இறுதி நாட்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 26, 2020
பார்வையிட்டோர்: 4,480 
 

(இதற்கு முந்தைய ‘புற்றுநோய்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

ஐம்பது வயதாகியும் மண்டையில் ஒரு முடிகூட உதிரவில்லை என்பதில் மச்சக்காளைக்கு ரொம்பப் பெரிய பெருமை உண்டு.

அதைப் பார்க்கும் அவரின் வயது ஒத்த நிறைய பேருக்கு மச்சக்காளையின் மேல் பொறாமை வரும். அப்படி ஒரு அடர்த்தியான தலைமுடி அவருக்கு. இந்த ‘கீமோதெரபி’க்குப் பிறகு நிலைமை வேறு.

கொத்து கொத்தாக முடி அப்படி அப்படியே அவரின் கையோடு வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்து அரண்டுபோய் விட்டார் மச்சக்காளை. அவருடைய உடம்பில் இருந்து கொத்து கொத்தாக உயிரே போவது மாதிரி இருந்தது. மூன்றாவது கீமோதெரபிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே அவரின் மண்டையில் முடி அனேகமாகக் காலியாகிவிட்டது.

கொஞ்சம் கொஞ்சமாக வழுக்கையாகிக் கொண்டிருந்தால் எதுவும் தெரியாது! நாற்பது நாட்களில் ஹிந்தி என்கிற மாதிரி நாற்பது நாட்களில் சுத்த வழுக்கையாகிவிட்டால் தாங்க முடியுமா? யாராக இருந்தாலுமே!

மச்சக்காளை கண்ணாடியில் தன்னுடைய தலையில் தடபுடலாக வழுக்கையாகிவிட்ட கோரத்தைப் பார்த்து மனம் வெதும்பினார். புற்று நோயின் மேல் உலகப் பெரிய கோபம் வந்தது அவருக்கு.

அவர் புற்றுநோயைப் பார்ப்பாரா? புற்றுநோயின் சிகிச்சையைப் பார்ப்பாரா? சிகிச்சையின் தீயாகத் தகிக்கும் பின்விளைவுகளைப் பார்ப்பாரா? எதைப் பார்ப்பார் அவர்? எதைப் பார்க்கவும் பிடிக்காமல்; யாரைப் பார்க்கவும் பிடிக்காமல் மச்சக்காளை சுருண்டு கிடந்தார்.

அவரைப் பார்த்தபடி கதிரேசன் எப்போதும்போல மெளனமாக இருந்தான். தகப்பனுக்குப் புற்றுநோய் என்று முதன்முதலாக அவனுடைய காதுகளுக்கு வந்த செய்தி, சற்றும் எதிரே பார்க்காமல் வாழ்க்கை ஓர் பிரமிக்கத்தக்க ரகசியத்தைச் செய்தியாய் அறிவித்திருப்பது போல் இருந்தது.

மச்சக்காளைக்கு புற்றுநோய் என்ற செய்தியில் குடும்பத்தினரின் அத்தனை பேரின் மனதிலும் பெரும் உணர்வுப் புயல் வீசியது. ஆனால் கதிரேசனின் மனதில் புயல் வீசவில்லை. ஓர் வலிமை மிக்க காற்று வீசியது. இந்தக் காற்று புயல் கிடையாது என்கிற மாதிரியே தென்றலும் இல்லை…! தென்றலில் நின்றால் சுகமாக இருக்கும். புயலில் நின்றால் பயங்கரமாக இருக்கும்.

காற்றில் நிற்கும்போது இந்த இரண்டும் கிடையாது. கதிரேசன் அப்படிப்பட்ட நிலையில் இருந்தான். மச்சக்காளைக்கு புற்றுநோய் என்ற செய்தி வந்ததும், வருடக்கணக்காக கட்டுக் கட்டாக அவர் புகைத்திருக்கும் பீடிதான் அவனின் நினைப்பில் வந்தது. காலம் பூராவும் வீட்டைச்சுற்றி நிறைந்து கிடந்த பீடிப்புகை இப்போது அப்பாவின் வாழ்க்கையை வேற மாதிரி சூழ்ந்து கவிந்து கொண்டுவிட்டது என்று அவனுக்குத் தோன்றியது.

கதிரேசனுக்குத் தகப்பனின் மேல் இரக்கம் வந்தது. அவனுடைய மாமா ராமன் கதிரேசனைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போய் டாக்டர் ராகவன் சொல்லிவிட்ட உண்மையைச் சொல்லிவிட்டான். எந்த அபிப்பிராயமும் சொல்லாமல் கதிரேசன் மாமா சொன்னதை மெளனமாகக் கேட்டுக்கொண்டான். உண்மை தெரிந்தபின் தகப்பன் முகத்தைப் பார்த்தபோது மட்டும் அவனுக்கு கொஞ்சம் ஒரு மாதிரியாக இருந்தது.

அவனுக்காவது கொஞ்சம்தான் ஒரு மாதிரியாக இருந்தது. எங்கேயோ ஒரு இடத்தில் அவனிடம் தோற்றுப்போய் விட்டாற்போல மச்சக்காளை உணர்ந்தார். புற்று நோயிலிருந்து கண்டிப்பாக தன்னைக் குணப்படுத்திக் காட்ட வேண்டும் என்று நினைத்தார். ஆனால் இனிமேல், தான் பீடி புகைக்கலாமா புகைக்கக் கூடாதா என்ற கேள்வி மனசில் எழுந்தபோது மச்சக்காளை மறுபடியும் கதிரேசனிடம் படுதோல்வி அடைந்து விட்டதாக நினைத்து ரொம்ப உணர்ச்சி வசப்பட்டார்! அந்தக் கேள்வி திரும்பத் திரும்ப அவரின் மனதில் அசுர பெண்டுலம் போல ஆடிக்கொண்டே இருந்தது.

பத்து வருடங்களுக்கு முன்பு கதிரேசன் அவருக்குப் பீடி வாங்கித் தருகிற வேலையைச் செய்ய மறுத்த சம்பவத்தின் ஞாபகம் மற்றொரு அசுர பெண்டுலமாக மச்சக்காளையின் மற்றொரு மனதில் ஆடியது. அவர் இந்தப் பெண்டுலத்தின் ஆட்டத்தைப் பார்ப்பாரா? அந்தப் பெண்டுலத்தின் ஆட்டத்தைப் பார்ப்பாரா? எந்தப் பெண்டுலத்தின் ஆட்டத்தைப் பார்ப்பார்?

மரணபயம் மச்சக்காளையின் மனதை அரிக்க ஆரம்பித்துவிட்டது. படுக்கை அறைக்குள் ரகசியமாக பெண்டாட்டி கோமதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதார். இறப்பு கண்ணுக்கு புலப்படும்போது கணவர்கள் முதலில் தஞ்சமடைவது மனவியிடம்தானே? யாரும் அவரிடம் எதுவும் அதிகம் பேசவில்லை.

மச்சக்காளையே தான் இனி பீடி புகைப்பதை நிறுத்திவிட வேண்டியதுதான் என்ற முடிவை எடுத்துவிட்டார். மிச்சம் இருந்த எட்டு பத்து பீடிகளை கண்ணை மூடிக்கொண்டு எடுத்துப்போய் கழிப்பறைக்குள் வீசி எறிந்துவிட்டு வந்தார். அந்தக் காட்சியில் உறைந்திருந்த அவலத்தைக் கண்டது கதிரேசன் மட்டுமே. அது மட்டுமில்லை; கதிரேசன் வீட்டில் அத்தனை காலமும் கவிந்து கிடந்த நெடிமிகுந்த கனத்த பீடிப்புகை ஒரே நாளில் விலகி மறைந்துவிட்டது.

ஆனால் வீட்டைவிட்டு பீடிப்புகை விலகி என்ன செய்ய? மச்சக்காளையின் உயிரைச் சூழ்ந்து அரித்துக்கொண்டிருந்த அத்தனை காலப்புகை காணமல் போவதற்கு வழி இல்லையே…

இரண்டாவது கீமோதெரபி வரை சற்று கட்டுப் பட்டாற்போல பாவனை காட்டிய புற்று, மூன்றாவது கீமோதெரபிக்குப் பின் சினம்கொண்டு சீறிப் பிதுங்கியது. சிறிது உலராத மாட்டுச்சாணம் போல மார்பில் உயர்ந்து விரிந்தது. அந்தப் பகுதியைப் பார்த்த டாக்டர் ராகவன், மச்சக்காளையின் மச்சினனைத் தனியாக உட்காரவைத்து கையை விரித்துவிட்டார்.

சிகிச்சைக்கு எதிரிடையான வீச்சை புற்றுநோய் ஆரம்பித்துவிட்டிருந்தது. அதனால் இனிமேல் சகிச்சை பலன் தராது என்று டாக்டர் வருத்தத்துடன் விளக்கினார். இனி புற்றுநோய் வேகமாக அவருடைய உடம்பின் எந்தப் பகுதியை நோக்கியும் சிதறிப் பரவலாம் என்று சொன்னார். எனினும் வலி அதிகம் வரும்போது உள்ளூர் டாக்டரை அழைத்து வலி தெரியாமல் இருப்பதற்கான ஊசியைப் போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்துவிடுங்கள். வேறு எதுவும் செய்வதற்கு இல்லை என்று டாக்டர் மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார்.

என்ன செய்வது என்றே மச்சினனால் தீர்மானிக்க முடியவில்லை. இதைக் கேள்விப்பட்டதும், டாக்டரின் அறைக்கு வெளியே எழுந்து உடனே அவனால் செல்லவே முடியவில்லை. வெளியே ஆயாசத்தோடும் களைப்போடும் மச்சக்காளை மனைவியோடு காத்திருக்கிறார். அவரிடம் போய் என்னசொல்வது? டாக்டரைப் பார்ப்பதற்காக வெளியே மற்றொரு புற்று நோயாளி காத்துக் கொண்டிருப்பதால் மச்சினன் எவ்வளவு நேரத்திற்கு உள்ளே இருப்பது? அதனால் பெருமூச்சுடன் எழுந்து வெளியே வந்துவிட்டான்…

மச்சினனால் மச்சான் மச்சக்காளையின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. ஆனால் அவர் அவனுடைய முகத்தையே கண்களில் ஏக்கத்துடன் ஏறிட்டுப் பார்க்கிறார். மச்சினன் அக்கா முகத்தைப் பார்த்துக்கொண்டே, தான் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் எதை எதையோ பேசிக்கொண்டிருந்தான். ஆனால் எதைப் பேசவேண்டுமோ அதை அவனால் பேச முடியவில்லை. அதை அவன் பேசாததாலேயே அது என்ன என்பதை மச்சக்காளை ஒரு மாதரியாக யூகம் பண்ணிக்கொண்டு விட்டார். அவ்வளவுதான்; வாயையும் கண்களையும் மச்சக்காளை இறுக மூடிக்கொண்டு விட்டார்.

அவரின் நிலைமையை கேள்விப்பட்டு யார் யாரோ அவரைப் பார்க்க வந்தார்கள். மச்சக்காளை அவர்கள் யாரையும் ஏறிட்டே பார்க்கவில்லை. யாரைப் பார்க்கவும் அவருக்குப் பிடிக்கவில்லை. அவருக்கு யாரோடு பேசவும் எதுவும் இல்லை.

கஷ்டப்பட்டு சம்பாரித்த பணத்தை எவ்வளவு செலவுசெய்து பார்க்க முடியுமோ அவ்வளவு செலவுசெய்து பார்த்துவிட்டார். பிரயோஜனம் இல்லை. இனி அவர் புறப்பட தயாராக வேண்டியதுதான்… புறப்ப்படும்படியாகி விட்டதே என்ற ஆத்திரத்தோடு மச்சக்காளை புறப்படத் தயாராகிவிட்டார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *