கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 15, 2021
பார்வையிட்டோர்: 10,200 
 
 

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அன்று அலுவலகப் பவுர்ணமி நாள். ஆனாலும் – பட்டப் பகலிலேயே உதித்த இந்தப் பவுர்ணமி, அந்த அலுவலகவாசிகளில் சிலருக்கு, வளர்பிறைகளின் பரிபூரணம். பலருக்கோ தேய்பிறைகளின் துவக்கம். சுருக்கமாகச் சொல்லப்போனால், சம்பள நாள். துக்கமாய், துக்கிரியாய், விடை தெரியாப் புதிராய், விரக்தியாய், பற்றற்ற யோகியாய், மீனா போன்ற ஒரு சிலருக்கு மகிழ்ச்சியாய், பல்வேறு மனோ வடிவங்களைக் காட்டும் மாதக் கடைசி உழைப்பு நாள்.

அலுவலகப் பொருளாளன் – அதாவது கேஷியர் எனப்படும் காசாளர், தேசிய வங்கியில் இருந்து, கொண்டு வந்த பணக் கட்டுகளை ஒவ்வொன்றாய் எடுத்து எண்ணிக் கொண்டிருந்தான். பியூன் மாரிமுத்துக்கு பொறுமை இல்லை. கந்து வட்டிக்காரப் பயல் வரும் முன்னால் ஓட வேண்டும். நல்ல வேளை. நாளையும், மறுநாளும் சனி, ஞாயிறு திங்கள், செவ்வாய் சி.எல், மீதி நாள் பற்றி அப்புறம் யோசிக்கலாம். என்ன இந்த முரளி.

“முர்லி. ஒரு கட்டுல. முதல் நோட்டு நம்பரையும். கடைசி நோட்டு நம்பரையும் பார்த்தால் போதுமே. ஏன் நேரத்தை வேஸ்ட் செய்யுறே?”

“இடையில நாலைந்து நோட்டுக்களை உருவியிருந்தா ஒங்கப்பனா தருவார்?”

காசாளன், நோட்டுக்களை எண்ணுவதை விட்டுவிட்டு, அவை மேல் இரண்டு கரங்களையும் கிடுக்கிப் பிடியாய் போட்டுக் கொண்டு, போன மாதம், இன்னொரு அலுவலகப் பொருளாளன், வங்கியிலிருந்து சம்பள நோட்டுக்களை வாங்கி வந்து, கால்குலேட்டரில் போட்டுப் பார்த்ததில், கணக்கு சரியாய் இருந்ததையும், பட்டுவாடாவில் பற்றாக்குறை ஏற்பட்டதையும் பார்த்துவிட்டு அசந்தானாம். பிறகு அத்தனைபேரின் சம்பளத்தையும் வாங்கி, நம்பர்படி அடுக்கிப் பார்த்தால் மகாத்மா காந்தி படம் போட்ட பல நோட்டுக்களை காணலியாம்.

முரளி மேற்கொண்டும் விலாவாரியாக விளக்கியபோது, மீனா மட்டுமே அவன் பேசுவதை, முகநயங்களோடு கேட்டாள். மற்றவர்கள், அவன் பேசுவதைக் கேட்பதுபோல் பாசாங்குத் தனமாய் தலையாட்டியபடியே கேட்டுக் கொண்டிருந்தனர். இன்ஸ்டால்மென்ட் புடவை வியாபாரியைப் பார்த்த மல்லிகா, கட்டிய புடவை நழுவிப் போனதுபோல் தவித்தாள். மாதச் சீட்டுக்காரனைப் பார்த்த சிங்காரம், தானே ஏலத்தில் போகப் போவதுபோல் தவித்தான். அப்பளம், மிளகு, முறுக்கு, வடை, மிக்ஸர், அவரை, துவரை போன்ற நொறுக்குத் தீனி வியாபாரியை பார்த்த மாரியம்மா கண்களை மூடினாள்: திறந்தால் கண்ணிர் எந்த வியாபாரியிடம் சிரித்து சிரித்து வாங்கினாளோ, அந்த வியாபாரியைப் பார்த்து, இந்த துப்புரவுத் தொழிலாளி அழப் போனாள். ஒவ்வொரு லெவலுக்கும் ஒரு துக்கம். இதில் மகாப் பெருந்துக்கம் டிரைவர் மணிக்குத்தான். மேலதிகாரியுடன் போய்விட்டு, திரும்பி வந்து பார்த்தால், அவன் மனைவி அலமேலு காசாளன் நாற்காலிக்கு எதிர் நாற்காலியில் அமர்ந்து காலாட்டிக் கொண்டு இருந்தாள்.

காசாளன், ஒவ்வொருத்தரையும் சீனியாரிட்டிபடி, சம்பளப் பணத்தை கொடுக்க கூப்பிட்டான். கணக்காளரான அக்கவுன்டன்ட் மீரா, கருக்கெழுத்தாளப் பெண் மல்லிகா, யூ.டி.ஸி.யான சேகர், எஸ்டிசிகளான மயன், மஞ்சுளா, இந்திரா, ராமஜெயம். கடைசியில் மீனா, பிறகு ‘கிளாஸ் போர் வரிசை.

மீனா, தேர் நகர்வதுபோல் நகர்ந்து, காசாளன் அருகே போனபோது, டெப்திரி சண்முகம் குரலிட்டான். ஒரு ஒதுக்குப்புறத்து நாற்காலி மேஜையில் காகிதக் கட்டுக்கள், ஊதுவத்திகள், தடித்த கவர்கள், பிரசவிக்கப் போவது போன்ற டெஸ்பாட்ச்டயரி ரிஜிட்டர்களோடு தனிக்குடித்தனம் நடத்துகிறவன்.

“இந்தாப்பா. முரளி. உன் ஆத்தாவுக்கு இப்போ எப்படி இருக்குது?”

“அந்தக் கவலை உனக்கு ஏன்?”

“என்னப்பா நீ. மூஞ்சில அடிச்சாப்போல”.

“எங்கம்மா கார்ல அடிபட்டு ஆஸ்பத்திரில இருந்த சமயத்துல கேட்காம, டிஸ்சார்ஜ் ஆன பிறகு கேட்கிறே. நீ எதுக்கு கேட்கிறேன்னு எனக்கு தெரியாதா?”

“நேர்மையா இருக்கிற நான், நேர்மையாய் நேரடியாகவே கேட்டிருக்கணும் எம்.மேலத்தான் தப்பு: உங்கம்மா எப்படிப் போனால் எனக்கென்ன? இந்த மாதச் சம்பளத்துல சொஸைட்டிக் கடன பிடிக்காதே, ஒ.டி., பேமென்ட்ல பிடிச்சால் போதும்!”

“என்கிட்ட எதுவும் பேசாதே. சொஸைட்டிக் கடன தயவு தாட்சண்யம் இல்லாமல் பிடிக்கனுமுன்னு டெப்டி டைரக்டர் சொல்லிட்டார்.”

“அவர, எப்படி, யார் சொல்ல வச்சிருப்பாங்கன்னு எனக்கும் தெரியும். அவரையே, உங்கிட்ட வேற மாதிரி சொல்ல வைக்கிறேன் பார்க்கிறியா?”

“நீ இவ்வளவு சொல்றதால, அதே டெப்டி டைரக்கடர, நீ இன்னும் கணக்கு காட்டாத ஜி.பி.எப்., அட்வான்ஸ், எல்.டி.சி., கணக்குக்குக் கொண்டுவராத ஒன்னோட வெள்ள நிவாரணக் கடன், பெஸ்டிவல் அட்வான்ஸ், சைக்கிள் லோன்… இதுங்களையும் பிடிடான்னு சொல்ல வைக்கட்டுமா?”

“கோவிச்சுக்காத கண்ணா. சும்மா ஒரு பேச்சுக்குத்தான். நீ சொல்றதையெல்லாம் பிடிச்சா நான் கோவிந்தாதான். ஏதோ பேசிட்டேன். நீ இல்லாட்டி யாரு எனக்கு உதவறதுக்கு இருக்காங்க..”

“அப்படி வா வழிக்கு”

எப்போதும் உரத்த குரலில் பேசும் சண்முகமும், பொடி வைத்துப் பேசுவதில் நிபுணனான முரளியும், எங்கே அடித்துக் கொள்ளப் போகிறார்களோ என்று, குத்துக்கல்லாய் இருந்த எல்லாரையும் பதறிப் பார்த்த மீனா, இப்போது, குறுஞ் சிரிப்பாய் சிரித்தாள். முரளி நீட்டிய காகிதக் கட்டுக்களை அவள் காணாமலே நின்றபோது, தனியறையில் கனகசபாபதி வெளிப்பட்டார். அவரைப் பார்த்துவிட்டு, டிரைவர் மணியின் மனைவி ஒடி ஒளிந்து கொண்டாள். அவர், கற்றுமுற்றும் பார்த்துவிட்டு கேட்டார். பதவிக்கேற்ற கனத்த குரல். குரலுக்கேற்ற தடியுடம்பு.

“என்ன கலாட்டா? யோவ். நீங்கள்லாம் யாருய்யா? கடன்காரக் கிராக்கிகளா? வெளியே போய் நில்லுங்கய்யா. இது என்ன சத்திரமா? சாவடியா? முரளி. இங்கே என்னமோ சத்தம் கேட்டது?”

“ஒண்னுமில்ல சார். புதுசா வேலைக்கு சேர்ந்த மீனாவுக்கு இது முதல் சம்பளம் அதனால் ஸ்வீட், காரம், காபி கேட்டோம்.”

“அப்படியாப்பா சண்முகம்?”

“அதேதான் சார்”

நிர்வாகக் கிழவர், மீனாவைப் பார்த்தார். பிரகாசமாய் வெளிப்பட்ட அவள் கண்களையும், உள்ளடங்கிய பற்களையும், அச்சம், மடம், நாணம், பேதமை என்பார்களே – அத்தனையும் மொய்த்த அவள் முகத்தையும் பார்த்த அவரது கண்கள், மார்பகத்திற்கு வந்ததும் மூடிக்கொண்டன. சிவ சிவ என்று வாயைப் பேச வைத்தன. பின்னர், மனதிற்குள் கஷ்டப்பட்டு, அவளை ஒரு மகளாய் பாவித்துக் கொண்டார். முரளி, சண்முகம் சொன்னதை நம்பாதவர்போல், தனது காதுகளைத் தடவிய படியே, மீனாவைச் சாக்காக வைத்துக்கொண்டு, அதே மீனாவிடம் கேட்டார்.

“இந்த ஆபீஸ்ல எந்தப் பிடிப்பும் இல்லாமல் சம்பளம் வாங்குற முதல் எம்ப்ளாயி நீதான்”

கொஞ்ச நாளாய், நிர்வாக அதிகாரியிடம் ‘டூ’ விட்டிருந்த மல்லிகா! ‘டூ’வை டாவு ஆக்க நினைத்தாள். அவளுக்கும் மீனாவே சாக்கு.

“இந்தப் பொண்ணு பிரில்லியண்ட் கேர்ள் சார் வேலையில கட்டி, அதோட லக்கி கேர்ள் சர்வீஸ் கமிஷன் பரீட்சையில், எடுத்த எடுப்பிலேயே நல்ல வேலையா வாங்கிட்டாள்! வேலையில் சேர்ந்த மறுவாரமே கல்யாணம்! இப்போ பேகமிஷன் சிபாரிகல இவள் சம்பளம் எங்கேயோ போகப் போகுது.”

“குட். வெரிகுட்.”

நிர்வாக அதிகாரி, மீனாவைப் பார்க்காமல், மல்லிகாவைப் பார்த்து, “உன்னை மெச்சினேன்” என்பது மாதிரி ‘குட் சொன்ன போது, மீனா, நாணங்கலந்த நளினத்துடன், கண்களைத் துரக்கியும், தாழ்த்தியும் விபரம் சொன்னாள்:

“அவர் வரதட்சணையே வாங்கல சார். வேண்டான்னுட்டார் சார்”.

“குட். ஆம்பளைன்னா அப்படித்தான் இருக்கணும் என் சம்பளம் என்னய்யா ஆச்க சம்பளமுன்னு வந்தால் நான் ஜூனியர்”.

“வழக்கப்படி ஒங்க ரூமுக்குள்ள வந்துதானே கொடுப்பேன் கொண்டு வாறேன் சார் இப்பவே சார்.இமிடியேட்லி சார்”.

“ஏய்யா. ஏ.ஓ.ன்னா ஜோக்கே அடிக்கப்படாதா? அப்புறமாய் கொண்டு வா.”

நிர்வாக அதிகாரி உள்ளே போய்விட்டார். கடன்கார ஆசாமிகளோடு, புதிதாய் வந்த கந்து வட்டிக்காரனும் சேர்ந்து கொண்டு அனைவரும் உள்ளே வந்தனர். டிரைவர் மணியின் மனைவி எங்கிருந்தோ ஒடி வந்தாள். முரளி, மீனாவைக் கெஞ்சினான்.

“அவர்கிட்ட வாய் தவறிச் சொல்லிட்டேன். ஸ்வீட், காரம் வகையறாவுக்கு ஒரு இம்பது ரூபாய் தர்றீங்களா?”

“இன்னாப்பா முரளி. அந்தப் பாப்பாவை லஞ்ச் வாங்கிக் கொடுக்கச் சொல்லு. வரதட்சணை கேட்காத மாப்பிள்ளை லேசாய் கிடைத்திருக்கே”

“நீயெல்லாம் இருக்கியே ஊரான் வீட்டு நெய்யே”

மீனா மேற்கொண்டு முரளியைப் பேச விடாது சொன்னாள்: “இப்போ ஸ்வீட், காரம் நாளைக்கு லஞ்ச்’ தயவு செய்து மத்தியான சாப்பாடு கொண்டு வராதீங்கோ”

“அப்பாடா. எனக்கு கால் கிலோ அரிசி மிச்சம்”

வயிற்றைத் தடவியபடியே சிரித்துக் கொண்ட மணியின் மனைவியை எல்லாரும் அசிங்கமாய் பார்த்தபோது, மீனா வினவினாள்:

“எவ்வளவு பணம் வேனும் முரளி சார்?”

முரளி, அலுவலகத்தாரின் முகம் பார்த்து எண்ணினான். டெபுடி டைரக்டரையும், நிர்வாக அதிகாரியையும் ‘காக்க வைப்போர் பட்டியலிலும், அன்று அலுவலகம் வராதவர்களை காத்திருப்போர் பட்டியலிலும் சேர்த்துக்கொண்டு பதிலளித்தான்.

“ஒரு இநூறு ஆகும் நம்ம கேன்டீன்லயே வாங்கிக்கலாம். மற்றபடி மட்டன். சிக்கன். வெளியில வாங்கிக்கலாம்”

“இந்தாங்க இநூறு”

“நாளைக்கு கொண்டு வாங்க”

“நாளைக்கு லேட்டா வருவேன். ஏ.ஒ.கிட்ட ஒன் அவர் பர்மிஷன் வாங்கிட்டேன். அதனாலதான். லஞ்சுக்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்யனுமே. வச்சுக்கங்க சார்”

“ஆமா. தெரியாமத்தான் கேட்கறேன் ஏ.இ.கிட்ட பர்மிஷன் கேட்டால் போதுமா? அப்போ அக்கவுண்டன்ட்டான நான் எதுக்கு இருக்கேன்”

“சாரி மேடம். ஒன் அவர் பர்மிஷன் கொடுங்க மேடம்.”

மீனாவிடம் பணம் வாங்கிக் கொண்ட முரளி உட்பட எல்லாரும் சிரித்தனர்.

அக்கவுண்டன்ட் மேடம், அவளை சூடாகப் பார்த்தாள். கிண்டலடிக்கிறாளா. இல்லை. அவள் முகத்தில் எந்த வில்லங்கமும் இருப்பதாய் தெரியல நானும், தனியாய் கேட்டிருக்கணும். சொல்கிற வேலை எல்லாவற்றையும் செய்கிறவள். மல்லிகாவ மாதிரி காட்டேரி இல்ல.

மீனா புறப்படுவது வரைக்கும் காத்திருந்த அக்கவுண்டண்ட் மீரா, அவளோடு அலுவலகத்திலிருந்து வெளிப்பட்டாள். பிராயச்சித்தமாக, அவள் தோளில் கை போட்டபடியே, ‘சாரிம்மா… இந்த மல்லிகாவுக்கு உறைக்கட்டுமுன்னு. உன்கிட்ட பேசிட்டேன்.” என்றாள். மீனா, அதைப் பொருட்படுத்தாமலே பேசினாள்:

“அவரு, காலையில் ஏழு மணிக்கு புறப்பட்டு, அபீஸ்ல இருந்து, அப்படியே ஈவினிங் காலேஜ் போயிட்டு, நைட் திரும்பறதுக்கு பதினோரு மணியாயிடுது மேடம்.”

“அதனாலதான் இன்னும் முழுகிக்கிட்டே இருக்கியா?”

“போங்க மேடம். வீட்ல ஒரே போர்னு சொல்ல வந்தேன்”.

“அதனால ஒரு டிவி வாங்கலாமுன்னு நினைத்தேன். தவணை முறையில வாங்கலாமா மேடம்”.

“தாராளமாய். எனக்கு தெரிந்த பேங்குக்கு கூட்டிட்டு போறேன். கன்சூமர் லோன் விண்ணப்பத்துல உன் மாதச் சம்பளத்துல பிடித்து தவணைப் பணத்தை அனுப்புறதாய், நம்ம நிர்வாக அதிகாரி எழுதிட்டால் போதும். இருபதாயிரம் ரூபாய் வரை கடன் வாங்கலாம். அப்புறம் என்ன? ஒரு வாரத்துல டிவியோட, டேப் ரிக்கார்டரும், டு-இன்-ஒண்ணும் வாங்கலாம்”.

“பத்தரைக்கு மேல், ஒலியும் ஒளியும், இருக்குதா மேடம்”

“ஏன் கேக்குறே? மூடு தேவைப்படுதா?”

“அவருக்குத் தேவை”

நாற்பது வயது மீரா, அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தாள்.

“வீட்டுக்கு வீடு மூடில்லதான்” என்று சொல்லிச் சிரித்தாள். வெறுமையோ பொறுமையோ.

அலுவலகத்திற்கு அருகேயே உள்ள தன் வீட்டிற்கு பொடி நடையாய் நடக்கப் போன மீனா, நின்ற இடத்திலேயே நின்றாள். அதோ வருகிறதே ஆட்டோ, அதில் போய் அப்பாவைப் பார்த்துவிட்டு வரலாமா? அவர் கையில் பணத்தைக் கொடுத்துவிட்டு, காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கலாமா.

எப்பேர்ப்பட்ட அப்பா. பெண்டாட்டி செத்தால், புருஷன் புது மாப்பிள்ளை என்கிற பழமொழி இருக்கிற நாட்டுல. நாற்பது வயதிலேயே மனைவியை பறிகொடுத்தாலும், மறுமணம் செய்யாத பெருந்துறவி. பெத்த மகள்கள் முப்பது வயதைத் தாண்டினாலும், அவர்களின் வருமான வரவு களுக்காக, திருமணங்களைத் தள்ளிப்போடும் கரண்டல் தந்தையர் உலகில், இவர் அத்திப்பூ தந்தை…

‘இப்போ எதுக்கு கல்யாணம் என்று இவள் மறுத்தபோது, ‘நல்ல பையன். நல்ல லட்சணம். நல்ல வேலை. அதோட வரதட்சணை வேண்டாமுன்னு சொல்கிற முற்போக்கு வாலிபன். இப்படிப்பட்டவன் எங்கேயும் கிடைக்க மாட்டான். இந்த வீட்டுச் கமையே எனக்கு சுவை. நீ சுமக்கப்படாது’ என்று அறிவுறுத்தியவர்.

பையன், நல்லவன் என்கிற சாக்கில், கையைக் கட்டிக் கொண்டிருக்காமல், இருபது பவுன் நகை போட்டவர். கல்யாணச் செலவை ஏற்றுக் கொண்டதோடு, கட்டில், பீரோ இத்யாதிகளை வாங்கித் தந்தவர்.

மீனாவுக்கு, அப்பவே அப்பாவைப் பார்க்க வேண்டும்போல் தோன்றியது. ஆனாலும், அந்த ஆட்டோவைப் போல், அந்த ஆசையையும் திருப்பி விட்டாள். நாளைக்கு ஒரு மோதிரம் வாங்கிக் கொண்டு, அப்பாவைப் பார்க்க வேண்டும். அவர் முகத்தில் ஏற்படும் ஆனந்த ஆச்சரியத்தை ரசித்துப் பார்க்க வேண்டும். தங்கை வேதாவுக்கு, அவள் இதுவரை போட்டறியாமல் ஏங்கும் நைட்டியை வாங்கிப் போகவேண்டும்.

தம்பிக்கு ஒரு நல்ல பேனா. அடிக்கடி பேனாவை தொலைக்கிறவன். இதைத் தொலைக்கிறது வாங்கிக் கொடுத்த அக்காவைத் தொலைக்கிறது மாதிரின்னு சொல்லணும். அய்யய்யோ. அபசகுணமாய் பேசப்படாது. அவனுக்குத் தெரியாதா என்ன? கணவனோடு, புதுக்குடித்தன வீட்டுக்கு போனபோது கட்டிப்பிடிச்சு அழுதவனாச்சே.

இவர் மட்டும் என்னவாம்? ‘டி’ போட்டு பேசாதவர். சொல்லுக்கு சொல் அம்மாதான். இந்த வயகலேயே அவ்வளவு நிதானம். அவரது ஆறடி உயரத்தில், படகுபோல் படர்ந்த மார்பில் சாய்வதே ஒரு தனிச் சுகம். அந்த உருளைத் தேக்கு மார்பில், செடியாய் படர்வது, ககத்துள்ளே ஒரு சுகம். நிஜமாவே நான் கொடுத்து வைத்தவள். பிசிராந்தையாரின் நவீன பெண் வடிவம்.

மீனா, தனது இலக்கிய நயத்தில், தன்னைத்தானே கண்டுபிடித்தபடி நடந்தாள். தானாய் சிரித்தபடி நடந்தாள். எதிரே பேருந்துகளும், ஆட்டோக்களும் மறைந்து, அப்பா, அவர்’, அலுவலகம் என்று ஒவ்வொரு வாகனமும், ஒவ்வொருவரின் உருவமாய் தோன்றின. இதனால் சாவுக்கிராக்கி. சொல்லிக்கினு வந்துட்டியா போன்ற வசவுகளை காதில் வாங்காமலே வீட்டுப் பக்கம் வந்து விட்டாள். என்ன அதிசயம் ஏழாவதா. எட்டாவதா..

அந்த வீட்டு வளாகத்தில் நுழைந்த மீனா, இரண்டாவது பத்தியில், உள்ள தன் வீட்டு வாசலில், அவர் நிற்பதைப் பார்த்தாள். ஒடிப்போய், அவர் கையைப்பிடித்துக் கொண்டாள். அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, குதிகாலில் நின்றபடியே, அவன் மோவாயில் வாய் பதித்தாள். அவனை உள்ளே தள்ளிக் கொண்டு போய் கட்டிலில் தள்ளினாள். ‘என் கண்ணை நம்பலாமா?’ என்று சொன்னபோது, அவன் ஆமாம் என்பதுபோல், அவளை இழுத்து மார்பில் போட்டுக் கொண்டு விளக்கமளித்தான்.

“இன்னிக்கு பே டேயா. ஈவினிங் காலேஜ் ஏழு மணிக்குத்தான் துவங்கும். அப்புறம் சம்பளம் வாங்கிட்டியா?”

அவள், மார்பைத் தட்டிக் காட்டியபோது, அவன், அந்த மார்பகத்திற்குள் கைவிட்டு, ஒரு கவரை எடுத்தான். அதன் நுனியைக் கிழித்து, காகிதங்களை எண்ணினான். பிறகு, அவளை மென்மையாய் அப்புறப்படுத்திவிட்டு, பீரோமேல் உள்ள கால்குலேட்டரை குடைந்தான். குழைவாகத்தான் கேட்டான்.

“என்ன மீனு: கணக்குப்படி உனக்கு மூவாயிரத்து இருபது ரூபாய் வரணும். ஆனால், அறுநூறு ரூபாய் குறையுது”

“அதுவா. எனக்கு நல்ல வேலையாய் கிடைச்சதுக்கு. ஆபீஸ் சினியர்களுக்கு இன்னிக்கு ஸ்வீட், காரம் வகையில நூறு ரூபாய் செலவு எனக்கு நல்ல மாப்பிள்ளையா கிடைச்சதுக்கு நாளைக்கு அவங்களுக்கு லஞ்ச், அது இநூறு ரூபாய். ஆக மொத்தம் அறநூறு ரூபாய்.

“பேசறத தெரிஞ்சுதான் பேசறியா?”

“எப்பவுமா இப்படி செலவழிக்கப் போறேன்? இந்த மாதம் மட்டும்தானே. இன்னைக்கு காலேஜுக்கு முழுக்கு போடுங்க பிச்சர் இல்லாட்டா பீச்கக்குப் போயிட்டு வருவோம்.”

அவர் அவளருகே வந்தான். படுக்கையில் ஒருக்களித்துக் கிடந்தவளை தலையைத் தூக்கி, இருக்க வைத்தான். கண் பக்கம் விரலாட்டிப் பேசினான்:

“அவங்க மிளகாய் அரைக்கிறதுக்கு, நீயே, உன் தலையை கொடுத்திருக்கியே! என் கஷ்டம் தெரிந்தால் இப்படி செய்வியா? பேசாமல் லஞ்ச்சை கேன்சல் செய். தின்னிப் பயல்கள்.”

“எப்படிங்க கேன்சல் செய்ய முடியும் எனக்குன்னு ஒரு முகம் வேண்டாமா?”

“மொதல்ல தாலி போட்டவன் முகத்தைப் பார்! உன் கல்யாணத்துக்கு வாங்குன கடன் இருபதாயிரம் இருக்குது. உனக்கு தாலி செய்ய வாங்கின கடன் பத்தாயிரம் ரூபாய். காலேஜ்ல எம்.பி.ஏ., சீட் வாங்க கொடுத்த லஞ்சத் தொகை பதினையாயிரம். இவ்வளவு கடனையும் அடைக்கனுமே. நீ இப்படி தான்தோன்றித்தனமா செலவழிச்சால் எப்படி?”

“என்னங்கட பெரிய பெரிய வார்த்தையா பேகறீங்க? ஆபீஸ் மூலம் டிவி செட், ரேடியோ செட் வாங்கலாமுன்னு நினைச்சேன். பேங்க்ல, கன்சூமர் லோன் இருபதாயிரம் தருவாங்களாம். நீங்க என்னடான்னா என் எதிர்பார்ப்புக்கு எதிரா பேசுறீங்களே?”

கட்டியவன், கட்டிலில் மீண்டும் உட்கார்ந்து, கட்டியவளைத் தழுவிக் கொண்டான். அவளை மார்போடு கவிழ்த்து, அவள் உச்சந்தலையில் முகம்போட்டு, அவள் பிடரியை வருடிக் கொடுத்தபடியே பாராட்டினான்.

“நிஜமாவே நீ என்னை விட புத்திசாலி. வேலையில் சேர்ந்த உடனேயே இருபதாயிரம் ரூபாய் கடன் வாங்கணுமுன்னு தோணி இருக்குது பாரு, பேங்க்ல வாங்குற கடனுக்கு டிவி, டு இன் ஒன்’ வாங்குறதாய் ரசீது கொடுக்கிறது. பெரிய விஷயமில்ல. எனக்குத் தெரிஞ்ச கம்பெனி இருக்குது. இந்து சதவிகிதம் கமிஷன் கொடுத்துட்டால், சூப்பர் கம்ப்யூட்டர வாங்கினதாக்கூட ரசீது கொடுப்பாங்க. பேங்க்கு ரசீதை காட்டினா போதும். டிவி வாங்க வேண்டாம். இதுல கிடைக்கிற இருபதாயிரம் ரூபாய்ல உன் தாலி கடனையும், கல்யாண செலவுல பாதிக் கடனையும் அடைச்சுடலாம்! அப்புறம் இருக்கவே இருக்குது. பே கமிஷன். உனக்கு சம்பளத்துலயே ஆயிரத்து இதுாறு கூடும் எதுக்குமே திட்டம் போடணும்: திட்டம் போட்டு செய்யற எந்த காரியமும் சக்சஸ்தான்.”

கட்டியவன், மாலைநேரக் கல்லுரரியின் நினைப்பில், கட்டப்பட்டவளை கட்டிலில் மல்லாக்கப் போட்டான். அவள் குப்புறப் புரள்வதைப் பார்க்காமலே எழுந்து பீரோவைத் திறந்தான். இன்னொரு சாவி எடுத்து, அதன் உள் அறையைத் திறந்து, மீனாவின் சம்பளக் கவரை வைத்துவிட்டுப் பூட்டினான்.

அவனுக்கு மீனாவிடம் சொல்லிக் கொள்ளக்கூட நேரமில்லை. கல்லூரிக்கு நேரம் தவறாமல் போகிறவன். அதற்காக இநூறு ரூபாய் அவார்ட் வாங்கப் போகிறவன். அதோடு, சுவையான பாடம். எம்.பி.ஏ., மாஸ்டர் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன். அதாவது வணிகத்தனத்தில் பட்ட மேற்படிப்பு.

– தினமலர் – தீபாவளி மலர் 1997

– ஈச்சம்பாய் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 1998, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *