இன்பமான பூகம்பம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 19, 2024
பார்வையிட்டோர்: 2,541 
 
 

(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6

சாரதம் படி ஏறி வந்ததுமே மருமகள் சாந்தா வீரீட்டாள்.

“யார் மாமி இந்த மண்டைக் கனம் பிடிச்ச பொண்ணு?”

“ஓ, நீ வந்துட்டியா சாந்தா? ஆபீஸ் இல்லியா”

“உங்க புள்ளைதான் வரச் சொன்னார். அரை நாள் லீவு”

”என் பிள்ளை சொல்லி நீ எதையும் கேட்டதா சரித்திரம் இல்லியே?” என்றாள் சாரதம் நக்கலுடன். 

“எனக்கு இஷ்டமே இல்லை.. ஆனா அவர் வற்புறுத்தினார். தன்னோட சித்தப்பா பொண் ஸ்டேட்ஸ்லேர்ந்து வந்துவிட்டதாகவும் என்னைப் பார்க்க ரொம்ப ஆர்வமும் ஆவலுமாக இருப்பதாகச் சொன்னார். இங்கே வந்தா வீட்ல இந்த லங்கிணி மட்டும்தான் இருக்கா.” 

“ஏய். என்ன சொன்னா?” 

“நானும் அவரும். இந்த வீட்டை விட்டுத் தனி குடித்தனம் போய்த் தொலையணுமாம்.”

“இவ யார் அதைச் சொல்றதுக்கு?” கேட்டு விட்டு சாரதம் ரேவதியைப் பார்த்துக் கண் சமிக்ஞை செய்தாள். ரேவதியும் புரிந்து கொண்டு வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டாள்.

“அதான் புரியலே. என்ன உரிமைன்னு கேட்டா, ‘நான் இந்த வீட்டு ஒனர்’ங்கறா.” 

“அது என்னமோ உண்மைதான் சாந்தா! யார் கண்டா, என்னையும் உன் மாமனாரையும் கூட குடும்பத்தோட வெளியேறச் சொன்னாலும் சொல்லுவா. நீ இப்போதைக்குப் பேசாம இரு. பாபு ஆபிஸ்லேர்ந்து வரட்டும்…. ஏம்மா ரேவதி, சாந்தாவுக்கு ஜார்ஜட் புடவைகளைக் காட்டினாயா? அவளுக்கும் ஒண்ணோ ரெண்டோ கொடுக்கணும். பாடி ஸ்ப்ரே தரணும்னைல்லாம் நேத்து சொல்லிட்டிருந்தியே?” 

“பெரியம்மா, அது நேத்து சொன்ன கதை..மாமனார் மாமியரைத் துச்சமா மதிச்சு நடக்கறவங்கள்ட்ட எனக்கு எப்பவுமே அன்பு அபிமானம் இதெல்லாம் இருக்காது.”

“ஆமாம். உன் பெரிய அன்புக்கும் அபிமானத்துக்கும் தான் நான் வீங்கிட்டிருக்கேனாக்கும்!” 

“பெரியம்மா இவ பேசறதைக் கேட்கறப்ப, ஜார்ஜட் புடவை, அமெரிக்கன் வைரம், அப்புறம் செண்ட் சோப் இதெல்லாம் இவளுக்குத் தேவை இல்லைன்னு தெரியுது. சரி நீங்க ரெண்டு பேரும் என்னைப் பத்தி என்னவெல்லாம். பேசணுமோ அதையெல்லாம் பேசிட்டிருங்கோ… நான் வெளியே போய்ட்டு வரேன். இன்னும் கால்மணி நேரத்தில் கார் வந்துடும்”

“காரா?” என்றாள் சாரதம். 

“ஆமாம். சத்யாகிட்ட காலையில் சொல்லி வைச்சிருந்தேன். டூரிஸ்ட் காருக்கு ஏற்பாடு செய்துடறேனான், இவ வர்றத்துக்கு பத்து நிமிஷம் முன்னால போன் வந்தது. கார் வரும்னு” 

‘“எங்கே போகலாம்னு இருக்கே?” 

”அது என் சொந்த விஷயம், பெரியம்மா! உங்க மருமகள் முன்னாடி சொல்ல விருப்பம் இல்லே, அப்புறம் தனியா உங்ககிட்ட சொல்றேன்!” 

“ஏன் இப்பவே சொல்லேன்… நான் மாடிக்குப் போயிடறேன்,” என்றாள் சாந்தா. 

“பாவம் நீ… இத்தனை நேரமாக் கால் கடுக்க நிக்கறே… மாடிப்படி ஏறினா அது ரொம்ப வலிக்கும்!” 

சொல்லிவிட்டு குளியல் அறையை நோக்கி ரேவதி நடந்தாள். 


ரேவதி வீடு திரும்பின போது இரவு மணி ஒன்பது. காரிலிருந்து அவளுடன் வீராவும் இறங்கினான். 

“வீரா நீ எப்படி…?” என்று வைதேகி இழுத்தாள். 

”நான்தான் வீரா ஆபிசுக்கும் போல் கார்ல தூக்கில் போட்டுக்கிட்டு ஊர் சுத்தக் கிளம்பினேன்…” 

“என்னடா வீரா, என்ன விஷயம்?” என்றார் சாம்பசிவம். 

”அதெல்லாம் ஒன்றுமில்லை அப்பா! மெட்ராஸ்ல மாடர்னா கட்டியிருக்கிற சில அபார்ட்மென்ட்ஸைப் பார்க்கணுமனு சொன்னா, எங்க கம்பெனி கட்டியிருக்கிற ஏழெட்டு கட்டிடங்களைக் காட்டினேன். சில பில்டிங்ஸ் அமெரிக்காவில் இருக்கிற மாதிரியே இருக்குன்னா!”

கார் மறுபடியும் மறுநாள் காலை ஒன்பது வரவேண்டும் என்று டிரைவரிடம் சொல்லி, டிரிப் ஷீட்டிலும் எழுதிவிட்டு ரேவதி ஹாலில் கும்பலில் கலந்து கொண்டாள். 

“வீரா நீயும் ரேவதியும் சாப்பிட உட்காருங்க”

“சாப்பிட்டாச்சு”

“எங்கேடா?”

“உட்எண்ட்ஸ்“ என்றாள் ரேவதி. பிறகு ”பெரியம்மா, இப்ப நான் விட்ட இடத்திலிருந்து தொடர போறேன்!

“நாம என்ன பேசிட்டிருந்தோம்னு இவங்களுக்கெல்லாம் தெரியாது. அதனால முதல்லேர்ந்தே சொல்லு ரேவதி!” 

பாபு முன்னேறி வர, சாந்தாவும் அவனோடு ஒட்டிக் கொண்டாள். 

“தேவை இல்லை அம்மா! நானும் இவளும் தனியாய் போகணும், அவ்வளவு தானே?” 

“அவ்வளவே தான்!” என்ற ரேவதி தொடர்ந்தாள், “இந்த வீட்ல எல்லாருக்கும் ஒரு உண்மை தெரியாது. அதை ஆரம்பமாச் சொல்லி என் திட்டத்தை விளக்கிடறேன்!” 

வைதேகி, வீரா மற்றும் சுபா வியப்புடன் ரேவதியைப் பார்த்தார்கள். 

“இப்ப இந்த வீடு என் வீடு. அட்வகேட் புஜங்கராவ்தான் செட்டில்மென்ட் டீட் எழுதினார். மயிலாப்பூர் ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ்ல பதிவும் ஆகியிருக்கு. எப்படி இந்த வீடு என் அப்பா பெயருக்கு வந்து அப்புறம் எனக்குச் சொந்தமாச்சு அப்படீங்கறதை விளக்க அவசியம் இல்லை. பெரியப்பாவிடம் கேட்டுத் தெரிஞ்சுக்குங்க… சத்யாகிட்ட காலையில் கேட்டேன். வாடகைக்கு விட்டா மாசம் எவ்வளவு வரும்னு. ஆயிரக் கணக்கில சொன்னான். இந்தப் பழைய வீட்டை புதுப்பிச்சு, இன்னொரு மாடியும் கட்டினா, பெரிய கம்பெனிகள் கண்ணை மூடிக்கொண்டு பத்தாயிரம் தருவா. கம்பெனியோட அஞ்சு வருஷ லீஸ்… ஆனா அப்படிச் செய்ய இப்ப எனக்கு விருப்பம் இல்லே. அதே சமயத்தில என் உரிமையையும் நிலை நாட்டலாம்னு இருக்கேன். முதற்படியா. பாபுவும் சாந்தாவும் தனியாப் போகணும்.” 

சாரதம், சாந்தா மற்றும் பாபுவைத் தவிர மற்ற எல்லோரும் வாயடைத்து நின்றார்கள். 

பெரியப்பா முதலில் பேசினார். 

“அவசியமா ரேவதி?” 

“ரொம்ப, ரெண்டு பேரும் கை நிறையச்  சம்பாதிக்கறாங்க…” 

”அப்பா, திடீர்னு நான் வெளியேறணும்னு இவ சொல்லிட்டா, நான் எங்கே போறது? வாடகை வீடுன்னாக்கூட நோட்டீஸ் கொடுப்பாங்க.” 

“நீ வாடகைக்கு இருந்தா நானும் நோட்டீஸ் கொடுத்திருப்பேன். நீ ஓசியிலதானே இருக்கே, பாபு.”

”திடுதிப்னு சொன்னா எங்கே போறது?” 

“உன் மனைவிதான் பாதி நாள் பெரியம்மாகிட்ட ரகளை பண்ணிட்டு பிறந்த வீடு போயிடறாளே? நீ அவ வீட்ல கொஞ்ச நாள் இருந்திட்டு வீடு மாறிப் போ!” 

“இந்த மைலாப்பூர்ல சௌகரியமா இருக்கணும்னா மாசம் ரெண்டாயிரம் ரூபா வாடகை கொடுக்கணும். அமெரிக்கால இருக்கிற உனக்கு இது எப்படித் தெரியப்போறது? குறைந்தது அஞ்சு மாசமோ ஆறு மாசமோ அட்லான்ஸ் கொடுக்கணும். சில பேர் பத்து மாசம் கூட கேக்கறாங்க.” 

”ஓகே. ஆயிரம் சதுர அடி முதல் மாடியில் போர்ஷன். மாசம் ஆயிரத்து ஐநாறுக்கு நான் ஏற்பாடு பண்றேன். ரெடியா?” 

பாபு முதலில் சாந்தாவைப் பார்த்தான், பிறகு அப்பா பக்கம் கண்ணைச் செலுத்தினான். 

”மெட்ராஸ்ல இது ரொம்ப சீப்” என்றாள் வைதேகி. 

”எங்கே இருக்கு நீ சொல்ற வீடு?” 

“இதே ராஜா அண்ணாமலைபுரம். இதே அஞ்சாவது மெயின்ல”

”எனக்குத் தெரிஞ்சு ஒரு வீடும் காலியில்ல.”

“நம்பர் நூத்து ரெண்டு…” 

“இது நூற்றுப் பத்து. எட்டு வீடு தள்ளியா?” என்று சுபா கேட்டாள். 

“அதில கீழ் போர்ஷன்ள டாக்டர் கைலாசம் இருக்கார்” என்றாள் சாரதம். 

“மாட்டு வைத்தியர் வீடா?” என்றாள் வைதேகி.

“மாடி காலியா? கைலாசம் அதை வாடகைக்கு விடறாரா?” 

“கைலாசம் இல்லை. நான்?” என்றாள் ரேவதி, பிறகு. 

“அவரே வாடகைக்குத்தான் இருக்கார்” என்றாள்.

“அது கைலாசமே கட்டின வீடு இல்லையோ…?” என்றார் சாம்பசிவம். 

“கட்டிட்டா விக்கக்கூடாதா? என் அப்பா அதை வாங்கினார்..” 

யாரும் பதில் பேசவில்லை. 

“மயிலாப்பூர் லஸ்ல பாங்க் ஆஃப் இண்டியா பிராஞ்சு இருக்கு. மாசா மாசம் வாடகையை பாபு நீ கரெக்டா என் அக்கௌண்ட்ல கட்டிடனும்..” 

“அம்மா…!” – பாபு.

”ஏற்கெனவே என்கிட்ட இதுபத்தி பேசியாச்சுடா..” 

“அப்பா: நீங்க என்ன சொல்றீங்க..?”

”சொல்ல என்ன உரிமையும் அதிகாரமும் எனக்கு இருக்குடா பாபு.?” 

“சாந்தா…”

”இவ கழுத்தைப் பிடிச்சுத் தள்றதுக்கு முன்னாடி போயிடுவோம். உங்களுக்கு இப்ப உங்க அம்மா அப்பா சப்போர்ட்டும் இல்லை”

“பெரியம்மா புள்ளையாச்சேன்னு மூவாயிரம் கிடைக்கிற போர்ஷனை ஆயிரத்து ஐநூறுக்குத் தர்றேன். நீ இப்படிப் பேசினால் நிச்சயமா கழுத்தைப் பிடிச்சுத் தள்ளுவேன். இதுவும் கிடைக்காது. இதனால என்ன விபரீதம் விளையும்னு தெரியாது உனக்கு சாந்தா.! உன் மாமியார் மாமனாரும் வெளியேற வேண்டிய நிலை உண்டாகும்.”
 
“நீ பேசாம இருக்கக்கூடாதா சாந்தா…?” என்றான் பாபு.

”இன்னொரு விஷயம் சத்யா. பாபு மாசாமாசம் கட்டற பணத்தை நீ பாங்க்லேருந்து எடுத்து பெரியப்பா கைல கொடுக்கணும். இவ்வளவு கூட இத்தனை நாள் பாபு இந்த வீட்டுக்குப் போட்டதில்லை.” 

“சரி, ரேவதி!” என்றான் சத்யா சிரித்துக்கொண்டே.

“சிரிக்காதே சத்யா. நெக்ஸ்ட் நீதான்.” 

“என்ன நானா?” 

“அடையாறில் ஒரு பெட்ரூம் ஃப்ளாட் கட்டி முடிச்சாச்சு. வீரா வேலை செய்யற கம்பெனி கட்டியது. ஃபர்ஸ்ட் ஃப்ளோர், வைதேகிக்கு கல்யாணம் ஆன கையோட சுபாவுக்கும். உனக்கும் கல்யாணம் ஆகிவிடும். அது வரையில் நீ அங்கே இருந்து கொள்”. 

“வாடகை..?” 

“நீயே தீர்மானம் பண்ணி நியாயமாக் கொடு.”

“என்னிக்குப் புறப்படணும் ரேவதி?” 

“ரெண்டு வாரத்தில..” 

“தாங்கஸ்..” 

“ஆமாம். அக்காவுக்கு கல்யாணம்னு சொன்னாயே ரேவதி, வீடு தயாரா இருக்கிற மாதிரி மாப்பிள்ளையும் பார்த்தாச்சா.?”என்று சுபா கேட்டாள். 

“சத்யா, இதுக்கு நீ பதில் சொல்லு. ”

”ரேவதியோட அப்பா முன்னால பார்த்து வச்ச பிள்ளை. பெயர் சார்நாத். அமெரிக்கா. பெரிய வேலை. சொந்த வீடு, அமெரிக்கன் சிடிஸன். அவனோட போட்டோவை வைதேகி பார்த்திருக்கிறாள். வைதேகியின் போட்டோவை அவன் பார்த்திருக்கான். ரெண்டு பேருக்குமே பிடிச்சுப் போயாச்சு.” 

”வைதேகி, இது நிஜமா?” என்றாள் சாரதம்.

“ஆமாம்மா..” 

“ஏன் பெத்த தாயார்கிட்டேகூட நீ சொல்லலே?”

”ரகசியமா இருக்கட்டும்னு சத்யா சொன்னான். ரேவதி ஒரு நாள் வருவா. அதுக்கு அப்புறம் தெரிஞ்சாப் போதும்னும் சொன்னான் அம்மா..” 

“அப்ப அக்கா அமெரிக்கா போயிடுவா. டீ.. நீ அங்கேயே ஜார்ஜட் வாங்கிக்கோ. இப்ப ரேவதி கொண்டு வந்ததையெல்லாம் நானே எடுத்துக்கறேன்” என்றாள் சுபா. 

“நீ என்ன சொல்ற சார்நாத்…?” 

“அசல் தஞ்சாவூர், அண்ணாநகர்ல அம்மாவும் தங்கையும் இருக்காங்க. சார்நாத் கூடிய சீக்கிரம் வருவான்” என்றாள் ரேவதி. 

“இதுக்குத்தான் அரை கிலோ தங்கமா?”

“சுபாவுக்கு நூத்தம்பது. வைதேகிக்கு நூறு. பெரியம்மாவுக்கு பாக்கி. அவ இஷ்டப்பட்டதை சாந்தாவுக்கும் கொடுக்கலாம்.” 

“வீடாச்சு, மாப்பிள்ளையாச்சு, அப்புறம் என்ன ரேவதி?” என்று வீரா கேட்டான். 

“அதை தான் இஷ்டப்பட்டப்பச் சொல்லுவேன்!” என்றாள் ரேவதி.

– தொடரும்…

– இன்பமான பூகம்பம் (நாவல்), வெளியானது: ஜூலை 1995, மாலைமதி மாத இதழ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *