இழப்புக்கள் எதிர்பார்ப்புக்கள்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 28, 2020
பார்வையிட்டோர்: 14,486 
 

ஸ்கூல் விடுகிறநேரம் இந்தமழைக்கு எப்படித்தான் இவ்வளவு கணக்காய்த் தெரிகிறதோ தினம் நாலரைக்கு பெல் அடிக்க வேண்டியதுதான்…என்னவோ தனக்காகவே அது அடிக்கப்படுகிற மாதிரியல்லவா நினைத்துக்கொள்கிறது!

எப்படியோ கடந்த மூன்று நாட்களாக உமா ஒருமாதிரி தப்பி விடுகிறாள்.ஒருநாள் கிருஷ்ண ஜெயந்தியைக்காரணம் காட்டி மூன்று மணிக்கெல்லாம் பர்மிஷன் போட்டாயிற்று; இரண்டு நாட்களாக வேறொரு ஸ்கூலில் டீச்சர்ஸ் மீட்டிங் ஒன்று இருந்ததை முன்னிட்டு இரண்டு மணிக்குப்போய் நாலு மணிக்குள் விடுபட்டு பஸ் ஸ்டேண்டுக்கு வந்து விட முடிந்தது.

இன்ரு வேறு வழியில்லை, மழையில் அகப்பட்டுக்கொண்டு நடந்துதானாக வேண்டும்.நனைவதைப்பற்றிக்கூட அவளுக்குக்கவலையில்லை. குடை இருக்கிறது.முழுக்கநனையாமல் முக்காடு அளவுக்காவது காப்பாற்றிக்கொள்ள முடியும்.ஒரு கையால் புடவையை இலேசாக உயர்த்திப் பற்றிக்கொண்டு,அதே கையால் திருத்துவதற்குக்கொண்டு போகிற நோட்டுப்புத்தகங்களும் டிபன் பாக்ஸும் கனம் தாங்காமல் பிதுங்கி அழுத்துகிற…அவளே பார்த்துப்பார்த்துப்பின்னிய அந்த ஒயர் கூடையையும் சுமந்து கொண்டு மற்றொரு கையில் குடையைப்பிடித்தவாறு மதுரை வீதிகளில் ஆறாய் ஓடும் முழங்காலளவு நீரில் தேர்ந்த ஒரு சர்க்கஸ் வித்தைக்காரியைப்போல பாலன்ஸ் செய்து நடப்பதை உமா ஒன்றும் அறியாதவளல்ல.அது கூட அவளுக்குப்பிரச்சினையில்லை.

ஆனால் ..அந்தச்செருப்புக்கள்…! மூன்றுமாத காலமாகத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்து ஒவ்வொரு காது அறுந்து போகும்போதும் இருபதுகாசும் நாலணாவும் கொடுத்துக் கொடுத்து ரிப்பேர்செய்து வைத்துக்கொண்டிருந்த அந்தப் பழைய செருப்புக்கள்’இனிமேல் உனக்காக உழைக்க எங்களிடம் திராணியில்லை’என்று ஒரேயடியாக உயிரைவிட்ட பிறகு இந்த மாதம் ரூ 11 95ஐ [கதை நடக்கும் காலம் ‘80கள்] அதற்காகவே திட்டம் போட்டு ஒதுக்கி வைத்து ஸ்கூலில் சம்பளம்போட்ட அதே நாளில் .எங்கே ஒரு நாளைத் தள்ளிப்போட்டால் கூடமனம் மாறிவிடப்போகிறதோ என்ற பயத்தில் உடனடியாக வாங்கிய அந்தச்செருப்புக்கள்1

பிரவுன் கலர் லைனிங் கொடுத்திருக்கிற அந்த வெள்ளை நிற சாண்டாக் செருக்கள் அவள் காலில் ஏறியபோது என்னமோ ஒரு பெரிய சிகரத்தையே எட்டிப் பிடிக்கிற சாதனையாக அல்லவா அது தோன்றியது. இனிமேல் செருப்புக்கிழிசலை மறைக்கப் புடவையைத் தழையத் தழையக்கட்டிக்கொண்டு அழுக்காகி விட்ட ஓரப்பகுதியை ஒரு மணிநேரம் உட்கார்ந்து கசக்கித் துவைத்துக்கொண்டிருக்க வேண்டாம்.வகுப்புக்குக் கிளம்புகிற நேரத்தில் செருப்பின் வார் அறுந்துபோய்விட, வெறுங்காலுடன் கிளாஸுக்குப்போகக் கூச்சப்பட்டுக்கொண்டு சக ஆசிரியைகளிடம் ஒரு மணிநேரச்செருப்பு இரவல் கேட்டுக்கொண்டு நிற்க வேண்டாம்.

உமா தன் கால்களை ஒரு முறை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டாள்.சனியன் பிடித்த மழை..! ஸ்கூலிலிருந்து கிளம்புகிறபோதே இவ்வளவு தூரம் வலுக்கும் என்று தெரிந்திருந்தால் அங்கேயே கழற்றிப்போட்டு விட்டு வெறுங்காலோடாவதுவந்திருக்கலாம். தயிர்க்காரிகளும்,காய்கறிக்கூடைக்காரிகளும் செருப்பு ஜோடியைக் கூடையில் செருகி வைத்து விட்டு வெறுங்காலோடு செல்வதை உமா நிறையப்பார்த்திருக்கிறாள்.அப்படிச்செய்வதற்கு அவள் கூடையில் இடமில்லை…அப்படியே இருந்தாலும் சாப்பிடுகிற டிஃபன் பாக்ஸோடும்,சரஸ்வதியாக நினைத்துக்கொண்டிருக்கிற புத்தக அடுக்குகளோடும் –என்னதான் கூடுதல் விலை கொடுத்து வாங்கியிருந்தாலும்- செருப்பைப்போய்ச் சேர்த்து வைக்க அவளுக்கு மனமில்லை.

மதுரையில் நடக்கப்போகிற மாநாட்டுக்காகத் தெரு ஓரங்களில் கொடி வைக்கத் தோண்டிப்போட்டிருந்த பள்ளங்களில் விழுந்து விடாமலிருக்க வீதி நடுவாக அவள் நடந்து போகிறாள்.வாகனங்கள் அவ்வப்போது அசுரத்தனமாக வாரியடிக்கும் செந்நீர் அவளை முழுவதுமாய் அபிஷேகம் செய்கிறது.இதோ..அதோ என்று டவுன் ஹால் ரோடை நெருங்கியாயிற்று. மழை மிக வலுக்கிறது.

புடவையில் ஒரு பாகத்தைச் சேலையைச் சுற்றி முட்டாக்காகப்போட்டபடி அலுமினியம்,பித்தளைத் தூக்குச்சட்டிகளை ஏந்திய அந்தச் சிற்றாள் பெண்கள் பஸ் ஸ்டாண்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக வருகிறார்கள்.

‘’ஏ ராக்கு! அட உன்னைத்தான் புள்ளே….என்ன இந்த ஓட்டம் ஓடறே..மழையிலே வழுக்கி விழுந்து மூஞ்சி மோரையெல்லாம் பேத்துக்கப்போறே!’’

‘’உனக்கென்னடி பொன்னி நீ பேசுவே….எங்காத்தா வூட்டிலே சீக்கோட முனகிக்கிட்டுக் கிடக்கும்.ரவைக்குச் சோறாக்கி வைக்கலைன்னா எங்கப்பன் வேற குடிச்சிட்டு வந்து அதை அடிச்சுப்போட்றுவான்.நானும் என்னோட தம்பிங்க ரெண்டு பேரும் வேலை பாத்து இன்னிக்குக் கெடச்சிருக்கிற கூலியிலேதான் அரிசியும் வெஞ்சனமும் வாங்கி அடுப்பு மூட்டி ஒலை வைக்கணும்’’

‘’சரி சரி…உன்னோட பெலாக்கணத்தை ஆரம்பிச்சிராதே..நீ மழையைத் தாங்கிக்குவே.இந்தப்பச்சைப்புள்ளைங்க எப்படி நடுங்கிக்கிட்டிருக்கு பாரு. மானம் என்னடான்னா பொத்துக்கிட்டு பேயாக் கொட்டுது. அந்தக்கடை வாசல்லே திண்ணை போட்டிருக்கு பாரு….அந்தால போயி சத்தே குந்தியிருந்திட்டுக் கொஞ்ச நேரம் சென்னு போவோம்’’

அந்தக்கடை வாசலில் மழைக்காக ஒதுங்கியிருக்கும் ராக்குவின் கண்கள் ஷோ கேஸில் அடுக்கியுள்ள வண்ணமயமான செருப்புக்களில் கலர்க்கனவுகளாக லயிக்கின்றன.ஒவ்வொரு ஜோடிச்செருப்புடனும் திரைப்படங்களிலே வரும் ஸ்லோ மோஷன் கதாநாயகியாக மானசீக நடை போடுகிறாள்.ஹைஹீல்ஸ் கற்பனை அவளை ஒருகணம் குப்புறச் சரித்து விடத் தன்னையும் மறந்து குலுங்கிச் சிரிக்கிறாள்.

‘’தா….என்ன புள்ளே சிரிப்பு…இது வீதியா இல்லே உங்க வீடா’’என்று உரிமையாகக்கடிந்து கொள்ளும் பொன்னியின் வார்த்தைகளுக்குக்கூட அவள் கனவுகளைக்கலைக்கும் வல்லமை இல்லாமல் போகிறது.லெதர் செருப்பின் அழுத்தமான சூடு,,ஹவாயின் பதிகிற மென்மை அத்தனையும் மனதளவில் அனுபவித்துத் தெளிந்தபின்னர் அவள் பார்வை குறிப்பிட்ட அந்த ஜோடியில் பதிகிறது.அதைத் தனக்காக அவள் தேர்ந்தெடுக்கிற அந்தக்கணத்தில்…

‘’என்னா ராக்கு மழை விட்டுப்போச்சு வேடிக்கை பாத்தது போதும் வா’’ என்று ஒலிக்கும் பொன்னியின் குரல் அவளை இந்த உலகத்துக்கு இழுத்து வர இருவருமாய் பஸ்ஸைப் பிடிக்க விரைகிறார்கள்.

தெருக்களில் ஓடும் மழைநீர் ஆறெல்லாம் ஒன்றுகலக்கிற மகா சமுத்திரமாக ஹோவென்ற பேரிரைச்சலுடன் அலைமோதிக்கொண்டிருக்கிற மதுரை செண்ட்ரல் பஸ்ஸ்டாண்டுக்கு ஒரு வழியாக உமா வந்து சேர்ந்து விடுகிறாள். ஒரு காலை பூமியில் அழுத்தமாக ஊன்றிக்கொண்டு, அடுத்த காலை கவனமாகப்பெயர்த்து வைப்பதற்குப்படுகிற பாட்டைப்பார்க்கும்போது சந்திர மண்டலத்தில் நடந்தவர்களெல்லாம் என்ன மகா பெரிய சாதனையை செய்து விட்டார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது அவளுக்கு. கிளம்புவதற்கு ஆயத்தமாய் நின்று கொண்டிருக்கும் 29 ஏ பஸ்ஸைப்பார்த்ததும் தெய்வ தரிசனமே கிட்டியவளாய் வண்டிக்கு முன்புறமாய் முண்டியடிக்கும் பெண்கள் கூட்டத்தில் தானும் ஒருத்தியாய் சங்கமிக்கிறாள்.

குடை,கூடை,புடவை அத்தனையும் இடது கையில் இடுக்கிக்கொண்டு வலது கையால் பஸ்ஸில் கைப்பிடியைப்பற்றிய வண்ணம் ஒரு காலைத் தூக்கிப் படியில் வைக்கிறாள். பூமியில் புதையும் சேற்றின் அழுத்தத்திலிருந்து அடுத்த காலை விடுவித்துக்கொள்ளும் வேகத்தில் அழுத்தம் லேசாகிக் காலிலிருந்து விடுபட்டு செருப்பு மிதக்க ஆரம்பிக்கிறது.ஒரு கணம் கைப்பிடியையும் மறந்தவளாய்ப் பாய்ந்து அதைப்பற்றப்போகும் வேளையில் எங்கிருந்தோ வந்து மோதிய சாக்கடை அலை ஒன்று அதை வேகமாக அடித்துச் செல்கிறது.

ஒரு கால் படியிலும் ,மறு கால் அந்தரத்திலுமாக உமா தத்தளிக்கிற நேரத்தில் ட்ரைவர் இஞ்சினை ஸ்டார்ட் செய்கிறார்.அப்பொழுதுதான் மூச்சிரைக்க ஓடி வந்த கூடைக்காரி ஒருத்தி இடுப்புச்சுமை தாங்காமல் அவளை விலாவில் இடிக்கிறாள்.

‘’என்னம்மா இது…ஒண்ணுலே ஏறு..இல்லாங்காட்டி எறங்கு. வாசலை அடைச்சிக்கிட்டு.’’

இன்னும் காது கொண்டு கேட்க முடியாத வார்த்தைப்பிரயோகங்களில் வசை அங்கே விநியோகமாகிறது.

கண்டக்டர் விசில் கொடுக்கிறார்.

இனியும் யோசிக்க இடமில்லை.சடாரென்று பஸ்ஸுக்குள் பாயும் உமா ஹாண்டில் பாரைப்பிடித்துக்கொண்டு தொங்குகிறாள்.மணி இப்போதே ஏழரை.விளாங்குடி போய்ச்சேர எப்படியும் எட்டாகி விடும்.பிறகு அவள் கொஞ்ச நேரம் இருட்டில் தனியாக வேறு நடந்து பாயாக வேண்டும்.

பஸ்ஸைக் கோட்டை விட்டு விட்டுக் கொட்டுகிற மழையில், மூழ்கடிக்கிற நீர் மட்டத்தில் நின்றுகொண்டு அளைந்தாலும் நீரோட்டத்தின் வேகத்தில் அது இந்நேரம் எங்கே போயிருக்குமோ

17ஆம் நம்பர் பஸ் ஸ்டாப்பில் ஈக்களும் கொசுக்களும் ஏற்கனவே ருசி பார்த்து வைத்திருந்தபிளாட்பாரத்து முறுக்குகளைத் தம்பிகளுக்கு வாங்கிக் கொடுத்து விட்டுத் தானும் ஒன்றை சுவாரசியமாகக்கடித்துக்கொண்டிருக்கும் ராக்குவின் கால்களில் கரை தட்டிச்சேர்கிறது அது.

‘’ஹை…செருப்பு..’’

அதை எடுக்கிற ஆர்வத்தில் முறுக்கு கைநழுவிப்போனது கூடத் தெரியவில்லை அவளுக்கு. இடது காலில் நிதானமாக அதைப்போட்டுக்கொண்டு திருப்பித் திருப்பிப்பார்க்கிறாள். பாந்தப்பதிய…அவளுக்கு அது அழகாய்த்தான் இருக்கிறது. ஒரு காலில் மட்டுமே அணிந்திருக்கிறோம் என்கிற கூச்ச உணர்வுகளெல்லாம் இல்லாதவளாய் அந்தச்செருப்போடு சிறிது நேரம் ஒயில்நடை புரிகிறாள்.

‘’இந்தப் புள்ளைக்கு ஆசையப்பாரு’’

பொன்னி கைகளை வாயில் பொத்திக்கொண்டு குலுங்கிக்குலுங்கிச் சிரிக்கிறாள்.

அக்காவின் புதுக்கோலம் அந்தப் பச்சைப் பிள்ளைகளுக்குக்கூட வியப்பூட்டியிருக்க வேண்டும்.பொன்னியின் கிண்டலில் அவர்களும் பங்கு பெறுகிறார்கள்.

‘’யக்கோவ்…அதோ அங்ஙனே சோடிச்செருப்பு மெதக்குது பாரு’’

அப்போதுதான் மற்றொரு செருப்பு பற்றிய பிரக்ஞையே வரப்பெற்றவளாய் அந்த திசையை ஆவலோடு நோக்கும் ராக்குவின் கண்கள் அங்கு மிதந்து வரும் பலகாரம் சுற்றுகிற வெற்றுக்காகிதத்தைக்கண்டு கூம்புகின்றன.ஆளுக்கொரு அடியென்று தம்பிகளை வெளுத்தெடுக்கிறாள்,தூக்குச்சட்டியைக்கீழே இறக்கி வைத்தவள் ,இடுப்புச்சேலையை உயர்த்திச்செருகிக்கொண்டு பஸ் ஸ்டாண்ட் பிளாட்பாரத்தின் முதல் கோடி முதல் மறுகோடி வரை இரண்டு கைகளாலும் துழாவுகிறாள்.

‘’உனக்கென்ன பைத்தியம் புடிச்சிடிச்சா புள்ளே…நாளைக்கு ஜன்னி கண்டா வேலைக்குப்போய் ஆக்கிப்போடறது யாரு’’

பொன்னியின் சொற்களால் ராக்குவின் நிஷ்காம்யகர்மம் சிறிதும் கலையவில்லை.17ஆம் நம்பர் பஸ்ஸில் ஏறுகிறபோதும் கூட அந்தச்செருப்பை அவள்சர்வ ஜாக்கிரதையாக முந்தானையில் முடிந்து கொண்டு போகிறாள்.பஸ் நகருகிற நேரத்திலும் அவள் கண்கள் மற்றொரு செருப்புக்காக பிளாட்பாரத்தின் மீது மோதும் நீரலைகளைஆவலோடு வெறிக்கின்றன.

விளாங்குடி ஸ்டேஷன் ஸ்டாப்பில் இறங்கிக்கரிசல்குளம் கிராமத்துக்குப்போகிற பாதையில் உமா நடந்து கொண்டிருக்கிறாள்.ஒற்றைச்செருப்பு நடையின் வேகத்தைத் தடுக்கிறது.இதை வீட்டுக்குக்கொண்டுபோய் என்னசெய்வது. பார்க்கும்போதெல்லாம் அதன் விலை வேறு மனசுக்குள் உறுத்தலாய் நெருடிக்கொண்டேஇருக்கும்.குனிந்து அதைக்கழற்றியவள் தூரத்து வயற்காட்டில் அதை வீசி எறிந்து விட்டுத் திரும்பிப்பார்க்காமல் வேகமாக நடக்கிறாள்.

கிட்டத்தட்ட அதே நேரத்தில் பஸ் ஸ்டாண்டில் மீண்டும் ஒரு நாள் இதே போலமழை அலை அடிக்கும்போது இன்னொரு செருப்பும் கரை சேர்ந்து விடும் என்ற உறுதியான நம்பிக்கையோடு அந்த ஒற்றைச் செருப்பைத் தன் குடிசை எரவாணத்தில் செருகி வைக்கிறாள் ராக்கு.

– நன்றி:கல்கி வார இதழ் – 6.1.1980

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *