இதுவும் ஒரு விடுதலைதான்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 21, 2014
பார்வையிட்டோர்: 7,745 
 
 

சீட்டை வாங்கியபடி அர்ச்சகர் கேட்டார், “யார் பேருக்கு அர்ச்சனை?”

அமுதா யோசித்தாள்.

அன்றும் ஒரு விதத்தில் ஆண்டுநிறைவுதான். மனத்தில் நிறைவு இல்லாதிருந்தாலும், வெறுமை குறைந்திருந்தது. அதற்காகவேனும் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டாமா?

“பிள்ளையார் பேருக்கு!” குரல் அவளுக்கே கேட்காதுபோக, இருமுறை சொல்ல வேண்டியிருந்தது.

“ஓம் சுக்லாம் பரதரம்..,” அர்ச்சகரின் குரல் அழுத்தம் திருத்தமாக ஒலித்தது.

இந்தச் சூழ்நிலைதான் எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது! இந்தச் சிறு திருப்தியைக்கூட அளிக்க மறுத்தாரே!

யாரோ, உயரக் கட்டியிருந்த மணியை ஓங்கி அடித்தார்கள் — தீப ஆராதனையின்போது வேறு எந்த எண்ணமும் மனத்துள் புகாதிருக்க.

ஆனால், அமுதாவின் மனக்குதிரை பின்னோக்கி ஓடுவதை அதால் தடுக்க முடியவில்லை.

கல்யாணமான புதிது.

திருமணமானதும், நாள் தவறாது கணவருடன் கைகோர்த்துக்கொண்டு எங்காவது போகலாம் என்று அமுதா கண்டிருந்த கனவு பொய்த்தது.

“எனக்கு வெளியே வேலையிருக்கு!” என்று விறைப்பாகச் சுவற்றிடம் சொல்லிவிட்டு, சாயந்திரமே எங்காவது சென்றுவிடுவான் சுகுமார்.

ராத்திரி நீண்ட நேரம் அவனுக்காகக் காத்திருந்துவிட்டு, கண்ணீரைத் துடைக்கவும் மறந்தவளாய் தூங்கிவிடுவாள் அமுதா.

எந்நேரமும் தனிமையிலேயே கழிக்க வேண்டியிருந்தது இனம்புரியாத பயத்தையும் துக்கத்தையும் அளித்தது.

ஒரு நாள், “தினம் அப்படி எங்கே போறீங்க? என்னை எங்கேயாவது கூட்டிட்டுப் போங்களேன்!” என்று எப்படியோ கேட்டுவிட்டாள்.

அவளை உற்றுப் பார்த்த சுகுமார், “என் கூட்டாளிங்களுக்கு நான் இல்லாட்டி சரிப்படாது. ரொம்ப நாளாப் பழகிட்டோமில்ல!” என்று முணுமுணுத்தபடி போனான்.

அதிகம் வற்புறுத்தினால் ஆத்திரப்படுவானோ என்று பயந்து, வாயை மூடிக்கொண்டாள் அமுதா.

மறுநாள், சற்று முகமலர்ச்சியுடன், “இன்னிக்கு பக்கத்து வீட்டுக்காரங்களோட பேசிக்கிட்டிருந்தேன். நல்லவங்களாத் தெரியுது!” என்று தெரிவித்தாள்.

அதிசயமாக, கனிவுடன் பேசினான் கணவன். “நீ எதுக்கும்மா கண்டவங்களோட எல்லாம் பேச்சு வெச்சுக்கறே! பேசாம, வீட்டிலேயே இருந்து, ரெஸ்ட் எடுத்துக்க. என்ன?”

சுதந்திரமாகப் பறக்க நினைத்த பறவையின் சிறகுகள் ஒடுக்கப்பட்டன.

அன்பான பெற்றோரின் பேச்சைக் கேட்டு வளர்ந்திருந்ததால், யார் எது சொன்னாலும் அதன்படி நடக்கும் குழந்தையாகவே இருந்தாள் அமுதா.

இவர் சொல்வதும் நியாயம்தானே! நாலுபேருடன் பேச்சு வைத்துக்கொண்டால், வீண்வம்புதான் வளரும்.

வீட்டுக்குள், ஒரே இடத்தில் மணிக்கணக்காய் உட்கார்ந்திருந்தாள். யாருடனும் தொடர்பு இருக்கவில்லை. காரணமின்றி அழுகை வந்தது. இரவில் கணவனுக்காகக் காத்திருந்து ஏமாறுவது தொடர்ந்தது.

அயர்ந்து தூங்குகையில், அவன் உடல் மேலே படரும். திடுக்கிட்டு அலறுவாள்.

“சனியன்! ஏன் கத்தறே? நான்தான்!” ஆத்திரத்தில் அவன் அதட்டும்போது, ஆள்காட்டி விரலைப் பற்களிடையே வைத்துக்கொண்டு, அவனது பலாத்கார ஆக்கிரமிப்பை ஏற்கத் தயாராவாள்.

இதுவா இல்லறம்..?

இப்படி ஒரு வாழ்க்கைக்காகவா எல்லாப் பெண்களும் ஏங்கித் தவம் இருக்கிறார்கள்?

இந்த அவலத்துக்காகவா பெண்ணைப் பெற்றவர்கள் கடனோ உடனோ வாங்கி, அவளை ஒருவனிடம் ஒப்படைக்கிறார்கள்?

உடலும் உள்ளமும் நலிந்த நிலையில், ‘எப்படி ஆறுதல் தேடுவது?’ என்று வெகுவாக யோசித்துவிட்டு, கணவனைக் கேட்டாள்: “இன்னிக்குக் கோயிலுக்குப் போகலாமா?”

அவன் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. இரண்டாவது முறையாகக் கேட்டதும், எரிச்சல் பிறந்தது.

“பொழுதும் போகாம, வேற எங்கேயும் போக காசோ, சக்தியோ இல்லாத கெழங்கட்டைங்கதான் அங்கே எல்லாம் போகும். நீ கோயிலுக்குப் போய் என்ன கிழிக்கப்போறே? அப்படி என்ன பாவம் சேர்த்திருக்கே?”

இம்முறை அமுதாவால் அவன் கூறியதை ஏற்க முடியவில்லை.

அவர்களது அந்தஸ்துக்கு மீறிய இடத்திலிருந்து சுகுமார் பெண்கேட்டு வந்தபோது, அவளுடைய தெய்வ பக்திதான் அப்படி ஒரு நல்வாழ்க்கையைத் தேடித் தந்திருக்கிறது என்று எல்லோருமே ஒருமனதாகச் சொன்னார்களே! கடவுள் ஏன் தன்னை இப்படி எல்லாம் சோதிக்கிறார்?

“வெளியே கூட்டிட்டுப் போறதில்லேன்னு குறைப்பட்டியே! வா!” என்று குற்றம் சாட்டியபடி, அதிசயமாக ஒரு நாள் அவனது நண்பன் வீட்டுக்கு அழைத்துப் போனான் சுகுமார்.

அவளுக்கோ ஏன் போனோம் என்று ஆகிவிட்டது.

“யார் எது கேட்டாலும், அசட்டுச் சிரிப்போட தலையை மட்டும் ஆட்டினா என்ன அர்த்தம்? ஊமைன்னு நினைச்சுக்கவா? ‘ஏதோ, எனக்கும் கொஞ்சம் தெரியும்’னு பேசி வெக்கறது!’

‘இவருக்கு ஏன் தான் எது செய்தாலும் தப்பாகவே தெரிகிறது!’ என்று அவளுக்கு வருத்தம் மிகுந்தது.

‘அவருடைய குரலே அப்படி. உண்மையில், நம்மை நாலுபேர் மெச்சவேண்டும் என்றுதானே இவ்வளவெல்லாம் சொல்கிறார்!’ என்று சமாதானப்படுத்திக் கொள்வாள்.

அடுத்த முறை எங்கோ ‘பார்ட்டி’ என்று அழைத்துப் போகுமுன்னரே சுகுமார் சொல்லிவிட்டான்: “போற இடத்திலே ‘உம்’முனு இருக்காதே. அது எழவு வீடு இல்ல!”

முன்பின் தெரியாத பல ஆண்களும் முதல் அறிமுகத்துக்குப்பின் அவளுடன் சரளமாகப் பேசியபோது, அவளுக்குப் பயமாக இருந்தது. அடிக்கடி கணவன் பக்கம் பார்வையை ஓடவிட்டாள். அப்போதெல்லாம் அவன் ஒரு சிறு முறுவலுடன் தலையை ஆட்டுவான், அவள் செய்யப் போவதை அங்கீகரிப்பதைப்போல். அதிலேயே சிறிது தைரியம் பிறந்தது.

“இன்னிக்கு பார்ட்டி நல்லா இருந்திச்சு, இல்ல?” திரும்பும் வழியில் சுகுமார் கேட்டபோது, அமுதாவால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.

சிறிது பொறுத்து, “ராஜன்னு ஒருத்தர் இருந்தாரே! வேணுமின்னே என்னை இடிச்சு, தொட்டுத் தொட்டுப் பேசினாருங்க! அப்புறம், ஸாரி’ன்னாரு!” என்று தெரிவித்தாள். தன் நலனில் இவ்வளவு அக்கறை காட்டுபவர், இனியாவது நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் சற்று கவனமாக இருப்பார் என்றெண்ணிதான் சொன்னாள்.

அடுத்த நாளே அந்த ராஜன் அவர்கள் வீட்டுக்கு வந்தான், “சும்மாத்தான், ஒன்னைப் பாத்துட்டுப் போகலாம்னு!” என்றபடி.

“யாரு தெரியுமில்ல, அமுதா?” என்று அட்டகாசமாக அவனை சுகுமார் வரவேற்றபோது அவள் திடுக்கிட்டாள். கூடியவரை வெளியே வராது சமாளித்தாள்.

“பெரிய அழகின்னு ஒனக்கு நெனப்போ? வீடு தேடி வந்தவங்களை மதிக்கத் தெரிய வேணாம்?” என்று சுகுமார் சாடியபோது அமுதா வாயே திறக்கவில்லை.

சில தினங்கள் கழித்து, மீண்டும் ராஜன் வந்தபோது, திரும்பவும் அதே தவற்றைச் செய்யாமலிருக்கப் பெரும்பாடு பட்டாள். வலிய ஒரு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு, அவனுடன் இயல்பாக பேச முயன்றாள்.

‘தான்தான் அனாவசியக் கற்பனையால் ஒரு நல்லவரைச் சந்தேகித்து விட்டோமோ?’ என்று அவள் வருந்துமளவுக்கு அவன் கண்ணியமாக நடந்துகொண்டான். ஆனால், அதுவும் தப்பாகப் போயிற்று.

“அது என்ன, ஒரு ஆம்பளையோட அப்படி ஒரு பேச்சும், சிரிப்பும்? நீ மொதமொதல்ல அவனைப் பத்திப் பேச்சை எடுத்தபோதே எனக்குப் புரிஞ்சுபோச்சு — அவனை வேறமாதிரி நெனைக்க ஆரம்பிச்சுட்டேன்னு!”

சுகுமாரின் குற்றச்சாட்டு அவள் சிறிதும் எதிர்பாராதது. திடீரென உண்டான அதிர்ச்சியில், பெரிதாக அழ ஆரம்பித்தாள்.

“இப்படியெல்லாம் அபாண்டமாகச் சொல்லாதீங்க!” என்று கதறினாள் அமுதா.

வெகுநேரம் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் சுகுமார். பின்னர், ஏதோ முடிவுக்கு வந்தவனாக, அவள் தோள்களை ஒரு கையால் அணைத்தபடி, “பைத்தியம்! சும்மா ஒன்னை டெஸ்ட் செய்து பாத்தா..,” என்று நேரே படுக்கைக்கு அழைத்துப்போனான்.

அன்று வழக்கத்துக்கு அதிகமாக உணர்ச்சி வசப்பட்டாள் அமுதா. ஆட்கொண்டவனது முகத்தில் தோன்றிய வெற்றிப் புன்னகையை அவள் கவனிக்கவில்லை.

“இப்படியானும் கஷ்டப்பட்டுக்கிட்டு, இவரோட எதுக்காக இருக்கணும், கண்ணு?” மகளைப் பார்த்துவிட்டுப்போக வந்திருந்த தாய் அங்கலாய்த்தாள்.

“ஒங்கப்பா என்னை ஏசியிருக்காருதான். ஆனா, ஒரு நாளும் இந்தமாதிரி வேற ஆம்பளையோட சேர்த்துவெச்சு என்னைப் பேசினதே கிடையாது!” மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியில் அவள் குரல் விம்மியது. “இப்படி வாயில வந்ததை, என்னா பேசறோம்னு புரியாம பேசறவரோட நீ எப்படித்தான் படுக்கறியோ!”

அம்மா விதைத்துப்போன கருத்து அவளுள் பதிந்தது. ஆனால், அது கிளை எடுக்குமுன்தான் எவ்வளவு இடர்பாடுகள்!

பெண் ஒருத்திக்குத் திருமணமாவதே உன்பாடு, என்பாடு என்றாகிவிடுகிறது. ஏதோ, தன்னிடம் இல்லாத அழகு தான் மணப்பவளிடமாவது இருக்கவேண்டும் என்று சுகுமார் வலிய வந்திருக்காவிட்டால், தான் இப்படி காரும், பங்களாவுமாக வாழ முடியுமா?

அப்பாதான் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார், இந்தக் கல்யாணத்தை நடத்த! ‘உணர்வுபூர்வமான வதை’ என்று இப்போது கணவனை விட்டுப் பிரிந்தால், அது அப்பாவின் செய்கையை அவமதிப்பதுபோல் ஆகாதா?

எல்லாவற்றுக்கும் மேலாக, தாம்பத்திய உறவில் சுவைகண்டுவிட்ட உடலை எப்படி ஒரு நிலைக்குக் கொண்டுவருவது?

அவளது மனப் போராட்டத்தை உணர்ந்ததுபோல், அடுத்த சில தினங்கள் வீட்டிலேயே இருந்தான் சுகுமார். அமுதா குழம்பினாள்.

‘தான் எது சொன்னாலும், செய்தாலும், இவளிடமிருந்து எதிர்ப்பே இருக்காது,’ என்ற பெருமிதம் ஏற்பட்டது சுகுமாருக்கு.

‘நான் வெளியே போய், பல பெண்களுடன் பழக நேரிடும்போது மனம் எப்படி அலைபாய்கிறது! அப்படித்தானே இவளுக்கும் ஏற்படும், பிற ஆண்களுடன் பழகினால்?’ என்று பயந்தான்.

எப்போதாவது நண்பர்கள் வீட்டுக்கோ, பொது இடங்களுக்கோ அழைத்துப் போவான். திரும்பியதும், அங்குள்ள எல்லா ஆண்களும் தன் மனைவியை எப்படிப் பார்த்தார்கள், அவர்கள் மனதில் தோன்றிய வக்கிரமான எண்ணங்கள் தனக்குப் புரிந்துவிட்டது என்றெல்லாம் அமுதாவைப் பழிப்பான்.

அவளையும் அறியாது, பிற ஆண்களிடம் அவளுடைய கவனம் போக, அமுதாவுக்குத் தன்மேலேயே பயம் உண்டாயிற்று. அடக்கி வைத்திருப்பதுதானே பீறிட்டுக்கொண்டு கிளம்பும்?

தான் ஏதாவது தப்பு செய்யவேண்டும் என்று எதிர்பார்த்து, இவரே அதற்கு வழி வகுக்கிறாரோ என்று தோன்றிப்போயிற்று.

உண்மையில், தன்மீதோ, அல்லது வேறு எவர்மீதோ நம்பிக்கை வைக்க இயலாததுதான் சுகுமாருடைய மனோவியாதி என்பது அவளுக்குப் புரியவில்லை.

“எத்தனை நாளைக்குத்தான் இப்படி அழுதுக்கிட்டே இருக்கப்போறே, அமுதா?” என்று, அவள் ஆக்ககரமாக ஏதாவது செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினாள் தாய். “ஒரு கன்னத்தில் அறை வாங்கிக்கிட்டு, இன்னொரு கன்னத்தைக் காட்டறது முட்டாள்தனம். அந்தக் காலமெல்லாம் மலையேறிப் போச்சு!”

“நீங்கதானேம்மா, பெரியவங்க பேச்சைக் கேட்டு, மரியாதையா நடக்கணும்னு சொல்லிக் கொடுத்தீங்க?” தாய்மீது பழியைத் திருப்பப் பார்த்தாள் மகள்.

“சொன்னேண்டி. ஆனா, மத்தவங்க மொதல்ல நமக்கு மரியாதை கொடுத்தாதானே, நாம்ப அதைத் திருப்பிக் கொடுக்க முடியும்?” சுயமரியாதையின் அவசியத்தைப் போதித்தாள் தாய்.

கணவரை விட்டுப் பிரிந்த பெண்ணை சமூகம் என்ன பாடு படுத்தும் என்பதை நினைத்துப் பார்க்கையிலேயே அமுதாவுக்குப் பயம் பெருகியது.

“இவரை விட்டுட்டு நான் என்னம்மா செய்யறது?” என்றாள் குழப்பத்துடன்.

“படிச்சிருக்கேதானே! இல்ல, ஒன் ஒருத்திக்குச் சோறுபோட முடியாதா எங்களால?” என்று அழுத்தந்திருத்தமாகக் கூறிய தாய், அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாது, “அவரு என்னவோ, தனக்கு மட்டும்தான் உணர்ச்சி உண்டுன்னு நெனச்சுக்கிட்டு இருக்காரு. நீ இப்படி பிரமை பிடிச்சாப்போல இருக்கறதைப் பாக்கத் தாங்கலியே, கண்ணு!” என்று, தானும் அழுதாள்.

அமுதா ஒரு முடிவுக்கு வந்தாள். “நான் கொஞ்ச நாள் அம்மாகூடப் போகப் போறேன்!” என்று கணவனிடம் அறிவித்தாள்.

தன் உத்தரவை எதிர்பார்த்து நிற்க வேண்டியவள், தானே முடிவு செய்துவிட்டு அல்லவா சொல்கிறாள் என்று ஆத்திரம் அடைந்தான் சுகுமார். ஆனால், இந்த மாமியார் கலகக்காரி. விஷயத்தைச் சற்று சாமர்த்தியமாகத்தான் அணுக வேண்டும் என்று குரலில் மென்மையை வரவழைத்துக் கொண்டான். “என்னை விட்டுப் போறியே! நீ இல்லாம, நான் என்னம்மா செய்யப் போறேன்!” என்றான் உருக்கமாக.

தாய் அருகில் இருக்கும் தைரியத்தில் அமுதா புறப்பட்டுப் போனாள். ஒரே வாரத்தில் சுகுமார் வந்து மன்றாட, மனமிளகி, அவனுடன் திரும்பவும் செய்தாள். தன் போக்கு அவனது ஆத்திரத்தை மேலும் கிளப்பி விட்டிருக்கும் என்று அவள் எதிர்பார்க்கத்தான் இல்லை. அவன் கொஞ்சலை விரும்பி ஏற்றாள்.

“எனக்குத் தெரிஞ்சு போச்சு. ஒங்கம்மா வீட்டுக்கிட்ட ஒனக்கு எவனோ இருக்கான். இன்னிக்கு அவனைத்தானே நெனச்சுக்கிட்டிருந்தே?” உடைகளை மீண்டும் அணிந்து, படுக்கையில் சாய்ந்தபடி எகத்தாளமாகக் கேட்டவனை விழித்துப் பார்த்தாள் அமுதா.

இப்படியே விட்டுக்கொடுத்துப் போனால், தன் மேலேயே தனக்கு நம்பிக்கையும், மதிப்பும் குறைகிறது என்பது ஒரு வழியாகப் புரிந்தது.

ஓயாது தன்னைச் சந்தேகித்து, வார்த்தைகளாலேயே குதறுபவனுடன் வாழ்ந்தபடியே சாவதைவிட, தனிமை அப்படி ஒன்றும் கொடுமையானதாக இருக்காது என்ற முடிவுக்கு வந்தாள்.

‘யார் என்னை வெறுத்தால் என்ன? அப்படி ஒதுக்குபவர்கள் எனக்கு வேண்டியவர்களே இல்லை. எனக்காக, என் குணநலன்களுக்காக என்னை விரும்புகிறவர்கள் இல்லாமலா போய்விடுவார்கள்?’

ஒரு தீர்மானத்துடன் கணவனை ஏறிட்டாள் அமுதா. “நீங்க இருக்கற லட்சணத்துக்கு நான் இன்னொருத்தன்கூடப் போகாததுதான் அதிசயம். நடைப்பிணமா ஆறதுக்கு முந்தி, ரொம்ப நாளைக்கப்புறம் புத்திசாலித்தனமா ஒரு காரியம் செய்யப் போறேன். ஒங்களை விவாகரத்து செய்யப் போறேன்!”

சட்டென எழுந்த அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு, “போ, போ! ஒனக்கு என்னைத் தவிர இன்னும் எத்தனை பேரோ! அதான் எல்லாத்துக்கும் துணிஞ்சுட்டே!” என்று சீறிய சுகுமாரைப் பார்த்து அமுதாவுக்குப் பரிதாபம்தான் மிகுந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *