உண்மை அறிந்தவர்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 13,001 
 

வீட்டின் முன் பக்க இரும்பு கேட் துருப்பிடித்துக் கிடந்தது. மெல்லத் தள்ளினாள் சிவகாமி. மெதுவாகக் கிறீச்சிட்டுத் திறந்து கொண்டது. நாதாங்கி பொருத்தப்பட்டிருக்கவில்லை. பூட்டு ஒன்று தொங்கிக்கொண்டிருந்தாலும் பூட்டப்படாமல் ‘ஓ’ என்று திருகிக்கொண்டு கிடந்தது.

காம்பவுண்டில் புல் மண்டிக் கிடந்தது. சின்னக் காம்பவுண்டுதான். புல் வெட்டி ஆறு மாதம் இருக்கும் என நினைத்துக் கொண்டாள். தான் கடைசியாக சென்ற வருடம் வந்தபோது இருந்ததை விட நிலைமை மேலும் மோசமாகியிருப்பதாகத் தெரிந்தது.

கேட்டை மூடி நாதாங்கியைப் போட்டுவிட்டு உள்ளே சென்றாள். வாசல் மரக்கதவு சாத்தியிருந்தது. அதிலிருந்து சாயம் உதிரும் அடையாளங்கள் தெரிந்தன.  தட்டினாள். வீடு மௌனமாகக் கிடந்தது. ஒரு நிமிடம் பொறுத்து மீண்டும் சற்று உரக்கத் தட்டினாள். மௌனம். அரை நிமிடம் விட்டுப் படபடவென்று தட்டினாள்.

கதவு சம்மதமில்லாமல் பயத்துடன் மெல்லத் திறந்தது. இந்தோனேசிய வீட்டு உதவிப் பெண் ஒரு அங்குலம் மட்டும் திறந்து வைத்து வந்திருப்பது யார் என்று பயத்தோடும் எரிச்சலோடும் பார்த்தாள். சிவகாமியின் முகம் கண்டவுடன் “ ஓ, புவான், நீங்களா? எப்ப வந்தீர்கள்?” என்று கதவை அகலத் திறந்து உள்ளே வர வழிவிட்டாள்.

முகத்தைக் கொஞ்சம் சுளித்து “ஏன் புல் இப்படி வளர்ந்து கிடக்கிறது யாத்தி?” என்று கேட்டாள்.

“எனக்குத் தெரியாது புவான். நான் துவானிடம் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். நான் என்ன பண்ண முடியும்?”

“எங்கே துவான்?”

“வேறு எங்கே இருப்பார்? கம்ப்யூட்டர் ரூமில்தான்.”

எல்லா ஜன்னல்களும் சாத்தப்பட்டு வீடு இருளில் கிடந்தது. மக்கிய காற்றின் மணம் மூக்கில் வந்து நுழைந்தது.

“ஜன்னல்களை ஏன் இப்படி மூடி வைத்திருக்கிறாய் யாத்தி?”

“துவானுக்கு ரொம்ப வெளிச்சம் கண்டால் பிடிக்கவில்லை. கண் கூசுகிறதாம்!”

“இப்போது திறந்து விடு” என்று உத்தரவிட்டாள் சிவகாமி. ஜன்னல்கள் கொஞ்சம் முரண்டு பண்ணித் திறந்தன.

கம்ப்யூட்டர் அறையிலிருந்து சத்தம் வந்தது. “யாத்தி! யாரோடு அங்கே பேசிக் கொண்டிருக்கிறாய்? என்ன சத்தம்?”

சிவகாமி அறைக்குள் போனாள். மேக் கணினி கீபோர்டின் மெத்து மெத்து விசைகள் சத்தம் இல்லாமல் அழுந்தி அழுந்தி எழ அற்புதமான ஆங்கில டெக்ஸ்ட் உருவாகி கோடு கோடாகத் திரையை நிறைத்துக் கொண்டிருந்தது. தலை உயர்ந்தவாறிருந்தது. கண்கள் திரையில் ஒன்றியிருந்தன. விரல்கள் தானியங்கியாகத் துடித்துக் கொண்டிருந்தன. மூளையும் அதில் ஒன்றியிருந்ததால் அறைக்குள் வந்த ஆளை கவனிக்க அவருக்கு நேரமில்லை.

அவர் வாக்கியத்தை முடித்துவிட்டுச் சரி பார்க்கும் வரை நாற்காலிக்குப் பின்னால் மௌனமாகக் காத்திருந்தாள். வாக்கியம் திருப்தியாக இருப்பதாகத் தோன்றியவுடன் மீண்டும் குரல் கொடுத்தார். “யாத்தி, என்ன கேட்ட கேள்விக்கு பதில் இல்லை?”

“கேள்வி கேட்கக் கூட உங்களுக்கு நேரம் இருக்குதா?” என்று பின்னாலிருந்தவாறு கேட்டாள் சிவகாமி.

தலை லேசாகத் திரும்பிற்று. நரைத்த தாடியைக் கத்தரிந்திருந்தார். தலை முடி வெளுத்து ஆனால் அடர்த்தியாக வளர்ந்து கழுத்துக்குக் கீழே வந்திருந்தது. தாடிக்குள்  கன்னங்கள் ஒட்டி உலர்ந்து போயிருப்பது தெரிந்தது.

“சிவகாமியா? சிவா! ஓ மை கோட்! இதென்ன சொல்லாம கொள்ளாம? ஒரு ஈமெயில் அனுப்பியிருக்கக் கூடாது நான் வர்ரேன்னு?”

“அனுப்பியிருந்தா என்ன பண்ணுவீங்க? ஏர்போர்ட்டுக்கு வந்து என்ன அழச்சிக்கிட்டு வந்திருப்பீங்களா?”

“அதுக்கில்ல சிவா! நான் இப்ப காரே ரொம்ப ஓட்றதில்ல! ஒரு தகவலுக்குத்தான். இப்படி அதிர்ச்சியா இருந்திருக்காதில்ல!”

பக்கத்திலிருந்த சுழல் நாற்காலியில் உட்கார்ந்தாள்.

“இப்ப எல்லாம் ஷேவ் பண்றதே இல்லியா?”

தாடிக்குள் கைவிட்டுத் தடவினார். “வேஸ்ட் ஓஃப் டைம்!” என்றார்.

“அப்படி என்ன கடுமையான நேர நெருக்கடி உங்களுக்கு?”

கணினித் திரையைச் சுட்டிக் காட்டினார். “இதோ பாரு சிவா. இவரு ஹைடல்பர்க் யுனிவர்சிட்டி பேராசிரியர். ஜெர்மனியிலிருந்து. எங்கிட்ட ஒரு சந்தேகம் எழுப்பியிருக்காரு!”

“உங்களுக்குத் தெரிஞ்சவரா?”

“நோ, நோ! நெட்ல வந்த தொடர்புதான்!”

“என்ன வேணுமாம்?”

“அரிஸ்டோட்டல் சொன்னதாக ஒரு மேற்கோள் இருக்கு. ‘ஒரு கொடுமைக்கார அரசன் ஒரு பெரிய பக்தனாக வேஷம் போடணும். அப்படி வேஷம் போட்டாத்தான் தான் செய்ற கொடுமைகள மக்கள் பொறுத்துக்குவாங்க. ஏன்னா கடவுள் அரசர் பக்கம்தான் இருக்காருங்கிற பயம் அவங்களுக்கு இருக்கும்’. இதப்பத்தி நான் என்ன நினைக்கிறேன்னு கேட்டிருக்கார்!”

“ஏன்? உங்க கருத்த தெரிஞ்சிக்காம அவருக்கு சோறு – சோரி – ரொட்டி தொண்டைக்குள்ள இறங்காதாமா? இல்ல பதில் சொல்லி முடிக்காம உங்களுக்குதான் சோறு இறங்காதா?”

அவள் குரலில் இருந்த எரிச்சல் அவருக்குப் பட்டது. “அப்படியில்ல சிவா. இன்றைக்கு நம்ம உலகத்தில ஆட்சியாளர்கள் செய்ற பல அக்கிரமங்களுக்கு நம்ம மேற்கத்திய தத்துவங்கள்ள பல விளக்கங்கள் இருக்கு. இப்ப அரிஸ்டாடலையே எடுத்துக்குவோமே…”

“அப்புறம் எடுத்துக்குவோம். இப்ப நீங்க எப்படி இருக்கிங்கன்னு சொல்லுங்க!”

சிரித்தார். உரத்த குரல்ல பேசினார். “ஏன்? ஐ ஏம் ஃபைன்! பாத்தா தெரியில எவ்வளவு உற்சாகமா இருக்கேன்னு?”

“ரொம்ப சத்தம் போட்டுப் பேசினா உடம்பு ரொம்ப ஆரோக்கியமா இருக்குன்னு அர்த்தமா? டையாபிடிஸ் மருந்தையே ஒழுங்கா போய் வாங்கிக்கிறதில்லையாம். வேளாவேளைக்குச் சாபிட்றதில்லியாம். ஒடம்பு இப்படி மெலிஞ்சுபோய்க் கிடக்கு. கன்னம் எப்படி ஒட்டிக் கிடக்கு பாருங்க!”

ஒரு அசட்டுத்தனத்துடன் சிரித்தார். கணினித் திரைக்கு முகம்திருப்பினார். எலியைப் பிடித்து ஆட்ட திரையில் இருந்த டெக்ஸ்ட் மேலும் கீழுமாக ஆடியது.

“எப்படி ஒனக்கு இதெல்லாம் தெரியுது? நீ இருக்கிறது லண்டன். நான் இருக்கிறது பினாங்கு. பக்கத்திலிருந்து பாத்த மாதிரி பேசிறியே!”

“நீங்கதான் நான் அனுப்பிற பெர்சனல் ஈமெயில் எதுக்கும் பதில் போட்றதில்ல. நான் உங்க நண்பர்களுக்கும் உங்க டாக்டருக்கும் ஈமெயில் அனுப்பித் தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு!”

“ஓக்கே, ஓக்கே! நீ இன்னும் என்னோட பழைய மனைவியாகத்தான் இருக்க! நான் இப்ப உன் கணவன் இல்லங்கிறத ஏன் மறக்க மாட்டேங்கிற?”

“கணவர்ங்கிறத மறந்து ரொம்ப நாளாச்சி! ஆனா கணவர் ஆகிறதுக்கு முன்னால இருந்து நீங்க எனக்கு நண்பர். காதலராக இருந்தத விட காவலராக இருந்திருக்கிங்க. எனக்கு வாழ்வு கொடுத்தீங்க. அதத்தான் மறக்க முடியில தேவ்!” கண்களில் நீர்மல்கியது.

“ஃபொர்கெட் இட், ஃபொர்கெட் இட், சிவா! நான் நல்லாத்தான் இருக்கேன். ‘நீருண்டு பொழிகின்ற காருண்டு’ன்னு வள்ளலார் பாடினது மாதிரி, நானுண்டு, கணினியுண்டு, என்னுடைய தத்துவ விசாரங்கள் உண்டு. நண்பர்கள் உலகம் முழுதும் உண்டு. பார்க்கப் போனா காரும் உண்டு. அடிக்கடி ஸ்டார்ட் பண்ணாததால அதில பழுதும் உண்டு”.

கண்ணீரைத் துடைத்துச் சிரித்தாள்.

“உலகம் முழுக்க நண்பர்கள் உண்டுங்கிறிங்கள,  ஊர் முழுக்க பக்கத்தில இருந்த நண்பர்களெல்லாம் என்ன ஆனாங்க? ஏன் யாரையும் போய்ப் பார்க்கிறதில்ல நீங்க?”

“சுத்த மண்டுகள் சிவா! நான் என்ன சொன்னாலும் விளங்கிலன்னு சொல்றாங்க! அவங்ககிட்ட பேச என்ன இருக்கு?”

“அவங்க விளங்கிக்கிற மாதிரி பேசணும்!”

“அவங்கல்லாம் உள்ளூர் அரசியல் பேசுவாங்க. ஏதாவது கொலை கொள்ளை பத்திப் பேசுவாங்க. காலையில பேப்பர்ல படிச்சத விழுங்கி மாலையில கக்குவாங்க. எனக்கெதுக்கு அந்த குப்பை? நான் வாழ்க்கையின் உண்மைகளைத் தேட்றேன்! மனத்தினுடைய ஆழத்தை எட்டிப் பாக்கிறேன். அளக்கப் பாக்கிறேன். இப்ப திருமூலரையே எடுத்துக்கியேன்…”

“நான் எப்ப வந்தேன், ஏன் வந்தேன்னுல்லாம் கேக்க மாட்டீங்களா?”

“யெஸ், யெஸ்! சோரி. எப்ப வந்த? ஏன் வந்த?”

“நான் சொல்லிக் கொடுக்காத கேள்வியா ஒண்ணு கேளுங்களேன்!”

கொஞ்ச நேரம் யோசித்தார். “சரி! கடவுளே தூக்க முடியாத கனமான கல்லை கடவுளால் படைக்க முடியுமா?”

ஒரு முழு நிமிடம் அவரை ஆக்ரோஷமாகப் பார்த்தாள். சரேலென எழுந்தாள். “யாத்தி, லஞ்சுக்கு என்ன செய்யப் போற?” என்று சத்தமாகக் கேட்டபடி அடுப்பங்கரை நோக்கி நடந்தாள்.

நல்ல தலைப்புத்தான். ‘கடவுளும் கல்லும்’ பற்றி ஹைடகர் ஏதாவது சொல்லியிருக்கிறாரா என்று பார்த்து அது பற்றி விரிவான கட்டுரை எழுத வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார் தேவ்.

***        ***      ***

யாத்தி சோறாக்கி மீன்குழம்பு வைத்திருந்தாள். அவள் பிரட்டி வைத்த காய்கறிகள் அரைப்பச்சையாக இருந்தன.  மாங்காய் ஊறுகாய் போத்தல் ஒன்று பக்கத்தில் இருந்தது. அவர் அதை எடுக்கக் கை நீட்டினார்.

“இது எதுக்கு உங்களுக்கு? பிரஷர் இருக்கில்ல? இந்த ஊறுகாய் உப்பு ஆகாது” போத்தலை அகற்றி வைத்தாள். ஒன்றும் சொல்லாமல் சோற்றில் மீன் கறியைத் தானாக ஊற்றிப் பிசைந்தார். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் தட்டு காலியாகவே இருந்தது.

“நீ சாப்பிடல சிவா?”

பேசாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவர் தட்டில் போட்டுக் கொண்ட சோறு ஏதோ பூனைக்குப் போடுவது போல கொஞ்சமாக இருந்தது.

“ஏன் இவ்வளவு குறைவா சாப்பிட்றிங்க?”

“இதுவா குறைவு? யோகிகள் காய்ந்த பழங்களையும் விதைகளையும் சாப்பிட்டு உயிர்வாழ முடியும்னு சொல்லியிருக்காங்க. இதுவே உயிர் வாழ்தலுக்கு ரொம்ப அதிகம்”

“நீங்கள் யோகியா தேவ்?”

“நோ, நோ! நா சாதாரண மனுஷன். இதப் பார். சோறு, மீன், முட்டைக்கோஸ்… இது யோகிகள் சாப்பாடா?”

“அப்புறம் ஏன் யோகிகளோடு உங்கள சம்பந்தப் படுத்திப் பேசிறிங்க?”

ஒரு கவளம் வாயில் நுழைத்தார். திரும்பி சமையலறைப் பக்கம் பார்த்தார். “யாத்தி, குழம்பில உப்பே இல்லயே…!” என்றார்.

“நாந்தான் கொறைக்கச் சொன்னேன். எதுக்கு இப்படி, உப்பு, ஊறுகா எல்லாம்? எல்லாமே உடம்புக்குக் கெடுதி”

பேசாமல் சாப்பிட்டார். கொஞ்சம் கொஞ்சமாக சிறு சிறு குவியல்களாக்கி குருவி மணிகளைப் பொறுக்கித் தின்பது போல.

என்ன நடக்கிறது அந்த காய்ந்த தலைக்குள் என சிவகாமிக்குப் புரியவில்லை. என்ன சாப்பிடுகிறோம் என்றாவது தெரியுமா என்பதும் தெரியவில்லை.

“உனக்குத் தெரியுமா சிவா? பெர்க்லியும் காண்ட்டும் பொருள்களின் உண்மைங்கிறது நம் நினைவிலதான் இருக்குன்னு சொல்லியிருக்காங்க. காண்ட் அத immaterialismனு சொல்றாரு. இதத்தானே நாம் இந்திய தத்துவ விசாரத்தில மாயைன்னு சொல்றோம்? இத அந்த மேற்கத்திய தத்துவ உலகம் அதிகமா பாராட்றதில்ல. வாட் நான்சென்ஸ்? பாரதி இரண்டே அடிகளில் பிழிஞ்சி வச்சான் பார்: “வாழ்வு முற்றும் கனவெனக் கூறிய மறைவலோர் தம் உரை பிழையன்று காண்”. இத விடவா மேற்கத்திய தத்துவாசிரியர்கள் கிழிச்சிட்டாங்க. இதப்பத்தி நான் எவ்வளவோ எழுதிட்டேன் சிவா! யார் கவனிக்கிறாங்க?”

பெருமூச்சு விட்டாள். “இப்ப உங்க முன்னால உக்காந்திருக்கேனே, நான் உண்மையா, மாயையா?”

நிமிர்ந்து பார்த்தார். “அட, நீ இன்னும் சாப்பிடவே ஆரம்பிக்கிலியா? சாப்பிடு சிவா. இவ்வளவு நாள் கழிச்சி வந்திருக்க இல்லியா? ப்லீஸ்!”

“மாய உடல் இந்த மாய உணவை எப்படிச் சாப்பிடும்னு யோசிக்கிறேன்!”

“அது சரிதான். ஆனா மாயைங்கிற இந்தப் பொறியில மாட்டிக்கிட்டு இருக்கிற வரையில நாம் எல்லாருமே எல்லா மாயா அவஸ்தைகளையும் அனுபவிக்கத்தான் வேணும்! இப்ப திருமூலர் என்ன சொல்றாரு தெரியுமா…?”

“நாங்க அமெரிக்காவுக்கு போகப் போறோம் தேவ்!” என்றாள்.

“ஏன்?”

“ஜேமிசன் அவங்க கம்பெனியின் ஒரு டிவிசனுக்கு ஜிஎம்மா ஆகியிருக்காரு. ஆகவே கம்பெனி ஹெச்கியுவுக்கு சியாட்டல் போகப்போறோம். குடும்பத்தோட…”

“ம்… வெரி குட். சியாட்டல்? நல்ல நகரம். ஒன் புருஷனுக்கு என்னோட வாழ்த்துதலைத் தெரிவி. நல்ல சம்பளம் கிடைக்குமே…”

கொஞ்சம் சோற்றைத் தட்டில் போட்டு கொஞ்சமாக குழம்பை ஊற்றிக் கிளறி வாயில் வைத்தாள்.

“சியாட்டல் யுனிவெர்சிடியில ஒரு இண்டரெஸ்டிங் புரொக்ரேம் இருக்கு. Existential-Phenomenological Therapeutic Psychology Program. 2007ல ஒரு மாநாடு நடத்தி எங்கிட்ட ஒரு பேப்பர் கேட்டிருந்தாங்க. Therapeutic psychololgy in Thirumanthiramனு ஒரு பேப்பர் அனுப்பினேன். ரொம்ப பாராட்டுனாங்க. நம் தத்துவத்தில் இல்லாத உளவியலா அவங்க கிட்ட இருக்கு..?”

அவரை இடை மறிக்காமல் பேச விட்டாள். ஒரு பத்து நிமிஷம் திருமந்திரத்தின் உளவியல் பற்றிய அரிய விளக்கத்தை காற்றுப் போல ஒரு காதில் வாங்கி மறுகாதில் வெளியே விட்டுக் கொண்டிருந்தாள்.

திடீரென்று ஞாபகம் வந்து கேட்டார். “சோரி சிவா! நான் பாரு பைத்தியக்காரன். இன்னைக்கு நீ இங்கே தங்கிறியா? கேஸ்ட் ரூம் தயார் பண்ணச் சொல்லட்டுமா?யாத்தி… ”

“வேண்டாம்… உங்களுக்கு ஞாபகம் இருக்கா தேவ்?”

“எதப்பத்திக் கேக்கிற?

“திருமகள்”

“திருமகள்? ஆமா, திருமகள். நம்ம குழந்தை. எப்படி இருக்கா?”

“இவ்வளவு நேரம் கேக்கத் தோணலியா?”

சிரித்தார். “கேக்கத் தோணலியான்னா, இப்பத்தான வந்த சிவா? ஏதேதோ பேசிக்கிட்டே இருந்ததில… சொல்லு குழந்த எப்படி இருக்கா? பள்ளிக்கூடம் போகணுமே இப்ப…”

அவரைக் கூர்ந்து பார்த்தாள். “அவளுக்கு இப்ப என்ன வயசின்னு தெரியுமா?”

“ஓ கோட்! இப்படிக் கேட்டா எப்படி? 11? 12?”

“என்னோட அவ லண்டனுக்கு வந்த போதே அவளுக்கு வயசு 10. அப்ப இப்ப என்னவிருக்கும்?”

கொஞ்சம் திருதிருவென விழித்தார்.

தன் கைப்பையிலிலிருந்து ஒரு கார்டு எடுத்துக் கொடுத்தாள். “என்ன?” என்று கேட்டார்.

“அடுத்த வாரம் அவளுக்குக் கல்யாணம் தேவ்!”

“ஓ மை கோட்! என் பேபிக்குக் கல்யாணமா?”

“பேபியில்ல. அவளுக்கு வயசு 25. பயோ டெக்ல மாஸ்டர்ஸ். போன வருஷம் கிராஜுவேட் பண்ணினா. தங்கப் பதக்கம் வாங்கியிருக்கா!”

“கிரேட், கிரேட்! கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஸ்டெப் ஃபாதரோட உறவு எப்படி?”

“ஜேமிசன் தங்கமான மனிதர். ஆனா அவர் தன்னோட அப்பா இல்லங்கிற எண்ணம் அவளுக்குத் தீவிரமா இருக்கு! அதினால கொஞ்சம் அந்நியம்!”

“மாப்பிள்ளை?”

“நெதர்லந்துக்காரர். வெள்ளைக்காரர். ஒண்ணா படிச்சவங்க!”

“என்னுடைய ஆசிர்வாதங்கள சொல்லு சிவா!”

மௌனம்.

“உங்களுக்குப் பணம் ஏதும் தேவையா? கொடுக்கட்டுமா?”

“சீச்சீ! எனக்கெதுக்கு பணம்? யுனிவெர்சிட்டியிலிருந்து ஒழுங்கா பென்ஷன் வருது. யாத்திக்குச் சம்பளம் குடுத்து என்னுடைய தேவைகளைக் கவனிக்க அது போதும்”

“கல்யாணத்துக்கு வாரீங்களா? டிக்கெட் நான் எடுத்துத் தாரேன்!”

மீண்டும் அசடாகச் சிரித்தார். “நோ, நோ, சிவா. நான் அவ்வளவு தூரம் வர முடியாது. இந்த மாதிரி சடங்குகள்ள எல்லாம் என்னால ஒட்டவும் முடியாது. அது தவிர…”

யோசித்திருந்தார். வாக்கியத்தை முடிக்கட்டுமெனக் காத்திருந்தாள். “நான் அங்கே எதற்கும் பிரயோஜனப்பட மாட்டேன் சிவா!”

ஆமாம் என்றோ இல்லை என்றோ அவளால் சொல்ல முடியவில்லை.

“சரி, அப்ப நான் புறப்பட்றேன்”

“எப்படிப் போவ? நான்கொண்டி ஏர்போர்ட்ல விடட்டுமா?”

“நோ தேங்க்ஸ்! ஏர்போர்ட்ல இருந்து ஒரு கார் ஹயர் பண்ணிக் கொண்டு வந்திருக்கிறேன். ஜியார்ஜ் டவுன்ல பேங்க்ல கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சிட்டு ஏர்போர்ட் போயிடுவேன்!”

“ஓக்கே!”

முள்மயிர்கள் நிறைந்த கன்னத்தில் மிருதுவாக முத்தமிட்டாள். அவர் இதமாகக் கன்னத்தைச் சாய்த்துக் கொடுத்தார்.  வெளியேவந்தாள். காரில் ஏறி அதனைத் திருப்பும்போது பின்கண்ணாடியில் அவர் கார்டைக் கையில் பிடித்தவாறு யோசித்து நிற்பது தெரிந்தது.

கார்டைப் பிரித்துப் படிப்பாரா என்று யோசித்தாள். மாட்டார். அவருக்கு அது முக்கியமான விஷயமாகத் தெரியாது என்று முடிவு செய்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *