இருட்டறை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 28, 2022
பார்வையிட்டோர்: 1,237 
 

(1953 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உலகம் நன்றாக இருண்டு கிடந்தது. கிராமத்தை விட்டு ஒதுங்கித் தனியாக இருந்தது கிழவி சகீனாவின் குடிசை. இருட்டுக்குள்ளே இருளை அடக்கிக் குருட்டுத் தவம் செய்து கொண்டிருந்த அந்தக் குடிசையின் முற்றத்தில் உட்கார்ந்து ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தாள் கிழவி சகீனா! இருட்டோடு ஒட்டிக் கொண்டிருந்த சகீனாவின் குடிசை இருளடைந்து கிடப்பதை உணர முடியாதபடி சிந்தனைக்கு இடம் போட்டுக் கொடுத்திருந்தாள். நேற்று வரை பொழுதோடு விளக்கேற்றி வைத்து விட்டு மறு காரியம் பார்க்கும் அவள் இன்று எல்லாவற்றையும் மறந்து யோசித்துக் கொண்டிருந்தாள்.

அறுபது வருடங்களுக்கு முன் ஒரு நாள் அந்தக் குடிசை யில் தான் சகீனா பிறந்தாள். இன்று வரை அந்தக் குடிசை யில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு முன் அவள் தாய் தந்தையர்கள். அவர்கள் தாய் தந்தையர்கள் என்று எத்தனையோ தலைமுறைகள் இருந்து மடிந்து விட்டார்கள் அந்தக் குடிசையில். இது அவளுடைய முறை

அறுபது வருடங்கள் எப்படியோ உயிரோடு இருந்து விட்டாள்.

அறுபது வருடங்கள்!

நாளைக்கு இருப்பது நிச்சயமில்லை என்று சொல்லும் இந்த உலகத்தில். அறுபது வருடங்கள் நீண்ட காலம்தான் இந்தக் காலத்திலே நேற்று வரை ஏற்படாத கலக்கம் கவலை. சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் இன்று அவளுக்கு ஏற்பட்டிருந்தது. ஏறக்குறைய அவளுடைய பந்துக்கள் எல்லாரும் செத்து மடிந்து விட்டார்கள். இந்த நிலையி லும் கூட அவள் ஒரு நாளும் கவலைப்பட்டது கிடையாது. அந்தக் கிராமத்தில் உள்ளவர்களுக்கு முன்னாலும் அவன் கவலையற்றவளாகத்தான் காணப் பட்டாள், வாழ்க் கையில் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும் சக்தி யுள்ளவள் என்ற எண்ணத்தில் தலை நிமிர்ந்து நடந்தவள் அவள், இதற்குக் காரணம் அவள் மனதில் கொண்டிருந்த பெருமிதம் தான். அந்தப் பெருமிதத்துக்கும் காரணம் இருக்கத்தான் செய்தன. அதில் ஒன்று அறுபது வருடங்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து விட்ட நம்பிக்கை. மற்றது அவள் மகன் ரஸாக் இருக்கிறான் என்ற தைரியம். இந்த இரண்டிலும்தான் அவளுடைய வாழ்க்கையின் பிடிப்பு இருந்தது.

வாழ்க்கையில் நம்பிக்கையற்றுத் தளர்ந்து போகும் நேரங்களிலெல்லாம் அவன் தனக்குள்ளேயே சொல்லிக் கொள்வான்.

“எனக்கென்னடி கொறைச்சல்? அறுபது வருசம் இந்த ஒலகத்துல சீவிச்சிட்டன். கடைசி காலத்துக்கு ஒரு மகன் இருக்கான் வேலயப்பாரு” என்று.

இந்த நம்பிக்கையிலே தான் அவள் வாழ்க்கை தொங்கிக் கொண்டிருந்தது. இந்த நினைப்பில் தான் தள்ளாத வயதிலும் தலை நிமிர்ந்து நடக்க முடிந்தது. அவளால்.

ஆனால் எந்த நம்பிக்கையில் வாழ்ந்தாளோ அந்த நம்பிக்கையில் அவள் மகன் மண்ணையள்ளிப் போட்டு விட்டான், அந்த மண் அவன் மனதில் கிடந்து கரித்தது! அதிலே வேதனையோடு ஏமாற்றமும் வழிந்தது.

கையில் இருந்த அப்பத்தை காகம் பறித்துக் கொண்டு பறக்கும் பொழுது குழந்தையின் மன நிலை எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது. அவளுடைய மன நிலையும்.

யாருக்காக இந்த உலகத்தில் இன்னும் கொஞ்ச காலம் வாழ வேண்டும் என்று நினைத்தாளோ? யாருடைய தைரியத்தை ஊன்று கோலாகக் கொண்டு வாழ்ந்தாளோ? அந்த மகன் அவள் வாழ்க்கையை அர்த்தமற்றது என்று சொல்லிவிட்டான்! அவள் உயிரோடிருந்த அறுவது வருட வாழ்க்கையையும் வெட்ட வெளியாக்கி விட்டாள்.

இந்த நிலையிலும் அவள் தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டாள்! இந்த முணுமுணுப்பு வாழ்க்கையில் பழகிப் போன ஒன்று.

“உனக்கென்னடி கொறைச்சல்? இந்த உலகத்துல அறுவது வருசம் சீவிச்சிட்டா…!”

இந்த வார்த்தைகள் முடிவதற்குள் அவள் மகன் சொன்ன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தன. அந்த ஞாபகத்திலே தந்தி அறுந்த வீணை போல, சுருதியற்றுப் போய் விட்டது. அவளுடைய முணுமுணுப்பு, ஒரு பெரு மூச்சு விட்டபடி எழுந்து குடிசைக்குள் புகுந்தாள். அப் பொழுது தான் இரவாகி விட்டதை அவள் உணர்ந்தாள்.

“அடி நாசமானவளே! இன்னும் விளக்கேத்தல்ல?” என்று தன்னைத்தானே நொந்து கொண்டு இருட்டில் தட்டுத்தடுமாறி விளக்கை ஏற்றி வைத்தாள்.

செய்வதற்கு வேலை இல்லை. கிழவியின் மனம் இருந்த நிலையில் எதையும் செய்ய ஊக்கம் இல்லை. எனவே வழக்கமாகப் படுக்கும் இடத்தில் தனது கிழிந்த பாயை விரித்து அதில் உட்கார்ந்தாள்.

“ரஸாக் சாப்பிட வருவானே!” என்ற எண்ணம் சுழன்றது. “வந்தாலென்ன? மதியச் சோறு இருக்குது திம்பான்” என்று தனக்குள்ளேயே சமாதானம் செய்து கொண்டாள்.

இந்த இடத்தில் திரும்பவும் ரஸாக் சொன்ன வார்த்தைகள் உள்ளத்தில் கோடு கிழித்துக் கொண்டிருந்தன. அந்த எண்ணத்தை மறந்து விட முயன்றாள். ஆனால்! எதை மறக்க முயன்றாளோ அதே எண்ணங்கள் தான் செக்கு மாடுபோல் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தன. வந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தன.

எண்ணத்தை மாற்றும் முயற்சியில் தன் இரு கால்களையும் நீட்டிக் கொஞ்சம் சௌகரியமாக உட்கார்ந்து கொண்டாள்.

“வாய் புளிப்பேறிக் கிடக்குது வெத்தில போட்டு எவ்வளவு நேரமாச்சு?”

அவள் கண்கள் வெற்றிலைப் பெட்டியைத் தேடின கைக் கெட்டிய தூரத்தில் தான் இருந்தது. வெற்றிலைப் பெட்டியை இடது பக்கமாகச் சாய்ந்து இழுத்துப் பக்கத்தில் இருந்த இரும்புலக்கை பக்கமாகச் வெற்றிலை துவைக்கும் உரல் இவைகளை எடுத்து வைத்துக் கொண்டு வெற்றிலை கூட்ட ஆரம்பித்தாள், புகையிலை காய்ந்து சருகாகிக் கிடந்தது!

“நாசமாப் போன மொய்தீன் சுடப் போயில எப்பவும் சருகுதான்”.

அவள் வாய் வெறுப்பால் கோனியது. வெற்றிலை யைப் பக்குவமாக மடித்து வெற்றிலை உரலுக்குள் வைத்துப் பெருவிரலால் அமர்த்தி விட்டாள். இரும்புலக்கையை எடுத்து உள்ளங்கையில் தேய்த்து துடைத்து விட்டு வெற் றிலை துவைக்க ஆரம்பித்தாள். வெற்றிலைக் கூட்டு இருகி வரும்பொழுது எழுந்த வாசனை, கிழவியின் சோர்ந்து போன நரம்புகளுக்கு உற்சாகத்தை ஊட்டியது. சிறிது நேரத்தில் துவைப்பதை நிறுத்தி விட்டு ஆள்காட்டி விரலால் துவையலைத் தோண்டி எடுத்து வாயில் போட்டுக் கொண் டாள். வெற்றிலைச் சாறு உடலுக்கு விறுவிறுப்பைக் கொடுத்தது. அந்த விறு விறுப்பிலே மகனைப் பற்றிய எண்ணங்கள் திரும்பவும் சுழன்றது. கால்களை நீட்டி வலது பக்கமாகச் சரிந்து படுத்தாள், கிழவி. கண்கள் தன் னாலேயே மூடிக் கொண்டன. திரும்பவும் அவள் மகன் பேசிய வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தன.

“போறான் உட்டுட்டு வேலயப்பாரு” அவள் மன திற்குக் கட்டளையிட்டாள். மனம் விடுவதாக இல்லை. அது எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருந்தது. இப்படித் தான் என்னத்தச் சொல்லிவிட்டாள்?” இந்தக் கேள்விக்கு அவள் மனம் விடை சொல்ல முயன்றது.

“என்னடா தம்பி! நேரங்காலத்தோட ஊட்டுக்கு வந்துட்டா?” என்று கிழவி கேட்டாள்.

“வராம என்ன செய்யச் சொல்ரா? மாடு மாதிரி ஒழைச்சாலும் புண்ணியமில்ல!”

அலுப்போடு சொன்னான் ரஸாக். அதில் கோபமும் கலந்திருந்தது.

“ஏண்டா தம்பி கோபம்? யாருக்கிட்டயாச்சும் சண்ட கிண்ட போட்டுக்கிட்டு வந்தியா…” கிழவி கேட்டாள்.

“சண்டையா? அவன் மண்டய ஒடச்சிருப்பங்கா தப்பிட்டான், மாட்டுக்கும் மனுசனுக்கும் வித்தியாசம் தெரியாதவன்” என்று கத்தினான்.

“ஏண்டா என்ன நடந்திச்சு?”

“என்ன நடக்கிறகா அவன்ட மாடு வெயிலில் நிண்டுச் சாம் வாணத்துக்குக் கிளம்பறான்?”

“அவன்ட கொணந்தான் தெரியுமே! நாமென்னத் துக்கு அவன் மாட்ட வெயிலில உட்ட?”

“அவன்ட கொணம் அவன்ட ஊட்டுல இருக்கட்டும்கா மாடுதானா பெரிசு? நானும் தான் விடிஞ்சா பொழுது பட்டா வெயிலில கெடக்கிறன் என்னப் பத்தி யோசிச்சானா? ”

“உம்… நீ ஒலகம் தெரியாத புள்ள, யாரப்பத்தியும் யாரும் கவலப்படமாட்டாங்க. நம்மப்பத்தி நாமதான் கவலப்படணும்; வயிரொன்று இருக்குதே!”

“வயித்தப் பாத்தாப் போதுமா? மானத்தக் காப்பாத்தவேனாமா?’ என்று கத்தினான் ரஸாக்.

‘கோவம் பசிய ஆத்தாதுடா தம்பி! நீயென்ன செய்வா ஒனக்குத் தெரிஞ்சது அவ்வளவு தான்’ என்றாள் கிழவி.

“ஓ! ஒனக்கு எல்லாந்தெரியும்.” அலுத்துக் கொண் டான் ரஸாக்,

“இன்னொரு தரம் சொல்லுடா? மகனே! நானென்ன ஒலகம் தெரியாதவளா?” கிழவி கொஞ்சம் பெருமிதத் தோடு கேட்டாள்.

“ஓலகம் தெரிஞ்சதுனால தாங்கா ஒனக்கு இந்தக் கேடு”, ஒரு வெறுப்போடு சொன்னான் ரஸாக்.

கிழவி தலையைத் தூக்கி மகளைப் பார்த்து விட்டுச் சொன்னாள்.

“எனக்கென்ன கேடு வந்துட்டுதா? இந்த ஓலகத்தில அறுவது வருசம் சீவியம் செஞ்சிட்டான்! ஒன்னப் போல கொழந்தயா நான்”? இருமாப்போடு கேட்டாள் கிழவி.

குழந்தை என்று தாய் சொன்னது ஒரு மாதிரியாத்தான் இருந்தது, ரஸாக்குக்கு. என்றாலும் இந்தக் கிழவியோட, பேசி முடிவு காண முடியாது என்ற ஒரு முடிவுக்கு வந்து ரஸாக் துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு கேட்டான்.

“ஒலகம் தெரிஞ்ச மாதிரிப் பேசுரியே. ஒன்ட முகம் உனக்குத் தெரியுமாகா?”

இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு அவன் போய் விட் டான். அவனைப் பொறுத்த வரையில் அது சாதாரண மான கேள்விதான். ஆனால் அவனுடைய மனதையல் லவா அது உலுக்கி விட்டது? அறுபது வருடம் இந்த உலகத்தில் உயிர் வாழ்ந்து விட்டேன் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருந்தவளைப் பார்த்து மகன் கேட்ட கேள்வி ஒரு பெரும் தாக்குதல் தான். அந்தத் தாக்குதலிலே அவள் உயிர் நாடி தளர்ந்து விட்டது. அறுபது வருட வாழ்க்கையும் அர்த்தமற்றதாகி விட்டது ! அப்படியானால் என்ன? அவள் முகம் அவனுக்குத் தெரியாதா? இந்த இடத்தில் கிழவியின் மனம் வாழ்க்கையின் ஆரம்பத்துக்கே சென்று விட்டது.

அப்பொழுது சுகீனாவுக்கு ஆறு வயது இருக்கும். ஒரு நாள் அவளுடைய தகப்பனார் ஒரு சிறு தகரப் பெட்டி ஒன்றை வாங்கி வந்தார். பல வர்ணங்களில் சித்திர வேலைப்பாடு செய்திருந்த அந்தப் பெட்டியின் முகப்பில் ஒரு கண்ணாடி பதித்திருந்தது! அந்தச் சின்னஞ் சிறு தகரப்பெட்டி சகீனாவின் குழந்தை உள்ளத்தை வெகு வாகக் கவர்ந்தது. அதில் மயங்கிப் போன சகீனா அந்தப் பெட்டியை ஆயிரம் தடவை புரட்டிப் புரட்டிப் பார்த் தாள். அப்பொழுது தான் அதில் பதித்திருந்த கண்ணாடி யைக் கண்டாள்.

கண்ணாடியைக் கூர்மையாகப் பார்த்தாள் சகீனா! அந்தக் கண்ணாடிக்குள் இருந்து ஒரு குழந்தை சகீனாவை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. தன்னைப் போல் ஒரு குழந்தை அந்தப் பெட்டிக்குள் இருந்து பார்த்துக் கொண்டிருந்தது. பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது சகீனாவுக்கு. பெட்டியை எடுத்துக் கொண்டு தாயிடம் ஓடி ‘உம்மா இங்கப்பாருங்க இதுக்குள்ள ஒரு புள்ள” என்று சொல்லிக் கண்ணாடியைப் பார்த்தபடி கூத்தாடினாள். இதைப் பார்த்த தாயார் கண்ணாடிப் பெட்டியைப் பறித்துக் கொண்டாள். தன்னுடைய மகிழ்ச் சியைப் பறித்துக் கொண்ட தாயாரைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு நின்றாள் சகீனா. அழுகை வெளிக் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.

கண்கலங்கி நிற்கும் குழந்தையைப் பார்த்துத் தாய் சொன்னாள். .. பொண்ணாப் பொறந்தவள் கண்ணாடி பாக்கக் கூடாதுடி!” என்று.

“ஏனும்மா?” என்று அழுது கொண்டே கேட்டாள்.

“சொன்னாக் கேளு சகினா! ஆகாதென்டா ஆகாது தான்; வாய மூடிக்கிட்டு பேசாமப் போ!” என்று தாய் கத்தினாள்.

மேலும் நின்றால் அடி விழும் என்ற பயத்தால் அங் கிருந்து போய் ஒரு மூலையில் உட்கார்ந்து அன்றையப் பொழுதை அழுது கொண்டே கழித்தது அந்தக் குழந்தை.

அவ்வளவுதான். அதன் பிறகு கண்ணாடியில் முகம் பார்ப்பது ஆகாத காரியமாகி விட்டது சகீனாவுக்கு. அந்த ஆகாத காரியத்தை அதன் பிறகு ஒரு நாளும் அவள் செய்தது கிடையாது. அது மட்டுமா இன்னும் எத்தனையோ காரியங்கள் ஆகாது என்ற காரணத்தால் அவள் வாழ்க் கையை விட்டு விலகிப் போய் விட்டன! அந்த ஆகாது என்ற வார்த்தை அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதி யையும் கட்டிப் போட்டுக் கொண்டே வந்திருக்கிறது. இனம் தெரியாத ஒரு சுமையைச் சுமந்து கொண்டு தான் இந்த அறுபது வருடங்களையும் கழித்திருக்கிறாள் அவள். இன்று அதை எண்ணிப் பார்த்த பொழுது எல்லாம் வெறும் சூனிய மாய் வெட்ட வெளியாய் இருந்தது அவளுக்கு!

காலமும் அதன் மாற்றமும் தொட்டுக் கூடப் பார்த்து தில்லை. உலகத்தையும் அதன் போக்கையும் ஒரு நாள் கூட அவள் எண்ணிப் பார்த்ததில்லை, குடிசையைச் சுற்றி இருந்த அந்தத் தட்டு வேலிக்குள் தான் தனது அறுபது வருட வாழ்க்கையையும் சுழித்திருக்கிறாள் அவள். அவள் மட்டுமென்ன? இஸ்லாமியப் பெண்களே இப்படித்தான் இருந்திருக்கிறார்கள்.

காலத்தையும் அதன் மாற்றத்தையும் உணராதவர்கள் அறுபது வருடமென்ன? ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தாலும், அர்த்தமற்ற வாழ்க்கைதான். வாழ்க்கையில் எவ்வளவு காரம் ஏமாந்து விட்டோம். இல்லை ஏமாற்றப் பட்டு விட்டோம் என்பதை எண்ணிய பொழுது அவள் உள்ளம் விம்மியது. இருட்டிலே திசை தெரியாத ஒரு இடத்தில் அகப்பட்டுக் கொண்டது போல் தத்தளித்தாள், மூச்சுத் திணறியது. மூடியிருந்த கண்களைத் திறந்தாள்; குடிசை இருண்டு கிடந்தது.

சற்று நேரத்திற்கு முன் ஏற்றி வைத்த விளக்கு எண்ணெய் இல்லாமல் அணைந்து போயிருந்தது. அதன் திரி மட்டும் புகைந்து கொண்டிருந்தது. அந்தச் சுடர் விளக்கு என்ன தத்துவத்தைப் போதித்ததோ ? அவள் அதையே பார்த்துக் கொண்டே இருட்டுக்குள் உட்கார்ந்திருந்தாள்.

உலகமும் அவள் வரையில் இருட்டுக்குள் தான் இருந்தது.

– 1953, பித்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்ச் 1995, மல்லிகைப்பந்தல் பதிப்பகம், யாழ்ப்பாணம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *