இறக்கை இழந்த பறவைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 19, 2022
பார்வையிட்டோர்: 4,099 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தோப்பில் முஹமது மீரான்: இவர் எழுதியவை பெரும்பாலும் இஸ்லாமிய சமூகத்தின் கதைகள். ஆனால் இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருந்திப்போவது இவருடைய எழுத்தின் சிறப்பு. இவருடைய கதைகள் சமுதாயத்திற்கு நேராக வெளிச்சம் காட்டும் கதைகள் அல்ல. வகுப்புவாத சிந்தனையால மனிதநேயம் தொலைந்துபோவதை, மேல்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் மனிதர்கள் தனிமையுணர்வோடு தவிப்பதை, தாய் தந்த உறவுகளை இழுத்து அறுத்துக் கொண்டு தனிமனிதர்களாக வாழ விரும்பும் இன்றைய தலைமுறையின் மனோபாவங்களை , பச்சையிலை வாசம் கமழும் கிராமச் சூழலில் நகரநாகரீகம் புகுந்து முகங்களில் சாயம் பூசி விடப்பட்ட மனிதமனங்களின் ஆழங்களை எல்லாம் மிகத் துல்லியமாகத் துழாவி எழுத்தால் உருமாற்றிக் காட்டுகின்றன இவருடைய எழுத்துக்கள்.

***

மேற்கு வானத்தின் விலாப் பக்கத்தின் வழியே நழுவி இறங்குகின்ற கிழவன் சூரியனின் ஈற்றில் மலரும் சிவந்த சிரிப்பில் தென்னையின் தலைகள் குளித்து ஈரம் புலர்த்தி நின்றன.

கடலின் ஆழத்தில் கபறு (புதைகுழி) தோண்டுவதற்காக மண் வெட்டியோடு நிற்கின்ற அந்திப் பொழுது.

அந்திப் பொழுதை பயத்தோடு பார்க்கும் பகல் வேளை.

அந்தப் பகலின் தலைமாட்டில் அதன் மரணத்தை எதிர்பார்த்து, பொறுமையிழந்து கூடியிருக்கும் மக்கள்.

அந்தப் பகல் இறந்தாக வேண்டும். எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் இறந்தாக வேண்டும்.

அதன் மரணப் படுக்கையிலிருந்து பிறக்கும் அந்த இரவைத்தான் மக்கள் கூர்ந்து பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். அந்த இரவின் கர்ப்பத் திற்குள்தான் பெருநாள் ஒளிந்திருக்கிறது.

மேக மூட்டம் இல்லாத தெளிந்த வானம். வானத்தின் மேற்கு மூலையில் வெள்ளை நூல் போல் ஒரு வரைபோல் தெரியும் பெருநாள் பிறையைப் பார்க்க மக்கள் அங்குமிங்குமாகக் கூடி நிற்கின்றனர்.

ஒவ்வொரு பள்ளிவாசலிலும் பச்சைக் கொடிகளில் தோரணம் கட்டினார்கள். ஆங்காங்கே வர்ண விளக்குகளும் மின்னிக் கொண்டி ருந்தன. குழந்தைகள் ஆரவாரம் எழுப்பினர்.

ஹமீது மட்டும் வீட்டு வாசலில் சட்டை போடாமல் நாடியில் கை வைத்துக் கொண்டு இருள் படரும் தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஹமீதின் உம்மா ஒரு தகர விளக்கைக் கொளுத்தி வாசலில் வைத்தாள். சிணுசிணுத்து எரியும் அவ்விளக்கின் மூக்கு நுனியிலிருந்து தெறித்த மங்கிய ஒளியில் வீடு துன்பம் அடைந்தவனின் சிரிப்புப் போலக் காட்சி தந்தது.

‘இருட்டிவிட்டதே, நீ வீட்டுக்குள்ளே வா’ ஸபியா மகனை அழைத்தாள். தெருவில் ஆரவாரம் எழுந்தது. பெருநாள் பிறை கண்ட ஆனந்தத்தில் குழந்தைகள் சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருந்தனர். விடிந்தால் புதுப்புது ஆடை அணிந்து கொண்டு ‘பெருநாள் படி’க்காக உறவினர் வீடுகளுக்குப் படையெடுக்கப் போகும் மகிழ்ச்சி அந்த ஆரவாரத்தில் எதிரொலித்தது.

‘உம்மா நான் பள்ளிவாசல் போய்ப் பாத்து வரட்டுமா? நிறைய கொடியும் விளக்கும் அங்குக் கட்டியிருக்கு.’

‘நேரம் இருட்டியாச்சு. நீ போகண்டாம்.’

‘இறச்சி வாங்கண்டாமா?’

ஸபியா பேசவில்லை, அந்தக் கேள்வி அவள் நெஞ்சில் ஒரு கல்லெறி யாக வந்து வீழ்ந்தது.

பெருநாள். இறைச்சி வாங்க வேண்டும். சோறு பொங்க வேண்டும். வயிறு நிரம்ப உண்ணும் நாள். புத்தாடை புனைந்து மகிழ்ச்சியோடு கொண்டாடும் நாள்.

‘உம்மா ஏன் ஒண்ணும் பேசல்லே.’

‘இறச்சி வாங்கலாம்.’

‘நான் இறச்சிக்காரனிடம் சொல்லி வரட்டுமா? இறச்சி சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு?’

‘இறச்சிக்காரன் சும்மா தருவானா?’

‘காசு தாங்க.’

‘எங்கிட்ட ஏது காசு?’

‘நம்ம வீட்டிலே நாளை இறச்சி இல்லியாம்மா.’

‘நம்ம பெருநாள் போன பெருநாளோடு முடிஞ்சு போச்சு.’

‘எனக்கு உடுப்பு இல்லே .’

‘உன் உடுப்பைத் துவைச்சுப் போட்டிருக்கு.’

‘அது கிழிஞ்சதில்லையா?’

‘காலையில் கிழிஞ்சதைத் தச்சுத் தாரேன்.’

‘தச்ச உடுப்புப் போட்டுப் போனா பையங்க சிரிப்பாங்க.’

‘வாப்பா இல்லாத உன்னப் பாத்து சிரிச்சா சிரிக்கட்டும்.’

‘நான் பள்ளிவாசப் பக்கம் போக மாட்டேன். பையங்க சிரிப்பாங்க.’

‘அப்படியானா நீ போக வேண்டாம்.’

‘எல்லாப் பையங்களும் நல்ல நல்ல உடுப்பு போட்டுட்டு வருவாங்க. எனக்கு மட்டும்தான் இல்லே. எனக்கொரு டிரவுசரும் சட்டையும் தச்சுத் தாங்கம்மா.’

‘கையிலே காசு வேண்டாமா? காசு இல்லாத்ததனால் தானே நோன்பு திறக்க ஒண்ணும் செய்யல்லே. நமக்கு ஜகாத் தரவும் யாருமில்லையே..’

ஸரியாவின் குரல் கம்மியது.

பள்ளிவாசலில் ஒலிபெருக்கி முழங்கியது.

நாளை பெருநாள் என்ற செய்தி அறிவிக்கப்பட்டது. பித்ரு ஜக்காத் விநியோக முறைகளையும் முஸ்லியார் விளக்கமாகச் சொன்னார்.

ஸபியா கவனமாகக் கேட்டாள்.

பெருநாளன்று பட்டினியில்லாமல் இருக்கக் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் பித்ரு ஜகாத்*. பெருநாள் கொண்டாட வசதியில்லாதவர் அது வாங்கக் கடமைப்பட்டவர்.

நாளை சமைக்க ஒரு பிடி அரிசி இல்லை.

‘ஹமீது!’

‘என்ன?’

‘நாளை சோறு வைக்க வேண்டாமா?’

‘ஆமாம், பின்னே பட்டினி கிடப்பதா?’

‘ஹாஜியார் வீட்டுக்குப் போனா பித்ரு அரிசி கிடைக்கும்.’

‘பெட்டியும் கொண்டு போனா வெட்கமில்லையாம்மா.’

‘வெட்கத்தைப் பாத்தா நாளெ தம்ம இரண்டு பேரும் பட்டினி, பட்டினி கிடப்பது பாவம். முஸ்லியார் சொன்னது கேக்கல்லியா?’

ஸபியா பெட்டியெடுக்கும் போது அவளது கை நடுங்கியது. வாழ்க்கை யில் முதன் முதலாகப் பிறர் வாசலில் கால் வைக்கப் போகிறாள்.

அவள் வீட்டைப் பூட்டினாள். ஹமீதையும் கூட்டிக் கொண்டு இருட்டில் இறங்கினாள்.

தெருவிளக்கின் மூட்டில் சிந்திக் கிடந்த வெளிச்சத்தில் சிலர் வட்ட மிட்டுச் சூது விளையாடுவதைக் கண்டாள். கொஞ்ச நேரம் வெட்கப் பட்டு நின்றாள். தலையில் முக்காட்டை முழுமையாகப் போர்த்திக் கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டு நடந்தாள். எல்லா வீடுகளிலும் பாத்திரங்கள் உராயும் சத்தம் உயர்ந்து கேட்டது. வீடுகள் ஒளி வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தன. தெருவெங்கும் விழாக்கோலம். பித்ரு ஜகாத் வாங்கப் பலரும் செல்கின்றனர்.

கழுத்துச் சங்கிலிருந்து கத்தியின் வாய் உயிரை ஊற்றிக் குடிக்கும் வேதனையில் துடிக்கும் கோழிகளின் ஒப்பாரிகள்! இரத்தம் படிந்த கத்தியைப் பிடித்துக் கொண்டு கசாப்புக் கடையின் முன்பு சட்டை யிடாமல் வாயில் பனியனோடு நிற்கும் லெப்பை, அவரின் கால் சுவட்டில் காலால் அடித்துத் துடித்து அடங்கிய சங்கு தெறித்து ரத்தம் சிந்திக் கிடக்கும் கிடாய்கள்.

‘உம்மா நமக்கு இறச்சி வாங்க வேண்டாமா?’

‘போசமல் வாடா.’

ஹாஜியார் வீடு ஜோதிமயமாகக் காட்சியளித்தது. வீட்டு முற்றத்தில் பட்டாசு வெடிக்கும் குழந்தைகள். சின்னக் குழந்தைகள் மத்தாப்பு பூத்திரி கொளுத்திப் பிடித்தன. பூத்திரிப்போல் சிரிக்கும் குழந்தைகள். குழந்தைகள் போல் சிரிக்கும் பூத்திரிகள்.

‘உம்மா எனக்கொரு மத்தாப்பு வாங்கித் தா.’

‘பேசாமல் வா, அடிப்பேன்.’

ஸபியா ஹாஜியார் வீட்டினுள் சென்றாள். முகத்தைக் காட்ட வெட்கப்பட்டுக் கதவிடுக்கில் மறைந்து நின்றாள்.

ஹாஜியாரின் மனைவி வந்தாள். எட்டிப் பார்த்தாள்.

‘யாரம்மா நீ?’

ஸபியா வாய் திறக்கவில்லை. வெட்கம் அவளைப் பிடுங்கித் தின்றது.

‘நீ யார் சொல்லு.’

ஸபியா முகம் காட்டவில்லை. திரும்பி நின்றாள். ஹாஜியார் மனைவி ஸபியாவின் பக்கத்தில் வந்தாள்.

‘நீ மஹ்மூது சம்சாரம்தானே?’

ஸபியா ஆமாம் என்ற பொருளில் தலையசைத்தாள். பெருவிரலால் மொசைக் தரையில் சுரண்டினாள்.

‘அவன் மவுத்தாகி ஆறுமாசம்தானே ஆச்சு. அதுக்குள்ள பெட்டியைத் தூக்கிட்டு இறங்கிட்டியே. வெட்கம்தான் இல்லையா?’

ஹாஜியார் மனைவி அரிசி எடுக்க உள்ளே சென்றாள்.

ஸபியாவுக்கு உயிரோடு தோல் உரித்தது போல் தோன்றியது. தலை சுற்றியது. வீடும் விளக்குகளும் தலைகீழாகச் சுற்றுவதாகத் தோன்றியது. ஏதோ ஒரு சக்தி அவளைக் கொதிக்கும் எண்ணெயில் தூக்கியெறிந்த தாகத் தோன்றியது. தோல் உரித்தெடுத்த வெறும் பாதத்தோடு மிளகாய்த் தூள் மீது மிதித்து நடந்தாள். இன்னொரு பொருளில் சொன்னால் ஓடினாள். நிற்காமல் ஓடினாள். இருட்டைக் கிழித்துக் கொண்டு ஓடினாள். வீட்டு வாசலில் வந்தபோது தான் அங்கு எப்படி வந்து சேர்ந்தாள் என ஒரு நினைவும் இல்லை. கதவைத் திறந்தாள். வீட்டு வாசலில் வருந்தி எரிந்து கொண்டிருந்த தகர விளக்கு கரிந்து நாறியது. வீட்டினுள் புகை நாற்றம் தங்கி நின்றது.

அவள் பாய் விரித்து ஹமீதைப் படுக்க வைத்தாள். அவளும் படுத்தாள். போயிருக்கக் கூடாது. வாழ்நாளில் இனி ஒருபோதும் இதுபோல் முட்டாள்தனம் காண்பிக்கக் கூடாது. பசியால் வயிறொட்டிக் கண் குழி விழுந்து நா வறண்டு அங்குலம் அங்குலமாகச் செத்தாலும் இனி ஒரு வீட்டு வாசலையும் மிதிக்கக் கூடாது. அவர் இப்போது உயிரோடிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்குமா? ஒரு துண்டு இறைச்சிக்காக அருமை மகன் ஆசைப்படுவானா? வலை பின்னியும் பெட்டி முடைந்தும் எப்படி காலம் கடத்த முடியும்?

நிமிர்ந்த நடை. தடித்த மீசை. யாருக்கும் அடிபணியாத குணம். எதற்கும் முதலிலேயே குதித்துப் பாயும் தைரியம். அதுவல்லவா நமது விதியையே மாற்றி எழுதிவிட்டது.

எதிர்பாராத ஒரு வகுப்புக் கலவரம். எதிரிகள் ஊருக்குள் புகுந்து விட்டனர். நினைத்துப் பார்க்க முடியாமல் திடீரென ஏற்பட்ட ஆக்கிர மிப்பில் அனைவரும் திகைத்து நின்றனர். அவர்களால் ஒரு வீடு ஆக்கிர மிக்கப்பட்டது. வீட்டினுள் இருந்தவர்கள் வெளியே ஓடிவிட்டனர். ஒரு பெண் எதிரிகள் கையில் மாட்டிக் கொண்டாள். எதிர்த்துச் செல்ல அஞ்சிப் பலரும் வெவ்வேறிடங்களில் மிரண்டு நின்றனர். எதையும் லட்சியம் செய்யாமல் ஹமீதின் வாப்பா ஒரு அரிவாளுடன் எதிரிகள் அணியில் குதித்து அப்பெண்ணைக் காப்பாற்றினார். திரும்பும் போது அவர் தோளில் வெட்டு ஒன்று வீழ்ந்தது. கை தளர்ந்தது. கையிலிருந்த அரிவாள் கீழே விழுந்தது. அத்துடன் அவரும் விழுந்து விட்டார். இரத்தம் கொப்பளிக்கத் துடித்து அடங்கியது அவர் உடல். சமுதாயத்தின் மானத்தைக் காக்கத் தன்னைத் தியாகம் செய்தவரின் மகன் வயிற்றுக்கு உணவில்லாமல் கிடக்கிறான். ஒரு மத்தாப்புக் கொளுத்திப் பிடிக்க ஆசைப்படுகிறான். ஒரு துண்டு இறைச்சி ருசி பார்க்கத் துடிக்கிறான். யார் இருக்கிறார்கள் அவனுக்கு?

அவன் தாயாரின் கண் தடம் உலரவில்லை.

இதில் யாரையும் குறை கூற முடியாது. எல்லாம் விதி என்று கூறி எல்லாத் தவறுக்கும் தவறு இல்லாததற்கும் பொறுப்பாளியான இறைவனையே குற்றம் சொல்ல வேண்டும்.

ஆதரவற்றவர்களின் ஆயுளை நீட்டி, வாழ்க்கையின் கூரிய நகத்தால் அவர்களின் புண்பட்ட இதயங்களைத் தோண்டி ரசிப்பது எதற்கு?

சுபுஹின் பாங்கொலி உயர்ந்தபோது, பொழுது புலரப்போகிறது என்பதை அவள் புரிந்து கொண்டாள். அவள் உறங்கவில்லை. சிந்தனை பின் கொடுமையான சூட்டில் உருகி இறங்கிய இரவு!

பள்ளியில் தக்பீர் முழக்கம் கேட்டது.

அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்..

காற்றில் அத்தரின் நறுமணம் ஒழுகியது. பல்வேறு தரத்திலான நறுமணம். அவரின் வியர்வைக்கு இவை எல்லாவற்றையும் விட அதிக வாசனை இருந்தது.

அந்த வியர்வை! அந்தத் தடித்த மீசை! அவள் கண்களில் நீர் அரும்பியது. பெருநாள். அழக்கூடாது. அவள் கண்களைத் துடைத்தாள்.

‘ஹமீத், உனது வாப்பாவின் கபறு உனக்குத் தெரியுமா?’

‘தெரியாது.’

‘அப்படியானால் ஏதாவது ஒரு கபறைப் பார்த்துச் சொல்லு. சமுதாயத்தின் மானத்தைக் காப்பாற்றுவதற்காக எங்களை நிராதரவாக் கிப்போன வாப்பா! நாங்கள் இன்று பட்டினி. என் டிரவுசரைப் பார்த்து இந்தச் சமுதாயம் சிரிக்கிறது.’

‘சொன்னால் வாப்பாவுக்குக் கேட்குமா?’

‘கேட்கும்.’

அவள் ஜன்னல் வழியாகத் தெருவைப் பார்த்தாள். ஆனந்தக் கூத்தாடும் தெரு. காற்றில் இறைச்சி வேக வைக்கும் வாசம். அவள் மூக்கைப் பொத்தினாள்.

‘ஹமீத்! போ. எங்களின் இறகைக் கிள்ளி எடுத்தது எதற்கு என்று நீ உன் வாப்பாவிடம் கேள். அந்தத் தலைமாட்டில் நின்று அழுது சொல். நாங்கள் பட்டினியென்று’.

ஸபியா உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி நின்றாள். மகனை அருகில் பிடித்து நிறுத்தி அவன் தலைமுடியைக் கையால் கோதினாள். ஹமீதின் கன்னத்தில் குனிந்து முத்தமிட்டாள். அந்தக் கன்னத்தில் கண்ணீரின் சூடு தட்டுப்பட்டது.

‘உம்மா எதற்கு அழ வேண்டும்?’

‘அழல்லே , சிரிக்கிறேன்.’

அவள் சிரிப்பை நடித்துக் காட்டினாள். மழை பெய்து கொண்டிருக்கும் போது தோன்றி மறையும் சந்திரனைப்போல.

‘அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்…’

பள்ளியிலிருந்து தக்பீர் ஒலியைக் காற்று சுமந்து வந்தது.

* பித்ரு ஜகாத் – பெருநாளைக்கு முந்தைய இரவு செய்யும் தானம்

– மதி-நா, ஆகஸ்ட் 1980 (நன்றி: https://thoppilmeeran.wordpress.com/tag/இறக்கை-இழந்த-பறவைகள்/)

முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டத்தில், தேங்காப்பட்டினம் என்ற ஊரில் பிறந்தார். இவரது மனைவியின் பெயர் ஜலீலா மீரான். இவர் 5 புதினங்களையும் 6 சிறுகதைத் தொகுப்புகளையும் சில மொழிபெயர்ப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது புதினம் சாய்வு நாற்காலி 1997 இல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. தனது 74 வயதில் (மே 1, 2019) உடல்நிலை குறைவு காரணமாக திருநெல்வேலி மாவட்டம், பேட்டை எனும் இடத்தில் இறந்தார். விருதுகள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *