இன்னா செய்தாரை……..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 6,111 
 
 

‘விசயம் அங்கே போய் மோதாவிட்டால் முடிவிற்கு வந்து முடியாது!’ என்பது தெளிவாகத் தெரிந்தது ஞானாம்பாளுக்கு.

ஊரில் பெரும் புள்ளி, முக்கிய மனிதர், பஞ்சாயத்து, எந்த கொம்னாலும் அசைக்க முடியாத ஆள் தலையிட்டால் யார்தான் மிரளாமல் இருப்பார்கள்.! கட்டுப்படாமல் போவார்கள் ?!

எல்லாம்….இவர்களுக்குப் பின்னால் சரியான ஆள் கிடையாது. புருசனும் நோஞ்சான், சொத்தை, பயந்தாங்கொள்ளி ! என்கிற நினைப்பில் ஆக்கிரமிப்பு செய்து சொத்தை அபகரித்துக் கொள்ளலாம் நினைப்பு! இல்லை என்றால் கேட்பாரற்றுக் கிடக்கும் நாலு ஏக்கர் நஞ்சை நிலத்தை எவனாவது வேலி போடுவானா ?!

எதிரி போட்டுவிட்டான். மண்ணைப் பொன்னாக்கும் வீட்டு மனை விற்பனையாளன் வீரபாகு தெரிந்து செய்தானோ இல்லை தெரியாமல் செய்தானோ போய் காலூன்றி, கம்பு நட்டு, வேலி அடைத்து விட்டான்.

யோக்கியவனாக இருந்தால் பத்திர ஆதாரத்துடன் சென்று, ” இது என் இடம். ஆக்கிரமிப்பு செய்தி;ருக்கிறீர்கள். அகற்றுங்கள். ” என்று மரியாதையாகச் சொன்னதைக் கேட்டு அகற்றி இருக்க வேண்டும்.

மாறாக….அடாவடி, ரவுடி. ”அப்படியா ? போலீசில் போய் சொல்லு ? ” சொல்கிறான்.

அங்கே சென்றால்….”அவன் ஆளும் கட்சிம்மா. அவன் மேல கையைவைச்சா எங்கள் தலை உருளும், பிரச்சனை வரும். அதுக்குப் பேசாமல் நீங்க வக்கீல் வைச்சு, வழக்காடி ஜெயிச்சு வாங்கிக்கோங்க. அதான் உங்களுக்கும் நல்லது. எனக்கும் தொல்லை இல்லே.” இன்ஸ்பெக்டர் வழுக்கல்.

”ஆளும் கட்சி ஆட்களென்றால் எது வேண்டுமானாலும் செய்யலாமா ?! அப்படியே அடுத்தவன் வீட்டில் போய் குடியிருந்து அராஜகம் செய்யலாமா ?!” ஞானாம்பாள் வாயில் வந்ததை மறைக்காமல் அவரிடம் கேட்டேவிட்டாள்.

”நீ கேட்கிறது நியாயம். காக்கி சட்டைப் போட்ட எனக்கும் அது தெரியுது. ஆனா…இன்னைக்கு அரசியலும் அராஜகமும் இப்படித்தானே எதையும் சாதிக்குது.” சொன்னார்.

‘ தங்களுக்குப் பின்….ஊர், உறவு, ஜனக்கட்டு, செல்வாக்கு இருந்திருந்தால் இப்படி அராஜகம் செய்வார்களா ? ‘ நெருங்கவே பயப்படுவார்கள்.

‘ஒத்தை மனுசி…..சொத்தைப் புருசனை வைத்துக்கொண்டு இந்த அளவிற்குச் சென்று வந்ததே அதிகம். இதையும் தாண்டிப் போனால் உயிருக்கு ஆபத்து. ! ‘ நினைக்கும் போதே ஞானாம்பாளுக்கு நெஞ்சு நடுங்கியது.

இந்த அடாவடிக்காரனுக்கு…இவர்கள் இந்த ஊர் முத்துரங்கம் சொந்த சம்பந்தி என்று தெரிந்தாலே அவன் தலைதெறிக்க ஓடுவான். அவருக்கு ஊரில் மட்டுமில்லாமல் மாவட்டத்திலேயே அத்தனை செல்வாக்கு. ஆளும் கட்சி, எதிர்கட்சிகளுக்குச் செல்லப்பிள்ளை. சும்மா இல்லை… கோடிகளின் சொந்தக்காரர். எல்லாவற்றையும் மீறி யாரும் அசைக்க முடியாத ஆள்.
அந்த மனிதர் பெயரைச் சொல்ல தங்களுக்கு அருகதை இருக்கிறதா, சொன்னால் வருவாரா உதவுவாரா என்பதுதான் இங்கே சிக்கல். காரணம் காதல்!

தங்களுக்குக் குழந்தை இல்லை என்கிற குறையைப் போக்க…. உடன் பிறந்த தங்கை பெண் ஒருத்தியை தத்து எடுத்து வாரிசாக வளர்க்க…..அவள் ஜாதி விட்டு முத்துரங்கம் பையனைக் காதலித்துத் தொலைத்ததுதான் மகாபெரிய குற்றம், பாபம்.

இதெல்லாம் ஊர், உலகத்தில் நடக்காதது இல்லை, சர்வசாதாரணம் என்று மன்னித்து மறந்து பெருந்தன்மையாக வந்து கேட்ட முத்துரங்கத்திடம் சம்மதம் சொல்லி ஜாம் ஜாமென்று மணமுடித்திருக்கலாம். மாறாக….ஞானாம்பாள் தன் அண்ணன் பையனை மனதில் வைத்து சாதியைக் காரணம் காட்டி….முடியாது என்று மறுக்க….பெண் மேஜர். தன் விருப்பப்படி அவர்கள் வீட்டில் அடைக்கலமாகி திருமணம் முடித்து விட்டாள்.

‘பாவி! முண்டை! சிறுக்கி !’ என்று சபித்து ஒதுக்கி, ஒதுங்கி வீராப்பாக இருந்தவளுக்கு இன்னும் அப்படி இருக்க முடியாமல் அக்குறும்பு

.இன்றைக்கு….எந்த முகத்தை வைத்துக் கொண்டு அந்த வீட்டுப் படியேற ? அப்படியே ஏறினாலும் முத்துரங்கம்; முடித்து வைப்பார் என்று என்ன நிச்சயம்? ! அவர் நல்லவர், வல்லவர், ஊருக்குப் பெரிய மனுசன், பஞ்சாயத்து…. எல்லாம் சரி.

ஊரார் குறையை அவர் வழி இல்லாமல் முடித்து வைக்க முன் வந்தாலும்…வளர்த்தப் பெண்!

அவர்கள் காதல் தெரிந்ததும் அவளை இவள் வறுத்தெடுத்த வறுத்தெடுப்பில்,”சும்மா இருங்க.” தடுப்பாள். வீட்டிற்கு வந்த மருகள் தடுக்கும் போது அவளை மீறி இவரால் ஒன்றும் செய்ய முடியாது.

தாயாய் இருந்து. மகளாய் வளர்த்தப் பெண்ணை…காதல் செய்த குற்றத்திற்காக…..இவள் அப்படியெல்லாம் கேள்விகள் கேட்டிருக்கக் கூடாது.

”ஏண்டி ! நம்ம சாதியில் ஆயிரம் ஆம்பளைகள் இருக்க….அடுத்த சாதி ஆண்தான் உனக்கு இனிச்சிதோ ? ”

”அது என்ன! நாம சைவம் அவன் அசைவம். அப்படிப்பட்டவனைப் பிடிச்சிருக்கே. அசைவம் சாப்பிடுவறனெல்லாம் முரடனாய் இருப்பான். அது புடிச்சிதோ !? ”

”நானும் புருசனும் வீட்டில் இல்லாத சமயம் அவனை இங்கே வரவழைச்சு எப்படி இருந்தியோ? எங்கே தொட்டான் எப்படித் தொட்டான் ? ” எல்லாம் செத்தாலும் மறக்க முடியாத நெத்தியடி கேள்விகள்.

அப்படியெல்லாம் கேட்கக் கேட்கத்தான்… அவள் வீட்டை விட்டே வெளியேறினாள். காவல் நிலையத்தில் அடைக்கலமாகி… ”எனக்கு இவர் மேல் காதல். தாய்க்குப் பிடிக்கலை. நாங்க திருமணம் முடிக்கிறோம். பாதுகாப்பு கொடுங்க.” என்று புகார் கொடுத்து தாலிக் கட்டிக்கொண்டாள்.

இப்போது அவள் வீட்டுப் படி ஏறி…. உதவிகள் கேட்பதென்பது……நினைக்கவே ஞானாம்பாளுக்கு நெஞ்சு கூசியது. நாண்டு கொண்டு சாகலாம் ! தோன்றியது.

சாவது சுலபம். கோடி பொறுமான உள்ள சொத்து !? உயிராய் இருக்கும்போதே ஆக்கிரமிப்பு செய்தவர்கள். செத்துப் போய் ஆளில்லாமல் ஆனால்…. பட்டா மாற்றி தங்கள் சொத்தாகவே ஆக்கி விடுவார்கள். அப்படி செய்வதை விட அதை அனாதை ஆசிரமத்திற்கு எழுதி வைத்து புண்ணியம் கட்டிக்கொள்ளலாம்.! நினைத்தாள்.

”என்ன யோசனை ?!” ஞானாம்பாள் கணவன் நல்லசிவம் குரல் கேட்டு கலைந்தாள்.

”ஒ…ன்னுமில்லே..!”

”நானும் நிறைய யோசிச்சுட்டேன். நாம முத்துரங்கத்தைப் பார்க்கிறதைத் தவிர வேற வழி இல்லே.”

”எனக்கும் அதான் யோசனை. ஆனா..படியேற கஷ்டமா இருக்கு. எல்லாம் அவர் மனசுல இருக்கும். ”

”ஆமா. பொண்ணும் புள்ளையும் காதலிக்கிறாங்க. நீங்க பெரிய மனசு பண்ணி சம்மதிக்கனும். இன்னைக்கு சாதி மதமெல்லாம் பெரிய விசயமே இல்லேன்னு வீடு தேடி வந்து மரியாதையாக் கேட்டவரிடம்….உங்களுக்கு வேணுமின்னா மானம் மரியாதை இல்லாமலிருக்கலாம். எங்களுக்கு இருக்கு. என் பொண்ணை கன்னிக் கழியாம வைச்சு கிணத்துல புடிச்சித் தள்ளினாலும் தள்ளுவேனேத் தவிர….இப்படி சாதி விட்டு சாதிப் போக சம்மதிக்க மாட்டேன். ! நீங்க பெரிய மனுசனாய் இருக்கலாம். அதுக்காகவெல்லாம் நாங்க உங்களுக்குப் பணிய முடியாதுன்னு நீ சொன்னதெல்லாம் யாராலதான் மறக்க முடியும் ? ” நல்லசிவம் விசனப்பட்டார்.

ஞானாம்பாளுக்கும் பெண்ணைக் கேள்வி கேட்டதையெல்லாம் கணவனிடம் வெளிப்படையாகச் சொல்லி விசனப்பட முடியவில்லை.

அன்றைக்கு மட்டும் இவர்கள் சம்மதத்தோடு பெண் திருமணம் முடிந்திருந்தால்…..இன்றைக்கு இந்தப் பிரச்சனையே வந்திருக்காது. தொட்டுப் பார்க்க என்ன…. இவர்கள் நிழலை மிதிக்கவே அஞ்சுவார்கள். ஐயோ..! அந்த வீட்டு சம்பந்தியா! என்று பெயரைக் கேட்டாலே ஓடுவார்கள்.

அன்றைக்கு ஜாதியைப் பிரதானப்படுத்தி மகளை வெறுத்து ஒதுக்கி வீராப்பாக வாழ்வதன் பலாபலனுக்காகவாது ஊரில் இருக்கும் இவர்கள் சாதி சனங்கள் சாதிக்காரனுக்குச் சங்கடம் என்று ஓடி வந்து உதவுகிறார்களா என்றால்…..இல்லை. அப்படி இருக்க என்ன சாதி, சனம்! நினைத்துப் பார்க்கவே ஞானாம்பாளுக்கு வெறுப்பாக இருந்தது.

பொண்ணைப்ப படுத்தாமல் விட்டிருந்தாலாவது…..மகளும், மருமகனும்….முத்துரங்கத்தைத் தூண்டி விட்டு முடிக்கச் செய்வார்கள். போறாத காலம் அதிலும் கோட்டை.!

இப்படியெல்லாம் புரட்டிப் புரட்டி யோசித்த ஞானாம்பாளும் தவிர்க்க முடியாமல், ”சரி வாங்க. வயசான காலத்தில் இப்படியெல்லாம் கூனிக்குறுகி நடக்கனும்ன்னு நம்ம தலை எழுத்து! ” சொல்லி எழுந்தாள்.

இவரும் வீட்டைவிட்டு வெளியே வந்து நடந்தார்கள்.

மூன்றாவது தெருவில் உள்ள முத்துரங்கம் வீட்டு வாசலில் யாரும் இல்லாததால் எப்படி அழைக்க…? என்று தடுமாறி, தயங்கி….காம்பௌண்ட் கேட் அருகே நின்றார்கள்.

அடுப்படியிலிருந்து காபியுடன் கூடத்திற்கு வந்த சிவகாமி ஜன்னல் வழியே வெளியே நின்ற முகம் தெரியாத மனித உருவங்களைப் பார்த்து சோபாவில் அமர்ந்திருந்த முத்துரங்கத்திடம், ”மாமா! உங்களைத் தேடி யாரோ வந்திருக்காப் போல.” சொல்லி…..தன் கையில் கொண்டு வந்த காபியை அவரிடம் வைத்துச் சென்றாள்.

காபி குடித்து வெளியே முத்துரங்கம் அவர்களைப் பார்த்ததும் முகம் மலர….”.வாங்க வாங்க….” உரக்கக் கூவி மகிழ்ச்சியாக வரவேற்றார்.

அவர்கள் காம்பௌண்ட் கதவு திறந்து குனிந்த தலை நிமிராமல் உள்ளே நுழைய….”சிவகாமி! சீக்கிரம் வா. நம்ம வீட்டைத் தேடி விருந்தாளிங்க வந்திருக்காங்க.” குரல் கொடுத்தார்.
”இதோ வர்றேன் மாமா…” என்று மறு குரல் கொடுத்து வந்தவளுக்கு…..எதிர்பாராத அதிர்ச்சி.

”வாங்க அப்பா! வாங்க அம்மா!” கையும் ஓடாமல் காலும் ஓடாமல் பரபரப்பாக வரவேற்றாள்.

ஞானாம்பாளுக்கும் நல்லசிவத்திற்கும் மகள் வரவேற்பை எப்படி எதிர்கொள்வதென்று தெரியாமல் மௌனமாய்த் தலைகுனிந்து முத்துரங்கத்திடம் வந்தார்கள்.

அதை சிவகாமி ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ”இதோ ஒரு நமிசத்துல காபி கொண்டு வர்றேன்.!” அவர்களை உபசரிக்க…மகிழ்ச்சி, பரபரப்பாய் உள்ளே ஓடினாள்.
அவள் காபி போட்டு எடுத்து வருவதற்குள் இவர்கள் முத்துரங்கத்திடம் மொத்த விசயத்தையும் சொல்லி முடித்திருந்தார்கள்.

இவள் வரும்போது….”ஒன்னும் பயப்படாதீங்க. நாளைக்கு அந்த இடத்தில் உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது. அதையும் மீறி ஆக்கிரமிப்பு இருந்துதுன்னா….நானே வந்து அதை அகற்றுவேன்.” உத்திரவாதம் அளித்தார். அது மட்டுமே இவள் காதில் விழுந்தது.

காபியை அவர்களிடம் நீட்டிய…. சிவகாமி முகத்தில் கலவரம்.

”என்ன மாமா ? ” கேட்டாள்.

”பொறுமையாய் சொல்றேம்மா.” என்றவர், அவர்கள் காபி குடித்து முடிந்ததும், ” வாசல் வரைக்கும் வந்த சொந்தம் உள்ளாற வந்து ஒரு வாய் சாப்பிட்டு போகலாமே!” தன் பங்கிற்கு உபசரித்தார்.

கணவன் மனைவி இருவருக்குமே எதிரில் நின்றவர்களை நிமிர்ந்து பார்க்கத் துணிவில்லை. ஞானாம்பாளுக்கு ரொம்ப சங்கோஜம்.

”பரவாயில்லே. இப்போ மனசு சரி இல்லை. அப்புறமா அடிக்கடி வர்றோம். வர்றோம்மா.”. இருவரிடமும் குனிந்த தலை நிமிராமல் சொல்லி நகர்ந்தாள்.

அவர்கள் கேட் தாண்டி தலை மறைந்ததும், ”என்ன மாமா விசயம் ? ” மறுபடியும் மாமனாரைக் கேட்டாள் சிவகாமி.

”அது ஒன்னுமில்லே சிவகாமி. ஒரே ஊர்ல வாழ்ந்தாலும் வளர்த்தத் தாய் தந்தை முகத்துல முழிக்க முடியாத வருத்தம் என் மருமகள் முகத்தில் இருந்துது. அதை எப்படி சரி பண்றதுன்னு யோசிச்சேன். அதனால்… உங்க அம்மா நிலத்தை எனக்குத் தெரிஞ்சவனை விட்டு வேலி போட்டு ஆக்கிரமிப்பு செய்யச் சொன்னேன். அவனும் நான் சொல்படி செய்தான். என் கணிப்புப்படி உன் அம்மா அப்பா அங்கே இங்கே போய் முடியாமல் கடைசியில் என்னைத் தேடி வந்தாங்க. இனி வரப் போக இருப்பாங்க. இனி என் மருமகள் முகத்திலும் வருத்தம் இருக்காது. என்ன செய்யிறது சிவகாமி ! இன்னா செய்தாரை இப்படியும் ஒறுக்க வேண்டி இருக்கு, இழுக்க வேண்டி இருக்கு.” சொல்லி வாஞ்சையாய் மருமகள் முகத்தைப் பார்த்தார்.
”மாமா…ஆஆ !” சிவகாமி நெகிழ்ந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *