இம்பல்ஸிவ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 6,782 
 
 

குமரேசனுக்கு வயது இருபத்தெட்டு.

சொந்த ஊர் திருநெல்வேலி.

தற்போது சென்னையின் ஒரு பிரபல ஐடி கம்பெனியில் வேலை செய்கிறான்.   திருவல்லிக்கேணி மார்க்கபந்து மேன்ஷனில் தனி அறை எடுத்து தங்கியிருக்கிறான்.

இன்னும் இருபது நாட்களில் அவனுக்கு சுமதியுடன் கல்யாணம்.  கடந்த ஒரு வருடமாக அவன் திருமணத்திற்காக பெண் பார்த்தார்கள்.  அம்பாசமுத்திரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் என்று எங்கெல்லாமோ தேடி, கடைசியில் சுமதி திருநெல்வேலி ஜங்க்ஷனிலேயே இருந்தாள்.

பார்ப்பதற்கு சுமதி சுமார்தான்.  ஆனால் ரொம்ப ஸ்டைலாக இருந்தாள்.  குமரேசனுக்கு அவளைப் பார்த்தவுடனே மிகவும் பிடித்துவிட்டது.

குமரேசனின் சுபாவம் இது… எதையாவது அல்லது யாரையாவது அவனுக்குப் பிடித்துவிட்டால் உடனே ஒரேயடியாக தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவான். அவர்களை ரொம்பப் பிடித்து விடும். பிடிக்காவிட்டால் அதேமாதிரி ரொம்பவும் பிடிக்காமல் போய்விடும்.

அவன் எல்லா விஷயத்திலுமே இப்படித்தான்.  கோபம் வந்தால் பயங்கரமாக வரும்; சந்தோஷம் வந்தால் குதியாய் குதிப்பான்; துக்கம் வந்துவிட்டால் கப்பல் கவிழ்ந்தமாதிரி கன்னத்தில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிடுவான்.  இப்படி எதை எடுத்துக் கொண்டாலும் உச்சம்தான்.

எதையும் பொறுமையாக யோசித்து செயல்படாது, எடுத்தோம் கவிழ்த்தோம்னுதான் பேசுவான், செய்வான்.  அவனுடைய நண்பர்கள், அவன் ரொம்ப இம்பல்ஸிவ் என்பார்கள்.  அவனுடைய அப்பா அவனை கெட்டிக்காரப் பய என்பார்.

இந்த உச்சம் சுமதியின் விஷயத்திலும் ஜரூராக வேலை செய்தது. அவளைப் பார்த்தவுடனேயே பிடித்துவிட்டது.  அவளை உடனே மிகவும் நேசிக்கத் தொடங்கிவிட்டான்.  ஆனால் சுமதியைப் பெண் பார்த்தபோது அவனுடைய பெற்றோர்களுக்கு அத்தனை திருப்தி இல்லை. இன்னும் கொஞ்சம் அழகான பெண்ணைப் பார்க்கலாம் என்றுதான் நினைத்தார்கள்.  ஆனால் குமரேசன் சிறிதும் தயக்கமில்லாமல் ஒப்புக்கொண்டு விட்டதால்,  அவன் இஷ்டம் என்று இருந்து விட்டார்கள்.

நிச்சயதார்த்தம் முடிந்து தாம்பூலம் மாற்றிக்கொண்டவுடனே சுமதியின் போட்டோ ஒன்றை கேட்டு வாங்கிக்கொண்டு, அவளை பூஜை செய்ய ஆரம்பித்துவிட்டான். சென்னையிலிருந்து அவளுடன் அடிக்கடி மொபைலில் பேசினான்.  காதல் ரசம் சொட்டச் சொட்ட எஸ்.எம்.எஸ் அனுப்பினான்.

குமரேசன் பாலவாக்கம் பீச் ரோடில் ஒரு வீட்டையும் பார்த்து அட்வான்ஸ் கொடுத்துவிட்டான்.  தன் நண்பர்கள் வட்டாரத்திற்காக கல்யாண அழைப்பிதழை அமர்க்களமாக தனியாக அடித்தான்.  அவனுடைய அப்பா, “எதுக்குல ரெண்டு மூணு விதமான பத்திரிகை?  சரியான கோட்டிக்காரப்பயலா இருக்கியேன்னு” சொன்னதை அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

வெளியூர்களில் இருக்கும் எல்லா நண்பர்களுக்கும் பத்திரிகைகள் அனுப்பிவைத்தான்.  சென்னையில் இருக்கும் நண்பர்களை நேரில் சென்று அழைக்க ஆரம்பித்தான்.

வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணிக்கு தன் ஊர்க்காரனான ராஜதுரையைப் பார்க்க அவன் வேலைசெய்யும் அலுவலகம் வருவதாக போனில்  சொன்னான்.  ராஜதுரை அவனுடன் ஐந்து வருடங்கள் ஒன்றாக வேலை பார்த்தவன் மட்டுமின்றி; அவனுடன் மேன்ஷனில் ஒரே ரூமில் தங்கியிருந்தவன்.  தவிர ஒரே ஜாதிக்காரன்.  இருவருக்குள்ளும் ‘நான் பெரியவனா, நீ பெரியவனா’ என்கிற பொறாமையும், போட்டியும் ஒரு மெளன யுத்தமாக நடந்து கொண்டிருந்தன.

ராஜதுரைக்கு ஒரு வருடம் முன்பு திருநெல்வேலியில் சிறப்பாக கல்யாணம் நடந்தது.  அதற்கு இவனும் போயிருந்தான்.  அவன் மனைவி ரொம்ப அழகு.  குமரேசனுக்கு, அவனுக்கு முந்தி தன் கல்யாணம் நடந்து விட வேண்டும் என்கிற ரகசிய ஆசை இருந்தது.  எனினும் ராஜதுரை முந்திக்கொண்டான்.  தன் அழகான மனைவியுடன் ராஜதுரை தனிக்குடித்தனம் நல்லவிதமாக நடத்திக் கொண்டிருந்ததில் குமரேசனுக்கு பொறாமைத் தீ பற்றி எரிந்ததால், அவன் கூப்பிட்டும் அவனுடைய வீட்டிற்கு இவன் செல்லவில்லை.

வெள்ளிக்கிழமை ராஜதுரை ஆபீஸ் வாசலில் குமரேசனுக்காக காத்திருந்தான்.  அவனுடைய காத்திருத்தல் குமரேசனுக்கு சந்தோஷமாக இருந்தது.

“அட்வான்ஸ் வாழ்த்துக்கள் குமரேசா” கை குலுக்கினான்.

இருவரும் எதிரே இருந்த ரெஸ்டாரண்ட் சென்று அமர்ந்து கொண்டார்கள்.

“ஐயாம் வெரி ஹாப்பிடா… கல்யாணக்களை இப்பவே உன் முகத்தில் தெரியுது…”

“நீ என் கல்யாணத்துக்கு கட்டாயம் வரணும் துரை… ப்ராஜெக்ட்ல ரொம்ப பிஸின்னு ஏதாவது காரணம் சொல்லிடாத…உன் வொய்பையும் கண்டிப்பா கூட்டிக்கிட்டு வரணும்…”  ஒரு கல்யாண அழைப்பிதழை எடுத்து அவனிடம் கொடுத்தான்.

“அட, இந்தப் பொண்ணா?” அவனையும் மீறிக் கேட்டுவிட்ட ராஜதுரை, தன் தவறை உணர்ந்து நாக்கை கடித்துக்கொண்டான்.

“இவளை ஏற்கனவே தெரியுமா உனக்கு?”

“இவங்க குடும்பத்தை தெரியும்…”

அவசரப்பட்டு எதையோ உளறிவிட்ட ராஜதுரை, சட்டென ஒரு எச்சரிக்கை உணர்வுடன் சமாளிக்கப் பார்ப்பதாக குமரேசன் நினைத்தான்.

“இவங்க குடும்பத்தை உனக்கு எப்படித் தெரியும்?  சொந்தமா?”

“சொந்தமெல்லாம் கிடையாது… நம்ம ஜாதிங்கறதுனால தெரியும்.”

“சமாளிக்காத துரை… நீ எதையோ என்கிட்ட மறைக்கிற.  எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, என்னிடம் சொல்லிவிடு.”

ராஜதுரைக்கு சங்கடமான நெருடலாக இருந்தது.  எதிலும் ஒரு வேகம் பெற்றுவிடும் குமரேசன், தன்னை இனி விட்டு வைக்கமாட்டான்.

அவன் நினைத்த மாதிரியே, “ஸாரி துரை, நான் எவ்வளவு ஷார்ப்ன்னு உனக்குத் தெரியும்.  அட இவங்க குடும்பமான்னு நீ கேட்டிருந்தா, உன்னை நான் நம்பியிருப்பேன்.  ஆனா அட இந்தப் பொண்ணான்னுதான் நீ கேட்ட. உன்னோட டோன் இந்த சுமதியை உனக்குத் தெரியும் என்கிற டைப்ல இருந்திச்சு… நமக்குள்ள எதுக்கு ஒளிவு மறைவு துரை?” என்றான் விடாப்பிடியாக.

“குமரேசா, இதான் உன்கிட்ட பெரிய ப்ராப்ளம்.  தேவையில்லாம ரொம்ப டீப்பா அனாலிசிஸ் பண்ணுவ… நீ இவ்வளவு தூரம் கேட்டதால சொல்றேன்.  இந்தப் பெண்ணை எனக்குத் தெரியும்.”

“எப்படி?”

“போன வருஷம் எனக்கு பெண்பார்க்க ஆரம்பித்தபோது நான் இந்தப் பெண்ணை என் அம்மா, அப்பாவுடன் போய்ப் பார்த்தேன்.  எதோ சில லெளகீக காரணங்களால இந்தப்பெண் எங்களுக்கு ஒத்துவரலை.  சுமதிங்கற பெயர் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.  அதனாலதான் அவசரப்பட்டு, அட இந்தப் பொண்ணான்னு கேட்டுட்டேன்.  ஸாரி தப்பு என்பேர்லதான் குமரேசா…”

“நீ கேட்டதுல தப்பில்லை… ஆனா இதை என்கிட்ட மொதல்லயே சொல்லாம மென்னு முழிங்கினியே, அதான் தப்பு.”

“ஓகே குமரேசா எல்லாமே என் தப்புதான்.  சரி நான் உன்  கல்யாணத்துக்கு கண்டிப்பா வரேன்.  இப்ப நீ கிளம்பு, எனக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கு.”

இருவரும் எழுந்து நின்று கை குலுக்கி விடை பெற்றனர்.

ஆனால் குமரேசன் உற்சாகம் குன்றிப்போனான்.  இனம்புரியாத ஒரு நெருடல் அவன் மனதை அரித்துக் கொண்டிருந்தது.

அவனுடைய நெருடல் அச்சமாக மாறியது.  சுபாவப்படி குமரேசன் நிம்மதியிழந்தான்.  ராஜதுரை சொன்ன தகவல் பொய்யாக இருக்குமானால்…?  தீவிரமாக யோசித்தான்.

இரவுச் சாப்பாடு சாப்பிடப் போகாமல் அறையிலேயே அடைந்து கிடந்தான்.

அவன் மணந்து கொள்ளப் போகிறவளை, ராஜதுரையும் போய்ப் பெண் பார்த்துவிட்டு வந்திருக்கிறான் என்கிற எண்ணமே அவனுக்கு ஒவ்வாததாக இருந்தது.

உடனே தன் மொபைலில் சுமதியை அழைத்தான்.

“என்ன சுமி…சாப்பிட்டாச்சா?”

“ஓ சாப்பிட்டாச்சே… இன்விடேஷன் கொடுக்கிற வேலையெல்லாம் முடிஞ்சுதா?”

குமரேசன் தந்திரமாக மிகவும் அன்பான குரலில்,  “நீ இன்விடேஷன்னு சொன்னதும் ஞாபகம் வருது சுமி.  ஆமா, போனவருசம் ராஜதுரை என்கிற  ஒருத்தன் உன்னைப் பெண் பார்த்தானாமே?” என்று கேட்டான்.

சுமதி மிகவும் வெள்ளந்தியாக, “ஆமாங்க, ஞாபகம் இருக்கு,  அவுருதான் என்னை முதல்ல பெண் பார்த்தாரு… ஆனா எனக்குன்னு முடிச்சுப்போட நீங்க காத்திருந்தபோது, வேற யாரு என் கழுத்தில் தாலி கட்டிட முடியும்?” என்றாள்.

“ஆமா சுமதி, யாரோட பெண்டாட்டியையும் யாரும் கொண்டு போயிட முடியாது!  நீ எனக்குத்தான், நான் உனக்குத்தான்.  அதை யாராலும் மாத்த முடியாது.  ஆமா ஏன் அந்தச் சம்பந்தம் முடியாமப் போயிருச்சி?”

“அவனுக்கு என்ன காரணத்தாலோ என்னைப் பிடிக்கல…அதுதாங்க உண்மை.  அதனால அந்த அலையன்ஸ் க்ளிக் ஆகல.  அது மனசுக்குள்ள எனக்கு கொஞ்சகாலம் வருத்தமா இருந்திச்சு.  நானும் மனுஷிதான இல்லீங்களா?  ஆனா இப்ப எப்பேர்ப்பட்ட ஒருத்தருக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு பார்க்கறப்ப, அன்னிக்கி பட்ட வருத்தமெல்லாம் ஒன்னுமேயில்லீங்க…”

“அப்ப அந்த ராஜதுரைக்கு உன்னைப் பிடிக்கலைங்கறதுதான் காரணமே தவிர வேறு ஒண்ணும் காரணம் இல்ல… அப்படித்தானே?”

“ஆமாங்க.”

“சரி சுமி, எனக்குப் பசிக்குது,  நாளைக்கு கூப்பிடறேன்.”

“குட்நைட் டார்லிங், ஸ்வீட் ட்ரீம்ஸ்.”

குமரேசன் பதில் சொல்லாது மொபைலை துண்டித்தான்.

அவனுக்கு உண்மை தெரிந்துவிட்டது.  உண்மை மிக மோசமான கசப்பாக இருந்தது.

அவன் மணந்துகொள்ளப் போகிறவளை, அவனையும் முந்தி ராஜதுரை போய்ப் பெண் பார்த்துவிட்டு, அவளை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டான் என்பதே அவனுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.

கண்ணாடிமுன் நின்று தன் முகத்தைப் பார்த்தான்…

‘எங்கேயோ ஒரு துக்கடா வேலையில் இருக்கும் ஒருத்தன் பார்த்துப் படிக்கவில்லை என்று நிராகரித்தவளை தான் கல்யாணம் செய்து கொள்வதா?  எவ்வளவு பெரிய அவமானம்?

ராஜதுரை என்னைப்பற்றி என்ன நினைப்பான்?  தான் பார்த்துக் கழித்துக் கட்டியவளை – பாவம் இவன் போய்க் கட்டிக்கொள்ளப் போகிறான் என்று நினைத்து பரிதாபப் பட்டிருப்பான் !  மனசுக்குள் தன்னைப்பற்றி ஏளனமாகவும் நினைத்திருப்பான்.

நினைக்க நினைக்க தாங்க முடியவில்லை குமரேசனால்.  அவமான உணர்வில் மனசும், உடம்பும் கூசின.

கோபத்தில் கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தின் மீது காறித் துப்பினான்.

சற்றும் யோசிக்காமல் (impulsive) அடுத்த கணமே தன் அப்பாவை மொபைலில் தொடர்பு கொண்டான்.

“அப்பா, என் கல்யாணத்த உடனே நிறுத்துங்கப்பா…” கத்தினான்.

“ஏண்டா, என்னாச்சு குமரேசு?” அப்பா பதறினார்.

“காரணம் எதுவும் கேக்காதீங்க…. உடனே இப்பவே எல்லாத்தையும் நிறுத்துங்க.”

“டேய் சுமதி மனசு என்ன பாடுபடும்?  அவ ஒரு மென்மையான சின்னப் பொண்ணுடா, இது மஹா அக்கிரமம்டா.  உனக்கு கோட்டி பிடிச்சிடிச்சா?”

“நான் சொல்றத உடனே நீங்க கேக்கலைன்னா இன்னிக்கி ராத்திரியே நான் தூக்குல தொங்கிடுவேன்… ஒரேமகன் நான் வேணுமா, இல்ல அந்த சுமதியா நீங்களே முடிவு பண்ணிக்குங்க.”

“சரிடா, இப்பவே கல்யாணத்தை நிறுத்திடறேன்… நீ எதுவும் ஏடாகூடமா பண்ணிக்காதடா…” அப்பாவின் குரல் தழுதழுத்தது.

செருப்பை போட்டுக்கொண்டு வெளியே சென்றான்.  அருகில் இருந்த டாஸ்மாக் கடையில் அரை பாட்டில் சரக்கு வாங்கி கடையின் பின்புற மறைவான பகுதியில் ஊறுகாயைத் தொட்டுக்கொண்டு முட்ட முட்ட குடித்தான்.

ஏராளமான மப்பில் மேன்ஷன் ரூமுக்கு வந்து கட்டிலில் சரிந்தான். “டேய் ராஜதுரை… கழிசடையான நீயே வேண்டாம்னு சொன்னவளை நான் கட்டுவேனாடா?  நான் உன்னைவிட எப்பவுமே பெரிய ஆளுதாண்டா” என்று கர்ஜித்தான்.

உடனே மட்டையாகிவிட்டான்.

விடிகாலை நான்கு மணிக்கு எழுந்தான்.  சிறுநீர் கழித்துவிட்டு, மொபைலைப் பார்த்தபோது, சுமதியிடமிருந்து 42 மிஸ்டு கால்களும்; 15 மெசேஜ்களும்; அப்பாவிடமிருந்து 6  மிஸ்டு கால்களும் இருந்தன.

தலை கனத்தது.  தூக்கத்தைத் தொடர்ந்தான்.

சனிக்கிழமை காலை ஒன்பது மணிவரை தூங்கிக் கொண்டிருந்தவனுக்கு ரூம் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.

சிரமப்பட்டு எழுந்து போய்க் கதவைத் திறந்தான்.

அங்கு இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்கள் நின்று கொண்டிருந்தனர்.

“நீதானே குமரேசன்?”

“ஆமாங்க…. என்ன விஷயம்?”

“உனக்கு ஒண்ணுமே தெரியாதா…இல்ல நடிக்கிறயா?”

“சத்தியமா எனக்கு எதுவும் தெரியாதுங்க…”

“நெல்லைல சுமதிங்கற ஓரு பொண்ணு லெட்டர் எழுதிவச்சிட்டு நேத்து நைட்டு தூக்குல தொங்கிருச்சு…பொண்ணோட அப்பா உன்மேல கம்ப்ளெயின்ட் கொடுத்திருக்கிறார்.  நீ இப்ப உடனே ஸ்டேஷனுக்கு கிளம்பு…”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *