இவனும் ஒரு போராளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 30, 2015
பார்வையிட்டோர்: 8,151 
 

“படக்”கென சத்தம் கேட்டு கீழே குனிந்து பார்த்த பாலு, சே என்று அறுந்து போன செருப்பை உதறினான்.இன்னும் ஒரு மாதம் தாக்கு பிடிக்கும் என நினைத்து இருந்த செருப்பு தன் ஆயுளை முடித்திருந்தது, இன்னொரு காலில் இருந்த செருப்பையும் கழட்டி புதரில் எறிந்தான்.இனி ஒரு கிலோ மீட்டர் நடந்து அன்னுர் பேருந்து நிலையத்தை அடைய வேண்டும். நடக்க ஆரம்பித்தான். வெறும் காலில் நடப்பது ஆரம்பத்தில் மிகுந்த வேதனை கொடுத்தாலும்  நடக்க நடக்க பழக்கமானது.இவன் பேருந்து நிலையம் அருகில் வர வழக்கமாக கோவை செல்லும் பஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்தது, இவனை கண்டவுடன் ஓட்டுனர் வண்டியை மெதுவாக்க, இவன் ஓடி வந்து ஏறிக்கொண்டான்.

கோவையில் உள்ள ஒரு  மருத்துமனையில் பாலுவுக்கு “வார்டு பாய்” வேலை, +2 முடித்தவுடன் மேற்கொண்டு படிப்பது என்பது கனவிலும் நினைத்து பார்க்கமுடியாத சூழ்நிலையில் அவன் குடும்பம் இருந்தது. வேலை தேடி கோவை வந்தவனை அந்த மருத்துமனை “வார்டு பாய்” ஆக ஏற்றுக்கொண்டது.

தினமும் காலை அன்னூரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தள்ளி இருந்த அவன் ஊரில் உள்ள குடிசையிலிருந்து 6.30 மணிக்கு கிளம்பி 7.30 மணிக்கு அன்னூர் பேருந்து நிலையம் வந்தடைவான். அங்கிருந்து கோவைக்கு ஒரு மணி நேரம், அதன் பின் ஒரு பதினைந்து நிமிட நடை சரியாக ஒன்பது மணிக்கு மருத்துவமனை வந்தடைந்துவிடுவான்.அதன் பின் மாலை ஆறு மணிக்கு வேலை முடிந்து இதே போல் அவன் ஊருக்கு போய் சேர இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிடும்.ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என்ற நினைப்புடனே நான்கு வருடங்களை இப்படியே ஓட்டிவிட்டான். மருத்துமனையிலும் வேலை சுலபமானதல்ல, மருத்துவர்,செவிலியர், இவர்களுக்கு தேவைப்படும் பணிகளை செய்து தரவேண்டும். அதாவது அங்கும் இங்கும் நடந்துகொண்டே இருக்கவேண்டும்.

பாலு இதற்கெல்லாம் அசரவில்லை அவன் எண்ணம், செயல், இவைகள் யாவும் ஒரு குறிக்கோளை நோக்கியே சென்றுகொண்டிருந்தன.

அரசாங்க மருத்துவர் ஒருவர் சில நேரங்களில் இந்த மருத்துவமனைக்கு வந்து ஒரு சில அவசர நோயாளிகளை மருத்துவ பரிசோதனை செய்வதுண்டு, இவன் தானாக அவரிடம் அறிமுகத்தை ஏற்படுத்திக்கொண்டு அவருக்கு வேண்டிய பணிவிடைகளை செய்தான்.அவ்ரையே சுற்றி சுற்றி வருவான்.மற்றவர்கள் அவனை எவ்வளவு கேலி செய்தாலும் பொருட்படுத்துவதில்லை.அந்த அரசாங்க மருத்துவருக்கு சென்னை மருத்துவ கல்லூரிக்கு “டீன்” ஆக பதவி உயர்வு வந்தது, அவரிடம் இவன் சொன்ன வார்த்தை “சார் என் வாழ்க்கை உங்கள் கையில்”

அவரும் இவன் தோளை தட்டிக்கொடுத்து சென்னைக்கு இரயில் ஏறினார்.

சென்னை சென்றவர் ஆறே மாதத்தில் அவனை சென்னைக்கு வரச்சொன்னார், அவனுக்கு “மனிதமூளை செயல் காட்டும் கருவி” (EEG Machine)பயிற்சியாளராக ஒரு வருட பயிற்சிக்கான அனுமதியும், தங்கும் விடுதியும் ஏற்பாடு செய்து செய்து கொடுப்பதாக தெரிவித்தார். அவன் தன் அம்மா வளர்த்துவந்த நான்கு ஆடுகளை விற்று ரூபாய் 2500/-ஐ எடுத்துக்கொண்டு   சென்னைக்கு இரயில் ஏறினான். பயிற்சி வகுப்பில் சேர்ந்து, தங்கும் வசதியும் கிடைத்தாலும் அவன் சும்மாயிருக்கவில்லை, தனக்கு படிப்பதற்கும் தங்குவதற்கும் வசதிகள் செய்து கொடுத்தவர்கள் வீட்டுக்கு சென்று ஒரு வேலைக்காரனாய் பணிவிடைகள் செய்ததால் அவர்கள் வீட்டாரின் நன்மதிப்பை பெற்று கல்லூரி விடுமுறை நாட்களில் அவர்கள் வீட்டிலேயே சாப்பிடுவதற்கு வசதிகளும் செய்து கொண்டான்.இதற்காக இவனுடன் இருந்தவர்களும், கூட படித்தவர்களும் இவனை கஞ்சன், உலோபி என்ற வசை பாடல்களை புறந்தள்ளினான்.

ஒரு வருடம் ஓடி அவன் “டெக்னீஷியன்” என்னும் பட்டயத்துடன் கோவைக்கு மீண்டும் இரயில் ஏறி வீடு வந்து சேர்ந்து அவன் அம்மாவின் ஆட்டை விற்று கொண்டு போன ரூபாய் 2500/ல் ரூபாய் 2000/ஐ திருப்பி கொண்டு வந்து கொடுத்துவிட்டான்.

ஒரு வருடத்துக்கு அவன் சொந்த செலவே ரூ.500 தான் என்றால் அவன் எப்படி சென்னையில் இருந்திருப்பான் என்று வாசகர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

அவனே சொல்லுவான் சென்னை முழுக்க நடந்தே சென்று பேருந்து செலவை மிச்சப்படுத்தியதாக பெருமைப்பட்டுக்கொண்டான்.

தன்னுடைய தகுதி உயர்ந்து விட்டதால் இனி பழைய மருத்துமனையில் இருக்க வேண்டாம் என முடிவு செய்து மற்றொரு மருத்துவமனையில் சேர்ந்து கொண்டான். அங்கு இவனைப்போல் இல்லாமல், மலைப்பகுதியில் வாழ்ந்து இந்த நகரத்தில் வாழ அதே மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்த என்னிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நட்பாகினான். இப்படியாக புதிதாக சேர்ந்த நான்கைந்து பேர் நண்பர்களாக ஆனோம். என்னதான் ஒன்றாக நட்பாக அலைந்தாலும், அவன் சிந்தனையும் நோக்கமும் வசதியைத்தேடியே இருந்தது.
நான் கூட ஒரு முறை ஏன் இப்படி பணத்தையே நினைத்து பறந்துகொண்டிருக்கிறாய்? என்று கேட்டதற்கு உனக்கு ஒன்றும் தெரியாது பேசாமல் இரு என்று என் வாயை அடக்கிவிட்டான்.வசதியை தேடும்போது அவன் மனம் இரும்பாகிவிடும் என்றாலும் அவன் சுமந்துகொண்டிருக்கும் சுமைகள் அவன் மனைவி,குழந்தை, அவன் அம்மா, அப்பா,சித்த சுவாதீனமில்லா அக்கா, திருமணமான அக்கா, மற்றும் வேலை வெட்டிக்கு போகாத அக்காவின் கணவன், அவர்கள் குழந்தை, இத்தனையும் இழுத்துக்கொண்டு நடப்பதால்தான் இப்படி இருக்கிறானோ என்று எனக்கு தோன்றும்.

இங்கு வந்து செல்லும் ஒரு சில மிகவும் வசதியுள்ள நோயாளிகளின் நட்பை பெற்றுக்கொண்டான். அவர்கள் வந்தவுடன் அவர்களுடனேயே இருப்பான். நாங்கள் செய்யும் கேலிகளை கண்டுகொள்ளமாட்டான்.அவர்களின் நம்பிக்கையை பெற மிகவும் பாடுபட்டான்.இப்படியாக எட்டு வருடங்கள் ஒடியது. திடீரென்று ஒரு நாள் வேலையிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தான்.நான் அவனை எச்சரித்தேன், யோசித்து செய் !

அவன் முகத்தை இறுக்கமாக்கிக்கொண்டு நான் போகிறேன் என்றான். மேற்கொண்டு நான் அவனிடம் வற்புறுத்தவில்லை.

அதன் பின்னர் எனக்கு கிடைத்த தகவல் படி அந்த பணக்கார நோயாளி நம்பிக்கையின் பேரில் அவனுக்கு இரண்டு லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார், இவன் ஒரு புதிய “மனித மூளை செயல் அளவை இயந்திரம்” (EEG Machine) ஒன்றை வாங்கி அதை இரயிலில்பார்சலில் வந்து இறங்கியும் விட்டன. அதனை ஒரு இடத்தில் வைக்க வேண்டும், அதற்கு முன்னர்தான் பணியிலிருந்து விலகுவதாக நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளான்.
அதன் பின்னர் அவன் போராட்டம் சொல்ல முடியாமல் இருந்தது, மாத வருமானம் நின்று போனது,இப்பொழுது இந்த இயந்திரத்தை ஒரு அறையில் இருத்த வேண்டும், அதேநேரத்தில் மருத்துவர்கள் அதிகம் இருக்கும் இடத்தில்தான் அது இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மருத்துவர்கள் நோயாளிகளை சோதனை செய்து பார்க்க இவனிடம் அனுப்பி வைக்க தோதுவான இடமாக வேண்டும், மருத்துவர்களின் நம்பிக்கையையும் பெற வேண்டும். இவன் அசரவில்லை காலை இவன் ஊரிலிருந்து பழையதாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு கிளம்பினானால் கோயமுத்தூரில் எல்லா இடங்களுக்கும் அலைந்து திரிந்து மறுபடியும் ஊர் போய் சேர நள்ளிரவு ஆகிவிடும்.மறு நாள் இதே போல் கிளம்பி நள்ளிரவு வந்து சேர்ந்து,..இப்படியாக ஒரு வாரம் அலைந்து கடைசியில் காந்திபுரத்திலேயே அவனுக்கு ஒரு அறை வாடகைக்கு கிடைத்தது. அதுவும் ஒரு மருத்துமனைக்கு சொந்தமான இடமாக இருந்ததால் அவ்னுக்கு ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது.

அந்த அறையில் நோயாளிக்கு ஒரு நாற்காலியும், தன்னுடைய இயந்திரம், இவைகள் இரண்டை வைத்து தன்னுடைய வேலையை தொடங்கினான்.பகல் முழுவதும்,நோயாளிகளை பார்ப்பதற்கும், இரவு மருத்துவர்களை சந்திப்பதும், அதன் பின்னர் இவன் ஊர் போய் சேர ந்ள்ளிரவே ஆகிவிடும், அந்நேரத்துக்கு நடந்து போய் சேர்ந்து வீட்டில் மிச்சம் இருப்பதை உண்டு படுப்பான். இப்படியே ஒரு மாதங்களை ஓட்டினான்.
காலம் மெல்ல புரண்டு இவனுக்கு மறுபக்கத்தை காட்ட ஆரம்பித்தது நோயாளிகள் வரவு அதிகமானது, முகத்தில் தெளிவு வர ஆரம்பித்தது.அவன் குடும்பமும் நல்ல சாப்பாட்டை ருசிக்க ஆரம்பித்தனர்.ஆறே மாதத்தில் அன்னூர் அருகே ஒரு மனை வாங்கி போட்டான்.இரண்டாவது வருடம் இவனை ஏதேச்சையாக காந்திபுரத்தில் பார்த்தபொழுது தோற்றங்கள் மாறி இருந்தன. நாளொன்றுக்கு பல ஆயிரம் பார்ப்பதாக கூறினான்.அதன் பின் எங்களது சந்திப்பு மறைந்துவிட்டது.    நான்கைந்து வருடங்கள் ஓடியிருக்கும்.தீடீரென்று ஒரு நான் என் எதிரில் நின்று வீடு கிரகப்பிரவேசம் செய்ய உள்ள்தாகவும் வரவேற்பு பத்திரிக்கை கொடுத்து சென்றான்.அவன் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு பேருந்து ஏறி அன்னூர் சென்று அங்கிருந்து நகரப்பேருந்தில் அங்கு சென்று இறங்கினேன். அவன் வீட்டு முன் ஏகப்பட்ட கார்கள், அதுவும் வித விதமான கார்கள், வீடு என்று சொல்ல கூடாது, மாளிகை என்று சொன்னால் சரியாக் இருக்கும், அந்தளவு பிரமாண்டமாய் இருந்த்து. வாசலிலே வரவேற்றான்.ஒவ்வொரு அறையின் பணச்செழுமையை காட்டினான்.சுமார் ஐம்பது லட்சத்தை தொட்டுவிட்டது என்று பெருமையுடன் சொன்னான்.வந்தத்ற்கு நன்றி சொன்னான்.அவனிடம் விடைபெற்று அவன் குடும்பத்தாரிடமும் விடை பெற சென்றேன். அவர்கள் அனைவரும் நல்ல விலை உயர்ந்த ஆடை அணிந்து மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.மன நிறைவுடன் விடைபெற்றேன்.இன்னொன்றையும் கவனித்தேன்,
நடந்து வந்து விழாவுக்கு கலந்துகொண்டது நான் மட்டுமே. மனம் உண்மையிலேயே
சந்தோசப்பட்டது.

பலர் அவனை கஞ்சன், உலோபி, மனிதாபமற்றவன், காசாசை பிடித்தவன் என்று சொல்லி உள்ளார்கள், ஆனால் ஒருவர் கூட அவனை துரோகி,கொள்ளைக்காரன், வட்டிக்கு கொடுப்பவன், பிறரை ஏமாற்றியவன் என்று சொன்னதே இல்லை.அவனை பொருத்தவரை தன் குடும்பம் வசதியானதாக ஆகவேண்டும், அதற்கு தன்னை வருத்திக்கொள்ள தயாராக இருந்தான்,உழைக்க தயாராக இருந்தான்.இப்படி தன்னை வருத்தி,பிறரை ஏமாற்றாமல் தன் குடும்பத்துக்காக உழைப்பவர்களை போராளிகள் என்று ஏற்றுக்கொள்வோம் என்றால் இவனும் ஒரு போராளிதான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *