இரண்டு இட்லி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 8, 2015
பார்வையிட்டோர்: 11,157 
 
 

வரிசையில் நின்று கொண்டிருந்தான். அம்மாவுக்கு என்ன வாங்கலாம்? என்று யோசித்துக் கொண்டிருக்கையில், பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவர்,

“தம்பி…! அவரு வந்துட்டாரு, நீ போப்பா…!” -என்றார். எழிலும் உள்ளே சென்று பணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான்.

மீண்டும் ஆழ்ந்த சிந்தனையில், அம்மாவுக்கு புடவை வாங்கலாமா? இல்லை இருக்கும் இந்த காசுக்கு ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்கலாமா? என்று பலவாறாய் யோசித்து நடந்து போய்க்கொண்டிருக்கையில், ஒரு தாய் தன் குழந்தைக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்தாள்.

தன் அம்மாவும் தனக்கு அன்பாய், பாசமாய் குழந்தையாய் இருந்தபோது தனக்குப் பிடித்த இட்லியை ஊட்டியது நினைவுக்கு வந்ததை எண்ணி ஒரு புன்சிரிப்புடன் நடந்தான். அம்மா இட்லியை ஊட்டும்போது அதை சாம்பாரில் நனைத்து சிறுசிறு உருண்டையாக்கி சிந்தாமல் ஊட்டியதை எண்ணிக் கொண்டான்.

தன்னந்தனியாக, தந்தையில்லாத நிலையில், தையல் வேலை செய்து காப்பாற்றியது, படிக்க வைத்தது என பல நினைவுத் தூறலில் நனைந்து உள்ளம் குளிர்ந்தான். எழிலின் பால்யம் முழுவதும் காலைச் சிற்றுண்டி இரண்டு இட்லி மட்டும்தான்.

தினமும் ஊட்டும்போது அம்மாவை எழில் கேட்பது இதுதான், “அம்மா நீ சாப்பிடலையா?” அதற்கு, அம்மாவின் பதில், “அம்மாவுக்கு இட்லி பிடிக்காது கண்μ. நீ சாப்பிடுபா” என்பதுதான். இந்த பதிலையே எப்போதும் சொல்வாள்.

வெகு நாட்களுக்குப் பிறகுதான் எழிலுக்குப் புரிந்தது. தான் பசியோடு இருந்தால் அம்மாவுக்குப் பிடிக்காது என்று. தான் பட்டினியாகவே இருந்து தனக்கு மட்டும் இட்லி ஊட்டி பசியாற்றியதை எண்ணி நெகிழ்ந்தான்.

எழிலின் பகல் வேளைக்கு அம்மா சூரியனாகத் திகழ்ந்தாள். அவன் பயிலும் பள்ளியில் ஆயாவாகவும் வேலை செய்து, எழிலின் கல்விப் பயிர்க்கு சத்தமில்லாமல் விதையானாள்.

பள்ளியில் அம்மாவை, “ஆயா..! ஆயா..! என கூப்பிட்டு, “கழுவி விடுங்க!” என்று பிற குழந்தைகள் சொல்லும்போது அவன் வயிற்றைக் கழுவுவதற்காக என்பது மெதுவாக புரிந்தது. அம்மாவின் மெழுகுவர்த்தி ஒளியில் எழில் மின்சாரமாய் படித்தான். “அம்மா” என்ற கடவுச் சொல் நம்வாழ்க்கையின் தாரக மந்திரம் என்று பலவாறாய் நினைத்தபடி ஒரு பெரிய உணவகத்திற்குச் சென்றான்.

“சார், ரெண்டு இட்லி கட்டுங்க!” என்று எழில் கேட்க, பார்சலை சர்வர் கொடுக்க, வீட்டை அடையும்போது மணி ஒன்பது ஆகிவிட்டது. கையில் பார்சலுடன் மொட்டை மாடிக்குச் சென்றான். அற்புத நிலா வெளிச்சம். பார்சலை பிரித்து, இட்லிகளை எடுத்து, “”கா… கா… கா… ம்மா… ம்மா… ம்மா…!” என்று கூப்பிடும்போது குரல்கூட அழுதது. அந்த இரண்டு இட்லியுடன் மூன்றாவது இட்லியாய் ரசித்துக் கொண்டிருக்கிறாள் எழிலின் அம்மா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *