(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காலை வெளுத்தபின் ஏழுமணிபோல் எழுந்திருந்தான். அவன் சிறிய தங்கை “அண்ணை அண்ணை” என்று அவனை உருட்டிப் புரட்டி எழுப்பினாள், சோம்பல் முறித்துக்கொண்டு பாயைச் சுருட்டி சுவர்ப்புறமாக ஒதுக்கி வைத்தான்.
வீடு கலகலத்துக் கொண்டிருந்தது. அவன் தம்பி, தங்கைகள் பள்ளிக்கூடம் செல்வதற்காகப் பரபரத்துக் கொண்டிருந்தார்கள்.
“அம்மா ஏழேகால் வஸ் போகப்போகுது. கொஞ்சம் கெதியாய்ப் பாசலைக் கட்டித் தாணை”.
“அண்ணை, அண்ணை இண்டைக்கு உன்ரை பேனையைக் கொண்டு போறன்”.
“கீதா குளிச்சு எத்தனை நாளாகுது. இண்டைக்குக் குளியாமல் பள்ளிக்கூடம் போகக் கூடாது.”
“அண்ணை வதனி தனக்குக் குளிக்க வாத்து விடட்டாம்.”
“விடிய விடியக் கிடக்கிறது. இப்பதான் எல்லாரும் ஒண்டாய்ப் பரபரக்கிறது.”
வானத்திலே பனிமூட்டம் கவிந்திருந்தது. காலைக் கதிர்கள் புகைக் கோடுகளாக வீட்டு முன் விறாந்தையில் கோலம் போட்டன. மெல்லிய குளிர்காற்று இதமாய் ஊதிச் சென்றது.
வேப்பங்குச்சி ஒன்றை முறித்து வாயில் வைத்து மெல்லத் தொடங்கினான். சிறிய தங்கையைக் கூம்பிட்டுக் குளிப்பாட்டி விட்டான். “அண்ணை எப்ப வந்தனீங்கள்” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் அடுத்த வீட்டுச்சின்னப்பெண் – சின்னத் தங்கையின் தோழி.
“நேற்றே வந்துவிட்டேன். நீ காணவில்லையோ” என்றான்.
“பொய் பொய்” என்று அவன் கையைப் பிடித்துக் குலுக்கினாள் அவள்.
வீட்டின் கலகலப்பு ஓய்ந்து விட்டது. எல்லாரும் எங்கெங்கோ போய்விட்டார்கள். அம்மா ஆசுவாசமாக உட்கார்ந்து டக்டக்கென்று பாக்குவெட்டியால் பாக்கு வெட்டிக் கொண்டிருந்தாள். சின்னக்கன்று துள்ளிக்கொண்டு ஓடிவந்து தூரநின்று அவனை முறைத்துப் பார்த்துவிட்டு மீண்டும் துள்ளிக்கொண்டு ஓடிற்று. புகைபோக்கிக் குழாயிலிருந்து காகமொன்று கரைந்தது. அம்மா எழுந்து “சூ ச் சூ” வென அதைக் கலைத்தாள்.
“காலமை வெள்ளெனக் காகம் கரையுது”.
பொழுது மேலே ஏறி, வெய்யில் உறுத்தத் தொடங்கிற்று. பல் துலக்கிக்கொண்டே முற்றத்துப் பூங்கன்றுகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். வெள்ளையும் சிவப்புமாய் குலைகுலையாய்ப் பூத்துக் குலுங்கும் கலியாண மல்லிகையைக் காணவில்லை. அந்த இடத்தில் கொடி மல்லிகையொன்று பசுந்தளிர்விட்டு வளர்ந்துகொண்டிருந்தது. கொய்யா மரத்தில் இளம்பிஞ்சுகள் தொங்கிற்று. நெல்லி மரத்தின் இலைகளை ஏதோ பூச்சி அரித்திருந்தது. ‘இரவு ராணி’ இலை யுதிர்த்து நின்றது.
“விடிஞ்சு எவ்வளவு நேரமாயடா போச்சு! முகத்தைக் கழுவிப் போட்டு வாவேன்ரா! நானும் என்ரை வேலையைப் பாக்க …!”
மௌனமாக முகம் கழுவச் சென்றான். அன்றைய பொழுதை எப்படிக் கழிக்கலாமென யோசித்தான். ‘சீ….. லீவிலை இங்கை வந்தால் நேரமே போகுதில்லை. சைக்கிள் இருந்தாலாவது அங்கினை இங்கினை போகலாம். உங்கை பொடியன்களும் இல்லைத்தானே. அவனவனும் தங்கடை தங்கடை வேலையளுக்குப் போயிருப்பங்கள் …’.
சாப்பிட்டு விட்டு, ‘பாரதியார் கதை’ களை எடுத்து வந்து சுவரோடு சாய்ந்திருந்து படிக்கத் தொடங்கினான். ஞானரதம். சின்னச் சங்கரன் கதை. தராசு … மேலோட்டமான ஒரு பார்வை. அச்செழுத்துக்கள் கண்ணை உறுத்தின. கண்களை மூடிக்கொள்ள வேண்டும் போல ஒரு தவிப்பு ! அப்படியே சரிந்து நித்திரை கொள்ள வேண்டும் போல …..
‘எப்படியும் இப்ப நித்திரை கொள்ளிறேலை. லீவிலை வந்ததற்கு ஆகப் பகல் முழுக்க நித்திரை கொள்ளிறதும். காலையில் நேரஞ்செல்ல எழும்புறதும் தானே வேலை.’
மரங்களற்ற வெளியினூடாகத் தொலைவை ஊடுருவிப் பார்த்தான். வளவின் வடகீழ் மூலையில் நின்ற பெரிய இலுப்பை மரம் தறிக்கப்பட்டு விட்டது. இந்த உலகத்தைப் பற்றிய அறிவு சரியாக அவன் மனத்தில் பதியாத காலத்தில் அதை விற்று விட்டார்கள். தோணி செய்வதற்காக அதன் அடி மரத்தைக் கொண்டு செல்வதாகச் சொன்னார்கள்.
அந்த மரத்தின் கீழ் ஒரு கொட்டிலில் அவன் அப்பாச்சி குடியிருந்தாள். அவள் பச்சைக் கோதுமை மாவில் ரொட்டி சுட்டு இரகசியமாக அவனுக்குத் தருவாள். அந்த மரத் துடனேயே அவள் வாழ்க்கை பிணைந்திருந்தது. ஒரு பரு வத்தில் அந்த மரம் பூக்கும்; ஒரு விதமான பாணி மணத் துடன் அந்தப் பூக்கள் உதிரும் காலம் இரம்மியமானது அரும்பு கட்டும்; அரும்புகள் உதிரும்; காய்க்கும் பழுக்கும்; வௌவால்களும் – பறவைகளும் சத்தமிடும்; இலைகள் உதிர்ந்து மொட்டை மரமாய் நிற்கும்; வசந்தக் குறுகுறுப்பில் பச்சைப் பசுந்தளிர்களை ஈனும்.
அப்பாச்சியின் கொட்டிலிலும் இலுப்பம்பூ மணக்கும்; இலுப்பை முத்துக்கள் காயும்; அதை வாங்க வரும் பெண்களின் பேரம் பேசும் குரல் இடைக்கிடை ஒலிக்கும்.
“உன்னாணை ஆச்சி! ஒன்றேகால் ரூபாய்க்கு மேல் ஒரு சதமும் தரேன்”
“கிழவி குப்பை என்ன விலை சொல்கிறாய்?”
“நாற்பத்தைந்து ரூபா”.
“சரி சரி நாற்பது ரூபாய் தாறேன். வேறை கதை பேசாதை”
இரட்டை மாட்டு வண்டியில் குப்பை ஏற்றுவார்கள். மாடுகளைக் கழற்றி, பக்கத்தில் மலை ஆமணக்கில் கட்டியிருப்பார்கள். மாடுகள் கழுத்து மணிகள் குலுங்க, வாலைச் சுழற்றி முதுகிலிருக்கும் ஈக்களைக் கலைத்துக் கொண்டே மேயும்.
குப்பை விற்ற இரண்டொரு மாதங்களுக்கு அப்பாச்சியின் கழுத்தில் அந்தப் பவுண் அட்டிகை தொங்கும். அப்போதெல்லாம் அப்பாச்சி மிகவும் சந்தோஷமாக இருப்பாள். மீண்டும் அது அடைவுக்குச் சென்றுவிடும். ஒரு மழைகாலக் காலைப் பொழுதில் அப்பாச்சி செத்துவிட்டாள்.
“தம்பி எப்ப வந்ததாக்கும்?” திடுக்கிட்டுப் பார்த்தான். வெண் தாடியுள் காவி படிந்த பற்கள் தெரியச் சிரித்துக்கொண்டு பெரியான் குழைந்து போய் நின்றான். இரண்டு கைகளையும் இடுப்புக்கு மேலால் வயிற்றுடன் இணைத்திருந்தான்.
“நேற்றைய மெயிலிலை வந்தனான் பெரியான்.”
“ஓமெண்டு தானாக்கும் அங்கை சொன்னவை”.
எங்கே என்று கேட்க நினைத்தவன் அது எங்கேயாக இருக்குமென மனதில் தோன்றவும். பேசாது அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏதேதோ நினைவுகள் கிளை பரப்ப முனைந்தன. நெஞ்சில் ஏதோ வேதனை கவிந்து வருவது போல.., தலையைக் குனிந்து கொண்டான்.
தன்னைச் சுதாகரித்து நிமிர்ந்தவனின் பார்வை பெரியானின் முகத்தில் படிந்தது. அவன் கண்களில் படிந்திருந்த அந்த இரக்கத்தின் சாயை இவனை உறுத்திற்று. அவர்கள்ளின் குழந்தைப் பருவத்து இணைவுகளையும் கனவுகளையும் எல்லையில்லாத வாத்சல்யத்துடன் அவதானித்தவனும் மனத்தால் ஆசீர்வதித்தவனும். அவை எதிர்பாராத முறையில் முடிந்தபோது மௌனமாகவே தன் எல்லையற்ற அனுதாபங்களை தெரிவித்து ஆறுதல் அளித்தவனும் எல்லாம் தெரிந்தவனாயும் எதுவுமே தெரியாதவனைப்போலவும் ‘பெரியான் ….. உனக்கு எல்லாம் தெரியும்.’
“தம்பி ஏதோ பழைசுகளை யோசிக்குது போலை”
“இல்லைப் பெரியான்” கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தான்.
கூனல் விழுந்த முதுகுடன் தா தாவென இரக்கும் கண்களுடன் அவனையே பார்த்துக் கொண்டு நின்றான் பெரியான்.
“இப்ப என்ன விலை போகுது பெரியான்?”
“ஐம்பது சதம் தம்பி”
பேசாமல் எழுந்து சென்று ஒரு ரூபா நாணயத்தை எடுத்துவந்து பெரியான் கையில் கொடுத்தவன் பழைய படியே சுவரோடு சாய்ந்து உட்கார்ந்து கொண்டான்.
“அப்ப நான் வாறனாக்கும்”
“தம்பி பெரியானைக் கொஞ்சம் நிற்கச் சொல்ல” குசினியிலிருந்து அம்மா சொன்னாள்.
“இல்லைப் பிள்ளை; தம்பி ஒரு ரூபா தந்தது; நான் போகப்போறன்.”
“அப்ப நீ இப்ப தேத்தண்ணி குடியாய்தானே! பின்னைப் போட்டுப் பேந்து வாவேன்”.
“அப்ப நான் வாறன் தம்பி”
கைகளை வயிற்றுக்கு மேலால் இடுப்புடன் இணைத்தபடியே, கூனல் விழுந்த முதுகுடன் அந்தத் தாண்டும் நடையில் பெரியான், தெற்குவேலிப் படலையைக் கடப்பது தெரிந்தது. இவன் மனதில் சலிப்பு மேலோங்கியது.
“தம்பி தேத்தண்ணி குடிக்கப் போறியே”
“இப்ப வேண்டாம் அம்மா”
“பின்னை எலுமிச்சம்பழத் தண்ணி கரைச்சுத் தாறதே”
“இப்ப ஒண்டும் வேண்டாம்”
மனம் எங்கெங்கோ அலை பாய்ந்தது. ‘இப்போ ஒவ்வீசில் இருந்தால் என்ன செய்து கொண்டருப்பேன்? அந்த இருண்ட மூலையிக்கை இருந்து ஏதாவது வாசித்துக் கொண்டிருப்பேன். இல்லாவிட்டால் கன்ரீனுக்குப் போய் அரசியலோ இலக்கியமோ பேசிக்கொண்டு நண்பனுடன் தேத்தண்ணி குடிச்சுக் கொண்டிருப்பன்.’
‘ஒவ்வீசிலை எனக்கு முன்னாலை இருக்கிற பெட்டையள் எப்போதும் போலவே சும்மா கலகலத்துக் கொண்டு, சிரித்துக் கொண்டு, ஒருவருக்கொருவர் கடதாசித் துண்டுகளால் எறிந்து கொண்டிருப்பினம்!’
‘அவளை ஒருக்கால் பாக்க வேணும் போல இருக்குது. ஏதாவது சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி அரைகுறைச் சிங்களத்தில் பேசவேணும் போல இருக்குது. அவளுடைய அந்த கிறங்கவைக்கிற, அர்த்தம் செறிந்த, ஆவல் தொனிக்கிற பார்வையையும் புன்னகையையும் பார்த்துப் பதிலுக்குச் சிரிக்கவேணும் போல இருக்குது!’
வளவின் தொடக்கத்தில், புளியமரத்தடியில் அம்மம்மா வந்து கொண்டிருந்தா, தலையில் பெரியதோர் ஓலைக் கடகம். கைகளை ஆட்டி ஆட்டி அசைந்து அசைந்து வந்துகொண்டிருந்தா. வாசல் விறாந்தையில் கடகத்தை வைத்து விட்டு அவனைப் பார்த்துத் தலையாட்டிச் சிரித்தா. முகத்தில் இழையோடிய ஒரு பிரகாசம். அவன் வெறுமே சிரித்தான்.
“எப்பவடா தம்பி வந்தனீ?”
“நேற்று வந்தனான்; எப்பிடி அம்மம்மா உங்கடை சுவாத்தியம்?”
“எங்கடை சுகத்துக்கு என்னடா குறை?”
அவனுக்குப் பக்கத்தில் சுவருடன் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.
“கொழும்புப் பக்கமெல்லாம் சாப்பாடு எப்படிப் போகுது? ஆள் சரியான கேவலம்”.
“நான் நெடுகிலும் இப்படித்தானே” என்று அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.
“மனம் சந்தோஷமாக இருந்தால் தானே அம்மம்மா உடம்பும் தேறும்”.
“ஏன் இப்ப உனக்கென்ன குறை?”
“எனக்கு இந்த வேலை பிடிக்கேலை; படிச்சுப்போட்டு படிப்புக்குத் தக்க வேலை கிடைச்சாத்தானே சந்தாஷமாக இருக்கலாம்.”
“ஏன் இப்ப எவ்வளவு சம்பளம் தாறாங்கள்?”
“முன்னூறு ரூபாய்க்குக் கிட்ட; நான் சம்பளத்திற்காகச் சொல்லேலை அம்மம்மா.”
சில கணங்கள் மௌனமாக இருந்தான். தன்னுடைய நுணுக்கமான உணர்வுகளை, சோகங்களை எப்படி அவருக்குப் புரியவைக்கலாமென யோசித்தான்.
“அவரவருக்குப் பிடித்தமான வேலை எண்டாத்தானே சந்தோஷமாக இருக்கலாம்”
அம்மம்மா ஒன்றும் சொல்லவில்லை. அவனும் மௌனமாகத் தன் நினைவுகளில் ஆழ்ந்தான். வாழ்க்கைதான் எத்தனை அற்புதமாக அமைந்துவிடுகின்றது!. எத்தனை விதமான இனிய கனவுகள்; எத்தனை விதமான மயக்கும் எழில்கள்; எத்தனை விதமான சோகங்கள் ; எத்தனை விதமான அப்பாவித்தனங்கள்: எத்தனை நடிப்புகள்; எத்தனை கள்ளங் கபடமற்ற புனிதங்கள்.
அம்மம்மாவைப் பார்த்தான். அவள் காலை நீட்டிக் கொண்டு வெற்றிலைத் தட்டத்தை வைத்து டக்டக்கென்று பாக்கு வெட்டிக் கொண்டிருந்தாள்.
“அம்மா அம்மம்மா வந்து நிக்கிறா.” பலத்த குரலில் சொன்னான்.
“குஞ்சாச்சி உதிலை வெத்திலைத் தட்டம் கிடக்கணை! உவன் தம்பியோடை கதைச்சுக் கொண்டிரணை; நான் இந்தக் கையலுவலை முடிச்சுப்போட்டு வாறன்” அம்மா குசினியிலிருந்து வெளியே வந்து சொன்னாள்.
“அவன் ஒண்டும் கதைக்கிறானில்லையடி பிள்ளை. சும்மா கேட்டதுக்குப் பதில் சொல்லிப் போட்டு இருக்கிறான்”
“என்னத்தையணை கதைக்கிறது”
அம்மம்மாவும் அம்மாவுடன் குசினிப் பக்கம் சென்றாள்.
அவன் தனிமையில் விடப்பட்டான்.
நேரம் கிட்டத்தட்ட பத்து மணியாகிவிட்டிருந்தது. வெளியே வெயில் கானல் எறியத் தொடங்கியிருந்தது. வீட்டு வாசல் முன்பாக சோலையாய் கவிந்திருந்த பலாமரத்தின் கிளைகள் சோழகக் காற்றில் அசைந்து சலசலத்தன. மரத்தின் கீழே ஒளிப் புள்ளிகள் கோலம் போட் டன.
கிழக்கே அடைக்கப்படாத வேலியினூடே தொலையை ஊடுருவினான். கண்ணுக்கெட்டிய தூரத்தில் குஞ்சியம்மா வின் வீட்டுக் கிணற்றடித் தென்னஞ்சோலைகள் தெரிந்தன. கிணற்றடியில் யாரோ ஒரு பெண் சலவை செய்து கொண்டிருந்தாள். அவள் சேலை ஒன்றை தலைக்கு மேலால் தூக்கித் தூக்கி கல்லில் அடித்துக் கொண்டிருந்தாள்.
தூக்கம் கண்ணை மயக்கிற்று. கண்களைக் கசக்கிக் கொண்டான்.
‘குஞ்சியம்மா வீட்டை போனா இராணி அல்லது வேலி ஆரேன் இருப்பினம். அவையோடை ஏதேன் கதைக்கலாம்.’
“அம்மா ஞானக் குஞ்சியம்மா வீட்டை போட்டு வாறேன்.”
– 1974 – கோடுகளும் கோலங்களும் – அலை வெளியீடு – மார்கழி 1976
– சாதாரணங்களும் அசாதாரணங்களும், முதற் பதிப்பு: அக்டோபர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.