசலும் விதிவிலக்கல்ல. வெள்ளைசாமி வீட்டிலும் கை ஏந்தி பெற்றுக்கொண்டனர். பழைய ஆட்கள் வேறு ஊருக்கு போய் விட்டார்கள், சிலர் திரும்ப வரமுடியாத “திரு” ஊரை சென்றடைந்து விட்டார்கள். சின்னையாவும் சன்யாசி கிழவனும் தான் அங்கிருந்தவர்களில் பழைய ஆட்கள். அவர்களும் சில ஊர்களுக்கு சென்று தங்குவார்கள். ஆனாலும் சின்னையா வருசத்தில் பாதிநாள் இந்த கோயில் மண்டபத்துக்கு வந்து விடுவார்.

கடந்த காலத்தைப் பற்றிய சிந்தனையில் மூழ்கிய சின்னையா, கோயில் படிகட்டில் இறங்கி வரும் சன்யாசியை பார்த்து நிகழ்காலத்துக்கு வந்தார்.

“என்ன சாமி நீ மட்டும் தனியா இருக்க..மத்தவங்க எல்லாம் எங்க” என கேட்டுக்கொண்டே சின்னையா அருகில் அமர்ந்தார் சன்யாசி.
“எல்லாம் அங்க கல்யாண வீட்டில சோறு எடுக்க போயிருக்காங்க” என்றார் சின்னையா
ஏன் நீ போகலயா..? சன்யாசி சும்மா கேட்டு வைத்தார்
என்னமோ மனசு கேக்கல… போகல. மனுசங்க எப்படியெல்லாம் மாறுறாங்க பாத்திகளா சாமி.
விடு சின்னையா உறவுக்காரங்க பிரிஞ்சு போனா கவலைபடலாம்.. சேந்துக்கிட்டா சந்தோசம் தான.. நீ என்ன நெனைக்கிறேன்னு எனக்கு புரியுது சாமி. ஓருகாலத்துல பகையா இருந்த குடும்பத்தில நீ உக்காந்திருந்ததுக்காக உன்ன வெரட்டுன மனுசன் இன்னைக்கு சம்பந்தியாவே ஆயிட்டாங்களேன்னு நெனைக்கிற

……. சின்னையா ஆமோதிப்பது போல் தலையாட்டினார்.

சிறிது நேரம் அமைதி நிலவியது. ஏதோ யோசனை வந்தவராய் சன்யாசி தன் அருகிலிருக்கும் துணி மூட்டையிலிருந்து ஒரு வாழைப்பழத்தை எடுத்து சின்னையாவிடம் கொடுத்தார்.
இந்த பழம் சாப்பிட்டிருக்கியா சாமி.. என்றார்

….வாழப்பழத்த சாப்பிட்டிருக்க மாட்டேனா.. என்பது போல் சிரித்தார் சின்னையா
என்ன சாமி கேக்கிறேன்ல இந்த பழம் சாப்பிட்டிருக்கியா
சாப்பிட்டிருக்கேன் சாமி
எப்படி சாப்பிட்டிருப்ப நான் இதை இப்பதான வாங்கியாந்தேன் என கூறி சத்தமாய் சிரித்தார் சன்யாசி
…… சின்னையா பதில் சொல்ல முடியாமல் அமைதியானார். பிறகு சன்யாசியின் பேச்சை உணர்ந்து புன்முறுவல் செய்தார்.

சின்னையா இதுக்கு முன்னால நீ சாப்பிட்டதெல்லாம் வேற பழம். இது வேற… புதுசு…நாம தெனைக்கும் குளிக்கிறோமே ஆத்து தண்ணி அது என்ன ஒரே தண்ணியா.. நேத்து குளிச்சது அடுத்த நிமிசமே ஓடிப்போச்சு. அடுத்த நிமிசம் அங்க ஓடுறது வேற தண்ணி. ஆத்தோட பேருதான் மாறல. ஆனா தண்ணி மாறிடுச்சு. மனுசங்களும் அப்படித்தான்… நேத்து இருந்தவன் இன்னைக்கு இல்ல. இன்னைக்கு இருக்கிறவன் நாளைக்கு இல்ல. செத்தவனும் பொருந்தும். உயிரோடிருக்கிறவனும் பொருந்தும். இன்னைக்கு நீ பாக்கிறவன் புது ஆளு.

சின்னையா மெளனமாய் இருந்தார்.

நல்லவானா இருக்கிறவன் கெட்டவனாவும் மாறுவான். கெட்டவவனா இருக்கிறவன் நல்லவனாவும் மாறுவான். மாறுனா தான் அவன் மனுசன்.. இல்லன்னா அவன் பைத்தியம். எல்லாமே மாறும். மாறனும்…..நீ என்னன்னா இன்னும் பழசயே நெனச்சு இங்க உக்காந்துகிட்டிருக்கியே.. என்றார் சன்யாசி

சின்னையா மெளனமாய் இருந்தார். பிறகு..

“நீங்க சொல்றதெல்லாம் சரிதான் சாமி. கண்ணால கண்டதயும் காதால கேட்டதயும் வச்சு நீங்க சொல்றீங்கன்னு நெனக்கிறேன். அந்த அவமானத்த அனுபவிச்சவன் நானு. அந்த வேதனை எனக்கு தான் தெரியும். மனுசன் மாறுவன் தான், ஆனா தனக்கு ஆதாயம் கெடைக்கிறாப்ல இருந்தா தான் மாறுவான். இல்லாட்ட எவன் மாறுவான் சொல்லுங்க….. என்னமோ ஆண்டவன் நமக்கு குடுத்தது இவ்ளவு தான். என்ன தான் பிச்சையெடுத்து பொழச்சாலும் மனசு கேக்க மாட்டேங்குது. திரும்ப அந்த வீட்டு வாசல்ல போய் நிக்கிறதுக்கு பதிலா நா என் புள்ள வீட்டுக்கே போய் நிப்பேன்” என்றார் சின்னையா.

சன்யாசி எதுவும் பதில் சொல்லவில்லை.

கல்யாண வீட்டுக்கு உணவு வாங்க போன கூட்டம் திரும்பி வந்தது. கொண்டு வந்திருந்த உணவை அவர்களிடம் இருந்த தட்டுகளில் பறிமாறினார்கள். பலவகையான வெஞ்சனத்துடனும் இனிப்புகளுடனும் தட்டுகள் நிரம்பின. அவற்றின் வாசம் நாக்கில் நீர் ஊற செய்தது. சின்னையாவின் தட்டையும் கேட்டனர் உணவு பறிமாற.

பசி மயக்கத்தில் இருந்த சின்னையா தன் அலுமினிய தட்டை எடுத்து தோளில் தொங்கும் தொட்டிலில் வைத்துக்கொண்டு எழுந்து அந்த இடத்தை விட்டு நடந்தார்

சன்யாசியை பார்த்து புன்னகை செய்தார். அந்த புன்னகைக்கு விடைபெறுவதாக அர்த்தம் புரிந்தது சந்யாசிக்கு. சின்னையா “அவருடைய மகன் வீட்டுக்கு போவார்” என சன்யாசி கிழவர் நினைத்துக் கொண்டார்.

– தமிழ் மன்றம் இணையத்தில் பதிக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *