இன்ப துன்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,650 
 
 

(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருச்சி 4-5-43

அன்புள்ள ஹம்ஸா!

நீ என்னுடன் இரண்டு நாட்கள் தங்கி யிருந்த போதே உன் முகத்தில் ஒருவிதமான ஆச்சரிய பாவம் குடி கொண்டிருந்ததை நான் பார்த்தேன். ஆனால் அந்த ஆச்சரியத்திற்குக் காரணம் என்னவென்று எனக்கு அப்பொழுது தெரியவில்லை. இப்பொழுது உன் கடிதத்தைப் பார்த்தபோது தான் அந்தக் காரணம் எனக்குத் தெரிந்தது.

“எந்நேரம் பார்த்தாலும் ஈஸிச் சேரில் சாய்ந்து கொண்டு, எப்போதும் வாய் ஓயாமல் இருமிக் கொண்டிருக்கும் உன் கணவரை இரண்டு நாட்கள் என்னால் பார்த்துச் சகிக்க முடியவில்லையே. அவரை இரண்டு வருஷங்களாக நீ எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்? கை நிறைந்த பொன்னைவிட கண் நிறைந்த கணவனே மேல் என்பார்கள். அப்படியிருக்க நீ எப்படி அந்த மனிதரைக் கல்யாணம் செய்துகொண்டாய்? அவருக்குச் செய்யும் சிச்ருவுை போதாதென்று அவருடைய நாலு குழந்தைகளையும் வேறு கட்டி அழுதுகொண்டிருக் கிறாயே. நிஜமாகவே நீ அவருக்கு மனைவியா யிருக்கிறாயா? அல்லது அவர் வீட்டு வேலைக்காரியா யிருக்கிறாயா? – இத்தனை கஷ்டத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் நீ எப்பொழுது பார்த்தாலும் எப்படி மலர்ந்த முகத்துடன் இருக்கிறாய்? அந்த ரகசியத்தை எனக்குச் சொல்லித் தான் தீரவேண்டும்” என்றெல்லாம் நீ உன் கடிதத்தில் எழுதியிருக்கிறாய். இதோ, அந்த ரகசியம் என் கதையில் இருக்கிறது.

***

சென்னையில் நான் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு ஒரு சிநேகிதர் கிடைத்தார். அவர் எனக்கு எப்படிச் சிநேகிதமானார். அப்புறம் எப்படிக் காதலரானார் என்பதைப் பற்றியெல்லாம் இப்பொழுது நான் சொல்லத் தயாராயில்லை; அப்படிச் சொல்வதும் அவசியமில்லை.

வைத்தியப் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்த அவர், ஹாஸ்டல் வாசத்தை விரும்பாமல் ஒரு தனி அறை எடுத்துக் கொண்டு வாசஞ் செய்து வந்தார். எல்லாக் காதலர்களையும் போல நாங்களும் கடைசியில் கல்யாணம் செய்து கொள்வதென்றும், இல்லாவிட்டால் பிராணனை விடுவதென்றும் தீர்மானம் செய்து கொண்டிருந்தோம். இந்தத் தீர்மானத்தை நாங்கள் கை விடும்படியான ஒரு சந்தர்ப்பம் என் வாழ்க்கையில் நேர்ந்தது.

என்னுடைய தங்கை தவமணியை உனக்குத் தெரியும். அவள் குரூபி என்பதையும் நான் உனக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவளுடைய கல்யாண விஷயத்தில் ஒரு தகராறு இருந்து வந்தது. அழகில்லை என்பதற்காக அவளைப் பார்க்க வந்த வரன் வீட்டுக்காரர்களெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு வரதட்சணை கேட்டனர். அப்படிக் கொடுத்தால் அவளுக்கு அழகு தானே வந்துவிடுமென்பது அவர்களுடைய எண்ணம் போலும்!

கடைசியில் ஒரு சம்பந்தம் வந்தது. நாலு பிள்ளைகளுக்குத் தகப்பனாரான பின் தன் மனைவியைப் பிரிந்த ஒருவர், என்னை இளையாளாக அடைய இஷடப்பட்டார். அதற்குச் சம்மதித்தால் அவர்தம்முடைய தம்பிக்கு என்தங்கையை வரதட்சணை யில்லாமல் கல்யாணம் செய்து வைப்பதாக வாக்களித்தார். அப்பொழுது என் தங்தை திருவாங்கூர் பாங்கியில் பணம் போட்டு மோசம் போயிருந்த சமயம். மேற்சொன்ன சம்பந்தத்தை நிராகரிப்பதா யிருந்தால் பணம் நிறையத் தேவை. அதற்கு வழியில்லாத அவர் எந்த விதமான முடிவுக்கும் வர முடியாமல் திணறி, எனக்குக் கடிதம் எழுதி என்னை அபிப்பிராயம் கேட்டிருந்தார்.

அந்தக் கடிதத்தைப் படித்ததும் நான் எந்த விதமான நிலையை அடைந்தேன் என்பது இங்கே விவரிக்க முடியாத விஷயம். ஒன்றும் தோன்றாமல் அந்தக் கடிதத்தை கொண்டு போய் அவரிடம் கொடுத்தேன். அதைப் படித்த பிறகு அவர் நடந்து கொண்ட விதம் எனக்கு அளவில்லாத வியப்பையும் திகைப்பையும் அளித்தது.

என் கண்களில் கசிந்து வரும் கண்ணிரைக் கண்டதும், “இதென்ன பைத்தியமா உனக்கு? ஏன் அழுகிறாய்? கல்யாணமென்றால் யாராவது கவலைப் படுவார்களோ?” என்று அவர் கேட்டார்.

இதற்கு நான் என்ன பதில் சொல்வது? பேசாமல் இருந்தேன். அவரே மேலும் தொடர்ந்து சொன்னார்:

“நான் சொல்வதைக் கேள்; என்னைக் கல்யாணம் செய்து கொண்டால் எவ்வளவு தூரம் இன்பம் அனுபவிக்க முடியும் என்று

கற்பனை செய்து கொள்வதற்குப் பதிலாக, எவ்வளவு தூரம் துன்பம் அனுபவிக்க முடியும் என்று கற்பனை செய்து பார். டாக்டரான பின் எனக்கு நிறையக் கேசுகள் கிடைத்தால் தான் ஆச்சு. இல்லாவிட்டால் துன்பத்துக்குக் கேட்க வேண்டுமா? அப்படியே கேசுகள் தான் நிறையக் கிடைக்கட்டுமே; அதனாலென்ன? துன்பந் தீர்ந்துவிடுமா? ஒரு போதும் தீராது. உன்னிடம் ஒரு நிமிஷமாவது என்னை ஒரு நோயாளியும் பேச விடமாட்டான். தூங்கும் போதுகூட, “டாக்டர் ஸார், டாக்டர் ஸார் ஆபத்து, ஆபத்து!” என்று எவனாவது வந்து கதவை இடிப்பான். இரும்பு மனம் படைத்தவன்கூட அவன் இடிக்கு அசையாமலிருக்க முடியாது. எழுந்து போக வேண்டித்தான் வரும்.

“இதோ ஒரு நிமிஷத்தில் வந்துவிட்டேன்” என்று நான் உன்னிடம் சொல்லிவிட்டுப் போவேன். ஆனால், ஒன்பது மணி நேரத்திற்குப் பிறகுதான் திரும்பி வருவேன். இம்மாதிரி சமயங்களில் உனக்கு என்மீது எவ்வளவு காதல் இருந்தாலும் அது காற்றாய்ப் பறந்துவிடும்.

“இப்பொழுது உன்னை இளையவளாக அடைய விரும்புபவர் வேலையிலிருந்து விலகிய சர்க்கார் உத்தியோகஸ்தர் என்று இந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறது. என்னை மறந்து நீ அவரைக் கல்யாணம் செய்து கொண்டால் எவ்வளவு சந்தோஷமாயிருக்கலாம், தெரியுமா? நாள் பூராவும் அவர் உன் பார்வையிலேயே இருந்து கொண்டிருப்பார், அதனாலென்ன, அலுப்பு ஏற்பட்டுவிடுமா? அப்படி ஏற்பட்டால் நாலு குழந்தைகள் இருக்கவே இருக்கின்றன. அவற்றின் கள்ளங் கபடற்ற சேஷ்டைகள் உனக்கு எவ்வளவோ குதுகலத்தைக் கொடுக்கும். என்னைக் கல்யாணம் செய்து கொண்டால் என் அம்மாவும் அக்காவும் செய்யும் கொடுமைகள் உனக்கு என்ன குதுகலத்தைக் கொடுக்கும்?”

“இன்னொரு விஷயம்; கிழவனைக் கல்யாணம் செய்து கொண்டால் சீக்கிரம் விதவையாகி விடுவோம் என்று சிலர் நினைப்பதுண்டு; நீயே சொல்லு; வாலிபனைக் கல்யாணம் செய்து கொள்கிறவள் மட்டும் விதவையாவதில்லையா?”

“எல்லாவற்றையும் விட இந்தக் கல்யாணத்தில் இன்னொரு விசேஷம் இருக்கிறது. வாழ்க்கையில் தியாகத்தைப் போல் சிறந்தது வேறொன்றும் கிடையாது. செத்த பிறகும் வாழ வைக்கும் சிறப்பான குணம் தியாகத்தினிடந்தான் இருக்கிறது. அதுவும் உன் தங்கைக்காக நீ இந்த அற்ப தியாகத்தைக் கூட செய்யவில்லையென்றால் மனித ஜன்மம் எடுத்துத் தான் என்ன பிரயோஜனம்? “பார்க்கப்போனால் ‘இந்த உலகமே என்னத்திற்கு?’ என்று எனக்குத் தோன்றுகிறது. அது இருக்கத்தானே நாம் வாழ்க்கை என்று ஒன்றை ஆரம்பித்து விடுகிறோம்? அந்த வாழ்க்கையில் காதலென்றும் சாதலென்றும் கதைத்துக் கொண்டு கண்ணிர் விடுகிறோம்? இன்பமென்றும் துன்பமென்றும் எண்ணி இன்னலுறுகிறோம்? நீயே நினைத்துப் பார் எல்லாவற்றுக்கும் காரணம் நம்முடைய கற்பனை தான். இந்தத் தொல்லை தொலைவதற்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. அந்த வழி துன்பத்தையும் இன்பமாகக் கருதுவதே. என்ன நான் சொன்னதெல்லாம் புரிந்ததா?” என்று கேட்டுக் கொண்டே அவர்தம் ஆசனத்தை விட்டு எழுந்தார்.

நான் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டேன். “எல்லாம் புரிந்தது. ஆனால் நீங்கள்….?” என்று இழுத்தேன்.

“நான் தற்கொலை செய்து கொள்ளமாட்டேன். பைத்தியக்காரனாகவும் ஆகமாட்டேன். சந்நியாசியாகவும் போகமாட்டேன். வேறொரு பெண்ணை ஜம்மென்று கல்யாணம் செய்து கொள்வேன். உன்னைக் கல்யாணம் செய்து கொண்டிருந்தால் என்னென்ன இன்பங்கள் அநுபவிப்பேன் என்பதற்குப் பதிலாக என்னென்ன துன்பங்கள் அநுபவிப்பேன் என்று கற்பனை செய்து கொள்வேன். ‘நல்ல வேளையாக அந்தத் துன்பங்களெல்லாம் இப்பொழுது நமக்கு இல்லையல்லவா?’ என்று எண்ணிச் சந்தோஷப்படுவேன். புதுமணப் பெண்ணிடம் நான் அநுபவிக்கும் துன்பங்களைக்கூட இன்பமாகவே பாவித்துக் கொள்வேன். அதை எண்ணி யெண்ணி எனக்குள்ளேயே நான் இன்பம் அநுபவித்துக் கொள்வேன். உன்னைத் தற்செயலாக எங்கேயாவது சந்தித்தால் என் சகோதரிக்குச் சமமாகப் பாவிப்பேன்.”

இதற்கு மேல் நான் அவரிடம் என்ன பேசுவது, ஹம்ஸா?

***

எனக்கும் அந்த சர்க்கார் உத்தியோகஸ்தருக்கும் கல்யாணமாயிற்று. அவருடைய தம்பியும் என் தங்கையைக் கல்யாணம் செய்து கொண்டு தனிக் குடித்தனம் சென்று விட்டார்.

அவர் சொன்ன முறைப்படி என் வாழ்க்கையின் இன்ப துன்பங்களைக் கற்பனை செய்து கொள்ள ஆரம்பித்தேன். என் கணவருக்கு என்னைப் பற்றியோ, என் அழகைப் பற்றியோ கவலை ஒன்றும் கிடையாது. அவருடைய கவலையெல்லாம் தம்முடைய குழந்தைகளை நான் சரிவரக் கவனிக்கிறேனா, இல்லையா என்பதில் தான் இருக்கிறது. எவ்வளவு மேலான குணம்! என்ன பெருந்தன்மை!

“பரிமளா” என்று என் கணவர் என்னை அன்புடன் அழைக்கும்போது, அவருடைய அன்பில் நான் பேரின்பத்தைக் காண்கிறேன். “அந்தப் பாழாய்ப்போன பேரின்பம் ராஜாத்தி மாதிரி இருக்கும் உனக்கு எதற்கு?” என்று நீ என்னைக் கேட்கலாம். ஆனால், ஹம்ஸா! நான் அந்த இன்பத்தைக் கூடக் காணாமல் வேறு எந்த இன்பத்தைத்தான் காண்பேனடி?

என் கணவர் என்னை எதிர்பாராமலே படுக்கையறைக்குச் சென்று விடுவார். பின்னால் நான் பால் கொண்டு போய்க் கொடுப்பதற்குள் அவர் தூங்கி விடுவார். நானும் அவரைப் போல நிம்மதியாகத் துங்கவேண்டு மென்பதில் தான் அவருக்கு எவ்வளவு ஆசை.

என் முகத்தை என் கணவர் எப்போதும் மூக்கு முழியற்ற சந்திர பிம்பத்துக்கு ஒப்பிட்டுப் பழித்ததில்லை; கண்களைக் கருவண்டுகளென்றும், கன்னங்களைக் கோவைக் கனியென்றும் சொல்லி அவர் என்னை நகைத்ததில்லை. நீயே சொல்லு; நான் அந்த வாலிபரான டாக்டரைக் கல்யாணம் செய்து கொண்டிருந்தால், அவர் என்னை அப்படியெல்லாம் சொல்லிப் பழிக்காமலிருப்பாரா?

சமய சந்தர்ப்பமின்றிச் சதா தம்பதிகளைக் கவனிப்பதிலேயே கண்ணுங் கருத்துமாக யிருக்கும் மாமியார், நாத்தனார் முதலியவர்களுடன் குடித்தனம் செய்வதை விட, இந்த நாலு குழந்தைகளுடன் கூடிக் குடித்தனம் செய்வது எவ்வளவோ மேலாயிருக்கிறது. அவை, “அம்மா! அம்மா!” என்று தங்கள் அமுத கானத்தால் என்னை அழைக்கும் போதெல்லாம் நான் என்னையே மறந்து இன்ப சாகரத்தில் ஆழ்ந்து விடுகிறேன்.

ஆகக்கூடி அவர் சொன்ன முறையில் நான் வெற்றியைத்தான் காண்கிறேன். இதுதான் என் வாழ்க்கையில் நான் மலர்ந்த முகத்துடன் இருப்பதன் ரகசியம், ஹம்ஸா!

இது உனக்குப் பிடிக்கவில்லை யென்றால், அதற்கு நான் என்ன செய்வது?

இப்படிக்கு,
உன்னை என்றும் மறவாத,
பரிமளா

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.
– முல்லைக் கொடியாள், மூன்றாம் பதிப்பு: 1952, ஸ்டார் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *