கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 20, 2023
பார்வையிட்டோர்: 2,600 
 

”சார்.நீங்க கோயமுத்தூர்ல எறங்கணும்னு சொன்னீங்க இல்ல. ??உங்க பாட்டுக்கு உக்காந்து மொபைல நோண்டிக்கிட்டிருக்கீங்களே.அஞ்சு நிமிசமாச்சு டேசன் வந்து.கெளம்பப் போறான் சார். சீக்கிரம்.”

சட்டென்று நிமிர்ந்தான் குணசேகரன்.

பாவம் டீ விற்கும் பையன் அக்கறை அவனை நெகிழ வைத்தது.அவசர அவசரமாக அடியில் குனிந்து பெட்டியை வாரி எடுத்துக் கொண்டு., “தாங்ஸ்ப்பா.” என்று கூறிவிட்டு ரயிலை விட்டு இறங்கினான்.சட்டென்று கிளம்பியது வண்டி.

கையில் பெட்டியுடன் வேகமாக நடக்கத் தொடங்கினான்.பெட்டி கொஞ்சம் கனத்தமாதிரி தோன்றியது. ஆட்டோவில் போய்விடவேண்டியதுதான்.

வழியில் கையேந்தி பவனில் நிறுத்தி சூடாக இரண்டு பரோட்டாவும் , குருமாவும் வாங்கிக் கொண்டான்.நின்று சாப்பிட நேரமில்லை.வடவள்ளி போகவேண்டும்.பத்து பேர் ஏறி மிதித்தாற்போல உடலெல்லாம் ஒரே அசதி.

அறையில் போய் சாப்பிட்டதும் படுக்க வேண்டியதுதான்.

அதையேதான் செய்தான்.

காலையில் எழுந்திருக்கும்போது மணி பத்து.

பெட்டியைத் தூக்கி கட்டில் மேல் வைத்தான். பேஸ்ட், பிரஷ், லுங்கி சமாச்சாரங்கள் வேண்டியிருந்தது.

பெட்டியை பூட்டுவதேயில்லை.என்ன இருக்கிறது? திருடனே வெறுத்துப்போய் தூக்கி எறிந்து விடுவான்.

பெட்டியைத் திறந்தவன் அதிர்ந்தான்!

உள்ளே! ஐய்யோ.இது அவன் பெட்டியில்லை. அவசரத்தில் அவனுடைய பெட்டி மாதிரியே இருந்ததால்? ச்ச்சே. பாவம் ! யார் பெட்டியோ?

எதிர் சீட்டு சரவணனுடையதாகத்தான் இருக்க வேண்டும்.அவன் தானே இரண்டு மூன்று தடவை குனிந்து பெட்டியை மூடுவதும் திறப்பதுமாய்!

தான் பெட்டியை எதிர் சீட்டுக்கு அடியில் தானே வைத்தோம்?

”முட்டாள்! முட்டாள்!

தன்னையே திட்டிக் கொண்டான்.

பெட்டியை மேய்ந்தான்.


பெட்டி பிதுங்கி வழிந்தது. இரண்டு வயது குழந்தைக்கான வித விதமான உடைகள். இரண்டு மூன்று விலையுயர்ந்த புடவைகள். வெளிநாட்டு வாசனை திரவியங்கள்.

இன்னொருவன் பெட்டிக்குள் கைவிட்டுக் குடைய அவனது நாகரீகம் தடுத்தது.

பெட்டியை மூடினான்.இது நிச்சயம் அந்த கோழிக்கோடுகாரனுடையதுதான். பெயர் சரவணன் என்று சொன்ன நினைவு.

ரீவைண்ட் பண்ணிப் பார்த்தான்.


எதிரெதிர் பர்த்.

”ஹல்லோ. நான் குணசேகரன்.கோயமுத்தூர்ல ஒரு ஐ.டி கம்பெனியில் வேல.

”ஐயம் சரவணன்.துபாயில இருக்கேன். நானும் ஐ.டி.கம்பெனியிலதான்.இப்போ கோழிக்கோட்ல ஒரு ப்ராஜெக்ட். அடுத்த மாசம் பேக் ஹோம்.”

அதற்கு மேல் பேச விரும்பாதவன்போல் மொபைலில் யாருடனோ பேச ஆரம்பித்தான்.

குணசேகரனும் அநாவசியமாய் ரயில் பயணத்தில் பேசும் டைப் இல்லை. ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தான்.

இடையில் இரண்டு மூன்று முறை ,”எக்ஸ்யூஸ்மீ.” என்று அவன் காலடியில் வைத்திருந்த பெட்டியைத் திறந்து மூடுவதாயிருந்தான்.

குணசேகரன் பேசாமல் படுப்பதே நல்லது என்று படுத்துவிட்டான்.

சரவணன் வேகுநேரம் யாரிடமோ மொபைலில் பேசிக்கொண்டிருந்தான்.

அடிக்கடி ‘ சாரி ‘ சாரி ‘ என்றான்.

‘மோளே’ என்று விளித்தது வினோதமாயிருந்தது. இவன் நிச்சயமாக மலையாளி இல்லை. ‘மோள் ‘ எப்படி வந்தாள்.

நடுவில் ‘தலசேரி‘ என்ற பேர் வேறு அடிப்பட்டது. ஒருவேளை மலையாளப் பெண்ணை திருமணம் செய்து கொண்டிருப்பானோ?

கொஞ்சம் நேரம் அசதியில் தூங்கி விட்டான்.

அதிசயமாக அன்று அந்த கம்பார்ட்மென்ட்டே அமைதி காத்தது.

இப்போதெல்லாம் ரயிலில் கூட யாருக்கும் யாருடனும் பேச விருப்பமிருப்பதாய் தோன்றவில்லை.

முன்பெல்லாம் இறங்கும்போது அடுத்த சீட்டுக்காரர் ஜாதகமே நம் கையில்.


பெட்டியைப் பார்த்துக் கொண்டு எத்தனை நேரம் யோசிப்பது? முதலில் இது சரவணனின் பெட்டிதானா என்று நிச்சயம் செய்து கொள்ள வேண்டும். அப்புறம் விலாசம்?

ஆமாம். அவனுடைய பெட்டி? அதை யாரும் கவனிக்காமல் விட்டிருந்தால்? ஒருவேளை சரவணன் எடுத்து திறந்து பார்த்திருந்தால்? தன்னை கேவலமாக எடைபோட்டிருப்பானோ?

பெட்டியில் அவனுடைய விசிட்டிங் கார்ட் இருக்கிறதே.வீட்டு விலாசமும் அதில் இருக்கிறது.வீடு தேடி வருவானா? அவமானத்தால் முகம் சிவந்தது.

மறுபடியும் பெட்டியைத் திறந்தவன் முகம் ஜாக்பாட் அடித்தது போல மலர்ந்தது.
பெட்டியின் உள்பக்கத்தில் தெளிவாக விலாசம் எழுதி ஒட்டியிருந்தது.

  1. பிரணவம் நகர். தலச்சேரி.

அவன் கோழிக்கோட்டில் அல்லவா இறங்குவதாகச் சொன்னான்.

கொஞ்சம் மூளையைக் கசக்கியதில் சில விவரங்கள் வந்து விழுந்தது.

‘ மோளே ‘ என்று ‘ விளித்ததும் ‘ ‘தலச்சேரி‘ யும் காதில் மீண்டும் ஒலித்தது.

குணசேகரனுக்கு நியாயமான சந்தேகம் எழுந்தது.

பெட்டியை ரயில்வே அதிகாரிகளிடம் ஒப்படைப்பதா அல்லது தலைச்சேரி விலாசம் கண்டுபிடித்து உரியவரிடம் கொடுத்து விடுவதா?

முதல் வழி உப்பு சப்பில்லாமல் முடிந்து விடும்.

இரண்டாவது வழி கொஞ்சம் சுவாரசியமாக தன் தோன்றியது.

மனிதனுக்கு உள்ள பலவீனமே மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைத்துப் பார்ப்பதுதானே.

மலையாள மனைவியைப் பார்க்க ஒரு ஆவல்! ஒரு சந்தர்ப்பம்.நழுவ விட மனம் இடம் தரவில்லை.

கிளம்பி விட்டான் தலைச்சேரிக்கு.


தலச்சேரி.நினைவே இனித்தது. மீராவின் நினைவு.

குணசேகரன் ஒரு அக்மார்க் தமிழன். தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் சிறிதும் துரோகம் நினைக்காதவன்.சென்னை , திருச்சி , மதுரை, கோயமுத்தூர் என்று இதுவரை அவன் காலம் ஓடிவிட்டது. அதனால் தமிழைத் தவிர ஒரு மொழியும் அவனுக்கு எழுதவோ, படிக்கவோ அல்லது பேசவோ பரிச்சயமில்லை.

ஆனால் ஒரிரு வார்த்தைகள் சில மலையாளப் படங்கள் பார்த்ததால் வந்து ஒட்டிக்கொண்டது.

இதில் தலைச்சேரிக்கு என்ன தனி மரியாதை?

மீராவுக்கு பிடித்ததெல்லாம் அவனுக்கும் பிடிக்கும்.மீரா பார்க்கவேண்டிய இடங்கள் என்று குறித்து வைத்திருந்த இடங்களில் முதலிடம் தலச்சேரி. அதற்குக் கூட கொடுப்பினை இல்லாமல் போய்விட்டதே!!


மலபார் கடற்கரையோரம்.அழகு கொஞ்சும் ஊர். குணசேகரனுக்கு மலையாளம் , தெலுங்கு , கன்னடம் எல்லாம் ஒன்றுதான். ‘எவிடே ? எவிடே?’ என்று கேட்டுக்கொண்டே சரவணன் வீட்டைக் கண்டுபிடித்து விட்டான்.

கதவைத் திறந்தது ஒரு முண்டுடுத்த மலையாள மயில். இல்லை குயில்!

”எந்து வேணும்?”

பின்னால் அவள் தலைப்பைப் பிடித்துக் கொண்டு ‘மோள் ‘

”நான் கோயமுத்தூர்.பேரு குணசேகரன். மலையாளம் தெரியாது. தமிழ்”

”ஓ! அது சரி! எனிக்கு நல்லா தமிழ் அறியும்.உள்ள வாங்க. உக்காருங்க”

குணசேகரனுக்கு மூச்சு வந்தது.

எப்படி எங்கே ஆரம்பிப்பது?

முதலில் பெட்டியைக் காண்பிப்பது உசிதம் என்று தோன்றியது.

”இந்த பெட்டி! உங்களுக்கு அடையாளம் கண்டு பிடிக்க முடியுதா?”

பெட்டியைப் பார்த்ததுமே புரிந்து கொண்டாள்.கெட்டிக்காரி.

”இது எண்டே சேட்டன்டே பெட்டி போலுண்டு.நோக்கட்டே.”

திறந்து பார்த்தவள் முகத்தில் கூடுதல் சிவப்பு.

”அதே. இது எப்படி உங்க கிட்ட?”

முகத்தில் லேசான கலவர ரேகைகள்.

பாண்ட் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுத்து முகத்தில் புறப்பட்ட வியர்வைத் துளிகளைத் துடைத்துக் கொண்டு தைரியமாக சொல்லி முடிப்பதற்குள் கைக்குட்டை முழுவதுமாக நனைந்து விட்டது.


”வளர நன்னி! நீங்க இதுக்கு முன்னால தலச்சேரி வந்திருக்கா?”

”இல்ல. கேரளாவே பார்த்ததில்லை.”

மீராவுக்கு பிடிக்கும் என்று சொல்லலாமா? வேண்டாம்.என் கதை! என்னோடு இருக்கட்டும்.

”மோள்?”

”ஓ! மலையாளம் வருமா? இது குமாரி. மூணு வயசு. சரவணனுக்கு ரொம்ப இஷ்டம்.”

”எனக்கு ஒரு உதவி பண்ணனும்.என் பெட்டி அவர் கிட்டதான் இருக்கணும்.அத மட்டும் கேட்டு சொன்னா போதும்! நானே கூட வந்து வாங்கிட்டு போவேன்.இதில் என் கோயமுத்தூர் விலாசம் , தொலைபேசி எண் எல்லாம் இருக்கு. ! நான் கிளம்பறேன்.”

”அதெல்லாம் முடியாது. இங்கே ஊணு கழிச்சிட்டே போகணம். இந்த ஊரு மலபார் பிரியாணி ரொம்ப ஃபேமஸ்.குட்டியோட பேசிட்டு இருங்க.அரை மணிக்கூறில ரெடிபண்ணிடுவேன்”

மலபார் பிரியாணி.மீரா .நீ ஆசைப்பட்டாயே!

மீண்டும் கைக்குட்டையை எடுத்தான்.

ஏனோ அவளின் வேண்டுகோளைத் தட்ட முடியவில்லை.

பிரியாணி சாப்பிட்டு முடிப்பதற்குள் ,

“அவள் பெயர் சந்த்ரிகா.பி.காம்! சரவணனுடைய கோழிக்கோட்டு ஆஃபீசில் அக்கவுன்டிங் வேலை. நான்கு வருட பழக்கம் காதலாகிக் கனிந்து . தனிக்குடித்தனம்.மோள் குமாரி. இப்போது வீட்டில்தான். வருடத்தில் ஐந்தாறு தடவை துபாயிலிருந்து கண்டிப்பாக விசிட்.குறையொன்றும் இல்லை.”

சந்திரிகா கொடுத்து வைத்தவள்.சரவணனும்தான்.

”சரி. நான் இன்னைக்கு ஊருக்கு கிளம்பணும்.உங்க கல்யாண வாழ்க்கை மேலும் மேலும் சிறப்பாக இருக்கணும்னு வாழ்த்துகிறேன்.”

”கல்யாணமா? அப்படி ஒண்ணு எங்க வாழ்க்கையில நடக்கவே இல்ல.”

குணசேகரன் அதிர்ந்து போய் நின்று விட்டான்.இத்தனை நேரம் அவள் பேசினதெல்லாம் அவனுக்கு அவள் உதட்டிலிருந்து வந்து விழுந்த அர்த்தமிலா, ஆழமில்லா வார்த்தைகளாகவே மாறியது.

உள்ளத்தில் இருந்து வெளி வந்த வார்த்தைகள் வேறு கதை சொன்னது. கண்களில் மாறி மாறி கோபம் , வருத்தம் , இயலாமை , ஆத்திரம்.!

சொல்லி முடித்தவள் பாரம் குறைந்தது போல பெருமூச்சு விட்டாள்.

”நான் சொன்னதெல்லாம் உங்களோடயே இருக்கட்டும்.”

அவள் இறக்கி வைத்த பாரம் அவன் நெஞ்சில் ஏறிக்கொண்டது.


தலைச்சேரி போகும்போது இருந்த உற்சாகம் திரும்பி வரும்போது சுத்தமாய் வடிந்திருந்தது. சரவணன் மேல் கோபம் கோபமாய் வந்தது.

சந்திரிகா. பாவம்! முன்பின் தெரியாத அவள் மேல் எதற்காக இத்தனை கரிசனம்?

வீட்டிற்கு போகும் வழியில் நாலு முழம் மல்லிகைப்பூ வாங்கிக் கொண்டான்.முதன்முறையா தன்மீது மதிப்பு கூடியது.

கதவைத் திறந்தவன் நேராக சுவரில் பெரிதாக மாட்டப்பட்டிருந்த அந்த படத்தின் முன்னால் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினான்.

”மீரா.மீரா.”

வாடிய மல்லிகைச் சரத்தை கழட்டி புதிதாக அன்றலரந்த மல்லிகை மாலையை மாட்டினவன். அங்கேயே நின்று விசும்பினான்.

”மீரா.பாத்தியா? எப்படி முடியுது மீரா? கட்டின மனைவி உயிரோட இருக்கும்போதே கல்யாணம் ஆகலன்னு சொல்லி இன்னொரு பொண்ண ஏமாத்தி , அவளோட குடித்தனம் நடத்தி , ஒரு குழந்தையும் பெத்துக்க முடியுது?

மீரா. திருமணமாகி இரண்டே வருஷத்துல நீ என்ன விட்டுப் போனப்புறம் வேற பொண்ண மனசால கூட நெனக்க முடியலையே.

எல்லாம் தெரிஞ்சப்புறமும் எப்படி அந்தப் பெண்ணால அவனோட சேந்து வாழ முடியுது?

மீரா. என்ன மன்னிச்சிடு.நான் உன்ன மறக்க முடியாம குடி , சிகரெட்டுக்கு அடிமையானது என்னோட பலவீனம் தான்.ஆனா சத்தியமா இன்னொரு பெண்ணோட வாழ்க்கையோட விளையாட , அதுவும் பொய் சொல்லி ஏமாத்த ஒருநாளும் எம்மனசு இடம் தராது.

புறப்படும்போது அந்த பெண்ணோட கண்ணுல தெரிஞ்ச ஏமாத்தம். கோபம். வருத்தம். ஆத்திரம்.எல்லாமே அவ வாழ்ந்திட்டிருக்கிற அர்த்தமில்லாத போலி வாழ்க்கைய எனக்கு தெள்ளத் தெளிவா புரிய வச்சுது!

சரவணன் பண்ணினது நம்பிக்கை துரோகம்.கட்டின பெண்டாட்டிக்கு செய்த மறக்கமுடியாத துரோகம்.

என்ன மாதிரி இன்னொரு திருமணம் பண்ணிக்காம இருக்கிறது தியாகமோ பெருமையோ. அந்த அர்த்தத்துல இத சொல்லல.

ஆனா ஒரு மனைவி , குடும்பம் இருக்கிறத மறைச்சு இன்னொரு பெண்ண ஏமாத்தி , அவளோட வாழறத என்னால ஏத்துக்க முடியலையே மீரா!


குணசேகரன் தன் சுயத்துக்கு திரும்புவதற்கு இரண்டு மூன்று நாட்கள் பிடித்தன.

தன் பெட்டியை சுத்தமாக மறந்து போயிருந்தான்.அது கிடைக்காவிட்டாலும் அவன் கவலைப்பட போவதில்லை. அவ்வளவு தூரத்துக்கு அவன் மனம் மரத்துப் போயிருந்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமை!

சேர்ந்தார்போல முழித்திருந்தவன் தன்னையறியாமல் அசந்து தூங்கி விட்டான்.

காலிங் பெல் ‘ க்குக்கூகூ ‘ என்றது.

முழித்தவன் முகத்தில் சுரீரென்று வெயில்.மணி பத்தைத் தாண்டியிருந்தது.

அவசர அவசரமாக எழுந்து முகம் கழுவி வாசல் கதவைத் திறந்தவனுக்கு அதிர்ச்சி.

கையில் பெட்டியுடன் சரவணன். அவன் பெட்டி.

”நீங்க. சரவணன்? உள்ள வாங்க!”

”எனக்கு உள்ள வர நேரமில்ல. அவசர வேலயா உடனே திரும்பணும்.உங்க பெட்டியைத் திரும்பக் கொடுக்கற கடமை இருக்கே. பாவம்.நீங்க வீடு தேடி வந்து குடுக்கும்போது, நானும்”

குணசேகரனுக்கு ஏனோ அவனை உள்ளே கூப்பிட பிடிக்கவேயில்லை.

பிரமித்துப் போய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

”பிடியுங்க குணா.உங்க கிட்ட எம் மனசுல பட்டது சொல்லியே தீரணும்.சாரி.உங்க பெட்டியைத் திறந்து பார்க்க வேண்டிய கட்டாயம்.உள்ள இருந்ததப் பாத்தப்புறம் உங்க மேல இருந்த மொத்த மதிப்பும் அதள பாதாளத்துக்கு போயிருச்சு.உங்கள் மாதிரி பெரிய கம்பெனியில வேலை பாக்குற ஒருத்தர் பெட்டியில சத்தியமா இத நான் எதிர்பார்க்கல. சாரி டு சே திஸ்.நான் வரேன்.”

”மிஸ்டர் சரவணன்.தாங்யூ ஸோ மச். உள்ள வராமலேயே போறீங்களே.”

”சரி. கொஞ்சம் தண்ணி மட்டும் குடுங்க!”

உள்ளே நுழைந்தவுடன் ஹாலில் மாட்டப்பட்டிருந்த படத்தைப் பார்த்து அங்கேயே நின்றுவிட்டான்.

”குணா.இது?”

”என் மனைவி மீரா. போய் ஏழு வருஷமாச்சு. என் பெட்டியிலகூட அவ படத்தை பாத்திருப்பீங்களே.”

சரவணன் முகத்தில் ஈயாடவில்லை.

”நான் வரேன் குணசேகரன்.”

”தண்ணி?”

”இல்ல. வேண்டாம்.”

குணசேகரன் அவனைத் தடுக்கவில்லை.

“என் பெட்டியைப் பாத்து என்னத் தப்பா எடைபோட்டிருப்ப. மீராவுக்கு நான் எழுதின காதல் கடிதங்களையும் படிச்சிருப்ப.அதில் இருந்த மத்த விஷயங்களும் என்ன ஒரு குடிகாரனா , சிகரெட்டுக்கு அடிமையானவனா அடையாளம் காட்டியிருக்கும். உனக்கு மீராவோட படம் கூட வேண்டாத கற்பனைகள உண்டுபண்ணி இருக்கும்.

ஆனா, சரவணன்! எனக்கு உன்ன மாதிரி நடிக்க வரலியே.போலி வாழ்க்க வாழத்தெரியாம , மீராவையே இன்னுமும் நெஞ்சில சுமந்து கிட்டு !

இரண்டு பேர்ல யார் கெட்டிக்காரன்? கண்டிப்பா இந்த சமூகத்துக்கு முன்னால நீதான் .

அவனப் பொறுத்தவரைக்கும் நான் ஒரு முட்டாளா இருக்கலாம். இரண்டு குடும்பத்தையும் சந்தோஷமா வச்சிருக்கறதா நெனச்சு தன்னைத்தானே ஏமாத்திட்டு இருக்கானே.எத்தன நாளைக்கு இந்த நாடகம்? இதுக்கும் ஒரு க்ளைமேக்ஸ் வராம போகவா போகுது?? அப்போ தெரியும்! யார் கெட்டிக்காரன்னு!

மீரா. நான் உன்னோட கணவனா, முட்டாள் குணசேகரனாவே இருந்துட்டு போறேன்!

அது சரி. அவன் பெட்டிக்குள் அப்படி என்னதான் இருந்தது? உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேனே!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *