உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 20, 2021
பார்வையிட்டோர்: 1,692 
 

உங்க கிட்ட கொஞ்சம் பேசணும், எதிரில் தனது முந்தானையை சரி செய்து கொண்டு நின்று கொண்டிருந்தாள் வசந்தி.

டேபிளின் மேல் வைத்திருந்த எல்லா பொருட்களையும் எடுத்து டிராயரில் போட்டு விட்டு கிளம்பலாம் என்று நினைத்திருந்த நேரம். உற்று பார்த்தேன், எட்டு மாத்த்திற்குள் கொஞ்சம் உடல் மெலிந்து இருக்கிறாள், அந்த நிலையிலும் என் எண்ணம் இப்படி போனதற்கு நானே தடை போட்டுக்கொண்டேன்.

என் பார்வை அவள் உடலின் மேல் பாய்வதை அவள் உணர்ந்து கொண்டாளோ தெரியவில்லை சட்டென மீண்டும் தன் முந்தானையை சரி செய்து கொள்வது போல செய்தாள்.

நான் கொஞ்சம் அவசரமா போகணும், குரலை மென்மையாக்கி சொன்னேன்

சரி அப்படீன்னா நாளைக்கு ஈவினிங்ல் பாக்கலாமா?

பரவாயில்லை, நான் வேணா நாளைக்கு என் புரோகிராம வச்சுக்கறேன், இப்ப என்ன பேசணும்னு சொல்லு.

வெளியே போய்…அவள் குரலை இழுத்தாள்.

சரி என்று மீண்டும் ஒரு முறை டிராயரை இழுத்து பூட்டியிருக்கிறேனா என்று சோதித்து விட்டு நடந்தேன். அவள் அவசரமாய் என்னை பின் தொடர்ந்தாள்

அவள் பின்னால் வருகிறாள் என்று உணர்ந்தாலும், என் மனம் அதில் இல்லாமல் முன்னால் நடந்தவைகளைத்தான் அசை போட்டது.

அன்றைக்கு இவளை மணந்து கொள்ள எவ்வளவு ஆசைப்பட்டிருப்பேன். இவளிடம் என் அபிப்ராயம் சொல்வதற்கு முன் பாலு சார், பாலு சார் என்று குழைந்து பேசியவள்தானே. அவள் அப்பாவிடம் பேசிவிட்டு வந்த பின்னால் எப்படி மாறிப்போனாள்.

அன்று அவள் அப்பா பேசியது இன்னும் மனதுக்குள் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது.

சார் உங்க பொண்ணு சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன், பீடிகையுடன் ஆரம்பித்தவனை அசுவாரசியமாய் பார்த்தார், சாரி ஒண்ணும் சொல்ல்லையே..

அவரின் பதிலே கண்டிப்பாய் சொல்லியிருக்கவேண்டும் என்று உணர்த்தியது. இருந்தாலும் நான் விடவில்லை, சார் என் வீட்டுல பொண்ணும் பாத்துகிட்டு இருக்காங்க, எனக்கு உங்க பொண்ணை பாத்த உடன் பிடிச்சிடுச்சு. நான் அவங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன்.

அவர் எதுவும் பேசாமல் என் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தார். அவரின் இந்த நிலை என்னை சங்கடப்படுத்தியது.

சார் நீங்க எங்க குடும்பத்தை பத்தி யோசிக்கறீங்களா? நல்ல குடும்பம்,ஒரே பையன்.

அவர் இதற்கும் எந்த பதிலை தரவில்லை, முகத்தை சற்று தீவிரமாக்கியது போல் தெரிந்தது.

சார் நான் அரசாங்க உத்தியோகத்துல உங்க பொண்ணு வேலை செய்யற செக்சனுக்கு அடுத்த செக்சன்லதான் இருக்கேன்.

போதும் தம்பி நான் இப்ப என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற எண்ணத்துல இல்லை. அப்படி எண்ணம் வந்தா கண்டிப்பா உங்களை பத்தி யோசிக்கிறேன். அவர் எழுந்து கை குவித்ததை பார்த்தவுடன் புரிந்து கொண்டேன். எழுந்து போகச்சொல்கிறார்.

மனதில் சட்டென ஒரு வெறுப்பு வந்தது. என்ன மனிதன் இவன்? எனக்கு வேண்டும், இந்த அவமானம். ஆசைப்பட்டு விட்டோம், கேட்டு பார்க்கலாம் என்று வந்தால்?

இவள் அப்பாவிடம் கேட்பதற்கு முன் போன வாரமே அவளிடம் என் எண்ணத்தை சொன்னேன். முகத்தில் வெட்கத்துடன் எங்கப்பா கிட்டே வந்து பேசுங்க, சொல்லிவிட்டு தடுமாறி நடந்தபோது உணர்ந்து கொண்டேன், அவளுக்கு என்னை திருமணம் செய்து கொள்வதில், எந்த ஆட்சேபமும் இல்லை.

ஆனால் அவளிடம் இருந்த ஆர்வம் அவள் அப்பாவிடம் இல்லாமல் என்னை விரட்டுவதில் குறியாய் இருப்பது எனக்கு சோர்வை கொடுத்தது.

மறு நாள் அவள் வேலைக்கு வர்வில்லை. மனதுக்குள் கோபம் இருந்தாலும் அவள் வருகையை எதிர்பார்த்துத்தான் இருந்தேன். ஆனால் வரவே இல்லை. இப்பொழுது ஏன் வரவில்லை? இந்த எண்ணமே மாலை முழுக்க இருந்தது.

மறு நாள்,மறு நாள், தொடர்ந்து வரவில்லை. அதன் பின் வேலைக்கு வந்தவள் என்னை தாண்டி அவள் செக்சனுக்கு செல்லும்போது கூட என்னை பொருட்டாக பார்க்க்கூடாது என்ற கவனத்தில் செல்வது தெரிந்தது. மனதுக்குள் கோபம் சுர்ரென ஏறியது. சட்டென கோபத்தை உதறினேன். எதற்காக கோப்படவேண்டும்? அவளை நான் காதலித்தேனா? திருமணம் செய்து கொண்டால் நன்றாய் இருக்கும் என்று விருப்பப்பட்டேன். அவ்வளவுதான், அதில் அவள் அப்பாவுக்கு விருப்பம் இல்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்.

கொஞ்சம் கொஞ்சமாக மனதை சமாதானப்படுத்திக்கொண்டேன், ஆயிற்று எட்டு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. இப்பொழுதெல்லாம் அவள் என்னை கடந்து சென்றாலும் மனது படபடப்பதில்லை. பார்த்துக்கொண்டிருப்பவர்களில் அவளும் ஒன்று என்று நினைக்க ஆரம்பித்து விட்டேன். அப்படியே போய்க்கொண்டிருக்கும் இந்த வேளையில் இவள் எதற்காக என்னிடம் பேச வேண்டும்?

இருவரும் மெளனமாகவே நடந்தோம்.சற்று தொலைவு நடந்ததும், காப்பி சாப்பிடலாமா? ம்..மெளனமாய் தலையாட்டியவன் ஒரு ஹோட்டலில் நுழைந்து கொஞ்சம் தள்ளி இருந்த டேபிளில் போய் உட்கார்ந்தோம்.

எதிரில் வந்த சர்வரிடம் ஆளுக்கு ஒரு காப்பி, கொஞ்சம் மெதுவா கொடுத்தா போதும் அவளே சர்வரிடம் சொன்னாள். அதே வேகத்தில் திரும்பியவள், நீங்க என் மேல வச்சிருக்கற கோபம் நியாயமானதுதான் என்றாள்.

அதுவரை அமைதியாய் இருந்த எனக்கு இப்பொழுதுதான் கோபம் வந்தது. இங்க பாரு..என்று விளித்தவன், நிலைமையை உணர்ந்து “பாருங்க” என்று திருத்திக்கொண்டு, தயவு செய்து கோபம் அப்படின்னு சொல்லாதீங்க. அதுவும் எட்டு மாசத்துக்கு மேல ஒருத்தர் மேல் கோபம் வச்சுக்கற அளவுக்கு யாரும் எனக்கு எதிரா எந்த தப்பும் பண்ணலை வேகமாக பேசினேன்.

இந்த வார்த்தை அவளுக்கு சற்று ஏமாற்றத்தை தந்திருக்கவேண்டும்.முகத்தில் தெரிந்தது. சமாளித்துக்கொண்டவள் சரி கோபமே இல்லை அப்படீன்னு சொல்றவங்க எப்பவும் போல பேசவேண்டியதுதானே?

நான் சிரித்து உங்கப்பாகிட்டே நான் பொண்ணு கேட்டுட்டு வந்து நாலு நாள் கழிச்சுத்தான் வேலைக்கு வந்தே. அப்ப என்னை பாrக்ககூடாதுன்னு வலுக்கட்டாயமா முகத்தை திருப்பிகிட்டு போன பின்னால் நான் ஏன் உன்னை தொந்தரவு செய்யணும்னு விட்டுட்டேன், அவ்வளவுதான்.

அன்னைக்கு உங்களை பாத்தா என் மனசு சங்கடப்படுமுன்னுதான் அப்படி போனேன், எங்கப்பா உங்களை அப்படி மூஞ்சியில அடிச்ச மாதிரி அனுப்பியிருக்க்க்கூடாது அப்படீங்கற கோபம் கூட இருந்துச்சு.

அப்ப நீ என் கிட்ட வந்து சாரி கேட்டிருக்கலாமில்லை..என் குரலில் இப்பொழுது மென்மை. இது எப்பொழுது என்னிடம் வந்தது?

நீங்க மூஞ்சியை தூக்கி வச்சுகிட்டு இருக்கும்போது நான் எப்படி உங்க கிட்ட வந்து பேசறதாம்? அவள் குரலில் இளக்கம்.

இப்ப மட்டும் எப்படி திடீருன்னு எங்கூட பேசணும்னு தோணுச்சு?

ம்…அவள் குரலில் வெட்கம், அப்பா உங்களை வர சொன்ன பின்னாலதான், தப்பு தப்பு, உங்க குடும்பத்தோட வந்து முறைப்படி பேச சொன்னாரு

சட்டென்று மனதுக்குள் ஒரு உற்சாகம், அதெப்படி திடீருன்னு உங்கப்பா ஒத்துகிட்டாரு.

அப்பா எப்பவுமே முறைப்படித்தான் நடக்கணும்னு நினைக்கிறவர். நீங்க உத்தியோகத்துல இருக்கறதுன்னாலே உடனே நேரா போய் உங்க பொண்ணை கட்டிக்கிறேன்னு சொன்னா அவருக்கு எப்படி இருக்கும், வீட்டுல பெரியவங்களை அனுப்பிச்சு முறையா வந்திருந்தா… நாளைக்கு நீங்களும் ஒரு பொண்ணை பெத்து வளர்க்கும்போது எப்படி எதிர்பார்ப்பீங்கன்னூ…சொல்லிக்கொண்டிரூந்தாள்

நான் லீவு போட்டு விட்டு ஊருக்கு போவதை பற்றி யோசிக்க ஆரம்பித்திருந்தேன்.

சர்வர் கொண்டு வைத்திருந்த காப்பி ஆறி ஆடை படிந்து கிடந்தாலும் இரசித்து குடித்தோம் இருவரும்.

Print Friendly, PDF & Email

நிழல் பேசுகிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

பர்ஸனல் ஸ்பேஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)