தலைமாட்டுலே யாரோ வந்து நிக்கதுபோலத் தெரிஞ்சது. சிரமத்தோட தலையைத் திருப்பிப் பார்த்தப்பொ அம்மா காணீர் வடிய நின்றுக்கிட்டிருந்தா, பார்த்ததும் பலமா சத்தம் வராம அமுதா, எலும்பாக மெலுஞ்ச உடம்பு தடுமாடுனது.
கையினாலே சைகைகாட்டி உட்காரச் சொன்னான். வெள்ளைச் சீலையிலே கண்ணைத் தொடைச்சி மூக்கைச் சித்தி வீசிட்டு உட்கார்ந்தா.
என்ன விசயம்ங்கிறமாதிரிப் பார்த்தான்.
சொல்ல முடியலை; உதடு நடுங்குனது.
சரி; ஏதோ நடந்திருக்கு, திரும்பவும் அதான் இருக்கும்.
பாகவஸ்தி ஆனப்பொ, அப்பாவைப் பெத்த பாட்டி முத்தவனோடன்னும், அம்மா சின்னவளோடன்னும் முடிவாச்சி. அம்மாவெத் தன்னோட வச்சிக்கிடணும்ண்ணு மூத்தவனுக்கு ஆசை அவன் நோயாளி; அம்மா திடமா இருக்கா; பாடுபட முடியும், என்னதான் பாடுபட்டு பூர்வீக சொத்துச் சேர்த்திருந்தாலும் பாட்டி தளந்துட்டா, இளி அவ கட்டிலோடதான். அம்மாவுக்கு அவன் போலெ பிரியம்; ‘தாய்குத் தலைமகன்’னு சொல்லிக்கிட்டேயிருப்பா.
அவனாலெ வேலை செய்ய ஏலாது; பெண்டாட்டிக்குப் பணக்காரிங்கிற நெனைப்பு இதுக்காகவே – இப்பிடி ஆறப்படாதேன்னு நெனைச்சே – தம்பிக்கு ஒரு ஏழை வீட்லெ, நல்ல வேலை செய்யிற ‘குழந்தை’யாப் பார்த்துக் கட்டி வச்சான். பணக்காரன் வீட்லெ வந்து வாக்கப்பட்டுட்டதினாலெ தானும் பணக்காரி ஆயிட்டதாக தெனைச்சி அவளும் காட்டுவேலைக்குப் போறதில்லை. ‘செக்களவு’ தங்கம் இருந்தாலும் ‘செதுக்கித் திண்ணா எத்தனை நாளைக்கி’கு என்று அம்மா சொல்லுவா,
அம்மாவுடைய பாடு தனக்கு வேணும்ண்ணுதான், தன்னோட அவ இருக்கணும்ண்ணு தெனைச்சது. அதுக்குத் தம்பி சொன்னது “வயசான காலத்திலெ” பாட்டி ஒங்கூட இருக்கதுதான் நல்லது, நீ நோயாளி, ஒன் சாக்கிட்டு அவளுக்கு ‘மேல்ப்பானை’ சோறு கெடைக்கட்டும் ஒம்புண்ணியத்திலெ.
இந்த உள்த் தந்திரம் முதல்லெ அவனுக்குப் புரியலை! பாடுபட்டு குடும்பத்தை நிலைநிறுத்திய சீவன்களைக் கடைசிக் காலத்துலெ எனக்கு வேண்டாம் ஒனக்கு வேண்டாம்ணு ஒதறிப் பேசினா அதுக மனசு என்ன பாடுபடும்ணனுட்டு ஒரே பேச்சிலெ சரிண்ணுட்டான், பாகவஸ்தி முடிஞ்ச மறாநாளே ஊடுகவர் வைக்க தம்பி ஏற்பாடு பண்ணுனது மூத்தவனுக்கு மனசு சங்கடமாயிருந்தது. “ஊடாலெ ஒரு வாசலு, இருக்கட்டும்; குடும்பத்துலெ நாளைக்கு ஒரு நல்லது பொல்லதுகளுக்குப் பொழங்கிக்கிட தோதாக இருக்கும்” சின்னவனும் பெஞ்சாதியும், கூடாதுண்ணு சொல்லிட்டாங்க. “பாட்டிக்கு மொதல்ல வெளியே வெளிக்குப் போகமுடியாது; அவ இருக்கிறவரைக்காவது ஒரு வாசல் இருக்கட்டும்; அதும் பெறவு அடைச்சிக்கிறலாம்!”
அந்தப் பேச்சே கூடாதுன்னு சொல்லி பூரணமா அடைச்சாச்சி, இப்பொ தெருவச் சுத்தித்தான் போகணும், யார் வீட்டுக்குப் போகனுமிண்ணாலும்.
அம்மாட்டெ சிறுவாடு ஒரு பசுங்கன்றுக்குட்டியும் கம்மலும் இருந்தது. அன்னவஸ்திரத்துக்குண்ணு பாட்டிக்கும் அம்மாவுக்கும் நிலம் ஒதுக்கலை.
பகுந்து ரெண்டாம் வருசத்திலெ பாட்டி தவறிப்போய்விட்டாள். பகுந்து இப்பொ பத்து வருசத்துக்கும் மேலாயிட்டது. மூத்தவனுக்கு ஒரே பையன். இளையவனுக்கு அஞ்சி பொம்பளைப்பிள்ளைக. குடும்பம் கட்டுப்படியாகலை; விவசாயத்திலெ மிச்சமில்லெ. குடும்பச் செலவுக காலுக்குப் போட்டா தலைக்கு எட்டாமயும், தலைக்குப் போட்டா காலுக்கு எட்டாமயுமா இழுபறி தலைச்சிறையா ஆயிட்டது.
இளைய மகனுக்கு வசதி இல்லாததுனாலெ அம்மாவுக்கு வெம்பாடு; உடம்பு ஆக்கைவிட்டுப் போனதினாலெ முத்திமாதிரி வேலை செய்ய முடியலை. இப்பொ குடும்பத்துக்கே பாரமாத் தோள ஆரம்பிச்சிட்டா.
“அவளெ யோகக்காரன்; பாட்டி சீக்கிரமா செத்துப் போயிட்டா. நா இவளுக்கு காலமெல்லாங் கஞ்சி ஊத்த வேண்டியிருக்கு”ன்று இளையவன் சொன்னதாக வந்து சொல்லி அழுதா அம்மா.
“அம்மா நீ எங்கூடவே இருந்துரு”
“அதெப்படிரா: முறையில்லையே அது. நீயும் ஒரு பெரிய உசிரெக் காப்பாத்தி அதுக்குப் பண்டுகம் பாத்து ஒனியம் செய்யலையா. பெத்த தாயிக்கு இதுகூட அவஞ் செய்யாட்டி யெப்பிடி”
“பாட்டி இருந்தாக் கஞ்சி ஊத்துவனில்லையா, அதுமாதிரி இருக்கட்டும்”
“அது மொறையில்லெ மகனே. எப்படித் தீர்த்ததோ அப்படி இருக்கதுதான் சரி”
ஒரு வாரங் கழிஞ்சது.
“அடிப்பத்துன தாலுதான் கஞ்சியெ எப்பிடிக் குடிக்கிறதுடா”ண்ணு வந்து வருத்தப்பட்டா, “நா அந்தக் காலத்திலெ எலும் பொடிய எப்படியெல்லாம் பாடுபட்டென் இந்தக் குடும்பத்துக்கு”ன்னு அமுதாள்.
“அம்மா, அவங்க எதெக் குடிக்காங்கனோ அதத்தானெ ஒனக்கும் ஊத்தமுடியும். செரி; அது எப்பிடியும் போகுது நீ இங்கெ சாப்பிடு”.
மறுநாள்.
“அங்கெ போயித் தின்னையில்லெ? அங்கெயே போயிற வேண்டியதானே; இங்கென்ன வரத்து”ன்னு கேக்காடா.
“யம்மா, நாஞ்சொல்லிட்டென்; இங்கேயே இருன்னிட்டு”
கோவம் வந்தது அவளுக்கு, “அவனை என்ன அப்பிடியே விடுறதுங்கென். அவன் வச்சதுதான் வரிசையா?” ரொம்ப ரொம்ப வற்புறுத்னம் பெறகு சாப்பிட்டாள்.
சோறுதான் சுடு சோறே தவிர பரிமாறுதலில் குளுமை இருக்கவில்லை.
***
“அம்மா தம்பியெ மட்டுத்தான் பெத்தாளா; அண்ணனை பெறலையா? நானேதான் கஞ்சி ஊத்தணும்ண்று வேதா விதியா; அங்கெ ஆறுமாசம், இங்கெ ஆறுமாசம் இருக்கட்டும்” ஊர்ப் பஞ்சாயத்து வச்சான் தம்பி.
“ஓஹோ; அம்புட்டுக்கு ஆய்ப்போச்சா” என்று படுக்கையிலிருந்து மெதுவா எழுந்திருந்து உட்கார்ந்தான் அண்ணன். “டேய், அவ என்னை மட்டுந்தான் பெத்தா. அவளெ நா வச்சிக் காப்பாத்துவேன்; அவ எங்கடவேயிருக்கட்டும்” பெருமூச்சு வாங்கியது.
“நீ வசதிக்காரன்ணா அது ஓம்மட்டும்; அதுக்காக என்னைப் பெறறலைண்ணு நீ எப்படி சொல்லப்போச்சு”
“அட, சர்த்தாம்பா நிறுத்துங்க. நீங்களாப் பேசி முடிவு பண்ணிக் கிடுறதாயிருந்தா நாங்க ஏய் யிங்க வந்திருக்கொம்! ஒப்பறவு; நிப்பாட்டுங்க பேச்செ”
“பாகவஸ்தி பண்ணப்பொ, ஊர்ப்பெரியவங்களும் இருந்துதான் ஏற்பாடு பண்ணது; பெரிய உசிருகளெ ஆளுக்கு ஒண்ணா வச்சிக் காப்பதுங்கண்ணு; தெரியுமில்லெ ஒங்களுக்கு … பாட்டி எங்கூட இருந்தா. ரெண்டரை வருசம் அவளுக்கு நா ஆவலாதி இல்லாமெ கஞ்சி ஊத்தினென்”
“ஆம், ரெண்டரை வருசம்; ரெண்டு வருசம்; ஒருமாசம்; ரெண்டரை வருசமாம்” என்று பொம்பளைக பகுதியிலிருந்து ஏச்சுக் குரல் கேட்டது. மூத்தவனுக்கு அது கேட்டாலும் திரும்பி அந்தப் பக்கம் பாக்கலை.
ஊர்ப் பஞ்சாயத்து ரண்டுபக்கமும் வழக்கைக் கேட்டு முந்திய முடிவையே ஊர்ஜிதம் செய்தது.
“வண்டிக் கம்மலோட பாட்டி ஒரு செயினும் போட்டிருந்தாளே; அம்மாட்டெ வாட்டிக் கம்மல்தானேயிருக்கு?”
*அட கோட்டிக்காரா; அவகவங்களுக்குக் கெடைச்சது. ஏங்கூட அம்மா இருக்கட்டும்; நா காட்டு வேலை செய்ய ஏலாதவன்ண்ணு அண்ணன் சொன்னப்பொ, அது ஏந் தோணமாப் போச்சி!”
பஞ்சாயத்து பைசல் பண்ணீட்டுப் போய்ட்டது.
***
அம்மா மூத்தவளைப் பாக்க வரும்போதெல்லாம் சாப்பிடச் சொல்றது. “நா இப்பத்தான் சாப்ட்டு வாரேன்”ங்கிற பதில்தான் வரும். ரொம்ப வற்புறுத்தினாத்தான் சாப்பிடுவா, அப்பதாந் தெரியும் அவ சாப்பிடலைங்கிறது.
ஒரு நா அம்மா வந்து சொன்னா மூத்தவங்கிட்டெ, நா ஓங் கலியாணத்துக்குத் தாலியெக் கொடுத்ததெ பெரிய்ய விசயமாக்கிப் பேசிக்கிட்டிருக்காக” அது உண்மைதான்.
வெள்ளைச் சீலைக்காரியா அம்மா இருந்தால் மூத்தவன் கலியாணத்துக்குத் அந்தத் தாலியைக் கொடுத்து உதவாது அந்தக் குடும்பத்திலேயும் அப்படித்தான் நடந்தது. கலியாணம் நிச்சயமான உடனே தாலி செய்யறதுக்கு வேற தங்கம் வாங்கிறதாகத்தான் இருந்தது; அம்மா வந்து வற்புறுத்தித்தான் அதைச் செய்ய வச்சா.
இப்பொ அதுவெ அவளுக்கு வெனையாய்ப் போய்ட்டது. அந்தத் தாலியெ வாங்கிட்டுவா; அந்தத் தாலியெ வாங்கிட்டுவா. விடிஞ்செந் திரிச்சா இதாம் பாடு, ரொம்ப நாளா அம்மா தட்டுப்படாம இருந்தா, விசாரிச்சதுலெ, இருக்காண்ணு தெரிஞ்சது, ஒரு நா வந்தா திடீர்ன்னு. அடையாளத் தெரியாம மெலிஞ்சிருந்தா. வாசப்படி ஏறுனதும், அந்தத் தாலியைக் குடு; இம்சை தாளலை எனக்கு. ‘ஒரு சாவும் வரமாட்டேங்குது’ ரொப்பிரொப்பி அழுதாள். “உக்காரு உக்காரு”ண்ணாலும் கேக்க மாட்டேன்னுட்டா, திரும்பவும் திரும்பவும் அதையே சொல்லீட்டிருந்தா.
‘ஏ..யிங்க வா’ண்ணு பெண்டாட்டியெக் கூப்பிட்டான் கோலத்தோடு.’அந்தத் தாலியெக் கழத்து’ தாலியிலெ கை வச்சமாதிரி நின்னா தெகைச்சி “நீ கழத்து சொல்றேன். அவ கையிலெ குடு.”
கட்ன புருசன் சொன்னான். பெண்டாட்டி தாலியைக் கழத்திக் கொடுத்தா. பெத்த தாயி அதை வாங்கீட்டும் போனா. உடன் பிறந்த தம்பி அதை வாங்கி வச்சிக்கிட்டான்.
– மனஓசை நனவரி 1984
எழுத்துலக ஜாம்பவான் கி.ரா அவர்களுக்கு அஞ்சலி! மண்வாசனை பொங்க அவர் படைத்த புதினங்கள் இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்பது உறுதி!லென்ஸ்