கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2023
பார்வையிட்டோர்: 5,348 
 
 

3 | 4 | 5

ராபர்ட் ஷூமன் கண்மூடி உட்கார்ந்திருந்தான். மாலை நேர செந்நிற வெயில் வனத்தின் இடைவெளி வழியாக விடாமல் நுழைந்தது. தூரத்தில் மரங்கொத்தி பறவையின் ர்டீட் ர்டீட் ஒலி கேட்டது. சுழல்கள் மண்டிய நதிக்கு முன்னால் பத்து வயது ஷூமன் உட்கார்ந்திருந்தான். ஒன்றிரண்டு தங்க நிற முடிக்கற்றைகள் அவனது மேல் உதடுவரை வழிந்திருந்தது. மோனமான புன்னகை அரும்பிய முகத்தில் காற்றின் அசைவுக்கேற்ப வெயில் நிழலாடிக்கொண்டிருந்தது. சட்டென அவனருகே இருந்த மரக்கிளையிலிருந்து பறவைகள் கூட்டாக சிதறிப் பறந்தன. வெளிச்சத்திற்குப் பழக சிரமப்பட்டன கண்கள். ஆற்றின் மறுகரையில் துலாம்பரமாக ஒரு உருவம் கையசைத்துக் கூப்பிட்டது. பச்சையும் சாம்பலும் கலந்த அவ்வுருவத்தின் சமையலறை உடுப்புத் தெளிவானது. அவனது அம்மா சத்தமாகக் கத்திக்கொண்டு கையசைப்பது தெரிந்தது.

‘எமிலி இறந்துவிட்டாள். ஆற்றோடு போய்விட்டாள். சீக்கிரம் வந்துத் தொலை..’

எங்கிருக்கிறோம் எனப் புரியாமல் சட்டென எழுந்துவிட்டான். கனமான மரப்பாலத்தை வேகமாகத் தாண்டி தனது வீட்டை நோக்கி விரைந்தான். முன்செல்ல எத்தனிக்கும் குதிரை போல தடுமாற்றமான நடை. உண்மையில் அம்மா சொல்லியிருந்தால் தன்னுடன் இருக்க வேண்டுமே? முன் பின் திரும்பிப் பார்த்தால் அம்மாவைக் காணவில்லை.

முன்னர் வந்த கனவுகள் திரும்புகின்றனவா? வீட்டை அடைந்ததும் குழப்பத்துக்கு விடை கிடைத்தது. அப்பா தேடப் போயிருக்கிறார். ஜன்னலருகே நின்றபடி புல்வெளியில் மேயும் குதிரைகளை அம்மா பார்த்துக்கொண்டிருந்தாள். எதுவும் கேட்கத் தோன்றவில்லை. நேற்று எமிலி அணிந்த உடைகள் அவளது அறையில் சிதறிக்கிடந்தன.

‘அக்கா, இந்தப் பாட்டைக் கேளேன்?’

‘ராப், இரு துருவங்களும் இணைந்துவிட்டன பார்க்கிறாயா?’

ஷூமன்னுப் புரியவில்லை. என்ன சொல்கிறாள்?

உடையைக் தூக்கி ஷூமன்னின் கையை தனது முதுகுப்பகுதிகுள் நுழைத்து ஓரிடத்தைத் தடவினாள். ‘ரெண்டு நாளாயிற்று’, என அவள் சொன்னதும் தனக்குத் தான் முதலில் காட்டுகிறாள் என ஷூமன்னுக்குப் புரிந்தது.

‘அப்பாவிடம் சொன்னியா?’

‘இல்லை, தேவையில்லை.உனது விரல்களை விட பெறுமதி கொண்ட தைலங்கள் கிடையாது’, பேசியபடி அவனது விரல்னகங்க்களால் அழுந்தத் தேய்க்கத் தொடங்கினாள்.

‘எமிலி!’

மூர்க்கமாக கையை இழுத்துப்பிடித்து அவன் தப்பிக்காவண்ணம் கால்களை அவன் மேல் போட்டாள். கதறியபடி அவன் தனது பலத்தை முழுக்க உபயோகித்து தன்னைவிட ஐந்து வயது பெரியவளான எமிலியைத் தள்ளிவிட்டான். அவளது கை நகங்கள் அவனை பிராண்டியிருந்ததில் எரிச்சல். அவனது கைகள் கிடைக்காததில் தாங்கொண்ணா ஏமாத்ததில் அவள். வெறிகொண்டவள் போல முதலில் அவனை அடக்கியவள் திமிறி எழுந்த தனது தம்பியை பார்க்காமல் சுவர் பக்கம் திரும்பிக்கொண்டாள்.

‘எமிலி, என்னால் முடியாது. நீ அப்பாவிடம் சொல்ல வேண்டும். இன்னும் திடமான மருந்தை அவர் வாங்கித் தரக்கூடும்..’

‘சீ, வெளியே போ..கடவுளே மருந்து தந்தாலும் இந்த அரிப்பு போகாது..இன்று நேற்றா ஆரம்பித்தது? ஐந்து வருடங்களாக வெளியிலிருந்து அரித்து என் உள் வரை சாப்பிட்டுவிடும் போயிருக்கு..இங்க பார்..’, என தனது நாக்கை வெளியே நீட்டினாள்.

பச்சையும் சிவப்புமான நிறத்தோல் காதுமடல் கழுத்து வழியாக வாய்க்குள் இறங்கி நாக்கில் முடிந்திருந்தது. இன்னும் ரெண்டொரு நாட்களில் உள்ளே பிரயாணம் தொடங்கும். நாக்கை உள்ளிழுத்தபின் கேவல் ஒலியில் அழத்தொடங்கினாள். ஷூமன் அவளது தோளில் சாய்ந்துகொண்டான். கேவல் நீண்ட மூச்சிழுப்பாக மாறும் வரை அக்காவை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான். சலனமற்ற அவளது பாழ் தோற்றம் நிர்கதியற்ற மெளனமாய் ஏங்கி நின்றது.

‘பாடு..உன்னோட பியானோ அறைக்கு போவோமா?’

‘பாட மட்டும் வரலை..என் வகுப்பில் இருக்கும் ஒரு பொண்ணைப் பற்றி பேசணும்…’

‘ஆ! காதலா? பெரியவனா மாறிட்டியா தம்பி’, என ஷூமன்னைக் கட்டி அணைத்தபடி ஜன்னல்வழியாக கீழே எட்டிப் பார்த்தாள். அம்மா கீழே நின்றுகொண்டிருந்தார். படீரென ஜன்னலைச் சாத்தினாள் எமிலி.

‘முழுவதும் சொல்லவிடு..இப்படியெல்லாம் கத்தி கூப்பாடு போட்டா கீழே போய்விடுவேன்..’

இப்படித்தான் ஜோவானா பற்றி ஷூமன் தனது அக்காவுடன் பேச ஆரம்பித்தான். பின்னர், ஆங்கிலேய குடும்பத்திலிருந்து மார்கரெட், இத்தாலியப் பெண் அல்பினா, ஜெர்மன் அரச குடும்பத்துப் பெண் காதரீன் என பலவித காதல்கள் எமிலியின் அறையில் விஸ்வரூபம் கொள்ளத் தொடங்கின. பருவத்துக்கு ஏற்றார்போல காதலிகளுக்கு பரிசும் மாறும். ஆனால் எல்லார் பெயரிலும் பாடல் உண்டு, இசை மழை உண்டு. பல காதல்கள் எமிலியின் அறையில் தொடங்கி அங்கேயே முடிந்துவிடுவதும் உண்டு. பல மணி நேரங்கள் ஷூமன்னைப் பேசச் சொல்லி கேட்டபடி படுத்திருப்பாள் எமிலி. தட்ப வெட்பம், பசி தூக்கம் என காலப் பிரக்ஞை இல்லாத பருவம். உயிர்ப்போடு ஷூமன் சொல்லும் சந்திப்புகளை தனதாக்கிக் கொண்டாள் எமிலி. காதல் மாற மாற அவள் மேல் ஊர்ந்த தடிப்புகள் தொலை மூடத் தொடங்கின. மருத்துவரும் பெற்றோரும் கைவிட்ட நிலையில் கனங்கு போல உயிர்ப்போடு அவளை வைத்திருந்தது ஷூமன்னின் காதலும் இசையும் தான். அவளால் புது காதலிகள் பிறந்தனர், பிரிவுகள் மறந்தன.

சொனாட்டாவில் உச்சம் கொண்ட காதல் செரநேடில் கவித்துவம் கொள்ளும், பின்னர் ரோண்டோவில் விரிசல் பெற்று சோக சொனாட்டாவில் சமாதி ஆகும். பல புது வடிவங்களையும் கேளிக்கை பாட்டுகளையும் உருவாக்கத் தொடங்கிய இந்த சமயத்தில் இக்லாஸ் டார்ன் எனும் இசைக் கிறுக்கனை சந்தித்தார்.

– தொடரும்…

– ஜனவரி 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *