பத்தாம் வகுப்பு பொது தேர்வு கூடம் . மாணவன் கோபு அறையிலுள்ள தேர்வு கண்காணிப்பாளர் கொடுத்த வினாத்தாளைப் பயத்துடன் வாங்கினான்.
படித்து முடித்ததும் மயக்கம் வரும்போலிருந்து.
அதில் இரண்டொரு கேள்விகளுக்கு மட்டுமே விடை தெரியும். அதை எழுதினால் நிச்சயம் பாஸ் மதிப்பெண்கள் வராது. அப்புறம் மயக்கம் வராதா பின்னே..?
ங்கே.. ! என்று விழித்தான் .
எல்லோருக்கும் வினாத்தாட்களை விநியோகம் செய்துவிட்டு பத்து வரிசைகளுக்கு முன் உள்ள உயரமான மேடையில் அமர்ந்து அந்த கண்காணிப்பாளர் தன்னைக் கவனிப்பது கண்டதும் இவனுக்கு உதறலெடுத்தது .
சட்டென்று தலையைக் குனிந்து கொண்டு தான் எழுத்துவதாகப் பாவலா செய்துகொண்டு அப்படியே தேர்வு அறையை நோட்டமிட்டான்.
தன்னைப் போலவே பலர் விழிப்பது இவன் கண்ணுக்குத் தெரிந்தது .
எதிரே அமர்ந்திருக்கும் நிர்மல் அவன் பாட்டுக்க எழுதிக் கொண்டிருந்தான்.
அவன் படிப்பவன். வகுப்பிலேயே முதல் மாணவன் படித்திருப்பான் கெட்டிக்காரன் ..எழுதுவான் என்று நினைத்துக்கொண்டான்.
கோபு மெல்ல எக்கிப் பார்த்தான் . ஒன்றும் புரியவில்லை.
அடிக்கடி தலையைத் தூக்கி எட்டிப் பார்த்தால் கண்காணிப்பாளர் கறார் பேர்வழி , கண்கொத்தி பாம்பு. பிடித்து விடுவார் என்பது இவனுக்குத் தெரியும். சென்ற வருடம் இதே போல் சில மாணவர்களைப் பிடித்துத் தேர்வே எழுதவிடாமல் செய்திருக்கிறார் என்கிற நினைவு வர.. மீண்டும் வெள்ளைத்தாளில் பேனா படாமல் எழுதினான்.
இரண்டொரு வினாடிகளிலேயே என்னத்தை எழுதுவது ..? என்கிற வெறுப்பு வர… படித்த ஒன்றிரெண்டுகூட சரியாக நினைவுக்கு வரவில்லை. எழுதுவது போல பாவனை செய்து பார்வையை ஓடவிட்டான்.
தன்னுடைய நேர் பெஞ்சுக்கு அடுத்த பெஞ்சில் அமர்ந்திருக்கும் கலியாணம் இடுப்பிலிருந்து அவசர அவசரமாக ‘ பிட் ‘ எடுத்து சாதுரியமாக பெஞ்சுக்கு அடியில் வைத்து எழுதுவது தெரிந்தது.
பக்கவாட்டு பெஞ்சில் அமர்ந்திருக்கும் சிவா….. காலுக்கடியில் புத்தகத்தைப் போட்டு காலாலேயேப் புரட்டி எழுவதைப் பார்த்ததும்… ‘ பாவி ! அறைக்குள் புத்தகத்தை எப்படி எடுத்து வந்திருப்பான்..? ‘ நினைப்பு வந்தது .
அவனுக்குப் பின்னால் உள்ள சுரேஷ். ‘ அடேய்..! கொஞ்சம் காட்டுடா..? ‘ என்று பரிதாபமாக கிகிசுகிசுப்பது காதில் விழுந்தது. மற்றபடி மயான அமைதி. மின் விசிறிகள் மட்டும் உஸ்ஸென்ற இரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்தது .’
கோபு அப்படி ஒன்றும் படிப்பாளி இல்லை. பெரும்பாலும் ‘ பிட் ‘ அடித்து எழுதுவதுதான் இவனுக்குப் பழக்கம். நேற்று , அதற்கு முதல் நாள் தேர்வுகளைக்கூட இப்படித்தான் கண்காணிப்பாளர் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ‘ நன்றாக ‘ எழுதினான். ஆனால் இன்றைக்கு..?
இன்று இவர்தான் தன் அறைக்குத் தேர்வு கண்காளிப்பாளர் என்பது இவனுக்கு நேற்றேத் தெரியும். கண்டிப்பானவர் , கராறானவர்.. இவரிடம் வாலாட்டினால் ஒட்ட நறுக்கிவிடுவார் என்பது தெரிந்தே இவன் ஓரளவிற்குப் படித்துக்கொண்டுதான் வந்தான். மனதிற்கு முக்கியம் என்று பட்ட கேள்விகளைத் ‘ தேர்வு ‘ செய்து படித்தான். இவர் மேலுள்ள பயம் வழக்கம் போல் பிட் எடுத்துக்கொண்டு வரவில்லை.
சமாளித்துக்கொள்ளலாம்… ‘ பாஸ்’ மதிப்பெண்கள் வாங்கும் அளவிற்கு எழுதினால் போதும் என்று நினைத்துக் கொண்டு வந்தான். ஆனால் வினாத்தாளை வாங்கிய பிறகு தான் தெரிந்தது தன்னிடம் உள்ள சரக்கிற்கு அந்த மதிப்பெண்கள் வராதென்பது .
இப்போது இரண்டொருவர் ‘ பிட் ‘ அடிப்பதைப் பார்த்ததும் இவனுக்கும் துணிச்சல் வர நன்றாகப் பார்த்தான். காப்பி அடிப்பதும், பிட் அடிப்பதும் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருந்தது.
கண்காணிப்பாளரைக் கவனித்தான். அவர் கண்காணிப்பது போல நடிக்கிறாரென்பது புரிந்ததும் தூக்கிவாரிப்போட்டது.
கண்டிப்பானவர்…. இன்று ஏனிப்படி மாறிப்போனார்…? !
வடக்கே ஒரு மாணவன் தன் எதிரில் கத்தி ஒன்றை விரித்து வைத்துவிட்டு .. ‘ பிடித்தால் குத்திவிடுவேன் ! ‘ என்று மிரட்டி புத்தகம் பார்த்து எழுதினான்..?! அதுபோல இங்கு எவராவது மிரட்டி விட்டார்களா. ?! அப்படியே இருந்தாலும் இவர் அதற்கெல்லாம் பயப்படுபவரில்லையே..! அஞ்சாநெஞ்சராச்சே..! பின் ஏனிப்படி மாறிப்போனார்..? – நினைத்துக்கொண்டே தேர்வு அறையை சுற்றிப் பார்த்தான்.
பயந்து பயந்து காப்பி அடித்து எழுதிய மாணவர்களெல்லாம் இப்போது துளிர்விட்டு பயமில்லாமல் எழுதுவது புரிந்தது.
ஏன்… ஏன்… ஏனிப்படி மாற்றிப்போனார் ..? மூளையைக் கசக்கினான்.
யோசிக்கக் யோசிக்க… புரிந்தது .
அவ்வளவுதான் !! கடகடவென்று எழுதினான் .
பத்து நிமிடங்களில் எழுதி முடித்து , மடித்து ஆசிரியரிடம் கொடுக்க வந்தபோது அவர் இவனை ஆச்சரியத்துடன் பார்ப்பது தெரிந்தது.
‘ அதற்குள்ளா எழுதிவிட்டாய் ?? ! என்று பார்வையாலேயே கேட்பது புரிந்தது.
கோபு அவர் பார்வை , அதன் கேள்வி எதையும் லட்சியம் செய்யாமல் ..
” சார் ! இது உங்களுக்கு..! ” என்று சொல்லி….. பதில் எழுதிய தாட்களை அவரிடம் கொடுத்துவிட்டு அறையை விட்டு வெளியேறி விடுவிடுவென்று வீடு நோக்கி நடந்தான்.
அவன் செல்வதைப் பார்த்துக் கொண்டே அவர் வியப்புடன் அவன் தந்த தாட்களைப் பிரித்து படித்தார்.
மதிப்பிற்குரிய அப்பா !
மகன் படிக்காதவன் . தான் எப்போதும்போல் கண்டிப்பு, கறாராக இருந்தால் தேர்வில் வெற்றி பெற மாட்டான் என்கிற காரணத்தால் தங்கள் இயல்பிலிருந்து மாறி தாங்கள் தரம் தாழ்வது என் மனதிற்குப் பிடித்தமில்லை. எனவே நான் தேர்வு எழுதவில்லை. அதற்காக என்னை மன்னிக்கவும். நீங்கள் என்றும் போல இருக்கவே ஆசை. தயவு செய்து என்றும் தங்கள் இயல்பிலிருந்து மாற வேண்டாம்.
இப்படிக்கு
உங்கள் மகன்
கோபு .
படித்து முடித்தவர் நெகிழ்ந்து, தலை குனிந்தார்.