அலுவலகத்திலிருந்து வந்த அனந்தராமன் கோட்டைக் கூடக் கழற்றவில்லை . பத்மா தூக்க முகத்துடன் அவனை வரவேற்றான். மௌன நாடகத்துடன் காபி – டிபனைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
“சுந்து எங்கே பத்மா?” என்று கேட்டான். அனந்தராமன். ஆறு வயது கூட நிரம்பாத ஒரே மகனான சுந்தரேசனின் பேரில் அனந்தராமனுக்கு அலாதியான பிரியம்.
பத்மா உடனே பதில் பேசாததும் முகத்தை என்னவோ போல் வைத்துக் கொண்டிருப்பதும் அனந்தராமனுக்கு ஆச்சர்யமாயிருந்தது.
“பத்மா ! என்ன சமாசாரம்? ஏன் பேச மாட்டேன் என்கிறாய்?” என்றான்.
பத்மா மேஜை மீதிருந்த காலி காபி டம்ளரை எடுத்த வண்ணம் “இந்தாங்கோ! இப்பவே சொல்லிட்டேன். இருபத்துநாலு மணி நேரத்திலே வேறு வீட்டைப் பாருங்கோ. எங்கே பார்ப்பீங்களோ. என்ன செய்வீங்களோன்னு எனக்குத் தெரியாது” என்று சொல்லி விட்டு சமையல் அறைக்குப் போய் விட்டாள்.
வீட்டுச் சொந்தக்காரர் வாஞ்சிநாதனுடன் கடந்த மூன்று மாதங்களாகவே சுமூகமான உறவு என்று சொல்வதற்கில்லை. வாஞ்சிநாதனின் மனைவி காவேரியின் கட்டளையும் கட்டுப்பாடும் பத்மாவினால் சகிக்க முடியவில்லை.
‘இந்த வீட்டுக்குக் குடித்தனம் வரும்போதே சண்டைக்கார வீடு என்பது எனக்குத் தெரியும்’ என்பாள் பத்மா.
‘எனக்குக்கூடத் தெரியுமே…. போகுமிடமெல்லாம் நீ சண்டை போட்டுக் கதி கலங்க வைப்பாய் என்று!’ என்பாள் வீட்டுச் சொந்தக்காரம்மாள் காவேரி கட்டைத் தொண்டையுடன்.
மேலே பேச முடியாத பத்மாவுக்குக் கண்களில் நீர் ததும்பும். கணவர்தான் அடைக்கலப் பொருள் ஆவார். திரு அனந்தராமனும், வாஞ்சிநாதனும் அரைமணி நேரம் இதைப் பற்றித் தர்க்கம் புரிவர். என்னவென்றாலும் வாஞ்சிநாதன் வீட்டுச் சொந்தக்காரர் ஆயிற்றே! அவரது குரல் ஓங்கியே இருக்கும். சுபாவமாகவே அடக்க குணமுள்ள அனந்தராமன் தன் வேலையைப் பார்க்கப் போய் விடுவான்.
இவர்களுடைய வாதப் பிரதிவாதங்களின் போது அனந்தராமனின் மகன் சுந்துவும், வாஞ்சிநாதனின் சீமந்த புத்திரன் சீனுவும் மெத்தைப் படிக்கட்டில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். கள்ளங்கபடமறியாத அவர்களுடைய அன்னியோன்யம் பெற்றோரின் பூசலுக்கு நேர் விரோதமாயிருக்கும்.
“ஏன் தான் இப்படிச் சண்டை போட்டுக் கொள்கிறார்களோ!” என்பான் சீனு, பொம்மைக் குதிரையில் கழுத்தில் கயிற்றைக் கட்டிய வண்ணம்.
“அதுதாண்டா எனக்கும் தெரியலை” என்பான் சுந்து, கிருஷ்ணன் பொம்மையின் தலையில் மயில் இறகைத் திணித்த வண்ணம்.
மறுவிநாடி காவேரி அங்கு பிரசன்னமாவாள்.
“இங்கே வாடா சீனு !! உனக்கு எத்தனை தடவை சொல்கிறது, அவனோடு விளையாடாதே என்று! போ! ஸ்லேட் எடுத்துக் கணக்குப் போடு” என்று அதட்டுவான். பிறகு அந்த இணை பிரியாத இரு உள்ளங்களைப் பிரித்து விட்ட பெருமையுடன் சீனுவின் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துச் செல்வாள்.
ஏங்கிய முகத்துடன் உள்ளே வரும் சுந்துவுக்கு ரகசியமாக இரண்டு அறை விழும். அதைத் தொடர்ந்து “இந்த அறையை விட்டு வெளியே போ சொல்கிறேன்” என்று அவளுடைய அழுத்தமான குரலும் கேட்கும்.
இரவு அன்று நடந்த யுத்தத்தின் சுருக்கம் அனந்தராமனுக்கு அறிவிக்கப்படும் போது அவன் தலையைப் பிடித்துக் கொள்வான்.
அந்த வீட்டை விட்டு உடனே வேறு வீடு பார்க்க வேண்டும் என்று உறுதி செய்து கொள்வான். ஒரு வாரம் அமைதி நிலவும். பிறகு சீனு – சுந்து சந்திப்பு ஏற்படும். மறுபடியும் அதே பழைய கதை.
அன்று சுந்துவும் சீனுவும் விளையாடிக் கொண்டிருந்தனர். சுந்துவின் யானை மீது சீனுவின் கிருஷ்ணர் பொம்மையை வைத்துக் கட்டிச் சுந்து இழுத்துக் கொண்டு தாழ்வாரமும் கூடமும் ஓடிய வண்ணம் இருந்தான். சீனு ஒரு தகர டப்பாவை மேள வாத்தியம் போல் ஓசைப்படுத்திக் கொண்டிருந்தான்.
தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த காவேரிக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.
சுந்து இழுத்து வந்த வேகத்தில் சட்டென்று யானை தூணில் மோதவே, யானை மீதிருந்த பொம்மை சிதறி மூளியாகியது.
“டேய்… டேய்! பொம்மையடா!” என்று கூவி ஓடி வந்த சீனு உடைந்து கிடந்த கிருஷ்ணரைப் பார்த்துத் திகைத்து நின்று விட்டான். சுந்துவுக்கும் பயம்தான். ஆனால், குழந்தைகள் மறுகணம் சமாளித்துக் கொண்டு விட்டனர்.
“பரவாயில்லையடா! நீயும் நானும் ஆளுக்கொரு பாதி வச்சுக்கலாமடா” என்று பெருந்தன்மையுடன் சொல்லி விட்டான் சீனு.
காவேரிக்கு இது தாங்கவில்லை. அந்த இடத்திற்கு வந்தாள். சுந்துவின் விஷமத்தனத்தைக் குறித்து அசாத்தியமாகப் பேச ஆரம்பித்து விட்டாள். சுந்துவுக்கு விஷமம் கற்றுக் கொடுத்ததாகப் பத்மாவின் மீது பழி சுமத்தினாள். பழி தாங்காப் பத்மா பதிலுக்குப் பேசினாள். ஏச்சும் பேச்சுமாகப் பரிமாறப்பட்டன.
ஏக்கத்துடன் தூண் ஓரமாக நின்றிருந்த சுந்து பெரும் குற்றம் செய்தவனாகப் பத்மாவின் கண்களுக்குப் படவே, இரண்டு மூன்று அடிகள் படபடவென்று விழுந்தன. அலறிக் கொண்டு சுந்து, “அத்தை வீட்டுக்குப் போகிறேன், போ” எனக் கூறி ஓடி விட்டான்.
பத்மாவுக்கு அந்தச் சம்பவம் நடந்து ஒரு மணி நேரமாகியும் படபடப்புத் தீரவில்லை. கணவன் வந்தபோதும் வழக்கம் போல் சுமூகமாக வரவேற்கத் தோன்றவில்லை. உடனே வேறு வீடு பார்த்தாக வேண்டும் என்று கட்டளையிட்டாள்.
வீட்டைக் காலி செய்யும் போது அனந்தராமனுக்கு வாஞ்சி நாதனுடன் சண்டைப் பிடிக்க வேண்டும் போலிருந்தது. வாஞ்சி நாதனுக்குத் தோன்றாவிடினும் காவேரியின் தூண்டுதல் அட்வான்ஸ் திருப்பிக் கொடுக்கும் விஷயத்தில் தகராறை எழுப்பியது.
சீனுவும் சுந்துவும் ஏங்கும் கண்களுடன் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.
“அம்மா! சுந்து வரமாட்டானா , அம்மா?” என்று கேட்டான் சீனு. “சீ…. அந்தத் தங்கமான பொம்மையை உடைத்தான். இன்னும் அவனுடன் சிநேகமா?” என்று அதட்டினான் காவேரி.
சீனுவுக்குப் பொழுதே போகாது. திக்பிரமை பிடித்தவன் போல் உட்கார்ந்திருப்பான். அதே ஏக்கம் அவனைப் படுத்த படுக்கையாக்கி விட்டது.
அங்கு சுந்துவுக்கும் அதே நினைவுதான். “அம்மா! சீனு வீட்டுக்குப் போகமாட்டோமா?” என்பான். பத்மா யோசித்துப் பார்ப்பாள். பார்க்கப் போனால் சண்டையே இல்லை. அனுசரித்துப் போயிருப்பதென்றால் போயிருக்க முடியாதா? அவள் உயர்வா… தான் உயர்வா என்னும் போட்டி மனப்பான்மைதானே சண்டையை வளர்த்தது ? சீனுவின் பொம்மையைச் சுந்து உடைத்தது தவறுதானே? அதற்காகத் தான் பதற்றத்துடன் பேசியிருக்கக்கூடாது என்று ஒரு சமயம் எண்ணுவாள். ‘அது முடியுமா அவளுக்குத்தான் எத்தனை ஆத்திரம்! குழந்தையைக் கண்டால் எத்தனை கடுகடுப்பு! அவளைப் பார்த்தாலே பேசக்கூடாது’ என்று முடிவு கட்டுவாள்.
குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்கள் இரண்டு தாய்களுக்கும் தெரியவில்லை. பெற்றோர்களின் உள்ளம் போட்டியையும் பொறாமையையும் நாடியது. குழந்தைகள் பிஞ்சு உள்ளங்களோ பிரிக்க முடியாத சிநேக இன்பத்தை நாடின.
ஏக்கம் சீனுவுக்கு நோயை விளைவித்து விட்டது. படுத்த படுக்கையாக ஆன சீனுவுக்குக் கை மருந்து பயன்படவில்லை. வழக்கமாகப் பார்க்கும் டாக்டராலும் தீர்க்க முடியவில்லை . அவர் எழுதிக் கொடுக்கும் மருந்தால் சீனுவின் நோய் தீரவில்லை.
“அவள் என்ன செய்துவிட்டுப் போனாளோ? அவள் போன நாளாகக் குழந்தை நோயில் படுத்துக் கொண்டு விட்டதே!” என்பாள் காவேரி, பத்மாவைக் குறிப்பிட்டுக் கணவனிடம்.
‘ஆமாம்’ என்று முடியாமலும் ‘இல்லை’ என்று சொல்ல முடியாமலும் திண்டாடுவார் வாஞ்சிநாதன்.
சரியாகப் பேசாமலும், முகம் வெளுத்துப் போயும் இருந்த சீனுவைக் காணக் காண அவருக்கு வருத்தம் பொங்கும்.
“நாலாவது தெருவிலே புது டாக்டர் மாலை ஒரு மணி நேரம்தான் இருப்பாராம். நல்ல கைராசிக்காரராம்” என்று யாரோ சொல்லக் கேட்டு வாஞ்சிநாதனிடம் சொன்னார்கள். அவர் சீனுவை அழைத்துக் கொண்டு டாக்டரிடம் சென்றார். சீனு வெளிப் பெஞ்சியில் உட்கார்ந்திருந்தான்.
மருந்து வாங்கிக் கொண்டு திரும்ப வந்து பார்த்தார் வாஞ்சி நாதன். சீனுவை அங்கே காணவில்லை. அவர் திடுக்கிட்டார்.
“சீனு… சீனு!” என்று கூப்பிட்டார். டாக்டர் வீடு முழுவதும் தேடினார். டாக்டரிடம் வந்தவர்களும் இப்போ இருந்தானே பையன்!” என்றனர்.
வாஞ்சிநாதனுக்கு ஒன்றுமே புரியவில்லை. நோயால் நடக்கக்கூட முடியாத தன் மகன் எங்கே போயிருப்பான் என்று அவரால் நினைக்கக் கூட முடியவில்லை.
அந்தத் தெருக்கோடியில் உள்ள கோயிலில் உற்சவம். கடைகளும் வேடிக்கைகளுமாக ஜேஜே’ என்றிருந்தது.
“சீனு … சீனு…” என்று கூவிக்கொண்டே வாஞ்சிநாதன் பிரமை பிடித்தவர் போல் நடந்து கொண்டிருந்தார். ரங்கராட்டினம் சுற்றிக் கொண்டிருந்த இடத்துக்கு வந்தபோது, “மாமா… மாமா…” என்று யாரோ கூப்பிடும் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்த வாஞ்சிநாதன் சுந்துவைப் பார்த்தார். பழைய மனஸ்தாபம் நினைவில் இராமல். “ஏண்டா! எங்கள் சீனுவைப் பார்த்தாயா?” என்று பரபரப்புடன் வினவினார்.
சீனு என்றவுடன், ரங்கராட்டினக் குதிரையினின்று குதித்தோடி வந்த சுந்து, “இல்லையே மாமா! அவனை நான் பார்த்து ரொம்ப நாளாச்சு, மாமா!” என்றான். ஒன்றும் பேசாமல் விழித்த வண்ணம் நின்று கொண்டிருந்த அவரைப் பார்த்து “மாமா… மாமா! ஏன் மாமா நிற்கிறீர்கள்? எங்க வீட்டுக்கு வந்துவிட்டுப் போங்களேன் மாமா, இங்கேதான் இருக்கிறது!” என்றான்.
ஒன்றும் புரியாதவனாய்க் கட்டுண்ட பாம்மைப் போல் சுந்துவின் பின் தொடர்ந்து வாஞ்சிநாதன் சென்றார். அருகில் இருந்த சுந்துவின் வீட்டை அடைந்தபோது பத்மா, சீனுவைத் தூக்கிக் கொண்டு நிற்பதைக் கண்டார்.
“ஏண்டா, இப்படி நெட்டியாட்டமா இளைச்சுப் போயிட்டே?” என்று கேட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்கும் போது வாஞ்சிநாதனுக்கு ஒன்றும் புரியவில்லை .
‘சீனு!’ என்று ஏக காலத்தில் சுந்துவிடமிருந்தும், வாஞ்சி நாதனிடமிருந்தும் ஆச்சர்யக் குரல்கள் வெளிப்பட்டன.
டாக்டர் வீட்டில் தன் தகப்பனார் மருந்து வாங்கிக் கொண்டிருக்கும் போது சீனு, சுந்துவின் தாயார் போவதைப் பார்த்திருக்கிறான்.
சுந்துவின் நினைவு அவனை உட்காரவிடவில்லை. அந்த மாமியுடன் போனால் சுந்துவைப் பார்த்துவிட்டு வந்து விடலாம் என்று பத்மாவைப் பின் தொடர்ந்திருக்கிறான். உடம்பு அசதியால் வேகமாக நடக்க முடியாதவனாய் மெல்லப் போய்ச் சேர்ந்து ‘மாமி” என்று கூப்பிட்டவனைப் பத்மா அடையாளம் கண்டு கொண்டாள்.
பகைமை உணர்ச்சி ஓடிவிட்டது. எனவே, அவள் அப்படியே வாரி எடுத்து அணைத்துக் குழந்தையை முத்தமிட்டாள்.
வாஞ்சிநாதன், ஒருநாள் காவேரியிடம் இதைச் சொல்லிப் பெருமைப்பட்ட, “காவேரி! வீணாக அவர்களைச் சண்டைப் போட்டுக் கிளப்பினோம். அவர்களைப் போல் நல்லவர்கள், வர மாட்டார்கள்” என்றார்.
“நான் போகச் சொன்னேனா? ஏதோ இரண்டு வார்த்தை நான் அதிகமாகச் சொல்லியிருக்கலாம். அவளும் தான் சொன்னாள். இப்ப என்ன? சீனுவின் உடம்புதான் நேராகிவிட்டதே ! அவன் மனம் கோணவிடலாமா?” என்றாள் காவேரி.
அனந்தராமனும், பத்மாவும் உட்கார்ந்து சீனு, சுந்துவைத் தேடி வந்ததையும் சுந்து அவன் அப்பாவை அழைத்து வந்ததையும் பேசிக்கொண்டிருந்தபோது வாஞ்சிநாதன் அங்கே வந்துவிட்டார்.
“மிஸ்டர் அனந்தராமன்! போனதெல்லாம் போகட்டும். நீங்கள் இருந்த போர்ஷன் அப்படியே காலியாகத்தான் இருக்கிறது. அந்த இரண்டு குழந்தைகளுக்கு இருந்த பாசமிக்க உள்ளம் நமக்கில்லை பாருங்கள்! நாளையே வந்து விட வேணும்” என்றார்.
சுந்துவை அணைத்துக் கொண்ட வண்ணம் அனந்தராமன், “இந்தக் குழந்தைகளின் உள்ளத்தை யாராலும் பிரிக்க முடியவில்லை பார்த்தீர்களா?” என்றான்.
அப்போது சுந்து எல்லாம் கொண்டு விட்டவன் போல் சிரித்தான்.
– மாந்தோப்பு மரகதம், சிறுகதை தொகுதி -7, முதற் பாதிப்பு: 2013, யாழினி பதிப்பகம், சென்னை 600108.